John Lennonism


ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன்.

John lennon

அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான் கம்ப்ரசர் இன்சார்ஜ் என்பதால் ‘தூ நைட் ஷிஃப்ட் மே ஆஜா’ என்றார்கள்.

நைட் ஷிஃப்ட்டில் பெரிதாக வேலை இருக்காது என்ற சந்தோசத்தில்தான் சரி என்று தலை அசைத்தேன்.

இரவில் வாசலில் மூன்று செக்யூரிட்டிகள் மட்டும் இருப்பார்கள். நான் உள்ளே நுழைந்ததும் கேட்டை அடைத்து விட்டு படுத்துக் கொள்வார்கள். பின் கேட்டில் ஒரு செக்யூரிட்டி இருப்பார். மிகப் பெரிய பிளாண்ட் என்பதாலும், உற்பத்தி தொடங்கிடாத காலம் என்பதாலும், இரவில் செக்யூரிட்டிகள் நடமாடுவதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். என் அலுவலக அறை அமைந்திருந்தது  ஸ்டோர்ஸ் ஏரியாவில். அரை கிலோமீட்டர் நீளத்தில் அமைந்த பெரிய ஸ்டோர்ஸ் அது. தொழிற்சாலை முழுவதுமாக தயாராகி இருக்கவில்லை. அதனால் கட்டமைப்பிற்கு தேவையான ஏராளமான பொருட்கள் ஸ்டோர்ஸ் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மூலையில் முதல் தளமாக அமைக்கப்ட்ட ஒரு சிறு அறையில் தான்  என் கணினி இருக்கும்.

ஸ்டோர்ஸின் கதவு பெரிய கோவில்களின் கதவு போல் உயரமாக இருக்கும். அடியில் சக்கரம் வைத்த ஸ்லைடிங் கதவு. முழு பலம் கொண்டு அதை தள்ளினால் மிக நிதானமாக நகரும். பகலில் மட்டுமே கதவை திறக்க ஆட்கள் இருப்பார்கள். இரவில் நான் தான் திறக்க வேண்டும்.

அதைத் திறந்தால் உள்ளே மங்கலாக விளக்குகள் எரியும். படுத்துக் கொள்வதற்கு ஏதுவாக நிறைய இடங்கள் உண்டு. ஆனால் கொசு கடியில் தூக்கம் வராது. இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கம்ப்ரசரில் ரீடிங் எடுக்க வேண்டும். தூங்கிவிடக் கூடாது என்ற பிரக்ஞை அதிகம் இருக்கும். ஒட்டு மொத்த தொழிற்சாலைக்குள்ளும் நான் மட்டுமே இருப்பேன். ரீடிங்கிற்காக நடமாடும் போது யாரோ பின் தொடர்வது போல் பிரம்மையெல்லாம் ஏற்பட்டதுண்டு.

அது நைட் ஷிஃப்ட்டின் முதல் நாள். ஸ்டோர்ஸ் அறைக்குள் படுத்திருந்தேன். கதவு மிகவும் மெதுவாக நகர்ந்தது.

பகலில் ஒரு நாள் சைட்டில் (Site) அமைந்த டீ கடையில், அதை நடத்தி வந்த பெண்மணி குஜராத்தியில் ஏதோ சொன்னாள். என்னவென்று என் நண்பனிடம் கேட்டேன்.

“ஒரு காலத்துல அந்த இடம் பெரிய சுடுகாடா இருந்துச்சாம்…” என்று எங்கள் ஸ்டோர்ஸ் அறையை சுட்டிக் காண்பித்து சொன்னான்.

நண்பனின் குரல் அந்த நள்ளிரவில் காதுகளில் கேட்டது. கதவின் இடுக்கில் யாரோ நுழைவது போல் இருந்தது. எழுந்து அமரக் கூட பயம். ஏதோ ஒரு விசித்திரமான நிழல் மட்டும் தெரிந்தது.

சிறு வயதிலிருந்து இப்படி பயம் வந்தால் சப்தமாக பாடுவது வழக்கம். நிழல் நெருங்கி வருவதைப் போல் இருந்ததால் பாடுவதற்க்கு வாய் வரவில்லை. கையிலிருந்த HTC ஸ்மார்ட் போனை  இயக்கியதும் ஜான் லெனானின் அக்கோஸ்டிக் கித்தார் ஸ்டோர்ஸ் முழுக்க பரவியது. கூடவே அவரது குரலும்.

கதவைப் பார்த்தேன். அது கொஞ்சமாக திறந்த வாக்கிலேயே இருந்தது.

ஜான் லெனான் பாடிக் கொண்டே இருந்தார். சிலரின் குரல்கள் மட்டுமே நமக்கு மிகவும் நெருக்கமாகின்றன. நமக்காக மட்டுமே பாடுவதைப் போன்ற உணவைத் தருகின்றன. ஜான் லெனானின் குரல் அத்தகையது. அந்த நள்ளிரவில் அவர் என் கூடவே இருப்பது போல் தோன்றவே, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து நடந்தேன். அடுக்கி வைக்கப் பட்டிருந்த எராளமான பெட்டிகள் கதவிற்கும் எனக்குமிடையே இருந்த view-வை மறைத்தன. கதவின் இடுக்கு தெரிந்தது. விசித்திர நிழலும் தான்.

எது வந்தால் என்ன, நம்முடன் லெனான் இருக்கிறார் என்ற தைரியத்தில் பெட்டிக்கு பின்னிருந்து வெளியேறினேன்.

பேய் இல்லை.

கதவின் இடுக்கில் ஒரு சிறிய நாய் படுத்திருந்தது.

அன்றிலிருந்து எல்லா நாளும் தனிமையான இரவுகளிலும் ஜான் லெனான் கூடவே இருந்தார்.

இன்றும் இருக்கிறார்.

இன்று ஜான் லெனானின் எழுபத்தியொன்பதாவது பிறந்த நாள்

***

As a Tribute to John Lennon- ஒரு சிறுகதை 

கித்தார் இசையோடு சேர்ந்து ஜான் லெனனின் குரல் மேலெழும்பி அந்த போலிஸ் ஸ்டேஷனை நிறைத்தது.

“அது என்னமோ தெரில சார், இந்த பாட்ட கேட்டாலே கொலை பண்ணனும்னு தோணுது சார்”

“எதுக்கு தம்பி அந்த பாட்ட கேட்டுக்கிட்டு, கேட்காதீங்க….” கன்னியப்பன் அப்பாவியாக சொன்னார்.

“மூளைக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு சார்… “ அவன் சொல்லிவிட்டு பாடத் தொடங்கினான். கன்னியப்பனும் அந்தோனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“They hate you if you’re clever and they despise a fool” பாடியவாறே அவன் அந்தோணியைப் பார்த்தான்.

ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.