The Innocent- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

The Innocent- ஹார்லான் கொபன் எழுதிய ஆங்கில நாவல். ஒரியோல் பாவ்லோ இயக்கத்தில் ஸ்பானிஷ் தொடராக வெளியாகி உள்ளது. நாவல் என்ற அளவிலேயே இது மிகவும் சுவாரஸ்யமான கதை. கதையின் நாயகன், மேட் ஹண்ட்டர் கல்லூரி நாட்களில் ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். அங்கே நிகழும் ஒரு கைகலப்பில், எதிர்பாரதவிதமாக மேட் ஹண்ட்டர் தாக்கி ஒருவன் இறந்து போய் விடுகிறான். மேட் ஹண்டர் சிறைக்கு செல்கிறான். சில ஆண்டுகள் கழித்து, அவன் விடுலையாகி, தான் உண்டு தன் வேலை உண்டு என்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அதே வேளையில் தேவாலய பள்ளியில் பணிபுரியும் கன்னியாஸ்திரி ஆசிரியர் ஒருவர் தன் படுக்கையில் மூச்சு பேச்சற்று கிடக்கிறாள். அவளுக்கு  CPR செய்யும் போது அந்த கன்னியாஸ்திரி செயற்கை மார்பகம் பொருத்தியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார் தலைமை கன்னியாஸ்திரி. அவர் இதைப் பற்றி அந்த பள்ளியின் முன்னாள் மாணவியும், கொலைக்குற்ற விசாரணை அதிகாரியுமான லாரன் ம்யூசிடம் சொல்கிறார். இந்த இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே நாவல். 

ஆங்கில நாவல், ஸ்பானிஷ் இணையத்தொடராக மாறும் போது கதாபாத்திரங்களின் பெயர்களும் அந்த மொழிக்கேற்ப மாறுகிறது.  மாட் ஹண்ட்டர் என்ற பெயர் மேத்தியோ விதல் என்றாகிறது. லாரன் ம்யூஸ், லோரேனா ஒர்டிஸ் என்றாகிறது. நாவலாகவே விறுவிறுப்பான திரைக்கதையாக இருக்கும் இந்த கதையை, கதாப்பாத்திரங்களின் பெயரை மட்டும் மாற்றி ஸ்பானிஷ் தொடராக எடுத்துவிட்டிருந்தால் கூட சுவாரஸ்யமாக தான் இருந்திருக்கும். ஆனால் மூன்று திரைக்கதையாசிரியர்கள் இணைந்து ஒரு நல்ல நாவலை மிகமிக நல்ல திரைக்கதையாக மாற்றுகிறார்கள். எந்தெந்த மாற்றங்கள் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது?

எட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த இணைய தொடரின் முதல் அத்தியாயம் முழுவதும் நாயகன் மேத்தியோ விதாலைப் பற்றியது.  மேத்தியோ விதாலின் கதை நேர்கோட்டில் நகர்கிறது. அவன் அண்ணனோடு ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். அங்கே அவன் தாக்கி ஒருவன் இறந்து போக அவன் ஜெயிலுக்கு போக வேண்டியதாகிறது. பின் ஜெயில் வாழ்க்கை காட்டப்படுகிறது. இந்த ஜெயில் சம்பவங்கள் நாவலில் இல்லை. அவன் விடுதலை ஆகி வந்து ஒலிவியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழ்கிறான். ஒரு நாள் ஒலிவியாவின் மூலம் அவனுக்கு மீண்டும் பிரச்சனை வருகிறது. அலுவலக வேலையாக வெளியூர் செல்வதாக சொல்லிச் செல்லும் ஒலிவியா பொய் சொல்லியிருப்பது நாயகனுக்கு தெரிகிறது. அவள் ஏன் அப்படி செய்ய வேண்டும் என்று குழம்பும் அவன், தனியார் துப்பறியம் நிபுணியான ஜோயியை அணுகுகிறான். அவளுக்கு ஹாக்கிங்கும் தெரிந்திருக்கிறது. அவள் மூலம் தான் தன் மனைவி மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கியிருப்பது அவனுக்கு தெரிகிறது. அவனையும் சிலர் பின்தொடர்கிறார்கள். மிகவும் விறுவிறுப்பான ஒரு புள்ளியில் இந்த எபிசோட் முடிகிறது.     

ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது தேவையில்லாத பாத்திரங்களை நீக்கிவிட வேண்டும் என்பதை முந்தைய கட்டுரைகளில் பேசி இருக்கிறோம். நாவலில் நாயகன் தன் நண்பனுடன் பார்ட்டிக்கு போகிறான் என்று கதை தொடங்குகிறது. பின்பு அவன் ஜெயிலுக்கு போய் திரும்பி வந்ததும் அவனுடைய அண்ணன் உதவுகிறான் என்பதும், அவனுக்கு சகோதரிகளும் இருக்கிறார்கள் என்பதும் செய்திகளாக சொல்லப்படுகிறதே ஒழிய காட்சிகளாக அல்ல. பின் ஒரு நாள் அண்ணன் இறந்து போகிறான் என்பது செய்தியாக மட்டுமே சொல்லப்படுகிறது.  ஆனால் திரைக்கதையில் அண்ணனோடு தான் நாயகன் பார்ட்டிக்கு செல்கிறான் என ஆரம்பத்திலியே அண்ணன் பாத்திரத்தை அறிமுகம் செய்கிறார்கள். மேலும் அவன் தன் தம்பியை பாதுகாக்கும் அண்ணனாக இருக்கிறான் என காண்பித்து அவனை கவனிக்கத் தகுந்த கதாபாத்திரமாக மாற்றி இருக்கிறார்கள். இப்படி தேவையில்லாத பாத்திரங்களை நீக்குவதும், நாவலில் வரும் வெவ்வேறு கதாப்பாத்திரங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட முக்கியத்த்துவதை படத்தில் ஒரே பாத்திரத்திற்கு கொடுத்துவிடுவதும் சிறப்பான உத்தி.

அடுத்து ஒரு கதாப்பாத்திரத்தின் செய்கைகளுக்கு நியாயமான காரணங்கள் இருத்தல் வேண்டும். அதை வசனத்தின் மூலம் கூட நம்மால் சொல்லிவிட முடியும். உதாரணமாக, ஜோயி பாத்திரம், நாவலில் ஹீரோவிற்கு உதவுவதற்கு பெரிய காரணங்கள் இல்லை. ஒரு துப்பறியும் பெண்மணியாக, சன்மானத்திற்கு வேலை செய்கிறாள். ஆனால் அவனுக்காக எவ்வளவு பெரிய அபாயத்தையும்  சந்திக்க தயாராக இருக்கிறாள். நாவலை வாசிக்கும் போது இது நெருடலாக கூட இருக்கலாம். அவள் ஏன் அவ்வளவு உதவிகளை அவனுக்கு செய்ய வேண்டும்! ஆனால் திரைக்கதையில் அதற்கான காரணத்தை அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்கள். ‘I owe your brother’ என்கிறாள். ஹீரோவின் அண்ணன் அவளுக்கு செய்த உதவிக்கு பிரதி உபகாரமாக தான் அவள் ஹீரோவிற்கு பக்கபலமாக இருக்கிறாள் எனும் போது கதாப்பாத்திரத்தின் செய்கையின் மீது நம்பகத்தன்மை கூடுகிறது. இங்கே இது ஒரே ஒரு வசனத்தின் மூலம் சாத்தியமாகி இருக்கிறது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். 

