Novels into films- John C. Tibbetts &  James M Welsh

Excerpt from ‘Encylopedia of Novels into films’- John C. Tibbetts &  James M Welsh
தமிழில். அரவிந்த் சச்சிதானந்தம்
நன்றி- நிழல்

பகுதி 1

தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய் (குவாய் நதியின் மீது கட்டப்பட்ட பாலம் (1952)) -பியர் போல்லே

இயக்கம்: டேவிட் லீன். திரைக்கதையாக்கம்: மைக்கல் வில்சன் மற்றும் கார்ல் போர்மேன்

நாவல்

இரண்டாம் உலகப் போரின் போது, கர்னல் நிக்கல்சன் தலைமையிலான ஆங்கிலேயே ராணுவ வீரர்கள், ஜப்பான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஜப்பானிய கைதிகள் முகாமிற்கு அனுப்பப்படுகிறார்கள்  ஜப்பானின் கர்னல் சைட்டோ, அதிகாரிகள் உட்பட அனைத்து ஆங்கிலேய வீரர்களும் குவாய் பாலத்தின் கட்டுமான பணியில் ஈடுபடவேண்டும்  என்று சொல்கிறார்.

நிக்கல்சன் அதை ஏற்க மறுக்கிறார். ஆங்கிலேய படையினரை ராணுவவீரர்களாக நடத்த வேண்டுமே ஒழிய அடிமைகளாக அல்ல என்று வாதிடுகிறார். ஒரு கட்டத்தில் சைட்டோ நிக்கல்சனின் மனதை மாற்ற, ஆங்கிலேயே வீரர்கள் ஒன்றிணைந்து பாலத்தை வடிவமைக்கத் தொடங்குகிறார்கள். ஆனால் போர்ஸ் 316 (FORCE 316) பிரிவை சேர்ந்த ஆங்கிலேயே வீரர்கள் அந்தப் பாலத்தை தகர்க்க வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே அவர்கள் தொடர்ந்து பாலத்தைக் கட்டுகிறார்கள். இறுதியில், 316 பிரிவை சேர்ந்த வீரர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். நிக்கல்சனும் சைட்டோவும் கூட மாண்டுபோகிறார்கள். இந்நாவலின் ஆசிரியர் பியர் போல்லே விஞ்ஞான புனைவிற்கு பெயர் போனவர். பிளானட் ஆப் தி ஏப்ஸ் உட்பட மேலும் சில நாவல்களை எழுதியிருக்கிறார்.

the-encyclopedia-of-novels-into-film-original-imaeah7cwyhya6mm

திரைப்படம்

ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்த படத்தில், நிக்கல்சன் பாத்திரத்தில் அலெக் கின்னஸ் நடித்திருந்தார். சைட்டோவாக செஸ்யூ ஹயகவா நடித்திருந்தார். பிரெஞ்சு நாவலாசிரியரான போல்லே ஆங்கிலம் அறியாதவர். அதனால் படத்தின் தயாரிப்பாளர் சாம் ஸ்பீகலுடன் இணைந்து,  எழுத்தாளர்கள் கார் போர்மேனும், மைக்கேல் வில்சனும் திரைக்கதையாக்கத்தை மேற்ப்பார்வையிட்டனர்.

இது ஹாலிவுட் வகைப் படமாக உருவாக்கப்பட்டிருந்தாலும், எழுத்தாளர்களின் பங்களிப்பு இதை சிறந்த படமாக்கியது.  நாவலுக்கும் படத்திற்கும் இருக்கும் மிக பெரிய வித்தியசம் அதிகாரி சியர்ஸ் பாத்திரம். நாவலில், மிகுந்த அர்பணிப்பு கொண்ட ராணுவ அதிகாரியாக வரும் அவர், படத்தில்  சோர்வுற்ற மனிதராக வலம் வருகிறார். ஒரு காட்சியில், அழகான செவிலியப்  பெண்ணிடம் “நான் மனதளவில் குடியானவன்” என்று கூட சொல்கிறார். நாவலில் இந்த காட்சி இடம்பெற்றிருக்கவில்லை. அமெரிக்க கதாபாத்திரமான சியர்ஸ் பாத்திரத்தில் நடித்தவர் அமெரிக்க நடிகரான வில்லியம் ஹோல்டன். அந்தப் பாத்திரத்தின் அமெரிக்கத்தன்மை, அந்த மொத்த படத்தின் பிரிட்டிஷ் நெடியை குறைத்துக் காட்ட உதவியதாக டேவிட் லீன் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.  ஹோல்டன், தான் நடித்த ‘பிக்னிக்’ படத்தைப் போலவே, இதிலும் பெரும்பாலும் சட்டை இல்லாமலேயே நடித்திருந்தார். பிக்னிக் வழக்கத்திற்கு மாறான நல்லப் படம் என்பது டேவிட் லீனின் கருத்து.

