The Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

உலக அளவில் ஸ்பானிய மொழியில் நல்ல த்ரில்லர் படங்கள் எடுக்கப்படுவது  போலவே, அங்கே மிகச்சிறப்பான திரில்லர் நாவல்களும் எழுதப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான ஸ்பானிஷ் நாவல்களின் வரிசையில் Eva Garcia Saenz எழுதிய Silence of the White City  (ஆங்கிலத்தில், Nick Caistor) நாவலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. Silence of the lambs கதையில் வருவது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாணியில் ஒரு குற்றச்செயல் (கொலை) மீண்டும் நடக்க, ஜெயிலில் இருக்கும் பழைய குற்றவாளியை பிரதான கதாபாத்திரம் தேடிச் செல்கிறது என்ற ஒற்றை வரி தான் இந்த நாவலும். மற்றபடி இது முற்றிலும் மாறுப்பட்ட கதைதான். பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவலுக்கு கொஞ்சம் கூட நியாயம் செய்யாத வகையில் தான் இதன் திரையாக்கம் அமைந்திருக்கிறது.  நாவலோடு ஒப்பிடுகையில் திரைக்கதையில் பெரும் குழப்பமும், சுவாரஸ்ய குறைவும் இருப்பதை எளிதில் கண்டுகொள்ள முடியும். 

நாவல் முழுக்க முழுக்க First Person POV-யில் அமைந்திருக்கிறது. கதையின் நாயகன் நாற்பது வயதான ஒரு போலீஸ் அதிகாரி. குண்டடிபட்டு மருத்துவமனையில் இருப்பவன் நமக்கு கதை சொல்ல தொடங்குகிறான். அவன் நீண்டதொரு விடுப்பிற்கு பிறகு வேலைக்கு திரும்பி வரும் நேரத்தில் அந்த ஊரில் நடக்கும் இரட்டை கொலையோடு கதை தொடங்குகிறது. கொலை செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் ஒரு பழைய தேவாலயத்தின் நிலவறையில்  கிடைக்கிறது. இருபது வயது நிரம்பிய அந்த ஆணும் பெண்ணும் அருகருகே வைக்கப்பட்டிருக்கும் விதத்தில் ஒரு  குறியீடு இருப்பதை நாயகன் கவனிக்கிறான். இந்த கொலையும், பிணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த தொடர் கொலைகளை அவனுக்கு நினைவு படுத்துகிறது. ஆனால் அந்த தொடர் கொலைகளை செய்த டாசியோ ஆயுள் தண்டனை பெற்று இருபது ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறான். அப்படியெனில் இந்த கொலைகளை செய்வது வேறு யாரோவா அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பே செய்யாத கொலைக்காக டாசியோ சிறையில் அடைக்கப்பட்டானா என்று நாயகன் குழம்புகிறான். பின் எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறான் என்பதே கதை. 

இது சுவாரஸ்யமான ஒன்லைன் தான். ஆனால் சினிமாவாக மாறும் போது எங்கு சறுக்குகிறது?

பொதுவாகவே நாவலை சினிமாவாக எழுதும் போது அதீத துரிததன்மையை திரைக்கதையில் புகுத்தக் கூடாது. இந்த திரைக்கதையின் பெரும் சிக்கல் அதுதான். அடுத்தடுத்து என்று காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஆனால் அந்த காட்சிகள் நம்முள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. காட்சியின் வேகம் என்பது அந்த காட்சியின் நீளத்தை பொறுத்தது அல்ல. அதாவது காட்சிகள் குறைந்த நீளத்தில், மாண்டேஜ்கள் போல் அடுத்து அடுத்து வருவதனால் மட்டுமே அந்த படத்தை வேகமான படம் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இடைவெளி அதிகம் இருப்பதனால் அதை சுவாரஸ்யமற்ற படம் என்றும் சொல்லிட முடியாது. இங்கே கவனிக்கவேண்டியது, ஒவ்வொரு காட்சியிலும் கதை முன்னோக்கி நகர்கிறதா என்பதை மட்டும் தான். அத்தகைய யதார்த்தமான, முன்னோக்கிய நகர்வை சாத்தியப்படுத்த எவ்வளவு அவகாசம் தேவையோ அதை ஒரு காட்சிக்கு கொடுக்க வேண்டும். 

இந்த படத்தில் நாயகன் சஸ்பெக்ட் ஒருவனை தேடிச் செல்கிறான். கதையை வேகப் படுத்த அங்கே சேசிங் காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால் நாவலில் சேசிங் காட்சி இல்லை. அதில் நாயகன் சஸ்பெக்ட்டை எப்படி அணுகுகிறான், பின் தொடர்கிறான் என்பது  நிதானமாக சொல்லப் பட்டிருக்கும்.  அவன் மனோதத்துவம்  படித்தவன். எனவே சஸ்பெக்ட் ஏன் குற்றவாளியாக இருக்க முடியாது என்பதை விளக்குகிறான். தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவனை விசாரிக்கிறான். இப்படி நாவலில் அந்த சஸ்பெக்ட் குற்றவாளி இல்லை என்ற நாயகன் ஒரு முடிவை எடுப்பதற்கான நியாயமான உந்துதல்கள் நாவலின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. 

ஆனால் படத்தில் சேசிங் காட்சி பொருந்தாமல் நிற்க்கிறது. நாயகன் சஸ்பெக்ட்டை பார்க்கிறான். சஸ்பெக்ட் தப்பிக்க முயல, நாயகன் அவனை  துரத்திச் சென்று பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, பின் நாயகனே சஸ்பெக்ட் குற்றவாளியாக இருக்க முடியாது என்று சொல்லி அவனை வெளியே விடுகிறான். இடைப்பட்ட நேரத்தில் பெரிய விசாரணை எதுவும் இல்லை. சினிமாவிற்கான செய்த ஒரு சிறுமாற்றம் நெருடலாகவும், கட்சிகளின் நம்பகத்தன்மையை குறைப்பதாகவும் இருக்கிறது அல்லவா? எனவே தான் காட்சிகளை தேவையில்லாமல் துரிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நாவல் சினிமாவாக மாறும் போது எந்த கதாப்பாத்திரங்களை வைத்துக் கொள்வது, அல்லது எதை நீக்குவது,  நாவலில் வரும் பாத்திரத்திற்கு திரைக்கதையில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்ற புரிதல் தான் ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு முக்கியம். இதற்கு முந்தைய கட்டுரைகளிலும் இதைப் பற்றி பேசி இருக்கிறோம். இந்த நாவலில் நாயகனின் தம்பியின் காதலி புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறாள். அவளை பற்றிய விவரணைகள் அவளை மிக முக்கியமான பாத்திரமாக மாற்றுகிறது. அவளும் நம் மனதில் பதிந்து போகிறாள். பின் மீண்டும் கதையின் முக்கியமான, எமோஷனலான ஒரு தருணத்தில் அந்த பெண்மணி வருகிறாள். நாயகனை அசைத்துப் பார்க்கும் தருணம் அது. 

திரைக்கதையில் அந்த பாத்திரத்தை முதலில் ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறாள். ‘நான் இப்போது குணாமாகிட்டேன்’ என்ற ஒற்றைவரியை மட்டும் அவள் பேசுகிறாள். நாவலை படித்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வசனத்தின் அர்த்தம் புரியும். பின்பு படத்தின்  முக்கியமான இடத்தில் அந்த  பாத்திரம் மீண்டும் வருகிறது. ஆனால் நாவலில் ஏற்பட்ட எந்தவொரு எமோஷனல் தொடர்பும் படத்தில் நமக்கு ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த கதாப்பாத்திரம் முக்கியமற்ற வகையில்  வடிவமைக்க பட்டிருப்பதுதான். நாவலில் இருக்கும் எல்லா கதாப்பாத்திரங்களையும் காட்சிகளையும் திரைக்கதையில் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தையோ காட்சியையோ திரைக்கதையில் கொண்டு வருகின்றோமெனில் அதற்கான அவகாசத்தை கொடுக்க வேண்டும்.

இந்த நாவலில் கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸை இறுதி வரை தக்க வைத்திருப்பார்கள். இறுதியில் தான் அவன் யார் என்றே நமக்கு தெரியும். ஆனால் படத்தில் கதை ஆரம்பித்து சில மணி நேரங்களிலேயே கொலைகாரனின் முகத்தை காட்டிவிடுகிறார்கள். துப்பறியும் படங்களில் யார் கொலைகாரன் என்பதை விட எதற்காக கொலை செய்கிறான் (Whydunit)  என்பதே முக்கியமான விஷயம். அதனால் கொலைகாரன் யார் என்று முன்னரே சொல்லிவிடுவது கூட சிக்கல் இல்லை. ஆனால் நாயகன் எப்படி அந்த கொலைகாரனை நெருங்குகிறான் என்பது தான் திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்லப்படவில்லை. அந்த சுவாரஸ்ய குறைவிற்கு முக்கிய காரணம் கதை சொல்லப்பட்ட விதம் தான். முன் சொன்னது போல இந்த நாவலின் கதையை நாயகன்தான் நமக்கு சொல்கிறான். இடையிடையே மட்டும் ஒரு பணக்கார பெண்மணியைப் பற்றிய பிளாஷ்பேக் கதை கிளைக் கதையாக சொல்லப் படுகிறது. இறுதியாக கொலைகாரன் யார் என்ற உண்மையை உணர்த்த அந்த பிளாஷ்பேக்கதை பயன்படுகிறது. நாவலின் பலமே அதன் பிரதான கதை முழுக்க நாயகனின் கோணத்தில் அமைந்திருப்பது தான். திரைக்கதையில் அந்த கோணம் மாறிப்போகிறது. எனவே தான் கொலைக்கான காரணம் விவரிக்கப் படும் போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதை இன்னும் விரிவாக பேசலாம். 

