உருவாக்கத்தில் செய்நேர்த்தி, ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யம், கதை கருவில் உள்ள விறுவிறுப்பு இதெல்லாம் இத்திரைப்படத்தை வெற்றி படமாக்கி இருக்கலாம். ஆனால் திரைக்கதை கலையின் மீது காதல் கொண்டவர்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை கடந்து, அதன் திரைக்கதை போக்கை ஆராய்வது அவசியம் ஆகிறது. மிகவும் நல்ல படம் என்கிற மாய தோற்றத்தை நம் மனதில் உருவாக்கிவிடும் இது போன்றதொரு படத்த்தின் திரைக்கதையை ஆராய்வது உண்மையிலேயே நல்ல திரைக்கதை எழுத விரும்புவோற்க்கு வழிகாட்டியாக பயன்படும் என்பதாலே நாம் இதை விவாதிக்க வேண்டி இருக்கிறது.

பொதுவாகவே பல படங்களில், முதல் பாதி சிறப்பாக இருக்கிறது ஆனால் இரண்டாம் பாதி சற்றே சுவாரசியம் குறைவாக இருக்கிறது என்பன போன்ற கருத்துக்களை நாம் சகஜமாக கேட்டிருப்போம். திரைக்கதையின் முதல் பாதி, ஒரு கதை உலகை, அதன் பாத்திரங்களை அந்த உலகின் சிக்கல்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்ய தனக்கான அவகாசத்தை எடுத்துக் கொள்கிறது. பார்வையாளர்களும் அவற்றை பின்பற்றி அந்த உலகினுள் நுழைவதால் முதல் பாதியின் நிதானத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியும். முதல் பாதியின் வேகத்தை ஒப்பீடுவதற்கு அவர்களுக்கு அளவீடு இருப்பதில்லை. அவசியமும் இருப்பதில்லை. கதை அதன் போக்கில் வளர்ந்து பெரும் திருப்புமுனை இடைவேளையின் போது நிகழ்கிறது. ஆனால் இரண்டாம் பாதி என்று வரும் போது, முதல் பாதியில் அறிமுகம் செய்யப்பட்ட சிக்கல்களுக்கான தீர்வு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கு வந்துவிடுவது இயல்பு. அது இல்லாத போது, முதல் பாதியோடு ஒப்பீட தொடங்கிவிடுவார்கள்.
Manjummel Boys படத்தை பொறுத்தவரை அதன் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யமான திருப்புமுனைகள் எதுவும் இல்லை என்பது சற்றே ஏமாற்றம் தான். முன் சொன்னது போல் இந்த படத்தின் கதைக்கரு,
விறுவிறுப்பு கொண்டது. ஒருவன் குழிக்குள் விழுந்துவிடுகிறான், அவன் மீட்கப்பட்டானா இல்லையா? அல்லது அவன் எப்படி மீட்கப்பட்டான்! ஒரு நல்ல திரில்லர் படத்திற்கான ஒன்லைன் இது. ஆனால் இந்த கரு விறுவிறுப்பாக விரிகிறதா? இல்லை.
ஏன் இல்லை?
ஒரு எளிய உதாரணமாக ஒரு போலீஸ் துப்பறியும் கதையை எடுத்துக் கொள்வோம். ஒரு போலீஸ் நாயகன் ஒரு கொலை வழக்கை விசாரிக்கிறான். அடுத்து ஒருவனை பிடிக்கிறான். அவன் தான் கொலைகாரன் என்று உறுதி ஆக, அவனுக்கு தண்டனை வாங்கி தருகிறான். மேற்சொன்ன இந்த விஷயங்கள் நேர்கோட்டில் சில காட்சி தொகுப்பிலேயே நிகழ்ந்துவிடுகிறது எனில் இந்த கதையில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா?
அவன் கொலைகாரனை கண்டுகொள்ள பெரும் முயற்சி எடுக்க வேண்டும்! அப்படி அவனை நெருங்கினால் அந்த கொலைகாரன் தப்பித்து போகலாம். அல்லது பிடிப்படும் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்பன போன்ற ட்விஸ்ட்களை வைக்கும் போதுதான் கதை சுவாரஸ்யமாகிறது. இவை எல்லாம் உதாரணத்திற்காக சொல்வதே ஒழிய எல்லா கதைகளும் இப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது, நம் கதையின் இறுதி புள்ளியை எட்டும் பயணத்தில் குறைந்தபட்ச திருப்புமுனைகளாவது இருக்க வேண்டும் என்பதே.
