குறுங்கதை-7 -பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்


பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்

பிரியங்கா  யாதவ் டெல்லியின் புறநகரில் பிறந்து, வளர்ந்து அங்கேயே ஒரு வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றினாள். வாழ்க்கை நிம்மதியாக போய்க்கொண்டிருந்த இருபத்தியேழு வயதில்  மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. ஒரே நாளில் அந்த சந்தோசத்தை பறிக்கும் விதமாக சென்னைக்கு மாற்றல் வந்தது. 

இரண்டு வருட காலம் சென்னையில் தாக்கு பிடித்து விட்டால், மீண்டும் ஊருக்கோ அல்லது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்திற்கோ மாற்றல் வாங்கி போய்விடலாம் என்கிற நம்பிக்கையோடு அவள் சென்னை வந்திறங்கினாள். மயிலாப்பூரில் ஒரு கிளையில் வேலை. வேறு ஊர், அழுத்தம் நிறைந்த வேலை. தான் வசிக்கும் வீடையாவது தனக்கு பிடித்த மாதிரி அமைத்துக் கொண்டால், கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கும் என்று தோன்றியது. சிறுவயதிலிருந்து அவளுக்கிருந்த ஒரு எளிய ஆசை பால்கனி வைத்த வீட்டில் வசிக்க வேண்டும் என்பதே. அது இப்போதாவது நிறைவேறட்டும்.

பால்கனி தோட்டத்தை அமைத்துக் கொண்டு, ஓய்வு நேரங்களில்  ஆங்கில நாவலும் காபியுமாக இரண்டு வருடத்தை ஓட்டலாம் என்கிற எண்ணம்  ஆழ்மன சந்தோசத்தை கொடுத்தது. 

மந்தவெளி பக்கம் வீடு பார்த்துக் கொள்ளலாம் என்றான் அலுவலக பியூன் சுரேஷ். பால்கனி இல்லாத வீடுகள் நிறைய கிடைத்தன. பால்கனி இருந்தால் அது மூன்றாவது மாடியில் அமைந்திருந்தது. அத்தகைய வீடுகளில் லிப்ட் இல்லாமல் இருந்தது. முதல் மாடியில் பால்கனி வைத்த வீடுகளில், பால்கனி மிக சிரியதாக இருந்தது. அதில் புத்தகத்தை கூட வைக்கமுடியாது, எங்கிருந்து அமர்ந்து படிப்பது! எல்லாமே விரும்பும் படி இருந்தால், வாடகை எட்டாத தூரத்தில் இருந்தது. சற்றே பொருத்தமாக அமைந்த ஒரு வீட்டில், ஹவுஸ் ஓனர், 

“ஹிந்தி பொண்ணா, பாய் பிரெண்ட்ஸ்னு யாரும் வரக்கூடாது” என்றார். 

“மேடம் சார் டெல்லிங் நோ பாய் பிரெண்ட்”  

ப்ரியங்காவோ,  “பிரெண்ட்ஸ் வந்தா என்ன!” என்றாள். 

“வீடு இல்ல போமா” ஓனர் உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டார். 

“மேடம் இப் யூ வாண்ட் ஹவுஸ், தென் பாய்பிரெண்ட் நோ” என்றான் சுரேஷ். அவன் அவளைவிட நான்கு வயது இளையவன். அவளோடு வீடு தேடி அழைந்த இந்த இரண்டுவாரங்களில், அவன் மனதில் காதல் பூ மலர, தான் அவளின் பாய்பிரெண்ட் ஆகிவிடலாம் என்கிற நம்பிக்கையோடு அவளோடு பயணித்தான். 

“மேடம் நீங்க எங்க எரியா வந்துருங்க, பெரம்பூர் இங்க இருந்து ஜஸ்ட் பிப்டீன் கிலோமீட்டர்” என்பான். 

அவன் அசடு வழிவது பிரியங்காவிற்கு தெரியாமல் இல்லை. சின்னப்பையன் என்றளவில் அவன் பேசிய எதையும் அவள் பொருட்படுத்தவில்லை. பால்கனி வைத்த வீடு கிடைத்ததும் இவனை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்று முடிவோடு வீடு தேடினாள். பல நாட்கள் பல படிகள் ஏறி இறங்கிய பின், இறுதியாக ஒரு வீடு உறுதியானது. எதிர்பார்த்த வாடகையை விட மூவாயிரம் அதிகம் தான்.  நிர்ணயித்த வாடகையை நிர்வாகம் கொடுத்துவிடும், மிச்சம் மூவாயிரத்தை அவள் தான் தரவேண்டும். பரவாயில்லை சமாளிக்கலாம் என்று முடிவு செய்து, வாடகை ஒப்பந்தத்தை நிர்வாகத்திற்கு அனுப்பினாள். ஒருவாரத்தில் அப்ரூவல்  வந்தது. 