இரண்டாவது எபிசோட் முழுக்க லோரேனா ஒர்டிஸ் பற்றியது. ஒரு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொள்கிறாள். அந்த வழக்கு லோரேனாவிடம் வருகிறது. உடற்கூராய்வில் அந்த கன்னியாஸ்திரி செயற்கை மார்பகம் பொருத்தி இருப்பது தெரிகிறது. மேலும் அவள் இறப்பதற்கு முன்பு உடலுறவு கொண்டிருக்கிறாள் என்றும் தெரிகிறது. விசாரணையில் அந்த கன்னியாஸ்திரி இறந்த இரவில் அவள் அறைக்குள் யாரோ ஒரு பெண்மணி சென்றதை கவனித்ததாக அந்தப் பள்ளி விடுதியின் மாணவி ஒருத்தி சொல்கிறாள். இதெல்லாம் லோரேனாவிற்கு கன்னியாஸ்த்திரியின் மீதும் அவளது மரணத்தின் மீது வலுவான சந்தேகம் வருவதற்கு  காரணமாக அமைகிறது. அதனாலேயே அவள் வழக்கில் இன்னும் ஆர்வமாக இறங்குகிறாள். ஆனால் இந்த அழுத்தமான காரணங்கள் நாவலில் இல்லை. மேலும் திரைக்கதையில் அவளே இறங்கி எல்லாவற்றையும் துப்பறிகிறாள். நாவலில் சில விஷயங்கள் அவளுக்கு செய்தியாக சொல்லப்படுகிறது. உதாரணமாக, நாவலில், செயற்கை மார்பகத்தில் இருந்த சீரியல் நம்பரை கொண்டு அது எந்த நிறுவனத்துடையது என்பதை விசாரித்துவிட்டதாக லோரேனாவின் சக அதிகாரி சொல்கிறான். அந்த நிறுவனத்திடம் பேசிவிட்டதாகவும் சொல்கிறான். பின்பு அவள் அந்த நிறுவனத்தை தேடிச் செல்கிறாள். திரைக்கதையில் இப்படி கதையை சுற்றி வளைப்பது சிறப்பான உத்தி அல்ல. நேரடியாக நம்முடைய பிரதான கதாப்பாத்திரமே முக்கியமான வேலைகளை செய்ய வேண்டும். அதுவே நல்ல உத்தி (The silence of the white city கட்டுரையில் இதைப் பற்றி விவாதித்து இருக்கிறோம்)

நாவலில் மாட் ஹண்ட்டரின் அண்ணி வீட்டருகே அவனுடைய பள்ளிக்கால நண்பன் ஹுகோ வசிக்கிறான். அவன் ஒரு போலீஸ் அதிகாரி. அவன் மாட்டை காணும் போதெல்லாம், ‘முன்னாள் குற்றவாளி’ என்று சொல்லி சொல்லி வம்பிழுக்கிறான். மேட்டை பற்றி லாரனிடம் (லோரேனா) தவறாக சொல்பவனாகவும் இருக்கிறான். ஆனால் அவன் அப்படி நடந்து கொள்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லை. தன் சமூகத்தை காக்க நினைக்கும் சாமானியன் அவன், அதனால் தான் அவன் முன்னாள் குற்றவாளியான மாட் மீது சந்தேகப் படுகிறான் என்று நாவலாசிரியர் வர்ணிக்கிறார். ஆனால் இந்த பாத்திரத்தை திரைக்கதையில் வேறு மாதிரி வடிவமைத்து இருக்கிறார்கள். தொடக்கத்தில் பார்ட்டியில் மாட் மற்றும் அவன் அண்ணனை முதலில் சண்டைக்கு இழுக்கும் பாத்திரம் ஹுகோ தான். அவனால் தான் மாட் ஜெயிலுக்கு போகிறான். இதன் மூலம் இளம் வயதிலிருந்தே அவனுக்கு மாட்  மீது வன்மம் இருக்கிறது என்பதை உணர்த்தி விடுகிறார்கள். இப்போது மாட் மீண்டும் அந்த ஏரியாவிற்கு வரும் போது, அவன் மாட்டை சிக்க வைக்க எல்லா வேலைகளையும் செய்கிறான். இதை மாட்டால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனைப் போட்டு அடிக்கிறான். இதனால் கோபமடையும் ஹுகோ லோரேனாவிடம்  மேட் தான் குற்றவாளியாக இருக்கக் கூடும் என்று சொல்கிறான். இப்போது ஹுகோவின் செயலுக்கு நியாயமான காரணம் கிடைத்துவிட்டது அல்லவா! 

ஒரு வகையில் மாட் மற்றும் லோரேனாவின் கதை ஹீரோ ஆண்டி ஹீரோ கதை போல தான். ஒரு விசாரணை அதிகாரியாக, லோரேனாவை பொருத்தவரை, மாட் சந்தேகத்துக்குறியவன். ஒரு அப்பாவியாக, மாட்டை பொறுத்தவரை லோரேனா அவனை அடக்க நினைக்கும் அதிகாரம். இதுபோன்ற கதைகளில், எதிரெதிர் பாத்திரங்கள் குறைந்தது இரண்டு மூன்று முறையாவது சந்தித்துக் கொள்ள வேண்டும், அப்படி சந்திக்கும் இடம் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும் என்று ஆக்சன் திரைக்கதைகளைப் பற்றி பேசும் போது திரைக்கதையாசிரியர் வில்லியம் மார்ட்டல் சொல்கிறார். இங்கே இரண்டாவது எபிசோடில் முடிவில் தான் முதன்முதலில்  மாட் லோரேனாவை எதிர்கொள்கிறான். இந்த confrontation மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது. நாவலில் கன்னியாஸ்திரியின் மரணத்தை விசாரிக்கும் லோரேனாவுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது. அது அவளை மாட்டின் அண்ணி வீட்டிற்கு இட்டுச்  செல்கிறது. அவள் மாட்டின் அண்ணியிடம் விசாரிக்கிறாள். ஆனால் பெரிதாக எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அவள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, அவளை எதிர்கொள்ளும் ஹுகோ, இவளுடைய கொழுந்தன் தான் மாட் எனும் முன்னாள் குற்றவாளி என்றெல்லாம் சொல்கிறான். நாவலாக மட்டுமே இத்தகைய உத்திகள் எடுபடும். 

