குறுங்கதை-6 – விட்னஸ்


சுப்பு என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி ஒரு பிரபலமான ‘விட்னஸ்’. கோர்ட் படி ஏறி, குற்றத்தை கண்ணால் கண்டேன் என்று சாட்சி சொல்லும் விட்னஸ் உங்கள் நினைவிற்கு வந்தால் அந்த எண்ணத்தை நீக்கி விடுங்கள். அவர் ஒரு சாதாரண ஆள். அவருக்கு போலீஸ், கோர்ட் போன்ற விசயங்கள் அலர்ஜி தரக் கூடியவை. என்ன ஆனாலும் வாழ்நாளில் போலீஸ் ஸ்டேஷன் படியை மிதித்துவிடவோ தாண்டிவிடவோ கூடாது என்கிற குறிக்கோளோடு அறுபது வயதை தொட்டுவிட்டார்.  மூன்று பெண்களில், கடைசி பெண்ணை இன்னும் கரை சேர்க்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இருந்தது.

அந்த காலத்திலேயே சி.ஏ தேர்வு எழுதி ஒரு பேப்பரில் தேர்வு பெற முடியாமல் போனதால், ஏதேதோ வேலைகள் செய்து, ஐம்பது வயதிற்கு பின்பு உடல்நலக் கோளாறுகள் வந்ததும் அவராகவே அமைத்துக் கொண்ட சுயதொழில் தான் ‘விட்னஸ்’ தொழில். ஒரு நாளைக்கு குறைந்தது ஐநூறு ரூபாய் உத்தரவாதமாக கிடைக்கும். சில நாட்களில் அதிர்ஷ்டம் இருந்தால் இரண்டாயிரம் மூணாயிரம் கூட கிடைக்கலாம்.  

ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் பத்திர பதிவின் போது பத்திரத்தின் தன்மைக்கேற்ப ஒருவரோ இருவரோ சாட்சி கையெழுத்து போட வேண்டியது சட்டத்தின் அவசியம். இன்னாரை எனக்கு தெரியும், அவர் பத்திரத்தில் கையெழுத்து இட்டதை நான் பார்த்தேன் என்று சொல்வதே சாட்சியின் நோக்கம். எனினும் இப்போதெல்லாம் யாரும் அந்த நோக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை. சம்பிரதாயமாக இரண்டு சாட்சிகள் வேண்டும் என்பதால் யாரோ யாருக்கோ பணத்திற்காக சாட்சி கையெழுத்து போட்டு வந்தார்கள். அப்படி சாட்சி கையெழுத்து போட்டு வந்த ஒரு ‘விட்னஸ்’ தான் ‘சுப்பு’ என்கிற சுப்ரமணி. 

இரண்டு சாட்சிகள் வேண்டுமெனில், பத்திர எழுத்தர் அலுவலகத்தில் வேலை செய்பவர்களே ஒரு சாட்சியாக கையெழுத்து போடுவார்கள். இன்னொரு சாட்சியை தேட நினைத்த நொடியில் கண்முன் வந்து நிற்பார் சுப்பிரமணி. 

“விட்னஸ் இன்னும் வரலையா! சுப்புவ கூப்டு” என்று பத்திர எழுத்தர்கள் சொல்லும் அளவிற்கு அவர் அந்த அலுவலகத்தில் ஆஸ்தான விட்னஸ் ஆகி இருந்தார். காலையிலேயே தயிர்சாதம் பூண்டு ஊறுகாயை கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார். மாலை வரை பத்திரப்பதிவு அலுவலகமே அவர் உலகம். 

ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கு இருநூற்றைம்பது அவரது ஸ்டாண்டார்ட் ரேட். கூட கேட்க மாட்டார். சிலர் ஐநூறு ரூபாய்கூட கொடுப்பார்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டார். எனினும் அந்த தொழிலுக்கும் போட்டி இருந்ததால் எல்லா பத்திரத்திற்கும் அவரே போய் நிற்க முடியாது. வந்ததை வைத்து நிறைவாக வாழ்க்கையை ஓட்டினார், புதிதாக ஸ்கேனிங்  கிளார்க் மணி வரும்வரைக்கும். 

வந்த ஒருவாரத்திலேயே மணிக்கு கையும் வாயும் நீளம் என்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. சுப்புவை அழைத்து “என்ன பெருசு! எல்லாத்துக்கும் நீயே வர! நிறைய காசு பாப்ப போல இருக்கே!” என்றான். 