யதார்த்த வாழ்வில் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கை துப்பறிகிறார் என்று எடுத்து கொள்வோம். எல்லா விஷயங்களையும் அவரே செய்ய மாட்டார்தான். சில விசாரணைகளை சக அதிகாரிகளோ, அவருக்கு கீழ் இருக்கும் போலீஸ்காரர்களோ செய்யக்கூடும். இதை நாவலாக எழுதலாம். அது நாவலுக்கான சுதந்திரம். ஆனால் சினிமாவென்று வரும் போது, இந்த எல்லா வேலைகளையும் பிரதான கதாப்பாத்திரம் செய்வது தான் சிறந்த உத்தி. அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின்தொடர முடியும். இந்த உத்தி நாவலில் கட்சிதமாக பொருந்திவிட்டது தான் நாவலின் பலம். ஆனால் படத்தில் நிறைய விஷயங்கள் நாயகனுக்கு செய்தியாக மட்டுமே வந்து சேர்க்கிறது. 

நாயகன் ஒருவரை விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, அவனுடைய தோழியும் சக அதிகாரியுமான எஸ்டி, ஒரு முக்கியமான விசாரணையை தான் மேற்கொண்டுவிட்டதாக சொல்கிறாள். அதிலிருந்து தனக்கு என்ன துப்பு கிடைத்தது என்று சொல்கிறாள். 

நாவலில் இந்த விசாரணையையும் நாயகன் தான் மேற்கொள்வான். அவன் ஜெயிலிலிருக்கும் டசியோவிற்கும், அவனுடைய சகோதரனான இஃனாசியோவிற்கும் தெரிந்த பெண்மணியை விசாரிக்கிறான். அவளிடம் பல முறை உரையாடிவிட்ட பின்பு தான் இறுதியாக அவள் ஒரு உண்மையை சொல்கிறாள். அது கதையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துகிறது. இந்த முக்கியமான தருணம் ஒரே ஒரு ஷாட்டாக படத்தில் சொல்லப்படுகிறது. இதுவே திரைக்கதையின் பலவீனம். 

நாவலுக்கான சுதந்திரம் என்பதை பற்றி முந்தைய கட்டுரைகளில் பேசும்போது நாவலில் ஒரு கதையை நிறுத்திவிட்டு, வேறொரு கதையை சொல்லலாம் என்று பேசி இருந்தோம். இந்த நாவலிலும் ஒரு பணக்கார பெண்மணியை பற்றிய பிளாஷ்பேக் வருகிறது அல்லவா? அது மிக முக்கியமான கதை. இந்திரா சௌந்தரராஜன் கதைகளில், ‘அன்று’ ‘இன்று’ என இரண்டு பகுதிகளாக கதை நகர்வது போல, இதில் அந்த பிளாஷ்பேக் கதை ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப் படுகிறது. இந்த படத்தில் அப்படி சொல்வதற்கான சுதந்திரமும் அவகாசமும் இல்லை என்பதால் திடீரென்று நாயகனின் தாத்தா, அவனுடைய கோப்புகளில் அந்த பெண்மணியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவளை பற்றிய கதையை சொல்கிறார். இதுவும் திரைக்கதையில் குறிப்பிடத்தப்படவேண்டிய சிக்கல். பல க்ரைம் கதைகளில் நாம் காணும் சிக்கலும் கூட. 

மிக அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் கூட இந்த சிக்கலை கவனிக்கலாம். நவம்பர் ஸ்டோரி சுவாரஸ்யமான சீரிஸ் தான். ஆனால் பிளாஷ்பேக் காட்சியும் , அல்லது ஏன் கொலை நடந்தது என்ற உண்மையும் கதைக்கு அதிக முக்கியமில்லா ஒருவரின் கோணத்தில் சொல்லப் படுகிறது. துப்பறியும் கதைகளில், பார்வையாளர்கள் சொல்லப்படப் போகும் உண்மைக்காக தான் காத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உண்மையை உடைக்கும் இடமும், விதமும் நம்பும்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தகுந்த வரையிலும் இருத்தல் அவசியம். அந்த உண்மையை அதுவரை நாம் பின்தொடரும் கதாப்பாத்திரத்தின் மூலம் சொல்வதும், அவர்களை சொல்ல வைக்கும் சூழ்நிலையை கதையில் உருவாக்குவதும் தான் மிகமிக முக்கியம். 

Silence of the White City  நாவல் மிகவும் அடர்த்தியான ஒன்று. அது இரண்டு மணிநேரத்தில் சொல்லிவிடக் கூடிய கதை அல்ல. அதை சுருக்கமாக சொல்ல முயன்றது கூட இந்த திரைக்கதையின் சுவாரஸ்யக் குறைவிற்கு காரணமாக இருக்கலாம். எனினும் நாவலையும் திரைக்கதையையும் ஒப்பிட்டு பார்ப்பது நல்லதொரு திரைக்கதை பயிற்சியாக இருக்கும்.  

 

The Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

ஊரிலிருந்து ஒதுங்கி, மலைகளுக்கு இடையே ‘ஹில் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அந்த பெரிய வீடு இருக்கிறது.  அது பசித்து இருக்கிறது. அங்கே தங்க வருபவர்களை தனதாக்கிக் கொள்வதன் மூலம் அது தன் பசியைத் தீர்த்துக் கொள்கிறது. இது தான் ஷிர்லி ஜாக்சனின் The Haunting of Hill House நாவலின் கரு. இந்த கருவை மிக அழகாக மைக் ப்ளானகன் நாடகமாக (Web/TV Series) மறு உருவாக்கம் செய்திருக்கிறார். மறு உருவாக்கம் என்ற வார்த்தை தான் சரியாக இருக்கும். ஏனெனில் நாவலிலிருந்து நாடகம் பெருமளவில் மாறுபட்டு இருக்கிறது.

நாவலின் கதைச்சுருக்கம் இதுதான். பேராசிரியர் ஜான் மாண்டேக் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர். அதன் பின்னிருக்கும் அறிவியலை கண்டுகொள்ள முயல்பவர். பல ஆண்டுகளாக பல அமானுஷ்ய மர்மங்கள் விரவிக் கிடக்கும்  ‘ஹில் ஹவுஸ்’ வீட்டில் சில நாள் வாடகைக்கு தங்கி அங்கே இருக்கும் அமானுஷ்யங்களை கண்டு கொள்ள முடிவுசெய்கிறார். தனக்கு உதவியாளராக மூன்று பேரை தேர்வு செய்கிறார். முதலாவதாக நெல்லி (எ) எலியனோர் வான்ஸ் வருகிறாள்.  இரண்டாவதாக தியோ வருகிறாள். இவர்கள் இரண்டு பேருமே ‘சைக்கிக்’ சக்தி கொண்டவர்கள். மூன்றாவதாக அந்த வீட்டு உரிமையாளர் பெண்மணியின் சகோதரி மகனான லூக் வருகிறான். அனைவரும் அந்த வீட்டில் தங்குகின்றனர். அவர்களுக்கு அங்கே பல விசித்திர அனுபவங்கள் நிகழ்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக  நெல்லி அந்த வீட்டினால் கட்டுப்படுத்தப்பட்டு தன் சுயத்தை இழக்கிறாள்.

இருநூறு பக்கம் கொண்ட இந்த நாவலில், கதை ஒரு வாரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் நடக்கிறது. வீட்டை சுற்றிப்  பார்ப்பது, இரவு அமர்ந்து உரையாடுவது, மது அருந்துவது என அத்தியாயங்கள் கழிகின்றன. திடீர் திடிரென்று சில அமானுஷ்யங்கள் நிகழ்கின்றன. கதவுகள் தன்னால் மூடிக் கொள்கின்ற்ன. யாரோ அறைக் கதவை பலமாக தட்டிக் கொண்டே இருக்கிறார்கள். வீட்டினுள் ஏதோ ஒரு மிருகம் ஓடுகிறது. அறைக்குள் ரத்த துளிகள் சிதறிக் கிடக்கின்றன. இது போல, வழக்கமான ஹாரர் கதைகளுக்கே உரித்தான காட்சிகளும் வர்ணனைகளும் இந்த நாவலில் நிறைய வருகின்றன. (நாவல் வெளியான ஆண்டு 1959 என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்). எனினும் ஷெர்லி ஜாக்சன் கதையை நகர்த்திக் கொண்டு செல்லும் விதமும், கதாப்பாத்திரங்களிடம் இருக்கும் யதார்த்தமும், ஆங்காங்கே வெளிப்படும் மனோதத்துவ கோணமும் இதை தனித்துவமான நாவலாக மாற்றுகிறது.

