ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2
முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1
சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ-வை FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன் துரத்துகிறார். அவர் கம்பெனியின் ஆள். ஸ்கோஃபீல்டையும், லிங்கனையும், மற்ற ஆறு பேரையும் கொல்வதே அவரது நோக்கம். இன்னொரு புறம் சிறை அதிகாரி பிராட் பெல்லிக் துரத்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் பயணிக்கின்றனர். அவர்களை பிடிக்க முடியாததால் பிராட் பெல்லிக்கிற்கு வேலை போகிறது. ஸ்கோஃபீல்டையும் அவன் அண்ணனையும் பிடித்துக்கொடுத்தால், பல கோடி பரிசுதொகை கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. அந்த பரிசு தொகைக்காக பெல்லிக் தன்னிச்சையாக களத்தில் இறங்குகிறார். ஸ்கோஃபீல்ட் பனாமாவிற்கு தப்பித்து செல்கிறான். அங்கே ஒரு கொலை வழக்கில், அவனை பனாமா அரசு கைது செய்கிறது. ‘சோனா’ எனும் மிக ஆபத்தான பனாமா சிறையில் அவன் அடைக்கப்படுகிறான். . அதே சிறையில், வெவ்வேறு காரணங்களுக்காக பெல்லிக்கும், டி-பேகும், அலெக்சான்டர் மஹோனும் அடைக்கப்படுகிறார்கள். இத்துடன் இரண்டாவது சீசன் முடிகிறது.
ஸ்கோஃபீல்டின் காதலியையும், அவன் அண்ணன் மகனையும் கம்பெனி ஆட்கள் கடத்தி விடுகிறார்கள். சோனா சிறையில் இருக்கும் ஜேம்ஸ் என்பவனை தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி ஸ்கோஃபீல்ட் தப்பிக்க வைக்க வேண்டும், இல்லையேல் அவன் காதலியும் அவன் அண்ணன் மகனும் கொல்லப்படுவார்கள் என்று கம்பெனி ஆட்கள் மிரட்டுகிறார்கள். யாராலும் தப்பிக்க முடியாத பனாமா சிறையில் இருந்து ஜேம்ஸூடன் தப்பிக்க மைக்கேல் ஸ்கோஃபீல்ட் முடிவு செய்கிறான்.. அலெக்சான்டர் மஹோனும் உடன் இணைந்துகொள்கிறார். ஆனால் அது ஃபாக்ஸ் ரிவர் போல நாகரிகமான சிறை அன்று. சோனாவில் தினமும் யாராவது இரண்டு கைதிகளுக்கிடையே மல்யுத்த சண்டை நடக்கும். அதில் ஒருவர்தான் உயிரோடு தப்பிக்க முடியும். அத்தகைய சண்டைகளில் ஸ்கோஃபீல்டையும் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஒருவழியாக ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ வெற்றிபெறுகிறது.
ஆனால் கதை முடியவில்லை. நான்காவது சீசனில் புதிய கதை ஒன்று ஆரம்பிக்கிறது. கம்பெனியின் ரகசியங்கள் அடங்கிய ‘ஸ்கைலா’ எனப்படும் ஒரு ஹார்ட்டிஸ்கை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்கோஃபீல்டிடம் வருகிறது. மகோன், பெல்லிக் எல்லாம் மனம்திருந்தி ஸ்கோஃபீல்டுடன் இணைந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த ஹார்ட் டிஸ்க்கில் கம்பெனியின் ரகசியங்கள் இல்லை, வேறு சில முக்கிய தகவல்கள் இருக்கின்றன என்ற உண்மை பின்தான் தெரிகிறது. கெட்டவர்கள் நல்லவர்களாக மாறுகிறார்கள், சில நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள். ஏராளமான திருப்புமுனைகளை கொண்ட இந்த சீஸனில் கடைசியில் யார் யாரை வெற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதை.
முதல் இரண்டு சீசன்களில் இருந்து சுவாரஸ்யம் அடுத்த இரண்டு சீசன்களில் கொஞ்சம் குறைந்திருக்கும். ஒரு புத்திசாலியான கதாநாயகனுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்துக் கொண்டே இருக்கிறது, அவன் அவற்றை எப்படி வெற்றி கொள்கிறான் என்ற ஒன்லைனை கொண்டே நான்கு சீஸன்களும் டெவலப் செய்யப்பட்டிருக்கும். இந்த குறிப்பிட்ட ஒன்லைனை வைத்துக்கொண்டே திரைக்கதை ஆசிரியர்கள் கதையை வளர்ப்பதால் கதையில் தளர்வு ஏற்படுகிறது.
ஹீரோ எப்படி சிறையிலிருந்து தப்பிக்கப்போகிறான் என்ற கேள்வியே முதல் சீஸனில் சுவாரஸ்யத்தை கூட்டியது. ஆனால் மூணாவது சீஸனில் அந்த கேள்வி எடுப்படவில்லை. ஏனெனில், ஹீரோவின் புத்திசாலித்தனத்திற்கு மூன்றாவது சீஸனில் வேலையில்லாமல் போவதால், சுவாரஸ்யமும் குறைகிறது. மேலும், கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட ஏராளமான கிளைக்கதைகளையும், ட்விஸ்ட்களையும் வைத்திருப்பார்கள். ஆனால் சில இடங்களில் வேண்டுமென்றே திணிக்கபட்ட டிவிஸ்ட்கள் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றன.