முதல் தளத்தில் அவள் விரும்பியது போல்  பெரிய பால்கனி வைத்த வீடு. பூத்தொட்டிகளை வாங்கி அடுக்கினாள். ஒரு ரிக்லைனர் சேரையும் வாங்கிப் போட்டாள்.  அந்த ஞாயிற்றுக்கிழமை  மாலையில் அங்கே அமர்ந்து ஓய்வு எடுப்பது பெரும் நிறைவை அளித்தது. அவ்வளவுதான், அடுத்த இரண்டு வருடங்களை மகிழ்ச்சியாக ஓட்டிவிடலாம். வீக்கெண்ட் இரவில் பால்கனியில் பார்ட்டி கூட வைக்கலாம். வெளியூரில் இருந்த வீட்டு ஓனர், ஐந்து தேதிக்குள் வாடகை வர வேண்டும் என்பதை தவிர எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை.  

மறுநாள் அலுவலகத்திற்கு சென்றதும், “வாட் மேடம்! ஹவுஸ் யூ லைக்” என்றான் சுரேஷ். 

உதவி மேலாளரை அழைத்து சுரேஷை காண்பித்து சொன்னாள், “அவனை இனிமே தேவையில்லாம என் கூட பேச வேணாம்னு சொல்லுங்க. அப்ப தான் அவன் இந்த பிராஞ்சுல இருக்க முடியும்” சுரேஷின் மனதில் பூத்திருந்த பூமரம் முறிந்துபோனது. பிரியங்கா மனதில் புன்னகை செய்து கொண்டாள்.

மாலை வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு, காபியை எடுத்துக் கொண்டு பால்கனி நோக்கி நடந்தாள். பால்கனியின் நிலையே அதிர்ச்சி தரும் வகையில் மாறி இருந்தது. பால்கனி முழுக்க புறா எச்சம். தலையில் அடித்துக் கொண்டு அதை சுத்தம் செய்தாள். ஆனால் ஒவ்வொரு நாளும் புறாக்களின் எண்ணிக்கை கூடுகிறது என்கிற அளவில் அங்கே எச்சங்களும் இறகுகளும் சிதறிக் கிடந்ததன.

“இதுக்கு முன்னாடி இருந்தவங்க புறா தொல்லை தாங்காம தான் காலி பண்ணாங்க. நீங்க வாறீங்கனு ஓனர் பால்கனிய தினைக்கும் ரெண்டு பேர அனுப்பி சுத்தம் பண்ணுனார்” என்றார் வாட்ச்மேன்.

பிரியங்காவால் நாளுக்கு நாள் சமாளிக்க முடியவில்லை. ஏராளமான புறாக்கள் பால்கனிக்கு வந்து போக தொடங்கின. காலையில் தூங்கி விழிக்கையிலேயே  புறாக்களின் சப்தம் நாராசமாக காதில் ஒலித்தது.  மாப் ஸ்டிக்கை கையில் வைத்து புறாக்களை துரத்தினாலும், சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு புறாக்கள் ஆட்டம் காட்டின. 

“பால்கனிக்கு நெட் போட்டு கொடுங்க” என்றாள் ஓனரிடம். 

“அதெல்லாம் முடியாது. வேணாம்னா காலி பண்ணிக்கோங்க” என்றார் அவர். உடனடியாக இன்னொரு வீடு மாற முடியாது. மறுபடியும் நிர்வாகத்தில் ஆப்ரூவல் வராது. அந்த வீட்டில் தான் ஓட்ட வேண்டும் என்பதே சூழல். ஒரு ஞாயிற்று கிழமை, பால்கனிக்குள்ளிருந்த பூச்செடிகளை எடுத்து சென்று குப்பை தொட்டியில் வீசினாள். பின் பெரிய பூட்டொன்றை வாங்கி வந்து பால்கனி கதவை பூட்டினாள். இனிமேல் பால்கனிக்குள் போக மாட்டோம் என்கிற கசப்பான உண்மை பிரியங்காவிற்கு வலியை தந்தது. ஊரிலிருந்த அம்மாவிற்கு போன் செய்து, “மம்மி” என்றவள் மேற்கொண்டு எதுவும் பேசமுடியாமல் தேம்பித்தேம்பி அழுதாள். 

***

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.