கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது.
குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம்.
சில தொகுப்புகளில் சில கதைகள் பெரிதும் பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’ (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்) , மற்றும் லாவண்யா சுந்தர்ராஜனின் ‘யூனிபார்ம்’ (தொகுப்பு: புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை) போன்ற கதைகளை சொல்லலாம்.
சில தொகுப்புகள் முழுவதுமே பெரும் நிறைவை தரக்கூடியதாக இருந்தன. ஜேபி. சாணக்கியாவின் ‘பெருமைக்குரிய கடிகாரம்’, கே. என். செந்திலின் ‘அகாலம்’, சாம்ராஜின் ‘பட்டாளத்து வீடு’ மற்றும் சு.வேணுகோபாலின் ‘உயிர்ச்சுனை’ ஆகியன மனதிற்கு மிக நெருங்கி வந்த தொகுப்புகள். இவை நான்குமே versatile -ஆன கதைகளை கொண்டவை. பலவகையான உணர்வுகளை பேசுபவை. ஒரு தொகுப்பு வாசிப்பு சுவாரஸ்யத்தையும் தருகிறது, நம்மை கொஞ்சம் அசைத்தும் பார்க்கிறது எனில் அது மிகச்சிறந்த தொகுப்பு என்று சொல்வதில் எந்த குழப்பமும் இருக்காது. மேற்சொன்ன நான்கு தொகுப்புகளும் அத்தகையவையே.
கே. என் செந்திலின் ‘இல்லாமல் போவது’, சு.வேணுகோபாலின் ‘புத்துயிர்ப்பு’, ஜேபி. சாணக்கியாவின் ‘இஸ்மாயிலின் தேவதை’ மற்றும் சாம்ராஜின் ‘பார்வதிக்குட்டி’ ஆகிய கதைகள் இனிவரும் காலங்களிலும் என் மனதில் நிற்கும்.
நாவல்களில் அகிலாவின் ‘தவ்வை’, வாசு முருகவேளின் ‘ஆக்காண்டி’ மற்றும் பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ ஆகியவை கடந்த ஆண்டின் பேவரைட்கள். கன்னி தந்த பித்துநிலையிலிருந்து மீள சில நாட்கள் ஆகின. ஒரு எளிய கிராமத்து பெண்ணின் வாழ்க்கை கதையாக தொடங்கி தி.ஜாவின் அம்மா வந்தாள் போல் மனித மனதின் ரகசியங்களை தொடும் அழகான கதை ‘தவ்வை’.
வலியும் அதிர்ச்சியும் தரக் கூடிய சம்பவங்கள் கொண்டது ‘ஆக்காண்டி’. இதன் நேர்த்தியான கதை சொல்லல் முறை நம்மை அந்த யுத்த உலகிற்குள் இட்டுச் சென்றுவிடுகிறது.

எப்போதும் போல எனக்கு பிடித்த சுஜாதாவையும், இந்திரா சௌந்தர்ராஜனையும் நிறைய (மீண்டும்) வாசிக்க முடிந்தது. சுஜாதாவின் கரையெல்லாம் செண்பகப்பூவை இந்த காலத்திலும் சினிமாவாக மறுஉருவாக்கம் செய்திட முடியும். இந்திரா சௌந்தர்ராஜனின், ‘விட்டுவிடு கருப்பா’ ஒரு முழுமையான த்ரில்லர். அதன் perfection குறிப்பிடப்படவேண்டியது. நாவலைப் பற்றியும் அதன் திரைவடிவமான, தமிழின் மிகச் சிறந்த த்ரில்லர் தொடரான விடாது கருப்பைப்பற்றியும் விலாவரியாக தனியாக எழுத வேண்டும்.
சுப்பிரமணியபுரம், சிந்து பைரவி ஆகிய படங்களின் திரைக்கதை நூல்களை ஒன்றன்பின் ஒன்றாக வாசித்தேன். இரண்டு படங்களுமே மிக எளிமையான ‘கதைக் கருவை கொண்டவை. ஆனால் புத்திசாலித்தனமான திரைக்கதையை கொண்டவை. கோர்வையான சம்பவங்களின் தொகுப்பான இதன் திரைக்கதையில் எந்த காட்சியையும் நீக்கிவிட முடியாது எனும் அளவிற்கு ஆர்கானிக்காக எழுதியிருக்கிறார்கள். திரைக்கதை பயில விரும்புவோர்க்கு இந்த நூல்கள் நிச்சயம் பயன்படும்.
