அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சி தொடர்களை இரண்டு முக்கிய காரணங்களுக்காக பார்க்கலாம். ஒன்று, அவை அனைத்தும் முழு நீள படங்களுக்கு இணையான தரத்தில், மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் படங்களை விட தொலைக்காட்சி தொடர்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.
இரண்டு, அத்தகைய தொடர்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் திரைக்கதை உத்திகளை புரிந்து கொள்ளலாம். சினிமா திரைக்கதைகளை விட தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதைகளுக்கு அதிக உழைப்பு தேவை. கதையை சுவாரஸ்யமான இடத்தில் முடித்தால் தான், மீண்டும் அடுத்த வாரம் பார்வையாளர்கள் தொடரை பார்ப்பார்கள். சில நேரங்களில் எங்கே விளம்பர இடைவேளை விடவேண்டும் என்பதை கூட எழுத வேண்டும். அதனால் திரைக்கதையின் நுணுக்கங்களையும், திரைக்கதையின் டைமிங்கில் இருக்கவேண்டிய precision-ஐயும் புரிந்து கொள்ளலாம்.
ஏராளமான சிறப்பான தொலைக்காட்சி தொடர்கள் இருந்தாலும், சில பிரத்தியேகமான காராணங்களுக்காக ப்ரிசன் ப்ரேக் (Prison Break) ஒரு முக்கியமானதொரு தொலைக்காட்சி தொடர். அந்த காரணங்களை பற்றி பேசுவதற்கு முன், ப்ரிசன் ப்ரேக் முதல் சீஸனின் கதையை பார்த்துவிடுவோம்.
மைக்கேல் ஸ்கோஃபீல்ட் ஒரு ஸ்ட்ரக்சரல் இஞ்சீனியர். அதி புத்திசாலி. செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை பெற்று சிறையில் வாடும் தன் அண்ணன் லிங்கனை காப்பாற்ற முடிவு செய்கிறான். வேண்டுமென்றே ஒரு பேங்கை கொள்ளை அடித்து போலீசில் சிக்கிக் கொள்கிறான். அவன் எதிர்பார்த்ததை போல் அவனை ஃபாக்ஸ் ரிவர் (Fox River) சிறையில் அடைக்கிறார்கள். அங்கு தான் அவனுடைய அண்ணனும் அடைக்கப்பட்டிருக்கிறான். அதிக பாதுகாப்பு நிறைந்த சிறை அது. இன்னும் சில வாரங்களில் அவனுடைய அண்ணனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும். அதற்க்குள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். எப்படி தப்பிப்பது? அதற்கொரு எஸ்கேப் பிளான் வேண்டுமே ! அதுவும் தயார். ஒட்டுமொத்த சிறையின் ப்ளூ பிரிண்ட்டையும் தன் உடம்பில் டாட்டூவாக வரைந்து வைத்திருக்கிறான் ஸ்கோஃபீல்ட். சிறையிலிருந்து தப்பித்ததும் என்ன செய்வது அதையும் உடம்பில் வரைந்து வைத்திருக்கிறான். சிறையிலிருந்து வெளியேறியதும் அந்த ஊரை விட்டு வேகமாக வெளியேற விமானம் தேவை. அதற்க்கும் ஐடியா தயார்.
சிறையில் ஜான் ஆப்ரூசி என்ற மிகப்பெரிய ஒரு டான் இருக்கிறான். அவனுடைய குடுமி ஸ்கோஃபீல்டின் கையில். அவன் விமானத்தை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொள்கிறான். இப்போது தப்பிக்க வேண்டும். ஸ்கோஃபீல்ட் தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்குகிறான். ஆனால் அவன் திட்டம் வெளியே பல கைதிகளுக்கு தெரிய வருகிறது. ஒவ்வொருவரும் தங்களையும் தப்பிக்க வைக்க வேண்டும், இல்லையேல் திட்டத்தை வெளியே போட்டு உடைத்துவிடுவோம் என்று ஸ்கோஃபீல்டை மிரட்ட, ஸ்கோஃபீல்ட் அனைவரையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இதற்கிடையில் ஸ்கோஃபீல்டை சிறை டாக்டர் சாரா காதலிக்கிறாள். அவன் தப்பிக்க உதவி செய்கிறாள். ஸ்கோஃபீல்டுடன் சேர்ந்து எட்டு கைதிகள் தப்பிக்கிறார்கள் (எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே திரைக்கதை).
