Shrek- கொஞ்சம் திரைக்கதை


ஒரு சுவாரஸ்யமான கேரக்டர் ஆர்க்கை எழுதுவது எப்படி! இருபத்தையாண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘Shrek’ நமக்கு அதை மிக எளிமையாக சொல்லித்தருகிறது. ஒரு விசித்திரக் கதையாக (fairy tale) மட்டுமே நின்றுவிடாமல், திரைக்கதையின் அடுக்குகளை புரிந்துக் கொள்ள இந்த படம் பெரிதும் பயன்படுவதால்  இது அதிக முக்கியத்துவம் வாய்ந்த அனிமேஷன் படமாகிறது. 

ஒரு நாயகனின் பயணம் தான் கதை. ஆனால் மற்ற சாகச-மாய கதைகளில் வருவது போல அந்த நாயகன் பேரழகன் அல்ல. அவன் ஒரு ராட்சதன்.  அவன் பெயர் தான் ஸ்ரேக். காட்டில் தனக்கென ஒரு குடிலை அமைத்துக் கொண்டு யாரையும் தன்னுடைய உலகில் அனுமதிக்காமல் வாழ்கிறான். யாருக்கும் அவனை பிடிக்கவில்லை. அவனும் யாரையும் விரும்புவதில்லை. தன்னை கண்டால் மற்றவர்கள் அஞ்சிட வேண்டும் என்கிற எண்ணம் அவனுள் ஊறி இருக்கிறது. 

எதிர்ப்பாராத விதமாக அவன் வாழ்வில் ஒரு பேசும் கழுதை நுழைகிறது. அவன் கழுதையோடு நட்பு பாராட்ட தயாராக இல்லை. தன்னுடைய இறுக்கத்தை தளர்த்திக் கொள்ளாமல் தான் அவன் முதலில் இருக்கிறான். ஆனாலும் காலம் அவனை கனிய  வைக்கிறது.  வெகு தூரத்தில் பெரிய கோட்டையினுள் டிராகனின் காவலில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஒரு சபிக்கப்பட்ட இளவரசியை காப்பாற்றி அழைத்து வர வேண்டும் என்கிற சாகச வேலை அவனிடம் வருகிறது. அதை செய்தால் தான் அவனால் அவன் இருப்பிடத்தை மீட்டெடுக்க முடியும் என்கிற கட்டாயம். அதனால் சுயநலத்திற்காக அவன் அந்த வேலையை ஒப்புக்  கொள்கிறான். அந்த சாகசப் பயணத்தின் உதவியாளனாக பேசும் கழுதை சேர்ந்து கொள்கிறது.

கதையின் இந்த புள்ளிவரை நாயகன் மீதோ அவன் செய்யும் செயல்கள் மீதோ எத்தகைய ஈர்ப்பும்  உண்டாகாது. அவன் கெட்டவன். அல்லது அவனை கெட்டவனாக ஊர் மக்கள் கருதுகிறார்கள். நெகட்டிவான புள்ளியிலிருந்து நாயகனின் கதை உலகம் தொடங்குகிறது. 

அவனுக்கு கழுதையை பிடிக்காது தான். வேறு வழி இல்லாமல் தான் அதை உடன் வைத்துக் கொள்கிறான். ஆனாலும் அந்த கழுதையை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறான். தன்னுடைய யதார்த்தமான முரட்டுத் தனத்தால் கழுதையினுள்ளிருக்கும் பயத்தை போக்குகிறான். அவர்களுக்குள் நட்பு மலர்கிறது. இங்கே ஸ்ரேக் கதாப்பாத்திரம் தீமையிலிருந்து நன்மைக்குள் அடியெடுத்து வைக்கிறது.  கெட்டவன் நல்லவன் ஆவதால் இது பாசிட்டிவ் ஆர்க் என்று நாம் இந்நேரம் அறிந்திருப்போம்.  ஆனால் அது மட்டுமே இந்த கதை இல்லை. மேற்சொன்னது போல இதனுள் இருக்கும் அடுக்குகள் தான் இந்த கதையை இன்னும் நெருங்கி வர வைக்கிறது. 