திரைக்கதையில் லோரேனா மாட்டின் அண்ணி வீட்டிற்கு வரும் போது  மாட் அங்கு தான் இருக்கிறான். லோரேனா அவனையே நேரடியாக விசாரிக்கிறான். கதையின் ஓட்டத்தில், மாட் உண்மையை மறைத்திருக்கிறான் என்பதை  கண்டு கொள்ளும் போது அவளுக்கு அவன் மீது சந்தேகம் வலுக்கிறது. அவனை எப்படியாவது குற்றவாளி என்று நிரூபித்துவிட வேண்டும் என்று அவள் முயல்கிறாள். ஆனால் அவன் சிக்காமல் தப்பித்துக் கொள்கிறான். அல்லது அவனை சிக்க வைக்கும் அளவிற்கு அவளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காமல் போகிறது. இதெல்லாம் திரைக்கதைக்கு சுவாரஸ்யமான cat and mouse கோணத்தை கொடுக்கிறது. 

நாவலில் ஒரு கட்டத்தில் FBI அதிகாரி ஆதாம் யேட்ஸ் அறிமுகமாகிறார். (நாவல் அமெரிக்காவில் நிகழ்வதால் அவர் FBI அதிகாரி. இணையத் தொடர் ஸ்பெயினில் நிகழ்வதால் அவர் Special Crime Unit-ஐ சேர்ந்த அதிகாரியாக வருகிறார்). அவர் அறிமுகம் ஆகும் போதே, அவருடைய எண்ண ஓட்டங்களில் இருக்கும் சலனம் வெளிப்படுகிறது. இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த பெயர், புகழ், குடும்பம் எல்லாம் சிதைந்து போய் விடுமோ என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றுகிறது. இங்கிருந்தே அந்த கதாப்பாத்திரத்தின் மீது சந்தேகம் வர தொடங்குகிறது. இப்படி உன்மையை முன்கூட்டியே போட்டு உடைப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது? அப்படி முன் கூட்டியே ஒருவன் பசும்தோள் போற்றிய புலி என்று காண்பிக்கிறோம் என்றால், அவனால் மற்றவர்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழ்ந்துவிடுமா என்ற கேள்வி எழும்படி கதையை நகர்த்த வேண்டும். நாவல் அப்படி அமைந்திருக்கவில்லை.  

ஆனால் திரைக்கதையில் ஒரு புத்திசாலித்தனமான மாற்றத்தை செய்திருக்கிறார்கள். ஆரமப்த்திலிருந்தே ஆதாம் யேட்ஸ் பாத்திரத்தை (திரைக்கதையில் அவர் பெயர் தியோ) நியூட்ரலான பாத்திரமாக காண்பிக்கிறார்கள். அவருடைய உண்மை முகத்தை எதிர்பாராத நேரத்தில் ஒலிவியா கதாப்பாத்திரத்தின் மூலம் தெரியப்படுத்தி இருப்பார்கள். அது வெளிப்படும் இடமும் அருமையான ‘ட்விஸ்ட்’-ஆக அமைந்திருக்கும். இதெல்லாம் தான் திரைக்கதையாசிரியர்களின் மெனக்கெடல்.

மேலும் நாவலில் ஆதாம் கதாப்பாத்திரம் வந்ததுமே, லாரன் (லோரேனா) அவரோடு இணைந்து கொள்கிறாள். அவரோடு  சேர்ந்து துப்பறிகிறாள். ஒரு கட்டத்தில் அவர் அவளை வெளியேற்றப்  பார்க்கிறார். அந்த  வழக்கில் பணியாற்றினால் போதும் என்பதால் அவரது நிபந்தனைக்கு  கட்டுப்பட்டு தன் பணியை தொடர்கிறாள். நாவலில் அவள் கதாப்பாத்திரம் submissive-ஆக வெளிப்படுகிறது. ஆனால் இணையத்தொடரில் அப்படி இல்லை. கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்டிருக்கிறாள் என்று கண்டுகொண்டதும், அவள் அந்த வழக்கிற்காகவே தன்னை அற்பணிக்கிறாள். அந்த வழக்கு Special Crime Unit-யிடம் சென்றாலும் அவள் விட்டுக் கொடுப்பதாக இல்லை. தன் மேலதிகாரியை எதிர்த்துக் கொண்டு தன்னிச்சையாக வழக்கை துப்பறிக்கிறாள். இங்கே ஆதாம் பாத்திரம் லொரெனாவுக்கு ஒரு external conflict-ஆக விளங்குகிறது. அவரை ஜெயிப்பது அவளுடைய நோக்கமாகிறது. மேலும் கதையில் அவளுக்கு  internal conflict-டும் இருக்கிறது. அவளுடைய சிறுவயதிலேயே அவள் தந்தை தற்கொலை செய்து கொள்கிறார். இந்த பாதிப்பு அவளை உருத்திக் கொண்டே இருக்கிறது. (ஆனால் திரைக்கதையை விட நாவலில் இந்த அகப்போராட்டம் நிறைவையான புள்ளியை எட்டுகிறது). இது போல நம் பிரதான பாத்திரத்திற்கு அகப் போராட்டமும், புறப் பிரச்சனையும் இருக்கும் போது திரைக்கதை மேலும் சுவாரஸ்யமாகிறது. 

திரைக்கதையில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டியது அவசியம். நாம் முந்தைய கட்டுரைகளில் பேசியது போல, கதை சொல்லலில் நாவலுக்கென்று ஒரு சுதந்திரம் இருக்கிறது. நாம் எவ்வளவு பாத்திரங்களையும் நாவலில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் திரைக்கதையில் பாத்திரங்களின் இருப்பை, அவர்கள் கதைக்கு என்ன பங்களிப்பு செய்யப் போகிறார்கள் என்ற கேள்வி தான் முடிவு செய்ய போகிறது. நாவலில், சோனியா என்றொரு முக்கிய பாத்திரம்  உண்டு. நாயகனால் கொல்லப்படும் இளைஞனின் அம்மா அவள். அவளுக்கும் நாயகனுக்கும் ஒரு எமோஷனல் உறவு உருவாகிறது. ஆனால் அந்த கதை நாவலின் மூலக்கதையிலிருந்து விலகி நிற்கிறது. திரைக்கதையில் அவள் ஒரு வங்கி அதிகாரியாக வருகிறாள். தன் மனைவி எங்கிருக்கிறான் என்பதை கண்டுகொள்ள, நாயகன் அவளுடைய க்ரெடிட் கார்டை டிராக் செய்யும் படி சோனியாவிடம் கூறுகிறான். இப்படி  திரைக்கதையில் ஒரு சிறு மாற்றத்தை செய்து அவளையும் ஹீரோவிற்கு உதவும் பாதத்திரமாக மாற்றி இருக்கிறார்கள். ஹீரோ ஒரு அப்பாவி என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவளாக அவள் இருக்கிறாள். நாவலை விட, திரைக்கதையில் நாயகனுக்கும் அவனுக்குமான உறவில் முழுமையை காண முடிகிறது. 

