குறுங்கதை-9- கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் 


கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் 

கோமதி சங்கர் பிரபலமாகாத ஒரு நல்ல எழுத்தாளன். பல வருடங்களுக்குமுன்பு  அவன் எழுதிய க்ரைம் கதையில் வரும்  வில்லன் கதாபாத்திரத்திற்கும் அவனுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த பிரச்சனை வெடித்தது. ஆனந்த் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் ஒரு மிசோஜினிஸ்ட்  (misogynist). பெண்களை அறவே வெறுக்கும் அவன், ரயிலில் தனியாக பயணிக்கும் அழகான பெண்களை கடத்தி கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.  நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அந்த வில்லன் அறிமுகமாகிவிடுவான். அந்த முதல் அத்தியாத்தை வாசித்த கோமதி சங்கரின் மொத்த வாசகர்களான முப்பது பேரில், அதி தீவிர வாசக அந்தஸ்தைப் பெற்ற மூன்று வாசகர்கள், தமிழ் க்ரைம் புனைவின் ஆகச் சிறந்த வில்லன் பாத்திரமாக ஆனந்த் பாத்திரம் இருக்கும் என்று உறுதியாக சொல்லினர். வேறு எந்த எழுத்தாளராக இருந்திருந்தாலும், இப்படி ஒரு ஏகோபித்த வரவேற்பை பெற்ற முதல் அத்தியாயத்தை தொடர்ந்து எழுதி அந்த நாவலை முடித்து பதிப்பித்து, அதன் திரைக்கதை உரிமையையும் விற்றிருப்பார்கள். ஆனால் கோமதி சங்கர் ஒரு அடிப்படை சோம்பேறி என்பதால் அவன் அந்த நாவலை மேற்கொண்டு எழுதவில்லை. 

கிட்டத்த ஒன்பது வருடங்களாக முதல் அத்தியாயத்தை விட்டு வெளியே வர முடியாமல் தவித்த  வில்லன் பாத்திரமான ஆனந்த் இரு தினங்களுக்கு முன்பு நடுஜாமத்தில் கோமதி சங்கர் தூங்கிக் கொண்டிருந்தபோது கடும் கோபம் கொண்டு கத்தினான், 

“நீயெல்லாம் ஒரு எழுத்தாளராடா! எவ்ளோ பெரிய வில்லனா நான் வந்திருக்கணும்! இந்நேரம் வேறு யாராவதா இருந்திருந்தா என்ன வளர்த்து சீக்யூல்லாம் எழுதிருப்பாங்க. நான் எவ்ளோ நாள் இப்டி முதல் அத்தியத்துல மட்டும் கொலை பண்ணிட்டு, அடுத்த டார்கட்க்காக வெய்ட் பண்ணிக்கிட்டு இருக்கிறது?  அட்லீஸ்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் கூடவா என்ன தேடி வர மாட்டாங்க?”

கோமதி சங்கர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். அவன் இலக்கிய எழுத்தாளராக வேண்டும் என்கிற முடிவை எடுத்ததன் விளைவாக க்ரைம் கதைகளை எழுதுவதை  நிறுத்திக் கொண்டான்.

“உன்கிட்ட தாண்டா பேசுறேன்! சொல்லு! மேற்கொண்டு எழுத முடிலனா எனக்கு ஏன் அவ்ளோ பெரிய இன்ட்ரோ! அடுத்த ஸ்டீபன் கிங் நீனு நினைச்சு உன் எண்ணத்துல தோன்றினேன் பார். என்ன அடிக்கணும்!” ஆனந்த் கதாப்பாததிரத்திற்கு கோபம் குறையவில்லை. 

கோமதி சங்கர் சொன்னான், “ஆனந்த் என்ன மன்னிச்சிரு! இனிமே உன் கதையை என்னால எழுத முடியாது! க்ரைம் ரைட்டர்ஸ்க்கு இங்க பெரிய மரியாதை இல்லை. நான் ஒரு பின்நவீனத்துவ நாவல் எழுதலாம்னு இருக்கேன்..நான் வேணா உன் கதைய இத்தாலோ கால்வினோ மாதிரி ஸ்டைலா எழுதுறேன். தயவு செஞ்சு நீ முதல் கொலை பண்ணிட்டு அந்த ரயில்ல இருந்து குதிச்சு செத்துரு!”

இதை கேட்ட ஆனந்த் அதிர்ந்து போனான். எந்த எழுத்தாளன் முதல் அத்தியாயத்திலேயே தன்  வில்லனை கொல்வான்! மேற்கொண்டு கோமதி சங்கரிடம் பேசி பிரயோஜனமில்லை என்று முடிவு செய்த வில்லன் ஆனந்த் ஒரு மழை இரவில் தன்னுடைய உடமைகளையும், கூரிய கொலை ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு கோமதி சங்கரின் புனைவுலகை விட்டு வெளியேறினான்.   

