கொரோனா நாட்கள்-நெடுங்கதை

இன்று இந்த தளம் தன்னுடைய பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றி.

அரவிந்த் சச்சிதானந்தம்

கொரோனா நாட்கள்-நெடுங்கதை

ஒன்று

வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான் எனக்கு. கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில் மிதந்து போவதை நினைக்கும் போது 
பயமாக தான் இருக்கிறது. அதனால் கப்பல் ஓட்டுவது கடினமான 
வேலை என்று மனதில் நிலைத்துவிட்டது. நம்மை பயமுறுத்தும் விஷயங்கள் எல்லாமே நமக்கு கடினம் தான் போல! வண்டி ஓட்டும் போதெல்லாம் யாராவது வந்து இடித்து
விடுவார்களா, அல்லது நான் யார் மேலேயாவது இடித்து விடுவேனா என்ற பயம் 
எப்போதும் இருக்கும். அதனாலேயே எனக்கு வண்டி ஓட்டுவது என்றாலே கப்பல் ஓட்டுவது போல் தான். கப்பல் ஓட்டுவது கடினமான வேலையா என்று தெரியாது. அவ்வளவு பெரிய கடலில்…
சரி, கப்பலுக்கு நங்கூரம் பாய்ச்சி நிறுத்திவிடுவோம்.

வண்டி தான் பயம்.

வண்டியே அதிகம் ஓட்டிடாத எனக்கு கொரோனா காலத்தில் 
தினமும் வண்டி ஓட்ட வேண்டும் என்றதும் கூடுதல் 
பயம் வந்துவிட்டது. அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று 
சொல்லிவிட்டார்கள். என் வீடு கிழக்கு தாம்பரத்தில் இருந்தது. நான் வேலை செய்யும் வங்கியோ மந்தைவெளியில். இடைப்பட்ட இருபத்தைந்து கிலோ மீட்டரை கடக்க வண்டி 
ஓட்டி ஆக வேண்டும்.

குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.  

“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார்.

“மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்”

அவர் சமாதானம் ஆகவில்லை.

“வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து 
வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார்.

“எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன்.

கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…!”

“இல்ல. நாலு மாசத்துக்கு முன்னாடியே அந்த காரு வந்திருச்சு ப்ரோ” என்றேன் நான்.

“கொரோனாவும் நாலு மாசத்துக்கு முன்னாடியே 
வெளிநாட்ல வந்திருச்சு ப்ரோ” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.  

அதன் பின் அவரை நான் வற்புறுத்தவில்லை. தன் வண்டியே தனக்கு உதவி.

ஆனால், அதே வாரத்தில் ஒரு நாள்  அம்மா செய்து கொடுத்த 
மசால் வடையை  உணவு இடைவேளையில்  நான் தட்டில் எடுத்து வைத்த போது,

“என்ன ப்ரோ! அம்மா ஸ்பெசலா!” என்றவாறே வடையை ஏக்கமாக பார்த்தார்.

அவர் எங்கள் அலுவலகம் எதிரே இருந்த ராகுல் டீ கடையில், பலமுறை சுட்ட எண்ணையில் பொறித்து எடுத்த மிகச் சுமாரான 
வடையைக் கூட ரசித்து சாப்பிடுவார்.அவருக்கு அலுவலகத்தில் அதனால் தான் M.V என்ற பெயர் வந்தது. அதாவது மசால் வடை.

“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ!” என சொல்லலாம் என்று பார்த்தேன். ஆனால் அவர் நான் என்ன சொல்லப் போகிறேன் என்றெல்லாம் 
சட்டை செய்யாமல், என் தட்டில் இருந்து ஒரு வடையை எடுத்துக் கடித்தார்.       

“எண்ணெய்ல பொறிச்சு எடுத்தா கொரோனா செத்துரும் ப்ரோ…” என்றார்.

“நாளைல இருந்து உங்க வண்டில வந்துறவா ப்ரோ” என்று கேட்கத் தோன்றியது.

“எண்ணையில குளிச்சிட்டு வாங்க ப்ரோ” என்று சொல்லிவிடுவாரோ என்று பயம். தன் வண்டியே தனக்கு உதவி. மீண்டும் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

முதல் நாள் வண்டியை எடுத்த போது கொஞ்சம் கூடுதலாகவே பயம்இருந்தது. சில மாதங்களாகவே வண்டியை வெளியே எடுக்கவில்லை. சில வருடங்களாகவே வண்டியை தாம்பரத்தை தாண்டி எடுத்துச் சென்றதில்லை. மளிகைக்கடை போக, மாவுக் கடைக்கு போக மட்டுமே வண்டியை பயன்படுத்தி வந்தேன். அதிக பட்சம் போய் வர இரண்டு கிலோமீட்டர் தூரம் தான். நான்கைந்து மாதங்களுக்கு முன்பு என்.எஸ்.என் ஸ்கூல் அருகே 
இருந்த தள்ளுவண்டி கடையில் மசால் பூரி சாப்பிட போன போது, குறுக்கே ஓடி வந்துவிட்ட நாயை இடித்துவிடாமல் வண்டியை ப்ரேக் அடித்து நிறுத்த, வண்டி சறுக்கி மசால் பூரி கடை வாசலில் நின்று காளான் 
சாப்பிட்டுக் கொண்டிருந்த தடியான ஆசாமியின் மீது 
மோதிவிட்டது. அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.

எனக்கு அவமானமாக போய்விட்டது. அவருக்கு காளான் போய்விட்டது. அவர் கையில் இருந்த காளான் தட்டு கீழே விழுந்து, காளான் சிதறி, குறுக்கால் ஓடிய நாய் அதை சாப்பிட தொடங்கி விட்டது. நான் அவமானத்தில் எதுவும் சாப்பிடாமல் திரும்பி வந்தேன். அதன் பின்பு நான் மசால் பூரி சாப்பிடவே இல்லை. வண்டியையும் எடுக்கவில்லை. ஆனால் மார்ச் முப்பத்தி ஒன்றாம் தேதி வரை ரயில்கள் இயங்காது 
என்ற அறிவிப்பு வந்ததும் எனக்கு வண்டியை வெளியே எடுப்பதை 
தவிர வேறு வழி இருக்கவில்லை. பேருந்தில் போய் வருவது சாத்தியமில்லை. ரயில் இல்லை எனில் எல்லோரும் 21G பேருந்துக்குள் நுழைந்து கொள்வார்கள். கூட்டத்தில் மொபைலையும் பர்ஸயும் பாதுகாக்கும் பொறுப்பு வேறு கூடிவிடும். இருசக்கர வாகனத்தில் போவது தான் சரியாகப்  பட்டது. நான்கைந்து நாள் தானே சமாளித்துவிடலாம் என்று எண்ணினேன்.

“பெட்ரோல் போட்டுக்கோ, காத்து அடிச்சுக்கோ” என்றார் அப்பா.

வண்டி வெகு நேரம் கண்திறக்க மறுத்தது.

“சோக்க போடுடா…”  

அப்பா வாசலில் நின்று கொண்டு ரன்னிங் கமெண்டரி கொடுப்பது எனக்கு என்னவோ போல் இருந்தது.  

“அவனுக்கு தெரியும். நீங்க உள்ள வாங்க” எப்போதும்  போல் அம்மா தான் காப்பற்றினாள்.

வண்டி கண் திறந்தது.

சோக்கை போட்டுக் கொண்டு வண்டியை ஓட்டியதால் 
திருப்பங்களில் வண்டியின் வேகத்தை குறைத்த போதெல்லாம் 
வண்டி உறுமியது. அது எனக்கு கூடுதல் பயத்தை கொடுத்தது. குரோம்பேட்டையை நெருங்கும் போது தான் வண்டி இயல்பானது. நானும் தான். சோக்கை அணைத்தேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன். வண்டி வேகமெடுத்தது. அதே வேகத்தில் குரோம்பேட்டை பாலத்தில் ஏறினேன். அதிக பட்ச வேகம் இருபது கிலோமீட்டர் தான் என்று பாலத்தில் 
எழுதி ஒட்டியிருந்தார்கள். நான் வேகத்தை குறைக்க முடிவெடுத்து ஸ்பீடோ மீட்டரை 
பார்த்தேன். வண்டி ஏற்கனவே பதினைந்து கிலோமீட்டர் வேகத்தில் தான் போய் கொண்டிருந்தது.

“யோவ் ஸ்லோவா போறதா இருந்தா லெப்ட்ல போ…” என்று கத்தினான் புல்லட்டில் போனவன். எனக்கு கோபம் வந்தது. வண்டியை அதிகமாக முறுக்கினேன். அடுத்த அரை நிமிடத்தில் வண்டியின் வேகம் முப்பதை தொட்டது. எனக்கு பெருமையாக இருந்தது. அந்த புல்லட்காரனை துரத்திக் கொண்டு போக வேண்டும் என்ற 
ஆசை வந்தது. மீண்டும் முறுக்கினேன். வண்டி ஆட்டம் காணுவது போல் இருந்ததால் ஆசையை அடக்கிக் கொண்டேன்.     

பரங்கிமலை அருகே 21G பேருந்து என்னைக் கடந்து போவதை கவனித்தேன். பேருந்து நான் எதிர்ப்பார்த்தது போலவே கூட்டமாக இருந்தது. நான் எடுத்த முடிவு சரிதான் என்று என்னையே மெச்சிக் 
கொண்டேன். அதே சந்தோசத்தில் முப்பது கிலோமீட்டர் வேகத்தில் அலுவலகத்தை அடைய மணி பத்தேகால் ஆகிவிட்டது. ஒன்பதே முக்காலுக்கெல்லாம் வங்கியில் இருக்க வேண்டும். இருந்தும் யாரும் எதுவும் சொல்லவில்லை. முதல் நாளை ஓட்டி ஆகிவிட்டது. மாலை வீட்டுக்கு வந்ததும் தான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

“இருவத்தி ஒருநாள் ஊரடங்காம்” என்றார் அப்பா.  

இரண்டு

ஊரடங்கில் சாலையில் அதிக வாகனங்கள் ஓடாதது தான் பெரிய 
ஆறுதல். அத்தியாவசிய வேலைக்கு செல்பவர்கள் மட்டுமே வெளியே 
வந்தனர். ஆங்காங்கே போலீஸ் நிறுத்தினாலும், வண்டியின் முன்பு ஒட்டியிருந்த என் வங்கியின் ஸ்டிக்கரைப் 
பார்த்து அனுப்பிவிட்டார்கள். கெட்டதிலும் நல்லதாக எங்கேயும் சிக்னல் இயங்கவில்லை. எனக்கு எப்போதும் பச்சையும் சிகப்பும் ஒரே மாதிரி தான் தெரியும். தோரயமாக தான் சிக்னலை புரிந்து வைத்திருக்கிறேன். வெகு தூரத்தில் வண்டி ஓட்ட வேண்டிய அவசியம் ஏற்படாததால் 
சிக்னல் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. ஊரடங்கால் சிக்னலும் அடங்கிவிட்டதால், சைக்கிள் ஓட்டும் நிதானத்தில் வண்டியை ஓட்டி அலுவலகத்தை அடைவது வழக்கமாகிவிட்டது. கொரோனாவும் நாளுக்கு நாள் எண்ணிக்கையில் கூடிக் கொண்டே போனதில் எனக்கு அப்சசிவ் கம்பல்சன் டிசார்டர் வந்துவிட்டது. நான் பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை கைகளைக்  கழுவிக் கொண்டே இருந்தேன். அன்றும் அப்படிதான். மேஜையில் பையை வைத்துவிட்டு கைக்கழுவும் இடம் நோக்கி 
நடந்தேன்.

கைக்கழுவும் குழாய்க்கு மேலே கையை எப்படி கழுவ வேண்டும் 
என்று படம் போட்ட மாநகராட்சி ஸ்டிக்கரை ஒட்டி இருந்தார்கள். முதலில் சோப்பு அல்லது ஹாண்ட் வாஷ் திரவத்தை கையில் 
ஊற்றுங்கள். பின் முப்பது வினாடிகள் விரலின் இடுக்கில் எல்லாம் தேயுங்கள்.

நான் ஹாண்ட் வாஷ் பெட்டியை அழுத்தினேன். தண்ணீர் வந்தது. மறுபடியும் அழுத்தினேன். தண்ணீர் தான் வந்தது. எனக்கு குழப்பம். ஒருவேளை நாம் தான் ஹாண்ட் வாஷிற்கு பதில் தண்ணீரை அழுத்திவிட்டோமோ என்று எண்ணியவாறு மீண்டும் ஹாண்ட் வாஷ் 
பெட்டியை அழுத்தினேன். நிறைய தண்ணீரோடு கொஞ்சம் திரவம் வந்தது.

“என்னங்க இது!” கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அலுவலக 
உதவியாளரைக் கேட்டேன்.

“சார் அட்மின்ல சிக்கனமா யூஸ் பண்ண சொல்றாங்க, அதான் கொஞ்சமா கலந்தேன்”

“இது கொஞ்சம் தண்ணியா!” மீண்டும் கோபமான முகத்தோடு ஹாண்ட் வாஷ் பெட்டியை 
அழுத்தினேன். நிறைய தண்ணீர் தான் வந்தது.

“சார், நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க. தண்ணீல தான் கொஞ்சமா கைகழுவுற லிக்யூட ஊத்தினேன்” என்றார்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்த்தேன்.

“இந்த காலத்துல போய் இப்டி இருக்கீங்களே!” என்று அவர் முணுமுணுத்துக்  கொண்டே நகர்ந்தார்.

அட்மின் சீப் மேனஜர் தான் இதெற்கெல்லாம் பொறுப்பு.

“ஏமி!” என்றார் சீப் மேனஜர் சுங்கர சுப்பிரமணி. அவர் ஆந்திராகாரர். தங்கள் ஊர் ஆசாமிகள் என்றாலோ, பெண்கள் என்றாலோ அவருக்கு நிறைய பிரியம். மற்றவர்களை நிமிர்ந்து பார்க்கக் கூட விரும்பாதவாராக தான் 
பேசுவார்.

“சார், ஹான்ட் வாஷ் லிக்யூட்ல தண்ணிதான் இருக்கு. இப்போ, இது தான முக்கியமான விஷயம்! இதுல போய் கலப்படம் பண்றீங்க!” என்று கோபமாக கேட்டேன். அவர் பதில் சொல்லாமல் தன் வேலையைப் பார்த்துக் 
கொண்டிருந்தார். அப்போதுதான் நான் என் மனதிற்குள்ளேயே கேட்டிருக்கிறேன் என்று புரிந்தது. சப்தமாக பேச முடியாது. அவருக்கு பிடித்த இரண்டு பிரிவுகளிலும் நான் இல்லை. அமைதியாக, அவர் மேஜை மீதிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்து 
இட்டுவிட்டு நகர்ந்துவிடுவது நல்லது என்றுபட்டது. எப்போதும் ஒன்பதே முக்கால் மணிக்குள் கணினியில் லாகின் 
செய்ய வேண்டும். ஆனால் சிலநாட்களுக்கு லாகின் அவசியமில்லை, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டால் போதும் என்ற சலுகையை கொரோனா பெற்றுத் தந்திருந்தது.

நான் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கும் போதுதான் ஐ.டி 
ஆபிசர் காயத்திரி வந்தாள்.

“நமஸ்கார் சார்” என்றாள் சுப்ரமணியிடம்.

“நமஸ்கார் மேடம்” சுப்ரமணியின் வாயெல்லாம் பற்கள். நான் அமைதியாக நகர்ந்தேன்.

“ஏன் கஷ்டப்பட்டு வறீங்க மேடம், வர்க் ப்ரம் ஹோம் ஆப்சன் எடுத்துக்குலாம்ல” என்று ஆங்கிலத்தில் சுப்பிரமணி கேட்டது காதில் விழுந்தது.

“பரவால சார். லீவ் எடுத்துக்கிட்டா ஆபிஸ் வேலைய யார் பார்க்குறது…!” என்று அவள் சொல்வதும் கேட்டது.

“ஏண்டா உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையாடா!” என்று என் மனசாட்சி அவர்களின் மனசாட்சியைப் பார்த்து கேட்டது. அது அவர்களின் மனசாட்சிக்கு கேட்டதா என்று தெரியாது. என்னால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

காயத்திரி, மன்னிக்கவும், காயத்திரி மேடத்தின் வீடு இரண்டு கட்டிடங்கள் தள்ளி தான் 
இருந்தது. சாதாரண நாட்களிலேயே தாமதமாக வருபவள், கொரோனா நாட்களில் மிகவும் தாமதமாக வந்துக் 
கொண்டிருந்தாள். மேலும் அவள் பெரிதாக எந்த வேலையும் செய்யும் பழக்கம் 
இல்லாதவளாக இருந்தாள். வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டுவிட்டு ஏசி அறையில் 
போய் அமர்ந்துகொண்டு அன்றைய நாளின் ஷேர் மார்க்கட் 
நிலவரங்களை கொஞ்ச நேரம் பார்ப்பாள். கொஞ்ச நேரம் என்றால் நான்கு மணி நேரங்கள். இடையிடையே சாஸ்திரத்திற்கு கொஞ்சம் வேலை செய்வாள்.

இரண்டு மணிக்கு மதிய உணவிற்காக அவள் வீட்டிற்கு கிளம்பிச் 
செல்வாள். உணவு இடைவேளை அரைமணி நேரம் தான். ஆனால் காயத்திரி மூன்று மணிக்குதான் வருவாள். மீண்டும் ஏசி அறை. மீண்டும் பங்குச் சந்தை.