திரைக்கதையில் இன்னும் பல குறிப்பிடத் தகுந்த மாற்றங்கள் உண்டு. நாவலில், கண்ணியாஸ்த்திரியின் மரணத்தை விசாரிக்கும் FBI அதிகாரிகளின் கவனம் ஒரு கட்டத்தில் மாட்டின் பக்கம் திரும்புகிறது. அதற்கு பெரிய காரணங்கள் இல்லை. ஆனால் திரைக்கதையில், மாட் இருந்த ஜெயிலில் தான் ஸ்பெசல் க்ரைம் யூனிட் தேடிக்கொண்டிருக்கும் அனிபால் இருந்தான், எனவே இருவருக்கும் ஏதோ தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று கதையை அமைத்து இரண்டு கதைகளையும் நம்பும்படி இணைத்திருக்கிறார்கள். 

மேலும் திரைக்கதையில் மாட்டை ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்திற்கு இடமானவனாகவே சித்தரித்த்து இருக்கிறார்கள். அவன் ஏதோ ஒரு உண்மையை மறைத்து கொண்டே இருக்கிறான். இந்த சித்தரிப்பிற்கு உதவும் வகையில் அவனுடைய சிறை வாழ்க்கையை காண்பித்து, அவன் சிறையில் ஒருவனை கொன்றிருக்கிறான் என்ற கிளைக்கதையை வைத்து, ஒருவேளை இவன் தான் எல்லாவற்றையும் செய்கிறானோ என்ற கேள்வியை உருவாக்குகிறார்கள். நாவல் அப்படி எழுதப்பட்டிருக்கவில்லை. த்ரில்லர் கதைகளில், யார் குற்றவாளியாக இருக்கக்கூடும் அல்லது எதனால் குற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பன போன்ற தொடர் கேள்விகள் பார்வையாளர் மனதில் எழும் வகையில் திரைக்கதை அமைக்க வேண்டும். பார்வையாளர்களை தொடர்ந்து யூகிக்க வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே சிறப்பான உத்தி. அந்த உத்தி இந்த இணைத் தொடரில் சிறப்பாக கைகூடி இருக்கிறது.   

The Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

உலக அளவில் ஸ்பானிய மொழியில் நல்ல த்ரில்லர் படங்கள் எடுக்கப்படுவது  போலவே, அங்கே மிகச்சிறப்பான திரில்லர் நாவல்களும் எழுதப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான ஸ்பானிஷ் நாவல்களின் வரிசையில் Eva Garcia Saenz எழுதிய Silence of the White City  (ஆங்கிலத்தில், Nick Caistor) நாவலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. Silence of the lambs கதையில் வருவது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாணியில் ஒரு குற்றச்செயல் (கொலை) மீண்டும் நடக்க, ஜெயிலில் இருக்கும் பழைய குற்றவாளியை பிரதான கதாபாத்திரம் தேடிச் செல்கிறது என்ற ஒற்றை வரி தான் இந்த நாவலும். மற்றபடி இது முற்றிலும் மாறுப்பட்ட கதைதான். பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவலுக்கு கொஞ்சம் கூட நியாயம் செய்யாத வகையில் தான் இதன் திரையாக்கம் அமைந்திருக்கிறது.  நாவலோடு ஒப்பிடுகையில் திரைக்கதையில் பெரும் குழப்பமும், சுவாரஸ்ய குறைவும் இருப்பதை எளிதில் கண்டுகொள்ள முடியும். 

நாவல் முழுக்க முழுக்க First Person POV-யில் அமைந்திருக்கிறது. கதையின் நாயகன் நாற்பது வயதான ஒரு போலீஸ் அதிகாரி. குண்டடிபட்டு மருத்துவமனையில் இருப்பவன் நமக்கு கதை சொல்ல தொடங்குகிறான். அவன் நீண்டதொரு விடுப்பிற்கு பிறகு வேலைக்கு திரும்பி வரும் நேரத்தில் அந்த ஊரில் நடக்கும் இரட்டை கொலையோடு கதை தொடங்குகிறது. கொலை செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் ஒரு பழைய தேவாலயத்தின் நிலவறையில்  கிடைக்கிறது. இருபது வயது நிரம்பிய அந்த ஆணும் பெண்ணும் அருகருகே வைக்கப்பட்டிருக்கும் விதத்தில் ஒரு  குறியீடு இருப்பதை நாயகன் கவனிக்கிறான். இந்த கொலையும், பிணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த தொடர் கொலைகளை அவனுக்கு நினைவு படுத்துகிறது. ஆனால் அந்த தொடர் கொலைகளை செய்த டாசியோ ஆயுள் தண்டனை பெற்று இருபது ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறான். அப்படியெனில் இந்த கொலைகளை செய்வது வேறு யாரோவா அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பே செய்யாத கொலைக்காக டாசியோ சிறையில் அடைக்கப்பட்டானா என்று நாயகன் குழம்புகிறான். பின் எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறான் என்பதே கதை. 

இது சுவாரஸ்யமான ஒன்லைன் தான். ஆனால் சினிமாவாக மாறும் போது எங்கு சறுக்குகிறது?

பொதுவாகவே நாவலை சினிமாவாக எழுதும் போது அதீத துரிததன்மையை திரைக்கதையில் புகுத்தக் கூடாது. இந்த திரைக்கதையின் பெரும் சிக்கல் அதுதான். அடுத்தடுத்து என்று காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஆனால் அந்த காட்சிகள் நம்முள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. காட்சியின் வேகம் என்பது அந்த காட்சியின் நீளத்தை பொறுத்தது அல்ல. அதாவது காட்சிகள் குறைந்த நீளத்தில், மாண்டேஜ்கள் போல் அடுத்து அடுத்து வருவதனால் மட்டுமே அந்த படத்தை வேகமான படம் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இடைவெளி அதிகம் இருப்பதனால் அதை சுவாரஸ்யமற்ற படம் என்றும் சொல்லிட முடியாது. இங்கே கவனிக்கவேண்டியது, ஒவ்வொரு காட்சியிலும் கதை முன்னோக்கி நகர்கிறதா என்பதை மட்டும் தான். அத்தகைய யதார்த்தமான, முன்னோக்கிய நகர்வை சாத்தியப்படுத்த எவ்வளவு அவகாசம் தேவையோ அதை ஒரு காட்சிக்கு கொடுக்க வேண்டும். 

