சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

உலக சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமகால இந்திய சினிமாவில் நாவல்கள் திரையாக்கம் செய்யப்படுவது அரிதாகவே நடக்கிறது. இங்கே எழுதப்பட்ட சில நாவல்களை மிக எளிதாகவே திரைக்கதையாக மாற்றி விடமுடியும். ஆனாலும் இந்தியாவில் நாவலுக்கும் சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எப்போதாவது ஒரு நாவல் சினிமாவாக உருப்பெற்றால், அதுவும் சிறந்த முறையில் திரையாக்கம் செய்யப்பட்டால் அதை கவனிப்பது நிச்சயம் நல்லதொரு திரைக்கதைப் பயிற்சியாக இருக்கும். நெட்பிலிக்ஸ் சீரியலாக வந்திருக்கும் விக்ரம் சந்திராவின் ‘சாக்ரட் கேம்ஸ்’ நாவல் அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

cw-24870-660x375

சுமார் ஆயிரம் பக்கங்கள் விரியும் நாவலின் மூலக்கதை இதுதான். கணேஷ் கைதொண்டே ஒரு பெரிய நிழல் உலக கேங்க்ஸ்டர். பல வருடங்கள் தலைமறைவாக இருப்பவன் திடிரென்று ஒரு நாள் போலிஸ் இன்ஸ்பெக்டர்  சர்தாஜ் சிங்கை தொடர்பு கொள்கிறான். தான் பம்பாயில் ஒரு பதுங்கு அறையில் இருப்பதாக சொல்ல, அவனை தேடிச் செல்லும் சர்தாஜ் சிங்கிடம் தன் கதையை சொல்லிவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்கிறான். இதுதான் நாவலில் பிரதானாக் கதைத் தொடங்குமிடம். இங்கிருந்து கணேஷ் கைதொண்டேவின் பிளாஷ் பேக் கதை ஒரு அத்தியாயமாகவும், அவன் ஏன் மீண்டும் பம்பாய் வந்தான் என்று சர்தாஜ் துப்பறியும் கதை அடுத்த அத்தியாயமாகவும் மாறிமாறி நாவல் நகர்கிறது.  வெப்சீரிஸின் கருவும் இதுதான். ஆனால் நாவலிலிருந்து ஏராளமான சுவாரஸ்யமான மாற்றங்கள் திரை வடிவத்தில் செய்யப்பட்டிருக்கிறது.

நாவல்களைத் தழுவி சினிமா உருவாக்குவதைப் பற்றி, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில், சினிமா விமர்சகர் கேரின் ஜேம்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “சிக்கலான மொழியில் அமைந்த கவிதைகளை, தேர்ந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் அப்படியே மறு ஆக்கம் செய்யமாட்டார்கள்.  அவர்கள் மூலத்தின் சுவைக்குன்றாமல், அதற்கு வேறொரு வடிவத்தை தருவதைப்போல நாவலை திரைக்கதையாக்கம் செய்யும் போது, நாவலின் கலைத்தன்மைக்கு இணையான வடிவத்தை திரையில் கொண்டுவர வேண்டும்.” மேலும் அவர், ஒரு திரைக்கதையாசிரியர், ஒரு நாவலை திரைக்கதையாக்கும் போது, “நாவலுக்கு எப்படி நியாயம் செய்வது?” என்று சிந்திக்கக்கூடாது, “எப்படி இந்த நாவலை என்னுடைய பிரதிபலிப்பாக உருவாக்கப் போகிறேன்?” என்று சிந்திக்கவேண்டும் என்கிறார்.(Ref book: Novels into Films by John C. Tibbetts, James Michael Welsh). சாக்ரட் கேம்ஸ் திரையாக்கத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில், நாவலில் கதையை நகர்த்துவதற்கான சுதந்திரம் அதிகம். எங்கு வேண்டுமானாலும் ஒரு கதையை நிறுத்திவிட்டு வேறொரு கிளைக் கதையை தொடங்கிட முடியும். விக்ரம் சந்திராவும் அதை இந்த நாவலில் பல இடங்களில் செய்திருக்கிறார். முதலில் நாவல், சர்தாஜ் சிங்கிடம் இருந்து தொடங்குகிறது. கணேஷ் கைதொண்டே அறிமுகம் ஆவதற்கு முந்தைய அத்தியாயத்தில் சர்தாஜ் சிங்கின் அன்றாட போலிஸ் வாழ்க்கையை நிதானமாக விவரித்திருக்கிறார் சந்திரா. ஒரு போலிசாக சர்தாஜ், மூலக் கதைக்கு சம்பந்தமில்லாத ஒரு வழக்கைத் துப்பறியச் செல்லும் இடத்தில் நாவல் தொடங்குகிறது. அதே வழக்கு நாவல் பல நூறு பக்கங்கள் கடந்தப் பின்பு மீண்டும் அவரைத் தேடி வருகிறது. அங்கிருந்து கதையில் வேறொரு கிளைக் கதை தொடங்குகிறது. சீரிஸில் இதெல்லாம் இல்லை. சீரிஸ், கணேஷ் கைதொண்டே-சர்தாஜ் பற்றியக் கதையை மட்டுமே பேசுகிறது.

திரைக்கதை என்று வரும் போது, மூலக் கதாப்பாத்திரங்களுக்கு ஒரு திட்டவட்டமான ‘கோல்’ இருக்க வேண்டும். கதையும் ஒரு வரையறுக்கப்பட்ட கால நேரத்தில் நடப்பதாக இருக்க வேண்டும். நாவலில் அத்தகைய அவசியம் இல்லை. இங்கே சந்திராவின் நாவலில், சர்தாஜ் சிங்கிற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வழக்குகளைத் துப்பறிகிறார். திரைக்கதையை அப்படி அமைத்தால் பார்வையாளர்களால் ஒரு கதாப்பாத்திரத்தை பின்தொடர முடியாது. இங்குதான்  கதாநாயகனுக்கு ஒரு ‘கோல்’ அவசியாமாகிறது. அப்படியே ஒரு போலிஸ் நாயகன் இரண்டு வழக்குகளைத் துப்பறிகிறான் என்று வைத்தாலும், முதல் வழக்கு மட்டுமே அவனுடைய பிரதானமான கோலாக இருக்க முடியும். இரண்டாவது வழக்கு கதையிலோ அல்லது நாயகனின் வாழக்கையிலோ ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்டோ, அல்லது முதல் வழக்கிற்கு ஏதோ ஒரு வகையில் உதவும் பொருட்டோ இணைக் கதையாக மட்டுமே இருக்க முடியும். (ஆனாலும் சீரியல்களில் (அல்லது வெப் சீரிஸில்) எபிசோட்  வாரியாக கதை நகர்வதால், ஏதோ ஒரு எபிசோடில் கதைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கதையை சொல்லிவிட்டு அதை மூலக் கதையோடு இணைக்கக் கூடிய ‘நாவலுக்கான சுதந்திரம்’ உண்டு. சினிமாவில் அது சாத்தியமில்லை)