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க” 

“எல்லாம் தெரியும்யா! அந்த என்.ஆர். ஐ பார்ட்டி ஆயிரம் கொடுத்தானாம்! எனக்கு இனிமே ஒரு நாளைக்கு முன்னூறு கொடுத்துரு அவ்ளோதான்” 

“அவ்ளோ கட்டுப்படி ஆவாதுங்க. சிலநாள்  வரதே அவ்ளோதாங்க!” இதோடு சுப்பு நிறுத்தி இருக்கலாம். அன்று அவருக்கு சந்திராஷ்டமம். சற்றே வாய் துடுக்காக சொல்லிவிட்டார். 

“நீங்க தான் ஒவ்வொரு டாக்குமெண்ட்க்கும் தனியா வாங்குறீங்களே. என்கிட்ட போய் கேட்குறீங்க! நீங்க வாங்குறத நீங்க வச்சிக்கோங்க. நான் வாங்குற சொற்பத்த நான் வச்சுக்கிறேன்”

அவ்வளவுதான். மணி ரிஜிஸ்ட்ராரிடம் என்ன சொன்னான் என்று தெரியாது. மறுநாள் ரிஜிஸ்ட்ரார் அங்கே இருந்த ஆவண எழுத்தர்களை அழைத்து இனிமேல் யாரும் சுப்புவிற்கு வேலை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்.  

“நாங்க என்னையா பண்றது. ரிஜிஸ்ட்ராரே சொல்றார். பேசமா நீ வேற SRO போய்டு! இந்த ஆள் மாறுனதும் வா” என்றனர் ஆவண எழுத்தர்கள். 

சுப்ரமணியால் இந்த வயதிற்கு மேல் வேறொரு ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திற்கு சென்று நட்பு வளர்க்க முடியாது. அதுவும் இல்லாமல் இந்த அலுவலகம் வீட்டிற்கு அருகிலேயே இருந்தது. இந்த வேலையும் எளிமையான வேலையாக இருந்தது. இனிமேல் எங்கு போய் உடலை வளைத்து வேலை செய்வது! 

காலத்தின் கட்டாயத்தில் ஒரு ஹோட்டலில் வாட்ச்மேனாக வேலை சேர்ந்துவிட்டார். நான்கைந்து ஆண்டுகள் ஒடின. விட்னஸ் பணியில் வந்த பணம் வரவில்லை என்றாலும் சம்பளம் வாழ்க்கைக்கு போதுமானதாக இருந்தது. மகளுக்கும் வேலைகிடைத்திருந்ததால் வாழ்க்கையை ஓட்டுவதில் சிக்கல் இல்லை. 

ஒரு நாள் வழக்கம் போல், விசில் ஊதி ஓட்டலுக்கு வந்த வண்டியை பார்க்கிங் செய்ய உதவிக்கொண்டிருந்த போது யாரோ ஒருவன் தடுமாறி ஓடுவதை கவனித்தார். அவனை நான்கு பேர் கைகளில் அரிவாளோடு துரத்தி சென்றனர். அவர்கள் முகத்தை அவர் நன்றாகவே பார்த்தார். சில நொடிகள் தான். ஓடியவனை கீழே தள்ளி அரிவாளுக்கு வேலைக் கொடுத்தனர் அந்த நான்கு பேரும். 

சுப்ரமணியின் கண்களும் கீழே துடித்தவனின் கண்களும் சந்தித்துக் கொண்டது. அவன் அவரை பார்த்தவாறே உயிரை விட்டான். 

சிசிடிவி காட்சிகள் போலீசிற்கு எந்த துப்பையும் கொடுக்கவில்லை. “யாரவது கொலையை நேரில் பார்த்தீர்களா?” என்று பலரை விசாரித்தும் யாரும் சாட்சி சொல்ல முன்வரவில்லை. சுப்பிரமணி தன் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி நேரடியாக காவல்நிலையத்திற்கே போய் நடந்ததை சொன்னார். போலீசார் அவரை வழக்கில் ‘விட்னஸாக’ இணைத்தனர். 

சுப்பிரமணி இறுதிவரை வழக்கிலிருந்து பின்வாங்கவில்லை. கொலைகாரர்கள் தண்டிக்கப்பட்டனர். இறந்துபோனவனின் குடும்பத்தினர் சுப்ரமணியை கையெடுத்து கும்பிட்டனர்.  

கொலையுண்டு இறந்து போய் தன்னை போலீஸ் ‘விட்னஸ்’ ஆக்கிய மணிகண்டன் தான் தன் ‘ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ் ‘விட்னஸ்’ ‘வேலை பறிபோக காரணமான ஸ்கானிங் கிளார்க் மணி என்கிற உண்மையை ‘சுப்பு’ என்கிற சுப்பிரமணி சாகும்வரை யாரிடமும் சொல்லவில்லை. 

***

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.