ஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்

Excerpts from On Writing: Memoirs of the Craft by Stephen King
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்

***

1950-களில் இலக்கிய அர்வலர் பாரஸ்ட் J அக்கர்மன் ஸ்பேஸ்மேன் என்ற இதழை சிறிதுகாலம் நடத்தினார். அதில் பெரும்பாலும் அறிவியல் புனைவு படங்களைப் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றன. நான் 1960-யில் என்னுடைய கதை ஒன்றை அந்த இதழுக்கு அனுப்பி வைத்தேன். அதுதான் பிரசுரத்திற்கு நான் அனுப்பி வைத்த முதல் கதை என்று நினைக்கிறேன். அதன் தலைப்பு எனக்கு நினைவில்லை. ஆனால் நான் அந்த காலகட்டத்தில் தான் கதைகளை எழுதத் தொடங்கியிருந்தேன். ஒரு கொலைகார குரங்கைப் பற்றிய கதை அது. என் கதை நிராகரிப்பட்டது. ஆனால் பாரி (பாரஸ்ட் J அக்கர்மன்)  அதை வைத்துக் கொண்டார். அவர் தன்னிடம் வரும் எல்லாக் கதைகளையும் சேகரித்து வைத்துக் கொள்பவர் என்பது அவர் வீட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும்.  இருபது வருடங்களுக்குப் பிறகு நான் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு புத்தகக்கடையில் என் புத்தகங்களில் ஆட்டோக்ராப் இட்டுக் கொண்டிருந்த போது, பாரியும் வரிசையில் வந்து நின்றுகொண்டார். என்னுடைய பதினோறாவது பிறந்தநாளில் என் அம்மா கொடுத்த ராயல் டைப்ரைட்டரில் எழுதி, அவருக்கு அனுப்பிய அந்த அறிவியல் புனைவு கதையை அவர் என் முன் நீட்டி கையெழுத்து இடச் சொன்னார். இப்போது நினைக்கும் போது அது ஒரு மிகையதார்த்தவாத தருணமாக இருக்கிறது.

Stephen King

Stephen King-Vector art by Cristiano Siqueira

எனக்கு பதினான்கு வயதானபோது, என் வீட்டு சுவற்றின் ஆணி, அதில் மாட்டப்படிருந்த நிராகரிப்பு கடிதங்களின் பளு தாங்காமல் விழ காத்துக் கொண்டிருந்தது. எல்லாமே நான் பிரசுரத்திற்கு அனுப்பி அதற்கு பதிலாக வந்த நிராகரிப்பு கடிதங்கள். ஆனால் நான் விடாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தேன். சம்ப்ரதாயமாக தட்டச்சு செய்யப்பட்ட நிராகரிப்பு கடிதங்களுக்கு பதில், யாரோ ஒருவர் என்னையும் பொருட்படுத்தி தன் கைப்பட எழுதிய நிராகரிப்பு கடிதங்கள் வரத் தொடங்கியபோது எனக்கு சரியாக பதினாறு வயது. அப்படி வந்த முதல் கடிதம் ஆல்கிஸ் பட்ரிஸ் அவர்களிடமிருந்து வந்தது. அவர் அப்போது ‘The Magazine of Fantasy and Science Fiction’ இதழின் ஆசிரியராக இருந்தார். நான் அனுப்பிய ‘புலியின் இரவு’ என்ற கதையை படித்துவிட்டு பின்வருமாறு எழுதி இருந்தார். ‘இது நல்ல கதை. ஆனால் எங்கள் இதழுக்கானது அல்ல. உன்னிடம் திறமை இருக்கிறது. மீண்டும் கதைகளை அனுப்பு’.

அந்த நான்கு வரிகள் தான் தொய்வுடன் நகர்ந்துக் கொண்டிருந்த என்னுடைய பதினாறாவது வயதிற்கு பெரிய உற்சாகம் ஊட்டியது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு, நான் இரண்டு நாவல்களை பிரசுரத்துவிட்டப் பின்பு, நான் ‘புலியின் இரவு’ கதையை மீண்டும் வாசித்துப் பார்த்தேன். ஒரு ஆரம்பகால எழுத்தாளனிடம் இருக்கும் குறைகள் அந்தக் கதையில் வெளிப்பட்டாலும் அது நல்லக் கதையாகதான் இருந்தது. அதை மாற்றி எழுதி ‘The Magazine of Fantasy and Science Fiction’ இதழுக்கே மீண்டும் அனுப்பினேன். அவர்கள் அதை பிரசுரிக்க முன்வந்தார்கள். இதிலிருந்து ஒன்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நாம் கொஞ்சம் வெற்றிபெற்ற எழுத்தாளராக மாறிவிட்டால், ‘இது எங்கள் இதழுக்கானது அல்ல’ என்றும் யாரும் சொல்லமாட்டார்கள்.

***

ஒரு நாள் மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது எனக்கொரு அருமையான யோசனை பிறந்தது. The Pit and the Pendulum படத்தை நாவலாக மாற்றலாம் என்பதே அது. அதை புத்தகமாக அச்சிட்டு என் பள்ளியில் விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதை பதினாறு பக்கங்கள் கொண்ட புத்தகமாக உருவாக்கினேன். மொத்தம் நாற்பது பிரதிகள் அச்சிட்டேன். நான் செய்வது காப்புரிமைக் குற்றம் என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. அந்த புத்தகங்களை பள்ளியில் விற்றால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே யோசித்தேன். தாள்களுக்கு ஆன செலவு, அச்சிட ஆன செலவு, அட்டைப்படத்திற்கு ஆன செலவு எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு புத்தகத்தை கால் டாலருக்கு விற்கலாம் என்று முடிவு செய்தேன். பத்து புத்தகங்கங்கள் விற்றாலே எனக்கு லாபம் வரும் என்று தெரிந்தது. அதைக் கொண்டு ஒரு கல்வி சுற்றுலா போகலாம். கூடுதலாக இன்னும் இரண்டு புத்தகங்கள் விற்றால், பாப்கார்னும் குளிர்பானமும் வாங்கிக் கொள்ளலாம். நான் ஆசைப்பட்டது போலவே அது பெஸ்ட் செல்லராக உருவெடுத்தது. நாவலைப் பற்றிய செய்தி பள்ளியில் வேகமாக பரவ அன்று மதியத்திற்குள் கிட்டத்தட்ட எல்லா புத்தகங்களும் விற்றுத் தீர்ந்தன. எனக்கு கனவில் மிதப்பது போல இருந்தது. நான் எதிர்ப்பார்த்ததை விட நிறையப் பணம் சேர்ந்திருந்தது. என்னால் நடந்த எதையுமே நம்பமுடியவில்லை. ஆனால் மதியம் இரண்டு மணி வரை தான் அந்த சந்தோசம் நிலைத்தது.

இரண்டு மணிக்கு பள்ளி முடிந்ததும் தலைமையாசிரியை அறையிலிருந்து அழைப்பு வந்தது. பள்ளியை வியாபார சந்தையாக மாற்றுகிறாயா என்று என் தலைமையாசிரியை ஹிஸ்லர் கடிந்து கொண்டார். அதுவும் The Pit and the Pendulum போன்றதொரு மோசமான கதையை விற்ப்பது கூடுதல் குற்றம் என்றும் சொன்னார்.  

வீட்டு ஜமக்காளத்தில் அசுத்தம் செய்துவிட்ட நாயிடம் செய்தித்தாளை சுருட்டி வைத்துகொண்டு மிரட்டுவது போல, என்னுடைய புத்தகத்தை சுருட்டி என் முகத்திற்கு நேராக காண்பித்து வினவினார்,  “ஸ்டீவ், நீ ஏன் இது போன்ற குப்பைகளை எழுதுகிறாய் என்று புரியவில்லை. நீ திறமைசாலி. உன் திறமையை ஏன் இதுபோன்ற விஷயத்தில் வீணடிக்கிறாய்!”