சிறைக்கு உள்ளே இந்த கதை நகர்ந்து கொண்டிருக்க, சிறைக்கு வெளியே லிங்கனின் முன்னாள் காதலி வெரோனிக்க லிங்கனை சட்டப்பூர்வமாக காப்பாற்ற முயற்சி செய்கிறாள். அவள் ஒரு வக்கீல். “தி கம்பனி” என்று அழைக்கப்படும், நிழல் உலக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுதான் லிங்கனை திட்டமிட்டு சிக்க வைத்திருக்கிறது என்று கண்டு கொள்ளும் அவள் கம்பெனிக்கெதிராக ஆதாரங்களை திரட்டுகிறாள். அவளை கம்பெனியின் ஆட்கள் துரத்துகிறார்கள். சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்டையும், அவன் அண்ணனையும் ஒருபுறம் போலீஸ் அதிகாரிகள் துரத்துகிறார்கள். இன்னொருபுறம் கம்பெனி அதிகாரிகள் துரத்துகிறார்கள். அடுத்து என்னவாக போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி முதல் சீஸனை முடிக்கிறார்கள்.
அமெரிக்க திரைக்கதைகள் பெரும்பாலும் three act (sometimes four or five act) structure-ஐ பின்பற்றி எழுதப்படுபவை. ஆனால் நம்மூரில் திரைக்கதைகள் பெரும்பாலும் உள்ளுணர்விலேயே எழுதப்படுகின்றன. கதையின் ஃப்லோவை எழுதிவிட்டு, பின் காட்சிகளை மட்டும் எழுதிவிட்டு, பின்பு ஒவ்வொரு காட்சியையும் இம்ப்ரூவைஸ் செய்பவர்களே இங்கு அதிகம். அப்படி செய்யும் போது திரைக்கதை தன்னாலேயே எவால்வ் ஆகும். அதனால் ஹாலிவுட் ஸ்டாண்டர்ட்களை பின்பற்றினால் மட்டுமே நல்ல திரைக்கதைகளை உருவாக்கமுடியும் என்று சொல்லமுடியாது. சொல்ல கூடாது. திரைக்கதை எழுத யுனிவர்சல் ரூல் என்று எதுவும் கிடையாது. நமக்கு எது கைகூடுகிறதோ அதுவே சிறந்த வழி. ஆனால், குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி திரைக்கதை எழுதினாலும், உள்ளுணர்வில் எழுதினாலும், உலகின் எல்லா மெயின்ஸ்ட்ரீம் கதைகளுக்குமே ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. அது தான் ‘conflict’. அதாவது பிரச்சனை (முரண்பாடு). ஒரு கதாபாத்த்திரம் இருக்கிறதேனில் அந்த கதாப்பாத்த்திரத்திற்கு ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும். அதற்கு தீர்வுகாண அந்த கதாப்பாத்திரம் போராட வேண்டும். அந்த பிரச்சனை அகம் சாரந்ததாக (internal conflict) இருக்கலாம். புறச்சூழல் சாரந்ததாக இருக்கலாம் (external conflict). நாவல், திரைக்கதை என எல்லா மீடியம்களிலும் இந்த conflict இருக்க வேண்டும். அந்த conflict இல்லையேல் கதை இல்லை. கதையே இல்லாமல் படம் எடுத்தாலும் அந்த conflict இருக்க வேண்டும். (தமிழில் மூலகதாப்பாத்திரத்தின் அகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி நிறைய நாவல்கள் இருக்கின்றன. அசுரகணம், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் அப்படிபட்ட திரைக்கதைகள் இல்லை. தமிழ் திரைக்கதைகளில் முக்கிய கதாப்பாத்திரத்தின் எக்ஸ்டர்னல் கான்ஃப்லிக்ட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கும்) அந்த conflict சுவாரஸ்யமானதாக இருக்கும்போது திரைக்கதையின் சுவாரஸ்யமும் அதிகமாகிறது. ப்ரிசன் ப்ரேக்கில் ஒவ்வொரு முக்கியகதாபாத்திரத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான பிரச்சனை இருக்கிறது.
