கடைசி நாள் – நெடுங்கதை


1

சுற்றிலும் நெருக்கமான வீடுகள். மூன்றாவது தளத்தில் வசிப்பதால் ஜன்னலை திறந்து வைத்தால் கொஞ்சம் காற்று வருகிறது. காலையில் அதே ஜன்னலில் எட்டிப்பார்க்கும் வெயில்தான் கண்விழிக்கவும் வைக்கிறது. ஏழு மணிக்கு கண்விழித்தாலும் எட்டு வரை அப்படியே படுக்கையில் கிடப்பதே வழக்கம். ஆனால் மனம் மட்டும் எதையோ அசைபோட்டுக் கொண்டே இருக்கும். எதையோ என்ன! வேலை தான். வேலை மட்டும் தான் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. வேலை இல்லாமல் திரிந்த காலங்களில் கூட இவ்வளவு மன உளைச்சல் இருந்ததில்லை. அப்போது வேலை இல்லையே என்பது மட்டுமே கவலையாக இருந்தது. ஆனால் வேலை கிடைத்தப் பின்னர் தான் எவ்வளவு சிக்கல்கள்! அதுவும் மேலாளராக பதவி உயரவு பெற்று இந்த கிளைக்கு மாற்றாலாகி வந்த மூன்று மாதத்தில் நிம்மதி தொலைந்து மன அழுத்தம் மட்டுமே மிச்சம் இருக்கிறது.

வேலை எல்லாம் ஒரு பிரச்சனையா! விட்டுவிட்டு வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்றால் முப்பது வயதிற்கு பிறகு வேறு எங்காவது வேலை கிடைக்குமா என்கிற பயம் இருக்கிறது! அப்படியே கிடைத்தாலும் இதே வருமானம் கிடைக்குமா! மனைவி மற்றும் குழந்தையின் எதிர்க்காலம் என்னவாகும்! இந்த பயம் தான் எல்லாவற்றையும் சலித்துக் கொண்டேனும் இந்த வேலைக்கு போக வைக்கிறது. ஆனால் தொடர் அவமானங்கள் தரக்கூடியதாகவே வேலையின் அன்றாடம் இருக்கிறது. 

மணி அடிக்கும் சப்தம் கேட்டது. பக்கத்து வீட்டில் வெள்ளிக்கிழமை  பூஜை. எது எப்படி இருந்தாலும் பக்கத்து வீட்டு பெண்மணி மட்டும் தன் பூஜையை நிறுத்துவதில்லை. நான் மணியை பார்த்தேன். ஏழு. இன்னும் ஒரு மணி நேரம் படுக்கையிலேயே கிடக்கலாம். நான் மீண்டும் கண்களை மூடினேன்.

உண்மையில் பொதுத்துறை வங்கியில் வேலை செய்வது ஒன்றும் அவ்வளவு சொகுசானதாக இருக்கவில்லை. திரும்பும் திசைகளில் எல்லாம் படுகுழிகள். ஒரு புறம் நிறைய கடன் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும். மறுபுறம் கடனை ஒழுங்காக செலுத்தாதவர்களிடம் இருந்து வசூல் செய்திட வேண்டும் என்ற அழுத்தம் இன்னும் கூடுதலாக இருக்கும். குறிப்பிட்ட நாட்களுக்குள் ஒரு கடன் கணக்கில் வட்டி செலுத்தப்படாமல் போகும் போது அது வாரக்கடன் ஆகிவிடும். அதை எப்படியேனும் தடுப்பதே ஒரு கிளை மேலாளரின் வேலை. மேலிடத்திலிருந்து தொடர்ந்து அழைப்புகளும் அழுத்தங்களும் வந்துகொண்டே இருக்கும்.

“ஹலோ, காலிங் ஃப்ரம் சர்க்கில் ஆபீஸ்!” என்பார்கள். யார் என்ன என்று பெயரை சொல்ல மாட்டார்கள். எங்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருப்பதால் அவர்கள் எல்லோருக்கும் தாங்கள் தான் கர்த்தா என்ற எண்ணம் இருக்கும்.

என் பெயரை சொல்லியும் அழைக்க மாட்டார்கள். ‘ஹலோ! 6265’ அது தான் என்னுடைய கிளையின் எண். ஒவ்வொரு கிளைக்கும் ஒரு பிரத்தியேக எண் இருக்கும்.  அந்த எண்ணை சொல்லி தான் மேலாளர்களை அடையாளப்படுத்துவார்கள். திங்கள்கிழமை காலை நேரடியாக பிராந்திய மேலாளரிடம் இருந்தே போன் வந்தது. அழைப்பை பார்த்த போதே வயிறு பிசையத் தொடங்கியது.

“உன் PNPA லிஸ்ட் இன்னும் குறையவே இல்லையே!” என்று ஹிந்தியில் வினவினார். 

PNPA லிஸ்ட். அதாவது பொடன்ஷியல் NPA லிஸ்ட். ஒவ்வொரு மாதமும் எந்தெந்த கடன் கணக்கெல்லாம் வாரக்கடனாகிறது என்கிற பட்டியல் முதல் தேதியிலேயே வந்துவிடும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை எவ்வளவு, குறைந்த பட்சம் எவ்வளவு செலுத்தினால் அந்த கடன் வாராக்கடனாகமல் தப்பிக்கும் என்ற எல்லா விவரமும் அதில் இருக்கும். அதை வைத்துக்கொண்டு ஒரு மேலாளர் ஒவ்வோரு வாடிக்கையாளரிடமும் பேச வேண்டும். இல்லை கெஞ்ச வேண்டும்.

“சார் ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்!”

“பக்வாஸ் மத் கர். ஹான்! இதுக்கு முன்னாடிலாம் உன் பிராஞ்ச்ல பிரச்சனையே இல்ல! நீ வந்து தான் பிரச்சனை!”

எனக்கு முன்பு கிளை மேலாளராக இருந்தவர் ஷசாங்க். பீகார்காரர். அவர் மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக எந்த ஈடும் இல்லாமல் ஏராளமான கடன்களை அள்ளிக் கொடுத்து விட்டார். நல்ல பெயர் வாங்கினால் தான் தன் ஊருக்கு மாற்றல் கிடைக்கும் என்ற கட்டாயம் அவருக்கு. ஈடு இல்லாமல் கடன் தருவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கடனை வாங்கும் வரை பவ்யமாக நடந்து கொள்பவர்கள், பணம் கைக்கு வந்ததும் வேறுமாதிரி பேசத்தொடங்கி விடுவார்கள். 

“உன் காசா! போயா”

ஷசாங்கின்  நல்ல நேரம் நாட்டில் கொரொனா வந்தது. அதனால் கடன்பெற்றவர்கள் விரும்பினால் மாதத் தவனையை  இரண்டு ஆண்டுகள் கழித்து திருப்பி செலுத்தலாம் என்கிற சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது. எந்த கடனும் கொடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வாராக்கடனாக கூடாது. அப்படி நிகழ்ந்தால் கொடுத்த மேலாளரின் தலை உருளும். கொரொனாவின் தயவால் ஷசாங்க் கொடுத்த எந்த கடனும் வாரக்கடனாகவில்லை. அவர் பதவி உயர்வு பெற்று பிகாருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விட்டார்.  நான் சிக்கிக்கொண்டேன். 

“சார் அது… கொரொனால மோரடோரியம் வாங்கியிருந்தாங்க. இப்ப கேட்டா கட்ட மாட்டுறாங்க! போன் பன்னாலும் ரெஸ்பான்ஸ் இல்ல!” நான் தயங்கி தயங்கி பிராந்திய மேலாரரிடம் சொன்னேன். 

“போன்லயா! ஏன் ஏசி ரூம விட்டு சார் நகர மாட்டீங்களோ! எத்தனை பேர நேர்ல போய் பார்த்தா!” 

