உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் அறிவுசார் சொத்துரிமை தரவரிசை பட்டியலில் இந்தியா வெகுநாட்களாகவே கடைசி பத்து இடங்களுக்குள் தான் இருக்கிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக குறியீடு என இன்னும் பல படைப்புகளின் (கண்டுபிடிப்புகளின்) உரிமையை உள்ளடக்கியது. அதாவது படைப்புகளின் உரிமை படைத்தவர்க்கே சொந்தம் என்பதே அறிவுசார் சொத்துரிமை கொள்கை.
பல ஆண்டுகளாக நாம் இதில் பின்தங்கி இருந்ததற்கான காரணம் வெறும் விழிப்புணர்வு சார்ந்தது மட்டும் அல்ல. இங்கே படைப்புரிமை கோருவதற்கான வழிமுறைகள் அவ்வளவு எளிதாக இல்லாமல் இருந்ததே. இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை பெரிதும் மாறி இருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடங்கி கல்லூரி ப்ராஜக்ட் வரை எல்லாவற்றையும் முன்பைவிட எளிதாக காப்புரிமை செய்து வைக்க முடியும். அப்படி இருந்தும் பல நேரங்களில் பல கம்பெனிகளுக்குள் பேட்டன்ட் சண்டைகள் நடப்பது உண்டு. தாங்கள் உருவாக்க நினைத்த ஸ்பார்க் பிளக்கை வேறொரு கம்பெனி அப்படியே உருவாக்கி விட்டதாக பிரபல இருசக்கர வாகன நிறுவனம் ஒன்று வெகு நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம். அதுவும் கதை திரைக்கதை என்று வரும் போது இந்த ‘அடுத்தவர் கதைக்கு தன் பெயர் போட்டுக்கொள்ளும் பிரச்சனை நாம் மிக சகஜமாக சந்திக்கும் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.
கதை திரைக்கதை (இசை, கவிதை, கட்டுரை இன்னும் பல) உள்ளிட்ட கலைப் படைப்புகளை எப்படி காப்பிரைட் செய்வது என்று விவாதிக்கும் போதெல்லாம், காப்பிரைட் செய்வதன் அவசியம் என்ன என்று கேள்வி தான் முதலில் எழுகிறது. ஏனெனில், இந்திய (உலக) காப்பிரைட் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பாளி ஒரு படைப்பை உருவாக்கியதுமே அதன் உரிமை அவருக்கு சேர்ந்துவிடுகிறது (அதாவது ஆக்கியவனுக்கே உரிமை). அவர் அந்த படைப்பை பதிப்பித்திருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. பல புத்தகங்களின் டைட்டில் பக்கத்தில் ‘காப்பிரைட்’ குறியீடைப் போட்டு பக்கத்தில் எழுத்தாளர் பெயரையோ அல்லது பதிப்பாளர் பெயரையோ போட்டிருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் யாரும் தனியாக காப்பிரைட் செய்வதில்லை. படைப்பவர்க்கே, சிலநேரங்களில் பதிப்பிப்பவர்க்கே படைப்பின் உரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் புத்தகத்தில் அப்படி போட்டுக் கொள்கிறோம். (ஒரு படைப்பாளி ஒரு படைப்பை தன் முயற்சியில் நேரடியாக எழுதாமல், ஒரு பதிப்பாளுருக்கான பணியாக அதை செய்து தரும் போது அதன் உரிமை பதிப்பாளரைச் சேரலாம்)
அப்படியிருக்க மெனக்கெட்டு ஒரு படைப்பை ஏன் காப்பிரைட் செய்ய வேண்டும்?
ஒருவர் நம் படைப்பை நம் உரிமையின்றி எடுத்துக் கொண்டார் என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்க வேண்டும். அது படைப்பை காப்பிரைட் செய்தால் ஒழிய சாத்தியம் இல்லை. அதனால் காப்பிரைட் என்பதை சட்டப்பூர்வமான ஆவணம் என்றும் கொள்ளலாம்.