நான் ஏதாவது பதில் அளிப்பேன் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவமானத்தில் குறுகி நின்றேன். பல வருடங்கள், நான் என்ன மாதிரி கதைகள் எழுதுகிறேன் என்பதை எண்ணி அசிங்கப்பட்டிருக்கிறேன். ஆனால் நாற்பது வயதில் தான் ஒரு உண்மையை உணர்ந்தேன். புனைவு எழுத்தாளனோ அல்லது கவிஞனோ, அவன் எதையாவது எழுதிவிட்டால் போதும், அவன் கடவுள் கொடுத்த திறமையை வீணடிக்கிறான் என்று சொல்லத் தொடங்கிவிடுவார்கள். நீங்கள் எழுதினாலோ, ஓவியம் வரைந்தாலோ, நடனமாடினாலோ அல்லது பாடினாலோ யாரோ ஒருவர் நீங்கள் செய்வதெல்லாம் வீண் வேலை என்று அவமானப் படுத்திக் கொண்டே தான் இருப்பார்கள்.

நான் மாணவர்களிடமிருந்து பெற்ற பணத்தை திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று தலைமையாசிரியை வலியுறுத்தினார். நான் எதிர்த்துப் பேசாமல் அதை செய்தேன். பல மாணவர்களும் புத்தகத்தை வைத்துக் கொள்வதாகவும், காசை திருப்பி தர வேண்டாமென்றும் சொன்னார்கள். ஆனால் நான் எல்லோரிடமும் காசை திருப்பிக் கொடுத்தேன். எனக்கு நஷ்டமானது தான் மிச்சம். அந்த ஆண்டு கோடை விடுமுறையில், நான் வேறொருக் கதையை எழுதி எல்லோருக்கும் விற்றேன். இழந்த பணமும் சேர்ந்து திரும்பி வந்தது. லாப நோக்கில் பார்த்தால் இறுதியில் நான் வெற்றிப் பெற்றேன் என்று தான் சொல்லவேண்டும். இருந்தாலும் என் மனதில் இருந்த அவமானம் போகவில்லை. ஏன் நான் குப்பையை எழுதுகிறேன், ஏன் நான் என் நேரத்தையும் திறமையையும் வீணடிக்கிறேன் என்று என் தலைமையாசிரியைக் கேட்டது என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் பின்னும் நான் நிறைய எழுதி பள்ளியில் பிரச்சனையில் மாட்டியிருக்கிறேன். அப்போதுதான் ஒரு நாள் என் பள்ளியின் ஆலோசகர் என்னை அழைத்தார். என்னுடைய ‘அடங்கமறுக்கும் பேனாவிற்கு வேலை வந்திருப்பதாக சொன்னார். ஜான் கவுட் ஆசிரியராக இருக்கும் லிஸ்பன் நகர வாரப்பத்திரிக்கை ஒன்றில் ஸ்போர்ட்ஸ் ரிபோர்ட்டர் இடம் காலியாக இருப்பதாகவும், அதில் நான் சேர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நான் லிஸ்பான் நகருக்கு பயணப்பட்டேன். கவுடை சந்தித்து. எனக்கு விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது என்ற உண்மையை சொன்னேன். ‘அவ்வளவு கடினமில்லை. பலரும் விடுதிகளில் குடித்துக் கொண்டே விளையாட்டுக்களைப் பார்த்து புரிந்து கொள்ளும் போது, நீ முயற்சி செய்தால் கற்றுக் கொள்ளலாம் என்றார்.

எனக்கு நிறைய மஞ்சள் காகிதங்களை கொடுத்து அதில் கட்டுரையை தட்டச்சு செய்துக் கொள்ள சொன்னார். அந்த காகிதங்கள் இன்றளவும் என்னிடம் இருக்கின்றன. மேலும் ஒரு வார்த்தைக்கு அரை சென்ட்ஸ் பணம் தருவதாக சொன்னார். என் வாழ்வில் எழுத்திற்கு கூலி தருவதாக ஒருவர் சொன்னது அதுதான் முதல் முறை.

என்னுடைய முதல் இரண்டு கட்டுரைகள் கூடை பந்து விளையாட்டைப் பற்றியது. அதை எழுதி கவுட்டிடம் கொடுத்தேன். அவர் என் முன்னாலேயே சில திருத்தங்களை செய்தார். நான் பள்ளியிலும் கல்லூரியிலும் முறையாக பயின்ற ஆங்கில இலக்கியம், கவிதை, புனைவு எழுதுதல் என எல்லாவற்றையும் விட கவுட் அந்த பத்து நிமிடங்களில் எனக்கு சொல்லித் தந்த விஷயங்கள் அதிகம் பயனுள்ளதாக இருந்தது.

“நன்றாக தான் எழுதி இருக்கிறாய். தேவையற்ற சில பகுதிகளை மட்டுமே நான் நீக்கினேன்” என்றார்.

“இனிமேல் அது போல் எழுத மாட்டேன்” என்றேன்.

அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், “நீ ஒரு கதையை எழுதும் போது உனக்கு நீயே கதையை சொல்கிறாய். நீ இரண்டாம் முறை அதை திருத்தி எழுதும் போது கதைக்கு தேவை இல்லாத விஷயங்களை நீக்குவது மட்டும் உன் வேலை.” ஒரு கதையை எழுதும் போது மனதை மூடிவைத்துவிட்டு எழுத வேண்டும். அதை திருத்தி எழுதும் போது மனதை திறந்து வைத்துக் கொண்டு எழுதவேண்டும் என்றும் சொன்னார்.

நாம் ஒரு கதையை எழுதும்வரை தான் அது நம்முடையது. அதை எழுதி முடித்துவிட்டால், அது வாசகர்களுடையது. அவர்கள் வாசித்து பாரட்டலாம். அல்லது விமர்சிக்கலாம். விமர்சகர்களைவிட பாராட்டுபவர்கள் அதிகம் அமைவது நம்முடைய அதிர்ஷ்ட்டத்தைப் பொறுத்தது.

***

இங்கிருந்து தான் நல்ல ஐடியாக்கள் பிறக்கும் என்றெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு நல்லக் கதைக்கான ஐடியா எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் தோன்றலாம். ஐடியாக்கள் ஆகாயத்தில் இருந்து நம்மை நோக்கி குதிக்கலாம். சம்மந்தமில்லாத இரண்டு வெவ்வேறு ஐடியாக்களை இணைத்தால் அது முற்றிலும் புதியதொரு கதையாக மாற வாய்ப்பிருக்கிறது. இந்த ஐடியாக்களை தேடிக் கண்டடைவது நம் வேலை அல்ல. ஒரு ஐடியா திடிரென்று தோன்றும்போது அதை இறுகப் பற்றிக்கொள்ள தெரிய வேண்டும். அவ்வளவுதான்.

***

நான் கேரி (Carrie) நாவலை எழுதத் தொடங்கும் போது எனக்கு ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை கிடைத்திருந்தது. என்னுடைய சம்பளம் வருடத்திற்கு ஆறாயிரத்தி நானூறு டாலர்கள். அதற்கு முன்புவரை சலவை தொழிற்சாலையில் சொற்ப வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த  எனக்கு, அது பெரிய சம்பளம் தான். ஆனாலும் எங்களுடைய பொருளாதார சூழல் மிக மோசமாகத்தான் இருந்தது. என் மனைவி ஒரு டோனட் கடையில் வேலை செய்தாள். நாங்கள் மிகச் சிறிய வீட்டில் குடியிருந்தோம்.

