குறுங்கதை-5 – அவள், அவன் மற்றும் கடல் 


அவள், அவன் மற்றும் கடல் 

இரவு. மெரினா கொஞ்சம்கொஞ்சமாக  அடங்கிக் கொண்டிருந்த வேலை. பெரும்பாலான வியாபாரிகள் கடையை அடைத்திருந்தார்கள். மிச்சமிருந்த ஓரிரு உணவகங்கள் விளக்கை அணைத்துவிட்டு  கடைசி வாடிக்கையாளர்களுக்கு  உணவு பரிமாறிக் கொண்டிருந்தன. கடற்கரையை ஒட்டியிருந்த சாலையில் போலீஸ் வாகனம் சைரனை இயக்கி வியாபார நேரம் முடிந்துவிட்டதை தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. 

அவள்  ஹெல்மெட்டை மணலில் போட்டுவிட்டு கடலை நோக்கி நடந்தாள். கடல், எப்போது சென்றாலும்  யாரையும் வஞ்சனையின்றி வரவேற்கும். நீரில் கால் பட்டதும் காரணமேயின்றி கண்களில் நீர் சுரக்கத் தொடங்கியது. தன் கையிலிருந்த பெரிய பையினுள் கைவிட்டதும் வெளியே எட்டிப்பார்த்தார் பளிங்கு புத்தர். அவன் கொடுத்த முதல் பரிசு.  இனிமேல் அவர் இருக்க வேண்டிய இடம் கடல். புத்தர் அலையினுள் மிதந்து மறைந்தார். 

அடுத்து பைக்குள்ளிருந்து வந்தது சில கடிதங்கள். சொற்கள் அர்த்தமற்று போகும்போது கடிதங்கள் வெற்றுக் காகிதங்கள் ஆகின்றன. கண்களை துடைத்துக் கொண்டே அவற்றைக் கடலில் எறிந்தாள்.பேன்சி வளையல்கள், லினன் ஸ்டோல்கள், அலங்கார உடைகள் என வரிசையாக ஒவ்வொன்றாய் கடல் சேர்ந்தது. பையின் கணம் குறைய குறைய மனதின் கணமும் குறைந்துகொண்டே வந்தது. இறுதியாக அந்த பையையும் தூக்கி வீசியவள்,

“கெட் அவுட் ஆஃப் மை லைஃப்  யூ பாஸ்டர்ட்” என்று கத்தினாள். 

இதழோரம் புன்னகை பிறந்தது. கண்களை மூடி கடலை உள்வாங்கினாள். காதில் ஒலித்தது அலை ஓசை மட்டுமே. கொஞ்ச நேரத்தில் அதுவும் இல்லை. எங்கும் சூனியம். இனிமேல் தன் வாழ்வில் அவன் இல்லை.அவன் கொடுத்த பொருட்களோடு அவன் நினைவுகளும் கடலில் கறையட்டும். துரோகியை நினைத்து வாழ்க்கையை தொலைக்க முடியாது. இந்த நொடியிலிருந்து புது வாழ்க்கை தொடங்குகிறது. இன்னும் ஒருவாரத்தில் விசா நேர்காணல் இருக்கிறது. வேறு ஊர் புதிய அத்தியாயத்தை தரக்கூடும். காலம் எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அப்பா விரும்புவதும் அதைதான். அவன் தந்த எதுவும் இப்பொது தன்னிடம் இல்லை என்ற எண்ணம் தோன்றி ஆசுவாசத்தை தந்தபோது, அனிச்சையாக வயிற்றை ஒரு முறை தடவி பார்த்துக் கொண்டாள்.   

“தி நகர்ல ஒரு ஹாஸ்ப்பிட்டல் இருக்குடி” அவள் தோழி ரம்யா சொன்னது நினைவிற்கு வந்தது. 

அவன் தான் துரோகி, தான் அல்ல என்று அவளுக்கு நன்றாக தெரியும். அதுவும் ஒரு பிஞ்சு என்ன பாவம் செய்தது? 

கண் திறக்காமல் கடல் உள்ளே நடந்தாள். அப்பா ஆசையாக வாங்கிக் கொடுத்த வண்டியை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருக்கலாம் என்று மனம் சொன்னது. 

“ஐ லவ் யூ டாட்” என்றாள்.

கடல் அன்னை அவளை வாரி அணைத்துக்  கொண்டாள்.  

***

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.