இந்த படத்தில் நாயகன் சஸ்பெக்ட் ஒருவனை தேடிச் செல்கிறான். கதையை வேகப் படுத்த அங்கே சேசிங் காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால் நாவலில் சேசிங் காட்சி இல்லை. அதில் நாயகன் சஸ்பெக்ட்டை எப்படி அணுகுகிறான், பின் தொடர்கிறான் என்பது  நிதானமாக சொல்லப் பட்டிருக்கும்.  அவன் மனோதத்துவம்  படித்தவன். எனவே சஸ்பெக்ட் ஏன் குற்றவாளியாக இருக்க முடியாது என்பதை விளக்குகிறான். தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவனை விசாரிக்கிறான். இப்படி நாவலில் அந்த சஸ்பெக்ட் குற்றவாளி இல்லை என்ற நாயகன் ஒரு முடிவை எடுப்பதற்கான நியாயமான உந்துதல்கள் நாவலின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. 

ஆனால் படத்தில் சேசிங் காட்சி பொருந்தாமல் நிற்க்கிறது. நாயகன் சஸ்பெக்ட்டை பார்க்கிறான். சஸ்பெக்ட் தப்பிக்க முயல, நாயகன் அவனை  துரத்திச் சென்று பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, பின் நாயகனே சஸ்பெக்ட் குற்றவாளியாக இருக்க முடியாது என்று சொல்லி அவனை வெளியே விடுகிறான். இடைப்பட்ட நேரத்தில் பெரிய விசாரணை எதுவும் இல்லை. சினிமாவிற்கான செய்த ஒரு சிறுமாற்றம் நெருடலாகவும், கட்சிகளின் நம்பகத்தன்மையை குறைப்பதாகவும் இருக்கிறது அல்லவா? எனவே தான் காட்சிகளை தேவையில்லாமல் துரிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நாவல் சினிமாவாக மாறும் போது எந்த கதாப்பாத்திரங்களை வைத்துக் கொள்வது, அல்லது எதை நீக்குவது,  நாவலில் வரும் பாத்திரத்திற்கு திரைக்கதையில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்ற புரிதல் தான் ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு முக்கியம். இதற்கு முந்தைய கட்டுரைகளிலும் இதைப் பற்றி பேசி இருக்கிறோம். இந்த நாவலில் நாயகனின் தம்பியின் காதலி புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறாள். அவளை பற்றிய விவரணைகள் அவளை மிக முக்கியமான பாத்திரமாக மாற்றுகிறது. அவளும் நம் மனதில் பதிந்து போகிறாள். பின் மீண்டும் கதையின் முக்கியமான, எமோஷனலான ஒரு தருணத்தில் அந்த பெண்மணி வருகிறாள். நாயகனை அசைத்துப் பார்க்கும் தருணம் அது. 

திரைக்கதையில் அந்த பாத்திரத்தை முதலில் ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறாள். ‘நான் இப்போது குணாமாகிட்டேன்’ என்ற ஒற்றைவரியை மட்டும் அவள் பேசுகிறாள். நாவலை படித்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வசனத்தின் அர்த்தம் புரியும். பின்பு படத்தின்  முக்கியமான இடத்தில் அந்த  பாத்திரம் மீண்டும் வருகிறது. ஆனால் நாவலில் ஏற்பட்ட எந்தவொரு எமோஷனல் தொடர்பும் படத்தில் நமக்கு ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த கதாப்பாத்திரம் முக்கியமற்ற வகையில்  வடிவமைக்க பட்டிருப்பதுதான். நாவலில் இருக்கும் எல்லா கதாப்பாத்திரங்களையும் காட்சிகளையும் திரைக்கதையில் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தையோ காட்சியையோ திரைக்கதையில் கொண்டு வருகின்றோமெனில் அதற்கான அவகாசத்தை கொடுக்க வேண்டும்.

இந்த நாவலில் கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸை இறுதி வரை தக்க வைத்திருப்பார்கள். இறுதியில் தான் அவன் யார் என்றே நமக்கு தெரியும். ஆனால் படத்தில் கதை ஆரம்பித்து சில மணி நேரங்களிலேயே கொலைகாரனின் முகத்தை காட்டிவிடுகிறார்கள். துப்பறியும் படங்களில் யார் கொலைகாரன் என்பதை விட எதற்காக கொலை செய்கிறான் (Whydunit)  என்பதே முக்கியமான விஷயம். அதனால் கொலைகாரன் யார் என்று முன்னரே சொல்லிவிடுவது கூட சிக்கல் இல்லை. ஆனால் நாயகன் எப்படி அந்த கொலைகாரனை நெருங்குகிறான் என்பது தான் திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்லப்படவில்லை. அந்த சுவாரஸ்ய குறைவிற்கு முக்கிய காரணம் கதை சொல்லப்பட்ட விதம் தான். முன் சொன்னது போல இந்த நாவலின் கதையை நாயகன்தான் நமக்கு சொல்கிறான். இடையிடையே மட்டும் ஒரு பணக்கார பெண்மணியைப் பற்றிய பிளாஷ்பேக் கதை கிளைக் கதையாக சொல்லப் படுகிறது. இறுதியாக கொலைகாரன் யார் என்ற உண்மையை உணர்த்த அந்த பிளாஷ்பேக்கதை பயன்படுகிறது. நாவலின் பலமே அதன் பிரதான கதை முழுக்க நாயகனின் கோணத்தில் அமைந்திருப்பது தான். திரைக்கதையில் அந்த கோணம் மாறிப்போகிறது. எனவே தான் கொலைக்கான காரணம் விவரிக்கப் படும் போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதை இன்னும் விரிவாக பேசலாம். 

யதார்த்த வாழ்வில் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கை துப்பறிகிறார் என்று எடுத்து கொள்வோம். எல்லா விஷயங்களையும் அவரே செய்ய மாட்டார்தான். சில விசாரணைகளை சக அதிகாரிகளோ, அவருக்கு கீழ் இருக்கும் போலீஸ்காரர்களோ செய்யக்கூடும். இதை நாவலாக எழுதலாம். அது நாவலுக்கான சுதந்திரம். ஆனால் சினிமாவென்று வரும் போது, இந்த எல்லா வேலைகளையும் பிரதான கதாப்பாத்திரம் செய்வது தான் சிறந்த உத்தி. அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின்தொடர முடியும். இந்த உத்தி நாவலில் கட்சிதமாக பொருந்திவிட்டது தான் நாவலின் பலம். ஆனால் படத்தில் நிறைய விஷயங்கள் நாயகனுக்கு செய்தியாக மட்டுமே வந்து சேர்க்கிறது. 

நாயகன் ஒருவரை விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, அவனுடைய தோழியும் சக அதிகாரியுமான எஸ்டி, ஒரு முக்கியமான விசாரணையை தான் மேற்கொண்டுவிட்டதாக சொல்கிறாள். அதிலிருந்து தனக்கு என்ன துப்பு கிடைத்தது என்று சொல்கிறாள். 