நாவலில், கதாப்பாத்திரங்களின் அறிமுக காட்சிகள் தவிர ஒட்டுமொத்த கதையும் ஒரே வீட்டினுள் தான் நடக்கிறது. பேராசியர், அவர் உடனிருக்கும் மூன்று பேர், மற்றும் அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி என மொத்தம் ஐந்து பேர் தான் கதை முழுக்க வருகின்றனர். கதையின் இறுதியில் பேராசிரியரின் மனைவியும், அவளின் உதவியாளரும் வந்து சேர்கின்றனர். அவர்கள் ஆவிகளோடு உரையாடக் கூடியவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். பின் எதிர்ப்பாராத திருப்பங்களோடு நாவல் முடிகிறது. ஆனால் நாடகத்தில், ஆவிகளோடு உரையாடுதல், பேய் ஓட்டுதல் போன்ற வழக்கமான பேய் பட சம்பிரதாயங்கள் இல்லை.

ஒரு அமானுஷ்ய வீட்டில் சிக்கிக் கொள்ளும் சிலர் என்ற ஒற்றை வரி திரைப்படத்திற்கு வேண்டுமானால் பொருத்தமான ஒன்லைனாக இருக்கலாம். இதை அப்படியே படமாக்கி இருந்தால் இது ஒரு ‘சிங்கிள் செட்டிங்’ கதையாக மட்டுமே உருவாகும். ஆனால் தொடராக எடுக்க அந்த ஒன்லைன் போதாது அல்லவா! எனவே தான் திரைக்கதையாசிரியர்கள் புத்திசாலித்தனமாக கதையை மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

முதல் முக்கிய மாற்றத்தை கதாப்பாத்திரங்களிடம் செய்திருக்கிறார்கள். நாவலில் பேராசிரியரின் உதவியாளர்களாக வரும் மூன்று பேரும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு இல்லாதவர்கள். ஆனால் நாடகத்தில் அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்கள் (சகோதர சகோதரிகள்) என்று மாற்றி இருக்கிறார்கள். அவர்கள் சகோதர சகோதரிகளாக இருப்பதால் அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கின்றனர், அதனால் நேரடியாக கதைக்குள் நுழைந்து விட முடிந்தது, கதையை இழுக்க வேண்டும் என்பதற்காக பாத்திரங்களுக்கு அறிமுக காட்சிகள் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்று சொல்கிறார் மைக் ப்ளானகன்.

அடுத்த முக்கிய மாற்றம் கதை நிகழும் காலகட்டத்தில் செய்யப் பட்டிருக்கிறது. நாடகம் அன்று, இன்று என இரண்டு பகுதிகளாக எழுதப்பட்டிருக்கிறது. முதல் பகுதி, அந்த பெரிய வீட்டில் நடக்கிறது. அடுத்த பகுதி, இருபத்தியாரு வருடங்கள் கழித்து அந்த கதாப்பாத்திரங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களைப்  பற்றி பேசுகிறது. (இந்த இரண்டாம் பகுதி நாவலில் இல்லை. ஆனால் நாடகத்தில் இந்த இரண்டாம் பகுதி தான் அதிகம் வருகிறது) இப்படி இரண்டு கால கட்டத்தை எடுத்துக் கொண்டு விட்டபடியால், கதையில் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதனாலேயே நாவல் அழகாக நாடக வடிவம் பெற்றுவிட்டது. நாடகத்தின் கதைச்சுருக்கத்தைப் பார்ப்போம்.

கட்டட வடிவமைப்பாளர்களான ஹூக் க்ரைன் மற்றும் ஒலிவியா க்ரைன் தம்பதிகள் தங்களின் ஐந்து குழந்தைகளுடன் ஒரு கோடைகால விடுமுறையில் ஹில் ஹவுஸ் வீட்டிற்குள் குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் தேவையான மராமத்து வேலைகள் செய்து புதுமைப்படுத்தி, அதை விற்றுவிட்டு தங்களின் கனவு இல்லத்தை கட்டவேண்டும் என்பதே அவர்களின் எண்ணம். ஆனால் அந்த வீடு ஒலிவியாவை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. நாவலில் நெல்லிக்கு நிகழ்ந்தது, நாடகத்தில் ஒலிவியாவிற்கு நிகழ்கிறது. மேலும் குழந்தைகளில் சிலரும் அவ்வப்போது சில அமானுஷ்யங்களை உணர்கிறார்கள்.  பின் பல ஆண்டுகள் கழித்து, அந்த வீட்டை விட்டு விலகிய பின்னும்   பிள்ளைகளின் வாழ்க்கையில் அந்த வீடு எத்தகைய தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது, அந்த வீடு ஏற்படுத்திய இழப்பு அவர்கள் வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பதை நாடகம் பேசுகிறது.

ஒலிவியாவின் பிள்ளைகளில் மூத்தவன் ஸ்டீவன க்ரைன். அவனுக்கு ஹில் ஹவுஸ் வீட்டில் நிகழும் எந்த அமானுஷ்யமும் தெரியவில்லை. எனினும் அவன் பின்னாளில் ஒரு ஹாரர் எழுத்தாளராக உருவாகிறான். ஹில் ஹவுசில் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட அமானுஷ்ய அனுபவங்களை நாவலாக எழுதி நிறைய சம்பாதிக்கிறான். ஆனாலும் அவனுக்கு அமானுஷ்ய விஷயங்களில் நம்பிக்கை இல்லை என்பது சுவாரஸ்யமான முரண். அவன், நாவலில் வரும் பேராசிரியர் ஜான் மாண்டேக் கதாப்பாத்திரத்தை ஒத்திருக்கிறான். இரண்டவாது மற்றும் மூன்றாவது குழந்தையாக ஷெர்லி மற்றும் தியோ வருகிறார்கள்.

ஷெர்லி கதாப்பாத்திரம் நாவலில் இல்லை. ஆனால் நாடகத்தில் அவள் முக்கிய பாத்திரமாக வருகிறாள். இறந்தவர்களை அடக்கம் செய்யும் இல்லத்தை நடத்தி வருகிறாள். அவள் அந்த வேலையை செய்வதற்கு ஒரு எமோஷனல் காரணமும் நாடகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த நாடகத்தின் பெரும் பலமே இத்தகைய ‘எமோஷன்ல்’ விஷயங்கள் தான்.

ஹாரர் கதை என்றதும் திடீரென்னு கேமரா முன்னே பேய் வந்து நிற்பது, கதாப்பாத்திரங்களுக்கு தெரியாமல் பின்னே இருளில் பேய் ஓடுவது  போன்ற வழக்கமான ஹாரர் காட்சிகளின் மீது நம்பிக்கை வைக்காமல் கதாப்பாத்திரங்களின் மனப் போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த திரைக்கதையை எழுதி இருக்கிறாரகள். எந்த வகையான கதையாக இருந்தாலும் அதில் எமோஷனும், பாத்திரங்களிடம்  எமோஷனல் கான்ப்ளிக்ட்டும் இருக்கும்போது அந்த கதை பார்வையாளர்களின் மனதிற்கு நெருக்கமாக போய் நிற்கும். (இதை பற்றி முந்தைய திரைக்கதை கட்டுரைகளில் நாம் விரிவாக பேசியிருக்கிறோம்.) இந்த நாடகத்தில் எல்லா பிரதான பாத்திரங்களிடமும் அத்தகைய எமோஷனல் கான்ப்ளிக்ட் இருப்பதே திரைக்கதையின் சிறப்பு. 

நாவலில் வருவது போலவே, நாடகத்திலும் தியோ சைக்கிக் சக்தி கொண்டவளாக திகழ்கிறாள். அவள் யார் மீதாவது கை வைத்தால் அவர்களின் கடந்தகாலமும் எதிர்காலமும் அவள் கண்முன்னே காட்சிகளாக ஓடத் தொடங்கிவிடும். அது அவளுக்கு ஒரு பிரச்சனையாகவே உருவெடுக்கிறது. அதனாலே அவள் கையில் எப்போதும் கையுறை அணிந்து தன் பிரச்சனையை சமாளித்து வருகிறாள். நாவலில், அவள் ஓர்பால் ஈர்ப்பு கொண்டவள் என்பதை   ஷெர்லி ஜாக்சன் குறிப்பால் மட்டுமே சொல்லியிருப்பார். ஆனால் மைக் ப்ளானகன் அதை வெளிப்படையாக சித்தரித்து, தியோ பாத்திரத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்திருக்கிறார்.

நான்காவது ஐந்தாவது பிள்ளைகளாக லூக் மற்றும் நெல்லி ஆகியோர் வருகின்றனர். அவர்கள் இரட்டையர்கள். அவர்கள் தான் ஐவரில், முதன் முதலில் அந்த வீட்டில் அமானுஷ்யத்தை உணர்கிறார்கள். பேய் உருவங்களை காண்கிறார்கள். அந்த உருவங்கள் அவர்கள் வளர்ந்த பின்பும் துரத்திக் கொண்டே வருகிறது. அவர்கள் இருபத்தியாரு  வருடங்கள் கழித்தும் பயத்திலேயே வாழ்கிறார்கள். நெல்லி சரியாக தூங்க முடியாமல் அவதி படுகிறாள். லூக் போதை மருந்திற்கு அடிமையாகிறான். இந்த யதார்த்த சித்தரிப்பு தான் திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தையும் நம்பகதன்மையையும் கொடுக்கிறது.