sacred-games-season-2-netflix

மேலும் வரையறுக்கப்பட்ட கால நேரம் என்பதும் முக்கியமான அம்சமாகிறது. சாக்ரட் கேம்ஸ் நாவலில் கணேஷ் கைதொண்டே பற்றி சர்தாஜ் துப்பறியத்  தொடங்கியப் பின் கதை பல நாட்கள் நகர்கிறது. பின்புதான் ஏதோ ஒரு ஆபத்து மும்பையை சூழ்ந்திருப்பதைக் கண்டு கொள்கிறார் சர்தாஜ். அது என்னவென்று கண்டுபிடிக்கும் பொருட்டு அவர் பயணிக்க, கதையின் காலகட்டம் மேலும் பல மாதங்களாக விரிகிறது. இடையிடையே அவருக்கு மேரி என்ற பெண்மீது  அரும்பும் காதல் பற்றியும் விலாவரியாக சொல்லப்படுகிறது. திரைக்கதையை இப்படி அமைத்தால் சுவாரஸ்யம் இருக்காதே! கதை வளர்ந்து கொண்டே போகுமே! இங்கேதான் திரைக்கதையாசிரியர்கள் மிக புத்திசாலித்தனமாக ஒரு மாற்றத்தை செய்கிறார்கள். கணேஷ் கைதொண்டே சீரிஸின் தொடக்க எபிசோடிலேயே ‘இன்னும் இருபைத்தைந்து நாட்களில் மும்பை அழிந்து விடும்’ என்று சர்தாஜிடம் சொல்லிவிட்டு மாண்டு போகிறான். அதனால் இருபத்தைந்து நாட்களில் மும்பையை காப்பாற்ற வேண்டிய கடமை ஹீரோவிற்கு வருகிறது. இங்கே ஹீரோவின் நோக்கமும் அதை நிறைவேற்ற வேண்டிய கால அவகாசமும் வரையறுக்கப்படுவதால் கதையின் சுவாரஸ்யம் கூடுகிறது.   

ஆனால் நாவலுக்கும் திரைக்கதைக்கும் இடையே இப்படி வேறுபாடுகள் இருந்தாலும்,  ஒரு கதை நாவல், திரைக்கதை உட்பட எந்த வடிவத்தில் சொல்லப் பட்டாலும் அல்லது எந்த வகையில் (Genre) சொல்லப்பட்டாலும் அதில் பொதுவான அம்சம் ஒன்று இருக்கிறது. அதுவே ‘சமநிலை குலைதல்’. அதாவது கதையின் மையப் பாத்திரத்தின் இயல்பான நிலை வேறொரு நிலை நோக்கி நகர்வது. இதை அந்த முக்கிய பாத்திரத்தின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் என்றும் சொல்லலாம். இது எல்லா வகை கதைக்கும் பொருந்தும். ஸ்தூலமான கதை என்று எதுவுமில்லாத நாவல்களில் (உதாரணம் இத்தாலோ கால்வினோ வகைக்  கதைகள்) கூட இதை கவனிக்க முடியும்.

ஒரு பாத்திரத்தின்  சிந்தனைகளை மட்டுமே நாவலாக எழுதிட முடியும் (Stream of consiousness). அத்தகைய நாவல்களிலும்  அந்த பாத்திரத்தின் ‘சிந்தனை’ அதனுடைய சமநிலையிலிருந்து வேறு நிலைக்கு நகர்வதே கதையின் ஓட்டமாகிறது. கதையின் மையப் பாத்திரத்தை ஹீரோ என்று கொள்வோமேயானால் ஹீரோவே இல்லாத கதை என்று எதுவம் இல்லை என்றே சொல்லலாம். அபப்டியெனில், நாவலோ திரைக்கதையோ, ஹீரோவின் சமநிலை குலைவதே கதையாகிறது. இங்கே சமநிலை என்பது Subjective ஆன அம்சம். ஒரு நல்லவனின் சமநிலை வேறு. அதுவே ரவுடியின் சமநிலை வேறு. ஆனால் ஹீரோவோ அல்லது அந்த மையப் பாத்திரமோ மனித உருவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அனிமேஷன் படங்களில் வருவது போல் அந்த ஹீரோ, அந்த மையப் பாத்திரம் மிருகங்களாக இருக்கலாம். ஒரு மரமாக இருக்கலாம் (புளியமரத்தின் கதை). ஒரு வீடாக இருக்கலாம் (கரமுண்டார் வீடு). ஒரு நகரமாக இருக்கலாம். சாக்ரட் கேம்ஸ் கதையில் எப்படி சர்தாஜும் கைதொண்டேவும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்களோ அதே அளவிற்கு முக்கியமான பாத்திரமாக மும்பை நகரமும் வருகிறது. காலமாற்றத்தில் அந்த நகர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதும், மாறிக்கொண்டே இருக்கும் மனிதர்களை அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதுமாக நாவலில் ஒரு கதை இழையோடுகிறது. சீரிஸ் அவ்வளவு விலாவரியாக சொல்லப் படவில்லை. அது ஹீரோ வில்லன் கதையாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஏரளமான துணைப் பாத்திரங்களை கொண்ட நாவலை adapt செய்வது அவ்வளவு எளிதல்ல, ஆனாலும் இதன் திரைக்கதை ஆசிரியர்கள் அதிகம் மெனக்கெட்டு நாவலை மிகவும் சிறப்பாக அடாப்ட் செய்திருக்கிறார்கள். நாவலில் ஏராளமான பாத்திரங்கள் இருக்கலாம். ஒவ்வொன்றிற்கும்  ஒரு முக்கியத்துவமும் கடமையும் இருக்கலாம். ஆனால் எல்லாப் பாத்திரங்களையும் திரையில் கொண்டு வரமுடியாது. அப்போது இரண்டு மூன்று துணைப் பாத்திரங்களை இணைத்து ஒரே கதாப்பாத்திரமாக மாற்றிவிடுவது புத்திசாலித்தனம். அப்படி செய்யும் போது திரையில் அந்த கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவமும் கூடி விடும்.

நாவலில் சர்தாஜின் தாய் ப்ரபோஜித்  கௌர் பாத்திரத்தின் பின்கதையை விலாவரியாக விவரித்திருப்பார் ஆசிரியர். இந்தியப் பிரிவினையின் பின்னணியில், கௌரின் குடும்பம் அடைந்த இன்னல்களையும் அதில் இருந்து அவர் மீண்டு வந்ததைப் பற்றியும் ஒரு நெடுங்கதை போல் தனி அத்தியாயமாக எழுதியிருப்பார் சந்திரா. நாவலில் சர்தாஜ் சிங்கின் எல்லாக் குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் முதல் தோழி ப்ரபோஜித் கௌர். திரையில் சர்தாஜின் தாய் பாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கதையின் நகர்விற்கு துணை செய்யாத எந்த பாத்திரமும் திரைக்கதைக்கு தேவையில்லை.

Koko

அதே சமயத்தில் நாவலில் ஓர் காட்சியில் வசனமாக கடந்து போகும் ‘கோகோ’ என்ற பாத்திரம் திரையில் முக்கிய பாத்திரமாக உருவெடுத்திருக்கிறது. கோகோ ஒரு திருநங்கை. நாவலில் ஒரு குற்றவாளியை பிடிக்கப் போகும் இடத்தில், சர்தாஜிடம் கான்ஸ்டபிள் கடேக்கர் உரையாடிக் கொண்டிருக்கும்போது கோகோவைப் பற்றி சொல்கிறார்.  ஒரு பக்கத்தில் மட்டுமே இடம்பெற்ற அந்த பாத்திரம், திரைக்கதை ஆசிரியர்களை பெரிதாக பாதித்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அந்த பாத்திரத்திற்கு வேறொரு அழகான கோணத்தை திரையில் தந்திருக்கிறார்கள். அவளை கைத்தொண்டேவின் காதலியாக உருவாக்கி, அவன் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவளாக மாற்றியிருக்கிறார்கள்.