நாவலில் இந்த விசாரணையையும் நாயகன் தான் மேற்கொள்வான். அவன் ஜெயிலிலிருக்கும் டசியோவிற்கும், அவனுடைய சகோதரனான இஃனாசியோவிற்கும் தெரிந்த பெண்மணியை விசாரிக்கிறான். அவளிடம் பல முறை உரையாடிவிட்ட பின்பு தான் இறுதியாக அவள் ஒரு உண்மையை சொல்கிறாள். அது கதையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துகிறது. இந்த முக்கியமான தருணம் ஒரே ஒரு ஷாட்டாக படத்தில் சொல்லப்படுகிறது. இதுவே திரைக்கதையின் பலவீனம். 

நாவலுக்கான சுதந்திரம் என்பதை பற்றி முந்தைய கட்டுரைகளில் பேசும்போது நாவலில் ஒரு கதையை நிறுத்திவிட்டு, வேறொரு கதையை சொல்லலாம் என்று பேசி இருந்தோம். இந்த நாவலிலும் ஒரு பணக்கார பெண்மணியை பற்றிய பிளாஷ்பேக் வருகிறது அல்லவா? அது மிக முக்கியமான கதை. இந்திரா சௌந்தரராஜன் கதைகளில், ‘அன்று’ ‘இன்று’ என இரண்டு பகுதிகளாக கதை நகர்வது போல, இதில் அந்த பிளாஷ்பேக் கதை ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப் படுகிறது. இந்த படத்தில் அப்படி சொல்வதற்கான சுதந்திரமும் அவகாசமும் இல்லை என்பதால் திடீரென்று நாயகனின் தாத்தா, அவனுடைய கோப்புகளில் அந்த பெண்மணியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவளை பற்றிய கதையை சொல்கிறார். இதுவும் திரைக்கதையில் குறிப்பிடத்தப்படவேண்டிய சிக்கல். பல க்ரைம் கதைகளில் நாம் காணும் சிக்கலும் கூட. 

மிக அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் கூட இந்த சிக்கலை கவனிக்கலாம். நவம்பர் ஸ்டோரி சுவாரஸ்யமான சீரிஸ் தான். ஆனால் பிளாஷ்பேக் காட்சியும் , அல்லது ஏன் கொலை நடந்தது என்ற உண்மையும் கதைக்கு அதிக முக்கியமில்லா ஒருவரின் கோணத்தில் சொல்லப் படுகிறது. துப்பறியும் கதைகளில், பார்வையாளர்கள் சொல்லப்படப் போகும் உண்மைக்காக தான் காத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உண்மையை உடைக்கும் இடமும், விதமும் நம்பும்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தகுந்த வரையிலும் இருத்தல் அவசியம். அந்த உண்மையை அதுவரை நாம் பின்தொடரும் கதாப்பாத்திரத்தின் மூலம் சொல்வதும், அவர்களை சொல்ல வைக்கும் சூழ்நிலையை கதையில் உருவாக்குவதும் தான் மிகமிக முக்கியம். 

Silence of the White City  நாவல் மிகவும் அடர்த்தியான ஒன்று. அது இரண்டு மணிநேரத்தில் சொல்லிவிடக் கூடிய கதை அல்ல. அதை சுருக்கமாக சொல்ல முயன்றது கூட இந்த திரைக்கதையின் சுவாரஸ்யக் குறைவிற்கு காரணமாக இருக்கலாம். எனினும் நாவலையும் திரைக்கதையையும் ஒப்பிட்டு பார்ப்பது நல்லதொரு திரைக்கதை பயிற்சியாக இருக்கும்.  

 

The Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

The Invisible Guardian- நாவல் திரையாக்கம் கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

Baztan Triology:  இது ஸ்பானிய எழுத்தாளர் டொலாரஸ் ருடாண்டோ (Dolores Redondo)  மூன்று பகுதிகளாக எழுதிய (அமானுஷ்ய) க்ரைம் நாவல் (ஆங்கில மொழிபெயர்ப்பு: Isabelle Kaufeler). The Invisible Guardian, The Legacy of the bones மற்றும் Offering of the storm  ஆகிய நாவல்களை அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 

The Invisible Guardian நாவலின் கதை சுருக்கம் இது தான். அமையா சலாசார், அமெரிக்காவின் FBI-யிடம் பயிற்சி பெற்ற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். குழந்தை இல்லை என்பதே அவளுடைய பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அந்த நேரத்தில் ஊரில் இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டு காடு, நதி என பல இடங்களில் பிணமாக கிடைக்கிறார்கள். இந்த ஒற்றைவரி, வழக்கமான ஒரு க்ரைம் கதையாக தெரிந்தாலும், நாவலின் வர்ணனை அதை சுவாரஸ்யமான கதையாக மாற்றி இருக்கிறது. ஸ்பெயினின் பகுதிகளை அதன் இயற்கை வளங்களை விவரிக்கும் வகையில் இதன் வர்ணனை அமைந்திருக்கிறது. இந்த வர்ணனைகளே நாவலுக்கு ஒரு தனித்துவமான பிராந்திய தன்மையை கொடுக்கிறது. நாவல் சுமார் ஐநூறு பக்கங்களில் நிதானமாக நகர்கிறது. இந்த நிதானம் தான் நாவலின் பலமாகவும்  இருக்கிறது. 

ஆனால் சினிமாவில் நாவலில் இருக்கும் நிதானம் சாத்தியமில்லை. இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்ல வேண்டும். அதே நேரத்தில் திரைக்கதையை  தேவை இல்லாமல் துரிதப்படுத்தவும் கூடாது. ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது, தேவைக்கு அதிகமான வேகத்தை திரைக்கதையில் கொடுத்துவிடக் கூடாது என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும். திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் சொல்லிட வேண்டும் என்று அடுத்தடுத்து காட்சிகளை அடிக்கிக் கொண்டு போனால், பார்வையாளர்களுக்கு திருப்தி ஏற்படாது. ஆனால், Baztan Triology-யின் திரை வடிவத்தின் முதல் பகுதியில் (The Invisible Guardian) இந்த பிரச்சனை இருக்கிறது. நிறைய விஷயங்கள் துரித கதியில் நகர்கின்றன.  நாவலின் பல கிளைக்கதைகளை திரைக்கதையில் கொண்டு வர முயற்சித்ததே அதற்கு காரணம். 