பெரும்பாலும் பேய் படங்களின் கதை, ஒரு குடும்பம் அமானுஷ்ய சக்திகளால் பாதிப்பிற்கு உள்ளாவதையும் அந்த சக்திகளிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதைப் பற்றி மட்டும் தான் பேசும். ஆனால் அத்தகைய படம் முடிந்ததும் அவர்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை பற்றியே பேச விரும்பியதாக மைக் ப்ளானகன் குறிப்பிடுகிறார். The Haunting of Hill House is a series about life after a haunting என்கிறார் அவர்.

ஹில் ஹவுஸ் வீட்டை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்துவிட்டார்கள். ஆனால் அது தந்த கசப்பான நினைவுகள் அவர்களின் வாழ்க்கையை மேலும் கசாப்பாக்கிக் கொண்டே போவதாக நாடகம் எழுதப்பட்டிருக்கிறது. இது ஒரு கேரக்டர் ட்ரிவன் நாடகம். சகோதர சகோதரிகள் ஐவரில் ஒவ்வொருவரின் கதையை சொல்வதற்கும் ஒரு எபிசோடை ஒதுக்கி இருப்பார்கள். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையிலும் அந்த அமானுஷ்ய வீடு எத்தகைய மனக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்வதன் மூலமே இந்த கதை முன்னோக்கி நகர்கிறது. பேய், அமானுஷ்யம் போன்ற விஷயங்கள் எல்லாம் இலை மறைக்காயாக தான் வருகிறது. இதில் இருக்கும் ஹாரர் விஷயங்களை நீக்கிவிட்டால் இது ஒரு முழு நீள குடும்ப கதையாக தோன்றுமளவிற்கு இதில் உறவுகள், உறவுகளுக்குள் எழும் முரண்கள், மனசிக்கல்கள் போன்றவற்றைப் பற்றி விலாவரியாக பேசி இருக்கிறார்கள். இது ஒரு படைப்பாளியாக மைக் ப்ளானகனின் தனித்துவமும் கூட. பெரும்பாலும் அவர் உருவாக்கும் எல்லா ஹாரர் படங்களிலுமே மனித எமோஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறார். ஹஷ், ஜெரால்ட்ஸ் கேம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். நாவலின் கதாப்பாத்திரங்களிடம் மாற்றத்தை செய்வதும், அதில் எமோஷனை சேர்ப்பதும் அந்த திரைக்கதைக்கு எத்தகைய அடர்த்தியை கொடுக்கிறது என்பதை இந்த நாடகத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.    

ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் நாவலின் உயிரோட்டமான  தருணங்களை எப்படி திரைக்கதைக்குள் கொண்டு வருவது என்பது தான். இந்த நாடகத்தில் உதாரணமாக ஒரு தருணத்தை சொல்லலாம். நாவலில் நெல்லி கதாப்பாத்திரம் ஹில் ஹவுஸை அடைவதற்காக  பல மைல்கள் பயணப்படுகிறாள். அப்போது ஒரு காபி விடுதியில் காபி பருகுகிறாள். அங்கே ஒரு பெற்றோர் தன் மகளுக்கு கோப்பையில் பாலை கொடுத்து பருகச் சொல்கிறார்கள். ஆனால் அந்த சிறுமி மறுக்கிறாள். தான் வழக்கமாக பால் பருகும் நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட கோப்பையில் கொடுத்தால் தான் பருகுவேன் என்கிறாள். இதை நெல்லி கவனித்துக் கொண்டே இருக்கிறாள். இன்று ஒரு நாள் மட்டும் இதில் பால் குடி என்று அந்த தாய் தன் மகளிடம் கெஞ்சுகிறாள். வேண்டாம், அவர்கள் சொல்வதை கேட்காதே. அவர்கள் சொல்வதற்கு அடிபணிந்துவிட்டால் நீ உன் வாழ்நாளில் நட்சத்திர கோப்பையை மீண்டும் பார்க்கவே முடியாது. உன்னையும்  மற்றவர்களை போல் சாதாரண விஷயங்களுக்கு பழக்கி விடுவார்கள். உனக்கான நட்சத்திர கோப்பையை அடம்பிடித்து பெற்றுக் கொள் என்று நெல்லி அந்த சிறுமியிடம் மானசீகமாக சொல்கிறாள். ஒரு கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தும் தருணம் இது. நாவலில் இதே தருணம் வேறொரு இடத்தில் வருகிறது. நெல்லி சிறுமியாக ஹில் ஹவுஸ் வீட்டில் இருக்கும் போது அந்த வீட்டின் பழைய பொருட்களை ஆராய்கிறாள். அப்போது அவளுக்கு ஒரு நட்சத்திர கோப்பை கிடைக்கிறது. அந்த வீட்டின் வேலைக்கார பெண்மணி உனக்கான நட்சத்திர கோப்பையை அடம்பிடித்து பெற்றுக் கொள்  என்று நெல்லியிடம் சொல்கிறாள்.

அதே போல் நாவலில், நெல்லியின் சைக்கிக் சக்தியை குறிக்கும் விவரணை ஒன்று வருகிறது. நெல்லி பன்னிரண்டு வயது இருக்கும்போது அவள் தந்தை இறந்துவிட, அவள் வீட்டை சுற்றி தொடர்ந்து மூன்று நாட்கள் கல் மழை பொழிகிறது. நெல்லியே அதை மறந்திருப்பினும், இத்தகைய விசித்திர விஷயம் அவளுடைய அமானுஷ்ய சக்தியின் மூலம் தான் நிகழ்ந்தது என்று பேராசிரியர் நம்புகிறார். அதனால் தான் அவளை தன்னுடைய  ஹில் ஹவுஸ் ஆய்விற்கு சேர்த்துக் கொள்கிறார். நாவலில் இது நாவலாசிரியரின் விவரணையில் ஒரு பத்தியாக மட்டுமே வருகிறது. ஆனால் நாடகத்தில் இந்த சக்தி நெல்லியின் தாய் ஒலிவியாவிடம் இருப்பதாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. அவள் ஒரு மழை இரவில் ஹில் ஹவுசின்  வேலைக்காரியிடம் தன்னுடைய சிறுவயதில் கல் மழை பொழிந்தது என்று சொல்கிறாள். இந்த காட்சி தான், இந்த நாடகத்திற்கு ஒரு வகையான மனோதத்துவ கோணத்தை கொடுக்கிறது. ஒலிவியாவிற்கு அந்த ஹில் ஹவுஸிற்கு வருவதற்கு முன்பிருந்தே உளவியல் சிக்கல் இருக்கிறது, அதை அந்த வீடு இன்னும் அதிகப் படுத்தி  இருக்கிறது என்ற கோணத்தை இந்த தருணம் கதைக்கு கொடுக்கிறது. இப்படி நாவலின் தருணங்களை எப்படி திரைக்கதையில் வேறொரு இடத்தில் பொருத்துவது என்பதை புரிந்து கொள்ள இந்த தொடர் நிச்சயம் உதவும். ஷிர்லி ஜாக்சனின் நாவலின் முக்கிய தருணங்களையும், அதன் தீமையும் குறித்துவைத்துக் கொண்டு அவற்றை திரைக்கதைக்குள் மாற்றி மாற்றி அடுக்கி பார்தது ஒரு வகையான ரீமிக்ஸ்  வடிவத்தை தாங்கள் கொடுத்திருப்பதாக மைக் ப்ளானகன்  சொல்வது குறிப்பிடத்தக்கது.

இந்த நாடகத்தில் மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டிருக்கும் திரைக்கதை உத்தி ‘Foreshadowing’. கதையின் ஆரம்பத்திலிருந்தே, பின்னர் நிகழப் போகும் திருப்பங்களுக்காக  குறிப்புகளை மறைத்து வைத்துக் கொண்டே வருவது தான் ‘Foreshadowing’ எனப்படுகிறது.  அப்படி அந்த திருப்பம் நிகழும் போது, நாம் ஆரம்பத்திலிருந்தே கவனித்த, ஆனால் பொருட்படுத்தாத குறிப்புகள் நம்  கண் முன்னே தோன்றி திரையை விலக்குகிறது. எந்த திரைக்கதையிலும் அது ஒரு சிறப்பான அனுபவத்தை தரும் தருணமாக இருக்கும்.  

இந்த நாடகத்தில் நிறைய ‘Foreshadowing’ தருணங்கள் உண்டு. குறிப்பாக ‘ரெட் ரூம்’ (Red  Room) பற்றிய தருணத்தை சொல்லலாம்.

நாவலில் ஒவ்வொரு அறையும் ஒரு வண்ணத்தில் இருக்கிறது. க்ரீன் ரூம், பிங்க் ரூம் என பல வண்ணங்களில் ஹில் ஹவுசில்  அறைகள் இருக்கின்றன. ஆனால் முக்கியத்துவம் கொண்ட அறை என்று எதுவும் கிடையாது. இத்தகைய பல வண்ண அறைகளை மைய படுத்தி, நாடகத்தில் ரெட் ரூமை உருவாக்கி இருக்க்கிறார்கள். அது எப்போதும் பூட்டியே இருக்கிறது.  ஆனால் கதையில்  அது ஒரு முக்கிய  ‘Foreshadowing’ விஷயமாக இருக்கிறது. 