ஒரு எழுத்தாளராகவும் நான் பெரிய வெற்றி எதையும் பெற்றிருக்கவில்லை. ஆண்களுக்கான நாளிதழில் அதுவரை வெளியாகிக் கொண்டிருந்த ஹாரர், க்ரைம் மற்றும் அறிவியல் புனைவு கதைகளுக்கு பதில் காமக் கதைகள் வெளியாகத் தொடங்கியிருந்தன. நான் வெற்றி பெறமுடியாமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால் அதை மட்டுமே காரணமாக சொல்லிவிட முடியாது. உண்மையில் என் வாழ்வில் முதல் முதலாக எனக்கு எழுதுவது என்பது கடினமான விஷயமாக மாறியிருந்தது. அதற்கு என் ஆசிரியர் பணிதான் காரணம். என் உடன் பணியாற்றியவர்களுடனோ என் மாணவர்களுடனோ எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உண்மையில் ஆங்கிலம் போதிப்பதை நான் விரும்பினேன். ஆனால் வெள்ளிக் கிழமை வந்துவிட்டால், நான் அந்த வாரம் முழுக்க என் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருப்பதாக உணரத் தொடங்கினேன். ஒரு எழுத்தாளனாக என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை எண்ணி பெரும் மன உளைச்சலுக்கு ஆளான காலகட்டம் அது. முப்பது வருடங்கள் கழித்தும் பெரிதும் சோபிக்க முடியாத ஒரு எழுத்தாளனாக நான் இருந்துவிடுவேனோ என்ற பயம் வரத் தொடங்கியது. அந்த ஆசிரியர் வேலையிலேயே என் வாழ்நாளை தொலைத்து, யாராவது ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறாய் என்று கேட்டால், நான் புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று பெருமைக்காக சொல்லிக் கொள்ளும் நிலைக்கு நான் தள்ளப்படலாம் என்றும் எண்ணினேன். அதே சமயத்தில், இன்னும் அவகாசம் இருக்கிறது, பல நாவலாசிரியர்கள் தங்களுடைய ஐம்பதாவது வயதிற்கு பிறகே எழுதத் தொடங்கினர் என்று சொல்லி என்னை நானே ஏமாற்றிக் கொண்டேன். ஆனால் என் மனைவி எனக்கு பக்கபலமாக இருந்தது என்னை தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தியது. நான் பள்ளிக்கூடத்தில் வேலைப்பார்த்த போதும், அதற்கு முன்னர் சலவை தொழிற்சாலையில் வேலைப்பார்த்த போதும் வீட்டிற்கு வந்ததும்  எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். நான் எழுதுவது வீண் வேலை என்று என் மனைவி சொல்லியிருந்தால், நான் சோர்வடைந்து எழுதும் முயற்சியை கைவிட்டிருக்கக் கூடும்.  ஆனால் அவள் அப்படி சொல்லவில்லை. அவளுக்கு என் முயற்சியில் எந்த சந்தேகமும் இருக்கவில்லை. அவள் தொடர்ந்து எனக்கு ஆதரவாக இருந்து வந்தாள்.

யாராவது ஒரு எழுத்தாளர் தன்னுடைய முதல் நாவலை தன் மனைவிக்கு (அல்லது தன் கணவனுக்கு) சமர்ப்பணம் செய்திருப்பதை பார்க்கும் போதெல்லாம் நான் புன்னகை செய்வேன். அவருக்கு எழுத்தை பற்றி புரிந்து கொண்ட வாழ்க்கை துணை கிட்டியிருக்கிறது என்று எண்ணி மகிழ்ச்சி அடைவேன். எழுதுதல் என்பது மிகவும் தனிமையானதொரு வேலை. நம்மை நம்பும் ஒருவர் நம்மோடு இருப்பது நமக்கு பெரிய உத்வேகத்தை தரும். அவர்கள் நமக்காக சொற்பொழிவு ஆற்றத் தேவையில்லை. நம்மை நம்பினால் மட்டும் போதும்.

கேரி நாவலின் பிரதியை நான் டபுள்டே பதிப்பகத்திடம் பிரசுரத்திற்காக சமர்பித்துவிட்டு என் வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டேன். ஆசிரியர் பனி, குழந்தை வளர்ப்பு, இல்லற வாழ்க்கை, வெள்ளிக்கிழமை மாலை நேர ஓய்வு, கொஞ்சம் எழுத்து என வாழ்க்கை நகர்ந்தது. எனக்கு பள்ளியில் மதிய உணவு இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் ஓய்வு நேரம் இருந்தது. நான் விடைத்தாள் திருத்துவது, சிறுதூக்கம் போடுவது என்று நேரத்தை கழிப்பேன். அப்போது தான் இண்டர்காம் ஒலித்தது. அலுவலக அறையிலிருந்து அழைத்திருந்தார்கள். என் மனைவியிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாக சொன்னார்கள். நான் அவசரமாக கிளம்பினேன். பாதை நீண்டுகொண்டே போவது போல் இருந்தது. எங்கள் வீட்டில் அப்போது தொலைபேசி இருக்கவில்லை. அதற்கு மாதவாடகை கட்டும் நிலையில் நாங்கள் இல்லை. பக்கத்து வீட்டிலிருந்த தொலைபேசியிலிருந்து தான் பேசவேண்டும். அந்த நேரத்தில் என் மனைவியிடமிருந்து அழைப்பு வருகிறது என்றால் இரண்டு காரணம் தான் இருக்க முடியும் என்று நினைத்தேன். ஒன்று, என் குழந்தைகள் எங்காவது விழுந்து கைகாலை உடைத்து வைத்திருக்க வேண்டும். அல்லது என்னுடைய கேரி நாவல் பிரசுரத்திற்கு தேர்வாகி இருக்க வேண்டும்.

என் மனைவி சந்தோசத்தில் வாயடைத்து போயிருக்கிறாள் என்பது அவள் பேச தடுமாறியதிலிருந்து தெரிந்தது. டபுள் டே பதிப்பகத்திலிருந்து பில் தாம்ப்சன் எனக்கு ஒரு டெலி கிராமை அனுப்பி இருப்பதாக சொன்னாள். என்னை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்த பின்பு தான எங்கள் வீட்டில் டெலிபோன் இல்லை என்பது பில் தாம்ப்சனுக்கு தெரிந்திருக்கிறது. பின் தான் அந்த டெலி கிராமை அனுப்பி இருக்கிறார். என் மனைவி அதை போனில் படித்து காண்பித்தாள்,

வாழ்த்துக்கள். கேரி டபுள் டே மூலமாக புத்தகமாக பிரசுரமாகப் போகிறது. 2500 டாலர் முன்பணம் போதுமானதா! வருங்கலாம் காத்திருகிறது”

 இரண்டாயிரத்தி ஐந்நூறு டாலர் முன்பணம் என்பது எழுபதுகளில் கூட மிகச் சிறிய தொகைதான். ஆனால் அது அப்போது எனக்கு தெரியாது. அதை சொல்ல எனக்கு இலக்கிய முகவர்கள் யாருமில்லை. எனக்கொரு முகவர் தேவை என்பதை நான் உணர்ந்து கொள்வதற்கு முன்பே நான் என் பதிப்பாளர்களுக்கு என் புத்தகம் மூலம் மூன்று மில்லியன் டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்துவிட்டேன். கேரி, 1973 ஆண்டிலேயே பிரசுரத்திற்கு தேர்வாகி இருந்தாலும் அது 1974 ஆம் ஆண்டு தான் பிரசுரம் ஆனது. அந்த காலத்தில் டபுள்டே பதிப்பகம் ஏராளமான புத்தகங்களை, குறிப்பாக பல பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை பிரசுரித்துக் கொண்டிருந்தார்கள். நானோ மிகப் பெரிய ஆற்றில் நீந்தும் ஒரு சிறிய மீன்.  எனவே  இந்த தாமதத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

நான் வேலையை விட்டுவிடுவேனா என்று என் மனைவி கேட்டாள். ஆனால் வெறும் இரண்டாயிரத்தி ஐந்நூறு டாலரை நம்பி வேலையை விட முடியாது என்றேன். அதுவும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்றும் எனக்கு தெரியவில்லை. நான் தனி ஆளாக இருந்தாலும் பரவாயில்லை, குடும்பம் குழந்தை என்று ஆன பின் வேலையை விட முடியாது. நானும் என் மனைவியும் அன்று இரவு முழுக்க என் எழுத்துலக வருங்கால சாத்தியங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

ஒருவேளை டபுள்டே கேரி நாவலின் மறுபிரசுர உரிமையை (Paperback Reprint Rights) வேறு யாராவது பெரிய பதிப்பாளருக்கு விற்றுவிட்டால் நமக்கு எவ்வளவு கிடைக்கும் என்று என் மனைவி வினவினாள். எனக்கு உடனடியாக பதில் சொல்லத் தெரியவில்லை. மாரியோ பூசோவின் காட்பாதர் நாவலின் மறுபிரசுர உரிமை நாலு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டதாக நான் படித்திருக்கிறேன். கேரி நாவல் அவ்வளவு சம்பாதிக்கும் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் என் மனைவி கேட்டுக் கொண்டே இருந்ததால், அறுபதாயிரம் டாலர்கள் கிடைக்கலாம் என்றேன்.

