21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி!  – விக்கி கிங்



நன்றி காட்சிமொழி

21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி!  – விக்கி கிங்

அரவிந்த் சச்சிதானந்தம்

21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி! (How to Write a Movie in 21 Days- Viki King) இது விக்கி கிங் எழுதிய பிரபலமான புத்தகம். இப்படி ஒரு தலைப்பை கண்டதுமே அதெப்படி  இருபத்தியொரு நாளில் ஒரு திரைக்கதையை எழுதிவிட முடியும் என்கிற கேள்வி எழலாம். ஆனால் எழுதுதல் என்பதை ஒரு ஒழுக்கமாக கடைப்பிடிக்கத் தொடங்கினால் எவ்வளவு துரிதமாகவும் எதையும் எழுதிட முடியும் தான். மற்ற திரைக்கதை புத்தகங்களிலிருந்து இந்த புத்தகம் ஒரு விஷயத்தில் மாறுபட்டிருக்கிறது. வெறும் திரைக்கதை கோட்பாடுகளைப் பற்றி மட்டும் இந்த புத்தகம் பேசவில்லை. வாழ்வின் அழுத்தங்களுக்கு மத்தியில் எப்படி பிடித்த ஒன்றை செய்து கொண்டே இருப்பது என்பதை பற்றியும் பேசுவதால் இந்த புத்தகம் முக்கிய புத்தகமாகிறது.

ஹாலிவுட் திரைக்கதையின் கோட்பாடுகளை மையப்படுத்தி விக்கி கிங் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார் என்பதால் அவர் திரைக்கதையின் சராசரி அளவை நூற்றிஇருபது பக்கங்களாக எடுத்துக்கொண்டு ஒரு நாளில் எத்தனை பக்கங்கள் எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால் அனைத்து  திரைக்கதைகளுமே அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. இருநூறு பக்கங்களுக்கு மேல் செல்லும் திரைக்கதைகளும் உண்டு என்பதால் நாம் விக்கி கிங் சொல்லும் அனைத்தையும் அப்படியே எடுத்துக் கொள்ள தேவையில்லை. நமக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த எளிமையான சிறிய புத்தகத்தை இரண்டு பகுதிகளாக பிரித்து அணுகமுடியும். ஒன்று திரைக்கதை எழுதும் உத்திகளை தெரிந்து கொள்ள அணுகலாம். இன்னொன்று தினமும் விடமால் எழுதும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள அணுகலாம். விக்கி கிங் சொல்லும் திரைக்கதை உத்திகளை அறிந்துகொள்வதற்கு முன்னர் திரைக்கதையின் அடிப்படைகளை புரிந்துகொள்வோம்.

உலகில் எழுதப்படும் அத்தனை திரைக்கதைகளுக்கும் பொதுவான அம்சம் என்ன!

எல்லா திரைகக்தைகளிலுமே முதலில் கதை உலகம் (Setup) நிறுவப்படும். பின்னர் பிரச்சனை (Action/Conflict) உருவாகும். பிரச்சனை வளர்த்து பிரச்சனைக்கான தீர்வை  (resolution) நோக்கி கதை நகரும்.  எந்த வகை திரைக்கதையாக இருந்தாலும் இந்த மூன்று விஷயங்கள் கதையில்  இருக்கும். ஒரு கதையை நாம் கதைக்கருவாக சிந்திக்கலாம் அல்லது ஒரு கதாப்பாத்திரமாக சிந்திக்கலாம். எப்படி யோசித்தாலும் மேற்சொன்ன மூன்று விஷயங்கள் தான் கதையை நகர்த்துவதற்கான அம்சங்களாக இருக்கும். கதையை கண்டுகொண்ட பின், அங்கே எந்தப் பிரச்சனையும் இல்லையெனில் கதை முன்னோக்கி நகராது. கதையை எவ்வளவு சுவாரஸ்யமாக சொன்னாலும் ஒரு கட்டத்தில் தீர்வை நோக்கி இட்டுச் செல்லத் தான் வேண்டும். சரி நமக்கு மேற்சொன்ன மூன்று விஷயங்களும் தெரிந்துவிட்டது. இதை வைத்துக் கொண்டு எப்படி துரிதமாக திரைக்கதை எழுதுவது!