அதே போல் Bent Neck lady என்றொரு எபிசோட் உண்டு. கதையின் ஆரம்பத்திலிருந்தே Bent Neck lady என்ற அருவம் ஓன்று நெல்லியை பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது. அதற்கான காரணத்தை ‘Bent Neck lady’ எபிசோட் சொல்கிறது. இந்த தொடரின் ஆகச் சிறந்த எபிசோட் அது தான். மேலும்  ‘Foreshadowing’ உத்தி மிக அழகாக வெளிப்பட்டிருக்கும் எபிசோடும் அதுதான். 

மைக் ப்ளானகன், ஹில்ஹவுஸை காட்சி படுத்திய விதத்தை பற்றி பேசும் போது,  ஒவ்வொரு காட்சியிலும் பின்னணியில்  ஏரளமான பேய்கள் ஒளிந்து இருப்பதாக சொல்கிறார்.  அந்த பேய்கள் கதைக்குள் வராவிட்டாலும், கூர்ந்து கவனித்தால் அவற்றை கண்டு கொள்ள முடியும்  என்கிறார்.  இந்த நாடகத்தின் திரைக்கதையும் அப்படிதான். கூர்ந்து கவனித்தால் அதனுள் பல திரைக்கதை உத்திகள் ஒளிந்திருப்பதை கண்டுகொள்ள முடியும்.   

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5

“முதலில் உங்களுக்காக எழுதுங்கள், பின்பு ஆடியன்ஸ் பற்றி அலட்டிக்கொள்ளலாம்…”- ஸ்டீபன் கிங்.

***

முந்தைய பகுதிகள்

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4

***

நம் படங்களில் Internal conflict இருக்கிறதா?

ஆம் உண்டு. ஆனால் அது எல்லா நேரங்களிலும் குற்ற உணர்ச்சியாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியமில்லை. ‘குற்ற உணர்ச்சி’ என்பது ஒரு உதாரணம் மட்டும் தான். நம் படங்களில் நாம் அகப் போராட்டத்திற்கு பெரும்பாலும் எமோஷன் (Emotional conflict), அல்லது செண்டிமெண்ட்  போன்ற வடிவங்களை கொடுத்துவிடுகிறோம். இதை நாம் இன்னும் விலாவரியாக பேசுவோம்.

புறஉலகில் இருக்கும் சக்தியால் ஏற்படும் பிரச்சனை External conflict.
அகத்தினுள் ஏற்படும் பிரச்சனை Internal conflict.

Action Screenplay

முதலில், ஒரு காதல் கதையை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். நாயகி, ஹீரோவை காதலிப்பதாக சொல்கிறாள். அவன் அவளுடைய காதலை ஏற்க மறுக்கிறாள்.  இதற்கு என்ன காரணம் இருக்கலாம்! அவன் தந்தையே அவனை குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைத்திருக்கலாம். அவன் தந்தையைப் பொருத்தவரை அவன் ஒரு உதாவாக்கரை.  இது அவனை பெரும் மனப் போராட்டத்தில் ஆழ்த்துகிறது. இதை அவன் வெளியே சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. இங்கே தந்தையுடன் மனதளவில் இருக்கும் முரணே  Internal conflict. பொதுவாக நம் படங்களில், இது போன்ற ‘எமோஷன்’ தான் Internal conflict-ஆக வந்து நிற்கும்.

இன்னொரு உதாரணம். நாயகன் முன்னாளில் பாம்பேயில் பெரிய டான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவன் ஆட்டோ ஒட்டிக்கொண்டிருக்கிறான். இனிமேல் வன்முறை பாதையில் போகமாட்டேன் என்று தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் தன் தம்பி தங்கைகளையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். இது அவனுள் ஒரு எமோஷனல் போராட்டத்தை நிகழ்த்துகிறது. பாட்ஷா படமே அதிலிருக்கும் ‘எமோஷன்’ தான் என்று இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். ஆம் அந்த எமோஷன் (நட்பு) தான் மாணிக்கத்தை மாணிக் பாட்ஷாவாக மாற்றுகிறது. அதே எமோஷன் தான் (தந்தை பாசம்) அவனை மீண்டும் மாணிக்கமாக மாற்றுகிறது. இறுதியில் தன் குடும்பத்தை காக்க தான் அவன் மீண்டும் வன்முறையை கையில் எடுக்கிறான். நாயகனிடம் இருக்கும் Emotional Conflict தான் அவனை நம்மில் ஒருவனாக காட்டுகிறது. அப்போது அவனோடு நம்மால் எளிதில் தொடர்பாட முடிகிறது.

நம் வாழ்க்கையில் கடந்துவரும் எந்த எமொஷனையும் நாம் Inner Conflict-ஆக மாற்ற முடியும். தங்கை மீதிருக்கும் பாசம், மனைவி மீதிருக்கும் அன்பு, தந்தையின் கண்டிப்பு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

தந்தையின் கண்டிப்பிற்கு பயந்து நாயகன் சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். வளர்கிறான். காதலிக்கிறான். ஆனாலும் அவரது நினைவு அவனை வாட்டிக் கொண்டே இருக்கிறது. இதுவே அவனுடைய inner conflict. காதலிதான் வாழ்க்கை என்று இருக்கும் போது, அவள் திடிரென்று இறந்துப் போகிறாள். இப்போது அவனுக்கு யாருமில்லை. இயல்பாக அவனுடைய மனம் யாரை தேடும்?

அவன் தன் குடும்பத்தை தேடிப் போகிறான். தந்தை அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கே அவனுடைய inner conflict இன்னும் அதிகமாகிறது. இப்படி கதையின் போக்கில் வளர்ந்து கொண்டே போகும் இந்த Conflict இறுதியில் தீர்த்து வைக்கப்பட வேண்டும். முன் சொன்னது போல் புற உலகின் பிரச்சனைக்கு தீர்வு காணும்போது அக உலகின் பிரச்சனைக்கும் தீர்வு வந்து சேர வேண்டும்.

வேறொரு உதாரணம். Equalizer, Unforgiven இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான Emotional Conflict இருப்பதை கவனிக்க முடியும். நாயகர்கள் தங்களின் இறந்துபோன மனைவிக்காக வன்முறை வாழ்க்கையை விட்டுவிட்டு அமைதியாக வாழ்கிறார்கள். காலம் அவர்களை மீண்டும் பழைய பாதைக்கு இட்டுச் செல்கிறது. மனைவியின் நினைவுகளே அவர்களுக்குள் இருக்கும் எமோஷனல் பிரச்சனை. அந்த மனைவிக்காகதான் அவர்கள் பழைய வாழ்க்கையை துறந்தார்கள் என்பது காட்சிகளாகவோ வசனத்தின் மூலமோ அடிக்கோடிட்டு காண்பிக்கப்பட்டிருக்கும். ஆனால் மனைவிக்கு பிடிக்காத பாதையை தேர்ந்தெடுத்துவிட்டோமோ என்ற குழப்பம் அவர்களுக்குள் இருக்கிறது. அதனால் மேலும் அகப்போராட்டத்திற்கு ஆளாகிறார்கள். இங்கேயும் கதையின் போக்கில் அந்த Inner conflict வளர்வதை கவனிக்கலாம். இறுதியாக தங்களின் மனைவி இருந்திருந்தால் தங்களின் முடிவுக்கு ஆதரவு தந்திருப்பாள் என்று உணர்கிறார்கள். இங்கே அவர்களின் எமோஷனல் பிரச்சனைக்கு தீர்வு காணப்படுகிறது.

இந்த Internal conflict (Inner conflict) இல்லை என்றால் என்ன ஆகும்?

விவேகத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதற்கும் விஸ்வாசம் ஏற்றுக்கொள்ளப் பட்டதற்கும் இந்த Inner conflict தான் காரணம். விஸ்வாசம் படத்தில் அவனால் இறுதி வரை தன் மகளிடம் தான் யார் என்பதை சொல்ல முடியவில்லை. இது அவனுள் பெரும் மனப்போரட்டத்தை ஏற்படுத்துகிறது. விவேகம் படத்தில் அத்தகைய உணர்வுகள் இல்லாததால்தான், ஏதோ வீடியோ கேமில் வருவதை போல் நாயகன் சண்டைப் போட்டுக்கொண்டே இருக்கிறார் என்ற உணர்வு ஏற்படுகிறது.

Internal conflict பற்றி மட்டுமே வலியுறுத்தி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக திரைக்கதை எழுதும் போது நாம் ஹீரோவிற்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்பதை அறிந்திருப்போம். ஆக்சன் படமெனில் யாரால் பிரச்சனை வரப்போகிறது என்பதையும் அறிந்திருப்போம். அதாவது External Conflict என்ன எனபது நமக்கு எளிதாக தெரிந்துவிடுகிறது. அதனால் வில்லன் ஒரு அரசியல்வாதி, டான், Psycho என்றெல்லாம் யோசித்துவிடுவோம். ஆனால் பல நேரங்களில் எமோஷனல் பிரச்சனைக்கு தான் முக்கியத்துவம் தராமல் போய்விடுகிறோம். அப்படி செய்யாமல் ஆரம்பத்திலிருந்தே நம் பாத்திரத்தின் அகப் போராட்டத்தைப் பற்றிய தெளிவு நமக்கு வேண்டும்.