பல வருடங்களாக வாசிக்காமல் வைத்திருந்த அஸ்வின் சங்கியின் ‘The Krishna Key’ நாவலை வாசித்தேன். நாவல் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது என்று சொல்லிட முடியாது. கதை நீண்டு கொண்டே போனது என்பதே உண்மை. ஆனால் இந்த நாவலில் வரும் மகாபாரத குறிப்புகள் என்னை மீண்டும் மகாபாரதத வாசிப்பை நோக்கி இட்டுச் சென்றுவிட்டது. அதன் விளைவாக வாசித்த, பிரபஞ்சனின் மகாபாரதம், தேவ்தூத் பட்நாயக்கின் ‘ஜெயா’ , பழ கருப்பாய்யாவின் ‘மகாபாரதம் மாபெரும் விவாதம்’ ஆகிய புத்தகங்கள் மகாபாரத உலகில் லயித்திருக்க உதவின.
அபுனைவுகளில் பா.ராவின் எழுதுதல் பற்றிய குறிப்புகளும் , ஸ்பென்சர் ஜான்சனின் The New One Minute Manager புத்தகமும் குறிப்பிடத்தகுந்தவை. இரண்டுமே அந்தந்த துறைகளில் உள்ள சிக்கல்களை நேர்மறையாக அணுகுவதை பற்றி பேசுகின்றன. ஸ்டீபன் கிங்கின் ‘On Writing’ போல தமிழில் வெளியான முக்கியமான memoir பா.ராகவனின் எழுதுதல் பற்றிய குறிப்புகள் எனலாம்.
கடந்த ஆண்டு வாசிக்கத் தொடங்கி இன்னும் தொடரும் புத்தங்கள் நிறைய உள்ளன. இந்த ஆண்டு அவற்றையும் இன்னும் பல புத்தகங்களையும் வாசிக்க வேண்டும்.
For the love of Books…
From Reading List (2023)…
சிறுகதை தொகுப்புகள்
Short cuts- Raymond Carver
சாபம்- சல்மா
நீலம் பூக்கும் திருமடம்-ஜா. தீபா
அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்- அழகிய பெரியவன்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை-லாவண்யா சுந்தர்ராஜன்
பெருமைக்குரிய கடிகாரம்- ஜேபி. சாணக்கியா
அகாலம்- கே. என். செந்தில்
பட்டாளத்து வீடு- சாம்ராஜ்
உயிர்ச்சுனை- சு.வேணுகோபால்
நாவல்
தவ்வை- அகிலா
ஆக்காண்டி- வாசு முருகவேள்
கன்னி-பிரான்சிஸ் கிருபா
ஷம்பாலா-தமிழவன்
திரில்லர் நாவல்
The Incredible Banker- Ravi Subramanian
The Krishna Key- Ashwin Sanghi
காலச்சக்கரம்- நரசிம்மா
கரையெல்லாம் செண்பகப்பூ- சுஜாதா
எதையும் ஒருமுறை-சுஜாதா
விட்டுவிடு கருப்பா- இந்திரா சௌந்தர்ராஜன்
காற்று காற்று உயிர்-இந்திரா சௌந்தர்ராஜன்
நைலான் கயிறு, அனிதா, கொலை அரங்கம், மலை மாளிகை- சுஜாதா
ஆயிரம் அரிவாள் கோட்டை, நந்தி ரகசியம்- இந்திரா சௌந்தர்ராஜன்
திரைக்கதை நூல்கள்
Beat by Beat – Todd Klick
In to the Woods- John Yorke
சுப்பிரமணியபுரம்- சசிகுமார்
சிந்து பைரவி – கே.பாலச்சந்தர்
கட்டுரைகள்/அபுனைவுகள்
The New One Minute Manager- Spencer Johnson
எழுதுதல் பற்றிய குறிப்புகள்- பா ராகவன்
மகாபாரத நூல்கள்
மகாபாரதம்- பிரபஞ்சன்
மகாபாரதம் மாபெரும் விவாதம்- பழ கருப்பையா
Jaya-Devdutt Pattanaik
நன்றி
Leave a comment