“அறுபதாயிரம் டாலர்களா!” என்று அவள் அதிர்ச்சி அடைந்தாள்.

“இது சாத்தியமா” என்று மீண்டும் வினவினாள். “சாத்தியம் தான், ஆனால் ஒப்பந்தப் படி பாதி பணம் தான் கிடைக்கும்” என்றேன். முப்பதாயிரம் டாலர்கள் என்பதும் மிகப் பெரிய தொகை தான். நான் சில வருடங்கள் பள்ளியில் தொடர்ந்து வேலைப்பார்த்தால் தான் அவ்வளவு சம்பாதிக்க முடியும். இதெல்லாம் நடக்குமா என்று அப்போது தெரியாது. ஆனால் அந்த இரவுமுழுக்க இப்படி கனவு கண்டோம்.

கேரி பிரசுரத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தது. நான் எனக்கு கிடைத்த முன்பணத்தை வைத்து ஒரு கார் வாங்கினேன். பள்ளியில் என் ஆசிரியர் பணிக்கான ஒப்பந்தத்தை அடுத்த ஒரு ஆண்டிற்கு புதுபித்தார்கள். நாங்கள் வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தோம். அதுவும் சிறிய வீடு தான் என்றாலும் மீண்டும் நகர வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தோம். எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. நான் என் அடுத்த நாவலை எழுதத் தொடங்கினேன்.

உண்மையை சொல்ல வேண்டுமெனில் கேரி நாவல் என் சிந்தனை விட்டே மறைந்திருந்தது. பள்ளியிலும் வீட்டிலும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதே எனக்கு பெரிய வேலையாக இருந்தது. வயதாகிக் கொண்டிருந்த என் அம்மாவைப் பற்றி தான் என் சிந்தனைகள் இருந்தன. ஒரு ஞாயிற்றுக் கிழமை  நான் என் வீட்டில் தனியாக அமர்ந்து என்னுடைய புதிய நாவலை எழுதிக் கொண்டிருந்தேன்.  என் மனைவி, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவளுடைய தாய் வீட்டுக்கு சென்றிருந்தாள். அப்போது பில் தாம்ப்சனிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.

“நீ அமர்ந்திருக்கிறாயா?” என்று பில் கேட்டார்.

நான் இல்லை என்றேன். என் வீட்டின் தொலைபேசி அடுப்படி சுவற்றில் மாற்றப்பட்டிருந்தது. அதனால் நான் நின்றுகொண்டே பேசவேண்டியதாயிற்று.

“நீ அமர்ந்துகொள்வது நல்லது” என்றார் அவர்.

“கேரியின் பேப்பர்பேக் உரிமையை சிக்னட் பதிப்பகம் வாங்கிக்கொண்டுவிட்டது. நான்கு லட்சம் டாலர்கள் விலை பேசியிருக்கிறார்கள்” என்றார்.

நான் அமைதியாக நின்றேன். நான் சிறுவயதில் இருக்கும்போது என் அப்பா அம்மாவிடம் சொல்வார், “உன் மகன் வாயை திறந்தால் பேசிக் கொண்டே இருக்கிறான்”

உண்மைதான். நான் என் வாழ்நாள் முழுக்க அப்படியே தான் இருக்கிறேன். ஆனால் அந்த மே மாதத்தில், 1973 ஆம் ஆண்டின் அன்னையர் தினத்தில், நான் பேச முடியாமல் ஸ்தம்பித்து நின்றேன்.

“நான்கு லட்சம் டாலர்கள் என்றா சொன்னீர்கள்!” என்று கேட்டேன்.

“ஆம். நான்கு லட்சம் டாலர்கள். ஒப்பந்தப்படி உனக்கு இரண்டு லட்சம் டாலர்கள் கிடைக்கும். வாழ்த்துக்கள் ஸ்டீவ்” என்றார். என்னால் நம்ப முடியவில்லை. நான் வசித்த அந்த மிகச் சிறிய வீட்டைப் பார்த்தேன். அந்த சிறுபெட்டிக்குள் வசித்த எனக்கு அவ்வளவு பெரிய தொகை லாட்டரியில் ஜெயித்தால் தான் சாத்தியம். என்னால் மேற்கொண்டு நிற்க முடியவில்லை. அப்படியே நிலையில் சாய்ந்துகொண்டேன். அவர் சொன்ன தொகை உண்மைதானா என்று மீண்டும் மீண்டும் வினவினேன். அவர் சிரித்தார். அதன் பின் நாங்கள் அரைமணி நேரம் பேசினோம். ஆனால் என்ன பேசினோம் என்பது ஒரு வரிக்கூட நினைவிலில்லை. அவருடன் பேசி முடித்ததும் நான் என் மனைவியின் வீட்டை தொடர்புகொண்டேன். அவள் கிளம்பிவிட்டாள் என்று அவளின் தங்கை சொன்னாள்.

நான் அறைக்குள்ளேயே பல முறை நடந்தேன். அந்த சந்தோசமான செய்தியை கேட்டதிலிருந்து என் கால் நிலைக் கொள்ளவில்லை. நான் ஷூவை அணிந்துகொண்டு வெளியே கிளம்பினேன். ஒரே ஒரு கடைதான் திறந்திருந்தது. என் மனைவிக்கு அன்னையர் தின பரிசாக எதையாவது வாங்கித் தர வேண்டும் என்று எண்ணினேன். அந்த கடையில் பகட்டான பொருளென்று எதுவும் இல்லை. இறுதியாக ஒரு ஹேர் ட்ரையரை வாங்கினேன்.

நான் வீட்டுக்கு திரும்பியபோது என் மனைவி அடுப்படியில் வேலை செய்துகொண்டிருந்தாள். ரேடியோவில் ஓடிக்கொண்டிருந்த பாடலோடு இணைந்து அவளும் பாடிக்கொண்டிருந்தாள். நான் அவளிடம்  ஹேர் ட்ரையரை கொடுத்தேன். அதற்கு முன் அந்தப் பொருளை பார்த்ததே இல்லாதவள் போல் பார்த்துவிட்டு, “எதற்காக இந்த பரிசு!” என்று கேட்டாள். நான் அவளை இழுத்து அணைத்து புத்தக உரிமை விற்பனை ஆனதைப்பற்றி சொன்னேன். அவளுக்கு முதலில் புரியவில்லை. நான் மீண்டும் சொன்னேன். அவள் நான் செய்தது போலவே சிறுபெட்டி போல் இருந்த எங்கள் வீட்டை ஒருமுறை பார்த்தாள். பின் என் மீது சாய்ந்துகொண்டு அழுதாள்.