அகப்போராட்டம் கதாபாத்திரத்தின் அகத்தில் இருக்கும் ஒன்று, அதை திரையில் எப்படி கொண்டுவருவது!

அதற்கு ஏற்றார் போல் காட்சிகளை உருவாக்க வேண்டும். இது கடினமாக இருந்தாலும், இதுதான் நல்லத் திரைக்கதைக்கும் சுமாரான திரைக்கதைக்கும் இருக்கும் வித்தியாசம் என்று திரைக்கதையாசிரியர்கள் டேவிட் ஹோவர்ட் மற்றும் எட்வர்ட் மாப்லீ ஆகியோர் சொல்கிறார்கள் (Ref Book: Tools of Screenwriting).

உதரணாமாக, நாயகன் கல்லூரி படிக்கும்போது ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் அந்த காதல் முறிந்துவிடுகிறது. அந்த வலி அவன் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. பல வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு காதல் மலர்கிறது. இப்போது அவன் தன் வலியை வசனமாக சொல்லலாம். ஆனால் திரைக்கதையில் காட்சிகளை உருவாக்குவதே பலம் அல்லவா!

இப்போது நாயகனை அவனுடைய காதலி ஒரு ஸ்பெஷல் பார்ட்டிக்கு அழைத்துச் செல்கிறாள் என்பது போல் ஒரு காட்சியை எழுதுகிறோம். அதே போன்ற ஒரு நிகழ்விற்குதான் பலவருடங்களுக்கு முன்பு அவன் முன்னாள் காதலி அழைத்துச் சென்றிருப்பாள். அங்கு தான் அவன் காதல் முறிந்தது என்றால் காட்சியில் கூடுதல் எமோஷன் சேர்ந்து விடுகிறது. இப்போது அவன் அந்த நிகழ்வை தவிர்க்க போராடுவான். அங்கிருந்து கிளம்ப முறச்சிசெய்வான். அவன் ரெஸ்ட்லஸ்சாக மாறுவதாக நாம் காட்சியை அமைப்போம். இங்கே அவனுக்குள் இருக்கும் அகப்போராட்டம் காட்சிகளிலேயே வெளிப்பட்டுவிடும். அதே சமயத்தில் பொருத்தமே இல்லாமல் எமோஷனை திணிப்பதையும் தவிர்க்க வேண்டும். இயல்பாக எமோஷன் வெளிப்படுவதை போல் கதை அமைப்பதே முக்கியமாகிறது.

ஜேம்ஸ் பாண்ட் போல் ஒரு உளவாளியை மையமாக வைத்து இண்டர்நேஷனல் ஆக்சன் கதை எழுதினாலும், இது போன்ற எமோஷனல் (காதல்) காட்சிகள் பலம் சேர்க்கும் அல்லவா! நம்மை அந்த பாத்திரத்தோடு நெருங்க வைக்கும் அல்லவா! அதனால் தான் எமோஷனல் (இன்டர்னல்) கான்பிளிக்ட் முக்கியம் என்கிறேன்.

Internal conflict, External conflict என எல்லாவற்றையும் கதையின் ‘தீம்’ தான் இணைக்கப்போகிறது. கதையில் சம்மந்தமில்லாமல் எதுவும் நடக்கக்கூடாது, திரைக்கதையை ஒன்றோடு ஒன்று சம்மந்தமில்லாத நிகழ்வுகளின் தொகுப்பாக அமைப்பதை தவிர்த்தல் வேண்டும். என்கிறார் மார்டடல்.

அப்போது நான்கு வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியில் இணைகிறது  (Hyperlinked)  என்பன போன்ற திரைக்கதைகள் அமைக்க வேண்டாம் என்கிறாரா மார்ட்டல்?

அவர் சொல்ல வருவது அதை அல்ல. Hyperlinked கதைகளும் ஏதாவது ஒரு தீமை (Theme) தான் பேசும் என்பதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த தீம் என்பது ஒரு உணர்வாக இருக்கலாம். ஒரு குறிக்கோளாக இருக்கலாம். ஒரு நகரமாக இருக்கலாம். சம்மந்தமற்ற தீம்களை கொண்ட கதைகளை நம்மால் இணைக்க முடியாது. எனவே தான் அவர் நம் கதையின் ஒவ்வொரு அசைவுகளும் நம் கதையின் தீம் என்னவோ அதற்கேற்றார்போல் இருக்க வேண்டும் என்கிறார். அதாவது கதையின் காட்சிகள், கதாப்பாத்திரங்களின் அகம் மற்றும் புறப் பிரச்சனைகள், அவை பேசும் வசனங்கள் எல்லாமே Theme என்ற ஒற்றைக் குடைக்குள் வரவேண்டும். நம் கதையின் பிரதான நோக்கம் என்ன என்பதை நினைவில் வைத்து காட்சிகளை கட்டமைக்கவேண்டும்.

இதை எப்படி சாத்தியப்படுத்துவது?

‘ஆர்கானிக் திரைக்கதை முறை’ மூலமே இது சாத்தியம் என்கிறார் மார்ட்டல். அதாவது ஒரு ஆர்ம்பப்புள்ளியை வைத்துக் கொண்டு, அதிலிருந்து தன் போக்கில் கதையை வளரச் செய்வதே ஆர்கானிக் திரைக்கதை முறை. அந்த ஆரம்பப்புள்ளி ஒரு பாத்திரமாக இருக்கலாம். ஒரு நிகழ்வாக இருக்கலாம். அந்த ஆர்ம்பப்புள்ளிதான் நம் கதைக்கான விதை, அதிலிருந்து விருட்சமாக கதை வளரவேண்டும்.

உதாரணமாக  ஒரு எமோஷனல் பிரச்சனை இருக்கக்கூடிய  ஒரு ஹீரோ பாத்திரத்தை நாம் சிந்தித்துவிட்டோம். அதை ஒரு தொடக்கமாக வைத்துகொண்டு அவன் எத்தகைய வில்லனை சந்தித்தால் நம் கதை விறுவிறுப்பாகும் என்று யோசிக்கலாம்.

இன்னும் ஆறு மாதத்தில் இறக்கபோகிறோம் என்பதை அறிந்த ஒரு ஹீரோ. சாதாரண கெமிஸ்ட்ரி டீச்சர். அதுவே அவனுக்குள் இருக்கும் எமோஷனல் பிரச்சனை. இறப்பதற்கு முன்பு தன் மனைவி பிள்ளைகளுக்கு நிறைய பணம் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று எண்ணுகிறான். அதனால் போதை மருந்து செய்து விற்கலாம் என்று முடிவெடுக்கிறான். இதை மட்டும் நாம் நம் விதையாக வைத்துக்கொண்டோம். அவன் போதை மருந்து செய்து விற்கத் தொடங்குகிறான் என்று காட்சி அமைக்கிறோம். இப்போது வில்லன் யார்! அதே போதை மருந்து வியாபாரத்தில் இருக்கும் ஒருவன். ஹீரோவால் அவனுடைய வியாபாரம் பாதிக்கப் படுகிறது. அங்கிருந்து நமக்கு கதை பெரிதாக விரிகிறது. கூடவே தான் செய்வது சரிதானா இல்லையா என்ற குழப்பம் நாயகனின் எமோஷனல் பிரச்சனையாக வளர்கிறது. (Breaking Bad)

ஒருவேளை இதன் திரைக்கதையாசிரியர்கள் இந்தக் கதையை வேறுமாதிரியும் சிந்தித்து இருக்கலாம். ஒரு சாதாரண கெமிஸ்ட்ரி டீச்சருக்கும் ஒரு பெரிய போதை மருந்து விற்கும் டானுக்கும் பிரச்சனை வருகிறது. அதற்கு காரணம் என்ன? ஹீரோவும் போதை பொருள் செய்கிறான். அதற்கு அவசியம் என்ன? அவன் இன்னும் ஆறுமாதத்தில் இறந்து விடுவான்.

இந்த கதை எந்த புள்ளியில் தொடங்கியது என்பது முக்கியமல்ல. ஸ்தூலமான ஒரு புள்ளியை நாம் கண்டுகொண்டுவிட்டால், அடுத்தடுத்து கதை நகர்வதை நம்மால் உணர முடிகிறது அல்லவா? நாம் காட்சிகளாக ஹீரோவின் வாழ்க்கையை காண்பித்திருப்போம். அதே போல் வில்லனின் வாழ்க்கையையும் காண்பித்திருப்போம். இதுவே வெப் சீரிஸ் என்று வரும்போது நாம் ஒரு எபிசொட் முழுக்க ஹீரோவை மட்டும் காண்பிக்கலாம். இன்னொரு எபிசொட் முழுக்க வில்லனை மாட்டும் காண்பிக்கலாம். காட்சிகளின் நீளத்தைப் பற்றி இங்கே பேசவில்லை. அதை திரைக்கதையின் தேவை முடிவு செய்துகொள்ளும். ஆனால் நாம் அமைக்கும் காட்சிகள் எல்லாம் தொடர்பற்ற நிகழ்வுகளாக இல்லாமல், ஒரே கதையாக நேர்கோட்டில் இணைகிறது அல்லவா! இதுதான் ‘ஆர்கானிக் திரைக்கதை’ என்கிறார் மார்ட்டல்.  அதனால் கதையின் விதையை முதலில் கண்டு கொள்வதே முக்கியமாகிறது. மேற்கூறிய உதாரணங்களில் பிரச்சனை அல்லது கதாப்பாத்திரம் விதையாக இருக்கிறது.

