பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜானரை (Genre) எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையைப் போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’.
புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. ஆனால், திரைக்கதை சுவாரஸ்யமாக வந்தால் போதும், எந்த முறையைப் பின்பற்றி எழுதினோம் என்பதைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்றும் முன்கூட்டியே பதிவு செய்கிறார் மார்ட்டல். அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்பதை இங்கே விவாதித்திருக்கிறேன்.
ஆனால் மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் எழுதுவது போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளை பேசு பொருளாக வைத்து, விலாவரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. அது ஓரளவிற்கு சாத்தியமாகியிருக்கிறது என்று நம்புகிறேன். புதிதாக திரைக்கதை எழுத தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்தக் கட்டுரைகள் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இயன்றவரை எளிமையாக திரைக்கதை எழுதுதலைப் பற்றி பேசியிருக்கிறேன் என்றும் நம்புகிறேன்.
மற்றபடி, நாம் பல முறை சொல்லும் ஒரு முக்கிய விஷயம், திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்றும் யாரும் சொல்ல முடியாது. தொடர்ந்து எழுதுவதே திரைக்கதை எழுதும் கலையை கற்றுக்கொள்ள ஒரே வழி. இங்கே நம்மால் சொல்ல முடிந்தது வெறும் உத்திகளை மட்டுமே. நம்முடைய திரைக்கதை பயணத்தில் நமக்கான வழிக்காட்டியாக இங்கே விவாதிக்கப்பட்ட படங்கள், புத்தகங்கள், உத்திகள் பயன்படக்கூடும். பயணத்தை நாம் தான் மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் பயணத்தில் சம்ப்ரதாயங்களை நாம் மீற வேண்டிவரும். அப்போது தைரியமாக நாம் அதை செய்ய வேண்டும்.
திரைக்கதை எழுதுதல் என்பது ‘art + craft’ என்று சொல்லப்படும் கூற்று உண்மைதான். பொதுவாக எழுதும் கலையே அப்படிதான். வெறும் ஆர்ட்டை மட்டும் வைத்துக் கொண்டு என்ன எழுதிவிட முடியும்! நாம் கதைகள் சொல்கிறோம். வெறும் கலையாக நாம் வார்த்தைகளை அல்லது காட்சிகளை அடிக்கிக்கொண்டே போனால், நமக்கே அது பிடிக்காமல் போகலாம். ஒரு எழுத்தாளனின் முதல் வாசகன் அவனாகத்தான் இருக்க முடியும். இங்கு தான் Craft முக்கியமாகிறது. எழுதுதல் என்பது கலை என்பதிலிருந்து ஒரு பயிற்சியாக மாறுகிறது. எழுதி எழுதி பயிலும்போது பொருத்தமான வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஸ்டைல் கண்டுகொள்ளப் படுகிறது. காட்சிகளை உருவாக்க முடிகிறது. உரையாடலில் தனித்துவம் பதிக்க முடிகிறது. ஒருவருக்கு எழுதும் Craft கைக்கூடி வந்திருக்கிறது என்று சொல்வோமேயானால், அதன் பின் பலவருட உழைப்பும் பயிற்சியும் நிச்சயம் இருக்கும். திரைக்கதை எழுதுவது மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல.
மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டே இருப்போம். அதுவே மிகச் சிறந்த பயிற்சி. நாம் எழுதும் எல்லாத் திரைக்கதைகளும் திரைப்படமாவது சாத்தியமில்லை. ஆனால் நாம் எழுதும் ஒவ்வொரு திரைக்கதையும் நம்முடைய அடுத்த திரைக்கதைக்கான பயிற்சி என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நம் சிந்தனையும், வாசிப்பும், அனுபவமும், பார்க்கும் படங்களும் கலையை சாத்தியப் படுத்தும். பயிற்சி அந்தக் கலைக்கு சிறப்பான வடிவத்தை சாத்தியப்படுத்தும். தனித்துவத்தை சாத்தியப்படுத்தும்.
என் எல்லா திரைக்கதை கட்டுரைகளிலும் நான் திரைக்கதையைப் பற்றிய என்னுடைய அணுகுமுறையை தான் முன் வைக்கிறேன். ஒரு கதையை, ஒரு நாவலை, ஒரு திரைக்கதையை நான் அணுகும் அதே முறையில் நீங்கள் அணுக வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் என்னுடைய அணுகுமுறை உங்களுக்கு சரியாக படலாம். அப்போது அங்கே ஒரு விவாதம் பிறக்கிறது. நீங்கள் திரைக்கதை எழுதத் தொடங்கும் போதோ, அல்லது எழுதி முடித்துவிட்டு அந்தக் கதையை சரிபார்க்கும் போதோ இந்த அணுகுமுறை உங்களுக்கு தோழனாக உடன் வரலாம்.
அதே சமயத்தில் என்னுடைய அணுகுமுறை தவறு என்று நீங்கள் சொல்லும் போது அங்கே இன்னும் நல்ல விவாதம் பிறக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல விவாதங்கள் தான் நல்லத் திரைக்கதைகளை சாத்தியப்படுத்தும் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து எழுதுவோம், தொடர்ந்து விவாதிப்போம்
அரவிந்த் சச்சிதானந்தம்
aravindhskumar@gmail.com
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
அக்டோபர் 2019
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-அரவிந்த் சச்சிதானந்தம்
அந்தாதி பதிப்பகம்
புத்தகத்தை கிண்டிலில் வாங்க இங்கே சொடுக்கவும்
பிரிண்ட் புத்தகம் ஜனவரி 2020-யில் வெளியாகும்…