சர்தாஜ் சிங்கின் உயர் அதிகாரியாக வரும் பருல்கர், நாவலில் சிங்கை தன் மகன் போல் பாவிக்கிறார். ஆனால் திரைக்கதை வடிவத்தில் பருல்கரும் சிங்கும் எதிரிகள். பருல்கர் சிங்கிற்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவனை ஒரு போலி என்கவுண்டரைப் பற்றி பொய் சாட்சி சொல்லும்படி வற்புறுத்துகிறார். நாயகனுக்கு எல்லா திசைகளில் இருந்தும் அழுத்தம் அதிகரிக்கும் போது திரைக்கதையில் சுவாரஸ்யம் கூடுகிறது. அதன் பொருட்டே அவனை சுற்றியிருக்கும் கதாப்பாத்திரங்களை உருவாக்க வேண்டும். நிச்சயம் இந்த நாவலையும் தொடரையும் ஒப்பிட்டு பார்பபதன் மூலம் கதாப்பாத்திரங்களை சிறப்பாக உருவாக்குவதைப்  பற்றி, அடாப்ட் செய்வதைப் பற்றி  புரிந்து கொள்ள முடியும்.

அடுத்து காட்சிகளில் எப்படி சுவாரஸ்யத்தை கூட்டுவது என்பதையும் சாக்ரெட் கேம்ஸ் நாவல்- திரைக்கதையாக்கம்  சொல்லித் தருகிறது. கணேஷ் கைத்தொண்டே தன்னை தானே சுட்டுக் கொள்வதற்கு முன் ஒரு பெண்ணையும் சுட்டுக் கொன்று விடுகிறார். அவள் யார் என்று நாவலில் துணைப் பாத்திரமாக (ஆனால் சீரிஸில் முக்கியப் பாத்திரமாக) வரும் ரா ஏஜென்ட் அஞ்சலி மாத்தூர் கண்டுகொண்டு சர்தாஜிடம் சொல்ல, சர்தாஜ்  பின் அவள் வீட்டை தேடிச் செல்கிறார். இங்கே ஹீரோவான சர்தாஜிற்கு வேலை இல்லாமல் போகிறது. இப்படி திரைக்கதை அமைத்தால் ஹீரோவிற்கான முக்கியத்துவம் குறைகிறது.

ஆனால் திரைக்கதையாசிரியர்கள் இந்த சவாலை முறியடித்திருக்கிறார்கள். கணேஷ் கைத்தொண்டேவின் அறையில் செத்துக் கிடைக்கும் அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு கார் கீயை எடுக்கிறார் சர்தாஜ். பின் அதைக் கொண்டு அருகாமையில் இருக்கும் பார்க்கிங் ஏரியா சென்று காரைக் கண்டுப்  பிடிக்கிறார். பின் காரில் உள்ள ஓட்டுநர் உரிமம் கொண்டு இறந்த பெண்ணின் பெயர் ஜோஜோ என்று கண்டுகொள்கிறார். அங்கிருந்து அவள் வீட்டை தேடி நகர்கிறார். இங்கே நாவலுக்கும் திரைக்கதைக்கு பிளாட் பாயிண்ட்ஸ் ஒன்றுதான். ஆனால் அதை இணைக்கும் விதமே திரைக்கதையின் சுவாரஸ்யத்தை நிர்ணயிக்கிறது. நமக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும், நாயகன் தன்னுடைய முயற்சியில் அந்த வேலையை செய்யும் போது பார்வையாளர்களாக நாம் அதை ரசிக்கிறோம்.

திரைக்கதையை பற்றி பேசும் போது குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விசயம் ‘சுருங்கச் சொல்லுதல்’. சுருக்கமாக  ஒரு விசயத்தை சொல்லிட முடியுமெனில் அதை செய்துவிட வேண்டும். காட்சிகளை வளர்க்கத் தேவையில்லை. உதாரணாமாக ஒரு காட்சி. நாவலில், சர்தாஜின் விசுவாசியாக வருகிறார் கான்ஸ்டபிள் கடேக்கர். சர்தாஜ் சிங்குடனேயே அவர் நிழல் போல் பயணிக்கிறார். சிங்கிற்கும் அவருக்குமான மரியாதைக் கலந்த நட்பு  பல பக்கங்களில் சொல்லப் படுகிறது. தொடரில், கடேக்கர் தன் மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் போது சர்தாஜ் சிங்கிடமிருந்து போன் வருகிறது. மனைவியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு உடனே புறப்படுகிறார். இங்கே அவரது விசுவாசத்தை ஒரே ஷாட்டில் சொல்லிவிடுகிறார்கள்.

மேலும், நாவலில் சர்தாஜ்ஜின் கேரக்டர் ஸ்கெட்ச் யதார்த்தமாக இருக்கும். அவர் சராசரி போலீசாக வலம் வருகிறார். அவர் மிகவும் சாதாரண ஆள். லஞ்சம் வாங்குகிறார். அதை பகிர்ந்து கொள்கிறார். தூக்கமின்மையால் அவதிப்படுகிறார். பணிந்து போகிறார். சீரியலில் அவர் பாத்திரத்தில் கொஞ்சம் செயற்கைத்தனம் வெளிப்படுகிறது. அவர் மிகவும் நல்லவர். பொய் சொல்ல அஞ்சுகிறார். பல முறை வில்லன்களிடம் மாட்டியும் உயிரோடு தப்பித்து விடுகிறார். திரைக்கதைக்கான சமரசங்கள் இவை. ஆனால் நாவலைப் போலவே திரையிலும் கைத்தொண்டே ராஜாவாக வலம் வருகிறார். இது கைத்தொண்டே என்ற டானைப் பற்றிய கதை என்றே சொல்ல வேண்டும். ஒன்றுமில்லாப் பின்னணியில் இருந்து வரும் சாதாரணன் பம்பாயை ஆட்டிப் படைக்கும் டானாக நாவலில் பலநூறு பக்கங்களில் உருவெடுக்கிறார். அந்த அசூர வளர்ச்சியின் சாராம்சம் திரைக்கதையில் வெளிப்படுவது சீரிஸின் கூடுதல் பலம். கைத்தொண்டேவை மறக்க முடியாமல் செய்கிறது  நவாஸுதீன் சித்திக்கின் நடிப்பு. சீரிஸை பார்த்துவிட்டு நாவலைப் படிக்கும் போது, நவாஸுதீனே நாவலையும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்.