என் கிளையில் பல நாட்களாக ஏசி வேலை செய்யவில்லை. புதிய ஏசி வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கும்படி மேலிடதிற்கு எழுதிய எந்த கடிதத்திற்கும் பதில் இல்லை. அதையெல்லாம் நான் அவரிடம் சொல்ல முடியாது.  

“சார் ரெண்டு மூணு பேர தேடி போனேன்! வீட்ல இல்ல” என்று சம்ப்ரதாயமாக சொன்னேன். உண்மையில் ஒருவர் கடனை கட்டாத போது அவர் வீடு தேடி போவதில் எனக்கு உடன்பாடில்லை. யாரும் வீடு தேடிச் சென்று யாருக்கும் கடன் தருவதில்லை. அதனால் வசூலிக்க மட்டும் ஏன் செல்ல வேண்டும். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது அறம். அது இல்லாமல் போகும் போது யார் யாரை என்ன செய்துவிட முடியும்!

“வீட்ல இல்லயா! ஆடி அசைஞ்சி பத்து மணிக்கு போயிருப்ப! எவன் இருப்பான். வேலைக்கு போயிருப்பான். காலைல ஆறு மணிக்கு போ! இல்லையா சாய்ங்காலாம் போ. ஆனா நீ என்னபண்ணுவியோ தெரியாது. ஒரு அக்கவுண்ட் கூட வாராக்கடன் ஆகக் கூடாது. இந்த வெள்ளிக்கிழமை தான் உனக்கு டைம். அதுக்குள்ள எல்லா அக்கவுண்ட்டையும் ரெகுலரைஸ் பன்னிடு, இல்லனா சனிக்கிழமை சர்க்கில் ஆபீஸ்ல வந்து ட்ரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிகோ” என்று சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார். 

என் மகளை அண்மையில், ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி ஒரு தனியார் பள்ளியில் முதல் வகுப்பு சேர்த்த போது, பள்ளி நிர்வாகம் சொன்னது நினைவிற்கு வந்தது “சார் என்ன ஆனாலும் பீஸ திருப்பி தரமாட்டோம். நீங்க திடீர்னு வேற ஊருக்கு மாத்தல் ஆகிடுச்சுனு வந்து நீக்காதீங்க” 

நான் PNPA பட்டியலை பார்த்தேன். பதினைந்து கடன்காரர்களின் பெயர்கள் இருந்தது. நான் என் குடும்பத்தோடு இருப்பதும் இல்லாமல் போவதும் அந்த பதினைந்து பேர்களின் கையில் தான் இருக்கிறது என்ற கலக்கத்தோடு பட்டியலின் முதல் ஆளைத் தொடர்பு கொண்டேன்.

2

செவ்வாய் கிழமை. ராஜகீழ்பாக்கத்தில் அமைந்திருந்த பெரிய வீடு.  சைனீஸ் கூரை அந்த வீட்டிற்கு கூடுதல் கவனத்தை கொடுத்தது. வீட்டின் உள்புறத்தை முழுவதுமாக மறைத்திருந்தது கேட். திறந்தேன். அதுவரை நிலவிய அமைதியை கலைக்கும் வண்ணம் ஆக்ரோஷமாக குலைத்தவாறே இரண்டு நாய்கள் வீட்டின் உள் வெராந்தாவிலிருந்து என்னை நோக்கி பாய்ந்து வந்தன. நான் கேட்டை மூடிவிட்டு அப்படியே அமைதியாக நின்றேன். இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. சில நொடிகள். ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. 

“டோனி. அமைதியா இரு”

நாய்களின் சப்தம் அடங்கியது..

“அத பாத்துக்கலாம். எந்த பிளைட்னு சொல்லுங்க…” 

கேட் திறக்கப்படும் போது தான் கவனித்தேன், அந்த பெண் போனில் பேசிக்கொண்டிருக்கிறாள் என்று. நாற்பது வயதை கடந்தவள். போனை காதிலிருந்து எடுக்காமலேயே, என்னைப்பார்த்து கேட்டாள்.

“யாரு!”

“மேடம், பேங்க்ல இருந்து.. இங்க சிவராம்!”

“என் பையன் தான்” சன்னமான குரலில் சொன்னாள். 

“அவர் எஜுகேஷன் லோன் கட்டலா. இந்த மந்த் NPA ஆகிடும்”

“அப்டியா. அவன் வந்தா வர சொல்றேன்” என்று தனக்கும் தன் மகனுக்கும் சம்மந்தமில்லை என்பதுபோல் அலட்டிக்கொள்ளாமல் சொல்லிவிட்டு அவள் கேட்டை சாத்திக்கொண்டாள்.

“இங்க யாரோ சேல்ஸ் மேன்!.” என்னைப்பாத்தி தான் போனில் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டேன். அவமானத்தின் சித்திரமாக அந்த நாள் எனக்கு தோன்றியது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சிறிது நேரம் அங்கேயே நின்றேன். நான் கிளம்பலாம் என்று என் வண்டியை நோக்கி நடந்த போது தான், எதிரே ஒரு இளைஞன் புல்லட்டில் வந்தான். அவன் முகம் சற்றே பரிச்சயமானதாக தோன்றியது. விண்ணப்பத்தில் பார்த்த புகைப்படம் என்று மூளை சொல்ல, ‘சிவராம்’ என்று உச்சரித்தேன்.  

வண்டியை நிறுத்தியவன், 

“நீங்க?” என்றான். 

“ஏன் சார் வீடு வரைக்கும் தேடி வறீங்க! முன்ன இருந்த மேனேஜர்லாம் டிஸ்டர்ப் பண்ணதே இல்ல!”

“நீங்க படிச்சு முடிச்சு ரெண்டு வருஷம் ஆச்சுல. இந்நேரம் ரீபெமெண்ட் ஸ்டார்ட் ஆகிருக்கணும். கோவிட்னு ரிலாக்சேசன் கொடுத்துருந்தாங்க. இப்போ முடிஞ்சிருச்சு” 

“சார் கேம்பஸ் வரல! வேல இல்லாம, என்ன பண்ண சொல்றீங்க!”

நான் அந்த வீட்டை நிமிர்ந்து பார்த்தேன். சொந்த வீடு. கீழே அவர்கள் வசிக்கிறார்கள். மேலே ஒரு வீடு வாடகைக்கு விடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு நல்ல தொகை வாடகையாக வரும். அந்த இரண்டு நாய்களுக்கு ஒரு மாதத்திற்கு ஆகும் தீவன செலவை வைத்து குறைந்தது ஆறு தவனைகள் செலுத்தலாம். 

“ஆன்லைன்ல எதுவும் ட்ரை பன்லயா சார்!” நான் பேச்சை வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் கேட்டேன். 

“வர ஆஃபர்லாம் பதினஞ்சயிராம் சம்பளம் தரேங்குறான். ஆறு லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு பதினஞ்சாயிரம் சம்பளத்துக்கு வேலைக்கு போக முடியுமா! சொல்லுங்க?”

அந்த ஆறுலட்சத்தில் ஐந்தரை லட்சத்தை வங்கிதான் கொடுத்தது. இதை அவனிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அப்படி சொன்னால் அவன் கோபித்துக்கொண்டு கட்ட வேண்டிய பணத்தை கட்டாமல் போய்விட்டால்! 

“சார், ஆக்ஸுவலி கட்லனா என் வேலைக்கு பிரச்சனை! கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன்?” 

அவனை விட வயதில் மூத்த நான் இப்படி சொல்வேன் என்று அவன் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பது அவன் முகத்தில் வெளிப்பட்ட அதிர்ச்சியில் தெரிந்தது.  சில நொடிகள் அமைதியாக நின்றவன், 

“சரி சார். இவ்ளோ தூரம் வந்துட்டீங்க. நாளைக்கு கட்டுறேன். இனிமே வீட்டுக்குலாம் வராதீங்க” என்றான். 