எந்தவகையான துப்பறியும் கதையாக இருந்தாலும், நாயகன் ஏதோ ஒரு உண்மையை தான் தேடிக் கொண்டு இருக்கிறான். கொலை செய்தது யார், காணாமல் போனது யார் என அந்த உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாயகன் அந்த உண்மையை கண்டடையும் பாதை எவ்வளவு சுவராஸ்யமானதாக இருக்கிறதோ அவ்வளவு சுவராஸ்யமாக (கதை) திரைக்கதை இருக்கும்.  இந்த படத்தில், அந்த பாதை பல இடங்களில் மிக பரிச்சியமான ஒன்றாக இருப்பதால் சுவராஸ்யம் குறைகிறது. அதே சமயத்தில் திரைக்கதைக்கான புத்திசாலித்தனமான மாற்றங்கள் இந்த கதையில் உண்டு.  நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை பற்றிய பகுதிகள் எதுவுமே நாவலை முன்னோக்கி நகர்த்துவதாக இல்லை. இதுபோன்ற ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் போது முக்கியமற்ற பாத்திரங்களை நீக்கிவிட வேண்டும்.  நாவலில் நிறைய கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நடந்தாலும், இயன்றவரை (சினிமாவிற்கான) திரைக்கதையில் முக்கிய பாத்திரங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம். அதிகம் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட முக்கியமான தருணம் ஏதாவது நாவலில் இருந்தால் அதை திரைக்கதையில் வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்த முடியுமா என்று யோசிக்கலாம். 

உதாரணமாக ஒரு காட்சி. ஆனி என்ற பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறாள்.  நாயகி அந்த வழக்கை விசாரிக்கிறாள். இறந்து போன ஆனியின் அரூப உருவம் நாயகியின் இரண்டாவது அக்காவின் முன்பு தோன்றி அவளை பயமுறுத்துகிறது. அதெல்லாம் கற்பனை என்று நாயகி தன் அக்காவிற்கு தைரியம் சொல்கிறாள். இது நாவல். 

படத்தில், இதை வேறுமாதிரி மாற்றி இருக்கிறார்கள். நாயகி வழக்கை விசாரித்து விட்டு வீட்டுக்கு வருகிறாள். அந்த வழக்கு அவளுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் அந்த இரவில், அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள். ஜன்னல் வெளியே எதர்ச்சையாக பார்க்கும் போது ஆனியின் அரூப உருவம் நாயகியை பார்த்துக் கொண்டே இருக்கிறது. நாயகி பதறியடித்துக் கொண்டு அவளை நோக்கி ஓடுகிறாள். 

அதாவது நாவலில் அக்காவிற்கு நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவம் படத்தில் நாயகிக்கு நிகழ்கிறது. நம்முடைய பிரதான கதாபாத்திரத்திற்கு ஒரு பிரச்சனை வரும் போது அது பார்வையாளர்களை அதிகம் பாதிக்கிறது. படத்தில் நாயகி இரண்டாவது அக்காவிற்கு அதிக முக்கியத்துவம் இல்லை. முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு திரைக்கதையில் அவகாசமும் இல்லை. எனவே தான் இது போன்ற மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். 

நாவலிலேயே கதை சொல்லலில் குறிபிட்டு சொல்லும்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. கதையின் முதல் காட்சியில் ஒரு தடயம் கிடைக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் ஒரு பிஸ்கட் கிடைக்கிறது. இதற்கான விடையை நாவல் முடியும் தருவாயில் தான் நாயகி தேடுகிறாள். நாவலாகவே இருந்தாலும், க்ரைம் கதையில் இது  வாசகர்களுக்கு திருப்தி அளிக்காத ஒரு வடிவம் தான். ஒரு தடயம் கிடைக்கும் போது, அதை வைத்து தான் கதை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். அல்லது அந்த தடயத்தை மறக்கடிக்கச் செய்யும் அளவிற்கு வேறொரு நிகழ்வு ஏதாவது நிகழ வேண்டும். நாவலாசிரியர் மிக வசதியாக அந்த தடயத்தை மறைத்துவிட்டு வேறொரு திசையில் கதையை நகர்த்துகிறார். சினிமாவில், நாவலில் இருந்த பிரச்சனை இல்லை. அந்த பிஸ்கட் கிடைத்ததுமே அதை வைத்து நாயகி என்ன செய்கிறாள் என்று நேர்கோட்டில் கதையை நகர்த்தி இருக்கிறார்கள். 

நாவலில், நாயகி ஒரு வழக்கை விசாரிக்கிறாள். பின் யாரோ ஒருவர் வேறொரு வழக்கை பற்றி சொல்கிறார். அங்கிருந்து கதை முன்னோக்கி நகர்கிறது. திரைக்கதையில் இந்த உத்தி சுவாரஸ்யத்தை தராது.  இதற்கு முன்னரே சாக்ரட் கேம்ஸ் பற்றிய கட்டுரையில் இதை விவாதித்திருக்கிறோம். ஒரு க்ரைம் திரைக்கதையில் போலீஸ் நாயகனுக்கு ஒரு வழக்கு தான் பிரதானமாக இருக்க முடியும்.  வேறு வழக்கு வந்தாலும், அது மூல வழக்கிற்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டிருப்பதாக இருக்க வேண்டும். 

ஒரு பெரிய க்ரைம் நாவல் எழுதும் போது, ஒரு கொலை வழக்கை ஹீரோ துப்பறிகிறார், வேறொரு ஊரில் வேறொரு கொலை நடக்க, அதை மற்றொரு இன்ஸ்பெக்டர் துப்பறிகிறார் என்று வைக்கலாம். இரண்டு வழக்குகளும் ஒரு கட்டத்தில் இணைகின்றன என்று நாவல் எழுதலாம். ஆனால் அதையே நாம் படமாக எழுதும் போது, படம் ஒரே ஒரு ஹீரோவைப் பற்றியது எனும் போது,  அந்த மற்றொரு வழக்கை துப்பு துலக்குவதிலும் ஹீரோவின் பங்கு அதிகம் இருப்பதாக திரைக்கதை அமைத்தல் வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின் தொடர முடியும். ஆனால்  ஹீரோவிற்கு முக்கியத்துவம் தருவது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அந்த முக்கியத்துவத்தில் நம்பத்தன்மை இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.  

நாவலில், வெவ்வேறு முக்கிய கட்டங்களில், நாயகிக்கு சில நிகழ்வுகளைப் பற்றிய செய்தி மட்டும் போனில் வருகிறது. உடனே நாயகி புறப்பட்டு செல்கிறாள். ஆனால் சினிமாவில் எல்லாவற்றையும் நாயகனே (அல்லது நாயகியே) செய்ய வேண்டி இருக்கிறது. அதன்படி இந்த படத்தில் நாயகியே நேரடியாக எல்லோரையும் விசாரிக்கிறாள். ஆனால் அவளை மட்டுமே முன்னிறுத்தும் கட்டாயத்தில் சில லாஜிக் மீறல்களை செய்திருக்கிறார்கள். 

நாவலில், ஒருவன் தற்கொலைக்கு முயல்கிறான் என்று செய்தி நாயகிக்கு வருகிறது. அவனை மருத்துவமனையில் சென்று சந்திக்கிறாள். ஆனால் படத்தில், அந்த செய்தி வந்ததுமே அவளே போய் அவனை காப்பாற்றுகிறாள். 

