The Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

உலக அளவில் ஸ்பானிய மொழியில் நல்ல த்ரில்லர் படங்கள் எடுக்கப்படுவது  போலவே, அங்கே மிகச்சிறப்பான திரில்லர் நாவல்களும் எழுதப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான ஸ்பானிஷ் நாவல்களின் வரிசையில் Eva Garcia Saenz எழுதிய Silence of the White City  (ஆங்கிலத்தில், Nick Caistor) நாவலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. Silence of the lambs கதையில் வருவது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாணியில் ஒரு குற்றச்செயல் (கொலை) மீண்டும் நடக்க, ஜெயிலில் இருக்கும் பழைய குற்றவாளியை பிரதான கதாபாத்திரம் தேடிச் செல்கிறது என்ற ஒற்றை வரி தான் இந்த நாவலும். மற்றபடி இது முற்றிலும் மாறுப்பட்ட கதைதான். பெரும் வரவேற்பை பெற்ற இந்த நாவலுக்கு கொஞ்சம் கூட நியாயம் செய்யாத வகையில் தான் இதன் திரையாக்கம் அமைந்திருக்கிறது.  நாவலோடு ஒப்பிடுகையில் திரைக்கதையில் பெரும் குழப்பமும், சுவாரஸ்ய குறைவும் இருப்பதை எளிதில் கண்டுகொள்ள முடியும். 

நாவல் முழுக்க முழுக்க First Person POV-யில் அமைந்திருக்கிறது. கதையின் நாயகன் நாற்பது வயதான ஒரு போலீஸ் அதிகாரி. குண்டடிபட்டு மருத்துவமனையில் இருப்பவன் நமக்கு கதை சொல்ல தொடங்குகிறான். அவன் நீண்டதொரு விடுப்பிற்கு பிறகு வேலைக்கு திரும்பி வரும் நேரத்தில் அந்த ஊரில் நடக்கும் இரட்டை கொலையோடு கதை தொடங்குகிறது. கொலை செய்யப்பட்ட ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் ஒரு பழைய தேவாலயத்தின் நிலவறையில்  கிடைக்கிறது. இருபது வயது நிரம்பிய அந்த ஆணும் பெண்ணும் அருகருகே வைக்கப்பட்டிருக்கும் விதத்தில் ஒரு  குறியீடு இருப்பதை நாயகன் கவனிக்கிறான். இந்த கொலையும், பிணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த தொடர் கொலைகளை அவனுக்கு நினைவு படுத்துகிறது. ஆனால் அந்த தொடர் கொலைகளை செய்த டாசியோ ஆயுள் தண்டனை பெற்று இருபது ஆண்டுகளாக ஜெயிலில் இருக்கிறான். அப்படியெனில் இந்த கொலைகளை செய்வது வேறு யாரோவா அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்பே செய்யாத கொலைக்காக டாசியோ சிறையில் அடைக்கப்பட்டானா என்று நாயகன் குழம்புகிறான். பின் எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறான் என்பதே கதை. 

இது சுவாரஸ்யமான ஒன்லைன் தான். ஆனால் சினிமாவாக மாறும் போது எங்கு சறுக்குகிறது?

பொதுவாகவே நாவலை சினிமாவாக எழுதும் போது அதீத துரிததன்மையை திரைக்கதையில் புகுத்தக் கூடாது. இந்த திரைக்கதையின் பெரும் சிக்கல் அதுதான். அடுத்தடுத்து என்று காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகிறார்கள். ஆனால் அந்த காட்சிகள் நம்முள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. காட்சியின் வேகம் என்பது அந்த காட்சியின் நீளத்தை பொறுத்தது அல்ல. அதாவது காட்சிகள் குறைந்த நீளத்தில், மாண்டேஜ்கள் போல் அடுத்து அடுத்து வருவதனால் மட்டுமே அந்த படத்தை வேகமான படம் என்று சொல்லிவிட முடியாது. அதே நேரத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்குமான இடைவெளி அதிகம் இருப்பதனால் அதை சுவாரஸ்யமற்ற படம் என்றும் சொல்லிட முடியாது. இங்கே கவனிக்கவேண்டியது, ஒவ்வொரு காட்சியிலும் கதை முன்னோக்கி நகர்கிறதா என்பதை மட்டும் தான். அத்தகைய யதார்த்தமான, முன்னோக்கிய நகர்வை சாத்தியப்படுத்த எவ்வளவு அவகாசம் தேவையோ அதை ஒரு காட்சிக்கு கொடுக்க வேண்டும். 

இந்த படத்தில் நாயகன் சஸ்பெக்ட் ஒருவனை தேடிச் செல்கிறான். கதையை வேகப் படுத்த அங்கே சேசிங் காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால் நாவலில் சேசிங் காட்சி இல்லை. அதில் நாயகன் சஸ்பெக்ட்டை எப்படி அணுகுகிறான், பின் தொடர்கிறான் என்பது  நிதானமாக சொல்லப் பட்டிருக்கும்.  அவன் மனோதத்துவம்  படித்தவன். எனவே சஸ்பெக்ட் ஏன் குற்றவாளியாக இருக்க முடியாது என்பதை விளக்குகிறான். தன் நம்பிக்கையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அவனை விசாரிக்கிறான். இப்படி நாவலில் அந்த சஸ்பெக்ட் குற்றவாளி இல்லை என்ற நாயகன் ஒரு முடிவை எடுப்பதற்கான நியாயமான உந்துதல்கள் நாவலின் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கிறது. 

ஆனால் படத்தில் சேசிங் காட்சி பொருந்தாமல் நிற்க்கிறது. நாயகன் சஸ்பெக்ட்டை பார்க்கிறான். சஸ்பெக்ட் தப்பிக்க முயல, நாயகன் அவனை  துரத்திச் சென்று பிடித்து, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று, பின் நாயகனே சஸ்பெக்ட் குற்றவாளியாக இருக்க முடியாது என்று சொல்லி அவனை வெளியே விடுகிறான். இடைப்பட்ட நேரத்தில் பெரிய விசாரணை எதுவும் இல்லை. சினிமாவிற்கான செய்த ஒரு சிறுமாற்றம் நெருடலாகவும், கட்சிகளின் நம்பகத்தன்மையை குறைப்பதாகவும் இருக்கிறது அல்லவா? எனவே தான் காட்சிகளை தேவையில்லாமல் துரிதப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

நாவல் சினிமாவாக மாறும் போது எந்த கதாப்பாத்திரங்களை வைத்துக் கொள்வது, அல்லது எதை நீக்குவது,  நாவலில் வரும் பாத்திரத்திற்கு திரைக்கதையில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்ற புரிதல் தான் ஒரு திரைக்கதை ஆசிரியருக்கு முக்கியம். இதற்கு முந்தைய கட்டுரைகளிலும் இதைப் பற்றி பேசி இருக்கிறோம். இந்த நாவலில் நாயகனின் தம்பியின் காதலி புற்றுநோயிலிருந்து மீண்டு வருகிறாள். அவளை பற்றிய விவரணைகள் அவளை மிக முக்கியமான பாத்திரமாக மாற்றுகிறது. அவளும் நம் மனதில் பதிந்து போகிறாள். பின் மீண்டும் கதையின் முக்கியமான, எமோஷனலான ஒரு தருணத்தில் அந்த பெண்மணி வருகிறாள். நாயகனை அசைத்துப் பார்க்கும் தருணம் அது. 

