குறுங்கதை-4 – பழைய நண்பன்


பழைய நண்பன்

சந்தோசும் ரகுவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இறுதி ஆண்டிலேயே கேம்பஸில் ரகுவிற்கு வேலை கிடைத்தது. சந்தோஷிற்கு கிடைக்கவில்லை. அவன் அதே கல்லூரியில் முதுகலை பொறியியல் படித்தான்.  அப்போதும் வேலை கிடைக்கவில்லை மீண்டும் அதே கல்லூரி ஹாஸ்டலில் பகுதி நேர வார்டானாக கொஞ்சகாலம் வேலை செய்தான். ரகு ஈ.எம். ஐயில் வீடு வாங்கினான. கார் வாங்கினான். திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளை பெற்றான். சந்தோஷ் நல்ல வேலையை  தேடிக் கொண்டிருந்தான். 

ரகுவிற்கு ஒரு பிரச்சனை இருந்தது. அவனிடம் யார் கடன் கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டான். கர்ணபரம்பரை என்று எண்ண வேண்டாம். ‘இல்லை’ என்று சொன்னால் தன்னுடைய கெத்து குறைந்துவிடுமோ என்கிற அச்சத்தில் ஏதாவது ஒரு தொகையை கொடுத்துவிடுவான். ஆனாலும் கடனை திருப்பி கேட்க தைரியம் வராது. அப்படியே கேட்டாலும், வாங்கியவர்கள் உடனே கொடுத்துவிடுவார்களா என்ன! இப்படி தான் ரகு தன் பள்ளி நண்பன் பிரவீனுக்கு பல ஆயிரங்கள் பல சந்தர்ப்பங்களில் கொடுத்தான். பிள்ளைக்கு பள்ளிக்கூட பீஸ் கட்டவேண்டும், அப்பாவிற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று பிரவீன் ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்வான். பின்னர் பணத்தை திருப்பி கேட்டபோது பிரவீன் அதற்கும் ஏதேதோ காரணம் சொல்லி நாட்களை கடத்தினான். அப்படியே தன் அலைபேசி எண்ணையும் மாற்றிவிட்டான். ரகுவிற்கு ஏமாற்றமாக இருந்தது.  

ஒருநாள் தெரியாத ஒரு எண்ணிலிருந்து  அழைப்பு வந்தது. பிரவீன் தான் பேசினான். மீண்டும் அவசர தேவை என்று பணம் கேட்க, ரகு உறுதியாக மறுத்தான். காலம் அவனையும் மாற்றி இருந்தது.  அதன் பின்பு பிரவீன் பல முறை அழைத்தும் ரகு அழைப்பை ஏற்கவில்லை. பழைய நண்பர்கள் யாரவது அழைத்தால் கடன் கேட்டுவிடுவார்களோ என்கிற அச்சத்தோடே  ரகுவின் நாட்கள் கழிந்தன. இதனாலேயே தேவை இல்லாமல் நண்பர்களிடம் பேசுவதை தவிர்த்தான். 

ஒரு நன்னாளில் சந்தோஷிடமிருந்து ரகுவிற்கு வாட்ஸ்  அப்பில் மெசேஜ் வந்தது. 

“ஹாய் மச்சி”

ரகுவிற்கு  பயம் அதிகமானது. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு நண்பன் சதீஷின் குழந்தையுடைய பிறந்தநாள் விழாவில் பார்த்தபோது கூட  சந்தோஷ் தான் வேலை தேடிக் கொண்டிருப்பதாக சொன்னான். இவ்வளவு வருடங்களுக்கு பிறகு ஏன் தொடர்பில் வருகிறான்? ஒருவேளை கடன் கேட்பானோ! அதற்கு முன்பு சந்தோஷ் ரகுவிடம் கடன் கேட்டதில்லை தான். ஆனாலும் எல்லாவற்றிற்கும் முதல் முறை என்று ஒன்று இருக்கிறதே?

ரகு பதில் அளிக்கவில்லை. சிறிது நேரத்தில் சந்தோஷிடமிருந்து அழைப்பு வந்தது. ரகு பயந்துக் கொண்டு போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டான். அடுத்து சந்தோஷை பிளாக்கும்  செய்துவிட்டான்.

அடுத்த வருடம்  கல்லூரியில் அலுமினி மீட்டிங் வந்தது. பயத்திலிருந்து மீண்டிருந்த  ரகு பழைய நண்பர்களை காணும் பொருட்டு சென்றிருந்தான். பலரும் வந்திருந்தனர். சந்தோஷ் வரவில்லை. 

“பார்த்து எவ்ளோ நாள் மாப்ள ஆச்சு” என்று சதீஷ் ரகுவை தழுவிக் கொண்டான். ஏதேதோ பேசினார்கள். இறுதியாக பேச்சு சந்தோஷ் பக்கம் திரும்பியது.. 

“அவன் பெரிய நகைக் கடை அதிபர் ஆகிட்டான் மாப்ள. அவங்க மாமனார் பெரிய கோடீஸ்வரர் தெரியும்ல!” சதீஷ் சொல்ல ரகு அதிர்ந்தான். 

“அவன் கல்யாணத்துக்கு போன பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு கிராம் கோல்ட் காயின் கொடுத்தாண்டா! அப்ப பாத்துக்கோ எப்பேர்ப்பட்ட வெய்ட் கைனு” சதீஷ் சொன்னதை கேட்டதும் ரகுவிற்கு தலை சுற்றியது. போனை அணைக்காமல் இருந்திருந்தால் தனக்கும் ஒரு தங்க காயின் கிடைத்திருக்கும் என்று எண்ணும்  போதும் அழுகையாக வந்தது.

“ஏன் மாப்ள அவன் கல்யாணத்துக்கு உன்ன கூப்புடலையா? எனக்குலாம் கால் பண்ணான்னே!” 

சுதாரித்துக் கொண்ட ரகு சுற்றுமுற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு சொன்னான், “எப்பிடிடா பண்ணுவான். அவன் வேலை தேடிகிட்டு இருந்தப்ப மாச செலவுக்கு நான் தான் பணம் கொடுத்தேன்.எவ்ளோ செஞ்சிருக்கேன் தெரியுமா! நன்றி கெட்டவன்”

 ***

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.