அலுவலகத்திற்கு பக்கத்திலேயே வீட்டை வைத்திருக்கும் அவளுக்கு, வேலையே செய்யாத அவளுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் 
வாய்ப்பை கொடுக்கிறார்கள். ஆனால் வெகுதொலைவில் இருந்து வரும் எனக்கு அந்த வாய்ப்பு 
மறுக்கப்பட்டுவிட்டது. வாய்ப்புகள் மறுக்கப் படும் போது (வெளிநாட்டில்) அடிமையாகிறோம் என்று யாரோ சொன்னது உண்மைதான் போல.

ஒரு நாள் அலுவலகம் வந்தால், மறுநாள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று மேலிடத்தில் 
சொன்னதுமே, நான் சுப்புரமணியிடம் போய் கேட்டேன்.

“மேல் ஸ்டாப்லாம் வந்தே ஆகணும். லேடிஸ்க்கு மட்டும் தான் அந்த ஆப்சன். ” என்றார்.

“ஏன் சார்! ஆம்பளைங்களுக்கு கொரோனா வராதா!” என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. ஆனால் காயத்திரிக்கு மட்டும் தான் அப்படி எல்லாம் துடுக்காக 
பேசும் உரிமை இருந்தது.

சுப்ரமணியைப் பார்த்தாலே, “லேடிஸ்க்கு மட்டும் தான் என்ன கேள்வி கேட்குற உரிமை இருக்கு” என்று அவர் நெற்றியில் எழுதி ஒட்டியிருப்பது போல் தோன்றும். அவரிடம் அதிகம் பேசி பிரச்சனை ஆகிவிட்டால் மேலிடம் 
கோபித்துக் கொள்ளும். சுப்ரமணி எப்போதுமே மேலிடத்தின் ஆள். தலைமை மாறினால் அதற்கு ஏற்றால் போல் தன்னை எளிதாக 
மாற்றிக் கொள்ளக் கூடியவர். அவர் ராஜா-கத்திரிக்காய் கதையில் வரும் மந்திரி போன்றவர். அது என்ன கதை!

ஒரு ஊரில் ஒரு ராஜாவாம். அவர் தன் மந்திரியோடு ஒரு விருந்திற்கு போனாராம். விருந்தில் கத்திரிக்காய் கூட்டை உண்டாராம். “ஆஹா! என்ன ருசி. உலகில் கத்திரிக்காய் போல் சுவையான ஒரு காயும் உண்டோ!” என்றாராம். அதற்கு மந்திரி, “ராஜா! உலகிலேயே தலை சிறந்த காய் கத்திரிக்காய் தான். அதனால் தான் அதன் தலையில் கிரீடம் வைத்திருக்கிறது இயற்கை” என்று கத்திரிக்காயின் காம்பை குறிப்பிட்டு சொன்னாராம். ராஜாவும் அகம் மகிழ்ந்து மந்திரிக்கு ஆயிரம் பொற்காசுகள் 
கொடுத்தாராம்.

மீண்டும் ஒரு நாள் ராஜா  மந்திரியை அழைத்துக் கொண்டு, வேறொரு விருந்திற்கு போனாராம். விருந்தில் கத்திரிக்காய் கூட்டை உண்டாராம். கத்திரிக்காய் கசந்ததாம். “ஐயோ! இது என்ன சுவையற்ற காய்!” என்று சலித்துக் கொண்டாராம். அதற்கு மந்திரி, “ராஜா! உலகிலேயே மிக மோசமான காய் கத்திரிக்காய் தான். அதனால் தான் அதன் தலையில் முள்ளை வைத்திருக்கிறது 
இயற்கை” என்று கத்திரிக்காயின் காம்பை குறிப்பிட்டு சொன்னாராம். ராஜாவிற்கு குழப்பம்.

“மந்திரியாரே, போனமுறை நான் கத்திரிக்காயை புகழ்ந்த போது நீங்களும் புகழ்ந்தீர்கள். இப்போது நான் கத்திரிக்காயை இகழும் போது நீங்களும் 
இகழ்கிறீர்கள்!” என்று ஆச்சர்யத்துடன் வினவினாராம் ராஜா.

அதற்கு மந்திரி சொன்னாராம், “பெருமைக்குரிய மகாராஜா அவர்களே. நான் உங்களுக்கு மட்டும் தான் மந்திரி, கத்திரிக்காய்க்கு அல்ல…”

இது போல மேலிடம் சொல்வதை எல்லாம் சரி என்று சொல்லியே 
சுப்பிரமணி மேலிடத்தில் செல்வாக்கு பெற்றிருந்தார். அதனால் அவரை சீண்டாமல் என் வேலையை மட்டும் பார்த்துவிட்டு போவதுதான் எனக்கு நல்லது. ஆனால் வேலையை தவிர எல்லா விஷயத்திலும் கவனம் போனது. முக்கியமாக மாஸ்க். இந்த மாஸ்க்கை யாரும் சரியாக போடுவதாகவே தெரியவில்லை. நானும் சாலையில், அலுவலகத்தில் எல்லா இடங்களிலும் பார்க்கிறேன். எல்லோரும் வாயை மட்டுமே மாஸ்கால் மறைத்து வைத்தனர். மூக்கு மாஸ்க்கிற்கு வெளியே தான் எட்டிப் பார்த்தது.

என்னுடன் வேலைப் பார்த்த பலரிடமும் சொல்லிப் பார்த்தேன், “மூக்க மூடுங்க” என்று. ஆனால் யாரும் என் பேச்சைக் கேட்டபாடில்லை. அவர்கள் கூட பரவாயில்லை. உத்திர பிரதேசத்திலிருந்து வந்த சீனியர் மேலாளர் குப்தாவிற்கு  
முகக் கவசம் அணியும் பழக்கமே இல்லை.  

ஏன் என்று கேட்டால் சொல்வார், “எனக்குலாம் கொரோனா வராது மாலிக்!”

“அதெப்படி!”

“உ.பிலதான் கொரோனா அதிகம் வரவே இல்லையே” என்றார்.

“உங்க ஊர்ல டெஸ்டிங்கே பண்றது இல்ல குப்தாஜி. அதனால தான் யாருக்கும் கொரோனா இல்லனு சொல்றாங்க” என்றேன்.  

“அதெல்லாம் காங்கிரஸ் அரசியல். உ.பிகாரங்களுக்கு கொரோனா வராது. எல்லாரும் கவர்மெண்ட் சொன்ன மாதிரி வீட்ல விளக்கேத்தி 
வைக்கிறோம், மெட்ராஸ்காரங்களுக்கு தான் வரும்…” என்று உறுதியான குரலில் சொன்னார்.

“இது என்ன லாஜிக். நீங்களும் இப்ப சென்னைல தான இருக்கீங்க….!”

“ஆனாலும் நான் உ.பிகாரன் தான!” என்று கேட்டுவிட்டு ‘ஹச்’ என்று தும்மினார். அதன்பின்பு அவர் பக்கத்தில் நிற்க பயமாக இருந்தது.

அலுவலகத்தில் தான் இந்த பாடு என்றால், சாலையில் கதை வேறுமாதிரி இருந்தது. வண்டியை போலீஸ்காரர்கள் நிறுத்தும் இடங்களில் தான்,  என் அருகே வண்டியை வந்து நிறுத்தும் யாராவது ரோட்டில் எச்சில் துப்புவார்கள். அப்படிதான் அந்த தடியான ஆசாமியும் எச்சில் துப்பினார்.

“சார் கொரோனா நேரத்துல இப்டி கண்ட இடத்துல எச்சு துப்பக் 
கூடாது” என்றேன்.

“கொரோனா வந்தா வரட்டும்… பயந்து பயந்து சாகுறதுக்கு ஒரேடியா சாகலாம்” என்றார்.

“அது உங்க விருப்பம் சார். மத்தவங்க ஏன் சார் சாகனும்…!” உயிர் பயம் எனக்கும் அதிக கோபத்தைத் தந்தது. ஆனால் அவரோ சிரித்தார்.

“தம்பி எந்த நோயும் வராது. ஒரு பேச்சுக்கு சொன்னா இப்டி பயப்படுற! இங்க பாரு!” என்றவாறே வண்டியின் முன்பு காட்டினார். அங்கே கொத்தாக வேப்பிலை சொருகப்பட்டிருந்தது.

“எங்க வேணா எச்சு துப்பலாம். இது இருந்தா எந்த நோயும் அண்டாது…” என்றவர் தன் வண்டியிலிருந்த வேப்பிலையில் ஒரு கொத்தை உருவி என்னிடம் கொடுத்து,

“வச்சுக்கோ…” என்றார். நான் என்ன சொல்வது என்று தெரியாமல் வேப்பிலையை வாங்கிக் கொண்டேன்.

மூன்று

ஊரடங்கு நீண்டுக் கொண்டே போனது. இரண்டு மணி நேரம் மளிகை கடையில், காய்கறி கடையில் நின்றால் தான் பொருட்கள் வாங்க முடியும் என்ற சூழலை காலம் உருவாக்கி விட்டது. அக்னி நட்சத்திரம் வேறு தன் வேலையைக் காட்டியது. தலையில் பெயருக்கென்று கைக்குட்டையை அணிந்து கொண்டு 
கடையின் முன்பு நின்றேன். (தலைக்குட்டை என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும் 
என்றால் அப்படியே சொல்லிக் கொள்ளலாம்)

தலையெல்லாம் வியர்வை வலிந்து தலை முடி பிசுபிசுக்க 
ஆரம்பித்துவிட்டது. கொஞ்ச நேரம் அப்படியே விட்டால் தலை வலி வந்து விடும். இதற்கு வெயிலே தேவலாம் என்று கைக்குட்டையை கழட்டி 
விட்டேன்.  

ஆனால் இந்த மூக்கை மறைக்கும் மாஸ்க் தான் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. நானும் ஆரம்பத்தில் இருந்தே பார்க்கிறேன். மாஸ்க் அணிந்தால் தான் மூக்கு அறிக்கிறது. மூக்கில் விரல் வைத்து தேய்க்க வேண்டும் என்ற உணர்வு வருகிறது. ஆனால் டி.வியில் மூக்கில் கை வைக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அன்று, வியர்வையில் மூக்கு அதிகம் அரித்தது. ஆனாது ஆகட்டும் என்று முக கவசத்தை, இல்லை மூக்கு கவசத்தை, கழட்டிவிட்டு புறங்கையால் மூக்கைத் தேய்த்தேன்.

அவ்வப்போது திரும்பி என்னிடம் எதையாவது பேசி வந்த என் முன்னே நின்று கொண்டிருந்த பெரியவர் நான் செய்யக் கூடாத தவறை செய்துவிட்டதாக பார்த்தார். அவர், “லைப்ப தொலைச்சிட்டியேடா” என்று சொல்வது போல் இருந்தது. மேலும் அவர் என்னை விட்டு இன்னும் கொஞ்சம் விலகி சென்றது 
என்னமோ போல் இருந்தது. எனக்கே பயம் வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். மீண்டும் மாஸ்க்கை அணிந்துகொண்டேன். மாஸ்க் என்றதும் எதோ N-95 மாஸ்க் என்று நினைக்க வேண்டாம். எப்போதோ கிண்டி ரயில் நிலையத்தில் இருபது ரூபாய் கொடுத்து வாங்கிய கைக்குட்டைதான் மாஸ்க்காக பயன்பட்டது. (ஆம்! முகக்குட்டை தான்)

ஆரம்பகாலத்தில், ஏதோ அலுவலகத்தில் பெரிய மனசு செய்து பாதி விலையில் ஒரு 
N-95 மாஸ்க் வாங்கி கொடுத்தார்கள். மீதி விலையை எங்களிடம் வாங்கிக் கொண்டார்கள்.

ஒரு வாரம் கழித்து, புதிய மாஸ்க் வேண்டும் என்று போய் சுங்கர சுப்பிரமணியத்திடம் கேட்டார் எம்.வி.

“அதெல்லாம் ஒரு முறை தான் வாங்கித் தரமுடியும். இனிமே வேணும்னா நீங்கதான் வாங்கிக்கணும்…” என்றார் அவர்.

“அல்ப்பய்ங்க. வேலைக்கு வர சொல்றானுங்க. ஒரு மாஸ்க் வாங்கித் தர மாட்றானுங்க… கணக்கு காட்றதுக்கு தான் பர்ஸ்ட் டைம் வாங்கி கொடுத்திருக்கானுங்க…” என்று சலித்துக் கொண்டார்.  

“பேசமா கர்ச்சீப் கட்டிக்கலாம் ப்ரோ… டெட்டால்ல தோச்சுக்கலாம் ” என்றேன்

“ஏன் ப்ரோ! தெரிஞ்சுதான் பேசுறீங்களா! N 95 தான் போடணும். இதுலலாம் ரிஸ்க் எடுப்பீங்களா! அப்டி காச மிச்சம் பண்ணி என்னப் பண்ணப் போறீங்க! ” என்று கோபமாக அடுக்கிக் கொண்டே போனார்.

மறுநாள் புதிய மாஸ்க்கோடு வருவார் என்று பார்த்தேன். ஆனால் அதே

N-95 மாஸ்க்கை துவைத்து போட்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அதே N 95 மாஸ்க்கை தான் சலவை செய்து அணிந்து வருகிறார். சில நேரங்களில் இஸ்திரி செய்து அணிந்துவருவதாக சொன்னார். அந்த மாஸ்க்கை பார்க்கும் போதெல்லாம், ஒய்யார கொண்டையாம் தாழம் பூவாம் என்று அப்பாயீ சொல்லும் பழமொழி தான் ஞாபகம் வரும். எனக்கு கிண்டி முகக்குட்டையே போதும் என்று முடிவு 
செய்துவிட்டேன்.

எனக்கும் பெரியவருக்கும் முன்னே சிகப்பாக உயரமாக மீசைவைக்காமல் நின்றிருந்த மனிதர் ஒருவர் கடையினுள் நுழைந்தார். நானும் பெரியவரும் கடை வாசலில் நின்றோம்.

கடை வாசலில் ஒரு கயிற்றை கட்டி வைத்திருந்தனர். உள்ளே சென்றவர் கையில் மிக நீண்ட தாள் இருந்தது. அவர் வெகு நேரம் என்னென்னமோ வாங்கினார். அந்த கடையில் வேலை செய்பவர்களை மட்டும் தான் அவர் வாங்கவில்லை என்ற அளவிற்கு அவர் எல்லாவற்றையும் வாங்கினார்.

நான் வாங்குவதற்கு ஏதாவது மிச்சமிருக்குமா என்ற அச்சம் வேறு 
வந்துவிட்டது. பெரியவரும் நானும் ஒருவர் முகக்கவசத்தை ஒருவர் பார்ததுக் 
கொண்டோம். (கடந்த இரண்டு மாதங்களாகவே முகக்கவசம் மட்டும் தான் 
தெரிகிறது. முகங்கள் தெரிவதில்லை).

“இப்டி உலகமே அழிஞ்சிடப் போறமாதிரி எல்லாத்தையும் 
வாங்குறாரே!” என்றார் பெரியவர்.

“அடுத்த மாசம் நிச்சயம் உலகம் அழியப் போகுது!” என்றான் எங்கள் பின்னே நின்றுக் கொண்டிருந்த வாலிபன்.

பெரியவர் விருட்டென்று அவன் பக்கம் திரும்பி, “ஆல்வேஸ் திங்க் பாசிட்டிவ். இப்டி தப்புத்தப்பா பேசக்கூடாது” என்று சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் முன்னே போய் நின்றுக் கொண்டார்.

வாலிபன் அலட்டிக் கொள்ளவில்லை. அவன் எதிர்பாராமல் கிடைத்த கல்லூரி விடுமுறையை 
கொண்டாடிக் கொண்டிருப்பவனாக காட்சி அளித்தான்.

“ஜூன் 21 தான் டூம்ஸ் டேய்னு மாயன் காலெண்டர் சொல்லுது ட்யூட். இத பத்தி நான் கூட என் யூடியூப் சேனல்ல ஒரு வீடியோ 
போட்ருக்கேன். நீங்க பாத்தது இல்லையா!” என்றான். நான் அவனையே அதற்கு முன்பு பார்த்தது இல்லை. நிறைய முடி தாடி சகிதமாக நின்றான். அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. ஆனால் அவன் தன்னை ஒரு பெரிய செலிப்ரட்டியாக கருதிக் 
கொண்டிருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. சாதாரண மனிதர்கள் என்ற இனமே அழிந்து போய் எல்லோருமே 
ஏதோ ஒரு சமூக வலைத்தளத்தின் பிரபலமாக மாறிக் 
கொண்டிருப்பதற்கு சாட்சியாக விளங்கினான் அவன்.

“நான் இங்கதான் ட்யூட் எம்.ஐ.டில படிக்கிறேன். லெட்ஸ் லேர்ன் எவரிதிங் சிம்பிள்னு யூடியூப்ல ஒரு சேனல் 
வச்சிருக்கேன். நீங்க போய் பாருங்க. நிறைய கத்துக்கலாம்” என்றான்.நான் சரி என்று தலையாட்டினேன்.

“மறக்காம பெல் பட்டன பிரெஸ் பண்ணுங்க ட்யூட்” என்றான். அவன் மூச்சுக்கு முன்னூறு முறை என்னை ‘ட்யூட்’ என்று அழைத்தது எனக்கு ஏனோ சங்கடத்தை தந்தது.  நான் அப்படியே பெரியவர் பக்கத்தில் போய் நின்றுகொண்டேன்.

பெரியவர் என்னை பார்த்து, “சரியான அகராதி புடிச்சவங்களா இருக்கானுங்க இந்த காலத்து 
பசங்க” என்றார். நான் அமைதியாக அவரை பார்த்தேன். அவர் பேசிக் கொண்டே போனார்.