திரைக்கதையில் அந்த பாத்திரத்தை முதலில் ஒரே ஒரு ஷாட்டில் காட்டுகிறாள். ‘நான் இப்போது குணாமாகிட்டேன்’ என்ற ஒற்றைவரியை மட்டும் அவள் பேசுகிறாள். நாவலை படித்தவர்களுக்கு மட்டும் தான் அந்த வசனத்தின் அர்த்தம் புரியும். பின்பு படத்தின்  முக்கியமான இடத்தில் அந்த  பாத்திரம் மீண்டும் வருகிறது. ஆனால் நாவலில் ஏற்பட்ட எந்தவொரு எமோஷனல் தொடர்பும் படத்தில் நமக்கு ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் அந்த கதாப்பாத்திரம் முக்கியமற்ற வகையில்  வடிவமைக்க பட்டிருப்பதுதான். நாவலில் இருக்கும் எல்லா கதாப்பாத்திரங்களையும் காட்சிகளையும் திரைக்கதையில் கொண்டுவர வேண்டிய கட்டாயம் இல்லை. அப்படி முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தையோ காட்சியையோ திரைக்கதையில் கொண்டு வருகின்றோமெனில் அதற்கான அவகாசத்தை கொடுக்க வேண்டும்.

இந்த நாவலில் கொலைகாரன் யார் என்ற சஸ்பென்ஸை இறுதி வரை தக்க வைத்திருப்பார்கள். இறுதியில் தான் அவன் யார் என்றே நமக்கு தெரியும். ஆனால் படத்தில் கதை ஆரம்பித்து சில மணி நேரங்களிலேயே கொலைகாரனின் முகத்தை காட்டிவிடுகிறார்கள். துப்பறியும் படங்களில் யார் கொலைகாரன் என்பதை விட எதற்காக கொலை செய்கிறான் (Whydunit)  என்பதே முக்கியமான விஷயம். அதனால் கொலைகாரன் யார் என்று முன்னரே சொல்லிவிடுவது கூட சிக்கல் இல்லை. ஆனால் நாயகன் எப்படி அந்த கொலைகாரனை நெருங்குகிறான் என்பது தான் திரைக்கதையில் சுவாரஸ்யமாக சொல்லப்படவில்லை. அந்த சுவாரஸ்ய குறைவிற்கு முக்கிய காரணம் கதை சொல்லப்பட்ட விதம் தான். முன் சொன்னது போல இந்த நாவலின் கதையை நாயகன்தான் நமக்கு சொல்கிறான். இடையிடையே மட்டும் ஒரு பணக்கார பெண்மணியைப் பற்றிய பிளாஷ்பேக் கதை கிளைக் கதையாக சொல்லப் படுகிறது. இறுதியாக கொலைகாரன் யார் என்ற உண்மையை உணர்த்த அந்த பிளாஷ்பேக்கதை பயன்படுகிறது. நாவலின் பலமே அதன் பிரதான கதை முழுக்க நாயகனின் கோணத்தில் அமைந்திருப்பது தான். திரைக்கதையில் அந்த கோணம் மாறிப்போகிறது. எனவே தான் கொலைக்கான காரணம் விவரிக்கப் படும் போது அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதை இன்னும் விரிவாக பேசலாம். 

யதார்த்த வாழ்வில் ஒரு போலீஸ் அதிகாரி ஒரு கொலை வழக்கை துப்பறிகிறார் என்று எடுத்து கொள்வோம். எல்லா விஷயங்களையும் அவரே செய்ய மாட்டார்தான். சில விசாரணைகளை சக அதிகாரிகளோ, அவருக்கு கீழ் இருக்கும் போலீஸ்காரர்களோ செய்யக்கூடும். இதை நாவலாக எழுதலாம். அது நாவலுக்கான சுதந்திரம். ஆனால் சினிமாவென்று வரும் போது, இந்த எல்லா வேலைகளையும் பிரதான கதாப்பாத்திரம் செய்வது தான் சிறந்த உத்தி. அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின்தொடர முடியும். இந்த உத்தி நாவலில் கட்சிதமாக பொருந்திவிட்டது தான் நாவலின் பலம். ஆனால் படத்தில் நிறைய விஷயங்கள் நாயகனுக்கு செய்தியாக மட்டுமே வந்து சேர்க்கிறது. 

நாயகன் ஒருவரை விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே, அவனுடைய தோழியும் சக அதிகாரியுமான எஸ்டி, ஒரு முக்கியமான விசாரணையை தான் மேற்கொண்டுவிட்டதாக சொல்கிறாள். அதிலிருந்து தனக்கு என்ன துப்பு கிடைத்தது என்று சொல்கிறாள். 

நாவலில் இந்த விசாரணையையும் நாயகன் தான் மேற்கொள்வான். அவன் ஜெயிலிலிருக்கும் டசியோவிற்கும், அவனுடைய சகோதரனான இஃனாசியோவிற்கும் தெரிந்த பெண்மணியை விசாரிக்கிறான். அவளிடம் பல முறை உரையாடிவிட்ட பின்பு தான் இறுதியாக அவள் ஒரு உண்மையை சொல்கிறாள். அது கதையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்துகிறது. இந்த முக்கியமான தருணம் ஒரே ஒரு ஷாட்டாக படத்தில் சொல்லப்படுகிறது. இதுவே திரைக்கதையின் பலவீனம். 

நாவலுக்கான சுதந்திரம் என்பதை பற்றி முந்தைய கட்டுரைகளில் பேசும்போது நாவலில் ஒரு கதையை நிறுத்திவிட்டு, வேறொரு கதையை சொல்லலாம் என்று பேசி இருந்தோம். இந்த நாவலிலும் ஒரு பணக்கார பெண்மணியை பற்றிய பிளாஷ்பேக் வருகிறது அல்லவா? அது மிக முக்கியமான கதை. இந்திரா சௌந்தரராஜன் கதைகளில், ‘அன்று’ ‘இன்று’ என இரண்டு பகுதிகளாக கதை நகர்வது போல, இதில் அந்த பிளாஷ்பேக் கதை ஆங்காங்கே கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப் படுகிறது. இந்த படத்தில் அப்படி சொல்வதற்கான சுதந்திரமும் அவகாசமும் இல்லை என்பதால் திடீரென்று நாயகனின் தாத்தா, அவனுடைய கோப்புகளில் அந்த பெண்மணியின் புகைப்படத்தை பார்த்துவிட்டு அவளை பற்றிய கதையை சொல்கிறார். இதுவும் திரைக்கதையில் குறிப்பிடத்தப்படவேண்டிய சிக்கல். பல க்ரைம் கதைகளில் நாம் காணும் சிக்கலும் கூட. 

மிக அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் கூட இந்த சிக்கலை கவனிக்கலாம். நவம்பர் ஸ்டோரி சுவாரஸ்யமான சீரிஸ் தான். ஆனால் பிளாஷ்பேக் காட்சியும் , அல்லது ஏன் கொலை நடந்தது என்ற உண்மையும் கதைக்கு அதிக முக்கியமில்லா ஒருவரின் கோணத்தில் சொல்லப் படுகிறது. துப்பறியும் கதைகளில், பார்வையாளர்கள் சொல்லப்படப் போகும் உண்மைக்காக தான் காத்திருக்கிறார்கள். எனவே அவர்களுக்கு உண்மையை உடைக்கும் இடமும், விதமும் நம்பும்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தகுந்த வரையிலும் இருத்தல் அவசியம். அந்த உண்மையை அதுவரை நாம் பின்தொடரும் கதாப்பாத்திரத்தின் மூலம் சொல்வதும், அவர்களை சொல்ல வைக்கும் சூழ்நிலையை கதையில் உருவாக்குவதும் தான் மிகமிக முக்கியம். 

