மில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்

Excerpts from Memoir by Paul Haggis, Screenwriter of Crash & Million Dollar Baby
Presented by Linda Seger on her book ‘Making Good script Great’

தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்

***

மில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்

நான் சிறுவனாக இருந்தபோதே எழுதத் தொடங்கிவிட்டேன். பெரும்பாலும் சிறு பிள்ளைகள் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பது வழக்கம்தான். அந்தத் திறமை அவர்களுக்கு பிறவியிலேயே கிடைத்ததாகதான் எல்லா பெற்றோர்களும் எண்ணுகின்றனர். என்னுடைய பெற்றோர்களும் அப்படியே எண்ணி இருக்கக்கூடும்.  ஆனால் அது உண்மை அல்ல. பயிற்சியே எல்லாவற்றையும் சாத்தியமாக்குகிறது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நான் எழுதிய கட்டுரையை என்னுடைய ஆசிரியை வாங்கிப் பார்த்தார். அவர் ஒரு கன்னியாஸ்திரி. அன்பான பெண்மணி. எனக்கு A கிரேட் போட்டதோடு அல்லாமல் நீ நன்றாக எழுதுகிறாய் என்றும் பாராட்டினார். அந்தத் தருணம் தான் என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. என்னால் நன்றாக எழுத முடிகிறது என்று சொல்லிவிட்டார்கள், இனிமேல் நாம் தொடர்ந்து எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் பின்னால் நான் நிறைய எழுதத் தொடங்கினேன்.

பதின்ம வயதை எட்டும் போது நான் நிறைய நாடகங்கள் எழுதத் தொடங்கியிருந்தேன். அவையெல்லாம் ஒரு வகையில் மோசமான நாடகங்களே! அந்த நாடகங்களை நானே தயாரித்தேன் என்பதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் அவை எவ்வளவு மோசமான நாடகங்கள் என்று! அங்கிருந்து தான் என்னுடைய ஹாலிவுட் பயணமும் மோசமான தொலைக்காட்சி காமெடிகளை எழுதும் பழக்கமும் தொடங்கியது எனலாம்.

Paul Higgis

என் தந்தை நாடகங்கள் மீது பெரும் காதல் கொண்டிருந்தார். என் சிறு வயதில் அவர் பழைய எரிந்து போன தேவாலயம் ஒன்றை வாங்கினார். நாங்கள் அதைப் புனரமைத்து 99 இருக்கைகள் கொண்ட திரையரங்காக மாற்றினோம். அதற்காக என் தந்தை நிறைய செலவழித்தார் என்றாலும் அதன் பலனை நாங்கள் அனுபவித்தோம். நான் திரைப்படங்களின் மீது தீராத காதல் கொண்டிருந்ததால்  எங்களுடைய சிறிய திரையரங்களில்  படங்களை  திரையிடத் தொடங்கினேன். என்னிடம் 16 mm ப்ரொஜெக்டர் ஒன்று இருந்தது. நான் பார்க்க விரும்பிய எல்லா படங்களையும் அங்கே திரையிட்டேன். Persona, Breathless போன்ற ஐரோப்பிய படங்களை எங்கள் நகரத்தில் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அந்த படங்களை திரையிட்டேன். அதே பட்டியலில் ஹிட்ச்காக், அந்தோனியாணி,  கோஸ்டா காவ்ரஸ் ஆகியோரின் படங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். படங்களை வாங்கி திரையிடுவதும் அதைப்  பார்ப்பதுமே எனக்கான திரைப்படக் கல்வியாக அமைந்தது.

பின் நான் புகைப்படக்கலையையும், ஒளிப்பதிவு கலையையும் படித்தேன். சினிமா எடுக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்தது ஒழிய அதை எப்படி சாத்தியமாக்குவது என்று எனக்கு தெரியவில்லை. கனடாவில் இருந்து கொண்டே சினிமா எடுக்க முடியாது, அங்கே அதற்கான வாய்ப்புகள் குறைவு. அதுவும் நான் இருந்தது ஒரு சிறு நகரத்தில். அதனால் ஹாலிவுட்டிற்கு இடம் மாறிக் கொள்வதே சிறந்த வழி என்று என் தந்தை அறிவுரை கூறினார். இருபத்தி இரண்டு வயதில் நான் ஹாலிவுட்டிற்கு குடி பெயர்ந்தேன்.