மில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்

Excerpts from Memoir by Paul Haggis, Screenwriter of Crash & Million Dollar Baby
Presented by Linda Seger on her book ‘Making Good script Great’

தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்

***

மில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்

நான் சிறுவனாக இருந்தபோதே எழுதத் தொடங்கிவிட்டேன். பெரும்பாலும் சிறு பிள்ளைகள் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பது வழக்கம்தான். அந்தத் திறமை அவர்களுக்கு பிறவியிலேயே கிடைத்ததாகதான் எல்லா பெற்றோர்களும் எண்ணுகின்றனர். என்னுடைய பெற்றோர்களும் அப்படியே எண்ணி இருக்கக்கூடும்.  ஆனால் அது உண்மை அல்ல. பயிற்சியே எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நான் எழுதிய கட்டுரையை என்னுடைய ஆசிரியை வாங்கிப் பார்த்தார். அவர் ஒரு கன்னியாஸ்திரி. அன்பான பெண்மணி. எனக்கு A கிரேட் போட்டதோடு அல்லாமல் நீ நன்றாக எழுதுகிறாய் என்றும் பாராட்டினார். அந்தத் தருணம் தான் என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. என்னால் நன்றாக எழுத முடிகிறது என்று சொல்லிவிட்டார்கள், இனிமேல் நாம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் பின்னால் நான் நிறைய எழுதத் தொடங்கினேன்.

பதின்ம வயதை எட்டும் போது நான் நிறைய நாடகங்கள் எழுதத் தொடங்கியிருந்தேன். அவையெல்லாம் ஒரு வகையில் மோசமான நாடகங்களே! அந்த நாடகங்களை நானே தயாரித்தேன் என்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அவை எவ்வளவு மோசமான நாடகங்கள் என்று! அங்கிருந்து தான் என்னுடைய ஹாலிவுட் பயணமும் மோசமான தொலைக்காட்சி காமெடிகளை எழுதும் பழக்கமும் தொடங்கியது எனலாம்.

Paul Higgis

என் தந்தை நாடகங்கள் மீது பெரும் காதல் கொண்டிருந்தார். என் சிறு வயதில் அவர் பழைய எரிந்து போன தேவாலயம் ஒன்றை வாங்கினார். நாங்கள் அதைப் புனரமைத்து 99 இருக்கைகள் கொண்ட திரையரங்காக மாற்றினோம். அதற்காக என் தந்தை நிறைய செலவழித்தார் என்றாலும் அதன் பலனை நாங்கள் அனுபவித்தோம். நான் திரைப்படங்களின் மீது தீராத காதல் கொண்டிருந்ததால்  எங்களுடைய சிறிய திரையரங்களில்  படங்களை  திரையிடத் தொடங்கினேன். என்னிடம் 16 mm ப்ரொஜெக்டர் ஒன்று இருந்தது. நான் பார்க்க விரும்பிய எல்லா படங்களையும் அங்கே திரையிட்டேன். Persona, Breathless போன்ற ஐரோப்பிய படங்களை எங்கள் நகரத்தில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த படங்களை திரையிட்டேன். அதே பட்டியலில் ஹிட்ச்காக், அந்தோனியாணி,  கோஸ்டா காவ்ரஸ் ஆகியோரின் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். படங்களை வாங்கி திரையிடுவதும் அதைப்  பார்ப்பதுமே எனக்கான திரைப்படக் கல்வியாக அமைந்தது.

பின் நான் புகைப்படக்கலையையும், ஒளிப்பதிவு கலையையும் படித்தேன். சினிமா எடுக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்தது ஒழிய அதை எப்படி சாத்தியமாக்குவது என்று எனக்கு தெரியவில்லை. கனடாவில் இருந்து கொண்டே சினிமா எடுக்க முடியாது, அங்கே அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதுவும் நான் இருந்தது ஒரு சிறு நகரத்தில். அதனால் ஹாலிவுட்டிற்கு இடம் மாறிக் கொள்வதே சிறந்த வழி என்று என் தந்தை அறிவுரை கூறினார். இருபத்தி இரண்டு வயதில் நான் ஹாலிவுட்டிற்கு குடி பெயர்ந்தேன்.

நான் கனடாவில் வசித்தபோதே, தொலைக்காட்சி  தொடர்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதை எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அந்த முயற்சி வெற்றிப் பெறவில்லை. தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓரிரு திரைக்கதைகளை எழுதி முடித்தபின்பும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதனாலேயே நான் ஹாலிவுட்டிற்கு இடம்  மாறினேன். என்  பெற்றோர்கள், முதல் வருடம் முழுக்க என் செலவிற்காக வாரம் நூறு டாலர்கள்  அனுப்பி வைத்தனர். அது எனக்கு பெரும் உதவியாக  இருந்தது. நான் சிறுசிறு கூலி வேலைகள் செய்யத் தொடங்கினேன். என் மனைவி ஒரு ஹோட்டலில் பணியாற்றினாள். எங்களுக்கு குழந்தையும் பிறந்திருந்தது. வாழ்க்கையை நகர்த்துவது கடினமாக இருந்தாலும் எப்படியோ சமாளித்து  வந்தோம்.

என் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு சில  காலம் ஆனது. எவ்வளவு காலம் என்பதை என் தந்தை  துல்லியமாக கவனித்து வைத்திருக்கிறார். அதாவது நான் என் முதல் திரைக்கதையை விற்பனை செய்வதற்கு எனக்கு மூன்று வருடங்கள்,  இரண்டு மாதங்கள், பத்து நாட்கள் ஆனதாக அவர் சொல்லுவார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் நான் spec திரைக்கதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். திரைப்படங்களுக்கென  இரண்டு  திரைக்கதைகளையும், தொலைக்காட்சி தொடர்களுக்கென  ஆறு மாதிரி திரைக்கதைகளையும் எழுதி வைத்திருந்தேன் என்று  நினைக்கிறேன்.

அதே நேரத்தில், எழுத்து பயிற்சி பட்டறைகள் பலவற்றிலும்  பங்கேற்றேன். அதன் மூலம் எனக்கு நிறைய நபர்களின் நட்பு  கிடைத்தது. என்னோடு சேர்ந்து எழுதுவதற்கு சிலர் முன்  வந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் எனக்கு  பெரிதும் பயன்பட்டன என்றே சொல்ல  வேண்டும். இந்த காலகட்டத்தில் பலரை  சந்திப்பதும், தயாரிப்பு நிறுவனங்களுக்கு என் திரைக்கதைகளை அனுப்புவதுமே என் வேலையாக இருந்தது. நான் எழுதி வைத்த எந்த திரைக்கதையையும் என்னால் விற்க முடியாத  போதும், எனக்கு எழுதும் வாய்ப்புகள் வரத்  தொடங்கின. அப்படிதான் நான் கார்ட்டூன் நாடகங்கள் எழுதும் வாய்ப்பினைப்  பெற்றேன். கார்ட்டூன் எழுத்தாளர் மைக்கேல் மாரருடன் இணைந்து ஸ்கூபி டூ, ரிச்சி ரிச் போன்ற நாடகங்களை  எழுதினேன். இதற்கிடையில்   பல நிறுவனங்களுக்கு கதைகளை சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு வாரத்தில்   குறைந்த பட்சம் இருபது ஐடியாக்களை  யோசித்து, அதில் ஆறேழு ஐடியாக்களை முழுவதுமாக எழுதுவோம். மற்றதை படங்களாக வரைந்து எடுத்துச்  செல்வோம். இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.

***

நான் பெரும்பாலும் இரவில் எழுதுவதையே வழக்கமாக கொண்டிருந்தேன். ஏனெனில் பகலில் வருமானத்திற்காக வேலை செய்ய வேண்டியிருந்தது.  எனக்கு  முழு நேர  வேலை என்று எதுவும்  கிடையாது. பகல் நேர வேலைகள் கிடைக்கும் போது செய்து  வந்தேன். எனக்கு குழந்தையும் இருந்ததால் எழுதுவதற்கு நேரம் ஒதுக்குவது கடினமாக இருந்தது. இருந்தாலும் சரியாக திட்டமிட்டு  கிடைக்கும்  ஒவ்வொரு தருணத்திலும் எழுதினேன். தினமும் கொஞ்ச நேரமாவது எழுதிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்படியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆரம்ப காலங்களில் ஏழு நாட்களும் எழுதி வந்தேன். என் பகல் நேர வேலைக்கு ஏற்ப நான் எழுதும் நேரம்  மாறுபடும். இரவு பத்து மணிக்கு  வீட்டுக்கு  வந்தாலும், மறுநாள் காலை  சீக்கிரம் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தாலும் நான் எழுதுவதை விட்டுவிட  வில்லை. அரை மணி நேரமாவது தினமும் எழுதுவேன். எழுதாமல் இருந்தால் எந்த மாற்றமும் நிகழாது என்பதை நான் தெளிவாக  அறிந்திருந்தேன். அதனாலேயே தினமும் எழுதினேன். இந்த பழக்கம் என்னிடம் இன்றளவும்  தொடர்கிறது. என்றாவது எழுதாமல் விட்டுவிட்டால் என்னை குற்ற உணர்ச்சி ஆக்கிரமித்துக்  கொள்ளும்.

