ஏன் புத்தகத் திருவிழா அவசியம்!


பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (15.01.2012) புத்தகத் திருவிழா சென்றதாக பேஸ்புக் நினைவுபடுத்துகிறது. பெரிய முன்முடிவுகளின்றி வெவ்வேறு அரங்குங்களுக்குள் நுழைந்து சிறிது ஆராய்ந்து புத்தகங்களை வாங்கும் வாய்ப்பினை புத்தகத் திருவிழா தான் உருவாக்கித் தருகிறது. புத்தக வாசகர்கள் அனைவருக்கும் இது முக்கியமான வாய்ப்பு என்பேன். 2007 ஆம் ஆண்டு முதன்முதலில் பள்ளி நண்பர் தான் புத்தகத் திருவிழாவிற்கு இரண்டு நுழைவு சீட்டுகள் இருப்பதாக சொல்லி அழைத்து சென்றார்.அன்றிலிருந்து வருடாவருடம் எங்கிருந்தாலும் புத்தகத் திருவிழாவிற்கு விடாமல் செல்வதற்கு மேற்சொன்னது மட்டும் தான் காரணம்.

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் எளிதாக புத்தகங்களை வாங்க முடிந்தாலும், ஏராளமான புத்தகங்களுக்கு மத்தியில் பயணித்து, சில பக்கங்களை புரட்டிப் பார்த்து வாங்கும் சாத்தியங்களை இணையம் தருவதில்லை. பிரபலங்களின் பரிந்துரை பட்டியல்களைத் தாண்டி புதிய புத்தகங்களை ஒரு வாசகன் கண்டடைவதற்கு சற்றே மெனக்கெட வேண்டும். அதுவும் குறிப்பாக இணையத்தில் இது அதிக மெனக்கெடலை கோருகிறது.

புத்தக வியாபாரம் செய்யும் பெரும்பாலான தளங்களின் முகப்பில், அதிகம் விற்கும் புத்தகங்கள் என்று ஒரு பட்டியலை பார்ப்பீர்கள். வியாபார ரீதியாக இது சரிதான். ஆனால் ஒரு வாசகருக்கு இது உதவாது. பிரபலமாகும் எல்லா படைப்புகளுமே சிறந்த படைப்புகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஒரு பரிந்துரை பட்டியலை யாரோ பிடித்துக் கொண்டு ஒரு கட்டத்தில் அவர்கள் குழுவாக இயக்கமாக மாறிவிடுவதால், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான புத்தகங்கள் அந்த டாப் செல்லர் பட்டியலுக்குள் வருவது தவிர்க்க முடியாமல் போகிறது. இதை தாண்டி ஒரு வாசகர் நல்ல புத்தங்களை கண்டு கொள்ள கிடைக்கும் வாய்ப்பு புத்தகத் திருவிழா தான்.

இங்கே புத்தக பட்டியல்களே தவறு என்று நான் சொல்லவில்லை. வாசிப்பின் ஆரம்ப காலத்தில் பட்டியல்கள் என்பது தவிர்க்கமுடியாததுதான். எங்கிருந்து தொடங்குவது, எதை வாசிப்பது என்று எண்ணும் போது ஏதோ ஒரு பட்டியல் நமக்குத் தேவைப்படலாம். ஆனால் அந்த பட்டியலோடு மட்டுமே நின்றுவிடாமல், குறிப்பிட்ட எந்தவொரு இலக்கிய மடத்திலும் சிக்கிக் கொள்ளாமல் புத்தகங்களை தேடுவதை நோக்கமாய் கொண்டோருக்கு புத்தகத் திருவிழா அவசியமாகிறது.

நான் அறிந்து ‘ஆர்குட்’ இலக்கிய வட்ட காலத்திலிருந்தே தமிழின் தலை சிறந்த நாவல்கள் என்று ஒரே பட்டியல் தான் சுற்றிக் கொண்டிருக்கிறது. காலப்போக்கில் அது அப்டேட் ஆனதாக தெரியவில்லை. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில் சிறந்த நாவல்கள் எதுவுமே எழுதப் படாமல் போய்விட்டதா என்கிற கேள்வி ஒரு வாசகனுக்கு எழுமாயின் அவன் நல்ல வாசகன் என்பேன். அதற்கான பதிலை தேடிக்கொள்ள தான் இதுபோன்ற புத்தகத் திருவிழா பயன்படுகிறது. அதுவும் அண்மைக்காலங்களில் இணையத்தில் பகிரப்படும் ஏராளமான அட்டைப்படங்களுக்கு வெளியேவும் நிறைய படைப்புகள் இருக்கின்றன என்பதை கண்டுகொள்வதற்கும் புத்தகத்திருவிழா அவசியம் என்பேன்.

மற்றபடி, நாம் வாசிக்கும் புத்தகத்திற்கு நம்மை ஒப்பு கொடுத்துவிட்டால் அதுவே நம்மை வேறொரு புத்தகத்திற்கு அழைத்து செல்லும் என்பது என் அனுபவம். ஜே. ஜெ சில குறிப்புகளை வாசிக்கும் வரை நான் அருண் ஜோஷி பற்றி அறிந்திருக்கவில்லை. ஜே.ஜே சில குறிப்புகள் தான் என்னை பெரிதும் பாதித்த ‘The strange case of Billy Biswas புத்தகத்திடம் கூட்டிச் சென்றது. Billy Biswas அழைத்து சென்ற இடங்களை சொன்னால் அது ஒரு தனி பட்டியல் ஆகிவிடும் என்பதால் நிறுத்திக் கொள்கிறேன். வாசிப்பு என்பது பரந்த காடு. ஒரு மரநிழலில் தங்கிவிடுவதும் தொடர்ந்து பயணிப்பதும் அவரவர் விருப்பம்.

மேற்சொன்ன அனைத்தும் இன்றைய எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்.



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.