“தாங்க்ஸ் சார்” நான் வண்டியை நோக்கி நடந்த போது, அவன் அழைத்தான், 

“சார்”

“காசு மட்டும் இல்லனு சொல்லிடாத” என்று மனதில் வேண்டியவாறே திரும்பினேன். 

“இந்த கவரன்மெண்ட், எஜுகேஷன் லோனலாம் தள்ளுபடி பண்றேன்னு எலக்ஷன் அப்போ சொன்னாங்களே! அப்டி எதுவும் பண்ணலாயா?”

நான் இல்லை என்று தலையசைத்தேன்.

“ஏன் இப்டி போலி வாக்குறுதி கொடுத்து ஏமாத்துறாங்களோ! ஒரு நேர்மை வேணாம்!” என்றவாறே அவன் வீட்டின் கேட்டை திறந்தான். எங்கே மீண்டும் டோனியும் டோனியின் நண்பனும் என் மீது பாய்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் நான் அங்கிருந்து வேகமாக கிளம்பினேன். 

***

“இந்தா எடுத்துகிட்டு போ! எடுத்துக்கிட்டு போ சார்” என்றவாறே ராஜா அவருடைய ஆட்டோ சாவியை நீட்டினார். ஆஸ்பெஸ்டாஸ் சீட் போட்ட வீடு அது. உண்மையில் அந்த கூரை மட்டும் தான் கெட்டியாக இருந்தது. சுவரெல்லாம் இடிந்து விழும் நிலையில் தான் இருந்தது. சுவற்றில் ஒரே ஒரு மாதா படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது.  ராஜா கால் நீட்டிய வாக்கில்  கட்டிலில் அமர்ந்திருந்தார். அவரது காலில் மாவுகட்டு போடப்பட்டிருந்தது. 

நான் வீட்டு வாசலில் நின்று அழைத்த போது, “யாரு சார்!” என்ற குரல் மட்டும் உள்ளிருந்து கேட்டது. 

“பேங்கல இருந்து..” 

“உள்ள வா சார். உள்ள வா”  அவர் அப்படி அழைத்ததும் ஒரு வேலை குடித்திருக்கிறாரோ என்று தோன்றியது. தயங்கி தயங்கி தான் உள்ளே சென்றேன். அறை வாசலில் போய் பார்த்ததும் தான் அவர் கால் அடிபட்டு கட்டிலில் கிடப்பது தெரிந்தது. 

“ஆட்டோ வெளில தான் நிக்குது. எடுத்துகிட்டு போ சார்” என்று கோபமாக கத்தினார். நான் சாவியை வாங்காமல் வாசலிலேயே நின்றேன். அவர் சாவியை என் முகத்தில் எறிந்துவிடுவாறோ என்று யோசித்த நான், பேச்சை மாற்றும் பொருட்டு,  

“என்ன சார் ஆச்சு!” என்று அவர் காலை சுட்டிக் காண்பித்து கேட்டேன். நான் அப்படி கேட்பேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை அவர் மௌனம் உணர்த்தியது. சில நொடிகள். கொஞ்சம் கோபம் தணிந்தவராய்,

“உள்ள வா சார்”

நான் கட்டில் அருகில் இருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்தேன். 

“டீ சாப்புடுறியா?”

நான் வேண்டாம் என்று தலையசைத்தேன். வீட்டில் அவரை தவிர யாருமில்லை. அவர் எப்படி எழுந்து டீ போடுவார் என்று நான் யோசிக்காமல் இல்லை. என் சிந்தனை அவருடைய பேச்சு கலைத்தது. 

“மாவு வாங்கிக்கிட்டு நடந்து வந்துகிட்டு இருந்தேன் சார். ஒரு பைக் காரன் பின்னாடியே வந்து தட்டிட்டான். நிக்க கூட இல்ல” 

“இப்ப பரவாலயா?”

“கொஞ்சம் தேவலாம் சார். நடக்கத்தான் ஒரு மாசம் ஆவும் போல”

அவர் கடனை செலுத்துவது சாத்தியமே இல்லை என்று தெரிந்தாலும், என் வேலையை  நான் செய்ய வேண்டுமே!

“ஏதாவது பணம் கட்ட முடியுமா!”

“ரெண்டு வருஷமா வருமானமே இல்ல சார். ஸ்கூல் இல்ல. எல்லாரும் ஊட்ல இருந்து வேலை பாக்குறாங்க. கொஞ்சம் சரியாகிடும்னு பாத்தா கால் உடஞ்சு போச்சு. பொண்டாட்டி தான் மெப்ஸ்க்குள்ள சமையல் வேலைக்கு போவுது. புள்ளைங்க பீஸ் அதுஇதுனு கைல ஒண்ணுமே நிக்கல சார்”

நான் அமைதியாக வீட்டைவிட்டு வெளியேறினேன். அவர் கட்டையை ஊன்றியவாறே என் பின்னே வந்தார். வாசலில் நின்ற ஆட்டோவை கவனித்தேன். அது மிகவும் பழைய நிலையில் இருந்தது. அதன் இருக்கையை பல்லால் கடித்து இழுத்துக்கொண்டிருந்த நாய் ஒன்று எங்களை பார்த்ததும் இறங்கி ஓடியது. 

“நான் கட்டலனா ஆட்டோவ எடுட்டுட்டு போய்டுவீங்க இல்ல?” 

“வேற வழி இல்ல சார். வாரக்கடன் ஆச்சுனா உடனே வண்டிய சீஸ் பண்ணனும்”

அவர் ஆட்டோவையே பார்த்தார். 

“ரொம்ப ஆசைப்பட்டு வாங்குன வண்டி சார்!”

“ஓ.டி.எஸ் ஏதாவது பண்றீங்களா!” என்று கேட்டேன். நான் சொன்னது அவருக்கு புரியவில்லை என்பது அவர் பார்வையில் தெரிந்தது. 

“ஒரு தவணை செட்டில்மெண்ட். நீங்க இன்னும் ஒன்றரை லட்சம் கட்டணும். முப்பது நாப்பாதியரம் செட்டில் பண்ணிட்டு வண்டிய நீங்களே எடுத்துக்கோங்க. ஆட்டோ கண்டிஷன் வேற சரி இல்ல. அத நான் ரிப்போர்ட்டா எழுதிடுறேன். வந்தவரை லாபம்னு என் மேல் இடத்துல ஒத்துப்பாங்க!” 

சிறிது நேரம் ஆட்டோவையே பார்த்துக் கொண்டு நின்றவர்,    

“கஷ்டம் சார்” என்றார். அவர் கண்கள் கலங்குவதை கவனித்தேன். அதற்கு மேல் என்னாலும் அங்கே நிற்க முடியவில்லை. 

3

மறுநாள் காலை தலைமை மேலாளர் பாண்டேவிடமிருந்து அழைப்பு வந்தது.  அவர் ஓரளவிற்கு நட்பாக பேசக்கொடியவர்.  

“எப்டி போயிட்டு இருக்கு…!” 

“ஆறு  அக்கவுண்ட் ரெகுலரைஸ் ஆச்சு சார்!”

“குட்!”

“ராஜானு ஒரு ஆட்டோ லோன் ஸ்லிப் ஆகிடும் போல!”

“நோ நோ. சர்கிள் ஹெட் ஒரு அக்கவுண்ட் கூட ஸ்லிப் ஆகக் கூடாதுணு சொல்லிருக்கார். இது செப்டம்பர் குவர்ட்டர் வேற! எப்டியாவது அந்த அக்கவுண்ட்ட காப்பாத்திடு! கிரிடிக்கல் அமெளண்ட் எவ்ளோ?”