Manjummel Boys படத்தில் ஒரு பாத்திரம் குழிக்குள் விழுந்துவிடுகிறது. ஆனால் அவனை மீட்டெடுக்கும் முயற்சியில் எந்த ஒரு குறிப்பிடத்தகுந்த திருப்பங்களும் இல்லை. ஒரு மேடை நாடகத்தின் சாத்தியத்திற்கு உட்பட்டே அவனை மீட்கும் காட்சிகள் இருக்கிறது. இதனாலேயே சில நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய குறும்படத்தை நீட்டித்துவிட்ட உணர்வை இரண்டாம் பாதி கொடுக்கிறது.
ஒரு திரைக்கதையில் எப்போதும் வெறும் வசனங்களால் மட்டுமே கதையை நகர்த்திச் செல்ல கூடாது. அந்த குகை எவ்வளவு ஆபத்தானது என்பதை சுற்றி இருப்பவர்கள் வெறும் ட்ரைலர் வசனம் என்றளவில் விளக்குகிறார்கள். ஆனால் அதன் ஆபத்து காட்சி வடிவில் உணர்த்தப்படவில்லை. குழியில் விழுந்தவனை எப்படி மெனக்கெட்டு காப்பாற்றுகிறார்கள் என்று காட்சிகளை (திரைக்கதை) அமைத்திருந்தால் கூட அத்தகைய வசனங்களை கடந்து சென்றுவிட முடியும். ஆனால் இங்கே அத்தகைய மெனக்கெடல் வெறும் வசனமாக மட்டுமே இருப்பதுதான் நெருடலாக இருக்கிறது.
உதாரணமாக, முதலில் காப்பாற்ற செல்பவன் திணறுகிறான். வேறு வழி இல்லாமல் திரும்பி வெளியே வருகிறான். பின் சமயோஜிதமாக எல்லோரும் யோசித்து வேறொரு திட்டத்தை தீட்டி உள்ளே விழுந்தவனை காப்பாற்றுகிறார்கள் என்று காட்சிகளை நீட்டித்திருக்க முடியும். அவன் காப்பாற்றப்படுவானா என்கிற கேள்விக்கும் காப்பாற்றப்படுவதற்குமிடையே எண்ணற்ற சாத்தியங்களை யோசித்திருக்க முடியும். இருந்தாலும் இத்திரைப்படம் அப்படி அலட்டிக் கொள்ளாமல் மிக கம்பர்ட்டபிளாக கதையின் முடிவை நோக்கி போகிறது.
அவன் குழியில் விழுந்ததும் இரண்டு மூன்று அதிகாரிகள் வருகிறார்கள். அந்த இடத்தில் விழுந்த ஆளை மீட்பது சாத்தியம் இல்லை என்கிறார்கள். இதற்கு சுற்றியிருக்கும் பாத்திரங்களிடம் பெரிய எதிர்வினை இல்லாத போதும், சில நிமிடங்களிலே அந்த அதிகாரிகள் குழிக்குள் விழுந்தவனை மீட்க ஒப்புக் கொள்கிறார்கள். இங்கே அவர்கள் மனம் மாறுவதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. நம்பத்தகுந்த காட்சிகள் இல்லை. அங்கேயும் வசனங்களால் கதையை கடத்திவிடுகிறார்கள்.
உண்மையில், அவர்கள் ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு நெருங்கிய நண்பர்கள், அத்தனை பேர் இருக்கும் போது ஒருவன் மட்டும் காப்பாற்ற துணிகிறான் எனில் அது அவனின் இயல்பான குணமா, அல்லது அவன் கொண்ட நட்பின் ஆழமா என்பன போன்ற விசய்ங்களை விளக்குவதற்கான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. எல்லோரும் சேர்ந்து குடிக்கிறார்கள் ஊர் சுற்றுகிறார்கள். அவ்வளவே அவர்களின் நட்பு. குழிக்குள் விழுந்தவன் மீதோ அல்லது அவனை மீட்க துடிக்கும் அவர்களின் நட்பின் மீதோ நமக்கு பெரிய ஈடுபாடு உருவாகமல் போவதற்கு இது போன்ற மேம்போக்கான சித்தரிப்பே காரணம். குணா படத்தின் பாடலில் வருவது போல, “நடுவுல கொஞ்சம் மானே தேனேனு போட்டுக்கோ” என்ற அளவில் தான் இந்த கதையில் நட்பு, எமோஷன் போன்ற விஷயங்கள் வருகின்றன. ஆனால் இத்தகைய படம் நட்பின் இலக்கணமாக சொல்லப்படுவது தான் நகைமுரண்.
Leave a comment