முந்தைய கட்டுரையில் குறிப்பட்டது போல, ப்ரிசன் ப்ரேக்கில் தேவையில்லாத கதாபாத்திரங்கள் என்று எதுவும் வராது. அது கதையின் பலம். முதல் சீஸனில், மைக்கேல் சிறையில் இருக்கும் போது ஒரு சைக்கோ அறிமுகமாவான். அவன் மைக்கலின் உடம்பில் இருக்கும் டாட்டூக்களில் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பதை கண்டுகொள்வான். அந்த டாட்டூக்ளை மனதில் பதியவைத்துக் கொள்வான். பின் சில பிரச்சனைகளால் அவனை மீண்டும் சைக்கோ வார்டிற்கே அனுப்பிவிடுவார்கள். ஒருகட்டத்தில், மைக்கிலின் உடம்பிலிருந்த டாட்டூவின் ஒரு பகுதி அழிந்துவிடும். இப்போது மைக்கலுக்கு உதவ மீண்டும் அந்த சைக்கோ பாத்திரம் அறிமுகமாகும். ஒரு கதாபாத்திரத்தை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டு, பின் நமக்கு தேவையான இடங்களில் அந்த பாத்திரத்தை பயன்ப்படுத்திக்கொள்வது ஒரு சிறப்பான உத்தி.
ப்ரிசன் ப்ரேக்கில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் கதாபாத்திரங்களின் transformation. பிராட் பெல்லிக் என்ற சிறை காவலர் இருக்கிறார்.
முதல் சீஸனில் மிக கொடுமைக்கார சிறை காவலராக வலம் வருகிறார். ஊழல் செய்கிறார். எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறார். பனாமா ஜெயிலில் அவரை கொடுமைப்படுத்துகிறார்கள். அவரால் யாரையும் எதிர்த்து போராட முடியவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக அவரிடம் மனமாற்றம் நிகழ்கிறது. நான்காவது சீஸனில் நல்லவராகிறார். இதுபோல், ஒரு கதாபாத்திரத்திடம் மனமாற்றம் நிகழ்வதற்க்கு வழுவான காரணத்தை காண்பிக்கவேண்டியது அவசியம்.
அடுத்த முக்கிய கதாபாத்த்திரம் FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன்.
அடிப்படையில் இவர் நல்லவர். மிகவும் புத்திசாலி. ஆனால் கம்பெனிக்காக வேலை செய்யவில்லையெனில் தன் குடும்பத்திற்கு ஆபத்தென்பதால் கம்பெனியுடன் கைகோற்க்கிறார். ஸ்கோஃபீல்ட்டும் தன்னைபோல் புத்திசாலியாக இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவனை வெறுக்கிறார். ஒருகட்டத்தில், தான் விசுவாசமாக இருந்த கம்பெனி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்பதை கண்டுகொண்டபின் அவர் ஈகோ மடிகிறது. ஸ்கோஃபீல்ட்டுடன் இணைகிறார். (அண்மையில் வெளியான ட்ரூ டிடெக்டிவ் சீரியலின் கதாநாயகன் ரஸ்ட் கோல் கதாபாத்திரத்திடம் மஹோனின் தாக்கம் நிறைய இருப்பதை பார்க்கலாம். இருவரும் தங்களுக்குள் ஒரு தனி உலகை உருவாக்கிக்கொண்டு வாழ்பவர்கள். இந்த இரு தொடர்களையும் பார்ப்பதன் மூலம், ஒரு கதாபாத்திரத்தை தழுவி எப்படி இன்னொரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்பதை புரிந்து கொள்ள முடியும். ட்ரூ டிடெக்டிவ், இன்னும் இரண்டு மூன்று சீஸன்கள் பாக்கி இருப்பதாக கேள்வி. அவை வெளியான பின் ட்ரூ டிடெக்டிவ் பற்றி பேசலாம்)
மிகமிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் டி-பேக் (எ) தியோடர் பேக்வெல் கதாபாத்திரம். கடைசி வரை கெட்டவனாகவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். கொலைகாரன், காமுகன், துரோகி, பச்சோந்தி என பல முகங்கள் கொண்ட பாத்திரம்தான் டி-பேக். ஆனால் இந்த கதாபாத்திரம் மீது இறக்கம் வருமே ஒழிய, கோபம் வராது. அந்த வகையிலேயே அதை உருவாக்கியிருப்பார்கள். தன்னுடைய கெட்ட முகத்தை தொலைத்துவிட்டு, நல்ல முகத்தை மாட்டிக்கொள்ள வேண்டும் என முயன்று முயன்று தோற்று, இறுதியில் கெட்டவனாகவே இருந்துவிடும் கதாபாத்திரம் இது.
ப்ரிசன் ப்ரேக்கின் மிகபெரிய பலம் அதன் பின்னணி இசை. கதையில் சஸ்பென்ஸை சஸ்டைன் செய்வதில் மியூசிக் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஜானர் இசைகள் மாறிக்கொண்டே இருப்பது கூடுதல் சிறப்பு.
ரொமான்ஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், டிராமா, சென்டிமெண்ட் ஆகியவற்றின் கலவையே ப்ரிசன் ப்ரேக். அதன் மேக்கிங்கும் குறைகளுக்கிடமின்றியே அமைந்திருக்கும். படங்களை பார்த்து ஃபிலிம்மேக்கிங்கை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ப்ரிசன் ப்ரேக், ஏராளமான விஷயங்களை கற்றுத்தரும்.