சைக்கிள் சித்தப்பா
சைக்கிள் மிதிக்கும் அளவிற்கு உடலில் தெம்பில்லை. சைக்கிளை போட்டுவிடவும் மனமில்லை. அப்பாவின் நியாபகமாக அவனிடம் இருந்த ஒரே பொருள் அது தான். அதனாலேயே சைக்கிளை தள்ளிக் கொண்டே நடந்தான்.
உச்சி வெயிலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது கடினமாக தான் இருந்தது. ஒரு வாய் சோறு கிடைத்தால் தேவலை.பணமில்லை. மார்க்கெட்டில் நுழைவாயில் ஒரமாக இருந்த அடிபம்ப்பில் தண்ணீரை குடித்துவிட்டு காந்தி மார்க்கெட்டினுள் நுழைந்தான். காரணமேயின்றி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எதிரே வந்த வெள்ளை வேட்டிக்காரரை கவனித்தான். அவர் அருகில் வரும்போது தான் முகம் புரிந்தது. “சித்தப்பா” தனக்குள் சொல்லிக் கொண்டான்.
சிறு வயதில் அவனை சைக்கிளின் பின்னமர வைத்து அவர் மார்க்கெட் முழுக்க சுற்றி காட்டிய காட்சி ஒரு கணம் கண்முன் தோன்றி மறைந்தது. அப்பாயியின் சொத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராரு குடும்பத்தை பிரித்து பதினைந்து வருடங்கள் இருக்கும். அதன் பின் சித்தப்பாவை இன்று தான் பார்க்கிறான். தனக்கு மட்டும் வயசாகிறது, அவர் இன்னும் அப்படியே இருக்கிறார்.
அவர் இவனை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். “சித்தப்பா” என்று குரலெழுப்பினான். திரும்பினார். “என்னப்பா” என்றார். சித்தப்பா இல்லை. பரிச்சயமற்ற வேறொரு முகம். இவன் எதுவுமே பேசாததால் அவர் நகர்ந்தார். இவன் மேற்கொண்டு நடந்தான். வேட்டி நழுவுவது போல் இருந்தது. சைக்கிளை நிறுத்திவிட்டு அழுக்கு படிந்த தன் வேட்டியை இறுக்கிக் கட்டினான். ஒரு நொடி தான். சைக்கிள் அங்கு இல்லை. “அப்பா என்ன விட்டுட்டு போய்ட்டியே” என்று அழுதவாறே சுற்றும்முற்றும் பார்த்தான்.
வெகு தொலைவில் அந்த வெள்ளை வேட்டிக்காரர் இவனுடைய சைக்கிளில் போய் கொண்டிருந்தார். அவரது முதுகுபுறம் சித்தப்பாவை போலவே இருந்தது. ஓடிச்சென்று சைக்கிளின் பின் ஏறிக்கொண்டால் அவர் மார்க்கெட் முழுக்க சுற்றிக்காட்டக்கூடும். சாப்பிட நெய் சோறும் வாங்கித்தருவார். அழுகையை நிறுத்திவிட்டு, “சித்தப்பா” என்று கத்தினான். சைக்கிள் புள்ளியாக மறைந்தது.
***
Leave a comment