படத்தின் இறுதிக் காட்சி, நாவலில் வருவது போல் அல்லாமல் சற்றே மாற்றியமைக்கப்பட்டிருந்த விதம் படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. படத்தில் நிக்கல்சன் டெட்டோனேட்டர் மீது தவறி விழுந்து, பாலத்தை வெடிக்க வைத்துவிடுவார். பாலம் முழுவதுமாக தகர்ந்து, அதில் வரும் ரயில் நதியில் விழுந்துவிடும். மேலும், படத்தில் நெற்றி பொட்டில் அறைந்தது போல் ஒரு காட்சி உண்டு. அந்த தலைசிறந்த பாலம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்பதை உலகிற்கு பறைச்சாற்றும் வகையில் நிக்கல்சன் அங்கே வைத்த பெயர் பலகை இறுதியில் ஆற்றில் இடிந்த துகல்களோடு மிதக்கும் அந்த காட்சி, ஆங்கிலேயரின் சுய பெருமையை எள்ளி நகையாடியது என்றே சொல்ல வேண்டும்.

கதையில் இத்தகைய மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தபோதும்,  படம் மிகவும் சிறப்பாகவே இருந்தது. இதில்  கின்னஸ் அசாத்தியமாக நடித்திருந்தார். ஹாலிவுட்டின் சம்ப்ரதாயமான விசயங்கள் படத்தில் இடம்பெற்றிருந்தாலும்,  நாவலிலிருந்து சில காட்சிகள் நேரடியாக படமாக்கப்பட்டிருந்தன. ஒரே இரவில், ஆற்றின் நீர்மட்டம் குறைந்துவிட வெடி பொருட்களின் வயர்கள் வெளியே தெரியத் தொடங்கும். இதை எதிர்பார்த்திராத போர்ஸ் 316 குழுவினர், ஒவ்வொருவராக பதற்றத்துடன் ஆற்றை கவனிப்பார்கள். நாவலின் இந்த காட்சி எந்த மாற்றமுமின்றி படத்தில் இடம்பெற்றிருக்கும். இதுபோன்ற சஸ்பென்ஸான காட்சிகளோடு, ஹாலிவுட்டின் தலைசிறந்த சாகசப் படமாக திகழும், ‘தி பிரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்’, சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குனர (அலெக் கின்னஸ்), சிறந்த தழுவல் திரைக்கதை ஆகியப் பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

REFERENCES

Maltin, Leonard, Leonard Maltin’s Movie and Video Guide (Signet,

1995); Thompson, Howard, “Lean Views From a New ‘Bridge’,” New

York Times, December 15, 1957

 

பகுதி 2

தி இங்கிலிஷ் பேசண்ட் – மைக்கல் ஒண்டாச்சி

தி இங்கிலிஷ் பேசண்ட் (1996)- U.S.A., திரைப்படம். திரைக்கதையாக்கம், இயக்கம் அந்தோணி மிங்கெல்லா; மிராமேக்ஸ் பிலிம்ஸ்.

நாவல்

டச்சு பர்கர் வம்சாவளியை சேர்ந்த நாவலாசிரியர் மைக்கல் ஒண்டாச்சி 1943 ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். புக்கர் பரிசு வென்ற அவருடைய இந்த நாவலின் தலைப்பு மட்டும் தான் ‘இங்கிலீஷ் பேசண்ட்’. ஆனால் இதன்  பிரதான கதாப்பாத்திரமான அந்த நோயாளி ஹங்காரி நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் (கார்டோகிராபர்). அவர் பெயர், கவுண்ட் லாஸ்லோ டி அல்மசி. இரண்டாம் உலகப் போரின் முடிவில், இத்தாலியில், உடல் முழுதும் தீக்காயங்களுடன், கண்டெடுக்கப்படும் அவரை ஒரு பிரெஞ்ச்-கெனடிய செவிலியர் அன்பாக பார்த்துக் கொள்கிறாள். அம்னிசீயா நோயாளியான  அல்மசி தனக்கு விபத்து நிகழ்வதற்கு முன்பான வாழ்கையை நினைவுக்கூறத் தொடங்குவதே கதையின் தொடக்கம்.