“ஆறாயிரம்”

கிரிட்டிக்கல் அமெளண்ட் என்பது ஒரு கணக்கு வாரக்கடன் ஆகாமல் இருப்பதற்காக கட்ட வேண்டிய குறைந்த பட்ச தொகை. 

“அப்பறம் என்ன!”

“இல்ல சார் அவரால அது கூட கட்ட முடியாது. ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சு”

மறு முனையில் சிரிப்பு. 

“அவர யாரு கட்ட சொன்னா!”

“சார்…!”

“ஒரு பெரிய ஹோட்டல்ல ஃபேமிலி ஃபிரண்ட்ஸ்க்கு ட்ரீட் வச்சதா நினச்சுக்கோ!”

அவர் என் கையிலிருந்து பணம்போட சொல்கிறார். நான் முதன்முதலில் துணை மேலாளராக ஒரு கிளையில் சேர்ந்த போது, என் மேலாளர் குமார்  அப்படிதான் தன் பணத்தை செலுத்தி கணக்குகள் வாரக்கடன் ஆகாமல் தடுப்பார். “சார் எதுக்கு இதெல்லாம் பண்றீங்க! அவங்க கடன கட்டுலனா நாம என்ன பண்ண முடியும்!” என்று நான் பல முறை கேட்டிருக்கிறேன். 

“நீ மேனஜர் ஆனா தெரியும்” என்று மட்டும் சொல்லிவிட்டு கடந்துவிடுவார். 

பாண்டே என்னிடம் பணம் கட்டும்படி சொன்னபோது தான்  எனக்கு குமார் சார் சொன்னதின் அர்த்தம் புரிந்தது. என்னால் மறுக்க முடியவில்லை. 

“நீ ஒரு ப்ராஞ்ச் மேனஜர். எப்படி எல்லாத்தையும் ஹாண்டில் பண்ணணும்னு உனக்கு தெரியணும்! சின்னசின்ன அமெளண்ட்லாம் இருந்தா நீயே கட்டிடு. அப்பறம் கஷ்டமர்ஸ்கிட்ட பாலோ பண்ணி வசூல் பன்னிக்கோ! உன் டைம்ல நிறைய  அக்கவுண்ட் வாரக்கடன் ஆச்சுனா உனக்கு எபிசியன்சி பத்தலனு சொல்லிடுவாங்க. இந்த சர்க்கில் ஹெட் இன்னும் ரெண்டு மாசத்துல டிரான்ஸ்பர் ஆகிடுவாரு, அதுவரை சமாளி, இல்லன்னா போற நேரத்துல உன்ன டிரான்ஸ்பர் பண்ணிட போராரு” என்று சொல்லிவிட்டு போனை தூண்டித்தார் பாண்டே.  

நான் அன்று முழுக்க பலரை சென்று சந்தித்தேன். சிலர் பணத்தை செலுத்த ஒப்புக்கொண்டனர். சிலர், “பல ஆயிரம் கோடி கடன் வாங்குனவனுங்களலாம் விட்டுருங்க. எங்கள மாதிரி அஞ்சு பத்து வாங்குனவங்கள டார்ச்சர் பண்ணுங்க” என்றெல்லாம் வாதிட்டனர். அண்மைகாலங்களில் பலரும் இதே வசனத்தை தான் சொல்லி வருகின்றனர். 

“சார் யாரா இருந்தாலும் வாங்குன கடன கட்டுறதுதான நியாயம். பேங்குக்குனு பணம் இல்ல. மக்கள் பணத்த எடுத்து தான் உங்களுக்கு கடனா கொடுக்குறோம்.  நீங்க சரியா தவனைய கட்டுனா தான மேற்கொண்டு கடன் கொடுக்க முடியும்!”

சிலர் இப்படி பேசினால் சமாதானம் ஆகி விடுவார்கள். வேறு சிலரோ  எவ்வளவு சொன்னாலும் நம் பேச்சை கேட்கமாட்டார்கள். 

“இத போய் பல்லாயிரம் கோடி வாங்குனவங்கிட்ட சொல்லுங்க சார்! முடியாது இல்ல?”

அவர்கள் இப்படி பேசுவது அவமானமாக தான் இருக்கும். ஆனால் எதுவும் செய்ய இயலாது. அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தானே செய்கிறது! பல்லாயிரம் கோடி கடனெல்லாம் ஒரு சாதாரண கிளை மேலாளரின் ஆளுகைக்கு அப்பாற்பட்டது. அதன் பின்னிருக்கும் அரசியல் குறுக்கீடு பற்றியெல்லாம் வெளியே பேசமுடியாது. அதனால் யார் அந்த ஆயுதத்தை எங்கள் மீது எறிந்தாலும், சப்தமில்லாமல் திரும்பி வரத் தான் வேண்டும். பணம் இருக்கு, இல்லை என்று சொல்பவரைகளை தாண்டி மூன்றாவதாக ஒரு ரகம் உண்டு.   

“சார் ஐநூறு ரூபா கம்மியா இருக்கு சார்” என்பார்கள். மொத்தமாக கட்டுங்கள் என்றெல்லாம் கட்டளையிட முடியாது. கொடுப்பதை கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டு, மீதியை நம் கையிலிருந்து போட வேண்டும்.  கிட்டதட்ட இருபதாயிரம் வரை செலவளித்து சில கணக்குகளை  சரி செய்தேன். அதற்கு மேல் செலவு செய்ய சக்தி இல்லை. என் சம்பளத்தில் வீட்டுக்கடன் வாகனக் கடன் தவணைகள், மாதாந்திர செலவுகள், ஊரிலிருக்கும் பெற்றோர்களின் மருத்துவ செலவுகள் போக கைவசம் நிற்பது சொற்பம் தான். அதில் இருபதாயிரம் எடுக்க முடிந்ததே பெரிய விஷயம்.    

வியாழன் காலை, ஆறு கடன் கணக்குகள் மட்டும் மீதம் இருந்தன. அதில் ஒன்று  முகேஷினுடையது. என்னை விட வயதில் சிறியவன் தான். ஐம்பது லட்சம் கடன் வாங்கி இருந்தான். அறுபதாயிரம் கணக்கில் கட்டாமல் போனால் அவனுடைய கடன் வாரக்கடன் ஆகிவிடும்.  

இரண்டு நாட்களாக போன் செய்தும் ஒரு பிரோயஜனமும் இல்லை. 

“அவர் எப்பவும் லாஸ்ட் மினிட்ல தான் சார் கட்டுவாரு” என்று என்னுடைய துணை மேலாளர் சொன்னார்.

“ஒரு நாள் அவருக்குக்காக நைட் ஒன்பது மணி வரைக்கும் உக்காந்திருந்தோம் சார்” என்று வருத்தமாக சொன்னார். இந்த முறையும் அப்படி ஆகிவிடுமோ என்கிற பயம் அவரின் முகத்தில் தெரிந்தது. அவர் மகனின் பிறந்தநாள், மாலை சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே என்னிடம் சொல்லியிருந்தார். 

வங்கியை பொறுத்த வரை ‘நாளின் தொடக்கம் (day begin)’ மட்டும் ‘நாளின் முடிவு (day end)’ என்று இரண்டு விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் காலை சர்வரில் கடவு சொல்லை இட்டு, அந்த நாளினை தொடங்கி வைக்க வேண்டும். மாலை எல்லா பரிவர்த்தனைகளையும் முடித்த பின்பு மீண்டும் கடவு சொல்லை இட்டு நாளினை முடித்து வைக்க வேண்டும். இதை செய்ய வழக்கமாக மாலை ஆறு ஆறரை ஆகும். டே எண்ட் செய்துவிட்டால் அதன் பின் எங்களால் சர்வரில் எதுவும் செய்ய இயலாது. அதன் பின் நிகழும் எந்த இணைய பரிவர்த்தனையும் அடுத்தநாளை தான் சேரும். இதெல்லாம் வாடிக்களையர்களுக்கு புரியாது. 