வானம் படத்தை போல மனிதநேயம் என்ற தீமை (Theme) வைத்து ஒரு Hyperlinked கதையை எழுதினால், அந்த ‘தீம்’ தான் நமக்கான விதையாக இருக்கிறது. முதலில் அந்த விதையை கண்டுகொள்வோம என்கிறார் மார்ட்டல். திரைக்கதை எழுதும் போது, குறிப்பாக ஆக்சன் கதை எழுதும் போது நாம் சில காட்சிகளை முன்கூட்டியே சிந்தித்து வைத்திருப்போம். அதையெல்லாம் நம் கதையில் திணிக்க முயற்சிப்போம். இதை தவிர்க்கவே மார்ட்டல் அப்படி சொல்கிறார்.

எது நம்முடைய பிளாட்டின் விதையாக (Plot seed) இருக்கலாம்?

நம்மை சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் மார்ட்டல். எது பெருவாரியான  மக்களின் கோபமாக, பயமாக, தேவையாக இருக்கிறதோ அது ஆக்சன் கதைக்கான நல்ல விதையாக இருக்கும் என்கிறார். பொறுப்பற்ற அரசாங்கத் துறை, லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், ஏமாற்றும் அரசியல்வாதிகள்- போன்ற விஷயங்களை மையப்படுத்தி வந்த படங்கள் பெரும் வரவேற்பு பெற்றதை நாம் அறிவோம்.

இந்த சிறுவிதையை பெரும்வெற்றிப்படமாக மாற்றுவதற்க்கு மார்ட்டல் தன் அனுபவத்தில் இருந்து ஒரு உத்தியை சொல்கிறார்.

      தொடரும்…

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3

"எழுதுவது என்பது குழந்தை மணலில் விளையாடுவதைப் போல. 
அது பொருட்களை கலைத்து அடுக்கி விளையாடுவது போல் 
எழுத்தில் வார்த்தைகளை மாற்றிப் போட்டு ஒவ்வொரு 
பக்கத்தையும் அலங்கரித்திட முடியம். எழுதுவதில் எனக்குப் 
பிடித்த விஷயம் இது தான். நாம் காலை எழுதத் தொடங்கும் 
போது நாம் திட்டமிட்டிருக்காத ஒரு வடிவத்தை அந்த எழுத்து 
அடைந்துவிடும் தருணமே அன்றைய நாளின் 
தலைசிறந்த தருணம்" - Markus Zusak

***
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு genre-ஐ எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையை போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting‘. அந்த புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்று விவாதிப்போம்.

முந்தைய பகுதிகள்

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1

ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2

***

ஆக்சன் படமாகவே இருந்தாலும், எல்லா நேரங்களிலும், படத்தின் முதல்காட்சி ஒரு பிரமிப்பான தருணத்திலிருந்து தொடங்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. சில படங்கள் அதன் உலகத்திற்குள் நம்மை இழுத்துக் கொள்ள அதிக அவகாசத்தை எடுத்துக்கொள்ளும்.

நாயகன், அவன் யார், அவனுடைய வாழ்கைமுறை என்ன போன்றவற்றை நாம் ஆரம்பத்தில் சொல்ல வேண்டியிருக்கும். யார் வம்பிற்கும் போகாத ஒரு நாயகனின் வாழ்க்கையில் பிரச்சனை வருகிறது என்பதுதான் நம்முடைய ஒன்லைன் எனில், அவன் யார் வம்பிற்கும் போகாதவன் என்பதை காண்பிக்க நமக்கு சில நிமிடங்களாவது தேவை படும் அல்லாவா? கூடுதலாக அவனை நமக்கு பிடிக்க வேண்டுமென்றால், அவன் அன்பானவன். பிறருக்கு உதவுபவன் என்றெல்லாம் காண்பிக்கலாம். அப்போது அதற்கும் அவகாசம் தேவைப்படும். அதனால் தான் மார்ட்டல் சொல்வதோடு நாம் உடன்பட வேண்டிய அவசியமில்லை என்றேன்.

Action Screenplay

இதற்கு பொருத்தமான உதாரணமாக The Equalizer படத்தை சொல்லலாம். The Equalizer மிக சிறப்பானதொரு ஆக்சன் திரைப்படம். ஆனால் படத்தின் முதல் இருபது நிமிடங்கள் டிராமாவாக தான் நகரும்.

படத்தின் நாயகன் ஒரு முன்னாள் உளவுத்துறை அதிகாரி. அந்த உலகத்தை விட்டு வெளியே வந்து ஒரு சாதரணனாக வாழ்க்கையை நகர்த்துகிறான். அவனுடைய கடந்த காலம் எதுவும் படத்தின் முதல் பகுதியில் சொல்லப்பட்டிருக்காது. ஒரு பெரிய கடையில் வேலை செய்யும் அமைதியான, ஒழுக்கமான ஒரு மனிதனாக தான் அவன் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறான். அவன் தனியாக வசிக்கிறான். எல்லா வேலைகளையும் சரியாக திட்டமிடுதலுடன் செய்து முடிக்கிறான். உடன் பணியாற்றுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறான். தூக்கமின்மையால் அவதிப்படும் அவன் இரவில் ஒரு காபி விடுதிக்கு செல்கிறான். அங்கே ஒரு பெண்ணை சந்திக்கிறான். இருவரும் நட்பாக உரையாட தொடங்குகிறார்கள். தினமும் அதே நேரத்தில் அதே இடத்தில் அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள். ஒரு நாள் அவள் வரவில்லை. அவளுக்கு பிரச்சனை. அங்கிருந்துதான் படம் ஆக்சன் பாதையில் பயணிக்கிறது.

இங்கே படத்தின் ஆரம்ப காட்சிகள் நிதானமாக நகர்த்தப்பட்டிருக்கும். நாம் நம்மை அந்தப் பாத்திரங்களோடு தொடர்புபடுத்திக் கொள்ள இந்த நிதானம் தேவைப்படுகிறது. மேலும் படத்தின் பிந்தைய காட்சிகளில் நாம் அமைக்கப்போகும் காட்சிகளுக்கான விதையை நாம் ஆரம்பக்காட்சிகளிலே போட்டுவிடுவது நல்லது. Equalizer படத்தில் நாயகன் வில்லன்களை திட்டமிட்டு அழிக்கிறான். திட்டமிடுதலை அவன் வாழ்க்கைமுறையாகவே கடைப்பிடிக்கிறான் என்பதை ஆரம்ப காட்சிகளிலேயே சொல்லிவிடுகிறார்கள். அவன் சரியான நேரத்தில் காலையில் எழுவது தொடங்கி அவன் சரியான நேரத்தில் ரயிலைப் பிடிப்பது என எல்லாமே மாண்டேஜ்களாக சொல்லப்பட்டிருக்கும்.  அவனிடம் இருக்கும் இந்த துல்லியமான திட்டமிடல்தான், பின்னர் பெரும் வில்லன்களை வீழ்த்த பெரிதும் பயன்படுகிறது.

இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமுண்டு. இந்த படத்தில் ஹீரோவை தேடி பிரச்சனை வரவில்லை. அவனே தான் பிரச்சனையை தேடி போகிறான். (இதுவும் ஒரு ஒன்லைன்!)

அவன் பிரச்சனையை தேடி போகாமல், அல்லது அந்த பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராமல் இருந்திருந்தால், இருபத்தி ஒன்றாம் நிமிடத்திலிருந்து இதை ஒரு காதல் படமாகக் கூட நகர்த்தியிருக்க முடியும். தான் உண்டு தன் வேலையுண்டு என்று வாழும் ஒரு வயதான ஹீரோ தன்னைவிட வயதில் குறைந்த ஒரு பெண்ணிடம் நட்பாகிறான். நாளடைவில் அது காதாலாகிறது. இந்த கதையை Lost in Translation படம் போல Feel Good படமாக நகர்த்த முடியும். ஆக்சன் படம் என்பதாலேயே ஆக்சன் காட்சிகளோடு படம் ஆரம்பிக்கவில்லை. ஒரு காதல் படம் போல் தான் நகர்கிறது. பின் தான் ஆக்சன் பாதையில் பயனிக்கிறது என்பதைதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதனால் எந்த Genre கதையை நாம் எழுதினாலும், எல்லா நேரங்களிலும், எடுத்த எடுப்பிலேயே நாம் விறுவிறுப்பை புகுத்த மெனக்கெட வேண்டாம். கதை எழுதும் போது, ஒரு திரைக்கதை எழுத்தாளரை அந்த கதை உள்ளிழுக்க எவ்வளவு அவகாசம் எடுத்துக்கொள்கிறதோ அதே அவகாசம் பார்வையாளர்களுக்கும் தேவைப்படும். அதனால் அந்த கதையின் போக்கில் நாம் காட்சிகளை அமைத்து ஒரு Draft எழுதி விடலாம். பின் Second Draft எழுதும் போது காட்சிகளின் வேகத்தை கூட்டுவது குறைப்பது போன்றவற்றைப் பற்றி சிந்திதிக்கலாம்.