“எல்லாம் கிடைக்க வேண்டிய வயசுல கிடைக்கணும், முன்னாடியே கிடைச்சா என்ன பண்றது! நம்ம தலைமுறை மாதிரி வருமா! நாமல்லாம் எப்படி வளர்ந்தோம்!” என்று என்னையும் அவரோடு சேர்த்துக் கொண்டார். அவருக்கு எழுபது வயது இருக்கும்.

“நான்லாம் உங்க தலைமுறை இல்ல சார்” என்று சொல்லலாம் என்று பார்த்தேன்.

அப்படி சொன்னால், “என்னபா, ஒரு நாற்பது வயசு தான வித்தியாசம்!” என்று கூட அவர் சொல்லிவிடுவார் என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன். ஏற்கனவே எனக்கு நான் ஒரு சிக்கலான தலைமுறையில் 
பிறந்துவிட்ட வருத்தம் இருந்தது. முந்தைய தலைமுறையினர் நிறைய விஷயத்தில் என் 
தலைமுறையில் ஒட்டாமல் தள்ளி இருந்தனர். பின்னே வந்த தலைமுறையினரோ தொழிநுட்ப மாயைகளில் 
சிக்கிக்கொண்டு என் தலைமுறையையே தள்ளி வைத்தார்கள். என் போதாத நேரம் நான் அன்று இரண்டு தலைமுறைக்கும் 
இடையே சிக்கிக் கொண்டேன். எல்லாவற்றிற்கும் கொரோனாவை தான் நொந்துக் கொள்ள 
வேண்டும். நான் சிந்தனையை திசைத்திருப்பும் பொருட்டு அமைதியாக 
கடையினுள் கவனித்ததேன்.

உள்ளே உயர்ந்த மனிதன் இன்னும் தன் கொள்முதலை 
முடிக்கவில்லை. அவர் கேட்டதற்கெல்லாம் அந்த கடைக்கார பையன் சலிக்காமல் 
பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“மேகி இருக்கா!”

“இல்ல சார்!”

“அப்ப பாஸ்தா இருக்கா!”

“இருக்கு சார்”

“ரெண்டு பாக்கெட், இல்ல…. அஞ்சு பாக்கெட் கொடுங்க…”

“நாலு பாக்கெட் தான் சார் இருக்கு…”

“சரி கொடுங்க…”

“டொமேட்டோ சாஸ் இருக்கா!”

“வரல சார்…”

“கிஷான் ஸ்க்வாஷ் இருக்கா!”

“இல்ல சார்!”

“எதுமே இல்லனா எதுக்கு கடைய துறந்து வச்சிருக்கீங்க!
ச்ச, இந்த நாடே இப்படித்தான். பிளானிங் இல்ல. ஒன்னும் இல்ல” அவர் கோபமாக கத்தினார்.

“மொத்த கடையையும் வாங்கிட்டு என்ன பேசுறான் பாரு” என்றார் பெரியவர். நானும் அவர் சொல்வதை ஆமோத்திக்கும் வண்ணம் தலை 
ஆட்டினேன்.

“நமக்கு என்ன தேவையோ அத மட்டும் வாங்கணும் தம்பி. சும்மா எல்லாத்தையும் வீட்ல போய் அடுக்கிக்கக் கூடாது…” என்றார் பெரியார்.

“கரெக்ட் சார்” என்றேன் நான்.

“மத்தவங்களுக்கு வேணும்னு நினைக்கிறது தான் மனுஷத் தன்மை. இப்டி எல்லாரும் சுயநலமா இருந்தா கொரோனா வரமா என்ன 
ஆகும்!” என்றார்.

“அஞ்சாயிரத்தி ஐநூற்றி நாற்பது ரூபா சார்” என்றான் பையன்.  

தன் கார்டை நீட்டினார் உயர்ந்த மனிதர். கடைக்கார பையன் கார்டை ஸ்வைய்ப்பிங் எந்திரத்தில் 
தேய்த்தான்.   

“கார்ட் வர்க் ஆகல சார்” கடைக்கார பையன் சொன்னான்.

“ஆகுமே! நேத்து இந்த கார்ட்ல தான் காருக்கு பெட்ரோல் போட்டேன்”

மீண்டும் அவன் கார்டை தேய்த்தான்.

“வர்க் ஆகல சார். வேற கார்ட் இருக்கா சார்!”

“என் கிட்ட ஆயிரம் கார்ட் இருக்கும். அதெல்லாம் கொடுக்க முடியுமா!”

“இந்த கார்ட்ல ஏதோ பிரச்சனை சார்…” அவன் கார்டை திருப்பிக் கொடுத்தான்.

“உன் கடை மெஷின்ல தான் பிரச்சனை!”

“சார் காலையில இருந்து எல்லாமே கார்ட் பேமெண்ட் தான் சார். உங்களுக்கு முன்னாடி வந்தவர் கார்ட் கூட வர்க் ஆச்சு சார்!”

உயர்ந்த மனிதன் நெற்றியை துடைத்துக் கொண்டார்.

“வேணும்னா ஜி. பே பண்ணுங்க…” என்றான் அந்த பையன்.

“அத நீ சொல்லாத.. ” என்று கோபமாக கத்தினார். அவரிடம் ஜி.பே இல்லை என்று தெரிந்தது.

“சீக்கிரம் சார்” என் அருகே இருந்த பெரியவர் உள்ளே பார்த்து கத்தினார். உயர்ந்த மனிதருக்கு அவமானமாக இருந்திருக்க வேண்டும். கோபமாக, சப்தமாக பேசிக் கொண்டே வெளி ஏறினார்.

“இங்க வந்தேன் பாரு… கடைல ஐட்டமும் இல்ல, மெஷனும் வர்க் ஆகல. வேஸ்ட் ஆஃப் டைம்”

“சார். எடுத்து வைக்கவா! அப்பறம் வந்து வாங்கிக்கிறீங்களா!” கடைக்கார பையன் சோகம் கலந்த தொனியில் கேட்டான். அவனுக்கு அவ்வளவு நேரம் பொருட்களை எடுத்து வைக்க போட்ட 
உழைப்பு வீணாகப் போகிறதே என்ற வருத்தம். உயர்ந்த மனிதர் அந்த பையன் சொன்னதை சட்டை செய்யாமல், கயிற்றிக்குள் குனிந்தார். நான் நகர்ந்து வழி விட்டேன்.

“ஷிட். பிக் பாஸ்கட்லயே வாங்கி இருக்கணும். இந்த நாடும் சிஸ்டமும்” என்றவாறே தன் காரை நோக்கி நடந்தார்.பெரியவரின் குரல் என் 
கவனத்தை கடைக்குள் திருப்பியது. அவர் என் கவனம் சிதறிய நேரத்தில் கடைக்குள் நுழைந்து 
இருக்கிறார்.

கடையினுள் கம்பீராக நின்றுகொண்டிருந்த அவர் அந்த பையனிடம் சப்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்,

“தம்பி அவருக்கு எடுத்த பொருளல்லாம் அப்டியே மூட்டைகட்டிடு. நான் வாங்கிக்கிறேன்… “

பையன் சந்தோசமாக தலை அசைத்தான்.

“எங்க ரொம்ப நேரம் ஆகுமோன்னு நினச்சேன். வேலை சீக்கிரம் முடிஞ்சிது…” என்றார் பெரியவர். நான் அவரையே பார்த்துக் கொண்டு நின்றேன். என் அருகே வந்து நின்ற வாலிபன் சொன்னான்,

“நான் தான் சொன்னானே ட்யூட், உலகம் அழியப்போகுதுனு”

“தம்பி அப்டியே அதோட சேர்த்து ஒரு பாக்கெட் வறுத்த பாதாம்” என்றார் பெரியவர்.

“வறுத்த பாதாம் இல்ல சார்…”

“என்ன கடை நடத்துறீங்களோ! எது கேட்டாலும் இல்லனு. சிஸ்டமே சரியில்ல. சாதா பாதாமாவது இருக்கா?”

“திஸ் வேர்ல்ட் டிசர்வ்ஸ் டூ டை ட்யூட்” என்றான் வாலிபன். நான் புன்னகை செய்தேன்.

நான்கு

ஊரடங்கை தளர்த்திவிட்டார்கள். சாலையில் நிறைய வண்டிகள் வரத் தொடங்கியிருந்தன. மேம்பாலங்கள் திறக்கப்பட்டன. சிக்னல் விளக்குகள் அனைத்தும் எரியத் தொடங்கின. எங்கு போகிறார்கள் என்று கண்டுகொள்ள முடியாத அளவிற்கு எல்லோரும் வாகனங்களில் எங்கேயோ சென்றனர். அதிலும் குறிப்பாக, இடது புறமாக வந்து ஓவர் டேக் செய்யும் ஆசாமிகள், ட்யூக் பைக் இளைஞர்கள், பக்கத்தில் வந்து சப்தமாக ஹாரன் அடிப்பவர்கள், வண்டியை வளைத்து வளைத்து ஓட்டுபவர்கள், தங்களுக்காக மட்டும் தான் சாலை இருக்கிறது என்ற எண்ணத்தில் வண்டி ஓட்டுபவர்கள், இண்டிகேட்டர் போடாமல் ஓவர்டேக் செய்யும் ஸ்கூட்டி பெண்கள் 
என அனைவரும் வரத் தொடங்கினர். இவர்கள் மத்தியில் வண்டி ஓட்டுவது பெரும் போராட்டமாக 
இருந்தது. ஆனாலும் நான் நிதானமாக ஓட்டினேன். இரண்டு மாதங்களாக தொடர்ந்து வண்டி ஒட்டியதால் அச்சம் குறைந்திருந்தது. சிக்னலில் இரண்டாவதாக இருக்கும் விளக்கு ஒளிரும் போதே அது 
மஞ்சள் நிறம் என்பதை புரிந்து கொண்டு வண்டியை நிறுத்திவிடுவேன். அதனால் எந்த பிரச்சனையுமின்றி அலுவலகம் போய் வர முடிந்தது. சாலைகள் போல் கடைகளும் முழு வீச்சில் இயங்கத் தொடங்கின.   

டீ கடைகளில் பார்சல் மட்டும் விற்கலாம் என்று அரசாங்கம் 
தெரிவித்ததாக டீவியில் பார்த்தேன்.

“அது எப்படி எல்லாரும் பார்சல் வாங்குவாங்க…!” என்றார் எம்.வி

“பிளாஸ்டிக் கப்ல குடிப்பாங்க ப்ரோ!” என்றேன்.

“அப்ப கொரோனா பரவாதா! யாரோ ஒருத்தன்கிட்ட இருந்து டீ மாஸ்டருக்கு வந்தா போச்சு. ஆயிரம் பேருக்கு பரவும்! இது முட்டாள்தனமான முடிவு”

“வரணும்னா எங்க இருந்து வேணா வரும் ப்ரோ. காய்கறி கடை, மளிகைக் கடைனு எங்க எங்கேயோ போறோம். அங்க இருந்துலாம் வராதா!”

“அது அத்தியாவசியம். இது அனாவசியம்…”
எம். வி டீ குடிப்பதை விட்டுவிட்டு பச்சை டீக்கு (க்ரீன் டீ) மாறியதிலிருந்து இப்படி தான் டீ-யை எதிர்த்து கொடிப்பிடித்து கொண்டிருக்கிறார், ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுபவர்கள் தங்களின் பழைய மதத்தை கழுவி ஊற்றுவது போல.

“க்ரீன் டீ தான் ப்ரோ பெஸ்ட்” என்று டீ பேகை சுட தண்ணீரில் முக்கி எடுத்தவாறே சொன்னார்.  

“ப்ரோ, அளவுக்கு அதிகமா குடிச்சா எதுவுமே நல்லது இல்ல. அதுவும் இந்த டீ பேக்ல எபிக்ளோரோஹைட்ரின்னு ஒரு கெமிக்கல் இருக்கு. அது உடம்புக்கு ஆபத்து தெரியுமா!” என்று கேட்டேன்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது, நான் பயாலஜி ஸ்டூடன்ட்” என்றார்.

“நமக்கு தெரிலனாலும் அந்த கெமிக்கல் நம்மல பாதிக்கும் இல்ல!”

“அதான் பயாலஜி ஸ்டூடன்ட்னு சொல்லிட்டேனே. அப்பறம் ஏன் அதையே சொல்றீங்க. விடுங்க” என்றார் கோபமாக. எனக்கு அன்றொரு நாள் கடையில் அந்த பையனிடம் எரிந்து 
விழுந்த உயர்ந்த மனிதர் நினைவுக்கு வந்தார். கிரீன் டீ யை முழுவதுமாக உறிஞ்சி முடித்துவிட்டு சொன்னார்,   

“க்ரீன் டீ தான் ப்ரோ பெஸ்ட். ஒரு முறை க்ரீன் டீ குடிச்சுப் பாருங்க, அப்பறம் தெரியும் இதோட அருமை!” எனக்கு ஏனோ மதம் மாற்றும் கூட்டம் மீண்டும் நினைவிற்கு வந்தது. நான் சிரித்துக் கொண்டே தலை அசைத்து வைத்தேன்.

“ஜாக்கிரதையா இருங்க. டீ கடை பக்கத்துலலாம் போகாதீங்க ப்ரோ…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் எம்.வி.

டீ கடை என்ன, உண்மையில் எந்தக் கடை பக்கமும் போகக் கூடாது தான்.  அவ்வளவு கூட்டம். முழுமையான ஊரடங்கின் போதே கடைகளில் நிரம்பி வழிந்த 
நம் ஆட்கள், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டப்பின்பு இன்னும் 
நெருக்கமாக நிரம்பி வழிந்தனர். நமக்கோ நம் குடும்பத்திற்கோ வரும் வரை எதுவும் பெரிய 
பிரச்சனை இல்லை என்ற மனநிலை தான் பலரிடமும் இருக்கிறது.  

காய்கறி கடையில் கோவக்காயை கூடையிலிருந்து பொறுக்கிக் கொண்டிருந்த போது பக்கத்தில் வந்து ஒரு நடுத்தர வயதுக்காரர் வேகவேகமா அதே கூடையில் கை வைத்தார்.

“சார் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுங்க” என்றேன்.

“பாத்தா படிச்சவர் மாதிரி இருக்கீங்க. இப்டி பேசுறீங்க!” என்றார். நான் புரியாமல் பார்த்தேன்.

“இதெல்லாம் நம்புறீங்களா! இந்த சோசியல் டிஸ்டன்சிங் அது இதுனு. எல்லாம் ஹம்பக்” வெகு நாள் பழகியவரிடம் பேசும் தொனி அவரிடம் இருந்தது.

“சார் கொரோனா பரவாம தடுக்க நாம அப்டி இருந்து தான் 
ஆகணும்” என்றேன்.

“சார், கொரோனாவே பொய் சார். எல்லாம் கார்ப்பரேட் சதி” என்றார். அதுபோன்ற ஆசாமிகளிடம் தலையாட்டிவிடுவது நல்லது.

“இதுக்கு பின்னாடி ஒரு பொருளாதார சுரண்டலுக்கான திட்டமே இருக்கு. பெருசா பயமுறுத்துனா தான மருத்துவம் பார்க்குறேன், மருந்து கொடுக்குறேனு சொல்லி கறக்க முடியும்!”

அவர் இன்னும் நெருக்கமாக வந்து பேசினார், “நாம எல்லாரும் பொருளாதார ரீதியா அடிமைங்களா இருக்கனும். அதான் அவனுங்களோட திட்டம். நீங்க ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் 
படிச்சிருக்கீங்களா!”  

நான் இல்லை என்றேன்.

“அதான் இப்டி பேசுறீங்க. முதல அதைப் படிங்க!”

“ஏன் சார் அதுல கொரோனா பத்தி இருக்கா!”

“சார், கொரோனாவே பொய்ங்குறேன். நீங்க என்னனா!” அவர் இழுத்தார். அதற்குள் ஒரு பெண்மணி,

“சீக்கிரம் எடுத்துட்டு அடுத்தவாளுக்கு வழி விடுங்கோ” என்றார். நான் பில் கவுண்டர் நோக்கி நடந்தேன்.

“ஏண்டா தம்பி. இந்த உருளைக்கிழங்கு எவ்ளோ…” என்று கடைக்கார வாலிபனிடம் கேட்டார் அந்தப் பெண்மணி.

“கிலோ தொண்ணூறு ரூபா மாமி…” என்றான் அவன்.

“பகல் கொள்ளையா இருக்கே!” என்றார் பெண்மணி.

“நான் சொல்லல, பொருளாதார சுரண்டல். இதான்! கொரோனா பேர சொல்லி ஒரு கார்ப்பரேட் ஊழலே நடக்குது…” என்று கிசுகிசுத்தார் நடுத்தர வயதுக் காரர்.

“இது மேட்டுப்பாளையம் கிழங்கு மாமி…” கடைக்கார வாலிபன் சொன்னான்.

“எந்த ஊரா இருந்தா என்ன! உருளை கிழங்கு தான! தங்கம் விலை சொல்ற” என்றார் அந்தப் பெண்மணி.

“வாங்கிக்கோங்கோ மாமி. நன்னா இருக்கும்… பத்துரூபா கம்மி பண்ணிக்கலாம்” என்றான் கடைக்காரன். அந்த பெண்மணி கொஞ்சம் கிழங்கை எடுத்து கூடையில் 
போட்டார்.

“ஏன்பா, அந்த அம்மாவே விட்டா மெட்ராஸ் பாஷை பேசுவாங்க போல. நீ திருநெல்வேலி காரன்தான! நீ எதுக்கு பிராமண பாஷை பேசுற!” என்று வாலிபனைப் பார்த்து கேட்டார் நடுத்தர வயதுக்காரர்.

அவன், “அவாகிட்ட…. ச்ச… அவங்ககிட்ட அப்படி பேசியே பழகிடுச்சு…” என்று தலையை சொறிந்தான்.

