மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்

மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்-ரிச்சர்ட் சிக்கேல்

ரிச்சர்ட் சிக்கேல் மார்ட்டின் ஸ்கோர்செஸியுடன் உரையாடி எழுதிய புத்தகத்தின் ஒரு சிறு பகுதி. 

தமிழாக்கம்: அரவிந்த் சச்சிதானந்தம் 

***

படத்தொகுப்பு

ரிச்சர்ட் சிக்கேல்: உங்களின் ஆரம்பகாலங்களில்  படத்தொகுப்பிலும்  உங்களுடைய பங்களிப்பு இருந்தது என்று அறிவேன். ஆனால்  உங்களுடைய பல  படங்களுக்கு நீங்களே  படத்தொகுப்பு செய்திருக்கிறீர்கள் என்பது. நாம் பேசத் தொடங்கும் வரை எனக்கு தெரியாது.  எப்படி படத்தொகுப்பை கற்றுக் கொண்டீர்கள்? படத்தொகுப்பு செய்து அதை பழகிக் கொண்டீர்களா? 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: இல்லை. நான் படங்களை பார்த்து கற்றுக் கொண்டேன். குறிப்பாக இயக்குனரும் படத்தொகுப்பாளருமான ஐசென்ஸ்டீன் அவர்களின் படங்களிலிருந்து.. 

ரிச்சர்ட் சிக்கேல்: இல்லை இல்லை. நான் கேட்டது எப்படி உத்தியை கற்றீர்கள் என்று. அந்த காலத்தில் மூவியாலாவில் தானே படத்தொகுப்பு செய்வார்கள்? நீங்கள் அதை எப்படி பயின்றீர்கள்?

மார்ட்டின் ஸ்கோர்செஸி: ஆம்! மூவியாலாவில் தான் பயின்றேன். படைச்சுருளில்  பிரேமை பார்க்கும் போதே நான் காதல் வயப்பட்டுவிடுவேன். படச்சுருள், அதில் இருக்கும் துளைகள், சுருளில் ஆங்காகே தெரியும் பட்டொளி (மினுமினுப்பு), இதை எல்லாம் பார்க்கும் போது காதல் வயப்படாமல் எப்படி இருக்க முடியும்!

ரிச்சர்ட் சிக்கேல்: காதல் வயப்படுவீர்களா! என்ன சொல்கிறீர்கள்!

மார்ட்டின் ஸ்கோர்செஸி: நிஜம்தான். இன்றளவும் படச்சுருள்க்களை பார்க்கும் போது காதல் வருகிறது. தெல்மா படத்தொகுப்பு செய்யும் போது நான் கவனிப்பேன். சில பிரீஸ் பிரேம்கள்  (Freeze Frame) பிடித்துப் போகும். சிலநேரங்களில் கேமரா நின்ற பின்பு ஒரு ஷாட்டின் பாதி இமேஜ் மட்டும் பதிவாகி இருக்கும். சிவப்பு, மஞ்சள், வெள்ளை என ஏதோ ஒரு வண்ணம் மட்டும் தெரியும். அல்லது கதாப்பாத்திரத்தின் கண் மட்டும் பதிவாகி இருக்கும். இதையெல்லாம் பார்க்கும் போது நான் தெல்மாவிடம் சொல்வேன், “இதல்லவா அழகான பிரேம்! (Frame)” 

தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் க்ரைஸ்ட் படத்தின்  இறுதி காட்சியில் நான் இதுபோன்றதொரு ஷாட்டை பயன்படுத்தி இருப்பேன். செல்லுலாய்டில் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ஆகும். படச்சுருளின் மீது ஒளி சங்கமிக்கும் போது நிகழும் அற்புத்திற்கு எதுவுமே ஈடில்லை.  அதனால் தான் நான் காதல் வயப்படுகிறேன். 