“இன்னைக்கு நைட் ஏழு மணிக்கு அப்பறம் தான் எனக்கு பண்ட்ஸ் வரும், மாத்தி விட்டுறேன்” என்றான்  முகேஷ். ஆனால் நாங்கள் டே எண்ட் செய்துவிட்டாலே அவரது கணக்கு வாரக்கடன் ஆகிவிடும் என்று சொன்னதை அவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை. அவர் பணம் வரும் வரை டே எண்ட் செய்யாமல்  நாங்கள் காத்திருக்க வேண்டும், இரவு பத்து மணி ஆனாலும். 

ஒரு சிலர் வாடிக்கையாளர்களுக்கு இத்தகைய குரூர மனநிலை இருக்கும். அவர்களிடம் பணம் இருக்கும் ஆனால் வேண்டுமென்றே கடைசி நாள் மாலை வரை பணத்தை அனுப்ப மாட்டார்கள்.மாறிமாறி பலரும் அவர்களை போனில் தொடர்பு கொள்ள வேண்டும். இறுதியாக மாலை ஏழு மணிக்கு பணத்தை அனுப்பிவிட்டு, “ரொம்ப டார்ச்சர் பண்றீங்க!” என்று கோபமாக சொல்வார்கள். முகேஷும் அந்த வகை தான். அவரை தேடிச் செல்வது தான் ஒரே வழி என்று பட்டது. 

“கவலை படாதீங்க சார். இன்னைக்கு நீங்க சீக்கிரம் வீட்டுக்கு போலாம்” என்று உதவி மேலாளரிடம் சொல்லிவிட்டு, நான் என் அலுவலக உதவியாளர் கந்தபெருமாளை அழைத்துக் கொண்டு முகேஷை தேடிக் கிளம்பினேன்.  பிரச்சனைக்குரிய ஆசாமிகள் மற்றும் பெண்களை தேடி செல்லும் போது மட்டும் நான் கந்தபெருமாளை சேர்த்துக் கொள்வேன். ஆள் பலத்திற்காக அல்ல,  சாட்சிக்காக. இல்லையெனில் தேவையில்லாத   குற்றசாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும்.

என் நண்பரொருவர் வேலூரில் மேலாளராக இருந்தார். கொல்கத்தாக்காரர். கடைந்தெடுத்த அப்பாவி. ஒருமுறை ஒரு பெண்மணியிடம் முத்ரா கடனிற்காக இரண்டாயிரம் வசூல் செய்ய சென்றிருக்கிறார். வாசலில் தான் நின்றிருக்கிறார். அதற்குள் அவர் தன்னிடம் அசிங்கமாக நடந்து கொண்டதாக அந்த பெண் ஊரைக் கூட்ட, இனிமேல் தமிழ்நாடு பக்கமே வரமாட்டேன் என்று மாற்றல் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அதனால் தான் இதுபோன்ற ஆட்களை தேடி செல்லும்போது சாட்சிக்கு ஒருவரையாது உடன்  அழைத்து செல்வது நல்லது. 

நானும் என் சாட்சியும் சைதாபேட்டை பூக்காரத் தெருவிற்குள் நுழைந்தோம். அங்கு தான்  முகேஷின் வீடு இருந்தது. வீடு வரை போக வேண்டும் என்பது எங்களின் எண்ணமில்லை. முதலில் முகேஷின் அலுவலகத்திற்கு தான் சென்றோம்.  

“சார் மீட்டிங் போயிருக்கார். எப்போ வருவார்னு தெரியாது” என்று அலுவலக மேலாளர் சொன்னார். நாங்கள் முகேஷை எவ்வளவு முறை தொடர்பு கொண்டும் அவன் போனை எடுக்கவில்லை. 

“கந்த பெருமாள், கிளம்புங்க நாம முகேஷ் சார் வீட்டுக்கு போவோம்” என்று அந்த மேலாளர் காதில் விழும்படி சொல்லிவிட்டு கிளம்பினோம். வண்டியை கந்த பெருமாள் ஓட்ட நான் பின்னால் அமர்ந்து கொண்டேன். கொஞ்ச தொலைவு சென்றதுமே முகிஷிடமிருந்து போன் வந்தது. நான் வேண்டுமென்றே எடுக்கவில்லை. 

“வீட்டுக்கு போய்டாதீங்க ஜீ. அது எனக்கு பிரஸ்டீஜ் இஷ்யூ”  என்று வாட்சாப்பில் செய்தி அனுப்பி இருந்தான். 

பூக்காரத் தெருவை அடைந்ததும் அவனை அழைத்தேன். “நாலு மணிக்கு அனுப்பிடுறேன் ஜி” என்றான். மணி சரியாக பன்னிரெண்டு. உச்சிவெயிலிருந்து தப்பித்துக் கொள்ள டீ கடை வாசலில் ஒதுங்கினோம். 

“ஜி. உங்க வீட்டுக்கிட்ட இருக்க டீ கடைல தான் இருக்கேன்…”

“நான் தான் கட்டிறேன்னு சொல்றேன்ல ஜி. ஈவினிங் வரைக்கும் டைம் கொடுங்க” 

“ஏன் ஜி. லாஸ்ட் மினிட் வரைக்கும் இழுக்குறீங்க. ஒரு நாள் முன்னாடி தான  கட்டச் சொல்றோம்!”

“எனக்கு வர வேண்டிய பணம் லாக் ஆகிடுச்சு ஜி” என்று எப்போதும் எல்லா வாடிக்கையாளர்களும் சொல்லும் காரணத்தையே சொன்னான்.   

“வீட்டுக்கு போகதீங்கணு கெஞ்சுறான். என்ன பண்றது கந்த பெருமாள்?” என்று கேட்டேன். 

“சார் வீட்டுக்குள்ள போகாத வரைக்கும் தான் இவங்களுக்கு நம்ம மேல  பயம் இருக்கும். இப்போ உள்ள போய்டா அசிங்கம் போயிடும். அப்பறம் அடுத்த முறை காச வாங்க முடியாது பாத்துக்கோங்க”

கந்த பெருமாள் சொன்னது சரியாக தான் பட்டது. ஐம்பது வயதை கடந்த அனுபவம் பேசும்போது நாம் கேட்டுக்கொள்ள தான் வேண்டும். 

மணி ஓடிக்கொண்டே இருந்தது. முகேஷை எப்போது அழைத்தாலும் மீட்டிங்கில் இருப்பதாக சொல்லிவிட்டு அழைப்பை தூண்டித்தான். நாங்கள் லெமன் டீயை குடித்துவிட்டு நின்றுகொண்டே  இருந்தோம். 

“அந்த வீட்டு மாடில இருந்து ஒரு வயசானவர் எட்டிப் பாத்துகிட்டே இருக்கார் சார்” என்றார் கந்தபெருமாள். நான் முகேஷின் வீட்டைப் பார்த்தேன. வீட்டின் தரை தளத்தில் நான்கு கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. 

“அவங்க அப்பானு நினைக்குறேன்” என்றேன் கந்த பெருமாளிடம். 

“இந்த கடை வாடகையே பல்லாயிரம் வரும் போல சார். இவனுக்கு கட்றதுக்கு என்ன! ” என்று சலித்துக் கொண்டார் கந்தபெருமாள். இரண்டு மணிநேரம் ஒரே இடத்தில் நிற்பதால் வரும் சலிப்பு அது என்பதை புரிந்துகொண்டேன். என் வீடாவது தாம்பரத்தில் தான் இருந்தது. கந்தபெருபால் காஞ்சிபுரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கிரமத்திலிருந்து வருகிறார். அவர் பகுதி நேர ஊழியர். அவரது வேலை நேரம் ஒரு மணி வரை தான். சைதாபேட்டையிலிருந்து திரும்பி அலுவலகம் சென்று அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற வருத்தம் அவருக்கு. அவர் தன் கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டார். 

