குறுங்கதை-8 – ஒரு தற்கொலை செய்தி


ஒரு தற்கொலை செய்தி

விஷயம் கேள்வி பட்டதுமே நான்  ஜன்னல் அருகே ஓடினேன். என் அலுவலகம் இருந்தது மூன்றாவது மாடியில். கீழே நிறைய பேர் குழுமி இருந்தார்கள். 

“செவென்த் ஃபுளோர்ல இருந்து ஒருத்தன் குதிச்சிட்டானாம்” ஏ.ஜி எம்மின் கார் டிரைவர் குமார் தான் முதலில் செய்தியை சொன்னது. நான் என் பக்கத்தில் வந்து நின்ற கோபிகிருஷ்ணன் சாரை பார்த்தேன். ‘கீழே போகலாமா’  என்னுடைய பதிலுக்கு எதிர்பார்ப்பது போல் அவர் பார்வை இருந்தது. 

எப்போதுமே லிப்ட் வர தாமதமாகும். நான்காவது மாடியில் ஒரு ரியல் எஸ்டேட் அலுவலகம் இருந்தது. அங்கே நிறைய பேர் வந்து செல்வார்கள் என்பதால் லிப்ட் எங்கள் தளத்தில் நிற்பது அரிது. அப்படியே நின்றாலும் இடம் இருக்காது. நாங்கள் லிப்ட்டிற்காக காத்திராமல்  படியில் இறங்கி ஓடினோம்.கீழே நிறைய பேர் சூழ்ந்து நின்று கொண்டிருந்தார்கள்.  

“ஆபீஸ் ஸ்ட்ரெஸ்” யாரோ ஒருவன் சொன்னான்.ஏழாவது மாடியில் ஒரு ஐ.டி நிறுவனம் இருந்தது. அவன் அங்கு வேலைக்கு சேர்ந்து ஒருமாதம் தான் ஆகிறது என்று கூட்டத்தில் பேசிக் கொண்டார்கள்.   

“லவ் ஃபெய்லியராம் பா” இது வேறுயாரோ.  

நானும் கோபி சாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். 

கூட்டம் தரையில் கிடந்தவனை மறைத்திருந்தது. முயன்று உள்ளே புகுந்தேன்.  என்னைவிட வயதில் சிறியவன் தான். “பாடி பக்கத்துல போகாதீங்க” என்று செக்யூரிட்டி கத்தினார். யாருக்கோ பிள்ளை. யாருக்கோ அவன் அண்ணன், தம்பி. யாருக்கோ அவன் காதலன், நண்பன். தன் எல்லா அடையாளங்களையும் அவனே தொலைத்து இன்று வெறும் ‘பாடி’ ஆகி போய்விட்டான் என்பதே எனக்கு பயமுறுத்துவதாக இருந்தது. 

போலீஸ் வண்டி வந்ததும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்பது போல் எல்லோரும் விலகிச் சென்றனர். ஆம்புலன்ஸும் பின்னாடியே வந்தது. அங்கே மேற்கொண்டு நிற்க விரும்பாதவராய் கோபி சார். கேட்டார், “ஒரு இஞ்சிடீ சாப்பிடலாமா?”

என்ன செய்தி என்று விசாரித்த டீக்கடைக்காரர், “அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி இப்டி தான் ஒருத்தன் விழுந்தான்” என்று ஏதோ வரலாற்று நிகழ்வை பதிவு செய்தவராய் தன் அடுத்த வேலையை பார்க்கப்  போனார்.

“என்னயா பெரிய ஸ்ட்ரெஸ்! நமக்கு இல்லாத ஸ்ட்ரெஸ்ஸா. சூசைட் எதுக்குமே சொல்யூசன் இல்லயா! இது ஏன் இந்த மடையனுங்களுக்கு புரியல” கோபி சார் டீயை உறிஞ்சிக்கொண்டே சொன்னார். அவரோடு பழகிய இந்த இரண்டு  வருடங்களில் அவர் வார்த்தைகளில் இவ்வளவு கோபத்தை நான் கண்டதில்லை. 

“சார் அத ஹாண்டில் பண்ற விதம் இருக்குல்ல! எனக்கே சில நேரம் அந்த எண்ணம்லாம் வந்திருக்கு. நமக்கு பயமா, இல்ல நாம ரொம்ப மெட்சூர்டானு தெரில. நாம அந்த எண்ணத்த கடந்து போயிடுறோம், அவன் டிசைட் பண்ணிட்டான், அவ்ளோதான்”

ஏதோ சொல்ல வந்தவர், சொல்லாமல் நிறுத்தினார். 

“எல்லாரும் உங்களமாதிரி எதையும் தாங்கும் இதயமா இருப்பாங்களா?” நான் யதார்த்தமாக  சொன்னேன். என்னை நிமிர்ந்து ஒரு முறைப் பார்த்துவிட்டு மௌனமானார். அவரை காயப்படுத்திவிட்டோமோ என்று கூட தோன்றியது. சிறிது நேரம் கழித்து கோபி சார் கேட்டார், 

“என் வைப் இறந்துட்டாங்கனு உனக்கு தெரியும்ல!” 

நான் தலை அசைத்தேன்.

“எப்படி இறந்தாங்கனு தெரியாது இல்ல!” அவர் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. எனக்கும் அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு தைரியம் இல்லை. 

நாங்கள் திரும்பி வந்த போது  எங்கள் அலுவலக கட்டிதத்தின் நுழைவாயில் சகஜமாகி இருந்தது. சற்று முன்பு அங்கே ஒருவன் உயிரை மாய்த்துக்கொண்டான் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.  ஆம்புலன்சும்  போலீஸ் வண்டியும் கிளம்பி விட்டிருந்தது. அவன் மரணம் காற்றில் கரைந்த செய்தி ஆகிப் போனது. அவனுக்கு நெருக்கமானவர் யாரவது ஒரிரு நாள் அழலாம். டீக்கடைக்காரரோ வாட்ச்மேனோ வருங்காலத்தில் அவன் இறந்ததை வெறும் செய்தியாக யாரிடமோ சொல்லலாம். லிப்ட்டில் கோபி சாரும் நானும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எங்கள் அலுவலகத்திற்க்குள் நுழைந்ததும் கோபி சார் அவர் வேலையை பார்க்க போனார். நான் என் வேலையில் மூழ்கினேன்.

***



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.