புற உலகில் அவன் சாகசத்தில் வெற்றிக் கொள்வது போல, தன் அகப்போராட்டத்திலும்  வெற்றிக் கொள்கிறான் என்பது கதையின் இன்னொரு அடுக்கு. தன்னை காண்பவர்கள் முகம் சுழித்து அவனை வெறுப்பதால் தான், யாரையும் தன்னிடம்  அண்ட விடுவதில்லை என்று மனம் திறந்து பேசுகிறான். 

“Ogres are like onions”

என்கிற மிகப்பிரபலாமான வசனத்தை இங்கே பேசுகிறான்.

வெங்காயத்தில் பல அடுக்குகள் இருப்பது போல ஒரு அரக்கனுக்குள்ளும் பல அடுக்குகள் உண்டு, ஆனால் பொது புத்தி முன்முடிவோடு தங்களை அணுகுகிறது அதனாலேயே தான் எல்லாவற்றையும் விட்டு விலகி இருப்பதாக சொல்கிறான். இதுதான் அவனுடைய எமோஷனல் கான்பிளிக்ட். படத்தின் முடிவு அதற்கான தீர்வை அவனுக்குத் தருகிறது. அந்த தீர்வு கதையின் நாயகியான இளவரசி மூலம் கிடைக்கிறது. 

ஆனால் இந்த கான்பிளிக்ட்டை அவன் நேரடியாக வெற்றிக்  கொண்டுவிடவில்லை. இளவரசியை காப்பாற்றி அழைத்துவரும் பயணத்தில் அவர்களுக்குள்ளும் காதல் மலர்கிறது. அதன் பின் இருவருக்குள்ளும் தவறான புரிதலால் முரண் ஏற்பட்டு பிரிவதாக திரைக்கதை நகர்கிறது. இது இன்னொரு அடுக்கு. தான் அழகாக இல்லாததால் இளவரசி தன்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவன் எண்ணுகிறான். இப்போது மறைந்திருந்த எமோஷனல் சிக்கல்  மீண்டும் தலை தூக்குகிறது. நெகட்டிவ் புள்ளியிலிருந்து பாசிட்டிவ் புள்ளி நோக்கி பயணித்த நாயகன் மீண்டும் நெகட்டிவ் உலகிற்குள் நுழைந்துவிடுகிறான். தான் உண்டு, தன் குடில் உண்டு. அங்கே யாருக்கும் அனுமதி இல்லை. 

இறுதியில் பல சுவாரஸ்ய திருப்பங்கள் அவனையும் நாயகியையும் இணைக்கிறது. புற அழகு மட்டுமே அழகல்ல, அகத்தின் அழகே பேரழகு என்கிற புரிதல் காதலர்களுக்குள் ஏற்படுகிறது. ஹீரோ புதிய உலகத்தை கண்டடைகிறான்.

பாசிட்டிவ் ஆர்க்கிற்கு மிகச் சிறப்பான உதாரணம் இந்த திரைப்படம். நாயகனின் கேரக்டர் ஆர்க்கில் மாற்றம் ஏற்பட்டது போல, மற்ற மூன்று பிரதான பாத்திரங்களான  இளவரசி, அவளை காவல் காத்த டிராகன் மற்றும் பேசும் கழுதை ஆகியோரின் கேரக்டர் ஆர்க்கிலும் பாசிட்டிவ் மாற்றம் ஏற்படுகிறது என்பதே  இந்த படத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். அதாவது கேரக்டர் ஆர்க் என்பது நாயகனுக்கு மட்டும் அல்ல, மற்ற பிரதான பாத்திரங்களுக்கும் இருக்க வேண்டும் .

ஒரு வகையான ஆரம்ப புள்ளியிலிருந்து இன்னொரு வகையான இறுதிப்புள்ளியை அடைவதற்குள் இயன்ற வரை முன்னும் பின்னும் செல்லக்கூடிய சுவாரஸ்ய முரண்களை உருவாக்குங்கள் என்பதே இந்த படம் நமக்கு சொல்லித் தரும் திரைக்கதை உத்தி.



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.