“மணி என்ன!” என்று நான் கேலியாக கேட்டேன். 

“ரெண்டு மணி சார்” என்று சோகமான தொனியில் சொன்னார் 

“ஒரு நாள் தான்! கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க”

“பரவால்ல சார்…” என்றார். அலுவலகம் சென்றதும் அவருக்கு ஓவர்டைம் டூட்டிக்கு ஏதாவது பணம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 

அப்போது மூன்று இளைஞர்கள் ஒரே வண்டியில் எங்களை கடந்து சென்றனர். 

“எங்க மச்சான் இருக்க…” என்று அதில் ஒருவன் சப்தமாக போனில் பேசிக்கொண்டே போனான். நான் மறுபடியும் முகேஷிற்கு போன் செய்தேன். லைன் பிஸி என்று வந்தது. 

அந்த மூன்று இளைஞர்களும் முகேஷின் வீட்டு முன்பு நின்றனர். ஒருவன் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டான். முகேஷின் அப்பா மாடியிலிருந்து எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே ஓடினார். 

“டைம் ஆச்சுடா. இவன் என்ன இவ்ளோ லேட் ஆக்குறான். ஃபர்ஸ்ட் ஷோவே போயிருக்கலாம்” என்று பைக்கில் அமர்ந்திருந்த இரண்டு இளைஞர்களில் யாரோ ஒருவன் சொன்னான். 

என்னுடைய போன் மணி ஓலித்தது. முகேஷ் தான். 

“ஜி காச போட்டுட்டேன்” என்றான். நான் உறுதி செய்வதற்காக என் உதவி மேலாளரை அழைத்தேன். 

“சார் முகேஷ் அக்கவுண்ட்ல காசு வந்திருச்சு சார்” என்று சந்தோஷமாக சொன்னார். வீட்டுக்கு சீக்கிரம் போய்விடலாம் என்கிற களிப்பு அவருக்கு. 

நாங்கள் முகேஷின் வீட்டைப் பார்த்தோம். உள்ளிருந்து ஒரு யமஹா பைக்  வெளியே வந்தது. கூலிங் கிளாஸ் அணிந்த முகேஷ் அதை ஒட்டி வந்தான். வெளியே நின்ற இளைஞன் “வெந்து தணிந்தது காடு. மச்சானுக்கு ஒரு வணக்கத்தை போடு” என்றவாறே முகேஷின் வண்டியில் ஏறிக்கொண்டான். 

“இவ்ளோ நேரம் உள்ள தான் சார் இருந்திருக்கான். திருடன்” என்றார் கந்தபெருமாள்.  

“கந்தபெருமாள், என் பழைய மேனஜர் குமார் சார் எப்பவும் ஒண்ணு சொல்வார். சம்பளத்துக்கு வேலைக்கு வந்துட்டா, ஆத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கணும்னு..” சொல்லிவிட்டு அவரை பார்த்து புன்னகை செய்தேன்.   

எதுவுமே நடக்காதது போல் முகேஷ் எங்களை கடந்து செல்ல, நாங்களும் எதுவும் நடக்காதது போல் அங்கிருந்து கிளம்பினோம். 

4

“ஏங்க, வெள்ளிக்கிழமை அதுவுமா, மணி எட்டு ஆகப்போகுது, இன்னும் எழுந்திருக்கலயா!” என் மனைவி கேட்டாள்.

“இன்னும் கொஞ்ச நேரம்” என்றவாறே நான் திரும்பி படுத்தேன். இப்படி காலையில் உடனே எழாமல் மனதை குழப்பிக் கொண்டு படுத்து கிடப்பதுகூட ஒரு வகையான மனநோய் தான் போல. அப்படியெனில், நாளுக்கு நாள் மனநோய் அதிகாமிக் கொண்டே தான் போகிறது.

நேற்று மாலை நடந்த நிகழ்வுகள் எல்லாம் நடக்காமல் போயிருந்தால் கூட இன்றைய காலை நல்லதாக விடிந்திருக்கும். நடந்ததை அழித்துவிடும் சக்தி இருந்தால் தான் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்! நேற்று மாலை நானும் என் சாட்சியும் நான்கு மணி வாக்கில் தாம்பரத்தை அடைந்தோம். அவர் காஞ்சீபுரம் பேருந்தில் ஏறிக்கொண்டார். அதற்கு மேல் அவரை உடன் வைத்திருப்பது நியாயமாக இருக்காது. அடுத்த வாடிக்கையாளரை தனியாக சென்றே சந்திப்போம் என்ற முடிவோடு நான் தமீம் அன்சாரியை தேடிச் சென்றேன்.  எப்போதுமே ஏழு மணிக்கு பணம் செலுத்தும் முகேஷிடம் இரண்டு மணிக்கே பணம் வசூல் செய்தது எனக்கு புது உத்வேகத்தை கொடுத்திருந்தது. அது கூட நான் தனியாக சென்றதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அன்சாரி, சண்முகம் சாலையில் ஜூஸ் கடை வைத்திருந்தார். நான் என் வங்கியின் ஐ.டி கார்டை அணிந்து கொண்டு அவர் கடை முன்பு சென்று நின்றேன். அவர் என்னை கண்டும் காணாததுமாய் தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். அங்கே இருந்த இரண்டு வாடிக்கையாளர்  போகும் வரை காத்திருந்து, அவர் அருகே சென்று, 

“சார் பேங்க்ல இருந்து வரேன்!” என்றேன். அவர் என் கண்களை பார்க்காமலேயே பேசினார். 

“என்ன விஷயம்!”

“நீங்க அமெளண்ட் கட்டனுமே!”

“எனக்கு தெரியாது சார். எதுவா இருந்தாலும் இப்ராஹீம் கனிய கேட்டுக்கோங்க! அவன் என் அக்கா பையன் தான். அவனுக்கு தான் வாங்கி கொடுத்தேன்”

“நீங்க தானா கையெழுத்து போட்டு இருக்கீங்க. நாளைக்கு உங்களுக்கு தான் பிரச்சனை வரும்!” 

அவர் என்னை முறைத்தார். ஆள் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவாய் இருந்தார். என்னுள் இருந்த பயத்தை காண்பித்து கொள்ளாமல் அமைதியாக நின்றேன். அவர் போனை எடுத்து யாரையோ தொடர்பு கொண்டார், 

“டேய் ரஹீமு. பேங்க் லோன் ஒழுங்கா கட்டுறேனு தான சொன்ன! இப்ப யார் யாரோ வந்து கேட்குறாங்க!” என்று கோபமாக பேசினார். அவர் இப்ராஹீம் கனியிடம் தான் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன். 

“நான் போன் பண்ணுனா அவர் எடுக்க மாட்றார்.  அதுவும் இல்லாம யார் பேர்ல கடன் இருக்கோ அவங்கள தான கேட்க முடியும்” என்றேன். அன்சாரி எந்த பதிலும் சொல்லாமல் தன் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார். அதற்கு மேல் அங்கு நிற்பது வீண் என்று தோன்றியது. 

அடுத்து யாரை சந்திக்க வேண்டும் என்கிற பட்டியல் என்னிடம் இருந்தது. அதில் இன்னும் நான்கு பேர் பாக்கி இருந்தனர். ஒருவர் இப்ராஹிம் கனியின் தந்தை, இன்னொன்று அவனுடைய தங்கை, மற்ற இருவரும் அவனது  நண்பர்கள். 