ஆனால் ‘Ideas cannot be copyrighted’ என்கிறது காப்பிரைட் சட்டம். அதாவது ஒரு சிந்தனைக்கு நாம் உரிமை கோர முடியாது. உதரணமாக, ஒரு நாடோடி இளைஞன் ஊர் ஊராக சுற்றித் திரிகிறான் என்று ஒரு கதை கருவை நாம் சிந்தித்து வைத்திருக்கிறோம். இந்த கருவை நாம் பலரிடம் சொல்லியும் இருக்கலாம். இதே கதை கருவில் ஒரு நாவலோ படமோ வந்தபின் இது என்னுடையது என்று நாம் உரிமை கோர இயலாது. அதை காப்பிரைட் செய்தும் வைக்க முடியாது. ஏனெனில் நம்மிடம் இருந்தது வெறும் ‘Idea’. அதையே அந்த சிந்தனைக்கு நாம் ஒரு வடிவம் கொடுத்து (Expressions) அதை நாவலாகவோ ஒரு திரைக்கதையாகவோ எழுதிவிட்டால், அதை காப்பிரைட் செய்திட முடியும்.
திரைக்கதையை எப்படி காப்பிரைட் செய்வது?
தமிழ் சினிமா எழுத்தாளர் சங்கம் இருக்கிறது. ஆனால் அங்கே சங்க உறுப்பினர்களால் மட்டுமே தங்கள் திரைக்கதைகளை பதிவு செய்துகொள்ள முடியும். உறுப்பினர் ஆவதற்கு தமிழ் சினிமாவில் ஒரு படமாக பணியாற்றி இருக்க வேண்டும், உதவி இயக்குனர் என்றோ அல்லது வேறு கிரெடிட்டோ வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் உண்டு. அதனால் எல்லோருக்கும் சாத்தியப்படக் கூடிய வழி இல்லை இது.
சினிமாவில் நேரடியாக இயங்காத ஒருவர், தன் திரைக்கதைகளை (கதைகளை) காப்பிரைட் செய்துகொள்ளும் வழிமுறைகளை தெரிந்துகொள்வது மிக முக்கியம். காரணம், வருங்காலத்தில் திரைக்கதை ஆசிரியர்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கும். இப்போதே கதைகளுக்கான தேடல் நம் சினிமாவில் நிறைய உண்டு. அதுவும் அண்மைக்காலத்தில் கதை வறட்சி என்பதை நாம் பெரும்பாலான படங்களில் காணலாம். பிரத்யேகமான திரைக்கதையாசிரியர்கள் நிறைய உருவாவதே இதற்கான தீர்வாக இருக்க முடியும். அதனால் மீண்டும் கதை இலாக்கா போன்ற பழைய ஸ்டுடியோ முறை வழக்கத்தில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மேலும், வெப் சீரிஸ் போன்ற மாற்று வடிவம் பிரபலம் ஆகும்போது பல வகையான கதைகளுக்கு வரவேற்பு இருக்கும். அப்போது சினிமாவில் நேரடியாக இயங்காத திரைக்கதையாசிரியர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகும். அதனால் Spec திரைக்கதை (Speculative Screenplays) எழுத நினைப்போர், வெறும் ஒன் லைன்களை பகிராமல் அவற்றை முழு நீள திரைக்கதையாகவோ, அல்லது நாவலாகவோ எழுதி காப்பிரைட் செய்து கொண்டு பகிர்வது அவசியமாகிறது.
சினிமாவில் நேரடியாக இயங்காதவர் கதைகளை எப்படி காப்பிரைட் செய்வது?