Silence of the White City  நாவல் மிகவும் அடர்த்தியான ஒன்று. அது இரண்டு மணிநேரத்தில் சொல்லிவிடக் கூடிய கதை அல்ல. அதை சுருக்கமாக சொல்ல முயன்றது கூட இந்த திரைக்கதையின் சுவாரஸ்யக் குறைவிற்கு காரணமாக இருக்கலாம். எனினும் நாவலையும் திரைக்கதையையும் ஒப்பிட்டு பார்ப்பது நல்லதொரு திரைக்கதை பயிற்சியாக இருக்கும்.  

 

The Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

The Invisible Guardian- நாவல் திரையாக்கம் கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

Baztan Triology:  இது ஸ்பானிய எழுத்தாளர் டொலாரஸ் ருடாண்டோ (Dolores Redondo)  மூன்று பகுதிகளாக எழுதிய (அமானுஷ்ய) க்ரைம் நாவல் (ஆங்கில மொழிபெயர்ப்பு: Isabelle Kaufeler). The Invisible Guardian, The Legacy of the bones மற்றும் Offering of the storm  ஆகிய நாவல்களை அதே பெயரில் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். 

The Invisible Guardian நாவலின் கதை சுருக்கம் இது தான். அமையா சலாசார், அமெரிக்காவின் FBI-யிடம் பயிற்சி பெற்ற ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். குழந்தை இல்லை என்பதே அவளுடைய பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அந்த நேரத்தில் ஊரில் இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டு காடு, நதி என பல இடங்களில் பிணமாக கிடைக்கிறார்கள். இந்த ஒற்றைவரி, வழக்கமான ஒரு க்ரைம் கதையாக தெரிந்தாலும், நாவலின் வர்ணனை அதை சுவாரஸ்யமான கதையாக மாற்றி இருக்கிறது. ஸ்பெயினின் பகுதிகளை அதன் இயற்கை வளங்களை விவரிக்கும் வகையில் இதன் வர்ணனை அமைந்திருக்கிறது. இந்த வர்ணனைகளே நாவலுக்கு ஒரு தனித்துவமான பிராந்திய தன்மையை கொடுக்கிறது. நாவல் சுமார் ஐநூறு பக்கங்களில் நிதானமாக நகர்கிறது. இந்த நிதானம் தான் நாவலின் பலமாகவும்  இருக்கிறது. 

ஆனால் சினிமாவில் நாவலில் இருக்கும் நிதானம் சாத்தியமில்லை. இரண்டு மணி நேரத்தில் கதையை சொல்ல வேண்டும். அதே நேரத்தில் திரைக்கதையை  தேவை இல்லாமல் துரிதப்படுத்தவும் கூடாது. ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றும் போது, தேவைக்கு அதிகமான வேகத்தை திரைக்கதையில் கொடுத்துவிடக் கூடாது என்பதை தான் நாம் கவனிக்க வேண்டும். திரைக்கதை வேகமாக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் சொல்லிட வேண்டும் என்று அடுத்தடுத்து காட்சிகளை அடிக்கிக் கொண்டு போனால், பார்வையாளர்களுக்கு திருப்தி ஏற்படாது. ஆனால், Baztan Triology-யின் திரை வடிவத்தின் முதல் பகுதியில் (The Invisible Guardian) இந்த பிரச்சனை இருக்கிறது. நிறைய விஷயங்கள் துரித கதியில் நகர்கின்றன.  நாவலின் பல கிளைக்கதைகளை திரைக்கதையில் கொண்டு வர முயற்சித்ததே அதற்கு காரணம். 

எந்தவகையான துப்பறியும் கதையாக இருந்தாலும், நாயகன் ஏதோ ஒரு உண்மையை தான் தேடிக் கொண்டு இருக்கிறான். கொலை செய்தது யார், காணாமல் போனது யார் என அந்த உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாயகன் அந்த உண்மையை கண்டடையும் பாதை எவ்வளவு சுவராஸ்யமானதாக இருக்கிறதோ அவ்வளவு சுவராஸ்யமாக (கதை) திரைக்கதை இருக்கும்.  இந்த படத்தில், அந்த பாதை பல இடங்களில் மிக பரிச்சியமான ஒன்றாக இருப்பதால் சுவராஸ்யம் குறைகிறது. அதே சமயத்தில் திரைக்கதைக்கான புத்திசாலித்தனமான மாற்றங்கள் இந்த கதையில் உண்டு.  நாவலில் நிறைய கதாபாத்திரங்கள் வருகிறார்கள். சில நேரங்களில் அவர்களை பற்றிய பகுதிகள் எதுவுமே நாவலை முன்னோக்கி நகர்த்துவதாக இல்லை. இதுபோன்ற ஒரு கதையை திரைக்கதையாக மாற்றும் போது முக்கியமற்ற பாத்திரங்களை நீக்கிவிட வேண்டும்.  நாவலில் நிறைய கதாப்பாத்திரங்களை சுற்றி கதை நடந்தாலும், இயன்றவரை (சினிமாவிற்கான) திரைக்கதையில் முக்கிய பாத்திரங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம். அதிகம் முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட முக்கியமான தருணம் ஏதாவது நாவலில் இருந்தால் அதை திரைக்கதையில் வேறு கதாபாத்திரங்களுக்கு பொருத்த முடியுமா என்று யோசிக்கலாம். 

உதாரணமாக ஒரு காட்சி. ஆனி என்ற பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடைக்கிறாள்.  நாயகி அந்த வழக்கை விசாரிக்கிறாள். இறந்து போன ஆனியின் அரூப உருவம் நாயகியின் இரண்டாவது அக்காவின் முன்பு தோன்றி அவளை பயமுறுத்துகிறது. அதெல்லாம் கற்பனை என்று நாயகி தன் அக்காவிற்கு தைரியம் சொல்கிறாள். இது நாவல். 

படத்தில், இதை வேறுமாதிரி மாற்றி இருக்கிறார்கள். நாயகி வழக்கை விசாரித்து விட்டு வீட்டுக்கு வருகிறாள். அந்த வழக்கு அவளுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. மழை பெய்து கொண்டிருக்கும் அந்த இரவில், அவள் வீட்டில் தனியாக இருக்கிறாள். ஜன்னல் வெளியே எதர்ச்சையாக பார்க்கும் போது ஆனியின் அரூப உருவம் நாயகியை பார்த்துக் கொண்டே இருக்கிறது. நாயகி பதறியடித்துக் கொண்டு அவளை நோக்கி ஓடுகிறாள். 

அதாவது நாவலில் அக்காவிற்கு நிகழ்ந்த ஒரு முக்கிய சம்பவம் படத்தில் நாயகிக்கு நிகழ்கிறது. நம்முடைய பிரதான கதாபாத்திரத்திற்கு ஒரு பிரச்சனை வரும் போது அது பார்வையாளர்களை அதிகம் பாதிக்கிறது. படத்தில் நாயகி இரண்டாவது அக்காவிற்கு அதிக முக்கியத்துவம் இல்லை. முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்கு திரைக்கதையில் அவகாசமும் இல்லை. எனவே தான் இது போன்ற மாற்றங்கள் செய்திருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். 