நாவலில் வெறும் கற்பனை பாத்திரமாக வரும் இந்த நோயாளி கதாப்பாத்திரம், முதலில் நாஜி ஒற்றனாக இருந்து பின்பு ஜெர்மன்- ஆப்ரிக்க படையின்  பீல்ட் மார்ஷல் எர்வின் ரோமலின் உதவியாளராக உயர்ந்த ஒரு நிஜ மனிதனின் வாழ்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்பதை ஆர்வலர் எலிசபெத் சாலேட்   வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் பின்னாளில் (டிசம்பர் 4 1996) கட்டுரையாக எழுதினார் என்பது கூடுதல் தகவல்.

நாவலில் சித்தரிக்கப்பட்டதைவிட, அந்தோணி மிங்கெல்லாவின் படத்தில், அந்த நாஜி அனுதாபி  மிகவும் நல்லவனாக, ஹீரோவாக சித்தரிக்கப்பட்டிருப்பான். அவன் வடஆப்ரிக்காவில் கேத்தரின் கிளிப்டன் என்ற பெண்ணை சந்திக்கிறான். அவள் மீது காதல் கொள்கிறான். அவளைக் காப்பாற்றுவதற்காகவே அவன் நாஜி படையோடு இணைகிறான் என்பதுபோல் படத்தின் கதையை நகர்த்தியிருப்பார் மிங்கெல்லா.

டஸ்கன் பிராந்தியத்தில், ஒரு பழைய விடுதியின் மெத்தையில் மரணத்தின் விளிம்பில் இருக்கும் அந்த ஆங்கிலேய நோயாளி, தான் வட அமெரிக்காவில் ராயல் புவியியல் சமுகத்தில் வேலை செய்தது, 1938-ஆண்டு கைரோவில் ஒரு கிறிஸ்த்துமஸ் கொண்டதத்தில் கிளிப்டனை சந்தித்தது என  தன்னுடைய கடந்தகாலத்தை கொஞ்சம்கொஞ்சமாக நினைத்துப் பார்க்கிறான். இரண்டாம் உலகப் போர் அவன் காதலுக்கு வில்லனாக வந்துவிடுகிறது. அந்த போரால், கேத்தரின் கிளிப்டன், அவள் கணவன் ஜாப்ரி மற்றும் அல்மாசி ஆகிய மூவரும் சோகமயமான முடிவைத் தழுவுகின்றனர்.

ஒண்டாச்சியின் நான் லீனியர் கதை, இரண்டு கண்டங்களைக் கடந்து, ஒருவன் வாழ்க்கையின் ஏழு ஆண்டுகளைப் பற்றி பேசுகிறது. ஆரம்பத்தில் அல்மசி அடையாளம் தெரியாத நோயாளியாக அறிமுகமாகிறான். அவனை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கெனடிய செவிலியரான ஹானா ஏற்றுக் கொள்கிறாள். போரின் அதிர்ச்சியில் சிக்கித் தவிக்கும் பாத்திரமாக அந்த செவியிலிய பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அல்மசி மயக்கமருந்தின் தாக்கத்தில் அவனை அறியாமேலேயே உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தும், அவன்  வைத்திருக்கும் ‘ஹிஸ்டரீஸ் ஆப் ஹெரோடட்டஸ்’ புத்தகத்தில் அவன் எழுதிவைத்திருந்த நினைவு குறிப்புகளிலிருந்தும், அவனுடைய கடந்தகாலத்தை அவள் கண்டுகொள்கிறாள்.

“நான் பாலைவனத்தில் எரிந்து விழுந்தேன்” என்பதை மட்டும் அல்மசியால் ஹானாவிடம் சொல்லமுடிகிறது. அவனால் பிக்னிக்ஸ் என்ற பெண்ணையும் அவள் அவனுக்கு தந்த முத்தத்தையும் நினைவு கூற முடிகிறது. அவளும் எரிந்து கரிகட்டையாக போனாள் என்று சொல்கிறான். ஆனால் அவனுடைய நினைவுகள் முழுமையற்று ஒன்றோடொன்று தொடர்பற்று இருக்கிறது.

ஹானாவும், அல்மசியும் மட்டும் இருக்கும் அந்த இடத்திற்கு கராவாக்கியோ என்கிற திருடனும், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரியும் வெடிகுண்டு நிபுணருமான கிப் என்கிற சீக்கிய இளைஞனும் வருகின்றனர்.   ஹானாவிற்கும் கிப்பிற்க்கும் இருக்கும் காதலே நாவலின் பிரதானப் புள்ளியாக இருக்கும். ஹானாவின் நோயாளியாக அல்மசி அறிமுகமான பின், அவன் தன் காதலியை நினைவுக் கூறும் தருணம் நாவலின் மூன்றில் ஒரு பகுதி கடந்த பின்னரே வரும்.