நாம் இங்கே ஆக்சன் திரைக்கதைகளைப் பற்றி விவாதித்தாலும், Structure பற்றி நாம் மேற்கூறிய அனைத்தும், எந்த வகையான திரைக்கதைக்கும் பொருந்தும். கூடுதலாக, இங்கே நாம் திரைக்கதை ஆலோசகர் மைக்கேல் ஹேக் சொல்லும் மூன்று அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள்வதும் நல்ல திரைக்கதையை எழுத உறுதுணையாக இருக்கும்.

  1. வித்தியாசமாக எழுதும் ஆர்வத்தில் ஹீரோவின் பிரச்சனையை போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஹீரோவின் கோலை (Goal) மிக தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. நேரடியாக கதையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லாதீர்கள். கதையில் ஹீரோவிற்கு பிரச்சனை வருவதற்கு முன்பு அவனுடைய அன்றாட வாழ்க்கையை அடிக்கோடிட்டு காட்டுங்கள்.

  3. கதையை வேகமாக நகர்த்தும் நோக்கில் ஹீரோவை வேகவேகமாக பிரச்சனையில் தள்ளாதீர்கள். திரைக்கதையில் 25% முடியும் வரை கதை நிதானமாகவே நகரட்டும்.

***

காட்சிகளை கட்டமைப்பதைப் பற்றி நாம் அறிந்துகொண்டோம். பிரத்தியேகமாக ஆக்சன் கதை என்று எழுதும் போது நாம் பின்பற்ற வேண்டிய இன்னொரு உத்தி ‘Pacing’ என்கிறார் மார்ட்டல். ஆக்சன் படங்களில் இந்த பேசிங் எவ்வளவு முக்கியம் என்பதை பார்ப்பதற்கு முன்பு, பொதுவாக திரைக்கதையில் ‘Pacing’ என்றால் என்ன என்று பேசுவோம்.

‘Pacing’ என்பதற்கு நேரடியாக ‘வேகம்’ என்று பொருள் கொள்ளலாம். அதையே பல திரைக்கதை புத்தகங்களும் சொல்கின்றன. ஆனால் இப்படி புரிந்து வைத்துக் கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. கதையில் நல்ல பேசிங் இருக்கவேண்டுமென்று சொல்லும்போது, கதை வேகவேகமாக நகரவேண்டும் என்ற அர்த்தம் வருகிறதே! அது எல்லா சூழலிலும் சாத்தியமில்லையே!

பெரும்பாலான திரைக்கதை புத்தகங்கள் ஹாலிவுட் எழுத்தாளர்களால் எழுதப்படுவதால் அவர்கள் ‘பேசிங்’ என்பதை வேகம் என்ற பொருளிலேயே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஹாலிவுட் படங்களில் இருக்கும் பேசிங் ஐரோப்பிய படங்களில் இருக்காது. இந்திய படங்களிலும் அந்த பேசிங் மாறுபட்டு தான் இருக்கும். அல்லது ஹாலிவுட் படங்களோடு ஒப்பிடுகையில் நம்முடைய விறுவிறுப்பான படங்கள் கூட நிதானமாக தான் நகரும். அப்படியெனில் நம் படங்களை ஸ்லோவான படங்கள் என்று சொல்ல முடியுமா! அபப்டி சொல்வது பொருத்தமாக இருக்காது அல்லவா? ‘பேசிங்’ என்பதை வேகம் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல் இருப்பது இத்தகைய குழப்பங்களை தவிர்க்க உதவும். .

அப்படி என்றால் ‘Pacing’ என்றால் என்ன?

என்னளவில், கதை ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி நோக்கி நகர எவ்வளவு கால அவகாசத்தை எடுத்துக்கொள்கிறது என்பதே ‘Pacing’. எளிமையான புரிந்துகொள்வதற்காகவே இப்படி சொல்கிறேன். உதாரணமாக, கும்பலங்கி நைட்ஸ் படத்தை எடுத்துக் கொள்வோம். படத்தின் பெரும் பகுதி ஒரு மீனவ குடும்பத்தில், அவர்களின் வாழ்க்கையை பற்றி மட்டுமே பேசுகிறது. வழக்கமான அளவீடுகளோடு பார்த்தால், அந்த படத்தில் காட்சிகளும் அவ்வளவு விறுவிறுப்பாக நகராது. அப்படி இருந்தும் படம் போரடிக்கவில்லை. ஏனெனில், கதையில் முன்னோக்கிய நகர்வு சரியான கால இடைவெளியில் இருந்து கொண்டே இருக்கிறது. இதுவே ‘Pacing’.

முதலில், அண்ணன் தம்பிகளை பார்க்கிறோம். அடுத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை அறிகிறோம். அடுத்து ஒரு சகோதரனின் வாழ்க்கையில் காதல் நுழைவதை பார்க்கிறோம். அந்த காதலுக்கு முட்டுக்கட்டை வருவதை பார்க்கிறோம். இப்படி கதை ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு நகர்வதால் திரைக்கதையில் தொய்வு தெரியவில்லை. மேலும் ‘பேசிங்’ என்பது ஒவ்வொரு வகை கதைக்கும், அதன் உலகிற்கு ஏற்ப மாறுபடும் என்பதையும் நாம் நினைவில் கொள்வோம்.

சரி,ஆக்சன் கதைகளில் பேசிங் எப்படி இருக்க வேண்டும்?

மார்ட்டலை பொறுத்தவரை ஆக்சன் படங்களில் ‘பேசிங்’, பார்வையாளர்களை வேறு விசயம் நோக்கி சிந்திக்கவிடாத அளவிற்கு குறைந்த கால இடைவெளியில் நிறைய விறுவிறுப்பான காட்சிகளை கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது கதை ஒரு புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்கு நகரும் கால இடைவெளி மிக குறைவானவொன்றாக இருத்தல் வேண்டும்.

நாம் நாயகனுக்கு பிரச்சனை வரும் வரை கதையை நிதானமாக நகர்த்தலாம் என்றோம். இப்போது பிரச்சனை வந்துவிட்டது. அதன் பின் கதையில் ஆர்வமூட்டும் நிகழ்வுகள் எவ்வளவு துரிதமாக நடக்கிறதோ அவ்வளவு சுவாரஸ்யமாக அந்த படம் இருக்கும். பிரச்சனை வந்தபின், அதிலிருந்து கதையை நகர்த்தாமல் நாம் வேறு கதையை சொல்லிக்கொண்டிருந்தால் தான் படம் நோக்கமற்று நகர்வது போல் தோன்றும்.

முதலமைச்சரை எதிர்த்து நாயகன் கேள்வி கேட்டுவிட்டான். அதுவே பிரச்சனை. அடுத்த சுவாரஸ்ய நிகழ்வு என்ன? நீ ஒரு நாள் முதலமைச்சராக இருந்து பார் என்று நாயகனை பார்த்து வில்லன் சொல்கிறான். நாயகனும் அதை ஏற்கிறான். மீண்டும் குறைந்த கால இடைவெளியில் அடுத்த சுவாரஸ்யம் என்ன? அவன் வீதியில் இறங்கி எல்லா தவறுகளையும் தட்டிக் கேட்கிறான். இப்படி சுவாரஸ்ய நிகழ்வுகளைக் கொண்டு திரைக்கதையை அமைத்தல் வேண்டும்.

மீண்டும் Equalizer படத்திற்கு வருவோம். படத்தில் அந்தப் பெண்ணை துன்புறுத்தியவர்களை தண்டிக்க ஹீரோ புறப்பட்ட பின்பு, கதையில் திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. முதலில் நாயகன் அந்த பெண்ணை துன்புறுத்திய டானை கொல்கிறான். அதன் பின் ஓரிரு நிமிடங்கள் தான் நாயகனின் வாழ்கை சகஜமாக இருக்கிறது. அடுத்த காட்சியிலேயே, தன் ஆளை கொன்றது யார் என்று அந்த டானுடைய தலைவனொருவன் தேடத்தொடங்குகிறான். அவன் நாயகனை கொல்ல ஆள் அனுப்புகிறான். மீண்டும் நாயகன் எதிர்வினை ஆற்றுகிறான். இப்படி குறைந்த கால இடைவெளியில் அதிக திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே போவதால், வேறு மொழியில் சொல்ல வேண்டுமெனில், இந்த படத்தின் ‘பேசிங்’ விறுவிறுப்பாக இருப்பதால்,  Equalizer மிகவும் சுவாரஸ்யமானதொரு படமாக இருக்கிறது.

இந்த பேசிங்கை எப்படி சாத்தியப்படுத்துவது?

தொடரும்…