நாவலிலேயே கதை சொல்லலில் குறிபிட்டு சொல்லும்படி ஒரு பிரச்சனை இருக்கிறது. கதையின் முதல் காட்சியில் ஒரு தடயம் கிடைக்கிறது. கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் ஒரு பிஸ்கட் கிடைக்கிறது. இதற்கான விடையை நாவல் முடியும் தருவாயில் தான் நாயகி தேடுகிறாள். நாவலாகவே இருந்தாலும், க்ரைம் கதையில் இது  வாசகர்களுக்கு திருப்தி அளிக்காத ஒரு வடிவம் தான். ஒரு தடயம் கிடைக்கும் போது, அதை வைத்து தான் கதை அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். அல்லது அந்த தடயத்தை மறக்கடிக்கச் செய்யும் அளவிற்கு வேறொரு நிகழ்வு ஏதாவது நிகழ வேண்டும். நாவலாசிரியர் மிக வசதியாக அந்த தடயத்தை மறைத்துவிட்டு வேறொரு திசையில் கதையை நகர்த்துகிறார். சினிமாவில், நாவலில் இருந்த பிரச்சனை இல்லை. அந்த பிஸ்கட் கிடைத்ததுமே அதை வைத்து நாயகி என்ன செய்கிறாள் என்று நேர்கோட்டில் கதையை நகர்த்தி இருக்கிறார்கள். 

நாவலில், நாயகி ஒரு வழக்கை விசாரிக்கிறாள். பின் யாரோ ஒருவர் வேறொரு வழக்கை பற்றி சொல்கிறார். அங்கிருந்து கதை முன்னோக்கி நகர்கிறது. திரைக்கதையில் இந்த உத்தி சுவாரஸ்யத்தை தராது.  இதற்கு முன்னரே சாக்ரட் கேம்ஸ் பற்றிய கட்டுரையில் இதை விவாதித்திருக்கிறோம். ஒரு க்ரைம் திரைக்கதையில் போலீஸ் நாயகனுக்கு ஒரு வழக்கு தான் பிரதானமாக இருக்க முடியும்.  வேறு வழக்கு வந்தாலும், அது மூல வழக்கிற்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு பட்டிருப்பதாக இருக்க வேண்டும். 

ஒரு பெரிய க்ரைம் நாவல் எழுதும் போது, ஒரு கொலை வழக்கை ஹீரோ துப்பறிகிறார், வேறொரு ஊரில் வேறொரு கொலை நடக்க, அதை மற்றொரு இன்ஸ்பெக்டர் துப்பறிகிறார் என்று வைக்கலாம். இரண்டு வழக்குகளும் ஒரு கட்டத்தில் இணைகின்றன என்று நாவல் எழுதலாம். ஆனால் அதையே நாம் படமாக எழுதும் போது, படம் ஒரே ஒரு ஹீரோவைப் பற்றியது எனும் போது,  அந்த மற்றொரு வழக்கை துப்பு துலக்குவதிலும் ஹீரோவின் பங்கு அதிகம் இருப்பதாக திரைக்கதை அமைத்தல் வேண்டும். அப்போது தான் பார்வையாளர்களால் கதையை பின் தொடர முடியும். ஆனால்  ஹீரோவிற்கு முக்கியத்துவம் தருவது எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு அந்த முக்கியத்துவத்தில் நம்பத்தன்மை இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகிறது.  

நாவலில், வெவ்வேறு முக்கிய கட்டங்களில், நாயகிக்கு சில நிகழ்வுகளைப் பற்றிய செய்தி மட்டும் போனில் வருகிறது. உடனே நாயகி புறப்பட்டு செல்கிறாள். ஆனால் சினிமாவில் எல்லாவற்றையும் நாயகனே (அல்லது நாயகியே) செய்ய வேண்டி இருக்கிறது. அதன்படி இந்த படத்தில் நாயகியே நேரடியாக எல்லோரையும் விசாரிக்கிறாள். ஆனால் அவளை மட்டுமே முன்னிறுத்தும் கட்டாயத்தில் சில லாஜிக் மீறல்களை செய்திருக்கிறார்கள். 

நாவலில், ஒருவன் தற்கொலைக்கு முயல்கிறான் என்று செய்தி நாயகிக்கு வருகிறது. அவனை மருத்துவமனையில் சென்று சந்திக்கிறாள். ஆனால் படத்தில், அந்த செய்தி வந்ததுமே அவளே போய் அவனை காப்பாற்றுகிறாள். 

இங்கே நம்பகத்தன்மை இல்லாமல் போகிறதல்லவா! இது போன்ற விஷயங்களை திரைக்கதையில் தவிர்த்தல் நலம். சில இடங்களில் நம் நாயகன் பின்தங்கி இருப்பது தவறில்லை. 

பல நேரங்களில் நாம் வாசிக்கும் நாவல்கள் நமக்கு முழுவதுமாக நினைவு இருப்பதை விட, நாவல்களில் இருக்கும் சிறப்பான தருணங்களே அதிகம் நினைவில் இருக்கும். நல்ல தருணங்களின் தொகுப்பே நாவல் எனலாம். இந்த நாவலில் சில நல்ல தருணங்கள் உண்டு.

உதாரணமாக ஒரு தருணம். நாயகி க்ரைம் சீனில் பிணமாக கிடக்கும் பெண்ணை பார்க்கிறாள். அப்போது அவளுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. 

உயிரற்ற உடல் என்றாலும் அதற்கும் ஒரு ‘privacy’ இருக்கிறது. இவ்வளவு போலிஸ்காரர்களும்  பாரன்சிக் ஆட்களும் சுற்றி நின்று கொள்வது இறந்தவர்களுக்கு செய்யும் அவ மரியாதை என்று எண்ணுகிறாள். அவள் ஒரு கேதலிக் என்பதால் அப்படி நினைக்கிறாள் என்று நாவலாசிரியை குறிப்பிடுகிறாள். நாயகியின் நம்பிக்கையை, அவளின் அக உலகை வெளிப்படுத்தும்  இடம் இது. ஆனால் இந்த தருணம் படத்தில் இல்லை. இது போன்று நம் கதை மாந்தர்களின் அக உணர்வுகளை சொல்ல நாம் வசனங்களை பயன்படுத்தலாம். (True Detective போன்ற சீரிஸின் வெற்றி அதன் வசனங்கள் தான் என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன். ஒரு துப்பறியும் கதையாக அது மிக எளிமையான கதை தான். ஆனால் அதன் நாயகன் Rust Cohle பாத்திரத்தின் அக உணர்வும், தத்துவங்களும் வசனங்களாக வெளிப்பட்டு தான் அதை ஒரு சிறப்பான தொடராக மாற்றி இருக்கும்) 

நாவலில் ஆலோசியஸ் என்றொரு FBI அதிகாரி பாத்திரம் வருகிறது. கதை இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும்போது நாயகி மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பி நிற்கும் போது, தன்னுடைய முன்னாள் அதிகாரியான ஆலோசியஸை போனில் தொடர்பு கொள்கிறாள். அவர் அவளுக்கு சில அறிவுரைகளை சொல்லி, வழக்கை வேறொரு கோணத்தில் இருந்து விசாரிக்க சொல்கிறார். (இந்த கட்டத்தை தான் The Writers Journey புத்தகத்தில் Christopher Vogler ‘Meeting the Mentor’ என்று குறிப்பிடுகிறார்)