திரைப்படம்

நாவலின் முக்கிய புள்ளிகளை பின்தள்ளிவிட்டு, அல்மசி மாற்றான் மனைவி மீது கொண்ட காதலையும், அவனுடைய சாகசங்களையும் பிரதானமாக கொண்டு கதையை நகர்த்தியிருப்பார் இயக்குனர். ரால்ப் பீன்ஸ் அல்மசியாகவும், கிறிஸ்டின் ஸ்காட் கேத்தரினாகவும் நடித்திருப்பார்கள்.

ஹானா (ஜூலியட் பினோக்கி), கிப் (நவீன் ஆண்ட்ருஸ்) மற்றும் திருடன் கராவாக்கியோ (வில்லம் டாபோ) ஆகியோரைப் பற்றிய கிளைக் கதை நாவலில் விலாவரியாக இருக்கும். நாவலில், திருடன் பாத்திரம் அந்த நோயாளி உண்மையிலேயே ஆங்கிலேயன்தானா என்று சந்தேகிக்கும் வகையில் காட்சிகள் இருக்கும். மேலும் நாவலின் இறுதியில், கிப் அந்த ஊரை விட்டு புறப்படும் காட்சிகள் விவரிக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவர்களின் கதை பெரிதும் சுருக்கப்பட்டு முழுமையற்று இருந்தது. ஆனாலும், நாவலைப் போல படத்திலும் அவர்களின் கதை மூலப் பாத்திரமான நோயாளியின் காதல் கதையை சொல்வதற்கு பெரிதும் பயன்பட்டது. படத்திலும், அவர்களின் கதை 1945 ஆம் ஆண்டு நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. பின் அங்கிருந்து அந்த நோயாளியை பற்றிய கதைக்குள் படம் பயனிக்கிறது. இங்கே பிளாஷ்பேக் காட்சிகள் லீனியராக அமைக்கப்பட்டிருந்தன. வெளிநாட்டில் யுத்தப் பின்னணியில் புனையப்பட்ட காதல் கதை, அங்கே வெளிப்படும் துரோகம், அதன் விளைவுகள் என கதை நேர்கோட்டில் எல்லோருக்கும் புரியும் வகையில் நகர்த்தப்பட்டிருக்கும்.

படத்தின் ஆரம்பத்திலேயே அல்மசி பாத்திரத்தை நாவலிலிருந்து பெரிதும் மிகைப்படுத்தி நல்லவனாக காண்பித்திருப்பார்கள். இதுதான் எலிசபெத் சாலேட்டை கோபம் கொள்ள வைத்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. எலிசபெத் சாலேட்ட்டின் தந்தை அலெக்சாண்ட்ரியாவில் ஹங்கேரி நாட்டு தூதரக அதிகாரியாக பணியாற்றியவர். அவரின் உயிருக்கு, நாஜி ஒற்றனான நிஜ அல்மசி ஆபத்தை விளைவித்திருந்ததுதான் அவரின் கோபத்திற்கு காரணம்.

மைக்கேல் ஒண்டாச்சியின் அல்மசி நாவலின் போக்கில் வித்தியாசமாக சற்றே தெளிவற்ற பாத்திரமாக உருவெடுத்திருப்பான். ஏனெனில் அது நிஜ அல்மசியைப் பற்றிய கதையன்று. ஒண்டாச்சி கற்பனை விசயங்களைக் கொண்டே கதையை கட்டமைத்திருப்பார். இயக்குனரும் அப்படிதான் செய்திருப்பார். ஆனால் அவரது அல்மசி அவரது கற்பனையை பிரதிபலிப்பதாக, நாவலிலிருந்து வேறுபட்டு இருந்தது. இதன் திரைக்கதையை உருவாக்க கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் செலவிட்ட மிங்கெல்லா, “கதையை சொல்ல லீனியரான சம்ப்ரதாயமான வழிகள் என்று எதுவும் இல்லை என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்திருந்தேன்” என்று சொல்கிறார்.  மேலும் அவர், நாவலில் பூடகமாக இருந்த விசயங்களை வெளிப்படையாக காண்பிக்கும் நோக்கத்திலே, தான் சில மாற்றங்களை செய்ததாகவும்,  அதில் தவறு நேர்ந்திருந்தால், மூலத்திற்கு துரோகம் செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக குறிப்பிடுகிறார்.  நாவலாசிரியர் பெருந்தன்மையோடு அந்த மாற்றங்களை அங்கிகரிக்கிறார். படத்தின் திரைக்கதை, புத்தகமாக பதிப்பிக்கப்பட்ட போது அதன் முன்னுரையில், ஒண்டாச்சி பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இப்போது இது இரண்டு கதைகளாக உருவெடுத்திருக்கின்றன. ஒன்று, முன்னூறு பக்க நாவலுக்கே உரித்தான வேகத்துடனும், விரிவான விவரணையுடனும் கூடிய நாவல். இன்னொன்று,  .நுட்பமான, அழகான திரைப்படம். இரண்டுமே தனக்கே உரித்தான ஆர்கானிக்கான வடிவத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டிற்கும் வெளிப்படையான வேறுப்பாடுகள் இருக்கின்றன. அதன் முக்கியத்துவமும் மாறுபடுகின்றன. ஆனால் ஏதோ ஒருவகையில் ஒரு வெர்சன் இன்னொன்றை மேன்மைப்படுத்துகிறது”