ரிச்சர்ட் சிக்கேல்:  தெல்மா உங்களோடு பலப்பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றிவருகிறார். அவர் உங்களின் ஆஸ்தான படத்தொகுப்பாளராக இருப்பதற்கு காரணம் என்ன? அப்படி என்ன சிறப்பு தகுதிகள் அவரிடம் இருக்கிறது?

மார்ட்டின் ஸ்கோர்செஸி: அவர் அறுபதுகளின் இறுதியில் இருந்தே என்னோடு பயணிக்கிறார். அவர் முறையாக சினிமா படிப்பு படித்தவர் அல்ல. நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆறு வார சான்றிதழ் படிப்பு படித்திருக்கிறார். பின்னர் கொலம்பியாவிற்கு திரும்பிச்சென்று பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தார் என்று நினைக்கிறன். நாங்கள் எல்லாம் இணைந்து வூட்ஸ்டாக் என்ற ஆவணப் படத்தில் தான் முதன்முதலில் படத்தொகுப்பாளர்களாக பணியாற்றினோம். அறுபதுகளில் வளர்ந்தவர்களுக்கே இருக்கும் திறந்த மனது தெல்மாவிடம் இருக்கிறது.  இன்றளவும் அவர் அப்படிதான் இருக்கிறார். நான் கூட அப்படி இருக்கவில்லை.  கலை, அது நல்லதோ, கெட்டதோ, மோசமானதோ அதை போற்றி பாதுகாப்பது முக்கியம் என்பதே தெல்மாவின் கூற்று. 

நாங்கள் உருவாக்கியது நல்ல படங்களாக இருக்கலாம், மோசமான படங்களாக இருக்கலாம். அவை கால ஓட்டத்தில் காணாமலாகலாம். அல்லது நூறுவருடம் கழித்தும் யாரோ ஒருவர் எங்கள் படங்களை பார்க்கலாம். ஆனால் எங்களுடையது எத்தகைய படங்களாக இருந்தாலும், தெல்மா அவற்றை விட்டுக்கொடுக்க மாட்டார். அவர் ஒரு நல்ல கூட்டாளி.  

நான் கூட சில நேரங்களில் சோர்வடைந்து விடுவேன். ஒரு படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கும் போது பல திசைகளில் இருந்தும் அழுத்தங்களும் கருத்துக்களும் வரும். ஆனால் தெல்மா தடுமாறாமல் சீராக பயணிப்பார்.  மனம் தளராமல் இரு, இதுவும் கடந்து போகும் என்று என்னிடம் சொல்லிக்கொண்டே இருப்பார். ஒரு படத்தின் தூய்மையை மதித்து அது கெடாமல் பார்த்துக்கொள்ளும் மாபெரும் பணியை அவர் செய்துவந்தார். 

நான் ரஷஸ் (Rushes) பார்க்கும் போதுஎப்படி டேக்குகளை (Takes) தேர்ந்தெடுப்பேன் என்பதை தெல்மா நன்றாக அறிந்திருந்தார். உண்மையிலேயே சரியான டேக்கை தேர்ந்தெடுப்பதுதான் மிகவும் கடினமான வேலை. நான் அதை செய்யும் போது தெல்மாவை தவிர வேறு யாரும் உடனிருப்பதை விரும்பமாட்டேன். 

ஆனால் எழுபதுகளில் நியூயார்க் நியூயார்க், ரேஜிங் புல் போன்ற படங்களை உருவாக்கிய போது ராபர்ட் டி நிரோவும் என்னோடு இணைந்து ரஷஸ் பார்ப்பார். எப்போதும் படத்தொகுப்பு அறையில் அவரும் என்னோடு இருப்பார். “இது நல்ல டேக்” என்பார். அவர் அதுபோல சொல்வது என்னை தொந்தரவு செய்யாது. ஏனெனில் எங்களுக்குள் ஆழமான நட்பு இருந்தது. பல நேரங்களில் நானும் பாபும் (ராபர்ட் டி நிரோ)  ஒரே டேக்கை தான் தேர்ந்தெடுப்போம். நாங்கள் அதை வெளிப்படையாக காண்பித்துக் கொள்ள மாட்டோம். நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொண்டிருந்தோம். 