இப்ராஹிம் கனி புத்திசாலித்தனமாக தன் பெயரில் கடன் வாங்காமல் தனக்கு வேண்டபட்டவர்களை அழைத்து வந்து வாங்கியிருக்கிறான் என்பதை என் உதவி மேலாளர் முன்கூட்டியே என்னிடம் சொல்லி இருந்தார். இதிலேயே அவனுடைய நோக்கம் வங்கியை ஏமாற்றுவதாக இருந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதை பழைய மேலாளர் ஷசாங்கிடம் தொலைபேசியில் கேட்டும் விட்டேன். 

“ஏய். அப்டிலாம் இல்ல. அவன் அச்சா லடுகா. ஒரு முறை போன் ரிப்பேர் பண்ண போனேன்.  அப்டிதான் பழக்கம். அவனுக்கு லோன் தேவை இல்லை, மத்தவங்களுக்கு தேவை அதனால கூட்டிட்டு வந்திருக்கான். இதுல என்ன தப்பு?” என்று நழுவலாக பேசினார் ஷசாங்க். 

“சார், நான் யாருக்கு போன் பன்னாலும் அவங்க இப்ராஹிம் கனிய கேட்டுக்கோணு சொல்றாங்க!” என்றேன். 

“எல்லாருக்குமே பிராப்பர் பிஸினஸ் இருந்துச்சு. அத பாத்து தான் நான் லோன் கொடுத்தேன்.  இப்ப வசூல் பண்ண முடிலனா அது என் பிரச்சனை இல்ல” என்று சொல்லிவிட்டு ஷசாங்க் போனை தூண்டித்தார். என்னை விட பதவியில் ஒரு படி மேலே இருப்பவர். அவரிடம் நான் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாது. இது என் பிரச்சனை நானே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அன்சாரி கட்டவில்லை என்றாலும் இப்ராஹிம் கனியின் குடும்பத்தில் யாரிடமாவது பேசி பணத்தை கட்ட வைத்துவிடலாம் என்கிற நம்பிக்கை என்னிடம் இருந்தது.  

அரங்கநாதபுரத்தில் உள்ள இப்ராஹிம் கனியின் வீட்டை தேடிச் சென்றேன்.  வீடை கண்டடைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. பலரிடம் வழி கேட்க வேண்டியிருந்தது. சிலர் மட்டுமே வழி சொல்லி உதவினர். இறுதியாக ஒரு மளிகை கடை முன்பு நின்றேன். ஒரு வயதானவர் அந்த கடையில் இருந்தார். சாந்தமான முகத்திற்கு சொந்தக்காரர். 

“சலாம் அலேக்கும். என்ன வேணும்!” என்றார். அவரிடம் சொன்னேன்.   

“இந்த காலத்து பசங்கலாம் அரசியல்ல சேர்ந்துக்கிட்டு இல்லாத வேலையெல்லாம் பண்றாணுங்க. உண்மையான முஸ்லிம் கடனோட சாக மாட்டான் சார் அவங்க அப்பா நல்ல மனுஷன். அவர கேளுங்க” என்று கனியின் வீட்டிற்கு வழி சொன்னார். 

இப்ராஹீம் கனியின் வீட்டை அடைந்தேன். வரிசையாக நான்கைந்து வீடுகள் அமைந்திருந்தன. வீட்டின் வாசலில் ஒரு அரசியல் தலைவரின் படம் இருந்தது. 

“யாருங்க…” என்றவாறே அவனுடைய தந்தை உள்ளே இருந்து வந்தார்.  

“சார் உங்க பேர்ல ஒரு கடன் இருக்கே!”

“இன்னும் ரஹீம் கட்டலயா! கடன அடைச்சுட்டெனு தான சொன்னான்!” அப்பாவியாக கேட்டார்.

“சார் அவர் என் போன எடுக்க மாட்டுறார், வந்தா பேச சொல்லுங்க” என்றவாறே என் விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு நகர்ந்தேன். 

அந்த குறுகலான தெருவை விட்டு வெளியே வந்தபோது என் அலைபேசி மணி ஒலித்தது. புதிய எண். எடுத்தேன். 

“என்ன சார் வீட்டுக்குலாம் போறீங்கலாம். வேற மாதிரி ஆகிடும்”

இப்ராஹீம் கனி என்று புரிந்தது. 

“சார் கடன் கட்டனும். யார கேட்டாலும் உங்க பேர தான் சொல்றாங்க!”

“என்னமோ நீங்க கடன கொடுத்த மாதிரி ஓவரா பண்றீங்க.. கட்டாம ஓடிடவா போறோம், எல்லாம் கட்டுவோம்”

“அதான் உங்கள பிடிக்கவே முடியலயே! எங்க இருக்கீங்கனே தெரில”

“எல்லாம் இங்க மார்க்கெட்ல தான் சார் இருக்கேன்… என்ன பயமா! வாங்க”

மார்க்கெட்டை அடைந்து இப்ராஹீம் கனியை கண்டுபிடிப்பது அவ்வளவு சிக்கலாக இருக்கவில்லை. ஒரு வெங்காய மண்டியில் அவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு முப்பது வயதிற்குள் தான் இருக்கும். அவன் குரலில் இருந்த தெம்பிற்கும் தோற்றதிற்கும் சம்மந்தமில்லை என்ற அளவிற்கு அவன் நோஞ்சானாக இருந்தான். அவனிடம் கொஞ்சம் தடுமாற்றம் இருந்ததை கண்டு அவன் குடித்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன். அவனிடம் கொஞ்சம் நிதானமாக பேசினால் அவனுக்கு புரிய வைத்துவிட முடியும் என்று தோன்றியது. 

“சார் நாளைக்குள்ள வட்டியை கட்டணும். இல்லனா வாரக்கடன் ஆகிடும். ஒவ்வொருத்தரும் அஞ்சு லட்சம்னு மொத்தம் இருபத்தியஞ்சு லட்சம் வாங்கி இருக்கீங்க… நீங்க நல்லா பிஸினஸ் பண்ணி வளரணும்னு தான பேங்க் கொடுத்துச்சு..  இப்டி கட்லனா எப்டி” 

“நாளைக்குலாம் முடியாது சார்…”

“சார்.. என் மேல் இடத்துல விட மாட்டாங்க. நாளைக்கு நீங்க கட்ற வரைக்கும் உங்க வீட்டு வாசல்ல போய் நிக்க சொல்வாங்க”

“சரி சார், நீங்க என் வீட்டுக்கு போங்க. நான் உங்க வீட்டுக்கு போறேன்” அவன் எந்த தயக்கமுமின்றி அப்படி சொன்னான். என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. குமார் சார் சொன்னது போல கல்லாக இருந்திருக்கலாம். ஒரு நொடி கோபம்.

“டேய், ” என்று கத்திவிட்டேன். 

நான் கொஞ்சம் சுதாரித்து கோபத்தை அடக்கி கொண்டு வீட்டுக்கு சென்றிருக்கலாம். ஆத்திரம் யாரை விட்டது. 

“விட்டா என்ன வேணா பேசுவீயா!” என்று அவன் சட்டையை பிடித்தேன். அவன் என் இடது கன்னத்தில் ஓங்கி குத்தி, கீழே தள்ளினான். அதற்குள் மார்க்கெட்டிலிருந்து சிலர் ஓடிவந்து என்னை தூக்கினார். அவன் என் மீது பாய வந்தான். வயோதிகர்  ஒருவர் இப்ராஹிம் கனியை பிடித்து பின்னால் இழுத்தார்.

“ரஹீமு, அண்ணன் சொல்லிருக்கார்ல, தேவை இல்லாம பிரச்சனைல மாட்டாதனு. சார் நீங்க யாரு சார். போங்க…” என்று அவர் என்னைப்பார்த்து சொன்னார். அங்கு சுற்றி இருக்கும் எல்லோரும் என்னை பார்ப்பது போலவே இருந்தது. நான் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் மார்க்கெட்டைவிட்டு வெளியேறினேன். யாரிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் இப்ராஹிம் கனியை விடக்கூடாது என்று தோன்றியது. நேரடியாக தாம்பரம் காவல் நிலையதிற்கு சென்றேன். 