ஒரு நல்ல நாவல் நல்ல முறையில் திரையாக்கம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிழும்  சினிமாவாக மாற்றக்கூடிய ஏராளமான சிறப்பான நாவல்கள், சிறுகதைகள் உண்டு. புனைவிற்கு பஞ்சமில்லா தமிழ் எழுத்துலகில்  எல்லா ‘Genre’ கதைகளும் உண்டு. வருங்காலத்தில் வெப்சீரிஸ் தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெரும் என்பதால் கதைகளுக்கான தேடலும் அதிகரிக்கும். அப்போது தமிழ் எழுத்துப் புனைவுகளும் நல்லப்  படங்களாக, சீரிஸ்களாக உருவாகும் என்று நம்புவோம்…

கேம் ஆஃப் த்ரோன்ஸ் சொல்லித்தரும் திரைக்கதை

‘அரண்மனை சதி’. வரலாற்றுப் புனைவுகளுக்கு மிக எளிதாக அமையக்கூடிய ப்ளாட் இதுவாக தான் இருக்கமுடியும். பெரும்பாலான புனைவுகள் இதை வைத்துதான் உருவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு உரித்தான ஒருவர் எங்கோ இருக்க, ஆட்சிக்கு சம்மந்தம் இல்லாத பலரும் சிம்மாசனத்திற்காக தந்திரம் செய்து அடித்துக் கொள்வதுதான் இந்த பிளாட். கேம் ஆப் த்ரோன்ஸ் நாடகமும் இந்த வகை தான். ஆனால் இது ஒரு ஃபேண்டஸி கதை. ஒரு காலத்தில் இங்கிலாந்தின் ராஜ்ஜியத்திற்காக லான்காஸ்டர் மற்றும் யார்க்குகளுக்கிடையே நடந்த யுத்தத்தை தழுவி நிறைய கற்ப்பனையுடன் உருவாக்கப் பட்ட கதை இது.
got21

ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே கதை. யார் சக்ரவர்த்தி என்று நாம் நம்புகிறோமோ அவர் இறந்துவிடுவார். அப்படி செய்தே அடுத்து யார் வரப் போகிறார், கதை என்ன என்ற க்யூரியாசிட்டியை தூண்டி விடுவார்கள். இந்த க்யூரியாசிட்டியும், கதை முழுக்க இருக்கும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதையை நகர்த்துகின்றன.

பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி அவர்கள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் அவர்கள் எதிர்ப்பார்த்திருந்த ஒன்றையோ அல்லது எதிர்ப்பார்க்க தவறிய ஒன்றையோ செய்துவிடுவதே இந்த உத்தி. பாட்ஷா படத்தில் மாணிக்கத்தை கட்டி வைத்து அடிக்கப் போவார்கள். அவர் சண்டை போடப் போகிறார் என்று தான் எதிர்ப்பார்போம். ஆனால் செய்ய மாட்டார். அப்படியே விட்டிருந்தால் அங்கே எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்காது. அவருக்காக சண்டையிட அவர் நண்பர்கள் பல திசைகளில் இருந்து வருவார்கள். இது தான் பில்ட் அப். அவர்களை வர வேண்டாம் என்று சொல்லிவிடுவார். அடி வாங்குவார். ஏதாவது நடக்காதா என்ற எதிர்ப்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு போய் எதுவும் செய்யாமல் காட்சியை முடித்துவிடுவார்கள். ஆனால் அடுத்து இடைவேளைக்கு முன்பு வரும் காட்சியில் யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து சண்டை போடுவார். நேரடியாக இந்த காட்சியை வைத்திருந்தால் என்ன பில்ட் அப் இருந்திருக்கும்! அவர் திருப்பி அடிப்பார் என்பது நாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான். ஆனால் நாம் எதிர்ப்பார்க்காத தருணத்தில் அதை செய்கிறார். ரன் படத்திலும், கில்லி படத்திலும் இதுபோன்ற ஸ்வாரஸ்யமான  ஹீரோயிச காட்சிகளைப் பார்க்கலாம். க்யூரியாசிட்டியை கூட்டி நாம் எதிர்பார்த்ததை எதிர்பார்க்காத சமயத்தில் செய்யும் உத்தி இது.

தமிழில் நாகா இந்திரா சௌந்தர்ராஜன் கூட்டணியில் வந்த சீரியல்களை தரமானதொரு எண்டர்டெயின்மெண்ட் என்று சொல்லலாம். அவர்களின் ‘ருத்ரவீணை’ நாடகம் முழுக்க யார் ருத்ரன் என்பதுதான் கேள்வி, கேம் ஆப் த்ரோன்ஸ் கதையில் யார் சக்கரவர்த்தி என்ற கேள்வியை போல. ஆனால் நாம் யூகித்த யாரையும் ருத்ரனாக்காமல், யூகிக்க தவறிய, கதையில் முக்கியமற்று வந்துப் போகும் ஒரு கதாபாத்திரத்தை ருத்ரனாக்கி கதையை முடிப்பார்கள். அவன் ஏன் ருத்ரன் என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக்கும் இருக்கும். இது எதிர்ப்பார்ப்பைக் கூட்டி எதிர்ப்பார்க்க தவறிய ஒன்றை வைத்து காட்சியையோ கதையையோ முடிக்கும் உத்தி.

இந்த நாடகத்தின் மூல நாவலை பல ஆயிரம் பக்கங்கள் எழுதிய R.R. மார்ட்டின், பாயிண்ட் ஆஃப் வியூ (POV) உத்தி மிக முக்கியமானது என்கிறார். இரண்டாம் உலகப் போரை பற்றி பேச வேண்டுமெனில் ஹிட்லர் பார்வையிலும் கதை நகரவேண்டும், ஜப்பான் பார்வையிலும் கதை நகரவேண்டும், முசோலினியின் கண்ணோட்டத்தையும் காண்பிக்க வேண்டும், அப்போதுதான் கதை முழுமை அடையும் என்கிறார். இந்த நாடகத்தில் லேன்னிஸ்டர், ஸ்டார்க், டைரல், பராத்தியன் என பல வம்சாவெளியை சேர்ந்தவர்களும் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள். இவர்கள் எல்லோரின் கண்ணோட்டதிற்கும் முக்கியத்துவம் தரப்பட்டு, அவர்கள் எல்லோரின் மனநிலையும் விவரிக்கப்பட்டிருக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

பொதுவாக நாவலில், கதையை நிறுத்தி கதையின் பின்னணியை, களத்தை விவரிக்க நிறைய அவகாசம் உண்டு. நாவலில் திடீரென்று கதையை யார் கண்ணோட்டத்தில் வேண்டுமானாலும் நகர்த்திடலாம்.  ஆனால் நாவலில் வரும் எல்லாவற்றையும் படத்தில் சொல்லிவிட முடியாதே! அதற்கு வாய்ஸ் ஓவர் பயன்படுத்திக்கொள்வது ஒரு உத்தி.

இங்கே அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி நாடகத்தை உதாரணமாக சொல்லலாம். அந்த நாடகத்தில் coven என்ற சீசனில் வாய்ஸ் ஓவர் இல்லாமல் நகர்ந்துக் கொண்டிருக்கும் கதையில், ஒரு கட்டத்திற்கு மேல் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் வாய்ஸ் ஓவர் வைத்து அதன் மனநிலையை விவரித்திருப்பார்கள். பாத்திரங்கள் அனைவரும் சூனியக்காரிகள். அவர்களுள் அடுத்த தலைவி யார் என்ற கேள்வி தான் கதை. அங்கே கதாபாத்திரங்களின் அறிமுகத்தில் வாய்ஸ் ஓவர் தேவைப் படவில்லை. ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் transformation புள்ளியை அடைந்த பிறகு, அவர்கள் தங்களை retrospect செய்யும் விதமாக வாய்ஸ் ஓவர் அமைந்திருக்கும்.

ஆனால் கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையில் வாய்ஸ் ஓவர் பயன்படுத்த தாங்கள் விரும்பவில்லை என்று இந்த நாடகத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். வாய்ஸ் ஓவருக்கு இணையாக கதாப்பாத்திரங்களின் மனநிலையை வெளிப்படுத்தும் இன்னொரு உத்தி ‘வசனம்’ என்கிறார்கள். இங்கே ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்கள் தான் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்தும். எந்த கதையிலும் மனநிலைக்கு ஏற்பதானே ஒரு பாத்திரம் பேச போகிறது இதில் என்ன ஆச்சர்யம் என்று யோசிக்கலாம். அப்படி இல்லை. இங்கே சொல்வது காட்சிகளை மெருகேற்ற பயன்படும் ஸ்பெஷல் வசனங்கள் பற்றி. ஒரு கதாப்பாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்த வசனத்தில் இருக்கும் வீரியம் அதிகம் பயன்படும். அதனால், கதையை மெருகேற்ற வசனத்தை சேர்க்க முடிந்த இடத்தில் சேர்த்து விடலாம். வசனம் நீளமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் conveying-யாக இருக்கவேண்டும்.