இதற்கு விக்கி கிங் ‘Inner Movie Method’ என்றொரு உத்தியை சொல்கிறார். அதாவது நம் கதையை திரைப்படமாக மனதில் ஓட்டிப் பார்க்கச் சொல்கிறார். திரையரங்கில் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்துபாருங்கள், உங்கள் படம் தான் இப்போது உங்கள் கண்முன்னே ஓடுகிறது. என்னவெல்லாம் திரையில் வருகிறதோ அத்தனையையும் எழுதுங்கள் என்கிறார்.

பெரிதாக ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற காட்சிகள் தானே நம் மனதில் எழுகிறது, அதை எழுத வேண்டுமா?

ஆம் என்கிறார் விக்கி கிங். ஒரு திரைக்கதையின் முதல் வரைவு எழுதுவது என்பது கனவு காண்பது  போல. நாம் கண்ட கனவுகளை நினைவுக் கூறும் போது பல கோர்வையற்ற காட்சிகள் தான் நினைவிற்கு வரும். அப்படி தான் திரைக்கதையும். என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் எழுதுங்கள் என்கிறார் அவர். இதற்காக அவர் சொல்லும் அறிவுரை,     முதலில் மனதிலிருந்து எழுதுங்கள். பின்னர் புத்தியைக் கொண்டு அதனை திருத்துங்கள் என்பதே.  சிந்தனை ஓட்டத்தின் வெளிப்பாடாக முதல் வரைவு இருக்க வேண்டும் என்கிறார் அவர். அதன் பின்னர் அதை மாற்றி எழுதிடலாம். ஆனால் முதலிலேயே இது சரியா, நம் கதை சரியான பாதையில் செல்கிறதா, இது வழக்கமான காட்சி போல் இருக்கிறதே, பார்வையாளர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்களா என்றெல்லாம்  யோசித்துக் கொண்டிருந்தால் திரைக்கதையை எழுதி முடிக்க முடியாது. அதனால் ஒரு திரைக்கதையாசிரியரின் முதல் நோக்கம் தொடங்கிய திரைக்கதையை முடித்துவிடுவதே. அது எவ்வளவு நல்லத் திரைக்கதையாக வளர்ந்து வருகிறது என்கிற குழப்பமெல்லாம் எழுதும் போது இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் எப்போதுமே அவன் அந்தக்கதையை மனதில் ஓட்டிக் கொண்டே இருக்கவேண்டும். 

சரி, நம்மிடம் ஒரு கதைக்கரு (idea) இருந்தால் மேற்சொன்ன வழியை பின்பற்றி  எழுதலாம். திரைக்கதை எழுத வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் தான் இருக்கிறது ஆனால் எதைப்பற்றி எழுதலாம் என்று தெரியவில்லையே! அப்போது என்ன செய்வது! ஒரு ஐடியாவை எப்படி கண்டுகொள்வது! 

உலகில் கதைக்கருவிற்கு பஞ்சமே இல்லை. அது நம்மை சுற்றி எல்லா இடத்திலுமே இருக்கிறது. நாம் மனதை திறந்து வைத்திருந்தால் ‘ஐடியா’ கிடைக்கும் என்கிறார் கிங். பத்திரிக்கை செய்தியிலிருந்து கூட கதைக்கரு பிறக்கலாம். நம்மை பாதிக்கும் எத்தகைய விஷயமும் ஒரு கதைக்கான கரு தான். எங்கோ ஒருவருக்கு என்னவோ நிகழ்கிறது- இது தான் கதையின் ஒற்றை வரி. அவர் யார் என்றும், அவருக்கு என்ன நிகழ்கிறது என்றும் கேட்டுக்கொண்டே இருந்தால் பல கதைகள் கிட்டும் என்கிறார் கிங். நிகழ்வு ஒன்றாக கூட இருக்கலாம். ஆனால் அதை ஒவ்வொருவரும் பார்க்கும் கோணமும் மாறுபடும். ஒரு விஷயத்தை ஒரு திரைக்கதையாசிரியன் பார்க்கும் கோணம் தான் அந்தத் திரைக்கதையை தனித்துவமாக்கிடும். மேலும் கதாப்பாத்திரங்களுக்கு தனித்த குணாதிசயங்களை கொடுக்கும் போது கதைக்கு தனி வண்ணம் கிட்டிடும். 

அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை பற்றி எழுதும் போது அவற்றை பற்றி நமக்கு எல்லாமே தெரிந்திருக்காது. மேற்கொண்டு அந்த பாத்திரத்தை பற்றி என்ன எழுதுவது என்று தெரியாமல் தடங்கல் ஏற்படும் போது, உங்களை அந்த  கதாப்பாத்திரத்தில் பொருத்திப் பாருங்கள் என்கிறார் விக்கி கிங்.

முதலில் நமக்கு தெரிந்ததை எழுத வேண்டும். அதனால் நாம் தான் நம் கதையின் நாயகன் அல்லது நாயகி என்று யோசிக்கத் தொடங்கினாலே நம்மால் அந்த கதையை உணர்ந்து எழுத முடியும் என்கிறார் அவர். அதற்காக ஒரு திரைக்கதையாசிரியன் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. தான் எடுத்துக் கொண்ட பிரச்சனை தன்னை எப்படி பாதிக்கும் என்று யோசித்து அதை தன் கதாப்பாத்திரங்களோடு பொருத்திப் பார்க்க வேண்டும் என்கிறார் கிங். 

ஒரு கதைக்கருவை, கதாபாத்திரத்தை கண்டுகொண்ட பின் காட்சிகளாக அவற்றை எப்படி அடுத்தடுத்து எழுதுவது என்கிற குழப்பம் எல்லோருக்குமே இருக்கும். ஒவ்வொரு கதையிலும் ஒரு பிரதான கேள்வி இருக்கவேண்டும், அதைக்கண்டுகொண்டால் காட்சிகளை எழுதுவது எளிது என்கிறார் விக்கி கிங். அது என்ன பிரதான கேள்வி!

துப்பறியும் கதைகளில், கதையின் ஆரம்பத்தில் (அல்லது சிறிது நேரம் கழித்து) ஒரு கொலை நடக்கும். போலீஸ் நாயகன் அறிமுகமாவார். பின் அவர் அந்த குற்றவாளியை கண்டுப்பிடிப்பாரா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. இங்கே இது தான் ‘பிரதான கேள்வி’. அதன் பின் நாம் அமைக்கும் காட்சிகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் அந்த கேள்விக்கான பதிலைத் தேடக் கூடிய காட்சிகள் தான். இந்த கேள்வி எந்த வகை கதைக்கும் பொருந்தும். காதல் கதைகளில், நாயகன் நாயகி இணைவார்களா?, ஸ்போர்ட்ஸ் கதையில், விளையாட்டில் நாயகி ஜெயித்தாரா, பொலிடிக்கல் கதையில், ஹீரோ அதிகாரத்தை கைப்பற்றினானா! அதாவது, நம் பிரதான பாத்திரத்தின் நோக்கமே பிரதான கேள்வியாக இருக்கிறது. (இந்த பிரதான கேள்வி பற்றி எழுத்தாளர் லிண்டா சீகர் Making a Good Script Great புத்தகத்தில் இன்னும் விலாவாரியாக விவாதித்திருப்பர்). இந்தக் கேள்வி தெளிவாக இருக்கும் போது, நம்மால் திரைக்கதையை தெளிவாக முன்னோக்கி நகர்த்த முடியும்.  

இதையெல்லாம் கண்டுகொண்ட பின்பு ஒரு திரைக்கதையை நேர்கோட்டில் எழுதிச் செல்வதில் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்காது. ஆனால் அப்படி நேரடியாக கதை சொல்வது மட்டும் போதாது. திரைக்கதையில் அடிநாதமாக (subtext) வேறு என்னென்ன சொல்ல முடியும் என்றெல்லாம் ஒரு திரைக்கதையாசிரியன் யோசிக்க வேண்டும். அதாவது நம்முடைய கதாப்பாத்திரம் ஒரு செயலை செய்கிறது, பேசுகிறது என்றால்  அதற்கு பின்னே வேறொரு அர்த்தமும் இருக்க வேண்டும், அதை பார்வையாளர்கள் யூகித்துக் கொண்டே இருக்கும் வகையில் எழுத வேண்டும் என்கிறார் விக்கி கிங். இதெல்லாம் கதாப்பாத்திரத்திற்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்காக அவர் சொல்வது. அதே நேரத்தில் கதாப்பாத்திரத்தின் மீது நம்பகத்தன்மையும் ஏற்பட வேண்டுமல்லவா? அதற்கு என்ன செய்வது!

புறஉலகில் நிகழும் மாற்றம் போல கதாப்பாத்திரத்தின் அகத்திலும் மாற்றம் நிகழ்வதாக காட்சிகளை அமைக்க வேண்டும் என்கிறார் அவர். இதை தான் ‘கேரக்டர் ஆர்க்’ என்கிறோம். நம் கதையின் பிரதான பாத்திரத்திற்கு கதையின் தொடக்கத்தில் ஆகப்போராட்டமோ, குழப்பமோ இருப்பதாக கதையை அமைத்து, இறுதியில் அந்தப் பாத்திரம் தெளிவடைவதாக முடிப்பது கதைக்கு கூடுதல் எமோஷனை தரும்.

மேற்சொன்ன திரைக்கதை உத்திகள் நம் திரைக்கதையை மெருகேற்ற பயன்படும். ஆனால் அதற்கு முன்பு நாம் திரைக்கதையை எழுத வேண்டும் அல்லவா! அதற்க்கு தான் எழுத்து ஒழுக்கம் வேண்டுமென்கிறார் விக்கி கிங்.

தினமும் எழுதுங்கள். தொடர்ந்து எழுத முடியாமல் போனாலும் சில நிமிடங்கள் மட்டும் எழுதுங்கள் என்கிறார் அவர். அதற்கு அவர் எட்டு நிமிட பயிற்சி ஒன்றை சொல்கிறார். தொடர்ந்து எட்டு நிமிடம் நம் கதையை விடாமல் எழுத சொல்கிறார். கதை வளரவில்லை என்றாலும் கதையைப் பற்றி என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை எழுதலாம்.  அதுவும் முடியவில்லை எனில், உங்களின் அறையில் காணும் ஒரு பொருளை பற்றி எட்டு நிமிடங்கள் கட்டுரை எழுதுங்கள் என்கிறார். இப்படி செய்வதன் மூலம் எழுத்து என்பது ஒரு அன்றாட பயிற்சியாக மாறி நாளடைவில் அதுவே ஒரு ஒழுக்கமாக மாறிடும். தொடர்ந்து பல மணி நேரம் எழுத முடியாதவர்கள், பொருள் ஈட்டுவதற்காக வேறொரு வேலையில் இருந்துகொண்டே எழுத முயற்சிப்பவர்கள், ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எட்டு நிமிடங்களாக பிரித்துக் கொண்டு எழுதலாம் என்கிறார் அவர்.

இதை தொடர்ந்து பழகினால் ஒருவரால் ஒரு நாளில் இரண்டு மணிநேரங்களில் பத்து பக்கங்களை எழுதிவிட முடியும் என்பதே விக்கி கிங் சொல்லும் கூற்று. அப்படி செய்வதன் மூலம் முதல் பத்து நாளில் நூறிலிருந்து நூற்றி இருபது பக்கங்கள் கொண்ட திரைக்கதையின் முதல் வரைவை எழுதிவிட முடியும், அடுத்த பத்து நாட்களில் அதை செப்பனிட முடியும் என்று சொல்லும் அவர், இருபத்தியொன்றாம் நாளில் மற்றவரிடம் திரைக்கதையை படிக்கக் கொடுத்து கருத்து கேளுங்கள் என்கிறார். நாம் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல், திரைக்கதையின் பக்கங்களை நாம் இறுதி செய்து எழுதத் தொடங்க வேண்டிய அவசியமில்லை. பக்கங்களை நாம் எழுதும் கதை தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் விடாமல் எழுதுவோமேயானால்,  நல்லதொரு திரைக்கதையை நாம் எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது.

***



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.