சுக்ரே என்றொரு கைதி கதப்பாத்திரம்.. இன்னும் சில மாதங்கள் பொறுத்தால், அவனுக்கு சட்டப்பூர்வமாக விடுதலை கிடைத்துவிடும். தப்பிக்க முயற்சி செய்து சிக்கினால், வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் கழிக்க வேண்டியதுதான். அதனால் அவனுக்கு தப்பிப்பதில் விருப்பம் இல்லை. ஸ்கோஃபீல்ட் தன்னுடன் இணைந்து கொள்ள வாய்ப்பளித்தும் அவன் அதை ஏற்க மறுக்கிறான். ஆனால் திடீரென்று அவனுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவனுடைய காதலிக்கு திருமணம் என்ற செய்தி கிடைக்கிறது.. தன் காதலியின் திருமணத்தை நிறுத்த வேண்டுமெனில் அவன் ஜெயிலிருந்து தப்பிக்க வேண்டும். அவன் வேறுவழியின்றி ஸ்கோஃபீல்ட்டுடன் இணைந்து தப்பிக்க முடிவு செய்கிறான்.
டீ பேக் என்றொரு ஆயுள் கைதி கதாபாத்திரம். அவனுக்கு தன்னுடைய முன்னாள் காதலியை கொலை செய்ய வேண்டும். அதற்கு வெளியே செல்ல வேண்டும். இது அவனுடைய பிரச்சனை.
எப்படி குழப்பமில்லாமல் பல முக்கிய கதாபாத்திரங்களை கையாலாவது என்பதை பற்றியும், எப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான conflict-ஐ உருவாக்குவது என்பதை பற்றியும் இக்கதையிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பேக் ஸ்டோரி இருக்கிறது. சிறையின் ப்ளூ பிரிண்ட் ஸ்கோஃபீல்டிடம் எப்படி கிடைத்தது என எல்லாவற்றிற்க்கும் ஒரு கிளை கதை இருக்கிறது. கதையின் ஓட்டத்தை நிறுத்தாமல், எப்படி இவற்றை சாத்தியப்படுத்துவது என்பதையும் இங்கே புரிந்து கொள்ளலாம்.
கதையில் ஏராளமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதுவும் வராதது ப்ரிசன் ப்ரேக்கின் மிகப்பெரிய பலம். பொதுவாக, கதையை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்தை திடீரென்று அறிமுகம் செய்வது நியாயமாகாது. அதேபோல் கதையை வளர்க்க வேண்டும் என்பதற்க்காக, கதாபாத்திரங்களை திணிக்க கூடாது. ஆனால் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்த எங்குவேண்டுமானாலும் கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தலாம். அப்படி செய்யும் போது திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக உருவாகிடும். இங்கே திருப்புனை கதாப்பாத்திரங்கள் நிறைய வந்த கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. அதில் சில முக்கிய கதாபாத்திரங்களை பற்றியும், அதன் transformation பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…
P.S: திரைக்கதை ஸ்ட்ரக்சருக்கும் ஃபார்மட்டிங்கிற்கும் (formatting) வித்தியாசம் இருக்கிறது. ஹாலிவுட் ஸ்ட்ரக்சரை பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் Screen writing software-களை பயன்படுத்தி ஃபார்மட்டிங் செய்யும் போது, ஒரு திரைக்கதையின் தோரயமான ஸ்கிரீன் டைமிங் என்ன என்பதை எளிதில் கண்டு கொள்ள முடியும். எளிதாக Script break down செய்ய முடியும். இது ப்ரொடக்ஷன் செலவுகளை குறைக்க உதவும்.
அடுத்த பாகத்தை இங்கே படிக்கலாம்
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2