நல்லவரா கெட்டவரா என்ற கேள்விக்கு ‘தெரியல’ என்ற ஒரு வார்த்தைதான் அத்தனை வருடம் வாழ்ந்த வேலு நாயக்கரின் மனநிலை. அதுதான் அந்த கதையின், கதாப்பத்திரத்தின் முடிவு. அந்த வசனம் இல்லாமலேயே படத்தை முடித்திருக்கலாம். ஆனால் அந்த கதாபாத்திரத்தின் ஆர்க் முழுமை அடைய அங்கே சேர்க்கபட்ட அந்த வசனம் பயன்படுகிறது.

இதை தவிர ஒரு பெரிய ‘செட்டிங்’ பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கவும்  வசனம் பயன்படும். இதை exposition அல்லது establishing எனலாம். புதையலை தேடி போகும் ஒரு கதையில் அவர்கள் எதை தேடி போகிறார்கள் எங்கே போகிறார்கள் என்று வாய்ஸ் ஓவரில் சொல்வது ஒரு உத்தி எனில், படத்தில் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகும் இரண்டு பாத்திரங்கள் தங்களுக்குள்ளான உரையாடலின் மூலம் அதை விவரிப்பது இன்னொரு உத்தி. இந்த நாடகத்தில் அந்த உத்தி தான் அதிகம். ஆனால் இது பல எபிசோட்கள் கொண்ட நாடகம் என்பதால் அவர்கள் பேசிக்கொள்வது சுவாரஸ்யமற்று தோன்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரே படத்தில் பாத்திரங்கள் பேசிக் கொண்டே எல்லாவற்றையும் விவரிக்கிறார்கள் என்று வைப்பது சற்று சுவாரஸ்யக் குறைவை ஏற்படுத்தலாம். அதனால் காட்சிகளாக கதை சொல்ல முடிந்த இடத்தில் வசனங்களை திணிப்பதை தவிர்த்துவிடுவதே நல்லது.

வசனம் என்றதும் வசனதிற்க்காகவே பெயர் பெற்ற டைரியன் லேன்னிஸ்டர் பாத்திரத்தை நினைவு கூற வேண்டும். பல முக்கியமான தத்துவங்களை பேசும் குள்ள கதாபாத்திரம் இது. பல இடங்களில் கதையின் போக்கையே மாற்றிடும் பாத்திரமும் இதுதான்.

53169b1aad838ee62d25f83c

இதில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தாலும் இவர்கள் எல்லோரையும் இவர்களுக்குள் எங்கோ மறைந்திருக்கும் மனிதத்தன்மை தான் இணைக்கிறது என்று R.R. மார்ட்டின் குறிப்பிடுகிறார். ஆம். அந்த மனித தன்மை தான் Theme element. மிக கொடிய கெட்டவர்களுக்குள்ளும் அந்த தன்மை உண்டு. கெட்டவர்களாக இருப்பவர்களும் ராஜ்ஜியம் நிலையாக இருந்தால்தான் மக்கள் நன்றாக வாழ்வார்கள் என்று நம்புகிறார்கள். உண்மையில் இவர்களில் யாரும் ஒரெடியாக கெட்டவர்கள் கிடையாது. இவர்களின் ஒரு முகம் தான் கெட்டதாக இருக்கிறது. மற்றபடி அவர்களுக்குள்ளும் பல தூய்மையான குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதே போல் நல்லவர்களாக வருபவர்களும் சந்தர்ப்பங்களில் பிறருக்கு துரோகம் செய்கின்றனர். எல்லாவற்றையும் இந்த திரைக்கதை விலாவரியாக விவரிக்கிறது. அதற்கான அவகாசம் கதையில் இருக்கிறது. ஆனால் அவகாசம் இல்லாத பட்சத்தில் அவற்றை சுருக்கமாக சொல்லிடலாம். வில்லனை கொடூரமாகவே காண்பிக்கலாம் மற்றதெல்லாம் தேவையில்லை என்று எண்ணுவதை விட, வில்லனுக்கும் சில நல்ல குணங்கள் உண்டு என்று காண்பிப்பது நல்லது. அதே போல் மிக ஸ்ட்ரைட் ஃபார்வார்டாக இருக்கும் ஒரு  போலீஸ் கதாநாயகனும் சில நேரங்களில் தன் பிடியை தளர்த்திக் கொள்ளுகிறான் என்று காட்சிகளை வைக்கலாம். அப்படி கதாபாத்திரங்களை யதார்த்தமாக உருவாக்கும் போது அவர்களுடன் பார்வையாளர்களால் ரிலேட் செய்துக் கொள்ள முடியும். அவர்களை ஏற்றுக் கொள்ள முடியும்.

‘சீ ஆப் லவ்’ படத்தில் சட்டத்திடம் அகப்படாமல் தப்பிக்கும் குற்றவாளிகளை பிடிக்க முடிவு செய்யும் போலீஸ் நாயகன் ஒரு பொய் விழா எற்பாடு செய்து விளம்பரம் கொடுப்பான். விழா உண்மையானது என்று நம்பி வரும் குற்றவாளிகள் அனைவரும் அகபட்டுக் கொள்வார்கள். ஒரே ஒருவன் மட்டும் தன் குழந்தையுடன் வந்திருப்பான். அவனை மட்டும் கதாநாயகன் தப்பிக்க விட்டுவிடுவான். இது படத்தின் ஆர்ம்பத்தில் வரும் காட்சி. இங்கே ஒரே  காட்சியில் நீதியை நிலை நாட்ட நாயகன் எந்த திட்டத்தையும் கையாள்வான் என்பது விளங்கிவிடுகிறது. ஆனாலும் அவன் இறக்க குணம் உள்ளவன் என்பதும் விளங்கிவிடுகிறது.

கேம் ஆஃப் த்ரோன்ஸ் ஒரு ஃபேண்டஸி கதை என்பதால் இதன் மேக்கிங் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும். ஆனால் மேக்கிங்கை விடுத்தாலும், இதன் எழுத்தும், செறிவான வசனங்கள் மட்டுமே பிரம்மாண்ட உணர்வை தந்துவிடும் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. ஒரு டைனசர் கதையில் அந்த மிருகத்தை உடனே காண்பிக்க தேவையில்லை. அது எவ்வளவு பெரியது எவ்வளவு கொடூரமானது என்பதை வசனத்தில் சொல்லியே ஸ்வாரஸ்யத்தை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட முடியும். அது போன்ற பல உத்திகள் இந்த நாடகத்தில் பயன்படுத்தப் பட்டிருப்பதை கண்டுகொள்ளலாம். ஒருபுறம் ராஜ்ஜியத்திற்காக பலரும் எதிரிகளாக மாறி  அடித்துக் கொண்டாலும், மறுபுறம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து ‘வைட் வாக்கர்ஸ்’ வருகிறார்கள், ‘காட்டு வாசிகள்’ வருகிறார்கள் என மிரளுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் உண்மையில் பயப்படுவது ‘குளிர்க்காலத்தை பார்த்து தான். குளிர் வந்தால் பல ஆண்டுகாலம் அது அந்த பூமியையை புரட்டி போட்டு விடும் என்று பயந்து நடுங்கி வசனம் பேசி, நம்மையும் பயம் கொள்ள செய்கிறார்கள். இந்த வசனத்தில் இருக்கும் விவரணை குளிர் வருவதற்கு முன்பே அந்த குளிர் பயங்கரமானது என்ற உணர்வை நம்முள் விதைக்குறது. கதையில் மீண்டும் மீண்டும் வந்து நம்மை பயமுறுத்தி, கதையின் போக்கை நிர்ணயிக்கும் அந்த ஒற்றை வரி வசனம், ‘Winter is coming’. ­­

winter-is-coming-14903-1680x1050

அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை

இது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன.