SWA எனப்படும் திரைக்கதையாசிரியர்கள் சங்கத்தின் (Screenwriters Association) மூலம் திரைக்கதை, கதை, வசனம், பாடல்கள் படைப்புகளை காப்பிரைட் செய்துகொள்ள முடியும். மும்பையிலிருந்து இயங்கும் இந்த சங்கத்தில் பாலிவுட்டில் பணிபுரிபவர்கள் மட்டுமே சேர வேண்டும் என்றெல்லாம் இல்லை. தமிழ் சினிமா சங்கத்தில் இருப்பது போலவே இவர்களுக்கும் சில விதிகள் உண்டு. ஆனால் SWA-வின் கூடுதல் சிறப்பு, திரைக்கதை எழுத ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானலும் எந்த மொழியில் எழுதினாலும் இதில் உறுப்பினர் ஆகலாம். அவர்களுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகவே fellow member என்றொரு பிரிவை வைத்திருக்கிறார்கள். மேலும், இணையத்தின் வழியே திரைக்கதைகளை register-செய்து கொள்ளும் வசதியும் உண்டு. உறுப்பினர் ஆவதற்கு ஒரு தொகையும், பின் திரைக்கதைக்கு ஒரு தொகையும் (ஒரு பக்கத்திற்கு இரண்டு ரூபாய்) செலுத்திவிட்டால் ஸ்கிரிப்ட் பதிவாகி விடும். பின் பதிவு எண்ணோடு அந்த ஸ்கிரிப்ட்டை உடனே டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். SWA-வின் கொள்கை படி உறுப்பினர் பதிவேற்றும் திரைக்கதை டாக்குமென்ட்டை அவர்கள் தங்கள் சர்வரில் சேமித்து வைப்பது இல்லை என்கிறார்கள். நாம் டவுன்லோட் செய்துகொள்ளும் ஸ்க்ரிப்டின் ஒவ்வொரு பக்கத்திலும், திரைக்கதையின் விவரங்களும்- காப்பிரைட் குறியீடும், கடைசி பக்கத்தில் பதிவு சான்றிதழும் இருக்கும். அதுவே நாம் திரைக்கதையை பதிந்ததற்கான ஆதாரம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வெளிநாட்டு இணையத்தளத்தில் ஒரு திரைக்கதையை பதிந்து பார்த்தேன். அதுவும் இதே முறை தான். ஆனால் கட்டணம் எதுவும் இல்லை. வெளிநாட்டின் காப்பிரைட் சட்டதிட்டங்கள் நம்மூரில் செல்லாது என்பது பின்புதான் தெரிந்தது. SWA-வில் அந்த பயம் வேண்டாம். இது இந்திய காப்பிரைட் சட்டத்திற்கு உட்பட்ட சங்கம்.
திரைக்கதை மட்டுமில்லாமல் நாவல், இசை போன்ற படைப்புகளையும் காப்பிரைட் செய்வதற்கு இன்னொரு எளிய வழியும் உண்டு. இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் ‘காப்பிரைட் அலுவலகம்’ மூலமும் இணைய வழியிலேயே படைப்புகளை பதிந்து கொள்ள முடியும். இதற்கு உறுப்பினர் கட்டணம் என்றெல்லாம் எதுவும் இல்லை. படைப்புகளுக்கு ஏற்ப பதிவு கட்டணம் மாறுபடுகிறது. உதரணமாக ஒரு நாவலை பதிவு செய்வதற்கு ஐநூறு ரூபாய் கட்டணம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பணம் செலுத்திவிட்டால், விண்ணப்பம் முப்பது நாள் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும். அந்த முப்பது நாளுக்குள் நாவலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். (வெளியாகத நாவாலாக இருந்தால் வெறும் Manuscript மட்டும்).
முப்பது நாளில், யாரும் அந்த நாவல் விண்ணப்பதாரரின் பெயரில் பதியப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், பதிவாளர் விண்ணப்பத்தை ஆராய்ந்து பதிப்புரிமையை கோரியவர்க்கே வழங்கிவிடுகிறார். பின் நாம் அனுப்பிய இரண்டு பிரதிகளில் ஒரு பிரதியில் பதிவாளர் கையொப்பமும் முத்திரையும் போட்டு அனுப்பி வைக்கிறார். கூடவே Copyright extract எனும் சான்றிதழையும் அனுப்பிவைக்கின்றனர். அதில் படைப்பின் முழு விவரமும், பதிவு எண்ணும் இடம்பெற்றிருக்கும். இதே முறையில், மேலும் பல கலைப்படைப்புகளை பதிவு செய்திட முடியும்.
