வனவாசம்
அவன் சானடோரியம் சுரங்கப்பாதைக்குள் நடந்து வந்த போதே ரயில் கிளம்புவதற்கான ஒலியை எழுப்பியது. செயலியில் பயணசீட்டு வாங்கி இருந்ததால் இந்த வண்டியிலேயே ஏறிவிடலாம் என்று தோன்றியது. ஏனெனில் இன்னும் அரைமணி நேரத்தில் கிண்டியில் இருக்க வேண்டும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் உள்ளே ஒரு கம்பெனியில் நேர்காணல் இருந்தது.
காலையில் திருச்சியில் இருந்து வந்த பேருந்து தாமதாகிப்போக, பெரியம்மா வீட்டிலிருந்து அவசரஅவசரமாக குளித்துவிட்டு கிளம்ப வேண்டி இருந்தது. சாப்பிட அவகாசமோ பொறுமையோ இல்லை. இந்த ட்ரைனை தவறவிட்டால் வாழ்க்கையும் தவறிப்போகும்.
ஓடினான். ரயில் கொஞ்சமாக நகரத் தொடங்கியது. கூட்டமாக இருந்த பெட்டிகளை விட்டுவிட்டு கூட்டமில்லாத ஒரு பெட்டியில் ஏறினான். ரயில் வேகமெடுத்தது. அமர்ந்து கொள்ள இருக்கையை தேடியபோது தான் கவனித்தான் அந்த பெட்டியில் இருந்த பல கண்கள் அவனையே நோக்குகிறது என்று.
எதற்காக எல்லோரும் அப்படி பார்க்கிறார்கள்? சிலரின் பார்வையில் கோபம், சிலரின் பார்வையில் பரிதாபம்.
“தம்பி இது லேடிஸ் கோச்பா” ஒரு பெண்மணி கோபமோ பாசமோ இல்லாத குரலில் சொன்னாள்.
“சாரிங்க. டைம் ஆகிடுச்சுனு மாத்தி ஏறிட்டேன்” அவன் பதிலை யாரும் காதில் வாங்கி கொண்டதாக தெரியவில்லை.
அவமானமாக இருந்தது. தலையை குனிந்து கொண்டு ஓரமாக வாசல் அருகேயே நின்று கொண்டான்.
“படிச்சிருக்கான் இது கூட தெரியாதா!” யாரோ பெண்மணி சொல்வது கேட்டது.
என்ன படித்தோம் என்றே தெரியாமல் போனதால் தான் ஐந்து வருடமாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்று அவர்களிடம் யார் சொல்வது!
“வேணும்னே ஏறிருப்பான்” இன்னும் யாரோ சொன்னார்கள்.
“அழையுறானுங்க” இதுவும் யாரோ தான்.
சிலநொடிகளில் அவன் கற்பு, வளர்ப்பு, நடத்தை எல்லாமே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. காலம் நீண்டு கொண்டே போனது போல் இருந்தது. எப்போது அடுத்த ஸ்டேஷன் வரும்? ரயிலிலிருந்து குதித்துவிடலாமா என்று கூட தோன்றியது. சுமார் பதினான்கு ஆண்டுகளுக்கு பின்னர் குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்தது. ரயில் நிற்பதற்கு முன்பே இறங்கி, தடுமாறி, ஊன்றி நின்றான்.
அவன் இறங்கிய நொடியில், வேகமாக அந்த பெட்டியில் ஏற வந்த திருநங்கை, “அய்யோ! லேடிஸ் பொட்டி” என்று பதறியவாறே அடுத்து இருந்த பெட்டியை நோக்கி ஓடினாள். அவளின் பதற்றத்தை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
Leave a comment