ஆனால் இப்படி திடீரென்று திரைக்கதையின் இறுதியில் ஒரு பாத்திரத்தை அறிமுகப் படுத்தக் கூடாது. அது பார்வையாளர்களுக்கு நெருடலை ஏற்படுத்தும்.  இந்த படத்தில், ஆலோசியஸ் ஆரம்பத்திலிருந்தே வருகிறார். நாயகி அவருடன் அவ்வப்போது போனில் பேசுவதாக திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. திரைக்கதையின் இன்னொரு சிறப்பான மாற்றம், காட்சிகளை தொகுத்த விதம்.  நாவலில் இருக்கும் ஏராளமான சீக்வன்ஸை தவிர்த்துவிட்டு திரைக்கதையை நேர்கோட்டில் அமைத்திருக்கிறார்கள். மேலும், நாவலின் இறுதியில் குற்றவாளியை வேறு ஒரு கதாப்பத்திரம் கண்டுபிடிக்கிறது. அதுவும் திடீரென்று அதுவரை மூடி இருந்த மர்மத்திரை விலகுகிறது. படத்தில் அந்த சிக்கல் இல்லை. அதில் கொஞ்சம் கொஞ்சமாக நாயகியே குற்றவாளியை நெருங்குகிறாள். இதுவே திரைக்கதைக்கான உத்தி. ஆதவாது கதை அடுத்த கட்டத்திற்கு செல்வது என்பது யதேச்சையாக நிகழ்ந்ததாக இல்லாமல் ஹீரோவின் முயற்சியில் நிகழ்வதாக திரைக்கதை அமைத்தாலே நலம். 

ஒரு காட்சியில், கொலை நடந்த இடத்தை சுற்றி விலங்கின் முடிகள் கிடைக்கிறது. அது கரடியின் முடி போல் இருப்பதை கண்டுகொள்ளும் போலீசார், கரடிகள் வசிக்காத அந்த காட்டினுள் எப்படி கரடியின் முடி வந்தது என்று யோசிக்கின்றனர். அதற்கு அவர்களுக்கு கிட்டும் விடை ‘பாசகாவுன்’ (Basajuan).  பாசகாவுன் என்பது ஸ்பானிய காடுகளை காக்கும் கடவுள். பார்ப்பதற்கு பிரமாண்டமான தோற்றத்தோடு வலம் வரும் ஒரு நல்ல சக்தி. 

நாவல் முழுக்க இந்த பாசகாவுன் பற்றிய நம்பிக்கை வருகிறது. பலரும் அதை பற்றி பல கதைகள் சொல்கிறார்கள். பாசகாவுன் என்று ஒரு சக்தி இல்லை அது கரடி தான் என்று  நாயகி நம்புகிறாள். ஆனால் பாசகாவுன் அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்சி கொடுக்காது, அது நாயகிக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை கொடுக்கவே காட்சி அளித்திருப்பதாக மற்றவர்கள் நம்புகிறார்கள். இறுதியில் இந்த நம்பிக்கை மிக அழகான ஆர்க்காக நாவலில் முடிகிறது. 

ஆனால் படத்தில்  பாசகாவுன்  பற்றிய குறிப்பு ஒரே ஒரு வசனமாக வந்துவிட்டு போகிறது. இந்த பாசகாவுனை பற்றிய குறிப்பை நீக்கி இருந்தாலும் படத்தில் எந்த இழப்பும் இருந்திருக்காது. நாம் முன் சொன்னது போல், நாவலில் இருக்கும் எல்லா முக்கிய கதைகளை படத்தில் வைத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இதை வைத்திருப்பதாக தோன்றுகிறது. The Invisble Guardian- ஒரு சீரியல் கில்லர் நாவலாக இருந்தாலும், இதன் கதை ஒருவகையில் நாயகியின் குடும்பத்தையே சுற்றியே நடக்கிறது என்பதே இந்த நாவலின் சிறப்பம்சம். நாவலை வாசிக்கும் போது, அதன் திரைப்பட வடிவம் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. 

இதன் அடுத்தடுத்த பகுதிகளைப் பற்றி வரும் பகுதிகளில் பேசுவோம். 

தொடரும்…  

தொடர்புடைய கட்டுரைகள்

The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்

சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை

முன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்

நண்பர் ஆரூர் பாஸ்கரின்  ‘அந்த ஆறு நாட்கள்’  குறுநாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து…

புயலுக்கு முன்…

கடல் கடவுள் போசிடானின் கோபமே புயலாக, சூறாவளியாக வெளிப்படுகிறது என்ற பண்டைகால கிரேக்கர்களின் நம்பிக்கைக்கும், கடலின் மேற்பரப்பில் ஏற்படும்  காற்றழுத்த தாழ்வு நிலையே புயலாக உருவெடுக்கிறது என்ற புரிதலுக்குமிடையே மனித இனம் பெரிதும் வளர்ந்துவிட்டது. மனிதன் கண்டுகொண்ட தொழிநுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆனால் இயற்கை இயற்கையாகவே சீரிய காலம் போய், கடந்த அறைநூற்றாண்டில் மனிதனின் பேராசைகள் இயற்கையை அதிகமாகவே சீண்டி (சுரண்டி)விட்டதால்தான், இயற்கை பூமி மீது இறக்கம் காட்டாமல் வழக்கத்தைவிட அதிகமாகவே பூமியைத் தாக்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பூமி வெப்ப மயமாதல், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம் இதெல்லாம் மனிதனின் பேராசையின் பயன்கள். ஒவ்வொரு முறையும் இயற்கை, புயலாக, வெள்ளமாக, அடைமழையாக மனிதனை நோக்கி சீறும் போது மட்டுமே, மனிதனால் இயற்கையை என்றுமே வெல்ல முடியாது என்ற உண்மை நமக்கு உரைக்கிறது. இதற்கு வளர்ந்த நாடுகளும்  விதிவிலக்கல்ல.

அதுவும் குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சூறாவளி தாக்குதல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக போய்விட்டது. அதில் அமெரிக்க மாநிலங்களிலேயே அதிக சூறாவளியை சந்திக்கும் மாநிலமான ப்ளோரிடாவை, கடந்த ஆண்டு (2017) தாக்கிய  இர்மா சூறாவளியை மையமாக வைத்து நண்பர் ‘ஆரூர்’ பாஸ்கர் புனைந்திருக்கும் குறுநாவலே ‘அந்த ஆறு நாட்கள்’

Irma3

பெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய கேட்டகிரி ஐந்து வகை ‘இர்மா’ புயல், கதை நாயகன் பரணி வசிக்கும் ப்ளோரிடாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் நாளில் கதைத் தொடங்குகிறது. பின் அவனுள் நிகழும் போரட்டமே இந்நாவல். ஆனால் வெறும் அகப் போராட்டமாக மட்டும் நாவல் நின்றுவிடவில்லை. அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி, அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றி, அவர்களின் பாசங்குகளைப் பற்றி, அந்த நிலத்தின் அரசியல், கொள்கை மாற்றங்களைப் பற்றி, அங்கே இந்தியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பற்றி,  மூலக் கதையிலிருந்து விலகாமல் கதையினூடே பதிவு செய்துகொண்டே போகிறார் பாஸ்கர். அதுவே இந்த நாவலின் சிறப்பம்சமாக கருதுகிறேன்.