சில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை  மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க ஒரு பேய் வீட்டில் நகர்கிறது. இரண்டாவது சீசன் முழுக்க ஒரு மனநல காப்பகத்தில், மூன்றாவது சீசன் சூனியக்காரிகள் பள்ளியில், நான்காவது சீசன் ஒரு மேஜிக் கேம்ப்பில் நகர்கின்றன.

american-horror-story

எந்த சீஸனிலும் இவர்தான் கதாநாயகன் இவர்தான் நாயகி என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் பார்வையில் கதை நகராது. ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். குழுவாகவே பயணிக்கிறார்கள். கதை நடக்கும் இடம் அந்த பாத்திரங்களின் வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கமே திரைக்கதை. இங்கே ஒவ்வொரு சீஸனிலும் இடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நிலையானது. கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். மறைகிறார்கள். இடம், அவர்களை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. முதல் சீஸனில் ஒரு பேய் வீட்டில் தம்பதிகள் குடி புகுகிறார்கள். அந்த வீட்டிற்கு குடிவரும் எல்லோரும் அந்தக் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அந்த வீடு அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது. அல்லது கொலை செய்ய வைக்கிறது. அங்கே இருக்கும் பேய்கள் அதை சாத்தியப் படுத்துகின்றன.

இரண்டாவது சீசனில் வரும் மனநல காப்பகத்தினுள் சிக்கிக் கொள்ளும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது, அவர்கள் இறுதி வரை குணமாக மாட்டார்கள் அல்லது அங்கேயே மடிவார்கள் என்பதாக கதை அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இதுவும் பேய் வீடு டெம்ப்ளேட் தான். இந்த டெம்ப்ளேட்டை மூன்றாவது நான்காவது சீஸனிலும் கவனிக்கலாம்.

ஒரே த்ரில்லர் டெம்ப்ளேட்டில் களத்தையும் கதாபாத்திரங்களையும் மாற்றி அமைத்து புதியதொரு திரைக்கதையை உருவாக்குவது எப்படி என்பதை புரிந்து கொள்ள இந்த சீரியல் ஒரு நல்ல உதாரணம். ஒரு நல்லதொரு டெம்ப்ளேட் சிக்கிவிட்டால் அதில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல நல்ல திரைக்கதைகளை உருவாக்க முடியும். நாயகனும்; தேவர் மகனும் ஒரே டெம்ப்ளேட் தான். நாயகனில் அப்பா கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். தேவர்மகனில் மகன் கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். ‘யே ஜவானி ஹே தீவானி’ அப்படியே ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட படம். ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ படத்தில் பணம் பணம் என ஓடும் நாயகனுக்கு நாயகி வாழ்க்கையின் அழகை புரியவைப்பாள். யே ஜவானியில் படிப்பு படிப்பு என ஓடும் நாயகிக்கு நாயகன் வாழ்க்கையின் அழகை உணர்த்துவான். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் டெம்ப்ளேட்டில் வரும் நிகழ்வுகளின் நீளத்தை நீட்டியும் குறைத்துமே நிறைய கதைகள் எழுதிவிட முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் புரட்சி செய்து மாண்டு போகிறான். பின்னர் இன்னொருவன் அவன் வழியில் பயணிக்கிறான். இந்த கதையில், நண்பன் முன்கதையிலேயே படம் தொடங்கி ஐந்தே நிமிடத்தில் மாண்டு விட்டால் அது ஒரு திரைக்கதை. அதே நண்பர்கள் இடைவேளை வரை அன்பாக பழகுகிறார்கள். இடைவேளைக்கு முன் நண்பன் இறந்துவிடுகிறான். இரண்டாம் பாதியில் இன்னொருவன் தன் நண்பனின்  பாதையில் பயணிக்கிறான் என்றால், அது வேறொரு திரைக்கதையாக மாறிவிடும். முன் கதை என்று வைக்காமல், நண்பனின் கதையை ஃபிளாஷ்பேக்கில் வைத்தால் அது முற்றிலும் வேறொருவகை திரைக்கதை. இப்படி சிறு மாற்றங்கள் செய்து ஒரு டெம்ப்ளேட்டை வேறொரு டெம்ப்ளேட்டாக தோன்ற வைக்கலாம்.

மேலும் இந்த சீரியலில் எல்லோருமே ‘க்ரே’ கதாப்பாத்திரங்கள். சுயநலம் கொண்டவர்கள். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் அதிக சுயநலம் கொண்டதாக இருக்கும். அதன் சுயநலம் மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் திரைக்கதை. ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் பாத்திரங்களின் கெட்ட குணங்களை கூட்டிக் காட்ட மிக தூய்மையான ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிரும். ஒரு கதையில் எல்லோருமே சுயநலமாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே ஒரே ஒரு வெகுளியான பாத்திரத்தை, குழந்தை மனம் கொண்ட பாத்திரத்தை உலவவிட்டால், மற்றவர்களின் சுயநலம் பெரிதாக தெரியும். அந்த வெகுளி பாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாத்திரங்களுக்கு இடையே காண்ட்ராஸ்ட் உருவாக்க இந்த உத்தி பயன்படும்.

freakshow

இந்த நாடகத்தில் நிறைய திரில்லிங்கான கிளைக்கதைகள் வருவதால் சஸ்பென்ஸிற்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் கதைகளில் மூன்று வகையான சஸ்பென்ஸ் சாத்தியம்.  ஒன்று, கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லா ரகசியங்களையும் திருப்பங்களையும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, கொலைகாரன் யார் என்பதை கதையில் வரும் போலீஸ் அதிகாரி அறிந்திருப்பார். ஆனால் பார்வையாளர்களுக்கு அது சொல்லப் பட்டிருக்காது. இரண்டு,  பார்வையாளர்களுக்கு எல்லாம் விளங்கி இருக்கும். ஆனால் கதாபாத்த்திரங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் கொலைகாரன் என்று முதலிலேயே பார்வையாளர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்திருக்காது. அவர்கள் அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது உத்தியில், யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காது. இந்த சீரிஸில் அநேக இடங்களில் இரண்டாவது உத்தியே அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும். பேய்கள் என்றும் அல்லது கொலைகாரர்கள் என்றும் தெரியாமல் கதாபாத்திரங்கள் அவர்களுடன் பழகிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே சுவாரஸ்யம்.