***

சினிமாவிற்கென்று திரைக்கதையை எழுதும் போது என் மனதில் தோன்றும் beat-களை  குறித்து வைத்துக்  கொள்வது என்னுடைய வழக்கம்.  பொதுவாக, கணினியிலேயே  நேரடியாக குறிப்புகளை எழுதிவிடுவேன். சில நேரங்களில் index  card-களில் குறிப்புகளை எழுதுவேன். என் மகள் இணைந்து கொண்டால், நான் சொல்ல சொல்ல அவள் குறிப்புகளை எழுதுவாள். நான் பின்னர் அந்த அட்டைகளை சரியாக தொகுப்பேன். திரைக்கதை குறிப்புகள் திருப்தி அளிக்கும் வரை அவற்றை திருத்தி எழுதும் பணி தொடரும். பீட்ஸ் திருப்திகரமாக அமைந்த பின்னர் தான் அவுட்லைன் எழுதத்  தொடங்குவேன்.

கிட்டதட்ட இருபத்தைந்து வருடங்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை எழுதியவன் நான். திரைக்கதையின் கட்டமைப்பை அங்கிருந்து தான் கற்றுக் கொண்டேன். எப்படி சுருக்கமாக, நேரடியாக காட்சிகளுக்குள் நுழைவது என்பதை தொலைக்காட்சி  தொடர்கள் தான் எனக்கு சொல்லித் தந்தன. அங்கே கதாப்பாத்திரத்தை துரிதமாக அடுத்த கட்டத்திற்கு  நகர்த்த வேண்டும். அதற்கு அதிக அவகாசம்  இருக்காது. இதெல்லாம் தொலைக்காட்சி தொடர்களுக்கே உரித்தான  சவால்கள். நான் அதில் வெற்றி பெற்றேனா என்று  தெரியாது. ஆனால் அத்தகைய சவால்களை  விரும்பி ஏற்றேன்.

***

சில கதைகள் மிக துரிதமாக உருவாகிவிடும். நான் crash கதையின் அவுட்லைனை அரை நாளில் எழுதினேன். எல்லா கதாப்பாத்திரங்களையும், அவை எப்படி  ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள போகிறது என்பதையும் அப்போதே முடிவு  செய்துவிட்டேன். பின்னர் ஒருவருடம் அந்த திரைக்கதையை எழுதுவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்தேன். அதற்காக நிறைய  வாசித்தேன். பலரிடம்  உரையாடினேன்.

பின் நான் மில்லியன்  டாலர் பேபி படத்தை எழுத வேண்டியிருந்தது. அந்த திரைக்கதையை எழுதி முடித்ததும் என் நண்பர் பாபி மொரஸ்கோ அதில் சில திருத்தங்களை செய்து  கொடுத்தார். மீண்டும் தனியாக இன்னொரு கதையை எழுதும் மனநிலையில் நான்  இல்லை. என்னோடு இணைந்து பணியாற்ற விருப்பமா என்று பாபியை  வினவினேன். அவர் சரி என்றதும் கிராஷ் படத்தின் இருபத்தைந்து பக்க ஒன்லைனை அவரிடம்  கொடுத்தேன். அடுத்த இரண்டு வாரத்தில் நாங்கள் இணைந்து அதன் முதல் டிராஃப்டை  எழுதி  முடித்தோம்.பின்னர் சில மாற்றங்களை செய்து இரண்டாம் டிராஃப்டை எழுதி முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள்  ஆனது. நான் அவ்வளவு துரிதமாக ஒரு  திரைக்கதையை எழுதியதில்லை.  அந்த பாத்திரங்கள் எல்லாம் என் நிஜ அனுபவத்தில் இருந்து உருவானதாலும், நான் அந்த கதாப்பாத்திரங்களாகவே  வாழ்ந்ததாலும் அந்த திரைக்கதையை  என்னால் துரிதமாக எழுத முடிந்தது.

In the Valley of Elah  மற்றும் Million Dollar Baby ஆகிய படங்கள் ஒவ்வொன்றையும் எழுத ஒரு வருட காலம் ஆனது. ஒன்று உண்மை சம்பவத்தை மையப்படுத்தியது. இன்னொன்று சில சிறுகதைகளை தழுவியது. இந்த இரண்டு படங்களையும் எழுத நான் அதிகம்  மெனக்கெட்டேன் என்றே சொல்ல வேண்டும். ஆனால் கேசினோ ராயல் படத்தை என்னால் மெனக்கெடாமல் எழுத  முடிந்தது. நான் அந்த கதையை பின்னிருந்து எழுதினேன். அதன்  இயக்குனரும், தயாரிப்பாளர்களும் வேறொருவர் எழுதிய திரைக்கதையோடு என்னை வந்து சந்தித்தனர். அதன்  மூன்றாம் ஆக்ட்டில் பிரச்சனை இருந்ததை நான்  கண்டுகொண்டேன். அதனால் முதலில் மூன்றாம் ஆக்ட்டை மாற்றி எழுதினேன். பின்னர் அதற்கேற்ப இரண்டாம் ஆக்ட்டை எழுதினேன். அதன் பின்னர் தான் அதன் முதல் பகுதியை எழுதினேன். இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.

***

எனக்கு எழுதுவது பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். கதாப்பாத்திரங்களை எழுதுவது என்பது எனக்கு எப்போதும் பிடித்த விஷயமாக இருக்கிறது. மற்றபடி காமெடி படமா,  ட்ராமாவா, சஸ்பென்ஸ் படமா, மர்மக் கதையா என்ற பாகுபாடெல்லாம் எனக்கு இல்லை. நல்ல கதைகளை சொல்வதையே நான்  விரும்புகிறேன். என்னால் எப்படியெல்லாம் அதை சொல்ல முடிகிறதோ அப்படியெல்லாம்  சொல்வேன். அர்த்தமுள்ள விஷயங்களை எழுதுவதே என் நோக்கம். அந்த அர்த்தம் கதைக்குள் பொதிந்து இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.

நான் புதிய எழுத்தாளர்களுக்கு சொல்ல  விரும்புவது எல்லாம் ஒன்றே  ஒன்றுதான். “உங்கள் மனதிற்கு பிடித்ததை எழுதுங்கள்”. அந்த தயாரிப்பு நிறுவனம் இத்தகைய கதையை  கேட்கிறார்கள், அந்த  நடிகர் இதுபோன்ற ஒரு கதையை கேட்கிறார் என்றெல்லாம்  யாரவது மேலாளரோ, உங்கள்  நண்பர்களோ சொல்லக்  கூடும். அதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். அதெல்லாம் நேர விரையம். அது போலெல்லாம் முயற்சி செய்து நான் என் வாழ்நாளில் பல ஆண்டுகளை  தொலைத்திருக்கிறேன். கொலம்பியா நிறுவனம் பேய் கதையை கேட்கிறார்கள் என்று கேள்விப்பட்டு நான் பல பேய் கதைகள் எழுதினேன். பல மாதங்கள் வீணானதுதான்  மிச்சம்.