“எல்லாம் கார்ப்பரேட் அரசியல்” என்று நடுத்தர வயதுக்காரர் சொல்வார் என்று எதிர்ப்பார்த்தேன். சொல்லவில்லை.

அதற்கு பதில் “சரி, எனக்கும் பத்துரூபாய் கம்மி பண்ணிக்கோ” என்றார்.

கடைக்காரன் சரி என்று தலை அசைத்தான்.

ஐந்து

அலுவலகத்தில் மீண்டும் ‘டார்கட்’ ‘பிசினஸ்’ என்றெல்லாம் பேசத் தொடங்கினர். எப்போது ஊர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று 
காத்திருந்தவர்களாக மேலிடத்தில் இருந்தவர்கள் டார்கட் நோக்கி 
ஓடுவதற்கு அழுத்தம் கொடுத்தனர்.

“கொரோனா வந்து ஹாஸ்ப்பிட்டல்ல இருந்தா கூட லோன் 
கொடுன்னு சொல்வானுங்க போல ப்ரோ” என்றார் எம்.வி.

அவர் சொன்னது போலவே தான் நிர்வாகமும்  நடந்துக் கொண்டது.

“கொரோனா ஈஸ் நாட் ஆன் எக்ஸ்க்யூஸ். நிறைய லோன்ஸ் கொடுத்தா தான் நாம சர்வைவ் ஆக முடியும்” என்று நிர்வாக மேலாளர் தொடர்ந்து சொல்லி வந்தார். போதாத குறைக்கு அலுவலக வாட்ஸாப் குழுவில் இரவு பகல் 
பாராமல் மெஸேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தார். இந்தியாவில் தான் வாட்ஸாப் முழுக்கமுழுக்க அலுவலக 
செய்திகளின் அறிவிப்பு பலகையாக மாறிப் போய்விட்டது. நேரம்காலம் இல்லாமல், மேலிடத்தில் இருந்தவர்கள், வாட்ஸாப்பில் அலுவலக வேலைகளை பற்றி பேசிக் கொண்டே 
இருந்தனர்.

“பேசாம ஸ்மார்ட் போன தூக்கிப் போட்டுட்டு பேசிக் போனுக்கு 
மாறிடலாம்னு பாக்குறேன் ப்ரோ. டார்கெட் டார்கெட்ன்னு டார்ச்சர் பன்றானுங்க” என்றார் எம்.வி.

“அவனுங்களே ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுப்பானுங்க. அப்பறம் இப்ப இருக்குறத விட அதிக டார்ச்சர் பண்ணுவானுங்க. நீங்க இருபத்தி நாலுமணி நேரமும் ஆன்லைன்ல இருக்கணும்னு 
எதிர்பார்ப்பானுங்க. பரவாலயா?” என்று கேட்டேன்.

“அதுவும் சரிதான். மத்த நேரத்துல கூட சகிச்சுக்குலாம். இப்டி கொரோனா காலத்துல கூட டார்ச்சர் பண்ணுனா எப்படி ப்ரோ! நாளுக்கு நாள் ஆயிரம் ரெண்டாயிரம்னு கேஸ் எறிகிட்டே போகுது. எப்ப கண்ட்ரோல் ஆகும்னே தெரியல”

“உடம்பு முடியலன்னு சொல்றவங்களுக்கு மட்டும் தான் டெஸ்ட் 
பண்றங்க. அப்பறம் எப்படி கண்ட்ரோல் ஆகும்! ஆரோக்கியமா இருக்குறவங்களையும் டெஸ்ட் பண்ணனும். உங்கள என்ன மாதிரி வெளில வேலைக்கு வரவங்க, கடை வச்சிருக்கவங்க, கடைத் தெருவுக்கு அலையுறவங்கனு ரேண்டமா நிறைய பேர 
டெஸ்ட் பண்ணனும், அப்ப நிச்சயம்  இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்”

“இவனுங்க எங்க ப்ரோ அதெல்லாம் பண்ண போறானுங்க! இந்த குப்தா  மாதிரி ஆளுங்க கைத்தட்டினாலே  எல்லாம் சரி ஆகிடும்னு சொல்லுவானுங்க. கொரோனா வந்துட்டா கூட க்வாரன்டைன்ல போய் படுத்துக்கலாம். கொஞ்ச நாள் இந்த லோன் டார்கெட்லாம் இருக்காது…” என்று வெறுப்புடன் சொன்னார் எம்.வி.

“அப்டிலாம் பேசாதீங்க ப்ரோ. கவர்ன்மென்ட் சொன்ன மினிமம் சார்ஜுக்கு பதினஞ்சு நாள் 
ஆஸ்ப்பிட்டல்ல இருந்தாலே நம்மளோட ஒரு வருஷ சம்பளம் காலி ஆகிடும். இன்சூரன்ஸ்ல பாதி கூட கொடுக்க மாட்டான். அதுமட்டும் இல்லாம, நமக்கு ஒரு பிரச்சனைனா நம்ம பேமிலி என்ன ஆகுறது! எனக்கு சாதாரண ஜுரம் வந்தாலே எங்க அம்மா நைட்டெல்லாம் 
தூங்க மாட்டாங்க. அதனால பாசிட்டிவா இருங்க. நல்லதே நடக்கும். என்ன ஆனாலும் தைரியமா இருந்தா எதையும் சமாளிக்கலாம்னு 
அம்மா சொல்லுவாங்க. தைரியமா இருப்போம். வீ வில் சர்வைவ்” என்றேன்.

எம்.வி  புன்னகையோடு தலையசைத்தார். என் கேபினிலிருந்து வெளியேறியவர், சட்டென்று திரும்பி, “ப்ரோ, மறுபடியும் முழு ஊரடங்கு போட்டானுங்க. சொல்ல முடியாது, இது இன்னும் நீண்டுகிட்டே போகும். பேசாம, நாளையில் இருந்து நீங்க என் கார்லயே வந்திருங்களேன்! எதுக்கு வெயில்ல அவ்ளோ தூரம் பைக் ஓட்டுறீங்க!” என்றார். நான் அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.

“இட்ஸ் ஓகே ப்ரோ. பைக்கே கம்பர்ட்டபிளா இருக்கு” என்றேன். நான் பொய் சொல்லவில்லை. நான் வண்டியை நன்றாக ஓட்ட ஆரம்பித்திருந்தேன். தொடர்ந்து ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டினால் போதும், அறை ஓட்டுநர் ஆகிவிடலாம் என்று யாரோ சொன்னார்கள். நான் கடந்த மூன்று மாதங்களில் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு மேலே ஒட்டிவிட்டேன். எனக்கு வண்டி ஓட்டுவது இப்போதெல்லாம் கப்பல் ஓட்டுவது போல் கடினமாக இல்லை. ஒருவேளை கப்பலைக் கூட தைரியத்துடன் தொடர்ந்து ஓட்டினால் 
எளிதாக ஓட்டிவிடலாம் போல.

மனதில் துணிவிருந்தால் எதுவும் சாத்தியம் தான். அந்த துணிவோடு இந்த கொரோனாவை கடந்து விடுவோம் என்ற 
நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த வாலிபன் சொன்னது போல் ஜூன் இருபத்தி ஒன்றாம் தேதி 
உலகம் அழியவில்லை. உண்மையில் உலகம் என்றும் அழியப்போவதில்லை. அது இயங்கிக் கொண்டே தான் இருக்கும். இந்த கொரோனா எல்லாம் தற்காலிக பிரச்சனை தான். நிச்சயம் பழைய மாதிரி இந்த உலகம் மாறும். அலுவலகத்தில் டார்ச்சர் இருக்கும், டார்கட் இருக்கும். அழுத்தம் இருக்கும். அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. மனதில் துணிவு இருக்கும் போது, கவலை எதற்கு! இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆசை, மீண்டும் எல்லாமே பழைய நிலைக்கு வந்த பின், என்.எஸ். என் ஸ்கூல் அருகே இருக்கும் கடைக்குச் சென்று மசால் பூரி 
சாப்பிட வேண்டும். அந்த தடியான ஆசாமியைப் பார்த்தால் அவருக்கு ஒரு பிளேட் 
காளான் வாங்கித் தர வேண்டும்.

***

இலவச கிண்டில் புத்தகங்கள்

என்னுடைய எட்டு நூல்களை இன்று  (14.11.2019) மற்றும் நாளை (15.11.2019) கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Collage of Aravindh Boojks

சிறுகதைத் தொகுப்பு:
நகுலனின் நாய், நகைச்சுவைக் கதைகள்

நாவல்:
தட்பம் தவிர், ஊச்சு

குறுநாவல்:
பிறழ்ந்த இரவுகள்

திரைக்கதை கட்டுரைகள்:
கொஞ்சம் திரைக்கதை, ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி.

சிறார் நாவல்:
சித்திரமலை ரகசியம்

Have a good & versatile read

நன்றி

Click here to download

 

9.45- சிறுகதை

காலை 9.45 மணிக்குள் போகவில்லை என்றால் ‘ஆப்சென்ட்’ போட்டுவிடுவார்கள். நியாமான காரணத்தால் தாமதம் என்றாலும் ஏற்றுக் கொள்ளப்படாது. நான் படித்த பள்ளிகூடத்தைப் பற்றி சொல்லவில்லை. நான் வேலை செய்யும் அலுவலகத்தில் அண்மைக்காலத்தில் தோன்றிய வி(யா)தி இது. ஒன்பது நாற்பத்தைந்து என்றால் ஒன்பது நாற்பத்தைந்து தான். ஒரு நொடியும் தாமதம் ஆகக் கூடாது. முன்பெல்லாம் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டால் மட்டும் போதும். இப்போது ‘ஃபினக்கில்’ மென்பொருளில் லாகின் செய்ய வேண்டும்.

அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது. லிப்ட் எல்லாம் கிடையாது. லிப்ட் வாடகை கொடுக்காததால் அலுவலக வளாகத்தின் எஜமானனான தமிழ் பேசும் சேட்ஜி மூன்றாவது மாடியின் லிப்ட் கதவை மட்டும் கட்டைகள் கொண்டு மூடி வைத்துவிட்டார். எங்கள் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் எல்லாம் இரண்டாவது மாடி வரை லிப்டில் சென்று, பின் படி ஏறிச் செல்கிறோம் என்பதையும் எஜமான் கண்டுகொண்டுவிட்டார். அதனால் எங்களை கண்காணிப்பதை கூடுதல் பொறுப்பாக இரண்டாவது மாடியில் நிற்கும் செக்யூரிட்டியிடம் கொடுத்து, இருநூறு ரூபாய் பணமும் கொடுத்துவிட்டார்.

அதுவும் செக்யூரிட்டி என்னைக் கண்டால் மட்டும் ‘எண்கவுன்ட்டர் செய்து விடுவது போல் முறைக்கிறார். வேறுவழியில்லாமல், மூச்சிரைக்க மூன்று மாடி ஏறி உள்ளே ஓடிச் சென்று கணினியை ஆன் செய்வது வழக்கமாகி விட்டது. என்னுடையது கொஞ்சம் பழைய கணினி. அலுவலகத்தில் இருக்கும் மற்றதெல்லாம் ரொம்ப பழைய கணினி. நான் அலுவலகத்தில் சேர்ந்த இரண்டு வருடக் காலங்களில், கணினியே இல்லாமல், தெருவின் எல்லைத் தாண்டி வந்த நாய் குட்டிப் போல் இங்கும் அங்கும் அழைந்து, ஏச்சு பேச்செல்லாம் வாங்கி, கிடைக்கும் கணினியில் வேலை செய்து வந்தேன். சிறிய நிறுவனங்களில் வேலை செய்யும் போது இப்படி சகிப்புத் தன்மை வளர்ந்துவிடுகிறது. சகிப்புத் தன்மை = அடிமைத் தன்மை என்று என் கம்யுனிச நண்பன் சொல்வான்.

அவன் ஒரு பெரிய பொறியியல் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்கிறான். ஆனாலும் மற்றவர்கள் போல் எனக்கேன் வம்பு என்று வாழ்வை கழிக்காமல், பேஸ்புக்கில் தொடர்ந்து சர்வாதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறான். செவ்வாய்கிழமை இந்திய அரசியல், வெள்ளிக்கிழமை உலக அரசியல் என்று கிழமைக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு.  அதற்கு லைக் போடவே ஒரு பெரிய கூட்டம். எங்கு போனாலும் சேகுவேரா டீ ஷர்ட் போட்டுக் கொள்வான்.  அடிமைத் தனம் கழைவோம் என்று வாட்ஸப்பில் ஸ்டேடஸ் கூட போடுவான். நெருங்கிய நண்பனின் திருமணத்திற்கு வராமல் போன அவனிடம் போன் செய்து கோபித்துக் கொண்டேன்.

“மச்சி, டீ.எல் லீவு தரமாட்டேன்னு சொல்லிடாண்டா. அவன் எங்க GM-க்கு பெட். அவன மீறி ஒன்னும் பண்ண முடியாது” விட்டிருந்தால் நண்பன் அழுதிருப்பான். ஒரு பேஸ்புக் போராளியை போனில் அழ வைத்த பாவம் எனக்கு வேண்டாம் என்று போனைத் துண்டித்துவிட்டேன்.

என் சகிப்புத் தன்மையோடு இரண்டாண்டு காலம் நான் கணினியின்றி ஓட்டிவிட, எப்படியோ என் வேலை நிரந்தரம் ஆனதும் எனக்காக ஒரு வாடகை கணினியை கொண்டு வந்து வைத்துவிட்டார்கள். நைட் ஷிப்டில் வேலைப் பார்த்துவிட்டு உறங்குபவர்களை எழுப்பினால் எப்படி விழித்துக் கொள்வார்களோ அதே வேகத்தில் தான் என் கணினியும் கண் திறக்கும். பெரும்பான்மையான நேரங்களில் நெட்வர்க் இருக்காது. மென்பொருளின் லாகின் திரைக்குள் செல்வதற்குள், ஏ.சி காற்றில்  சட்டையின் வியர்வை காய்ந்து விடும். அதாவது சட்டை காலை 9.44  மணிக்குள் காய்ந்திருக்க வேண்டும். அதற்கு ஒன்பதரை மணிக்குள்ளாக அலுவலகத்தில் வலது காலை வைக்க வேண்டும்.

ஆனால் தாம்பரத்திலிருந்து மந்தைவெளி செல்வதற்குள் இரண்டு யுகங்கள் ஆகிவிடுகிறது.  இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருக்கிறது என்று, ஆறுமடங்கு அதிக விலைக் கொடுத்து, முதல் வகுப்பில் பயணிக்க தொடங்கினேன். பாவம்! பலருக்கும் இரண்டாம் வகுப்பு பெட்டி நெரிசலாக இருந்துவருகிறது போலும். பர்ஸ்ட் கிளாஸ் சீசன் எடுக்காமலேயே முதல் வகுப்பில் ஏறிக்கொள்கிறார்கள். நான் வாயை மூடிக் கொண்டு ஒற்றைக்காலில் ஓரமாக நின்றுவிடுவேன். இப்போதெல்லாம் செங்கல்பட்டு-பீச் விரைவு ரயில் ஓடுவதில்லை. இரண்டு ரயில் கூட்டம் ஒரு ரயிலில். அதனால் ஒரு கால் வைக்க தான் பெட்டியில் இடமிருக்கிறது. ஆனால் யாராவது பெரியவர், “சார் இது பர்ஸ்ட் கிளாஸ். அடுத்த பெட்டில ஏறிகோங்க” என்று தேய்ந்த ரெகார்ட் போல் சொல்லி வருவார். யாரும் அவரை சட்டை செய்யமாட்டார்கள்.

“இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” பழவந்தாங்களில் ஏறும் ஒரு நடுத்தர வயது பெண் சலித்துக் கொள்வாள். நானும் அதையே நினைத்துக் கொள்வேன். ஆனால் இரண்டு வருடமாக  அவள் முதல் வகுப்பு பெட்டியில் லேடிஸ் இருக்கையின் அருகே நின்றவாரு சலித்துக் கொண்டே வருகிறாள். நானும் “இதுக்கு செகண்ட் க்ளாஸ்லயே வந்துடலாம் போலவே!” என்று நினைத்துக் கொண்டே வருகிறேன்.

அதிலும் பறக்கும் ரயிலில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் ஒரு பெரிய கூட்டம் ஏறும். பெரும்பான்மையானவர்கள் வடநாட்டிலிருந்து வந்து கூலி வேலை செய்யும் இளைஞர்கள்.

“பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே” அரைகுறை ஹிந்தியில் யாராவது சொல்வார்கள். சிந்தாதரிப்பேட்டை வந்ததும் அந்த ஹிந்திக்கார இளைஞர்கள் இறங்கி இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு மாறிக் கொள்வார்கள். ஆனால் மீண்டும் மறுநாள் அதே இளைஞர்கள் குழுவாக முதல் வகுப்பு பெட்டியிலேயே ஏறிக் கொள்வார்கள். மறுபடியும், “பாய். ஹே தோ பர்ஸ்ட் கிளாஸ் ஹே”

அதுவும் திங்கட்கிழமை என்றால் ஊருக்கு சென்று திரும்பி வரும் திருவான்மையூர் ஊழியர்கள் பலரும் ஏறிக் கொள்வார்கள். தெலுங்கு இளைஞர் இளைஞிகள்.