ஆனந்தின் பிரிவை தாள முடியாமல் கோமதி சங்கர் இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடவில்லை. அவன் சோகமாக இருப்பதை பார்க்க பிடிக்காமல் அவனுடைய காதல் நாவலொன்றின் நாயகி ஜானகி அவனுக்கு ஆறுதல் சொல்வதற்காக வந்தாள்.  ஆனால் அவன் அவளையும் பொருட்படுத்தாமல் எதையோ யோசித்துக் கொண்டே இருந்தான்.

“இப்டி நீ யாரையும்  கண்டுக்காம இருந்தா எல்லாரும் உன்னவிட்டு போய்டுவாங்க?” என்று ஜானகி கோபமாக சொன்னாள். அந்த ஜானகி அவனை ஒருகாலத்தில் காதலித்த, அவனும் பின்னாளில் காதலித்த பெண்ணின் பிரதி. இப்படிதான் கோமதி சங்கரை புரிந்துகொள்ளாமல் சண்டைபோடுவாள். இப்போது கதாப்பாத்திரமாகிவிட்ட பின்னும் அப்படியே இருக்கிறாள். 

“நான் இவ்ளோ பேசுறேன் எனக்கு அவ்ளோதான் மரியாதையா?” ஜானகி கேட்டாள்.

“கொஞ்சம் வெயிட் பண்ணு ஜானகி. உன் கேரக்டரை எப்படி டெவலப் பண்றதுனு தான் யோசிச்சிகிட்டு இருக்கேன்.. உன்ன நான் எந்த அளவுக்கு கற்பனை பன்னி வச்சிருக்கேன் தெரியுமா? அமலா மாதிரி சாரா மாதிரி. உனக்கு இவங்கல்லாம் யாருனு தெரியுமா! நாவல் பேரே ‘ஜானகி’ தான். நான் மட்டும் எழுதி முடிச்சேன் தமிழின் சமகால காதல் காவியமா இருக்கும்! ட்ரஸ்ட் மீ, இட்ஸ் கோயிங் டு பி எ க்ளாஸிக். அடுத்த யுவபுரஸ்கார் எனக்குதான்” கோமதி சங்கர் சொன்னதும் ஜானகி கதாப்பாத்திரம் சப்தமாக சிரித்தது. தான் எழுதிய கதாப்பாத்திரமே தன்னை பார்த்து சிரிப்பது அவனுக்கு அவமானமாக இருந்தது. 

“அஞ்சு வருசமா எழுதுற! இன்னும் நாவலை முடிக்கல. நீ இனிமேலும் முடிப்பனு எனக்கு நம்பிக்கை இல்லை. குட்பாய் கோமதி சங்கர்” சொல்லிவிட்டு அவள் தன் ஹாண்ட்பேகை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள். 

க்ரைம் எழுத்தாளனாகவும் ஆக முடியாத, இலக்கிய எழுத்தாளனாகவும் ஆக முடியாத  கோமதி சங்கர், இனிமேல் தான் எழுதவே போவதில்லை என்கிற முடிவை எடுத்துவிட்டு தன் பேனாவை உடைத்து தூக்கி எறிந்தான். 

கோமதி சங்கரின் ‘ஜானகி’ நாவலுக்குள்ளிருந்து வெளியேறிய நாயகி கதாப்பாத்திரமான ஜானகி, தாம்பரம் செங்கல்பட்டு ரயிலில்  ஏறினாள்.  வெளியே மழை. ரயில் ஊரப்பாக்கத்தில் நின்ற போது ரயிலிலிருந்த மற்ற அனைவரும் இறங்கிவிட்டனர். தனியாக அமர்ந்திருந்த அவள், முற்றுப்பெறாத தன் கதாப்பாத்திரத்தை எண்ணி ஆத்திரப்பட்டவளாய், “ஐ ஹேட் யூ கோமதி சங்கர்” என்று கத்தினாள். 

அதே நேரத்தில் வெளியே பிளாட்பாரத்தில், “துரோகி. டேய் கோமதி சங்கர்  நீ ஒரு துரோகி” என்று முணுமுணுத்தவாறே வந்த வில்லன் பாத்திரமான ஆனந்த், ஜானகி இருந்த பெட்டிக்குள் ஏறினான். அவன் கையில் கூரிய கத்தி ஒன்று இருந்தது. 

யாருமில்லாத தனி அறையில் அமர்ந்து கோமதிசங்கர் வாய் மூடி அழுதுக் கொண்டிருந்தான்.

***

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.