நான் கனடாவில் வசித்தபோதே, தொலைக்காட்சி  தொடர்களுக்கும் படங்களுக்கும் திரைக்கதை எழுத முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அந்த முயற்சி வெற்றிப் பெறவில்லை. தொலைக்காட்சி தொடர்களுக்கு ஓரிரு திரைக்கதைகளை எழுதி முடித்தபின்பும் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அதனாலேயே நான் ஹாலிவுட்டிற்கு இடம்  மாறினேன். என்  பெற்றோர்கள், முதல் வருடம் முழுக்க என் செலவிற்காக வாரம் நூறு டாலர்கள்  அனுப்பி வைத்தனர். அது எனக்கு பெரும் உதவியாக  இருந்தது. நான் சிறுசிறு கூலி வேலைகள் செய்யத் தொடங்கினேன். என் மனைவி ஒரு ஹோட்டலில் பணியாற்றினாள். எங்களுக்கு குழந்தையும் பிறந்திருந்தது. வாழ்க்கையை நகர்த்துவது கடினமாக இருந்தாலும் எப்படியோ சமாளித்து  வந்தோம்.

என் முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு சில  காலம் ஆனது. எவ்வளவு காலம் என்பதை என் தந்தை  துல்லியமாக கவனித்து வைத்திருக்கிறார். அதாவது நான் என் முதல் திரைக்கதையை விற்பனை செய்வதற்கு எனக்கு மூன்று வருடங்கள்,  இரண்டு மாதங்கள், பத்து நாட்கள் ஆனதாக அவர் சொல்லுவார்.  இந்த இடைப்பட்ட காலத்தில் நான் spec திரைக்கதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். திரைப்படங்களுக்கென  இரண்டு  திரைக்கதைகளையும், தொலைக்காட்சி தொடர்களுக்கென  ஆறு மாதிரி திரைக்கதைகளையும் எழுதி வைத்திருந்தேன் என்று  நினைக்கிறேன்.

அதே நேரத்தில், எழுத்து பயிற்சி பட்டறைகள் பலவற்றிலும்  பங்கேற்றேன். அதன் மூலம் எனக்கு நிறைய நபர்களின் நட்பு  கிடைத்தது. என்னோடு சேர்ந்து எழுதுவதற்கு சிலர் முன்  வந்தனர். இதெல்லாம் பிற்காலத்தில் எனக்கு  பெரிதும் பயன்பட்டன என்றே சொல்ல  வேண்டும். இந்த காலகட்டத்தில் பலரை  சந்திப்பதும், தயாரிப்பு நிறுவனங்களுக்கு என் திரைக்கதைகளை அனுப்புவதுமே என் வேலையாக இருந்தது. நான் எழுதி வைத்த எந்த திரைக்கதையையும் என்னால் விற்க முடியாத  போதும், எனக்கு எழுதும் வாய்ப்புகள் வரத்  தொடங்கின. அப்படிதான் நான் கார்ட்டூன் நாடகங்கள் எழுதும் வாய்ப்பினைப்  பெற்றேன். கார்ட்டூன் எழுத்தாளர் மைக்கேல் மாரருடன் இணைந்து ஸ்கூபி டூ, ரிச்சி ரிச் போன்ற நாடகங்களை  எழுதினேன். இதற்கிடையில்   பல நிறுவனங்களுக்கு கதைகளை சொல்லிக் கொண்டிருந்தேன். ஒரு வாரத்தில்   குறைந்த பட்சம் இருபது ஐடியாக்களை  யோசித்து, அதில் ஆறேழு ஐடியாக்களை முழுவதுமாக எழுதுவோம். மற்றதை படங்களாக வரைந்து எடுத்துச்  செல்வோம். இந்த முயற்சி தொடர்ந்து கொண்டே இருந்தது.

***

நான் பெரும்பாலும் இரவில் எழுதுவதையே வழக்கமாக கொண்டிருந்தேன். ஏனெனில் பகலில் வருமானத்திற்காக வேலை செய்ய வேண்டியிருந்தது.  எனக்கு  முழு நேர  வேலை என்று எதுவும்  கிடையாது. பகல் நேர வேலைகள் கிடைக்கும் போது செய்து  வந்தேன். எனக்கு குழந்தையும் இருந்ததால் எழுதுவதற்கு நேரம் ஒதுக்குவது கடினமாக இருந்தது. இருந்தாலும் சரியாக திட்டமிட்டு  கிடைக்கும்  ஒவ்வொரு தருணத்திலும் எழுதினேன். தினமும் கொஞ்ச நேரமாவது எழுதிவிடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இப்படியாக வாரத்திற்கு ஆறு நாட்கள் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆரம்ப காலங்களில் ஏழு நாட்களும் எழுதி வந்தேன். என் பகல் நேர வேலைக்கு ஏற்ப நான் எழுதும் நேரம்  மாறுபடும். இரவு பத்து மணிக்கு  வீட்டுக்கு  வந்தாலும், மறுநாள் காலை  சீக்கிரம் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற சூழல் இருந்தாலும் நான் எழுதுவதை விட்டுவிட  வில்லை. அரை மணி நேரமாவது தினமும் எழுதுவேன். எழுதாமல் இருந்தால் எந்த மாற்றமும் நிகழாது என்பதை நான் தெளிவாக  அறிந்திருந்தேன். அதனாலேயே தினமும் எழுதினேன். இந்த பழக்கம் என்னிடம் இன்றளவும்  தொடர்கிறது. என்றாவது எழுதாமல் விட்டுவிட்டால் என்னை குற்ற உணர்ச்சி ஆக்கிரமித்துக்  கொள்ளும்.