ரிச்சர்ட் சிக்கேல்:  ஆம் நான் அதை அறிவேன். 

மார்ட்டின் ஸ்கோர்செஸி:  எனக்கென்று ஒரு ப்ராசஸ் இருக்கிறது, நான் பல முயற்சிகளுக்கு பிறகே ஒரு காட்சியை இறுதி செய்கிறேன் என்று அவர் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் படத்தொகுப்பில் பங்கேற்பதை நான் ஏற்றேன். மற்றபடி, ‘இந்த காட்சியை நீக்கு!’ ‘இதை மாற்றி எடு’ என்றெல்லாம் அவர் சொல்லியிருந்தால் என்னால் பாபோடு இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது. என்னால் அப்படியெல்லாம் யாருடைய தலையீட்டையும் ஏற்க முடியாது, தெல்மாவின் கருத்துக்களை தவிர. 

தெல்மா படப்பிடிப்பு தளத்திற்கு வரமாட்டார். திரைக்கதையை கூட ஒரே ஒரு முறை தான் படிப்பார். பூட்டேஜ்களை (footage) மட்டும் தான் தினமும் பார்ப்பார். படத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற ரகசியத்தை முதலில் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு மட்டும் தான் இருந்தது. 

ரிச்சர்ட் சிக்கேல்:  கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. 

மார்ட்டின் ஸ்கோர்செஸி:  ஆம். படப்பிடிப்பு தளத்தில் நிகழும் அரசியல்களில் அவர் ஈடுப்பட மாட்டார். ஒரு காட்சியை எடுக்கும் போது யார் எப்படி நடந்து கொண்டார்கள், யார் கோபமாக இருந்தார்கள், யாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதை பற்றியெல்லாம் அவர் தெரிந்து கொள்ள விரும்பமாட்டார். அவரை பொறுத்த வரை காட்சிகள் மட்டும் தான் முக்கியம். நான் கொடுக்கும் அத்தனை டேக்குகளையும் நிதானமாக பார்தது குறிப்புகளை எழுதி தன் கணினியில் ஏற்றிக் கொள்வார். இது மிக நீண்ட ப்ராசஸாக இருக்கும். ஆனாலும் நான் நிதானமாக  காத்திருப்பேன்.எனக்கு முதலில் பிடித்த டேக் எது, அடுத்து பிடித்த டேக் எது என்றெல்லாம் அவர் சரியாக நியாபகம் வைத்திருப்பார். எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக பொருத்தி பார்த்து இறுதியானதை தேர்வு செய்வோம். எந்த டேக் வேண்டும் என்று நான் யோசிக்கும் போது, சரியாக நான் விரும்பிய டேக்கை தேர்ந்தெடுத்து காண்பிப்பார். ஒவ்வொரு டேக் பற்றியும் அவர் சொல்லும் கருத்துக்கள் எனக்கு டேக்கை இறுதி செய்ய பேருதவியாக இருக்கும். 

இந்த டேக்கில் அவர் கண்களை பாருங்கள், அதில் எமோஷன் குறைவாக இருக்கிறது. வேறொரு டேக்கில் இன்னும் சிறப்பான எமோஷன் இருந்ததை நான் கவனித்தேன் என்றெல்லாம் சொல்வார். அவர் சொல்லும் டேக்கை நான் பார்ப்பேன். அதில் பெரிய மாற்றம் இருப்பதாக என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனாலும் அவருடைய தேர்வில் எனக்கு நம்பிக்கை உண்டு. “நீ சொல்லும் டேக்கையை வைத்துக்  கொள்வோம்” என்பேன். எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொண்டே வருவார். 