எத்தனைக் கிளைக்கதைகளை வைத்தாலும் எல்லா கதைகளையும் ஒரு இடத்தில் முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமாகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குறிக்கோள் இருப்பின், அந்த குறிக்கோள் அல்லது லட்சியம் சாத்தியமாகும் இடத்தில் கதை முடியலாம். நம் படங்கள் பெரும்பாலும் இந்த வகையே. கதாபாத்திரங்களின் குறிக்கோள் நிறைவேற வில்லை அல்லது இனிமேல் நிறைவேற சாத்தியமே இல்லை என்ற புள்ளியிலும் கதை முடியலாம். ‘முகவரி’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தவிர, இன்னொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதை வைத்து கதையை முடிக்கலாம். ‘மௌனம் பேசியதே’ எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு பாத்திரம் வந்து நாயகனை ஆரம்பத்திலிருந்தே காதலிப்பதாக சொல்லி கதையை முடித்து வைக்கும். இங்கே கதையை முடித்து வைக்கவே அந்த பாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை முன்கூட்டியே முன்கதையிலோ அல்லது கதையின் நடுவிலோ, அல்லது கதைக்கு Parallel-ஆகவோ அறிமுகம் செய்துவிட்டு அதை வைத்து இறுதியில் கதையை முடிப்பது இன்னும் சிறப்பான உத்தி. பார்வையாளர்களுக்கு திடீரென்று இந்த பாத்திரம் ஏன் வந்தது எந்த கேள்வி எழாது. இந்த குறிப்பிட்ட உத்தியை இந்த சீரியலில் பல இடங்களில் பார்க்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வருவது போல, கதையின் பிற்பகுதிக்கு தேவையான விஷயங்களையும் பாத்திரங்களையும் ஒவ்வொரு எபிசோடின் முன் பகுதியில் அறிமுகம் செய்துவிடுவது இந்த நாடகத்தின் மற்றுமொரு சிறப்பு.

 

ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1

அமெரிக்க, இங்கிலாந்து தொலைக்காட்சி தொடர்களை இரண்டு முக்கிய காரணங்களுக்காக பார்க்கலாம். ஒன்று, அவை அனைத்தும் முழு நீள படங்களுக்கு இணையான தரத்தில், மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் படங்களை விட தொலைக்காட்சி தொடர்கள் சுவாரஸ்யமாக இருக்கும்.

இரண்டு, அத்தகைய தொடர்களை கூர்ந்து கவனிப்பதன் மூலம் திரைக்கதை உத்திகளை புரிந்து கொள்ளலாம். சினிமா திரைக்கதைகளை விட தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதைகளுக்கு அதிக உழைப்பு தேவை. கதையை சுவாரஸ்யமான இடத்தில் முடித்தால் தான், மீண்டும் அடுத்த வாரம் பார்வையாளர்கள் தொடரை பார்ப்பார்கள். சில நேரங்களில் எங்கே விளம்பர இடைவேளை விடவேண்டும் என்பதை கூட எழுத வேண்டும். அதனால் திரைக்கதையின் நுணுக்கங்களையும், திரைக்கதையின் டைமிங்கில் இருக்கவேண்டிய precision-ஐயும் புரிந்து கொள்ளலாம்.

ஏராளமான சிறப்பான தொலைக்காட்சி தொடர்கள் இருந்தாலும், சில பிரத்தியேகமான காராணங்களுக்காக ப்ரிசன் ப்ரேக் (Prison Break) ஒரு முக்கியமானதொரு தொலைக்காட்சி தொடர். அந்த காரணங்களை பற்றி பேசுவதற்கு முன், ப்ரிசன் ப்ரேக் முதல் சீஸனின் கதையை பார்த்துவிடுவோம்.

Prison Break

மைக்கேல் ஸ்கோஃபீல்ட் ஒரு ஸ்ட்ரக்சரல் இஞ்சீனியர். அதி புத்திசாலி. செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை பெற்று சிறையில் வாடும் தன் அண்ணன் லிங்கனை காப்பாற்ற முடிவு செய்கிறான். வேண்டுமென்றே ஒரு பேங்கை கொள்ளை அடித்து போலீசில் சிக்கிக் கொள்கிறான். அவன் எதிர்பார்த்ததை போல் அவனை ஃபாக்ஸ் ரிவர் (Fox River) சிறையில் அடைக்கிறார்கள். அங்கு தான் அவனுடைய அண்ணனும் அடைக்கப்பட்டிருக்கிறான். அதிக பாதுகாப்பு நிறைந்த சிறை அது. இன்னும் சில வாரங்களில் அவனுடைய அண்ணனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிடும். அதற்க்குள் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். எப்படி தப்பிப்பது? அதற்கொரு எஸ்கேப் பிளான் வேண்டுமே ! அதுவும் தயார். ஒட்டுமொத்த சிறையின் ப்ளூ பிரிண்ட்டையும் தன் உடம்பில் டாட்டூவாக வரைந்து வைத்திருக்கிறான் ஸ்கோஃபீல்ட். சிறையிலிருந்து தப்பித்ததும் என்ன செய்வது அதையும் உடம்பில் வரைந்து வைத்திருக்கிறான். சிறையிலிருந்து வெளியேறியதும் அந்த ஊரை விட்டு வேகமாக வெளியேற விமானம் தேவை. அதற்க்கும் ஐடியா தயார்.

சிறையில் ஜான் ஆப்ரூசி என்ற மிகப்பெரிய ஒரு டான் இருக்கிறான். அவனுடைய குடுமி ஸ்கோஃபீல்டின் கையில். அவன் விமானத்தை ஏற்பாடு செய்ய ஒப்புக்கொள்கிறான். இப்போது தப்பிக்க வேண்டும். ஸ்கோஃபீல்ட் தன் திட்டத்தை செயல்படுத்த தொடங்குகிறான். ஆனால் அவன் திட்டம் வெளியே பல கைதிகளுக்கு தெரிய வருகிறது. ஒவ்வொருவரும் தங்களையும் தப்பிக்க வைக்க வேண்டும், இல்லையேல் திட்டத்தை வெளியே போட்டு உடைத்துவிடுவோம் என்று ஸ்கோஃபீல்டை மிரட்ட, ஸ்கோஃபீல்ட் அனைவரையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். இதற்கிடையில் ஸ்கோஃபீல்டை சிறை டாக்டர் சாரா காதலிக்கிறாள். அவன் தப்பிக்க உதவி செய்கிறாள். ஸ்கோஃபீல்டுடன் சேர்ந்து எட்டு கைதிகள் தப்பிக்கிறார்கள் (எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே திரைக்கதை).

Prison Break Sucre

சிறைக்கு உள்ளே இந்த கதை நகர்ந்து கொண்டிருக்க, சிறைக்கு வெளியே லிங்கனின் முன்னாள் காதலி வெரோனிக்க லிங்கனை சட்டப்பூர்வமாக காப்பாற்ற முயற்சி செய்கிறாள். அவள் ஒரு வக்கீல். “தி கம்பனி” என்று அழைக்கப்படும், நிழல் உலக கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுதான் லிங்கனை திட்டமிட்டு சிக்க வைத்திருக்கிறது என்று கண்டு கொள்ளும் அவள் கம்பெனிக்கெதிராக ஆதாரங்களை திரட்டுகிறாள். அவளை கம்பெனியின் ஆட்கள் துரத்துகிறார்கள். சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்டையும், அவன் அண்ணனையும் ஒருபுறம் போலீஸ் அதிகாரிகள் துரத்துகிறார்கள். இன்னொருபுறம் கம்பெனி அதிகாரிகள் துரத்துகிறார்கள். அடுத்து என்னவாக போகிறது என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி முதல் சீஸனை முடிக்கிறார்கள்.