எனக்கு வெற்றி மிக தாமதமாகதான்  வந்தது. அதுவும் Crash மற்றும் Million Dollar Baby கதையை எழுதிய பின்தான் அந்த வெற்றிக்  கிட்டியது. அவை இரண்டுமே என்னை ஆழமாக பாதித்த கதைகள். அவை விற்பனையாக நான்கரை ஆண்டுகள் பிடித்தன. என்றாலும், அவை திரைப்படமாக  உருவாக்கப்பட்டன. என் மனதிற்கு பிடித்து, நான் அவற்றை எழுதியதால் தான் அந்த வெற்றி சாத்தியமானது என்று நினைக்கிறேன்.

நான் எப்போதும்  யோசிப்பது உண்டு. “எப்படி நான் நல்ல கதையை கண்டுகொள்ளப் போகிறேன்!” இன்னொரு நல்ல கதையை நான் கண்டுகொள்ளாமல் போய் விடுவினோ, அப்படியே கண்டு கொண்டாலும் அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியாமல் போய்விடுமோ என்றெல்லாம் நான் எண்ணி அச்சப்படுவது உண்டு. ஆனால் வெற்றியை நம்மால் திட்டமிட  முடியாது. உங்கள் படங்கள்  ஜெயிக்கலாம், அல்லது  தோற்கலாம். ஆனால் அதற்கும் உங்கள் திரைக்கதையின் தரத்திற்கும் சம்பந்தமில்லை. உங்கள் இயன்றவரை சிறந்த கதைகளை நீங்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான்.  உங்கள் கதையை நீங்களே  இயக்கினாலோ, அல்லது தயாரித்தாலோ மிகவும்  சந்தோசம்.  இல்லையேல், உங்கள் கதையை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அவர் அதை நன்றாக எடுக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பது மட்டுமே உங்கள் வேலை.

***

 

என் ஆசான்- அகிரா குரோசவா

1974 ஆகஸ்ட் மாதம், என்னுடைய குருநாதர் யமா-சண் (எ) யமாமோட்டோ கஜிரோ படுத்த படுக்கையாக இருக்கிறார், அவர் நலம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற செய்தி என்னை வந்தடைந்தது. என்னுடைய படமான டெர்ஷு உஷாலாவை (Dersu Uzala) தொடங்குவதற்காக நான் சோவியத் யூனியன் செல்லவிருந்த தருணம் அது. படப்பிடிப்பு ஒருவருடத்திற்கு மேல் நடக்கும் என்பதை நான் அறிந்திருந்தேன். அந்த நேரத்தில் யமா சண் அவர்களுக்கு ஏதாவது நிகழ்ந்தால் என்னால் ஜப்பானிற்கு திரும்பி வர இயலாது என்பதை அறிந்த வருத்ததோடு நான் அவரை சந்திக்க அவர் இல்லத்திற்கு சென்றேன். அவருடைய வீடு, டோக்கியோவின் புறநகரில் செய்ஜோ மலைப்பகுதியில் அமைந்திருந்தது. வீட்டையும் அதன் நுழைவாயிலையும் இணைத்த அந்த செங்குத்தான பாதையின் இருபுறத்திலும் யமா-சண்னின் துணைவியார் ஏரளமான பூக்களை நட்டிருந்தார்.  துக்க மனநிலையிலிருந்த எனக்கு அந்த பூக்களின் வண்ணம் உவப்பாக இல்லை.

யமா-சண் மிகவும் மெலிந்து காணப்பட்டார். அவருடைய மிக நீண்ட மூக்கு மேலும் நீண்டு காட்சியளித்தது. அவருடைய உடல் நலத்தை விசாரித்த நான், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்ற சம்ப்ரதாயமான வார்த்தைகளை உதிர்த்தேன். மிகவும் சன்னமான குரலில், “நீ ரொம்ப பிசினு தெரியும், இருந்தாலும் இவ்ளோ தூரம் வந்ததுக்கு நன்றி” என்றார். மேலும், “உன் ரஷ்யன் உதவி இயக்குனர் எப்டி?” என்று வினவினார்.

“நல்லவர். நான் சொல்றதெல்லாம் எழுதிடுறார்” என்றேன். நான் சொன்னதை கேட்டதும் சப்தமாக சிரித்தவர்,

“வேற எதையும் செய்யாம எழுதுற வேலைய மட்டும் செய்ற உதவி இயக்குனரால ஒரு ப்ரோயஜனமும் இல்ல” என்றார். அவர் சொல்வதைப் பற்றி நானும் யோசித்திருக்கிறேன். ஆனால், அந்த நேரத்தில் அதைப் பற்றியெல்லாம் பேசி அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை.

“அவர் ரொம்ப நல்லவர் மட்டும் இல்ல, ரொம்ப நல்லா வேலை செய்யக் கூடியவரும் கூட” நான் சிறு பொய்யோடு அந்த பேச்சை முடித்துக் கொண்டேன்.

“அப்படினா, ஒன்னும் பிரச்சனை இல்லை” என்றவர், சுகியாக்கி (ஜப்பானிய உணவு) பற்றி பேசத் தொடங்கினார்.

அந்த காலத்தில் கிடைத்த சுகியாக்கி போல் சுவையான சுகியாக்கி ஒரு உணவகத்தில் கிடைப்பதாக சொன்ன அவர், அந்த இடத்திற்கு எப்படி போகவேண்டும் என்று வழியையும் சொன்னார். பின், ஒரு காலத்தில் நாங்கள் சேர்ந்து சென்ற உணவகத்தைப் பற்றியெல்லாம் பேசினார். தற்போது தனக்கு பசி அறவே எடுப்பதில்லை என்று அவர் சொன்னபோது, பசியற்றவர் உணவுகளைப் பற்றியும் உணவககங்களைப் பற்றியும் அவ்வளவு உற்சாகமாக உரையாடுவதை எண்ணி என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. ஒருவேளை என்னை ரஷ்யாவிற்கு மலரும் நினைவுகளோடு அவர் வழியனுப்ப விரும்பியிருக்கலாம்.

மாஸ்கோவில் இருந்தபோது, யமா சண் இறந்துவிட்ட தகவல் என்னை எட்டியது. யமா சண்ணை அவரது இறுதி நாட்களைக் கொண்டு நான் அறிமுகப் படுத்துவது  விசித்திரமாக தோன்றலாம். ஆனால் அதற்கு காரணம் இருக்கிறது. தான் தன் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருந்த போதும், அவருடைய அக்கறை எல்லாம் தன்னுடைய உதவி இயக்குனர்களின் மீதே இருந்தது என்பதை நான் பதிவு செய்யும் பொருட்டே இதையெல்லாம் சொல்கிறேன். தன் உதவி இயக்குனர்களின் மீது இந்த அளவிற்கு அதிக கவனம் செலுத்திய இயக்குனர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.

ஒரு படத்தை தொடங்கும் போது, இயக்குனரின் முதல் வேலை தன்னுடைய குழுவை தேர்ந்தெடுப்பது. யமா சண், தன் படத்தை தொடங்கும் போது யாரை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். எல்லா விசயங்களிலும் திறந்த மனதுடன், சகஜமாக இருக்கும் யமா சண், உதவி இயக்குனர்களை தேர்ந்தெடுக்கும் விசயத்தில் மட்டும் மிகவும் கறாராக இருந்தார். யாரவது புது ஆள் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்றால், யமா சண் அவரைப் பற்றி, அவரின் குணநலன்கள் பற்றி மிகவும் தீவிரமாக விசாரிப்பார். அதில் திருப்தி அடைந்தால் தான் அவர்களை சேர்த்துக் கொள்வார். ஆனால் அவர்களை ஏற்றுக் கொண்டப் பின், சீனியரிட்டி சார்ந்த பாகுபாடுகள் எல்லாம் யமா சண்னிடம் இருக்காது. எல்லாரையும் சரிசமமாக நடத்துவார். எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ப்பார். இந்த சுதந்திரமான வெளிப்படையான சூழல் தான் யமாமோட்டோ குழுவின் அடையாளம் .

akira_kurosawa_1196099       Image Courtesy: Marian Avramescu

1937 முதல் 1941 ஆம் ஆண்டு வரை நான் யமா சண்னோடு நான் அதிக படங்கள் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் மூன்றாம்நிலை உதவி இயக்குனராக இருந்த நான், முதல் நிலை உதவி இயக்குனரானேன். செகண்ட் யூனிட் இயக்கம், படத்தொகுப்பு, டப்பிங் போன்ற வேலைகளையும் நான் செய்ய வேண்டியிருந்தது. நான் அந்த நிலையை அடைய எனக்கு நான்கு ஆண்டுகள் ஆனாலும், ஒரே ஓட்டத்தில் ஒரு மலை மீது ஏறிவிட்டதாகவே நான் உணர்ந்தேன்.