“இஸ் திஸ் பர்ஸ்ட் கிளாஸ்? ஒ! ஐ டோன்ட் நோ”

அந்த ஆந்திரா தெலுங்கானா ஆசாமிகள் தாங்களாகவே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிவிட்டு ஓரமாக போய் நின்றுகொள்வார்கள். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை அவர்களை அதே பெட்டியில் பார்க்கலாம். எப்போதாவது டிக்கெட் பரிசோதகர் வந்தால், கரடுமுரடாக இருக்கும் இந்தி இளைஞர்களை மட்டும் பிடித்துக் கொண்டு போய் விடுகிறார். நன்றாக உடை உடுத்துபவன் எந்த தவறையும் செய்து தப்பித்துக் கொள்ள முடிகிறது.  நான் நன்றாக தான் உடை உடுத்துகிறேன். அனால் டிக்கெட் எடுக்காமல் ரயிலிலோ, அல்லது முதல் வகுப்பு சீசன் இல்லாமல் முதல் வகுப்பு பெட்டியிலோ ஏற பயமாக இருக்கிறது. மாட்டினால் ஐநூறு ரூபாய் அபராதம். ஆனால் எப்போதாவது ஒரு முறை தான் மாட்ட வாய்ப்பிருக்கிறது. இது கணிதம். நிகழ்தகவுகள். அதனால் தொடர்ந்து டிக்கெட் இல்லாமல் அல்லது சரியான டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர், எப்போதாவது ஒரு முறை மாட்டி ஐநூறு அபராதம் கட்டுவது நஷ்டம் ஒன்றுமில்லை. ஆனால் இதையெல்லாம் தர்க்கம் செய்யும் அளவுக்கே தைரியம். செயல் படுத்தும் அளவிற்கு தைரியம் இருந்தால், நான் இரண்டாண்டு காலம் கணினி இல்லாமல் சகித்து கொண்டு வேலை செய்திருக்க மாட்டேன்.  என் பேச்செல்லாம் சரவணபவன் தலை வாழை இல்லை சாப்பாடு அளவிற்கு இருந்தாலும், செயல் எப்போதும் மைலாபூர் மாமி மெஸ்சின் அளவு சாப்பாடுதான்.

ஆனால் ரயில் பயணத்திற்கும் ஒரு சோதனை. இப்போதெல்லாம் எழும்பூரை தாண்டுவதற்குள் ரயிலின் ஓட்டுனர் குரங்கு பெடல் அடிக்கிறார். கொஞ்சம் தாமதமானால், கோட்டை நிலையத்தில் வேளச்சேரி ரயில் முந்திக் கொண்டு விடுகிறது. பின்னாடியே ஒரு லேடிஸ் ரயில் பல் இளித்துக் கொண்டே வரும். எல்லோரும் தலைவாரி ஜடைப் பிண்ணிக் கொண்டே போவதை பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும். அதுவும் அந்த லேடிஸ் பெட்டி காலியாக செல்வதைப் பார்த்து பலரும்  வெளிப்படையாகவே வயிர் எரிவார்கள்.

“காலியா போது. பாதி ட்ரைன் மட்டும் லேடிஸ்கு போதாதா…  ஜென்ட்ஸ் ஸ்பெஷல் உட வேண்டிதான!”

நானெல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன். நான் பெமினிஸ்ட். ‘Feminist’ என்ற பட்டம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. Anti-feminist என்ற பட்டம் கிடைத்துவிட்டால் ஸ்க்ரீன்ஷாட் போட்டு சாகடித்துவிடுவர்கள். அதனால் என் நண்பன் கம்யுனிஸ்டாக இருக்கும் வரை நான் பெமினிஸ்ட்டாக இருந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.  லேடிஸ் ரயிலுக்கு பின்பு வரும் ரயிலில் ஏறி, 9.45 வாக்கில் மந்தைவெளி ரயில் நிலையத்தில் இறங்கி, பல தெருக்களுக்குள் ஓடி, 9.55 வாக்கில் அலுவலகத்தை அடைந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, யாரவது பார்க்கிறார்களா என்று இருபுறமும் பார்த்துவிட்டு, கையெழுத்தின் கீழே வருகை நேரம் 9.30 என்று எழுதிவிட்டு, எதுவும் தெரியாதவன் போல், ‘வைஷ்ணவ ஜனதோ, தேனே கஹியே தே’ என்று பாடியவரே இருக்கையில் சென்று அமர்ந்துகொள்வேன். அதற்கு வேட்டு வைப்பது போல் தான் அந்த சுற்றறிக்கை வந்தது.

“….login after 9.45 will be treated as absence”

என் கடவுச் சொல்லை பக்கதிலிருக்கும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு போகலாம் என்றால், கைரேகை வைத்தால் தான் லாகின் ஸ்க்ரீன் திறக்கும் என்பது போல் மென்பொருளை மாற்றி விட்டார்கள். என் கட்டைவிரலை மட்டும் தனியாக அனுப்ப முடியாது என்பதால், நானே போக தான் வேண்டும்.

“டைம்க்கு வர தெரியாதா?” என்று என் உதவி நிர்வாக மேலாளர் இரண்டுமுறை திட்டினார்.

“டைம்க்கு வீட்டுக்கு விட்டா வரத் தெரியும்” என்று சொல்ல வேண்டும் என்று ஆசை தான்.  ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்தாலும் ஏழு மணி வரை வேலை வாங்குகிறார்களே என்று கோபம் தான். ஆனால் இந்த கோபத்தையெல்லாம் சமுக வலைத் தளத்தோடு நிறுத்திக் கொள்ளும் ‘யதார்த்தவாதி’ நான். அதனால் நேரத்திற்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றால், கிண்டியில் இறங்கி பேருந்தில் மாறிக் கொள்ளவேண்டும்.

ஆனால் பேருந்து கிடைப்பதிலும் பிரச்சனை. அப்படியே கிடைத்தாலும் அதில் அடித்து பிடித்து ஏறுவது பெரும் பிரச்சனை. அண்ணா பல்கலைக்கழகம் செல்லும் வருங்கால பொறியாளர் கூட்டம் தான் பேருந்து முழுக்க இருப்பார்கள். பெரும்பாலும் பல பேருந்துகள் அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தத்தில் நிற்கும். ஆனாலும் அந்த மாணவர்கள் சொல்லிவைத்தாற்போல் மந்தைவெளி பேருந்திலேயே ஏறுவார்கள். இவ்வளவு மெனக்கெட்டு படிக்கும் அந்த பொறியியல் அவர்களுக்கு எந்த வகையிலும் பயன்பட போவதில்லை என்று யார் சொல்வது!  “Software engineer is not an engineer bro” ஒருமுறை சொன்னதற்கு அந்த பையன் என்னை முறைத்தான்.  கூட்டமாக  இருக்கும் இளைஞர்கள் ஆபத்தானவர்கள். சேர்ந்து அடித்துவிடுவார்கள். வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுவது உத்தமம்.

எப்போதாவது, காளியப்பா மந்தவெளி, மைலாபூர் என்று கத்திக்கொண்டே ஷேர் ஆட்டோக்காரன் வருவான். போதிய ஆள் ஏறவில்லை என்றால்,

“ஜி கோட்டுர்புரம் வரைக்கும் தான் போகும், கொஞ்சம் இறங்கிக்கோங்க” என்பான். அவன் இறக்கிவிட்டதை விட, சுற்றி அமர்ந்திருந்த பெண்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கேள்விதான் பிரதானமாக இருக்கும். இந்த அவமானத்தை எதிர்கொள்ள முடியாததால் தான், ஓலா உபெரை பழக்கப் படுத்திக் கொண்டேன். ஆனால் இந்த ஓலா உபெர் ஓட்டுனர்கள் பெரும்பாலும் வெளியூர் காரர்களாகவே இருக்கிறார்கள்.  நாம் எங்கு நிற்கிறோம் என்று அவர்களுக்கு தெரியப்படுத்துவது பெரும்பாடகிப் போகிறது. “நான் மேப்ப பாத்து வந்திருறேன் சார்” என்பார்கள். ஆனால் சாலையின் மறுபுறம் வந்து நின்றாலும், ‘Your ride is here’ என்று தான் காட்டும். அவர்களுக்கு வழி சொல்லி சக்தியை வீணடிப்பதற்கு பதில் நடந்தே போய் விடலாம் என்று தோன்றும்.

அன்று பேருந்து இல்லை, ஷேர் ஆட்டோ இல்லை. உபெர் காரனும் கத்திப்பாராவில் நின்றுகொண்டு வரவில்லை. ஆனால் நான் ஆட்டோவில் ஏறியதாக ரைடை ஆன் செய்துவிட்டான். மணி ஓடிக்கொண்டே போனது. ஒரு ஆட்டோவை பிடித்தேன். 200 ரூபாய் என்றான். வேறுவழியில்லை. ஆட்டோ கிளம்பியது. எங்கள் வளாகத்தின் முன்பு நின்ற போது மணி சரியாக 9.35. சட்டை வேர்த்தது. அலுவலகத்திற்குள் நுழைந்து வேகமாக சி.பி.யூவின் பொத்தானை அழுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தால் அங்கே மானிட்டர் இல்லை. கடைசி மூலையிலிருந்த என் எச்.ஆர் நண்பனின் கேபினுக்கு ஓடினேன்.

“என் மானிட்டர பாத்தியா…!”

“அப்பறம் பேசலாம். சீக்கிரம் லாகின் பண்ணு…”

அவன் கணினியில் கைரேகை வைத்து லாகின் செய்தபோது மணி 9.44.

“ஐ.டி டிபார்ட்மென்ட்க்கு போன்  பண்ணிக் கேலு” என்றான். கணினி பிரச்சனை எல்லாம் ஐ.டி துறையின் கீழ் வருகிறது. ‘ஐ.டி’ என்றதும் நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் ஏதோ பெரிய தொழிநுட்ப வல்லுனர்களை கொண்ட குழு என்றே நினைத்தேன். பின்தான் தெரிந்தது, பிரிண்டர்  டோனார் மாற்றுவது, மவுஸ் கீபோர்ட் மாற்றுவது போன்ற மராமத்து வேலைகள் செய்யவே அவர்கள் இருக்கிறார்கள் என்று.

போன் மணி அடித்துக் கொண்டே இருந்தது. எதிர்ப்பார்த்தது போல் புதிதாக வந்த அந்த ஐ.டி மேலாளர் போனை எடுக்கவில்லை. அவன் ஒரு இளகிய மனம் கொண்ட பெங்காலி. இரண்டு வாரத்துக்கு முன்பு தான் மாற்றல் ஆகி வந்தான். அலுவலகத்தில் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அவன் கண்கள் கலங்கிவிடுவதாக பேசிக் கொள்கிறார்கள். எப்போதும் செல் போனை காதின் மேல் அலுத்திவைத்துக் கொண்டு போன் பேசிக்கொண்டே இருப்பான். அவன் தன் மனைவியாடு பேசுவதாக நான் நினைத்தேன். அவன் அறையை அடைந்த போதும் அதையே செய்துக் கொண்டிருந்தான்,

“பாலு ஆச்சே. துமே கூப்…”

என் நண்பன் மலையாளி என்றாலும் கொஞ்சம் பங்கலா தெரிந்தவன்.

“அவன் வைப் கிட்ட பேசல… வேற யார்ட்டையோ கடலை போடறான்… ” என் எச். ஆர் நண்பன் என் காதில் கடுப்புடன் கிசுகிசுத்தான்.  எச். ஆர் நண்பனுக்கு திருமணம் ஆகவில்லை. அவன் கவலை அவனுக்கு.

“ரொம்ப முக்கியம், மானிட்டர் எங்கனு கேப்போம்!” நான் சொன்னேன்.

ஆண்களில் குரல் அந்த மேலாளரை கொஞ்சம் கூட அசைக்கவில்லை. அவன் தொடர்ந்து போன் பேசிக் கொண்டே இருந்தான். நான் அருகே சென்று,

“சார்” என்றேன். கோபமாக என்னை நிமிர்ந்து பார்த்தான்.

“சாரி பார் டிஸ்டர்பன்ஸ்” என்றேன்,

அவன் பங்கலாவில் ஏதோ போனில் சொல்லி போனை கட் செய்துவிட்டு, மீண்டும் என்னை கோபமாக பார்த்தான்.

“மை மானிட்டர் யூ ஹாவ் டேக்கனா சார்!”

“ஒ! அதுவா. நம்ம காயத்ரி மேடம்க்கு கண்ல ஏதோ பிரச்சனை. டியர்ஸ் வந்துகிட்டே இருக்கு. அதான் பெரிய மானிட்டரா கேட்டாங்க….”

“அவ கண்ல தண்ணி வந்தா நீ ஏண்டா தொடச்சி விடுற…” என்று எனக்குள் இருந்து யாரோ கேட்க முயல, நான் அந்த யாரோவை உள்ளேயே போட்டு பூட்டிவிட்டேன். என்னதான் இருந்தாலும் அவன் ஒரு மேலாளர்.  நாங்கள் உதவி மேலாளர்கள் தான். ஆனால் என் நண்பன் விடுவதாக இல்லை.

“அதுக்கு ஏன் சார் அவன் மானிட்டர கொடுத்தீங்க….” கேட்டுவிட்டான். அவன் முறைத்தான்.

“இட்ஸ் ஓகே சார். நம்ம காயத்ரி மேடம் தான. பரவால…” என்று சொல்லிவிட்டு நான் வெளியே நண்பனை இழுத்துக் கொண்டு வந்தேன்.

“உன்ட்ட சொல்லிட்டாவது எடுத்திருக்கணும், எதிக்ஸ் இல்ல…” என் நண்பன் கோபித்துக் கொண்டான்.

“ரெண்டு வருஷம் கம்ப்யூட்டரே இல்லாம ஓட்டினேன். அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டிதான்… “

“நீ அட்ஜஸ்ட் பண்ண ஆரம்பிச்சா தலைல ஏறுவானுங்க…” என் நண்பன் மேற்கொண்டு இழுத்தான்,

“டேய் சும்மா இருடா. அவன் GM-க்கு பெட்டு. இவன பகைச்சிகிட்டு ஒன்னும் செய்ய முடியாது. இவன்ட்ட வம்பு பண்ணா உனக்கு இந்த ஜென்மத்துல கேரளா ட்ரான்ஸ்பர் கிடைக்காது. எப்படியாவது இவன் கிட்ட நல்ல பேர் வாங்கப் பாரு…”

என் நண்பன் நிர்வாக மேலாளரிடம் மாற்றல் விண்ணப்பம் கொடுத்து ஒரு வருடம் ஆகிறது. அவர் அவனை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன் என்கிறார். அவரும் ஒரு வங்காளி தான்.

என் நண்பன் சில நொடிகள் யோசித்தான். அவன் மனதில் புள்ளிகளை இணைத்துப் பார்த்திருப்பான்.

“இவன்ட்ட எப்படிடா நல்ல பேர் வாங்குறது…?” பாந்துவமாக என்னிடம் கேட்டான்.

“இவன் GM-ஓட பெட்டு. இவனுக்கு….” நான் நண்பனைப் பார்த்து கண் அடித்தேன்.

“அடிபொலி” நண்பன் என் முதுகில் தட்டினான். நாங்கள் இருவரும் காயத்ரி மேடமின் கேபின் நோக்கி நடந்தோம்.

கும்பிடுசாமி- நகைச்சுவைக் கதை

‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய சித்தப்பா. அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் நினைவிலில்லை. எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து அவரை ‘கும்பிடுசாமி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். அதற்கு முன்பிருந்தே அவர் கும்பிடுசாமிதானாம்.  நாங்களும் அப்படிதான் அழைப்போம்.

அவரை யாரும் உறவுமுறை சொல்லி, அப்பா என்றோ, மாமா என்றோ, சித்தப்பா என்றோ அழைக்கமாட்டார்கள். அவருடைய மகனே அவரை ‘கும்பிடுசாமி’ என்று தான் அழைப்பான். அவர் எப்போதும் கும்பிட்டுக்கொண்டே இருப்பது தான் அதற்கு காரணம்.

அவர் கை குழந்தையாக இருந்த போதே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடுவாராம். எல்லோரும் அவர் பக்திமான் என்று சிலாகித்து போயிருக்கிறார்கள். அவரை பள்ளியில் சேர்த்த போதுதான் அவர் பக்திமானும்  இல்லை சக்திமானும் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. முதலில் வகுப்பறையில் அவர் அவ்வப்போது கும்பிடுவதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். இரண்டாம் வகுப்பு பள்ளித் தேர்வு எழுதிக் கொண்டிருந்தவர், திடிரென்று பென்சிலை கீழே போட்டுவிட்டு கும்பிடத் தொடங்கி இருக்கிறார். வகுப்பாசிரியர், கூட்டல் கணக்கிற்கு பதில் தெரியாமல் கடவுளை வேண்டுகிறார் என்று அமைதியாக இருந்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கும்பிடுவதைப் பார்த்து அவருக்கு சந்தேகம் வந்திருக்கிறது. இப்படி கும்பிட்டால் கடவுள் பத்தாம் வகுப்பு கேள்விக்கே பதில் சொல்லியிருப்பாரே, இவன் ஏன் இன்னும் கும்பிடுகிறான் என்று யோசித்தவர் இவரை கும்பிடுவதை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்.  இவர் கேட்காததால், இரண்டு கைகளையும் விலக்கி விட்டிருக்கிறார். மீண்டும் இவர் கும்பிட்டிருக்கிறார். எத்தனை முறை விலக்கினாலும் இவர் மீண்டும் மீண்டும் கும்பிட்டிருக்கிறார். செய்ததை செய்யும் குரங்குப் பிள்ளை. அவ்வளவுதான் தாத்தாவிற்கு செய்தி  அனுப்பிவிட்டிருக்கிறார்கள்.  அதன்பின் தாத்தா அவரை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை.

வீட்டில் வசதி இருந்ததால் அவர் கும்பிட்டு கும்பிட்டு தூங்கி இருக்கிறார்.  கும்பிடுசாமியாகவே இருந்தாலும் திருமணம் செய்துவைக்க வேண்டுமே, திருமணம் என்றால் வேலைக்கு போகவேண்டுமே என்று யோசித்த தாத்தா அவருக்கு ஏற்றார் போல் ஒரு வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.  அது ஒரு துணிக்கடையில் வருபவர்களை வாசலில் நின்று வரவேற்க்கும் வேலை.