“சார், அஞ்சு மணிக்கு மேல உங்கள யாரு சார் ரிகவரி போக சொன்னா!” என்று இன்ஸ்பெக்டர் வினவினர். 

“நீங்களா ஏதாவது பண்ண வேண்டியது. அப்பறம் அவன் அடிச்சான் இவன் அடிச்சானு வந்து நிக்க வேண்டியது!”

“சார் நான் ஒரு பேங்க் மேனேஜர். என் டியூட்டிய தான் நான் செஞ்சேன். நீங்க என்னனா பேங்க ஏமாத்துனவனுக்கு போய் சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க” 

“ஐயோ சார். உங்களுக்கு புரிலயா! யோவ் ஏழுமலை கொஞ்சம் எடுத்து சொல்லு” என்று கான்ஸ்டபிளை பார்த்து கத்தினார். கான்ஸ்டபிள் என் தோளில் கை போட்டு, 

“சார் வாங்களேன்…” என்று வெளியே இருந்த டீ கடைக்கு அழைத்து சென்றார்.

“டீ சாப்டுவீங்க இல்ல?”

“அதெல்லாம் வேணாம் சார். என் கம்ப்ளைண்ட்ட எடுங்க முதல! “

“இருங்க சார், தம்பி ரெண்டு டீ…” என்று டீக்கடைகாரனிடம் சொன்னார்.       

“சார் நீங்க படிச்சீருக்கீங்க. கவுரவமான போஸ்ட்ல இருக்கீங்க. ஏன் சின்ன பசங்ககூடலாம் மல்லுக்கட்டிக்கிட்டு. அவன் அரசியல்ல வேற இருக்கான்…”

“என்ன சார் எல்லாரும் அவனுக்கே சப்போர்ட் பண்றீங்க…”

“டீ-ய குடிங்க. சப்போர்ட் பண்ணல சார். அவன் ஒரு குடிகாரன். உங்க கம்ப்ளைண்ட்ட நாங்க எடுத்தோம்னு வைங்க, அவன் ஏதாவது மருந்த குடிக்கிற மாதிரி டிராமா பண்ணிட்டு, பேங்க் மேனஜர் டார்ச்சர் பன்னாரு அதான்  தற்கொலை முயற்சி பண்ணினேனு எங்ககிட்டயே கம்ப்ளைண்ட் கொடுப்பான். இதுமாதிரி எவ்ளோ கம்ப்ளைண்ட் வருது தெரியுமா? அப்பறம் உங்களுக்கு தான் தல வலி… நீங்க அந்த பிராஞ்ச்ல வேலை பாக்க முடியாது. நாலு தடியனுங்க வந்து உங்க பேங்க் முன்னாடி போராட்டம்னு உக்காருவாங்க…”

நான் அவரை அமைதியாக பார்த்தேன். 

“எதுவும் நடக்லனு நினச்சுக்கோங்க சார். நான் மார்க்கெட் பக்கம் போனா அவன்கிட்ட பக்குவாம சொல்றேன், தம்பி பேங்க்கிட்டலாம் வம்பு வச்சுக்காதனு”

நான் அமைதியாக அங்கிருந்து வந்துவிட்டேன். இரவெல்லாம் என் இயலாமை தூங்கவிடாமல் செய்தது. அவன் என்னை அடித்தததை என் வாடிக்கையாளர்கள்  யாராவது பார்த்திருப்பார்களா! அங்கே யாருமில்லை என்று சொல்லி என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். என்ன செய்யலாம்? மேலிடத்தில் சொல்லலாமா? சொன்னாலும் அவர்கள் என்ன செய்துவிட போகிறார்கள்? உண்மையில் சட்டரீதியாக இப்ராஹீம் கனி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதே உண்மை. ஏனெனில் அவன் எங்கள் வங்கியோடு எந்த கடன் ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடவில்லை. வங்கியை பொறுத்தவரை அவன் யாரோ. அவனுக்கும் எனக்குமான பிரச்சனை யாரோ இரண்டு பேருக்கான பிரச்சனையாகவே சட்டதின்முன்பு காட்சியளிக்கும். அது இன்னுமே என் தூக்கத்தை கெடுத்துவிடக் கூடும். 

ஆனால் இன்று மாலைக்குள் நான் ஐந்து கணக்குகளிலும் கிட்டதட்ட ஐம்பதாயிரம் கட்ட வேண்டும். இல்லையேல் ட்ரான்ஸ்பர் ஆர்டர் வாங்கிக்கொள்ள நாளை சர்கிள் ஆபீஸ் செல்ல வேண்டும். “இன்னும் ரெண்டு மாசத்துல சர்க்கில் ஹெட் ட்ரான்ஸ்பர் ஆகிடுவாரு” என்று பாண்டே சொன்ன வார்த்தை காதில் ஒலித்தது.

 என்ன வாழ்க்கை இது!  மனிதனுக்கு பிரச்சனை வர காரணங்கள் இரண்டு. ஒன்று வேலையில் இருப்பது. இன்னொன்று வேலையில்லாமல் இருப்பது என்று எங்கோ படித்திருக்கிறேன். அது என் வாழ்க்கையில் தான் எவ்வளவு உண்மையாகிப் போனது! ஏன் இப்படி அவமானத்தோடும் குழப்பத்தோடும் ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்று எண்ணியபோது தான் ஒரு குரல் கேட்டது. 

“அப்பா எந்திரி… எந்திரி…” 

என் ஆறு வயது மகள் என் காலை பிடித்து இழுத்தாள்.   

“சீக்கிரம் குளிடி ஸ்கூலுக்கு டைம் ஆகுது..” என்றவாறே என் மனைவி என் அறைக்குள் வந்தாள்.

“போ. என்ன அப்பா தான் குளிக்க வைக்கணும்…” என்று என் மகள் கட்டிலில் ஏறி என் நெஞ்சில் படுத்துக் கொண்டாள். நான் அவள் தலையை கோதினேன். 

வாழலாம். எவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்து வாழலாம். படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாவாறே, “உன் ரெட்டைவடம் செயின் என்னாச்சு!” என் மனைவியிடம் கேட்டேன். 

 “பீரோலா தான் இருக்கு!” என்றாள்.

“என் ஸ்கூல் ஃப்ரெண்ட் கோபி இருக்கான்ல, அவங்க அப்பா ட்ரீட்மெண்டுக்கு பணம் கேட்டான். என் கிட்ட இல்லனு சொல்ல முடில. நீ அதை வச்சு ஒரு அம்பதியரம் கோல்ட் லோன் மட்டும் வாங்கிதாயேன். நான் சேலையூர் மேனஜர் கிட்ட பேசுறேன்”

“ஏன் உங்க பிராஞ்ச்ல வைக்க முடியாதா?”

“ரூல்ஸ் படி சொந்தக்காரங்களுக்கு கடன் கொடுக்க கூடாதுனு தெரியாதா…”

“என்ன ரூல்ஸோ! கடன் வாங்கிதான் ஃபிரெண்டுக்கு ஹெல்ப் பண்ணனுமா?”  என்று கேட்டுவிடு அவள் என் பதிலுக்கு காத்திராமல் பீரோ நோக்கி நடந்தாள்.  

“அப்பா நான் ஜோக்கர், நீ பேட்மென்” என்றவாறே என் மகள் என் இடது கன்னத்தில் தன் பிஞ்சு கையை வைத்து குத்தினாள். நான் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். 

***

நன்றி: கணையாழி

பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டியில் (2022) மூன்றாம் பரிசு பெற்ற கதை



Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.