“நான் காட்சி நாற்பத்தி இரண்டு, மூன்றாவது ஷாட்!” என்று சொன்னால், “இதோ இதில் உங்களுக்கு பிடித்தது பதினோராவது டேக், இதற்கு அடுத்ததாக நீங்கள் விரும்பியது எட்டாவது டேக்” என்று சரியாக அவற்றை எடுத்துக் காண்பிப்பார். 

ரிச்சர்ட் சிக்கேல்:  நீங்கள் சொல்வதை கேட்கும் போது எனக்கு நீங்கள் இயக்கிய அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் விளம்பர படம் நினைவிற்கு வருகிறது. அதில் நீங்கள் கையில் போட்டோக்களை வைத்துக் கொண்டு, “இது சரியில்லை, இது இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்” என்றெல்லாம் சொல்வீர்கள். 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: அது விளம்பரத்திற்காக மிகைப்படுத்தபட்ட காட்சி. நான் அவ்வளவு கடினமாக உண்மையில் நடந்துகொள்ள மாட்டேன். 

ரிச்சர்ட் சிக்கேல்: நான் அதைத்தான் வெளிப்படையாக கேட்கலாம் என்று நினைத்தேன்.

மார்ட்டின் ஸ்கோர்செஸி: படத்தொகுப்பின் போது சிலநேரங்களில் நானும் தெல்மாவும் சந்தோசமாக சிரிப்போம். சில நேரங்களில் பெரும் உளச்சோர்வு வந்துவிடும். “இதோ இந்த காட்சித் தொகுப்பில் கோர்வையே இல்லை. இதை இயக்கிய இயக்குனரை  சுட்டுத் தள்ள வேண்டும்” என்றெல்லாம் கூட என்னைப்பற்றி நானே சொல்லி இருக்கிறேன். அதனால்தான் படத்தொகுப்பு அறைக்குள் நான் யாரையும் அனுமதிப்பதில்லை. அங்கே நான் நானாக இருக்க விரும்புகிறேன். நடிகர்களை பற்றி, அவர்கள் பிரேமில் எப்படி இருக்கிறார்கள் என்பதை பற்றி நான் வெளிப்படையாக எந்த தயக்கமுமின்றி பேசக் கூடியவன். தெல்மா நான் பெரிதும் நம்பும் ஒரு பெண்மணி என்பதால் அவர்முன் பேச எனக்கு எந்த தயக்கமும் இருந்ததில்லை. 

ரிச்சர்ட் சிக்கேல்: அப்படியெனில் தெல்மாவிற்கு எல்லா ரகசியங்களும் தெரியுமா?

மார்ட்டின் ஸ்கோர்செஸி: நிச்சயமாக. அவருக்கு நிறையவே தெரியும். எது எப்படியோ, எவ்வளவு குழப்பங்கள் வந்தாலும் நாங்கள் தேர்ந்தெடுத்த டேக்குகளில் எந்த மாற்றமும் இருக்காது. டேக்குகளை முதலில் தேர்ந்தேடுத்தது  இரண்டாவதாக தேர்ந்தெடுத்தது, மூன்றாவதாக தேர்தெடுத்தது என்று வரிசை படுத்தி வைத்திருப்போம். பெரும்பாலும் இந்த மூன்று தேர்வுகளுக்குள்ளேயே எங்களின் இறுதி முடிவு இருக்கும். 

 ரிச்சர்ட் சிக்கேல்: அதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் உண்டா? 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: அப்படியில்லை. படத்தொகுப்பில் படத்தின் டோன் (tone) மாறிக் கொண்டே வரும். நடிகரின் முக பாவத்தில் ஒரு டேக்கில் சந்தோசம் வெளிப்படும், அதே ஷாட்டின் வேறொரு டேக்கில் சோகம் வெளிப்படும். எனக்கு முன்பு பிடிக்காமல் போன டேக், காட்சிகளை தொகுக்கும் போது அர்த்தமுள்ளதாக தோன்றும். இதையெல்லாம் படத்தொகுப்பின் போதே கண்டுகொள்ள முடியும். தெல்மா எல்லா டேக்குகளையும் நினைவில் வைத்திருப்பார். அவரோடு சேர்ந்து நானும் நினைவில் வைத்துக் கொள்ள பழகிக்கொண்டேன். 