ஏனெனில் இந்த கரு புதிது. களமும் புதிது. நாம் அதிகம் சந்தித்திராத ஒரு இயற்கைச் சீற்றத்தை மையமாக கொண்டது கதைக்கரு. கதை நடக்கும் தேசமோ, பலருக்கும் பரிச்சயம் இல்லாத ஒரு இடம்.  ஆனால் பாஸ்கரின் விவரணைகள் அந்த தேசத்தை நமக்கு பரிச்சயமாக்குகிறது. அதன் சாலைகள், அந்த ஊரின் கட்டுமானங்கள்,  சுற்றி இருக்கும் ஏரிகள், அதில் தலை தூக்கி பார்க்கும் முதலைகள் என கதைக்கு தேவையான விவரங்கள் சில இடங்களில் தகவல்களாகவும், சில இடங்களில்  துல்லியமான காட்சிகளாகவும் விவரிக்கப்பட்டிருப்பதால் நம்மால் எளிதாக நாவலின் உலகிற்குள் நுழைந்து விட முடிகிறது

மேலும், பரணி ஒரு சாதாரண மனிதனாகவே நமக்கு அறிமுகமாவதால்  அவனோடு நம்மை தொடர்புபடுத்தி கொள்ள நமக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை. அவன் எந்த சாகசங்களையும் செய்யக்கூடியவன் அல்ல. இந்த யதார்த்தமான சித்தரிப்பே கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. மேலும், நிதானமாக நகரும் கதையில் புயலின் வரவால் பரணியின் வாழ்வில் பரவும் இறுக்கம், ஒரு கட்டத்தில் நம் மனதிலும் பரவுவதை உணரலாம். அதுவே கதைசொல்லலின் வெற்றி.

ஒவ்வொரு முறையும் இயற்கை கருணை காட்டாமல் போகும் நேரத்திலெல்லாம் நம்மிடம் மிச்சமிருக்கும் மனிதமே நம்மை மீட்டெடுக்கிறது. அண்மையில் வீசிய கஜா புயல் வரை இதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் தடுக்க முடிந்த பேராபத்துகளை முன்கூட்டியே தடுப்பதற்கு நமக்கு மனிதத்தோடு சேர்ந்து ஒரு பொறுப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. அதை நாவலிலும் பதிவு செய்திருக்கிறார் பாஸ்கர். ‘இந்த பூமி நமக்கானது, மனித இனத்துக்கானது. இதை அடுத்த தலைமுறையிடம் சரியாக ஒப்படைப்பது நமது கடமையாகிறது’. பரணியின் மனதில் எழும் இந்த எண்ணங்கள் தான் நமக்கான முக்கிய செய்தியும் கூட. ஏனெனில், இயற்கையைப் பாதுகாக்க சரசாரி மனிதர்களான நாம் மிக பெரிய மாற்றத்தை எல்லாம் செய்யவேண்டியதில்லை. இயற்கை நேரடியாக நமக்கு தந்த வளங்களையும், நாம் அதிலிருந்து கண்டுகொண்ட வளங்களையும், நம்முடைய முந்தைய தலைமுறைகள் நமக்கு விட்டுவைத்ததைப் போல, அடுத்த தலைமுறைக்கு நாமும் மிச்சம் வைக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியோடு நாம் இயற்கையை பாதுகாத்தாலே  போதும். இந்த பூமியும் அதன் வளங்களும் தப்பிக்கும். இல்லையேல் நாவலில் சொல்வது போல், இயற்கை தன் அடியாட்களை பூமி நோக்கி அனுப்பிக் கொண்டே இருக்கும்.

அரவிந்த் சச்சிதானந்தம்
சென்னை. டிசம்பர் 23, 2018

நாவலை அமேசானில் வாங்க 

அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை

இது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன.

சில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை  மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க ஒரு பேய் வீட்டில் நகர்கிறது. இரண்டாவது சீசன் முழுக்க ஒரு மனநல காப்பகத்தில், மூன்றாவது சீசன் சூனியக்காரிகள் பள்ளியில், நான்காவது சீசன் ஒரு மேஜிக் கேம்ப்பில் நகர்கின்றன.

american-horror-story

எந்த சீஸனிலும் இவர்தான் கதாநாயகன் இவர்தான் நாயகி என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் பார்வையில் கதை நகராது. ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். குழுவாகவே பயணிக்கிறார்கள். கதை நடக்கும் இடம் அந்த பாத்திரங்களின் வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கமே திரைக்கதை. இங்கே ஒவ்வொரு சீஸனிலும் இடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நிலையானது. கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். மறைகிறார்கள். இடம், அவர்களை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. முதல் சீஸனில் ஒரு பேய் வீட்டில் தம்பதிகள் குடி புகுகிறார்கள். அந்த வீட்டிற்கு குடிவரும் எல்லோரும் அந்தக் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அந்த வீடு அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது. அல்லது கொலை செய்ய வைக்கிறது. அங்கே இருக்கும் பேய்கள் அதை சாத்தியப் படுத்துகின்றன.

இரண்டாவது சீசனில் வரும் மனநல காப்பகத்தினுள் சிக்கிக் கொள்ளும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது, அவர்கள் இறுதி வரை குணமாக மாட்டார்கள் அல்லது அங்கேயே மடிவார்கள் என்பதாக கதை அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இதுவும் பேய் வீடு டெம்ப்ளேட் தான். இந்த டெம்ப்ளேட்டை மூன்றாவது நான்காவது சீஸனிலும் கவனிக்கலாம்.

ஒரே த்ரில்லர் டெம்ப்ளேட்டில் களத்தையும் கதாபாத்திரங்களையும் மாற்றி அமைத்து புதியதொரு திரைக்கதையை உருவாக்குவது எப்படி என்பதை புரிந்து கொள்ள இந்த சீரியல் ஒரு நல்ல உதாரணம். ஒரு நல்லதொரு டெம்ப்ளேட் சிக்கிவிட்டால் அதில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல நல்ல திரைக்கதைகளை உருவாக்க முடியும். நாயகனும்; தேவர் மகனும் ஒரே டெம்ப்ளேட் தான். நாயகனில் அப்பா கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். தேவர்மகனில் மகன் கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். ‘யே ஜவானி ஹே தீவானி’ அப்படியே ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட படம். ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ படத்தில் பணம் பணம் என ஓடும் நாயகனுக்கு நாயகி வாழ்க்கையின் அழகை புரியவைப்பாள். யே ஜவானியில் படிப்பு படிப்பு என ஓடும் நாயகிக்கு நாயகன் வாழ்க்கையின் அழகை உணர்த்துவான். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் டெம்ப்ளேட்டில் வரும் நிகழ்வுகளின் நீளத்தை நீட்டியும் குறைத்துமே நிறைய கதைகள் எழுதிவிட முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் புரட்சி செய்து மாண்டு போகிறான். பின்னர் இன்னொருவன் அவன் வழியில் பயணிக்கிறான். இந்த கதையில், நண்பன் முன்கதையிலேயே படம் தொடங்கி ஐந்தே நிமிடத்தில் மாண்டு விட்டால் அது ஒரு திரைக்கதை. அதே நண்பர்கள் இடைவேளை வரை அன்பாக பழகுகிறார்கள். இடைவேளைக்கு முன் நண்பன் இறந்துவிடுகிறான். இரண்டாம் பாதியில் இன்னொருவன் தன் நண்பனின்  பாதையில் பயணிக்கிறான் என்றால், அது வேறொரு திரைக்கதையாக மாறிவிடும். முன் கதை என்று வைக்காமல், நண்பனின் கதையை ஃபிளாஷ்பேக்கில் வைத்தால் அது முற்றிலும் வேறொருவகை திரைக்கதை. இப்படி சிறு மாற்றங்கள் செய்து ஒரு டெம்ப்ளேட்டை வேறொரு டெம்ப்ளேட்டாக தோன்ற வைக்கலாம்.