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில், சினிமா விமர்சகர் கேரின் ஜேம்ஸ் இந்தப் படத்தைப் பற்றி குறிப்பிடுகையில்,  இது மிகவும் அருமையானதொரு  திரைக்கதையாக்கம் என்கிறார். சிக்கலான மொழியில் அமைந்த கவிதைகளை, தேர்ந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் அப்படியே மறுஆக்கம் செய்யமாட்டார்கள்.  அவர்கள் மூலத்தின் சுவைக்குன்றாமல், அதற்கு வேறொரு வடிவத்தை எப்படி தருவார்களோ, அதுபோல் இங்கே, நாவலை அப்படியே திரைக்கதையாக்காமல், நாவலின் கலைத்தன்மைக்கு இணையான வடிவத்தை திரையில் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று சொல்கிறார் கேரின் ஜேம்ஸ்.  மேலும் அவர், ஒரு திரைக்கதையாசிரியர், ஒரு நாவலை திரைக்கதையாக்கும் போது, “நாவலுக்கு எப்படி நியாயம் செய்வது?” என்று சிந்திக்கக்கூடாது, “எப்படி இந்த நாவலை என்னுடைய பிரதிபலிப்பாக உருவாக்கப் போகிறேன்?” என்று சிந்திக்கவேண்டும் என்கிறார்.

இங்கே ஒண்டாச்சியும்  மிங்கெல்லாவும் இரண்டு இணையொத்த கதைகளை உருவாக்கி இருக்கின்றனர். இரண்டுமே தத்தம் வழிகளில், அது சொல்லப்பட்ட தளத்தின் சாத்தியங்களையும் வடிவங்களையும் சாதகமாக்கிக்கொண்டு, சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவகையில் படம் நாவலை ஒத்திருக்கிறது. இன்னொருவகையில் நாவலிலிருந்து வேறுபட்டிருக்கிறது. நாவலில் இருக்கும் சில விவரணைகள் படத்தில் அப்படியே இடம்பெற்றிருக்கின்றன. உதரணமாக, ஹானா, அந்த நோயாளிக்கு பழத்தை ஊட்டும் காட்சி நாவலில் விவரிக்கப்பட்டிருந்ததைப் போலவே படத்திலும் தெளிவாக, அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நாவலின் ஆத்மாவை திரைப்படம், அழகாக அதே சமயத்தில் இதயத்தை கணக்க செய்யும் வகையில் வெளிக்கொணர்ந்திருந்தது. குறிப்பாக அல்மசி, கேத்தரின், ஹானா ஆகிய பாத்திரங்கள் திரையில் மிகச் சிறப்பாக உருவகப்படுத்தப்பட்டிருந்தன. 1996-ஆம் ஆண்டின் மிக சிறந்த தழுவல் படைப்பு,  ‘தி இங்கிலிஷ் பேசண்ட்’

REFERENCES

James, Caryn, “Any Novel Can Be Shaped into a Movie,” The New

York Times, November 17, 1996, II, 17, 28; Minghella, Anthony,

The English Patient: A Screenplay (Hyperion/Miramax Books, 1996);

O’Steen, Kathleen, “Anthony Minghella’s Triumph Over Hollywood,”

The Washington Post, November 22, 1996, D, 1, 7; Salett, Elizabeth;

“The Dark Side of the English Patient,” The Washington Post,

December 4, 1996, C, 1, 17.

—J.M. Welsh

***