நாள் முழுக்க கும்பிட்டுக் கொண்டே இருந்தால் போதும். ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவரால் அந்த வேலையில் நீடிக்க முடிந்தது. அந்த கடை முதலாளியின் மகன் வெளிநாட்டிலிருந்து கும்பிடும் பொம்மைகளை  இறக்குமதி செய்து கடையின் முன் நிற்க வைத்துவிட்டான். அந்த பொம்மைகள் கும்பிட்டுக் கொண்டே தலையையும் ஆட்டி இருக்கின்றன. கும்பிடுசாமியால் கும்பிட மட்டுமே முடியும். வேறு வேலை பார்த்துக் கொள்ளலாம் என்று தாத்தா எண்ணியிருக்கிறார்.

கும்பிட்டுக் கொண்டே இருக்கும் அடுத்த வேலை எது? தாத்தா  யோசித்தக் கொண்டிருந்த நேரத்தில் அந்த ஊர் சட்டமன்ற உறுப்பினர் தலையில் தேங்காய் விழுந்து இறந்து போக, ஊருக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. தாத்தாவிற்கு யோசனை பிறந்தது.

“வாக்காள பெருமக்களே…” அந்த சுயேட்ச்சை  வேட்பாளர் பேசிக்கொண்டே போகும் போது, அருகில் கும்பிடுசாமி கும்பிட்டுக் கொண்டே வருவாராம்.  ஒரு நாளைக்கு எவ்வளவு மணிநேரம் கும்பிடுகிறாரோ அதற்கு ஏற்றார்போல் தினப்படியும் உண்டாம். ஆனால் இவர் கும்பிடுவதை கவனித்த மக்கள் அனைவரும் இவரையே சுற்றி வரத் தொடங்கியிருக்கின்றனர். வேட்பாளருக்கு, எங்கே இவர் அரசியலில் குதித்துவிடுவாரோ என்ற பயம் வந்துவிட்டது. கும்பிடுக்கு அந்த வேலையும் போயிற்று.

தாத்தா மருத்துவரிடம் போயிருக்கிறார். ஏதேதோ புரியாத நோய் பெயர் சொல்லி மருத்துவர் நிறைய காசை பிடிங்கிக் கொண்டிருக்கிறார். கும்பிடு சாமியிடம் எந்த மாற்றமும் இல்லை. ஒருவேளை இதெல்லாம் காத்துகருப்பின் வேலையாக இருக்குமோ என்று பயந்த அப்பாயி மாசி பெரிய கருப்புசாமியிடம் போய் முறையிட்டிருக்கிறார். தன் மகனை அண்டிய காத்து ஓட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கிடா வெட்டியிருக்கிறார். ஊரில் ஆடுகளுக்கு  பற்றாக்குறை வந்ததுதான் மிச்சம்.

கல்யாணம் பண்ணிவைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று சேலத்தில் ஒரு ஜோசியர் சொல்ல, உத்தியோகம் இல்லாமலிருப்பதும் புருஷலட்சணம்தான் என்று அப்பாயி முடிவெடுத்திருக்கிறார்.

ஊரில் யாரும் கும்பிடுக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை. மேலும் அவரை பலரும் கேலி பேசியிருக்கிறார்கள். அதனால் தாத்தா, குடும்பத்தோடு மெட்ராசிற்கு குடி புகுந்திருக்கிறார். தாம்பரம் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வந்த போது, கும்பிடு சாமி கும்பிட்டுக் கொண்டே இருப்பது மரியாதைக்காக என்று தவறாக புரிந்துகொண்ட அந்த ஊர் பஞ்சயாத்து தலைவர், இவ்வளவு மரியாதையான மனிதனை தவறவிடக் கூடாது என்று முடிவுசெய்து  தன் கடைசி மகளை கும்பிடு சாமிக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போவதாக சொல்லியிருக்கிறார். தாத்தாவிற்கு உள்ளுக்குள் சந்தோசம் என்றாலும், எப்படி மகன் தாலிக் கட்டுவான், அவன் கும்பிட்டுக் கொண்டே இருப்பானே என்று பயந்திருக்கிறார். தன் பையனிடம் இருக்கும் பிரச்சனையை தன் (சம்மந்தி) சமப்பந்தியாகப் போறவரிடம் சொல்லிவிடலாம் என்று யோசித்திருக்கிறார். அப்போது தான் தெரிந்திருக்கிறது, பஞ்சாயத்து தலைவர் பகுத்தறிவு கட்சியை சேர்ந்தவர் என்பது. தாத்தாவிற்கு பெரும் மகிழ்ச்சி. தாலி கட்டவேண்டிய பிரச்சனை இல்லாமல் பகுத்தறிவு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

பஞ்சயாத்து தலைவரின் குடும்பம் மிகப் பெரியது. வசதி படைத்தது. திருமணத்திற்கு பின்பு கும்பிடுசாமி தன் மனைவியை கும்பிட்டுக் கொண்டே இருந்ததைப் பார்த்து அவர்கள் அலமந்து போயிருக்கிறார்கள்.  தாங்கள் அனைவரும் செல்லமாக வளர்த்த பெண்னை வழிப்படும் ஆண்மகன் கிடைத்துவிட்டதாக எண்ணிய பெண்ணின் சகோதரர்கள் தங்களின் பெயரிலிருந்த ஒரு பெரிய துணிக் கடையை கும்பிடு சாமியின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

“இது என்னையா பேரு. கும்பிடுசாமி. இந்த பேருக்கு எப்படி ரிஜிஸ்தர் பண்றது?” சொத்தை பதிவு சைய்யும் போது பதிவாளர் கேட்டிருக்கிறார். அவ்வளவுதான் கும்பிடுசாமியின் மச்சான்கள் அனைவரும் அந்த அரசு அதிகாரியை அடிக்கப் போயிருக்கிறார்கள். பயந்த அதிகாரி, கும்பிடுசாமி என்று பெயரிலேயே சொத்தை பதிவு செய்ய அது அன்று முதல் அவரின் சட்டப்பூர்வமான பெயர் ஆனது. மேலும் கும்பிடுசாமிக்கு ஒன்றென்றால் அவருடைய ஐந்து மச்சான்களும் வருவார்கள் என்ற செய்தி ஊரில் வேகமாக பரவியிருக்கிறது. எல்லோரும் கும்பிடுசாமியை ஒரு குட்டி டான் போல பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

“கோன் ஹே ஒ. எனக்கே பாக்கனும்போல இருக்கே…” என்று பம்பாயில் சோட்டாராஜன் சொல்லும் அளவிற்கு கும்பிடு அண்ட் கோ-வின் செல்வாக்கு பரவியிருக்கிறது.

அந்த அதிகாரத்தோடு அவர் வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த வியாபாரமும் செய்யத் தெரியாது என்ற உண்மை தாத்தாவிற்கும் அப்பாயிக்கும் மட்டுமே தெரியும். அதனால் தாத்தா புத்திசாலித்தனமாக கும்பிடுசாமியை கல்லாவிற்கு அருகில் அமரவைத்துவிட்டு, கல்லாவில் கும்பிடுசாமியின் மச்சான் ஒருவரை அமர வைத்துவிட்டார். கும்பிடு சாமி கும்பிடுவதை பார்ப்பதற்காக நிறைய ஜனங்கள் அங்கே வரத் தொடங்க, அவருடைய ஸ்தாபனம் விறுவிறுவென வளர்ந்திருக்கிறது. கும்பிடுசாமி அந்த இடத்தில் அமர்வதுதான் ராசி என்று தாத்தா எல்லோரையும் நம்பவைத்துவிட்டார். பஞ்சாயத்து தலைவர்தான் பகுத்தறிவுவாதி. அவருடைய மகன்கள் எல்லாம் ராசிபலன்(வியா)வாதிகள். டிவியில் ராசிபலன்  பார்த்துவிட்டு குரு இன்று எந்தக் கட்டத்தைப் பார்க்கிறார் என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து  வியாபார முதலீடுகள் செய்யக்கூடிய அளவிற்கு ஜோஷிய ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் அவர்களும் கும்பிடுசாமி அங்கே அமர்வதால் தான் வியாபாரம் நடக்கிறது என்று நம்பி அவரை அங்கேயே விட்டுவிட்டனர். கல்லாவிற்கு பக்கத்திலிருக்கும் இருக்கை கும்பிடுசாமியின் நிரந்தர இருக்கையாகிப் போனது இப்படிதான்.

சூரியன் உதித்து மறைய, கும்பிடுசாமிக்குப் பிள்ளைகள் பிறக்க,  மெட்ராஸ் சென்னையாக, தாம்பரத்தை சுற்றியிருந்த கிராமங்கள் அபார்ட்மென்ட்களாக மாறிப்போக, அவரின் வியாபாரமும் பெருக கும்பிடுசாமி (மிகப்)பெரிய மனிதராக உருவெடுக்கத் தொடங்கியிருக்கிறார். கும்பிடுசாமியின் பிள்ளைகள் வளர்ந்து அமெரிக்காவில் வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்ட கடையில் கும்பிடுசாமி கும்பிடுவதை படமாக்கி சுவற்றில்  மாட்டிவிட்டான் அவருடைய மகன். அந்த படத்தைப் பார்க்கவே பல அமெரிக்கர்கள் வருகிறார்களாம்.

இன்று கும்பிடுசாமிக்கு நிறைய வயசாகிவிட்டது. ‘கும்பிடுசாமி டெக்ஸ்டைல்ஸ்’ உலகம் முழுக்க பரவிவிட்டது. இன்னும் அவர் கும்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார். அவர் மனைவி இன்று வரை தன் கணவன் தன்னை வழிபடுவதாக நினைத்து வருகிறார். அவர் குடும்பத்தார் அவர் கும்பிடுவதுதான் ராசி என்று நம்பி வருகின்றனர். மக்கள் அவரை தேடி வந்து பார்க்கின்றனர்.  அவரிடம் நிறைய பணம் சேர்ந்துவிட்டது. அவருக்கு திநகரில் பெரிய பங்களா இருக்கிறது. வீட்டில் பல வெளிநாட்டு கார்கள் நிற்கின்றன. எந்த கட்சி அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்வதே அவர்தான் என்று பேசிக் கொள்கிறார்கள். தமிழக அரசியலில் அவருக்கு தெரியாத ரகசியம் எதுவுமில்லை என்பது கூடுதல் தகவல்.

மேலும், கும்பிடுசாமி என்ற பெயரில் ஆதார் அட்டை வைத்திருக்கிறார். அதை தன் மொபைல் நம்பரோடும் வங்கிக் கணக்கோடும் இணைத்துவிட்டார் (அதனால் அவர் சேவைத் துண்டிக்கப் படவில்லை).  அவர் இப்போது வெறும் கும்பிடுசாமி இல்லை. ‘கும்பிடுசாமி அண்ணாச்சி’. ஆனால் அவருடைய உண்மையான பெயர் என்ன என்பதுதான் யாருக்கும் நினைவிலில்லை.

நகைச்சுவைக் கதைகள் – தொகுப்பு

2012 ஆம் ஆண்டு இதே நாளில் என்னுடைய முதல் புத்தகமான ‘போதிதர்மர் முதல் ஜேம்ஸ் பாண்ட் வரை’ வெளியானது. இன்று, அப்பாவின் பிறந்தநாளில்,  என்னுடைய எட்டாவது புத்தகமான ‘நகைச்சுவைக் கதைகள்’ தொகுப்பை ஈ புத்தகமாக அமேசானில்  வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

அடுத்த சிலநாட்களுக்கு அமேசானில் இலவசமாக  டவுன்லோட் செய்து கொள்ளலாம் . நன்றி

Click here for download

Nagaichuvaikathaigal2

ப்ளாக் பாரஸ்ட் கேக்- ஹாஸ்யக் கதை

ராமசாமிக்கு கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. யாராவது அவர்முன் தற்போது போய் நின்றால் அவர் என்ன செய்வார் என்று அவருக்கே தெரியாது. ஒருவேளை கடித்துக்கூட வைத்துவிடலாம். அப்படி என்ன பிரச்சனை!

புதிதாக வீட்டிற்குள் நுழைந்திருக்கும் சுமி தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம். ராமசாமிதான் அந்த வீட்டில் சீனியர். ராமசாமிக்கு ஒரு மனைவி சித்ரா. சித்ராவுக்கு தெரியாமல் அவர் பல பேருடன் கும்மியடிப்பது வழக்கம். அவர்களுடைய ஒரே மகன் ரெங்கா. இப்போது பெங்களூரில் இருக்கிறான்.

அமெரிக்காவிலிருந்து வந்த சுமி தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்துகிறாளோ என்ற எண்ணம் ராமசாமியை வாட்டி வதைக்கத் தொடங்கியது. வீட்டின் கடைக்குட்டி வர்ஷினி தான் சுமிக்கு இடம் கொடுத்து வைத்திருக்கிறாள்.

இந்த வீட்டிற்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாத ‘சுமி’ திடிரென்று உள்ளே நுழைந்து (வர்ஷினியை கையில் போட்டுக்கொண்டு) அந்த வீட்டின் முக்கிய கர்த்தாவாக விளங்கிய தன்னுடன் மல்லுக்கட்டுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இல்லை.

அவருக்கு பதினொரு வயது இருக்கும்போது ஆறாம் வகுப்பு படித்த லட்சுமணனை கையில் கடித்து வைத்ததைப்போல் இப்போது சுமியை கடித்துவிடலமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார் ராமசாமி.

ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் என்றால் உயிர். அதை எந்த கூச்சமுமின்றி நக்கி நக்கித் தின்பார். கடந்த சில வருடங்களாக தான் கேக் எல்லாம். வர்ஷினி முதன்முதலில் கல்லூரி கல்சுரல்ஸில் முதல் பரிசு வாங்கியதை கொண்டாடும் விதமாக ராமசாமிக்கு வைட் பாரஸ்ட் கேக் வாங்கி கொடுத்தாள்.  அப்போதுதான் அவர் அதை முதன்முதலில் சுவைத்தார். (அவருக்கு சுமி வயது இருக்கும்போது அவர் சாப்பிட்ட ஒரே இனிப்பு வகை மைசூர்பாக்கு மட்டுமே.) இப்போது அந்த வர்ஷினியே தனக்கு வைட் பாரஸ்ட் கேக் தராமல் போவாள் என்று ராமசாமி எதிர்ப்பர்த்திருக்கவில்லை.

வர்ஷினி தன் குழந்தை சாரலின் முதல் பிறந்தநாளை கொண்டாடுவதற்காகதான்  அமெரிக்காவிலிருந்து வந்திருந்தாள். வரும்போது சுமியையும் அழைத்து வந்து விட்டாள். சாரலின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படும் வரை, வைட் பாரஸ்ட் கேக் வெட்டுவார்கள் என்றே ராமசாமி நினைத்திருந்தார்.  ஆனால் அவர்கள் ப்ளாக் பாரஸ்ட் வாங்கி வந்துவிட்டார்கள்.

“சுமிக்கு ப்ளாக் பாரஸ்ட் தான் புடிக்கும்” வர்ஷினி சப்தமாக யாரிடமோ சொன்னது ராமசாமியின்  காதில் தீயாய் விழுந்தது.

‘சுமி சுமி சுமி. இந்த வர்ஷினிகூட இப்படி மாறிட்டாளே! ஆறாவது படிக்கும் போது டியூஷன் முடிச்சு வீட்டுக்கு தனியா வர பயப்படுவான்னு அரை கிலோமீட்டர் நடந்தே போய் கூட்டிட்டு வருவேனே. எல்லாத்தையும் மறந்துட்டாளே!’ ராமாசாமி நொந்துக் கொண்டார். ஆனால் இப்படி சுணங்கி நிற்பதை விட ஏதாவது செய்து சுமியை இந்த வீட்டிலிருந்து அனுப்பிவிட்டால் மீண்டும் தான் இழந்த பழைய அங்கிகாரத்தை பெற்றுவிடலாம் என்று நினைத்தார். தன் எதிர்ப்பை பதிவு செய்யும் பொருட்டு உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். பார்ட்டி அரங்கிலிருந்து கோபமாக வெளியேறினார். ஆனால் அவரை யாரும் சட்டை செய்யவில்லை. இரண்டு நாட்கள் தன் அறையிலேயே காலம் கழித்தார். வேலைக்காரி வந்து உணவை வைத்துவிட்டு சென்றாள். வேறுயாரும் அவரை காண வரவில்லை. ஏன், அவர் மனைவி சித்ராகூட சுமியை ஏற்றுக்கொண்டுவிட்டாள்.

அன்று அவர்கள் அனைவரும் சேர்ந்து தீம் பார்க் சென்றபோது சுமி ஓடிச்சென்று காரின் முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டது ராமசாமிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. அன்றிரவு சுமிக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

இரவு தீம் பார்க்கிலிருந்து தாமதமாக வந்த அனைவரும் களைப்பில் உறங்கிப்போயினர். சுமி ஹாலிலேயே சோபாவில் படுத்துக்கொண்டாள்.

மணி இரவு பன்னிரெண்டு. தூக்கமில்லாமல் தோட்டத்தில் உலாத்திக்கொண்டிருந்த ராமசாமி ஹாலிற்கு வந்தார். சுமி அருகே வந்தவர், ஓங்கி சுமியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டு விறுட்டென்று சோபாவின் பக்கவாட்டில் மறைந்துக்கொண்டார்.

பதறியடித்து விழித்த சுமி பயத்துடன் அக்கம்பக்கம் பார்த்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. கன்னத்தை தடவிக்கொண்டே மீண்டும் உறங்கிப்போனாள்.