ரிச்சர்ட் சிக்கேல்: உங்களின் ஆரம்பநாட்களில் நீங்களே உங்களின் படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றதைப் பற்றி பேசினோம்.  எந்தெந்த படங்கள்? 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: மீன் ஸ்ட்ரீட்ஸ் படத்தை நானே தான் படத்தொகுப்பு செய்தேன். ஆனால் படத்தில் பெயர் வராது. ஏனெனில் நான் அப்போது சங்கத்தில் உறுப்பினராகவில்லை. மார்டி ரிட் படங்களின் படத்தொகுப்பாளரான சித் லெவின் அவர் பெயரை படத்தொகுப்பாளராக போட்டுக்கொள்ள அனுமதி தந்தார். 

நான் பின்னர் ஜார்ஜ் லூகாஸின் மனைவியான மாசியா லுகாஸோடு பணியாற்றினேன். Alice Doesn’t Live Here Anymore, Taxi Driver மற்றும் Newyork Newyork போன்ற படங்களை படத்தொகுப்பு செய்தது மாசியா லுகாஸ் தான். டாக்சி ட்ரைவர் படத்தின் சில காட்சிகளை டாம் ரோல்ப்பும் படத்தொகுப்பு செய்து கொடுத்தார். “Are you talking to me?”  என்கிற மிகப் பிரபலமான அந்த காட்சியை படத்தொகுப்பு செய்தது அவர்தான். அவர் ஒரு மாஸ்டர். அவர் தொகுத்த காட்சிகளில் எனக்கு எந்த மாற்றத்தையும் சொல்ல தோன்றவில்லை.

வூட்ஸ்டாக்கில் என்னோடு பணியாற்றிய யு-புன் யீ தான், ஜான் ராப்லியுடன் இணைந்தது ‘The Last Waltz’ படத்தை படத்தொகுப்பு செய்து கொடுத்தார். கிட்டத்தட்ட இரண்டுவருடங்கள் படத்தொகுப்பு நடந்தது. அதன் பின் ரேஜிங் புல் படத்திற்காக நான் தெல்மாவை அணுகினேன். ஏனெனில் அப்போது மார்சியா லூகாஸ் படத்தொகுப்பு செய்வதை நிறுத்திக் கொண்டிருந்தார். தெல்மாவோடு எனக்கு பெரிய நட்பு அப்போது இருந்திருக்கவில்லை. நாங்கள் சந்தித்தே பத்து ஆண்டுகளுக்கு மேலாகி இருந்தது. அவர் பிட்ஸ்பேர்க்கில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.  ‘The Last Waltz’ படத்தின் படத்தொகுப்பு வேலைகள் நடந்துக் கொண்டிருந்த போது, அவர் ஓரிரு முறை வந்து தன் கருத்துக்களை சொன்னார் என்று நினைக்கிறேன். அப்போது தான் அவரிடம் ‘Raging Bull’ படத்தைப் பற்றி சொன்னேன். அதை படத்தொகுப்பு செய்துத்தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நான் தயாரிப்பாளர் இர்வின் விங்க்லரிடமும் தெல்மா பற்றி சொன்னேன். அப்போது தெல்மா சங்கத்தில் உறுப்பினராகி இருக்கவில்லை. படம் கிட்டத்தட்ட இறுதி வடிவத்தை எட்டிய போது தான் தெல்மா சங்கத்தில் உறுப்பினரானார். அதன் பின் என்னிடமிருந்து பிரிக்கமுடியாத  நிறந்தர கூட்டாளி ஆகிவிட்டார். 