***

சினிமாவிற்கென்று திரைக்கதையை எழுதும் போது என் மனதில் தோன்றும் beat-களை  குறித்து வைத்துக்  கொள்வது என்னுடைய வழக்கம்.  பொதுவாக, கணினியிலேயே  நேரடியாக குறிப்புகளை எழுதிவிடுவேன். சில நேரங்களில் index  card-களில் குறிப்புகளை எழுதுவேன். என் மகள் இணைந்து கொண்டால், நான் சொல்ல சொல்ல அவள் குறிப்புகளை எழுதுவாள். நான் பின்னர் அந்த அட்டைகளை சரியாக தொகுப்பேன். திரைக்கதை குறிப்புகள் திருப்தி அளிக்கும் வரை அவற்றை திருத்தி எழுதும் பணி தொடரும். பீட்ஸ் திருப்திகரமாக அமைந்த பின்னர் தான் அவுட்லைன் எழுதத்  தொடங்குவேன்.

கிட்டதட்ட இருபத்தைந்து வருடங்கள் தொலைக்காட்சி தொடர்களுக்கு திரைக்கதை எழுதியவன் நான். திரைக்கதையின் கட்டமைப்பை அங்கிருந்து தான் கற்றுக் கொண்டேன். எப்படி சுருக்கமாக, நேரடியாக காட்சிகளுக்குள் நுழைவது என்பதை தொலைக்காட்சி  தொடர்கள் தான் எனக்கு சொல்லித் தந்தன. அங்கே கதாப்பாத்திரத்தை துரிதமாக அடுத்த கட்டத்திற்கு  நகர்த்த வேண்டும். அதற்கு அதிக அவகாசம்  இருக்காது. இதெல்லாம் தொலைக்காட்சி தொடர்களுக்கே உரித்தான  சவால்கள். நான் அதில் வெற்றி பெற்றேனா என்று  தெரியாது. ஆனால் அத்தகைய சவால்களை  விரும்பி ஏற்றேன்.

***

சில கதைகள் மிக துரிதமாக உருவாகிவிடும். நான் crash கதையின் அவுட்லைனை அரை நாளில் எழுதினேன். எல்லா கதாப்பாத்திரங்களையும், அவை எப்படி  ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ள போகிறது என்பதையும் அப்போதே முடிவு  செய்துவிட்டேன். பின்னர் ஒருவருடம் அந்த திரைக்கதையை எழுதுவதற்கு தேவையான ஆராய்ச்சிகளை செய்தேன். அதற்காக நிறைய  வாசித்தேன். பலரிடம்  உரையாடினேன்.

பின் நான் மில்லியன்  டாலர் பேபி படத்தை எழுத வேண்டியிருந்தது. அந்த திரைக்கதையை எழுதி முடித்ததும் என் நண்பர் பாபி மொரஸ்கோ அதில் சில திருத்தங்களை செய்து  கொடுத்தார். மீண்டும் தனியாக இன்னொரு கதையை எழுதும் மனநிலையில் நான்  இல்லை. என்னோடு இணைந்து பணியாற்ற விருப்பமா என்று பாபியை  வினவினேன். அவர் சரி என்றதும் கிராஷ் படத்தின் இருபத்தைந்து பக்க ஒன்லைனை அவரிடம்  கொடுத்தேன். அடுத்த இரண்டு வாரத்தில் நாங்கள் இணைந்து அதன் முதல் டிராஃப்டை  எழுதி  முடித்தோம்.பின்னர் சில மாற்றங்களை செய்து இரண்டாம் டிராஃப்டை எழுதி முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள்  ஆனது. நான் அவ்வளவு துரிதமாக ஒரு  திரைக்கதையை எழுதியதில்லை.  அந்த பாத்திரங்கள் எல்லாம் என் நிஜ அனுபவத்தில் இருந்து உருவானதாலும், நான் அந்த கதாப்பாத்திரங்களாகவே  வாழ்ந்ததாலும் அந்த திரைக்கதையை  என்னால் துரிதமாக எழுத முடிந்தது.