அமெரிக்க திரைக்கதைகள் பெரும்பாலும் three act (sometimes four or five act) structure-ஐ பின்பற்றி எழுதப்படுபவை. ஆனால் நம்மூரில் திரைக்கதைகள் பெரும்பாலும் உள்ளுணர்விலேயே எழுதப்படுகின்றன. கதையின் ஃப்லோவை எழுதிவிட்டு, பின் காட்சிகளை மட்டும் எழுதிவிட்டு, பின்பு ஒவ்வொரு காட்சியையும் இம்ப்ரூவைஸ் செய்பவர்களே இங்கு அதிகம். அப்படி செய்யும் போது திரைக்கதை தன்னாலேயே எவால்வ் ஆகும். அதனால் ஹாலிவுட் ஸ்டாண்டர்ட்களை பின்பற்றினால் மட்டுமே நல்ல திரைக்கதைகளை உருவாக்கமுடியும் என்று சொல்லமுடியாது. சொல்ல கூடாது. திரைக்கதை எழுத யுனிவர்சல் ரூல் என்று எதுவும் கிடையாது. நமக்கு எது கைகூடுகிறதோ அதுவே சிறந்த வழி. ஆனால், குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி திரைக்கதை எழுதினாலும், உள்ளுணர்வில் எழுதினாலும், உலகின் எல்லா மெயின்ஸ்ட்ரீம் கதைகளுக்குமே ஒரு பொதுவான அம்சம் இருக்கிறது. அது தான் ‘conflict’. அதாவது பிரச்சனை (முரண்பாடு). ஒரு கதாபாத்த்திரம் இருக்கிறதேனில் அந்த கதாப்பாத்த்திரத்திற்கு ஏதாவது பிரச்சனை இருக்க வேண்டும். அதற்கு தீர்வுகாண அந்த கதாப்பாத்திரம் போராட வேண்டும். அந்த பிரச்சனை அகம் சாரந்ததாக (internal conflict) இருக்கலாம். புறச்சூழல் சாரந்ததாக இருக்கலாம் (external conflict). நாவல், திரைக்கதை என எல்லா மீடியம்களிலும் இந்த conflict இருக்க வேண்டும். அந்த conflict இல்லையேல் கதை இல்லை. கதையே இல்லாமல் படம் எடுத்தாலும் அந்த conflict இருக்க வேண்டும். (தமிழில் மூலகதாப்பாத்திரத்தின் அகம் சார்ந்த பிரச்சனைகள் பற்றி நிறைய நாவல்கள் இருக்கின்றன. அசுரகணம், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் அப்படிபட்ட திரைக்கதைகள் இல்லை. தமிழ் திரைக்கதைகளில் முக்கிய கதாப்பாத்திரத்தின் எக்ஸ்டர்னல் கான்ஃப்லிக்ட்டிற்கே முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கும்) அந்த conflict சுவாரஸ்யமானதாக இருக்கும்போது திரைக்கதையின் சுவாரஸ்யமும் அதிகமாகிறது. ப்ரிசன் ப்ரேக்கில் ஒவ்வொரு முக்கியகதாபாத்திரத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான பிரச்சனை இருக்கிறது.

சுக்ரே என்றொரு கைதி கதப்பாத்திரம்.. இன்னும் சில மாதங்கள் பொறுத்தால், அவனுக்கு சட்டப்பூர்வமாக விடுதலை கிடைத்துவிடும். தப்பிக்க முயற்சி செய்து சிக்கினால், வாழ்க்கை முழுவதும் ஜெயிலில் கழிக்க வேண்டியதுதான். அதனால் அவனுக்கு தப்பிப்பதில் விருப்பம் இல்லை. ஸ்கோஃபீல்ட் தன்னுடன் இணைந்து கொள்ள வாய்ப்பளித்தும் அவன் அதை ஏற்க மறுக்கிறான். ஆனால் திடீரென்று அவனுக்கு ஒரு பிரச்சனை வருகிறது. அவனுடைய காதலிக்கு திருமணம் என்ற செய்தி கிடைக்கிறது.. தன் காதலியின் திருமணத்தை நிறுத்த வேண்டுமெனில் அவன் ஜெயிலிருந்து தப்பிக்க வேண்டும். அவன் வேறுவழியின்றி ஸ்கோஃபீல்ட்டுடன் இணைந்து தப்பிக்க முடிவு செய்கிறான்.


wallpaper_prison_break_sucre_amaury_nolasco-1400x1050

டீ பேக் என்றொரு ஆயுள் கைதி கதாபாத்திரம். அவனுக்கு தன்னுடைய முன்னாள் காதலியை கொலை செய்ய வேண்டும். அதற்கு வெளியே செல்ல வேண்டும். இது அவனுடைய பிரச்சனை.

Prison-Break-T-Bag

எப்படி குழப்பமில்லாமல் பல முக்கிய கதாபாத்திரங்களை கையாலாவது என்பதை பற்றியும், எப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒரு சுவாரஸ்யமான conflict-ஐ உருவாக்குவது என்பதை பற்றியும் இக்கதையிலிருந்து புரிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பேக் ஸ்டோரி இருக்கிறது. சிறையின் ப்ளூ பிரிண்ட் ஸ்கோஃபீல்டிடம் எப்படி கிடைத்தது என எல்லாவற்றிற்க்கும் ஒரு கிளை கதை இருக்கிறது. கதையின் ஓட்டத்தை நிறுத்தாமல், எப்படி இவற்றை சாத்தியப்படுத்துவது என்பதையும் இங்கே புரிந்து கொள்ளலாம்.

கதையில் ஏராளமான கதாப்பாத்திரங்கள் இருந்தாலும், தேவையில்லாத கதாபாத்திரம் என்று எதுவும் வராதது ப்ரிசன் ப்ரேக்கின் மிகப்பெரிய பலம். பொதுவாக, கதையை முடித்து வைக்க வேண்டும் என்பதற்காக ஒரு கதாபாத்திரத்தை திடீரென்று அறிமுகம் செய்வது நியாயமாகாது. அதேபோல் கதையை வளர்க்க வேண்டும் என்பதற்க்காக, கதாபாத்திரங்களை திணிக்க கூடாது. ஆனால் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்த எங்குவேண்டுமானாலும் கதாபாத்திரத்தை அறிமுகப் படுத்தலாம். அப்படி செய்யும் போது திரைக்கதை இன்னும் சுவாரஸ்யமாக உருவாகிடும். இங்கே திருப்புனை கதாப்பாத்திரங்கள் நிறைய வந்த கதையின் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன. அதில் சில முக்கிய கதாபாத்திரங்களை பற்றியும், அதன் transformation பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்…

P.S: திரைக்கதை ஸ்ட்ரக்சருக்கும் ஃபார்மட்டிங்கிற்கும் (formatting) வித்தியாசம் இருக்கிறது. ஹாலிவுட் ஸ்ட்ரக்சரை பின்பற்ற வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் Screen writing software-களை பயன்படுத்தி ஃபார்மட்டிங் செய்யும் போது, ஒரு திரைக்கதையின் தோரயமான ஸ்கிரீன் டைமிங் என்ன என்பதை எளிதில் கண்டு கொள்ள முடியும். எளிதாக Script break down செய்ய முடியும். இது ப்ரொடக்ஷன் செலவுகளை குறைக்க உதவும்.

 அடுத்த பாகத்தை இங்கே படிக்கலாம்
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2