ராமசாமிக்கு பெருமிதமாக இருந்தது. மறுநாளும் அதே நேரத்தில் அதேபோல் சுமியின் கன்னத்தில் அறைந்தார். பதறிய சுமி எழுந்து வர்ஷினியின் அறைநோக்கி ஓடினாள். அவள் அறை தாளிடப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.

அவளுக்கு அங்கே தனியாக இருக்க பயமாக இருந்தது. வெளியே வராந்தாவிற்கு வந்தாள். இருட்டாக இருந்தது. கதவருகே ஒளிந்துகொண்டிருந்த ராமசாமி ‘உர்’ ‘உர்’ என்று உறுமினார். அந்த சப்தம் சுமியை மேலும் பயமுறுத்தியது. இரவெல்லாம் தூங்காமல் அறையில் உலாத்தினாள். ராமசாமி நிம்மதியாக படுத்துறங்கினார். மறுநாள் காலையில் ராமசாமி நடு அறைக்கு வந்தபோது அனைவரும் பரபரப்பாக இருப்பதைக் கண்டார்.

சுமிக்கு ஜூரம். அவள் சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அழுதுக் கொண்டிருந்தாள். “அதெல்லாம் சரியாகிடும்” வர்ஷினியின் தந்தை அவளை தேற்றினார். ராமசாமிக்கு எதையோ சாதித்துவிட்ட சந்தோசம், வெளியே ஓடி வந்து ஆனந்தக் கூத்தாடினார்.

சுமிக்கு ஜூரம் அதிகமாகிக் கொண்டே போனது. டாக்டர் வந்து ஊசி போட்டு மருந்து கொடுத்துவிட்டு போனார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பிடித்ததை வாங்கி தந்தால் உடல் நிலை தேறும் என்று யாரோ சொல்ல, சுமிக்கு பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக் வாங்கி வந்து அவள் முன்பு வைத்தார்கள். ஆனால் அவள் கண்களை திறக்கவில்லை. வர்ஷினி சுமி அருகேயே படுத்துக் கொண்டாள். ராமசாமி தன் அறையில் உறங்கிப் போனார்.

திடிரென்று வர்ஷினியின் அழுகுரல் கேட்டது. ராமசாமி வந்து பார்த்தபோது சுமி இறந்திருந்தாள். சில நாள் சோகமாக இருந்த வர்ஷினி திரும்பி ஊருக்கு சென்றுவிட்டாள். அன்றிரவு, இரவில் ராமசாமி தனியாக உறங்கிக் கொண்டிருக்க சுமியின் ஆவி வந்து அவர் கன்னத்தில் ஓங்கி அடித்தது. ராமசாமி திடுக்கிட்டு விழித்தார். வெளியே எட்டிப் பார்த்தார். சுமி சோபாவில் படுத்திருந்தாள். வர்ஷினி அவள் அருகே அமர்ந்திருந்தாள்.

ராமசாமி வர்ஷினி அருகே செல்ல, அவள் ராமசாமியை இறுக்கி அணைத்துக் கொண்டு அழுதாள். ராமசாமிக்கும் கண்கள் கலங்கின. தன் எண்ணம் இவ்வளவு மோசமாக போய்விட்டதை எண்ணி வருந்தினார். சுமியை பார்த்தார். அவள் உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகே சென்று, முன்பு தான் அறைந்த அவளின் கன்னத்தை தடவினார். காலையிலிருந்து கண்களை திறக்காமல் இருந்த சுமி, நிதானமாக தன் கண்களை திறந்தாள். ராமசாமி அவளை பாசமாக பார்த்தாள். வர்ஷினிக்கு சந்தோசம். “அப்பா சுமி முழிச்சிட்டா” என்று கத்தினாள். ராமசாமி சுமியின் கன்னத்தை மீண்டும் தடவ, அவள் ராமசாமியை பார்த்து ‘மியாவ்’ என்று பாசமாக கத்தினாள். ராமாசாமியும் தன் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘லொள்’ ‘லொள்’ என்று இரண்டு முறை குறைத்தார்.

வரிசையில் நின்ற கடவுள்- சிறுகதை

வழக்கமாக நடை சாத்துவதற்கு முன்பு செய்யப்படும் கைங்கர்யம் எதுவும் செய்யப்படவில்லை. நங்கையர் குறை தீர்க்கும் நல்லாண்டானுக்கு சந்தேகம், ‘தாலாட்டு ஏன் இன்னும் பாடப்படவில்லை?’. அசதியின் காரணமாக அதை பொருட்படுத்தாமல் உறங்கிப் போனார். வைகுண்டராஜன் தன் துயில் கலையும் போது சுப்ரபாத ஒலி கேட்கும் என்று எதிர்பார்த்தார். அதுவும் இல்லை. குழப்பமடைந்தவர், வைகுண்டத்திலிருந்து நேரடியாக மலை மீது இறங்கினார். கோவிலே வெறிச்சோடிக் கிடந்தது. வாசலில் பல்லக்கு கேட்பாரற்று கிடந்தது. வெகுதொலைவில், மலை அடிவாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் புள்ளியாக தெரிந்தார்கள். ‘எல்லாம் எங்கே ஓடுகிறார்கள்?’

வைகுண்டராஜன் சுற்றும் முற்றும் பார்த்தார். நந்தவனத்தில் ஒரு பிச்சைக்காரன் உறங்கிக்கொண்டிருந்தான். அவனை எழுப்பினார்.

“என்ன சார் நீயும் என்னமாதிரியா? பாத்ததே இல்லையே?” பிச்சைக்காரன் கேட்டான்.

வைகுண்டராஜனுக்கு புரியவில்லை. என்ன சொல்கிறான் இவன் என்பது போல் பார்த்தார். அதை கேட்டும்விட்டார்.

“என்ன சொல்கிறாய் மகனே? எல்லோரும் எங்கே?”

பிச்சைக்காரன் கடவுளையே ஏற இறங்கப் பார்த்த்தான்.. கூத்துக் கட்ட வந்தவனைப் போல் அவர் ஆடை அணிந்திருந்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. அவன் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உன்ன்னைத்தான் மகனே? எல்லோரும் எங்கே ஓடுகிறார்கள்?”

“அதான் கவர்மென்ட்ல சொல்டாங்களே. ஐநூறு ரூவா ஆயிரம் ரூவா நோட்டுலாம் செல்லாதுன்னு. அதான் எல்லாம் மாத்த பேங்க்குக்கு ஓடுறாங்க. உங்களுக்கு தெரியாதா?”

வைகுண்டராஜன் பதில் அளிக்கவில்லை. பல்லக்கைப் பார்த்தார்.

“அது நேத்து நைட்ல இருந்து அங்கதான் இருக்கு. எட்டு மணி இருக்கும். கருட ஊர்வலம் முடிஞ்சு சாமி மறுபடியும் கோவிலுக்குள்ள நுழைஞ்சுக்கிட்டு இருந்துச்சுல. அப்பதான் யாரோ சொனாங்க. ‘ஐநூறு ரூவாய் ஆயிரம் ரூவாய் நோட்டுலாம் செல்லாதுனு. எல்லாம் பல்லக்க போட்டுட்டு அப்டியே ஓடிட்டாங்க” வைகுண்டராஜனுக்கு கோபம் வந்தது. அடக்கிக் கொண்டார்.

“நீ செல்லவில்லையா மகனே?”

“என்ட எல்லாமே சில்லறை தான்” சொல்லிவிட்டு அவன் தன் மூட்டையை காண்பித்தான்.

“நம்மக்கிட்ட ஏது ஐநூறும் ஆயிரமும்? ஆமா என்ன கேக்குறியே, நீ காசலம் மாத்தீட்டியா?”

அப்போது தான் வைகுண்டராஜனுக்கு உண்டியல் முழுக்க பணம் இருப்பது நியாபகம் வந்தது. வெறும் உண்டியல் மட்டுமா? அங்கே திறக்கப்படாமல் இருக்கும் பல அறைகள் முழுக்க செல்வங்கள் இருக்கின்றன. ‘நல்ல வேளை, அவையெல்லாம் ரூபாய் நோட்டுக்களாக இருந்திருந்தால், பெரும் நஷ்டமாகி இருக்கும்.’

உண்டியலிலிருந்து அள்ள முடிந்த அளவிற்கு பணத்தை. எடுத்துக் கொண்டார். அவர் கோவிலை விட்டு வெளியே வருகையில், அந்தப் பிச்சைக்காரன் எதிரில் வந்தான்.

“இம்புட்டும் உன் காசா?”

“இன்னும் இருக்கிறது மகனே?”

“அது சரி. ஆனா பேங்க்ல நாலாயிரம்தான் மாத்துவாங்க. கொஞ்சம் எடுத்துட்டுப் போ. ஏன் இவ்ளோவையும் தூக்கிட்டுப் போற”

வைகுண்டராஜன் தயங்கினார்.

“இந்த காசுக்கு இப்ப மதிப்பே இல்ல. சும்மா வச்சுட்டு போ. நான் பாத்துக்கிறேன்”

அவர் கொஞ்சம் காசை மட்டும் எடுத்து சுருக்குப் பையில் வைத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.

“வாத்தியாரே இந்த டிரஸோடா போனா உள்ள விட மாட்டாங்க. மேல் சட்ட கூட இல்ல. இந்தா இதை போட்டுக்கோ” என்று அவன் தன் பைக்குளிருந்து ஒரு பேண்ட் சட்டையை எடுத்து நீட்டினான். அவர் வாங்கிக் கொண்டார்.

***

வங்கியில் கூட்டம். வைகுண்டராஜனின் கோவிலில் இருப்பதை விட அதிக கூட்டம். வைகுண்டராஜன் அவ்வளவு கூட்டத்தை எதிர்ப்பார்த்திருக்கவில்லை. வங்கியின் வாசலில் நிழலுக்காக பந்தல் போட்டிருந்தனர். வெயில் அதிகமிருந்ததால், எல்லோரும் அடித்துப்பிடித்துக் கொண்டு பந்தளுக்குள்ளே  நிற்க முற்பட்டனர். வைகுண்டராஜனுக்கு வரிசையில் நின்று பழக்கம் இல்லாதததால், அங்கு நிற்பதே பெரும் போராட்டமாக இருந்தது. எல்லோரும் அவரை தள்ளிவிட்டு முன்னே போய்க் கொண்டிருந்தனர். பக்கத்து வரிசையில் நின்ற பெரியவர் வைகுண்டராஜனை பார்த்து, “உங்கள எங்கேயோ பாத்திருக்கேனே? ஹான், சாவித்திரியோட அத்திம்பேர் தான நீங்க?

வைகுண்டராஜன் என்ன சொல்வது என்று தெரியாமல், ஆம் என தலை அசைத்தார்

“கண்ணன் தான உங்க பேரு?” அதற்கும் தலையசைத்தார்.

“வாங்க இங்க வந்து நின்னுக்கோங்க.” என்று அந்த பெரியவர் தனக்கு முன் நிற்க இடமளித்தார். அகம் மகிழ்ந்த வைகுண்டராஜன் பெரியவருக்கு போகும் போது வரமளித்துவிட்டு போக வேண்டுமென்று முடிவு செய்தார். அதற்குள் கேஷ் கவுன்ட்டர் வந்தது.

“ப்ரூப் வேணும் சார். அப்பத்தான் எக்ஸ்சேஞ் பண்ணமுடியும்” கேஷியர் பெண்மணி சொன்னாள். வைக்குண்டராஜன் திருதிருவென விழித்தார்.

“மறந்துட்டீங்களா கண்ணன்?” பின்நின்ற பெரியவர் வினவினர்.

“மேடம் இது என் வைஃப்போட ஆதார். இத வச்சு மாத்திக் குடுங்களேன். ரொம்ப நேரம் க்யூல நின்னுட்டார். என் ரிலேடிவ் தான்” பெரியவர் வக்காலத்து வாங்கினார்.

கேஷியர் பெண்மணி இறக்கப்பட்டு சரி என ஒப்புக் கொண்டாள். வைகுண்டராஜன் நான்கு ‘ஆயிரம் ரூபாய்’ நோட்டுக்களை நீட்டினார். அந்த பெண்மணி இயந்திரத்தினுள் அந்த தாள்களை போட்டாள். “க்யுங்” என்று இரண்டு முறை சப்தம் வந்தது. இயந்திரத்தின் டிஸ்ப்ளேயில் “F” என்று வந்தது.

“ஃபேக் நோட்” கேஷியர் பெண்மணி கோபமாக இரண்டு நோட்டுக்களையும் திருப்பி நீட்டினாள்.

“அப்படி என்றால்”

“கள்ள நோட்டு

“எங்க வாங்குனீங்க கண்ணன் இந்த நோட்ட?” பெரியவர் வினவினார்.

“கோவில்ல”

“பெருமாளே. கோவில்ல கள்ள நோட்ட குடுக்குறாளே உருப்புடுவாளா?”

“சார், நாங்க இந்த நோட்ட கிழிச்சு போடணும். ஏதோ வயசானவராச்சேனு திருப்பி கொடுத்துட்டேன். எங்க வாங்குனீங்களோ அங்கேயே குடுங்க” கேஷியர் பெண்மணி சீறினாள்.

“அந்த மிச்சம் ரெண்டாயிரத்தயாவது மாத்தி குடுங்க?” பெரியவர் பவ்யமாக கேஷியரிடம் சொல்ல, கேஷியர் மீண்டும் ஒரு நோட்டை திருப்பி தந்தாள்.

“இது pre-2005 நோட் சார்

“சில்வர் கம்பி இருக்கு பாருங்க. இந்த நோட்ட இப்போ நாங்க வாங்கக் கூடாதுன்னு ரூல். இத இங்க மாத்த முடியாது. ரிசர்வ் பேங்க் போய் மாத்திக்கோங்க?”:

‘உண்டியலில் என்னென்ன நோட்டுக்களை எல்லாம் போடுகிறார்கள்’ வைக்குண்டராஜனுக்கு கோபம் வந்தது. மீண்டும் அடக்கிக் கொண்டார்.

“ஒரு ஆயிரத்தையாவது மாத்திக் குடுமா?” இது பெரியவர்

“சின்ன denomination இன்னும் வரல சார். வெறும் 2000 denomination தான் இருக்கு. ஆயிரத்துக்கு குடுக்க சில்லறை இல்லையே?”

“கொஞ்சம் ட்ரை பண்ணுமா?”

“வச்சுகிட்டா சார் இல்லன்னு சொல்றோம். வேற நோட் இருந்த குடுங்க. இல்ல கிளம்புங்க”

“வேற காசு இருக்கா?” பெரியவர் வைகுண்டராஜனை கேட்டார்.

“நிறைய இருக்கிறதே” என்றவாறே வைகுண்டராஜன் தன் பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டார். பாக்கெட் ஓட்டையாக இருந்தது.

“வாத்தியாரே இந்த டிரஸோடா போனா உள்ள விட மாட்டாங்க. மேல் சட்ட கூட இல்ல. இந்தா இதை போட்டுக்கோ”

‘விதி வலியது’

“காச வச்சுட்டு வந்துட்டேன். நிறைய இருக்கு” வைகுண்டராஜன் சொன்னார்.

“யோவ் பெருசுங்களா எவ்ளோ நேரம் அங்கேயே நிப்பீங்க?”

பின்னிருந்து ஒருவன் கத்தினான். பெரியவர் மட்டும் தன் காசை மாற்றிக் கொண்டார்.

“அகௌண்ட் ஓபன் பண்ணி போட்டுறலாம் கண்ணன். கவலை படாதீங்க. மேனஜர் என் பிரெண்டு தான்” பெரியவர் வைகுண்டராஜனை மேலாளரிடம் அழைத்துச்  சென்றார்.

வேலை செய்யாமல் தொலைபேசியில் யாரிடமோ வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்த மேலாளர் இவர்களை பார்த்ததும் வேலை செய்வது போல் பாவனை செய்தார்.  வைக்குண்டராஜனும் பெரியவரும் வெளியே காத்திருக்க வேண்டியதாயிற்று.

‘நம்மை தரிசனம் செய்ய எத்தனை பேர் காத்திருப்பார்கள். இன்று இந்த மானிடன் நம்மையே காக்க வைத்துவிட்டானே’

ஒருவழியாக மேலாளர் இவர்களை உள்ளே அழைத்தார். பெரியவர் வைகுண்டராஜனை அறிமுகம் செய்து வைத்தார்.

“உங்க ஃபுல் நேமே கண்ணன் தானா?”

“கண்ணன், கமலக்கண்ணன், ஹரிஹரன், வைகுண்டன், பார்த்தசாரதி. இன்னும் ஆயிரம் பெயர்கள் உண்டெனக்கு”

“ஆயிரம் பேர் இருக்கலாம் சார். ப்ரூப்ல என்ன பேர் இருக்கு? அத வச்சு தான் அகௌண்ட் ஓபன் பண்ண முடியும்”

“ப்ரூப்பா?”

“அடையாள அட்டை. ஆதார், பான் கார்ட்”

வைகுண்டராஜன் விழித்தார். “அதெல்லாம் இல்லையப்பா”

“எந்த ப்ரூப்மே இல்லையா? வோட்டர்ஸ் ஐ.டி, டிரைவிங் லைசன்ஸ்?”

“அதுவும் இல்லையப்பா”

“என்ன கண்ணன். எப்பவும் வண்டில தானே வருவீங்க. லைசன்ஸ் இல்லாமயா இவ்வளவு நாளா வண்டி ஓட்றீங்க?”

“கருட வாகனம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் எதற்கு?”