In the Valley of Elah  மற்றும் Million Dollar Baby ஆகிய படங்கள் ஒவ்வொன்றையும் எழுத ஒரு வருட காலம் ஆனது. ஒன்று உண்மை சம்பவத்தை மையப்படுத்தியது. இன்னொன்று சில சிறுகதைகளை தழுவியது. இந்த இரண்டு படங்களையும் எழுத நான் அதிகம்  மெனக்கெட்டேன் என்றே சொல்ல வேண்டும். ஆனால் கேசினோ ராயல் படத்தை என்னால் மெனக்கெடாமல் எழுத  முடிந்தது. நான் அந்த கதையை பின்னிருந்து எழுதினேன். அதன்  இயக்குனரும், தயாரிப்பாளர்களும் வேறொருவர் எழுதிய திரைக்கதையோடு என்னை வந்து சந்தித்தனர். அதன்  மூன்றாம் ஆக்ட்டில் பிரச்சனை இருந்ததை நான்  கண்டுகொண்டேன். அதனால் முதலில் மூன்றாம் ஆக்ட்டை மாற்றி எழுதினேன். பின்னர் அதற்கேற்ப இரண்டாம் ஆக்ட்டை எழுதினேன். அதன் பின்னர் தான் அதன் முதல் பகுதியை எழுதினேன். இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.

***

எனக்கு எழுதுவது பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். கதாப்பாத்திரங்களை எழுதுவது என்பது எனக்கு எப்போதும் பிடித்த விஷயமாக இருக்கிறது. மற்றபடி காமெடி படமா,  ட்ராமாவா, சஸ்பென்ஸ் படமா, மர்மக் கதையா என்ற பாகுபாடெல்லாம் எனக்கு இல்லை. நல்ல கதைகளை சொல்வதையே நான்  விரும்புகிறேன். என்னால் எப்படியெல்லாம் அதை சொல்ல முடிகிறதோ அப்படியெல்லாம்  சொல்வேன். அர்த்தமுள்ள விஷயங்களை எழுதுவதே என் நோக்கம். அந்த அர்த்தம் கதைக்குள் பொதிந்து இருக்கும்படி பார்த்துக் கொள்கிறேன்.

நான் புதிய எழுத்தாளர்களுக்கு சொல்ல  விரும்புவது எல்லாம் ஒன்றே  ஒன்றுதான். “உங்கள் மனதிற்கு பிடித்ததை எழுதுங்கள்”. அந்த தயாரிப்பு நிறுவனம் இத்தகைய கதையை  கேட்கிறார்கள், அந்த  நடிகர் இதுபோன்ற ஒரு கதையை கேட்கிறார் என்றெல்லாம்  யாரவது மேலாளரோ, உங்கள்  நண்பர்களோ சொல்லக்  கூடும். அதையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். அதெல்லாம் நேர விரையம். அது போலெல்லாம் முயற்சி செய்து நான் என் வாழ்நாளில் பல ஆண்டுகளை  தொலைத்திருக்கிறேன். கொலம்பியா நிறுவனம் பேய் கதையை கேட்கிறார்கள் என்று கேள்விப்பட்டு நான் பல பேய் கதைகள் எழுதினேன். பல மாதங்கள் வீணானதுதான்  மிச்சம்.

எனக்கு வெற்றி மிக தாமதமாகதான்  வந்தது. அதுவும் Crash மற்றும் Million Dollar Baby கதையை எழுதிய பின்தான் அந்த வெற்றிக்  கிட்டியது. அவை இரண்டுமே என்னை ஆழமாக பாதித்த கதைகள். அவை விற்பனையாக நான்கரை ஆண்டுகள் பிடித்தன. என்றாலும், அவை திரைப்படமாக  உருவாக்கப்பட்டன. என் மனதிற்கு பிடித்து, நான் அவற்றை எழுதியதால் தான் அந்த வெற்றி சாத்தியமானது என்று நினைக்கிறேன்.

நான் எப்போதும்  யோசிப்பது உண்டு. “எப்படி நான் நல்ல கதையை கண்டுகொள்ளப் போகிறேன்!” இன்னொரு நல்ல கதையை நான் கண்டுகொள்ளாமல் போய் விடுவினோ, அப்படியே கண்டு கொண்டாலும் அதை எப்படி சொல்வது என்று எனக்கு தெரியாமல் போய்விடுமோ என்றெல்லாம் நான் எண்ணி அச்சப்படுவது உண்டு. ஆனால் வெற்றியை நம்மால் திட்டமிட  முடியாது. உங்கள் படங்கள்  ஜெயிக்கலாம், அல்லது  தோற்கலாம். ஆனால் அதற்கும் உங்கள் திரைக்கதையின் தரத்திற்கும் சம்பந்தமில்லை. உங்கள் இயன்றவரை சிறந்த கதைகளை நீங்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவுதான்.  உங்கள் கதையை நீங்களே  இயக்கினாலோ, அல்லது தயாரித்தாலோ மிகவும்  சந்தோசம்.  இல்லையேல், உங்கள் கதையை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அவர் அதை நன்றாக எடுக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பது மட்டுமே உங்கள் வேலை.

***