யமாமோட்டோ குழுவில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டம்தான்.  என்னால் வெளிப்படையாக எதைப் பற்றியும் பேச முடிந்தது. எனக்கு நிறைய வேலைகள் இருந்தன. நான் மிகுந்த ஆர்வத்தோடு அவற்றை செய்து கொண்டு வந்தேன். ஆனால் அது நாங்கள் பணியாற்றிய P.C.L சினிமா நிறுவனம், மற்ற நிறுவனங்களின் இயக்குனர்களையும் நடிகர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு ‘டோகோ’ என்ற பெரிய நிறுவனமாக வளரத் தொடங்கிய காலக் கட்டம்.  அதனால், மற்ற ஸ்டூடியோ நிறுவனங்களிடமிருந்து தனித்து தெரிவதற்காகவே எங்கள் நிறுவனம், ஒவ்வொரு படத்திலும் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தியது. சூழ்நிலை மிகவும் கடினமாக மாறி வந்தது. ஒவ்வொரு வேலையும் பெரும் உழைப்பை கோரியது. இதுவே ஒருவருக்கு கிடைக்கக் கூடிய பெரும் பயிற்சியாக இருக்க முடியும் என்று நான் சொல்ல வரவில்லை. இரவில் ஒரு நாள் கூட நான் சரிவர உறங்கியதில்லை என்பதே நான் சொல்ல வருவது. அந்த காலத்தில், ஒரு படப்பிடிப்பு குழுவிற்கு இருந்த மிகப்பெரிய ஆசை, நல்ல உறக்கம் மட்டுமே. குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு கொஞ்சமாவது இரவு ஓய்வு கிட்டியது. ஆனால் எங்களைப் போன்ற உதவி இயக்குனர்கள் அப்போதும் அடுத்த நாள் எடுக்க வேண்டிய காட்சிகளுக்கான வேலைகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

எங்களுக்கு ஓய்வே இருக்காது. அப்போதெல்லாம், ஒரு பெரிய மெத்தை விரிக்கப்பட்ட ஒரு பெரிய அறை என் கற்பனையில் தோன்றி மறையும். நான் அதில் உறங்குவதாக எண்ணி சந்தோசப் படுவேன். ஆனாலும் அந்த கற்பனைகளை ஒதுக்கிவிட்டு, கண்ணில் எச்சிலை தடவிக்கொண்டு மீண்டும் வேலையில் இறங்கிவிடுவோம். ஒவ்வொரு படத்தையும் சிறப்பாக உருவாக்கும் பொருட்டு உதவி இயக்குனர்களாகிய நாங்கள் எங்களிடம் மிச்சம் மீதியிருந்த தெம்பையெல்லாம் கொடுத்தோம். யமா சண் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையே விடாது உழைக்கும் இந்த மனப்பாங்கை எங்களுக்கு கொடுத்தது. இந்த மனப்பாங்கு பின்னாளில் நாங்கள் படம் இயக்கும்போதும் எங்களிடம் இருந்தது.

யமா சண்ணுக்கு கோபமே வராது. அப்படியே வந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். அதனால், அவர் கோபமாக இருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு நான் தான் உணர்த்துவேன். மற்ற ஸ்டூடியோக்களிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த நடிகர்கள் பலரும் மிகவும் சொகுசாக, சுயநலம் கொண்டவர்களாக வார்த்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு தாமதமாக வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அது பலநாள் தொடர்ந்தாலும் யமா சண் கோபப் படமாட்டார். ஆனால் குழுவினர் ஆத்திரம் அடைவார்கள். இது வேலையை பெரிதும் பாதிக்கும். ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும்போது, யமா சண் குழுவினர் அனைவரையும் அழைத்து, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்வார். மறுநாள் அந்த நடிகர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும், “இன்னைக்கு படப்பிடிப்பு முடிஞ்சிருச்சு, கிளம்பாலாம்” என்பார் யமா சண். உடனே நாங்கள் அனைவரும் கிளம்பி விடுவோம். அந்த நடிகரும் அவரது உதவியாளர் மட்டுமே தளத்தில் இருப்பார்கள்.  நாங்கள் எதிர்ப்பார்த்திருந்ததை போல் அந்த நடிகரோ அவரது உதவியாளரோ யமா சண்னின் ஓய்வறைக்கு வந்து, எங்களால் தான் படப்பிடிப்பு ரத்தாகிவிட்டதா என்று பயந்துகொண்டே கேட்பார்கள். மிக கோபமாக முகத்தை வைத்துக் கொள்ளும் படி நான் யமா சண்னிடம் முன்னதே சொல்லிவிடுவேன். அவர் எதுவும் பேசாமல் அப்படியே இருப்பார். நான் மட்டும், “நீங்கலாம்  லேட்டா வரதுக்காக நாங்க schedule போட்டு வைக்கல!” என்று அவர்களுக்கு உரைக்கும் தொனியில் சொல்லி வைப்பேன். மறுநாளிலிருந்து அவர்கள் சரியான நேரத்திற்கு வந்துவிடுவார்கள்.

செகண்ட் யூனிட்டில் நாங்கள் எடுத்து தரும் காட்சிகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றாலும் படத்தில் சேர்த்துக்கொள்வார். படம் வெளியாகும் போது எங்களை திரையரங்கிற்கு அழைத்து சென்று, நாங்கள் எடுத்த காட்சிகளை சுட்டிக் காண்பித்து, “இதை வேறமாதிரி எடுத்திருந்தா இன்னும் நல்லா வந்திருக்கும் இல்ல?” என்று கேட்டு, ஏன் அப்படி எடுத்திருக்க வேண்டும் என்பதையும் விளக்குவார். தன் உதவி இயக்குனர்களுக்கு கற்றுத் தருவதற்காக  தன்னுடைய சொந்த படத்தையே தியாகம் செய்துகொள்ளும் மனப்பாங்கு அவருடையது. எனக்கு அப்படி தான் சொல்லத் தோன்றுகிறது.

எங்களுக்கு இப்படி சிறப்பாக கற்றுத்தந்த அவர் பின்னொருநாள் ஒரு பத்திரிக்கை பேட்டியில், “நான் குரோசவாவுக்கு எப்படி குடிக்கனும்னு மட்டும் தான் சொல்லிக் கொடுத்தேன்” என்றார். இத்தகைய தன்னலமற்ற ஒரு மனிதருக்கு எப்படி நன்றி கடன் செலுத்த முடியும்? இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம், அவருடைய சீடர்களின் படங்கள் எதுவுமே யமா சண்னின் படங்களை ஒத்திருக்க வில்லை. சீடர்கள்  என்று அழைப்பதை அவர் விரும்பியதில்லை. அவர் தன்னுடைய உதவி இயக்குனர்களை கட்டுப்படுத்த முயற்சித்ததேயில்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனிப்பட்ட திறமையை வளர்த்தெடுக்கும் பொருட்டு எல்லோரையும் ஊக்குவித்தார். வழக்கமாக ஒரு ஆசானிடம் இருக்கும் எந்த கடுமையுமின்றி அவரால் இதையெல்லாம் சாத்தியப் படுத்த முடிந்தது. யமா சண் ஒரு தலைசிறந்த ‘ஆசான்’ என்பதில் மாற்று கருத்தே இல்லை.

***

Excerpts from ‘Something like an Autobiography’ by Akira Kurosawa & Audie E Bock

தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்

***