வைகுண்டராஜன் என்ன பேசுகிறார் என்று பெரியவருக்கு குழப்பமாக இருந்தது, வெகு நேரம் வெயிலில் நின்றதால் கண்ணன் ஏதோ பேசுவதாக அவர் கருதினார். அதனால் அவர் மேலாளரிடம்,

“சார் ப்ரூப்லாம் எடுத்துட்டு வந்து அகௌண்ட் ஓபன் பன்னிக்குறோம். இவ்வளவு தூரம் வந்ததுக்கு ஒரு ரெண்டாயிரம் எக்ஸ்சேஞ் பண்ணித்தாங்கோ. கவுன்டர்ல அந்த பொண்ணு ரூல்ஸ் பேசுறா”

மேலாளர் உதவி மேலாளரை அழைத்து, ஜாடையில் எதையோ எடுத்து வர சொன்னார். அவர் ஒரு மை டப்பாவையும் ஒரு இரண்டாயிரம் நோட்டையும் எடுத்து வந்தார்.

“இது  எதுக்கு?” மை டப்பாவை காண்பித்து பெரியவர் வினவினார்.

“இனி ஒருத்தர் ஒரு முறை தான் நோட் எக்ஸ்சேஞ் பண்ணலாம். அதுக்கு தான் அடையாளத்துக்கு விரல்ல இந்த மை” என்று சொல்லிக்கொண்டே அந்த உதவி மேலாளர், வைக்குண்டராஜனின் வலது கை ஆட்காட்டி விரலில் மை வைத்தார்.

“பிப்டீன் மினிட்ஸ் முன்னாடி தான நான் எக்ஸ்சேஞ் பண்ணினேன். என் கைல யாரும் வைக்கலயே”

“பைவ் மினிட்ஸ் முன்னாடிதான் சார் RBI circular வந்துச்சு”

“ராமா” பெரியவர் அலுத்துக்கொண்டார்

“கூப்டீங்களா?”  வைகுண்டராஜன் பெரியவரைப் பார்த்துக் கேட்டார்

“கண்ணன் தான உங்க பேரு!”

“கண்ணனும் நானே ராமரும் நானே”

“விட்டா கிருஷ்ணரும் நீங்கதான்னு சொல்வீங்க போலருக்கே?” மேலாளர் வினவினார்.

“அதிலென்ன சந்தேகம்!” வைக்குண்டராஜன் சொன்னார்.

“சும்மா இருங்க கண்ணன். எப்பபாத்தாலும் ஜோக் பண்ணிக்கிட்டு”

வைகுண்டராஜன் ஒரு இரண்டாயிரம் தாளை பெற்றுக் கொண்டு வெளியே வந்தார். மேலாளர் பெரியவரிடம் சிறிது நேரம் தனியாக பேசினார். வெளியே வந்த பெரியவர்,

“வாங்க இளனி சாப்ட்டு போவோம்” என்று அழைத்தார். வைகுண்டராஜனுக்கும் தாகமாக இருந்தது. சரி என்று ஒப்புக் கொண்டார். அவர்கள் வங்கிக்கு எதிரே புதிதாக முளைத்திருந்த இளநீர் கடையில் இளநீர் அருந்தினர். பெரியவர் காசை கொடுத்தார். வைகுண்டராஜனுக்கு மீண்டும் அகம் மகிழ்ந்தது.  பெரியவருக்கு இன்னொரு வரமும் தர வேண்டும் என்று தன்னுள் நினைத்துக் கொண்டார்.

“எந்த ப்ரூப்பும் இல்லாம அகௌண்ட் ஓபன் பன்றது கஷ்டமாம். அகௌண்ட் இல்லாமயே உங்க காசலாம் மேனஜர் மாத்தி தரேன்னு சொல்றார். ஆருக்கு 30% ப்ரீமியம் மட்டும்தந்தா போதுமாம்” பெரியவர் சொன்னார்.

“ப்ரீமியம் என்றால்?”

“கமிஷன் அப்டினும் சொல்லலாம்”

“ஐயோ இதெல்லாம் தவறில்லையா?”

“இல்ல கண்ணன். கோவில்ல சாமிக்கிட்ட வேண்டிட்டு உண்டியல கொஞ்சம் காச போடுறோமே. அது மாதிரிதான் இதுவும்”

வைகுண்டராஜனுக்கு கோபம் தலைக்கேறியது. “வேண்டாம் என் பணத்தை நானே மாற்றிக் கொள்கிறேன்” கோபாமாக சொன்னார்.

“எப்படி மாத்துவீங்க கண்ணன்? பெரிய கட்சிக்காராலாம் தொண்டர்ங்க கிட்ட காச பிரிச்சிக் கொடுத்து பேங்க் பேங்காக அனுப்பி மாத்திப்பா. நம்மள மாதிரி மிடில் கிளாஸ் எண்ணப் பண்றது. ஒவ்வொரு பேங்க்கும் ஒரு அவதாரமா எடுக்க முடியும்?”

“யுரேக்கா” என்று வைக்குண்டராஜன் கத்தினார்.

“என்ன கண்ணன்?”

“ஒன்றுமில்லை. நான் பல அவதாரங்கள் எடுத்து என்னிடமிருக்கும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டு சப்தமாக சிரித்தார் வைகுண்டராஜன்.

பெரியவர் அதிர்ச்சியாக வைகுண்டராஜனைப் பார்த்தார். வெட்ட வெயிலில் அவர் அப்படி சிரித்தது பெரியவருக்கு பயத்தை ஏற்படுத்தியது.

அதற்குள் எதிரே வண்டியில் வந்த பெரியவரின் மகன், “என்னப்பா இவ்ளோ நேரம்! அம்மா பாத்துட்டு வர சொன்னா” என்றான்.

“கொஞ்சம் கூட்டம் ஜாஸ்தியாயிடுத்து” என்று சொன்ன பெரியவர், “இவர் நம்ம நாடகசபா கண்ணன்” என்று தன் மகனிடம் சொன்னார். வைகுண்டராஜன் எதையும் சட்டை செய்யாமல் ஆகாயத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருந்தார்.

“நம்ம சாவித்திரி மாமி அத்திம்பேரா?. அவருக்குத்தான் சுவாதீனம் சரியில்லாம போச்சாமே. ஏதோ பெருமாள் கோவில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு இருக்காராம்”

“ஆமாடா. இவரும் கோவிலுனு தான் சொன்னாரு. அப்பவே நான் சுதாரிச்சிண்டிருக்கணும்” என்று சொல்லிவிட்டு பெரியவர் வைகுண்டராஜனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று தன் மகனின் ஸ்கூட்டரில் ஏறிக் கொண்டு தன் மகனை அங்கிருந்து நகரும்படி துரிதப்படுத்தினார். அவர்கள் சென்றதை வைகுண்டராஜன் பொருட்படுத்தவில்லை. பல அவதாரங்கள் எடுத்து காசை மாற்றுவதே அவர் குறிக்கோளாக இருந்தது.  முதலில் ஒரு அவதாரம் எடுத்து காலையில் சென்ற வங்கிக்கே சென்றார். ஆனால் காவலாளி இவரை உள்ளே விடாமல்,

“காலைல தான சாப் வாங்கிட்டு போனீங்கோ.  அபி தூஸ்ரி பார் வந்த எப்டி சாப்?” என்று கேட்டான்.

‘இந்த அவதாரம் சரியில்லை போல. எளிதில் அடையாளம் கண்டுக் கொண்டான்’ என்று நினைத்துக் கொண்டு வைகுண்டராஜன் வேறொரு அவதாரத்தில் சென்றார். அதையும் அவன் கண்டுகொண்டான்.

‘இந்த வங்கிக் காவலாளி மிக புத்திசாலியாக இருக்கிறான்’

வைக்குண்டராஜன் வேறொரு வங்கிக்கு சென்றார். அங்கே காவலாளி இல்லாததால் நேரடியாக உள்ளே நுழைந்து விட்டார்.

அவரை பார்த்த கிளார்க் பெண்மணி, “ஆல்ரெடி ஒரு பேங்க்ல எக்ஸ்சேஞ் பண்ணிடீங்க தான சார்? அப்பறம் ஏன் இங்க வறீங்க?” என்று எரிந்து விழுந்தாள்.

‘இவர்களுக்கு எப்படி தெரிந்தது?’

வெகுதொலைவில் செல்ல முடிவேடுத்து தன் கருடவாகனத்தில் பயணித்து வேறொரு ஊரில் இருந்த வங்கிக்கு சென்றார். அங்கும் தோல்வியே மிஞ்சியது. .

மனித அவதாரத்தில் போனால் தான் பிரச்சனை, என்று மனித உடலும் மிருக முகமுமாக அவதாரம் எடுத்து ஒரு வங்கிக்கு சென்றார். அந்த காவலாளி வைக்குண்டராஜனின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.

‘எத்தனை அவதாரம் எடுத்தாலும் எப்படி இவர்கள் கண்டுபிடித்துவிடுகிறார்கள்’ என்று யோசித்துக் கொண்டே இருந்தார் கடவுள். பதில் கிடைக்கவில்லை. அவர் வலது கை ஆட்காட்டி விரலிலிருந்த மை அவரை பார்த்து பல் இளித்தது.

 

லேடி போலீஸ்- நகைச்சுவைக் கதை

அந்த புத்தகத்தை  வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க. உள்ள எவ்வளவு இடம் இருந்தாலும் ஏறமாட்டனுங்க…

இவனுங்கெல்லாம் சமுதாயத்திற்கு ஏதோ சொல்ல வராணுங்க. ஆனால் என்ன சொல்லவராங்க என்பதுதான் என் குறுகிய அறிவுக்கு எட்டமாட்டேங்கிது..

சென்னையில எந்த மேஜர் ஸ்டேஷன்ல எறங்குனாலும், ஆட்டோ டிரைவர்ஸ் சூழ்ந்துபாங்க.

‘அண்ணே ஆட்டோ, சார் ஆட்டோ..’

இந்தியாவிலேயே சவாரி தலையில் மிளகாய் அரைக்கிற ஆட்டோ டிரைவர்ஸ் சென்னையிலதான் இருக்காங்க. அவங்க சவாரி புடிக்க சில ‘psycological methods’ வச்சிருக்காங்க. ஆட்டோ வேணாம்னு சொன்னா,  ‘எனக்கு தெரியும். நீங்கலாம் ஆட்டோல போமாட்டீங்க’னு சொல்லி நக்கலா சிரிப்பாங்க. அப்படியாவது ரோஷம் வந்து ஆட்டோவுல ஏறுறாங்களானு பாப்பாங்க. ஆனா நான் அதுக்கெல்லாம் அலட்டிக் கொல்(ள்)வதில்லை. அதுவும் ஹிந்தியில ‘ஆட்டோ வேணாம்’னு சொன்னீங்கனா ஹிந்திக்காரன்னு நினைச்சிக்கிட்டு மரியாதையா ஒதுங்கிருவாங்க. மீசை தாடியெல்லாம் ஷேவ்பண்ணிட்டு அடிக்கிற கலர்ல டைட்டா டிரஸ் போட்டா இவங்களே இந்திக்காரன்னு முடிவு செஞ்சுபாங்க. மரியாதையும் தர ஆரமிச்சிடுவாங்க.

தமிழ்நாட்டுக்கு வெளிய தமிழனுக்கு மரியாதை தர மாட்டாங்க. ‘மதராசி’னு ஓட்டுவாங்க. குஜராத்ல ஒருத்தன் கிட்ட சும்மா சொன்னேன் ‘நான் மதராசி இல்ல. சௌத் ஆப்ரிக்கன்’ உடனே அவன் மன்னிப்பு கேட்டான். இந்தியாவில அப்படிதான். இந்தியர்கள discriminate பண்ணுவாங்க. ஆனா வெளி நாட்டுக்காரனுங்கள மதிப்பாங்க. அதே மாதிரிதான் தமிழ்நாட்டுலயும். தமிழன மதிக்க மாட்டாங்க. மத்த ஊர் ஆளா இருந்தா ராஜா மரியாதை…

‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’

‘Destination’ இல்லாம சுத்துறது எனக்கு ரொம்ப புடிக்கும். நான் ஒரு ‘Bohemian’. ஆனா எங்காவது ஒரு இடத்துக்கு போகணும்னா செம கடுப்பு. அதுவும் எப்படி  போகணும்னு தெரியாம, போய் ஆகவேண்டும் என்கிற கட்டாயதுல போறது பெரிய கடுப்பு.

பீக் ஹவர்ல அட்ரஸ் கேட்டா யாரும் சொல்லமாட்டாங்க. ஒரு டீ கடையில போய் டீ குடிக்கிற சாக்குல அட்ரஸ் கேட்டேன். அவரும் கஷ்டமராச்சேனு, ‘அந்த சிக்னல்ல போய் கேளுங்க’ என்றார்.

நானும் அந்த சிக்னல் வரைக்கும் போனேன். லெப்ட்ல திரும்புறதா ரைட்ல திரும்புறதானு சந்தேகம். சிக்னல்ல ஒரு லேடி போலீஸ் நின்னுக்கிட்டு இருந்தாங்க…

பொதுவா நான்தான் பொண்ணுங்களா உத்து உத்து பார்ப்பேன், பெமினிச ஆராய்ச்சி. ஆனா அந்த லேடி கான்ஸ்டபிள் என்ன உத்து உத்து பார்க்கும் போதே நான் உஷார் ஆயிருக்கணும். அதையும் மீறி நான் அவங்ககிட்ட போய் கேட்டேன், “ம்யூசியம் எப்படி போறது?” (ம்யூசியமும், நூலகமும் ஒரே  இடத்துலதான் இருக்கு. நூலகம்னு கேட்டா பாதி பேரு தெறித்து ஓடுறாங்க)

அவங்க என்னை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னாங்க, ‘இப்டியே நேரா போங்க’

நானும் அந்த பெண்மணி பொய் சொல்லியிருக்க மாட்டாங்க என்கிற நம்பிக்கையில அவங்க சொன்ன வலது புறம் போனேன். அங்க வெறும் மேம்பாலம்தான் இருந்துச்சு. தப்பான வழியோ என்று எனக்கும் ஒரு உள்ளுணர்வு. ‘Raghavan instinct’ மாதிரி.

ரோட்ல போய்ட்டிருந்த ஒரு அண்ணங்கிட்ட வழி கேட்டேன். சென்னையில எல்லாம் அண்ணனுங்கதான். சென்னைக்குனு ஒரு ‘slang’ உண்டு. சின்ன வயசுல பொட்டிக்கடையில போய் ‘டூ ருபீஸ் சேஞ்ச் இருக்கானு’ கேட்டு நான் பல்பு வாங்கியிருக்கேன். அப்பறம் தான் தெரிஞ்சுது, அவங்க கிட்ட லோக்கலா பேசணும்னு..

லோக்கலா கேட்டேன், ‘அண்ணே ம்யூசியம் எங்கிட்டு போறது’

‘என்னப்பா… இங்க வந்துட்ட… அப்டியே சிக்னல்ல இருந்து லெப்ட்ல போயிருக்கலாம்ல…  வந்த வழியே போ’

அப்பதான் புரிஞ்சிது. சாச்சுபுட்டா  பொம்பள போலீஸ். எனக்கு புரியல. அவங்க ஏன் தப்பா வழி சொன்னாங்கனு. ஒரு வேலை நான் அவங்களை கேலி பண்றதா அவங்க நினைச்சிருக்கலாம்… (இல்ல அவங்க வலதுசாரியோ என்னமோ!)

அப்படியே வந்த வழியே போனேன். அங்க ஒரு பிச்சைக்காரர் போயிட்டு இருந்தார். அவர் தாடி, அலங்கோலமான ஆடை செய்கையெல்லாம் பார்த்தா மன நிலை பாதிக்கப் பட்டவர் மாதிரி இருந்தார். காசியா இருந்தா அகோரினு சொல்லலாம். இங்க பைத்தியக்காரர்னுதான் சொல்லணும். அவர் பின்னாடி நான் போகலா. ஆனா என் முன்னாடி அவர் போய்ட்டிருந்தார். அப்டியே அவர தாண்டி போனேன்.

பெமினிஸ்ட்டா இருக்குறதுல ஒரு பிரச்சனை. ஒரு பொண்ணு பொய் சொல்லிருப்பா, தப்பு பண்ணியிருப்பானு மனசு உடனே ஏத்துக்காது. அதனால தான் அந்த லேடி போலீஸ் பொய் சொல்லியிருப்பாங்கணு நம்ப முடியல. அப்படியே திரும்பி இன்னொரு கடையில போய் விசாரிச்சேன், “பெரியவரே.. இந்த ம்யூசியம்…”

இப்ப முடிவாயிடுச்சு. லேடி போலீஸ் பிளான் பண்ணி சாச்சிருக்கா. அதுல என்ன அவங்களுக்கு ஒரு சந்தோசம்னு தெரியல. ‘சாடிஸ்ட்…

அங்க இருந்து நகரும் போது தான் பார்த்தேன். அந்த பிச்சக்காரரும் என் அருகில் நின்றுக் கொண்டிருந்தார். என்ன பார்த்ததும் ரொம்ப கோபமா கத்துனார், “போடா… என்ன ஃபாலோ பண்ணிக்கிட்டே வர !”

என்னால சிரிப்ப அடக்க முடியல. உள்ளுக்ககுள்ளேயே  சிரிச்சிக்கிட்டு வேகமா ரோட் க்ராஸ் பண்ணினேன். அந்த பிச்சக்காரர சுத்தி ஒரு கூட்டம் கூடிடுச்சு. அவரோட குரல் சத்தமா என் காதுல விழுந்தது. “அந்த சிவப்பு T-Shirt என்ன ரொம்ப நேரமா ஃபாலோ பண்றான் சார்,” அவர் எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அதை கேட்டு சிரிச்சிக்கிட்டே நான் சிக்னல கடந்தேன். சிக்னல்ல நின்றுகொண்டிருந்த அந்த லேடி போலீஸ் என்ன பார்த்து சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க….