நாவலை காப்பிரைட் செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில் ஒரு நாவலை கவர்ந்து இன்னொரு நாவல் உருவாக்கும் பிரச்சனைகள் நம்மூரில் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அதிகம் கவனிக்கப்படாமல் போகும் நல்ல நாவல்களிலிருந்து யாரவது சினிமா உருவாக்கி விட வாய்ப்பிருக்கிறது.
மேலும் திரைக்கதைகளை நாவலாக அடாப்ட் செய்யும் வழக்கம் ஹாலிவுடில் அதிகம். படமாகும் வரை அது வேறுபல ஆடியன்ஸை (வாசகர்களை) சென்றடையும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். அது அந்த கதைக்கு அதிக கவனத்தைப் பெற்று தரும். இந்த வழியில், ஒரு படைப்பாளி தன் திரைக்கதைக்கு நாவல் வடிவம் கொடுத்தால் அதை பதிவு செய்து வைத்துவிடலாம்.
ஆனால் வெறும் காப்பிரைட் மட்டுமே இந்த கதைத் திருட்டு பிரச்சனைகளுக்கு தீர்வாகி விடாது. காப்பிரைட் செய்யப்பட்ட ஒரு திரைக்கதையின் கருவை வைத்துக்கொண்டு யாரவது வேறோரு வடிவம் கொடுத்துவிட்டால் அது நம் கதை என்று நிரூபிப்பது சில நேரங்களில் கடினம் தான். கதைத் திருட்டு என்பது ‘ethics’ சார்ந்த விஷயம். சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் கொஞ்சம் அடிப்படை ethics இருக்குமாயின் இந்த பிரச்சனைகள் வராது.
மேலும், சினிமா என்று வரும்போது நம் படைப்புகளை பாதுகாத்து கொள்ள எளிமையான வழி, நமக்கான ethical circle-ஐ உருவாக்கி வைத்து கொள்வதே. யார் என்ன என்று தெரியாமல் படைப்புகளை பகிராமல் இருப்பது புத்திசாலித்தனம். ஒரு நட்பு வட்டத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்குள் அல்லது அவர்கள் மூலமாக இயங்கலாம். கதைகளை, திரைக்கதைகளை பகிரும் போது ‘Copyright registration எண்ணோடும் அல்லது சான்றிதழோடும் அதைப் பகிர்வதன் மூலம் கதைத் திருட்டு பிரச்சனையை பெரிதும் தவிர்க்க முடியும்.
ஆனால் காப்பிரைட்டின் பிரதான நோக்கம் வெறும் கதைத் திருட்டை தவிர்ப்பது மட்டுமன்று. ஆரோக்கியமான படைப்பு சூழலை உருவாக்குவதே என்கிறது காப்பிரைட் சட்டம் (1957). காப்பிரைட் செய்யப்பட்ட படைப்புகள் வணிக ரீதியாக பகிரப்படும் போது, அல்லது வேறு வடிவம் பெறும் போது அதிலிருந்து ஈட்டப்படும் வருவாய் அந்த படைப்பாளிக்கும் போய் சேர வேண்டும். ஒரு பெரிய multilayered நாவலிலிருந்து பல படங்கள் உருவாக்கிட முடியும். தமிழில் அத்தகைய நல்ல நாவல்கள் நிறைய எழுதப் படுகின்றன. அப்படி ஒரு நாவலிலிருந்து மூன்று வெவ்வேறு படங்களை மூன்று இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள் என்றால், மூன்று படங்களுக்குமான ராயல்ட்டியும் நியாயமாக அந்த படைப்பாளியை போய் சேரவேண்டும். காப்பிரைட் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும் போது இதெல்லாம் சாத்தியமாகும் என்று நம்புவோம்.