உலகம் அழிவதாகக் கனவு கண்டு கண்விழித்தவனின் மனத்திரையில் அந்த கனவு
வெகு நேரம் ஓடியது.
நெருக்கமான
பரிச்சயமான
எந்த முகமும்
கனவில் வராதது
ஆச்சர்யம்
உலகம் அழிவது
யாருக்கும்
எந்த சலனத்தையும்
தராதது
கூடுதல் ஆச்சர்யம்
பொம்மை கடை வைத்திருந்த
தாத்தா
அறுபது ரூபாய் தந்தால்
ஸ்பெசல் பொம்மை
பிண்ணித்தருவதாக சொல்கிறார்.
உலகம் தான்
அழியப் போகிறதே
ஒரு பொம்மை
வாங்கிக் கொள்ளலாம் என்று
பணத்தை கொடுத்துவிட்டு
முக்கிய வேலையாக அலுவலகம் செல்கிறான்.
அங்கு அத்தனை வருடம்
வேலை செய்ததற்கான
சான்றிதழ் வேண்டும் என்று குமாஸ்தாவை கேட்கிறான்.
உலகம் அழிவதால்
எல்லோருமே சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருப்பதால்
தாமதம் ஆகும் என்று
குமாஸ்தா சலிப்பின்றி
அன்பாக சொல்கிறான்.
அடுக்கியிருந்த சான்றிதழ்களில் தன்னுடையது இருக்கிறதா என்று
தேடிப் பார்த்ததில்
நேரம் ஓடிவிட்டது.
கடந்து சென்ற
பெண்கள் யாரையும்
கவனிக்கவில்லை
உலகம் அழியும்
நேரம் வந்தது
சான்றிதழ் கிட்டாததில்
வருத்தமில்லை
தாத்தாவிடம் பொம்மை வாங்காமல் போகிறோமே என்கிற
வருத்தம் மட்டும் உண்டு
கனவில் அழிந்து போன உலகம் நிஜத்தில் இன்னும் அழியவில்லை
பரவாயில்லை, தாத்தாவை தேடிப்பிடித்தால்
அழகான
பொம்மையை
வாங்கிட முடியும்
அரவிந்த் சச்சிதானந்தம்
Leave a comment