என் ஆசான்- அகிரா குரோசவா


1974 ஆகஸ்ட் மாதம், என்னுடைய குருநாதர் யமா-சண் (எ) யமாமோட்டோ கஜிரோ படுத்த படுக்கையாக இருக்கிறார், அவர் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற செய்தி என்னை வந்தடைந்தது. என்னுடைய படமான டெர்ஷு உஷாலாவை (Dersu Uzala) தொடங்குவதற்காக நான் சோவியத் யூனியன் செல்லவிருந்த தருணம் அது. படப்பிடிப்பு ஒருவருடத்திற்கு மேல் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் யமா சண் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்னால் ஜப்பானிற்கு திரும்பி வர இயலாது என்பதை அறிந்த வருத்ததோடு நான் அவரை சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றேன். அவருடைய வீடு, டோக்கியோவின் புறநகரில் செய்ஜோ மலைப்பகுதியில் அமைந்திருந்தது. வீட்டையும் அதன் நுழைவாயிலையும் இணைத்த அந்த செங்குத்தான பாதையின் இருபுறத்திலும் யமா-சண்னின் துணைவியார் ஏரளமான பூக்களை நட்டிருந்தார்.  துக்க மனநிலையிலிருந்த எனக்கு அந்த பூக்களின் வண்ணம் உவப்பாக இல்லை.

யமா-சண் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அவருடைய மிக நீண்ட மூக்கு மேலும் நீண்டு காட்சியளித்தது. அவருடைய உடல் நலத்தை விசாரித்த நான், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்ற சம்ப்ரதாயமான வார்த்தைகளை உதிர்த்தேன். மிகவும் சன்னமான குரலில், “நீ ரொம்ப பிசினு தெரியும், இருந்தாலும் இவ்ளோ தூரம் வந்ததுக்கு நன்றி” என்றார். மேலும், “உன் ரஷ்யன் உதவி இயக்குனர் எப்டி?” என்று வினவினார்.

“நல்லவர். நான் சொல்றதெல்லாம் எழுதிடுறார்” என்றேன். நான் சொன்னதை கேட்டதும் சப்தமாக சிரித்தவர்,

“வேற எதையும் செய்யாம எழுதுற வேலைய மட்டும் செய்ற உதவி இயக்குனரால ஒரு ப்ரோயஜனமும் இல்ல” என்றார். அவர் சொல்வதைப் பற்றி நானும் யோசித்திருக்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் அதைப் பற்றியெல்லாம் பேசி அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.

“அவர் ரொம்ப நல்லவர் மட்டும் இல்ல, ரொம்ப நல்லா வேலை செய்யக் கூடியவரும் கூட” நான் சிறு பொய்யோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டேன்.

“அப்படினா, ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவர், சுகியாக்கி (ஜப்பானிய உணவு) பற்றி பேசத் தொடங்கினார்.

அந்த காலத்தில் கிடைத்த சுகியாக்கி போல் சுவையான சுகியாக்கி ஒரு உணவகத்தில் கிடைப்பதாக சொன்ன அவர், அந்த இடத்திற்கு எப்படி போகவேண்டும் என்று வழியையும் சொன்னார். பின், ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து சென்ற உணவகத்தைப் பற்றியெல்லாம் பேசினார். தற்போது தனக்கு பசி அறவே எடுப்பதில்லை என்று அவர் சொன்னபோது, பசியற்றவர் உணவுகளைப் பற்றியும் உணவககங்களைப் பற்றியும் அவ்வளவு உற்சாகமாக உரையாடுவதை எண்ணி என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை என்னை ரஷ்யாவிற்கு மலரும் நினைவுகளோடு அவர் வழியனுப்ப விரும்பியிருக்கலாம்.

மாஸ்கோவில் இருந்தபோது, யமா சண் இறந்துவிட்ட தகவல் என்னை எட்டியது. யமா சண்ணை அவரது இறுதி நாட்களைக் கொண்டு நான் அறிமுகப் படுத்துவது  விசித்திரமாக தோன்றலாம். ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது. தான் தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்த போதும், அவருடைய அக்கறை எல்லாம் தன்னுடைய உதவி இயக்குனர்களின் மீதே இருந்தது என்பதை நான் பதிவு செய்யும் பொருட்டே இதையெல்லாம் சொல்கிறேன். தன் உதவி இயக்குனர்களின் மீது இந்த அளவிற்கு அதிக கவனம் செலுத்திய இயக்குனர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

ஒரு படத்தை தொடங்கும் போது, இயக்குனரின் முதல் வேலை தன்னுடைய குழுவை தேர்ந்தெடுப்பது. யமா சண், தன் படத்தை தொடங்கும் போது யாரை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். எல்லா விசயங்களிலும் திறந்த மனதுடன், சகஜமாக இருக்கும் யமா சண், உதவி இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் மட்டும் மிகவும் கறாராக இருந்தார். யாரவது புது ஆள் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்றால், யமா சண் அவரைப் பற்றி, அவரின் குணநலன்கள் பற்றி மிகவும் தீவிரமாக விசாரிப்பார். அதில் திருப்தி அடைந்தால் தான் அவர்களை சேர்த்துக் கொள்வார். ஆனால் அவர்களை ஏற்றுக் கொண்டப் பின், சீனியரிட்டி சார்ந்த பாகுபாடுகள் எல்லாம் யமா சண்னிடம் இருக்காது. எல்லாரையும் சரிசமமாக நடத்துவார். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ப்பார். இந்த சுதந்திரமான வெளிப்படையான சூழல் தான் யமாமோட்டோ குழுவின் அடையாளம் .

akira_kurosawa_1196099       Image Courtesy: Marian Avramescu

1937 முதல் 1941 ஆம் ஆண்டு வரை நான் யமா சண்னோடு நான் அதிக படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் மூன்றாம்நிலை உதவி இயக்குனராக இருந்த நான், முதல் நிலை உதவி இயக்குனரானேன். செகண்ட் யூனிட் இயக்கம், படத்தொகுப்பு, டப்பிங் போன்ற வேலைகளையும் நான் செய்ய வேண்டியிருந்தது. நான் அந்த நிலையை அடைய எனக்கு நான்கு ஆண்டுகள் ஆனாலும், ஒரே ஓட்டத்தில் ஒரு மலை மீது ஏறிவிட்டதாகவே நான் உணர்ந்தேன்.

யமாமோட்டோ குழுவில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான்.  என்னால் வெளிப்படையாக எதைப் பற்றியும் பேச முடிந்தது. எனக்கு நிறைய வேலைகள் இருந்தன. நான் மிகுந்த ஆர்வத்தோடு அவற்றை செய்து கொண்டு வந்தேன். ஆனால் அது நாங்கள் பணியாற்றிய P.C.L சினிமா நிறுவனம், மற்ற நிறுவனங்களின் இயக்குனர்களையும் நடிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு ‘டோகோ’ என்ற பெரிய நிறுவனமாக வளரத் தொடங்கிய காலக் கட்டம்.  அதனால், மற்ற ஸ்டூடியோ நிறுவனங்களிடமிருந்து தனித்து தெரிவதற்காகவே எங்கள் நிறுவனம், ஒவ்வொரு படத்திலும் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியது. சூழ்நிலை மிகவும் கடினமாக மாறி வந்தது. ஒவ்வொரு வேலையும் பெரும் உழைப்பை கோரியது. இதுவே ஒருவருக்கு கிடைக்கக் கூடிய பெரும் பயிற்சியாக இருக்க முடியும் என்று நான் சொல்ல வரவில்லை. இரவில் ஒரு நாள் கூட நான் சரிவர உறங்கியதில்லை என்பதே நான் சொல்ல வருவது. அந்த காலத்தில், ஒரு படப்பிடிப்பு குழுவிற்கு இருந்த மிகப்பெரிய ஆசை, நல்ல உறக்கம் மட்டுமே. குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு கொஞ்சமாவது இரவு ஓய்வு கிட்டியது. ஆனால் எங்களைப் போன்ற உதவி இயக்குனர்கள் அப்போதும் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கான வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

எங்களுக்கு ஓய்வே இருக்காது. அப்போதெல்லாம், ஒரு பெரிய மெத்தை விரிக்கப்பட்ட ஒரு பெரிய அறை என் கற்பனையில் தோன்றி மறையும். நான் அதில் உறங்குவதாக எண்ணி சந்தோசப் படுவேன். ஆனாலும் அந்த கற்பனைகளை ஒதுக்கிவிட்டு, கண்ணில் எச்சிலை தடவிக்கொண்டு மீண்டும் வேலையில் இறங்கிவிடுவோம். ஒவ்வொரு படத்தையும் சிறப்பாக உருவாக்கும் பொருட்டு உதவி இயக்குனர்களாகிய நாங்கள் எங்களிடம் மிச்சம் மீதியிருந்த தெம்பையெல்லாம் கொடுத்தோம். யமா சண் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே விடாது உழைக்கும் இந்த மனப்பாங்கை எங்களுக்கு கொடுத்தது. இந்த மனப்பாங்கு பின்னாளில் நாங்கள் படம் இயக்கும்போதும் எங்களிடம் இருந்தது.

யமா சண்ணுக்கு கோபமே வராது. அப்படியே வந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். அதனால், அவர் கோபமாக இருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு நான் தான் உணர்த்துவேன். மற்ற ஸ்டூடியோக்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நடிகர்கள் பலரும் மிகவும் சொகுசாக, சுயநலம் கொண்டவர்களாக வார்த்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அது பலநாள் தொடர்ந்தாலும் யமா சண் கோபப் படமாட்டார். ஆனால் குழுவினர் ஆத்திரம் அடைவார்கள். இது வேலையை பெரிதும் பாதிக்கும். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும்போது, யமா சண் குழுவினர் அனைவரையும் அழைத்து, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். மறுநாள் அந்த நடிகர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும், “இன்னைக்கு படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு, கிளம்பாலாம்” என்பார் யமா சண். உடனே நாங்கள் அனைவரும் கிளம்பி விடுவோம். அந்த நடிகரும் அவரது உதவியாளர் மட்டுமே தளத்தில் இருப்பார்கள்.  நாங்கள் எதிர்ப்பார்த்திருந்ததை போல் அந்த நடிகரோ அவரது உதவியாளரோ யமா சண்னின் ஓய்வறைக்கு வந்து, எங்களால் தான் படப்பிடிப்பு ரத்தாகிவிட்டதா என்று பயந்துகொண்டே கேட்பார்கள். மிக கோபமாக முகத்தை வைத்துக் கொள்ளும் படி நான் யமா சண்னிடம் முன்னதே சொல்லிவிடுவேன். அவர் எதுவும் பேசாமல் அப்படியே இருப்பார். நான் மட்டும், “நீங்கலாம்  லேட்டா வரதுக்காக நாங்க schedule போட்டு வைக்கல!” என்று அவர்களுக்கு உரைக்கும் தொனியில் சொல்லி வைப்பேன். மறுநாளிலிருந்து அவர்கள் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள்.

செகண்ட் யூனிட்டில் நாங்கள் எடுத்து தரும் காட்சிகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் படத்தில் சேர்த்துக்கொள்வார். படம் வெளியாகும் போது எங்களை திரையரங்கிற்கு அழைத்து சென்று, நாங்கள் எடுத்த காட்சிகளை சுட்டிக் காண்பித்து, “இதை வேறமாதிரி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும் இல்ல?” என்று கேட்டு, ஏன் அப்படி எடுத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்குவார். தன் உதவி இயக்குனர்களுக்கு கற்றுத் தருவதற்காக  தன்னுடைய சொந்த படத்தையே தியாகம் செய்துகொள்ளும் மனப்பாங்கு அவருடையது. எனக்கு அப்படி தான் சொல்லத் தோன்றுகிறது.

எங்களுக்கு இப்படி சிறப்பாக கற்றுத்தந்த அவர் பின்னொருநாள் ஒரு பத்திரிக்கை பேட்டியில், “நான் குரோசவாவுக்கு எப்படி குடிக்கனும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன்” என்றார். இத்தகைய தன்னலமற்ற ஒரு மனிதருக்கு எப்படி நன்றி கடன் செலுத்த முடியும்? இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம், அவருடைய சீடர்களின் படங்கள் எதுவுமே யமா சண்னின் படங்களை ஒத்திருக்க வில்லை. சீடர்கள்  என்று அழைப்பதை அவர் விரும்பியதில்லை. அவர் தன்னுடைய உதவி இயக்குனர்களை கட்டுப்படுத்த முயற்சித்ததேயில்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனிப்பட்ட திறமையை வளர்த்தெடுக்கும் பொருட்டு எல்லோரையும் ஊக்குவித்தார். வழக்கமாக ஒரு ஆசானிடம் இருக்கும் எந்த கடுமையுமின்றி அவரால் இதையெல்லாம் சாத்தியப் படுத்த முடிந்தது. யமா சண் ஒரு தலைசிறந்த ‘ஆசான்’ என்பதில் மாற்று கருத்தே இல்லை.

***

Excerpts from ‘Something like an Autobiography’ by Akira Kurosawa & Audie E Bock

தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்

***