இங்கே நம்பகத்தன்மை இல்லாமல் போகிறதல்லவா! இது போன்ற விஷயங்களை திரைக்கதையில் தவிர்த்தல் நலம். சில இடங்களில் நம் நாயகன் பின்தங்கி இருப்பது தவறில்லை. 

பல நேரங்களில் நாம் வாசிக்கும் நாவல்கள் நமக்கு முழுவதுமாக நினைவு இருப்பதை விட, நாவல்களில் இருக்கும் சிறப்பான தருணங்களே அதிகம் நினைவில் இருக்கும். நல்ல தருணங்களின் தொகுப்பே நாவல் எனலாம். இந்த நாவலில் சில நல்ல தருணங்கள் உண்டு.

உதாரணமாக ஒரு தருணம். நாயகி க்ரைம் சீனில் பிணமாக கிடக்கும் பெண்ணை பார்க்கிறாள். அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 

உயிரற்ற உடல் என்றாலும் அதற்கும் ஒரு ‘privacy’ இருக்கிறது. இவ்வளவு போலிஸ்காரர்களும்  பாரன்சிக் ஆட்களும் சுற்றி நின்று கொள்வது இறந்தவர்களுக்கு செய்யும் அவ மரியாதை என்று எண்ணுகிறாள். அவள் ஒரு கேதலிக் என்பதால் அப்படி நினைக்கிறாள் என்று நாவலாசிரியை குறிப்பிடுகிறாள். நாயகியின் நம்பிக்கையை, அவளின் அக உலகை வெளிப்படுத்தும்  இடம் இது. ஆனால் இந்த தருணம் படத்தில் இல்லை. இது போன்று நம் கதை மாந்தர்களின் அக உணர்வுகளை சொல்ல நாம் வசனங்களை பயன்படுத்தலாம். (True Detective போன்ற சீரிஸின் வெற்றி அதன் வசனங்கள் தான் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு துப்பறியும் கதையாக அது மிக எளிமையான கதை தான். ஆனால் அதன் நாயகன் Rust Cohle பாத்திரத்தின் அக உணர்வும், தத்துவங்களும் வசனங்களாக வெளிப்பட்டு தான் அதை ஒரு சிறப்பான தொடராக மாற்றி இருக்கும்) 

நாவலில் ஆலோசியஸ் என்றொரு FBI அதிகாரி பாத்திரம் வருகிறது. கதை இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்போது நாயகி மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பி நிற்கும் போது, தன்னுடைய முன்னாள் அதிகாரியான ஆலோசியஸை போனில் தொடர்பு கொள்கிறாள். அவர் அவளுக்கு சில அறிவுரைகளை சொல்லி, வழக்கை வேறொரு கோணத்தில் இருந்து விசாரிக்க சொல்கிறார். (இந்த கட்டத்தை தான் The Writers Journey புத்தகத்தில் Christopher Vogler ‘Meeting the Mentor’ என்று குறிப்பிடுகிறார்)

ஆனால் இப்படி திடீரென்று திரைக்கதையின் இறுதியில் ஒரு பாத்திரத்தை அறிமுகப் படுத்தக் கூடாது. அது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும்.  இந்த படத்தில், ஆலோசியஸ் ஆரம்பத்திலிருந்தே வருகிறார். நாயகி அவருடன் அவ்வப்போது போனில் பேசுவதாக திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. திரைக்கதையின் இன்னொரு சிறப்பான மாற்றம், காட்சிகளை தொகுத்த விதம்.  நாவலில் இருக்கும் ஏராளமான சீக்வன்ஸை தவிர்த்துவிட்டு திரைக்கதையை நேர்கோட்டில் அமைத்திருக்கிறார்கள். மேலும், நாவலின் இறுதியில் குற்றவாளியை வேறு ஒரு கதாப்பத்திரம் கண்டுபிடிக்கிறது. அதுவும் திடீரென்று அதுவரை மூடி இருந்த மர்மத்திரை விலகுகிறது. படத்தில் அந்த சிக்கல் இல்லை. அதில் கொஞ்சம் கொஞ்சமாக நாயகியே குற்றவாளியை நெருங்குகிறாள். இதுவே திரைக்கதைக்கான உத்தி. ஆதவாது கதை அடுத்த கட்டத்திற்கு செல்வது என்பது யதேச்சையாக நிகழ்ந்ததாக இல்லாமல் ஹீரோவின் முயற்சியில் நிகழ்வதாக திரைக்கதை அமைத்தாலே நலம். 

ஒரு காட்சியில், கொலை நடந்த இடத்தை சுற்றி விலங்கின் முடிகள் கிடைக்கிறது. அது கரடியின் முடி போல் இருப்பதை கண்டுகொள்ளும் போலீசார், கரடிகள் வசிக்காத அந்த காட்டினுள் எப்படி கரடியின் முடி வந்தது என்று யோசிக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு கிட்டும் விடை ‘பாசகாவுன்’ (Basajuan).  பாசகாவுன் என்பது ஸ்பானிய காடுகளை காக்கும் கடவுள். பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றத்தோடு வலம் வரும் ஒரு நல்ல சக்தி. 

நாவல் முழுக்க இந்த பாசகாவுன் பற்றிய நம்பிக்கை வருகிறது. பலரும் அதை பற்றி பல கதைகள் சொல்கிறார்கள். பாசகாவுன் என்று ஒரு சக்தி இல்லை அது கரடி தான் என்று  நாயகி நம்புகிறாள். ஆனால் பாசகாவுன் அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்சி கொடுக்காது, அது நாயகிக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை கொடுக்கவே காட்சி அளித்திருப்பதாக மற்றவர்கள் நம்புகிறார்கள். இறுதியில் இந்த நம்பிக்கை மிக அழகான ஆர்க்காக நாவலில் முடிகிறது. 

ஆனால் படத்தில்  பாசகாவுன்  பற்றிய குறிப்பு ஒரே ஒரு வசனமாக வந்துவிட்டு போகிறது. இந்த பாசகாவுனை பற்றிய குறிப்பை நீக்கி இருந்தாலும் படத்தில் எந்த இழப்பும் இருந்திருக்காது. நாம் முன் சொன்னது போல், நாவலில் இருக்கும் எல்லா முக்கிய கதைகளை படத்தில் வைத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இதை வைத்திருப்பதாக தோன்றுகிறது. The Invisble Guardian- ஒரு சீரியல் கில்லர் நாவலாக இருந்தாலும், இதன் கதை ஒருவகையில் நாயகியின் குடும்பத்தையே சுற்றியே நடக்கிறது என்பதே இந்த நாவலின் சிறப்பம்சம். நாவலை வாசிக்கும் போது, அதன் திரைப்பட வடிவம் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. 

இதன் அடுத்தடுத்த பகுதிகளைப் பற்றி வரும் பகுதிகளில் பேசுவோம். 

தொடரும்…  

தொடர்புடைய கட்டுரைகள்

The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்

சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை