
இதன் ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு தொடர்பற்ற தன்மை இருக்கிறது. அது இந்நாவல் தொடர்கதையாக எழுதப்பட்டதால் இருக்கலாம். ஆனால் இறுதியில் எல்லா புள்ளிகளும் மிக அழகாக இணைகின்றன. ஒரு தலைமுறைக்கு நிகழ்ந்ததே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நிகழ்வதே இதன் சுவாரஸ்யம்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புரோகித தொழிலை விட்டுவிட நினைக்கிறது ஒரு பிராமண குடும்பம். வைதீகத்திற்கு மதிப்பு இல்லை, வருங்காலம் இல்லை என்று கருதுகிறார் அந்த குடும்பப் பெரியவர். கும்பகோணத்தில் தற்காலிகமாக சிறிய சுண்டல் கடை தொடங்கி அதற்கு பெரும் வரவேற்பு கிடைக்க, உணவுத் தொழிலையே முழுநேரமாக செய்ய முடிவெடுக்கிறது அந்த குடும்பம். அங்கிருந்து மாயவரத்திற்கு இடம்பெயர்ந்து மாயவரம் ரயில் நிலையத்தில் அப்பம்-வடை- தயிர்சாதம் விற்கத் தொடங்குகிறார்கள். அந்த தொழில் கைகொடுக்க, ஓட்டல் தொழிலில் இறங்குகிறார்கள்.
குடும்பம் பெரிதாக, மெட்ராஸ்சிற்கு தொழிலை மாற்றுகிறார்கள். அடுத்த தலைமுறையோ உணவு தொழிலை விட படிப்பும், அரசு வேலையுமே வரும்காலத்திற்கு கைகொடுக்கும் என்று முடிவெடுக்கிறது. இப்படி ஒவ்வொரு தலைமுறை ஆட்களும் அந்தந்த சமூக சூழலுக்கு ஏற்ப தங்களின் லட்சியங்களை மாற்றிக் கொள்கிறார்கள். அதே சமயத்தில் தங்களின் வேரை இறுகப் பற்றிக் கொள்கிறார்கள்.
தனியொரு குடும்பத்தின் கதையாக மட்டுமே இல்லாமல், அந்த காலகட்டத்தின் வரலாறை மிகப் பெரிய கேன்வாஸில் சொல்வதே இந்நாவலின் பெரும் சிறப்பு.
Leave a comment