அப்போது இயங்கிய படத்தொகுப்பாளர் எவரும் நான் படத்தொகுப்பு அறைக்குள் நுழைவதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய முறையை நான் மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அதனாலேயே  நான் எனக்கான படத்தொகுப்பாளரை தேர்ந்தெடுத்தேன். தெல்மா என்னை பற்றி முழுவதுமாக அறிந்திருந்தார். நாங்கள் உருவாக்கிய படங்களின் மீது அவர் கொண்டிருந்த விஸ்வாசம் தான் எங்களை தொடர்ந்து பயணிக்க வைத்தது. 

ரிச்சர்ட் சிக்கேல்: நீங்க விஸ்வாசம் என்று குறிப்பிடுவது எனக்கு ஆச்சர்யத்தை தருகிறது. 

மார்ட்டின் ஸ்கோர்செஸி: நிஜம் தான். ஒரு படைப்பின் மீது நாம் கொண்டிருக்கும் விஸ்வாசம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. சிலர் இதை ஐடியா என்பார்கள். சிலர் இதை விஷன் (vision) என்பார்கள்.ஒரு படத்தை உருவாக்குவது மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. எல்லாவற்றையும் சமாளிப்பதற்குள் நாம் பொறுமை இழந்து விடுகிறோம். ஆனால் தெல்மா என் கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டார். யார் எத்தகைய மாற்றங்களை சொன்னாலும், இறுதி வடிவம் நான் விரும்புவது போல் தான் இருக்கும். சில படத்தொகுப்பாளர் எனக்கு தெரியாமலேயே சிறுசிறு மாற்றங்களை செய்துவிடுவார்கள். “இல்லை, இது நான் இறுதி செய்தது  இல்லை” என்று நான் சொல்வேன். “நீங்கள் இதை கண்டுபிடிக்க மாடீர்கள் என்று நினைத்தேன்” என்று அசடு வழிவார்கள். இதையெல்லாம் தவிர்க்கவே நான் நம்பிக்கைக்குரிய ஒரு படத்தொகுப்பாளரோடு பணியாற்ற விரும்பினேன். தெல்மா தான் அது. தெல்மாவும் நானும் படத்தொகுப்பு அறையில் பணியாற்றும் நேரம் தான் என் சினிமா வாழ்வின் தலைசிறந்த அதே சமயத்தில் கடினமான நேரம் என்பேன். 

ரிச்சர்ட் சிக்கேல்: தெல்மா இந்த புத்தக பணியை பற்றி அறிந்து என்னிடம் கேட்டார். “நீங்களும் மார்ட்டியும் எப்படி உரையாடுகிறீர்கள்” என்று. நான் சொன்னேன், “நாங்கள் நேரம் போறதே தெரியாமல் நள்ளிரவு வரை கூட உரையாடிக் கொண்டே இருப்போம்” என்று. “நாங்களும் அப்படித்தான் நேரம் போறதே தெரியாமல்  விடியவிடிய படத்தொகுப்பு செய்து கொண்டு இருப்போம்” என்றார் அவர்.

மார்ட்டின் ஸ்கோர்செஸி: உண்மைதான். நாங்கள் எங்கள் வேலையை பெரிதும் நேசித்தோம். பெரும்பாலும் இரவில் படத்தொகுப்பு செய்வதையே நாங்கள் விரும்பினோம். ரேஜிங் புல் திரைப்படம் முழுக்க முழுக்க இரவிலேயே படத்தொகுப்பு செய்யப்பட்டது. ஏனெனில் அப்போது தான் எங்களுக்கு எந்த தொலைபேசி அழைப்புகளும் வராது. வேறு யாரும் எங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். அதன் பின் உருவாக்கிய கிங் ஆப் காமெடியும் அப்படிதான். அந்தகாலகத்ததில் தான் எனக்கும் தெல்மாவிற்குமிடையே படத்தொகுப்பில் ஒத்திசைவு பிறந்தது. சினிமா உருவாக்கத்தில் இன்றளவும், எனக்கு அதிக நிறைவுதரக் கூடிய விஷயம் படத்தொகுப்பாவே இருக்கிறது. 

*** 

Excerpts from Conversations with Scorsese by Richard Schickel