மேலும் இந்த சீரியலில் எல்லோருமே ‘க்ரே’ கதாப்பாத்திரங்கள். சுயநலம் கொண்டவர்கள். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் அதிக சுயநலம் கொண்டதாக இருக்கும். அதன் சுயநலம் மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் திரைக்கதை. ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் பாத்திரங்களின் கெட்ட குணங்களை கூட்டிக் காட்ட மிக தூய்மையான ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிரும். ஒரு கதையில் எல்லோருமே சுயநலமாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே ஒரே ஒரு வெகுளியான பாத்திரத்தை, குழந்தை மனம் கொண்ட பாத்திரத்தை உலவவிட்டால், மற்றவர்களின் சுயநலம் பெரிதாக தெரியும். அந்த வெகுளி பாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாத்திரங்களுக்கு இடையே காண்ட்ராஸ்ட் உருவாக்க இந்த உத்தி பயன்படும்.

freakshow

இந்த நாடகத்தில் நிறைய திரில்லிங்கான கிளைக்கதைகள் வருவதால் சஸ்பென்ஸிற்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் கதைகளில் மூன்று வகையான சஸ்பென்ஸ் சாத்தியம்.  ஒன்று, கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லா ரகசியங்களையும் திருப்பங்களையும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, கொலைகாரன் யார் என்பதை கதையில் வரும் போலீஸ் அதிகாரி அறிந்திருப்பார். ஆனால் பார்வையாளர்களுக்கு அது சொல்லப் பட்டிருக்காது. இரண்டு,  பார்வையாளர்களுக்கு எல்லாம் விளங்கி இருக்கும். ஆனால் கதாபாத்த்திரங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் கொலைகாரன் என்று முதலிலேயே பார்வையாளர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்திருக்காது. அவர்கள் அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது உத்தியில், யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காது. இந்த சீரிஸில் அநேக இடங்களில் இரண்டாவது உத்தியே அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும். பேய்கள் என்றும் அல்லது கொலைகாரர்கள் என்றும் தெரியாமல் கதாபாத்திரங்கள் அவர்களுடன் பழகிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே சுவாரஸ்யம்.

எத்தனைக் கிளைக்கதைகளை வைத்தாலும் எல்லா கதைகளையும் ஒரு இடத்தில் முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமாகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குறிக்கோள் இருப்பின், அந்த குறிக்கோள் அல்லது லட்சியம் சாத்தியமாகும் இடத்தில் கதை முடியலாம். நம் படங்கள் பெரும்பாலும் இந்த வகையே. கதாபாத்திரங்களின் குறிக்கோள் நிறைவேற வில்லை அல்லது இனிமேல் நிறைவேற சாத்தியமே இல்லை என்ற புள்ளியிலும் கதை முடியலாம். ‘முகவரி’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தவிர, இன்னொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதை வைத்து கதையை முடிக்கலாம். ‘மௌனம் பேசியதே’ எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு பாத்திரம் வந்து நாயகனை ஆரம்பத்திலிருந்தே காதலிப்பதாக சொல்லி கதையை முடித்து வைக்கும். இங்கே கதையை முடித்து வைக்கவே அந்த பாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை முன்கூட்டியே முன்கதையிலோ அல்லது கதையின் நடுவிலோ, அல்லது கதைக்கு Parallel-ஆகவோ அறிமுகம் செய்துவிட்டு அதை வைத்து இறுதியில் கதையை முடிப்பது இன்னும் சிறப்பான உத்தி. பார்வையாளர்களுக்கு திடீரென்று இந்த பாத்திரம் ஏன் வந்தது எந்த கேள்வி எழாது. இந்த குறிப்பிட்ட உத்தியை இந்த சீரியலில் பல இடங்களில் பார்க்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வருவது போல, கதையின் பிற்பகுதிக்கு தேவையான விஷயங்களையும் பாத்திரங்களையும் ஒவ்வொரு எபிசோடின் முன் பகுதியில் அறிமுகம் செய்துவிடுவது இந்த நாடகத்தின் மற்றுமொரு சிறப்பு.

 

ஓகே கண்மணி

மணிரத்னம் படங்களுக்கே உரித்தான டிரைன், மழை, கண்ணாடி, குடை, ஃபிரேம் இன் ஃபிரேம் உத்தி இத்தியாதி இத்தியாதிகளுக்கு குறைவில்லாமல் வந்திருக்கும் அழகான படமிது. மணிரத்னத்தின் மேக்கிங்கை விட்டுவிடுங்கள். மேக்கிங் தாண்டிய விஷயம் இந்தப் படத்தில் ஏராளம். Continue reading

தொடரும் சினிமா (free e-book)

கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது.

தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம்
Cover Photography©  Premkumar SachidanandamThodarum_frontcover

கூகிள் ப்ளே ஸ்டோரில் free download  செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

 

ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2

ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-2

முதல் பாகத்தை இங்கே படிக்கலாம்
ப்ரிசன் ப்ரேக் சொல்லித்தரும் திரைக்கதை-1

சிறையிலிருந்து தப்பிக்கும் ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ-வை FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன் துரத்துகிறார். அவர் கம்பெனியின் ஆள். ஸ்கோஃபீல்டையும், லிங்கனையும், மற்ற ஆறு பேரையும் கொல்வதே அவரது நோக்கம். இன்னொரு புறம் சிறை அதிகாரி பிராட் பெல்லிக் துரத்துகிறார். ஒவ்வொருவரும் தத்தம் போக்கில் பயணிக்கின்றனர். அவர்களை பிடிக்க முடியாததால் பிராட் பெல்லிக்கிற்கு வேலை போகிறது. ஸ்கோஃபீல்டையும் அவன் அண்ணனையும் பிடித்துக்கொடுத்தால், பல கோடி பரிசுதொகை கிடைக்கும் என்று அரசாங்கம் அறிவிக்கிறது. அந்த பரிசு தொகைக்காக பெல்லிக் தன்னிச்சையாக களத்தில் இறங்குகிறார். ஸ்கோஃபீல்ட் பனாமாவிற்கு தப்பித்து செல்கிறான். அங்கே ஒரு கொலை வழக்கில், அவனை பனாமா அரசு கைது செய்கிறது. ‘சோனா’ எனும் மிக ஆபத்தான பனாமா சிறையில் அவன் அடைக்கப்படுகிறான். . அதே சிறையில், வெவ்வேறு காரணங்களுக்காக பெல்லிக்கும், டி-பேகும், அலெக்சான்டர் மஹோனும் அடைக்கப்படுகிறார்கள்.  இத்துடன் இரண்டாவது சீசன் முடிகிறது.

ஸ்கோஃபீல்டின் காதலியையும், அவன் அண்ணன் மகனையும் கம்பெனி ஆட்கள் கடத்தி விடுகிறார்கள். சோனா சிறையில் இருக்கும் ஜேம்ஸ் என்பவனை தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி ஸ்கோஃபீல்ட் தப்பிக்க வைக்க வேண்டும், இல்லையேல் அவன் காதலியும் அவன் அண்ணன் மகனும் கொல்லப்படுவார்கள் என்று கம்பெனி ஆட்கள் மிரட்டுகிறார்கள். யாராலும் தப்பிக்க முடியாத பனாமா சிறையில் இருந்து ஜேம்ஸூடன் தப்பிக்க மைக்கேல் ஸ்கோஃபீல்ட் முடிவு செய்கிறான்.. அலெக்சான்டர் மஹோனும் உடன் இணைந்துகொள்கிறார். ஆனால் அது ஃபாக்ஸ் ரிவர் போல நாகரிகமான சிறை அன்று. சோனாவில் தினமும் யாராவது இரண்டு கைதிகளுக்கிடையே மல்யுத்த சண்டை நடக்கும். அதில் ஒருவர்தான் உயிரோடு தப்பிக்க முடியும். அத்தகைய சண்டைகளில் ஸ்கோஃபீல்டையும் சிக்க வைக்க முயற்சி நடக்கிறது. ஒருவழியாக ஸ்கோஃபீல்ட் அண்ட் கோ வெற்றிபெறுகிறது.

ஆனால் கதை முடியவில்லை. நான்காவது சீசனில் புதிய கதை ஒன்று ஆரம்பிக்கிறது. கம்பெனியின் ரகசியங்கள் அடங்கிய ‘ஸ்கைலா’ எனப்படும் ஒரு ஹார்ட்டிஸ்கை கண்டுபிடிக்கும் பொறுப்பு ஸ்கோஃபீல்டிடம் வருகிறது. மகோன், பெல்லிக் எல்லாம் மனம்திருந்தி ஸ்கோஃபீல்டுடன் இணைந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த ஹார்ட் டிஸ்க்கில் கம்பெனியின் ரகசியங்கள் இல்லை, வேறு சில முக்கிய தகவல்கள் இருக்கின்றன என்ற உண்மை பின்தான் தெரிகிறது. கெட்டவர்கள் நல்லவர்களாக மாறுகிறார்கள், சில நல்லவர்கள் கெட்டவர்களாகிறார்கள். ஏராளமான திருப்புமுனைகளை கொண்ட இந்த சீஸனில் கடைசியில் யார் யாரை வெற்றிக்கொள்கிறார்கள் என்பதே கதை.

முதல் இரண்டு சீசன்களில் இருந்து சுவாரஸ்யம் அடுத்த இரண்டு சீசன்களில் கொஞ்சம் குறைந்திருக்கும். ஒரு புத்திசாலியான கதாநாயகனுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்துக் கொண்டே இருக்கிறது, அவன் அவற்றை எப்படி வெற்றி கொள்கிறான் என்ற ஒன்லைனை கொண்டே நான்கு சீஸன்களும் டெவலப் செய்யப்பட்டிருக்கும். இந்த குறிப்பிட்ட ஒன்லைனை வைத்துக்கொண்டே திரைக்கதை ஆசிரியர்கள்  கதையை வளர்ப்பதால் கதையில் தளர்வு ஏற்படுகிறது.

ஹீரோ எப்படி சிறையிலிருந்து தப்பிக்கப்போகிறான் என்ற கேள்வியே முதல் சீஸனில் சுவாரஸ்யத்தை கூட்டியது. ஆனால் மூணாவது சீஸனில் அந்த கேள்வி எடுப்படவில்லை. ஏனெனில், ஹீரோவின் புத்திசாலித்தனத்திற்கு மூன்றாவது சீஸனில் வேலையில்லாமல் போவதால், சுவாரஸ்யமும் குறைகிறது. மேலும், கதையின் சுவாரஸ்யத்தை கூட்ட ஏராளமான கிளைக்கதைகளையும், ட்விஸ்ட்களையும் வைத்திருப்பார்கள். ஆனால் சில இடங்களில் வேண்டுமென்றே திணிக்கபட்ட டிவிஸ்ட்கள் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றன.

முந்தைய கட்டுரையில் குறிப்பட்டது போல, ப்ரிசன் ப்ரேக்கில் தேவையில்லாத கதாபாத்திரங்கள் என்று எதுவும் வராது. அது கதையின் பலம். முதல் சீஸனில், மைக்கேல் சிறையில் இருக்கும் போது ஒரு சைக்கோ அறிமுகமாவான். அவன் மைக்கலின் உடம்பில் இருக்கும் டாட்டூக்களில் ஏதோ ரகசியம் ஒளிந்திருப்பதை கண்டுகொள்வான். அந்த டாட்டூக்ளை மனதில் பதியவைத்துக் கொள்வான். பின் சில பிரச்சனைகளால் அவனை மீண்டும் சைக்கோ வார்டிற்கே அனுப்பிவிடுவார்கள். ஒருகட்டத்தில், மைக்கிலின் உடம்பிலிருந்த டாட்டூவின் ஒரு பகுதி அழிந்துவிடும். இப்போது மைக்கலுக்கு உதவ மீண்டும் அந்த சைக்கோ பாத்திரம் அறிமுகமாகும். ஒரு கதாபாத்திரத்தை ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்திவிட்டு, பின் நமக்கு தேவையான இடங்களில் அந்த பாத்திரத்தை பயன்ப்படுத்திக்கொள்வது ஒரு சிறப்பான உத்தி.

ப்ரிசன் ப்ரேக்கில் கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயம் கதாபாத்திரங்களின் transformation. பிராட் பெல்லிக் என்ற சிறை காவலர் இருக்கிறார்.

bellick

முதல் சீஸனில் மிக கொடுமைக்கார சிறை காவலராக வலம் வருகிறார். ஊழல் செய்கிறார். எல்லோரிடமும் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்கிறார். பனாமா ஜெயிலில் அவரை கொடுமைப்படுத்துகிறார்கள். அவரால் யாரையும் எதிர்த்து போராட முடியவில்லை. கொஞ்சம்கொஞ்சமாக அவரிடம் மனமாற்றம் நிகழ்கிறது. நான்காவது சீஸனில் நல்லவராகிறார். இதுபோல், ஒரு கதாபாத்திரத்திடம் மனமாற்றம் நிகழ்வதற்க்கு வழுவான காரணத்தை காண்பிக்கவேண்டியது அவசியம்.

அடுத்த முக்கிய கதாபாத்த்திரம் FBI அதிகாரி அலெக்சான்டர் மஹோன்.

prisonbreak2_013

அடிப்படையில் இவர் நல்லவர். மிகவும் புத்திசாலி. ஆனால் கம்பெனிக்காக வேலை செய்யவில்லையெனில் தன் குடும்பத்திற்கு ஆபத்தென்பதால் கம்பெனியுடன் கைகோற்க்கிறார். ஸ்கோஃபீல்ட்டும் தன்னைபோல் புத்திசாலியாக இருப்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனாலேயே அவனை வெறுக்கிறார். ஒருகட்டத்தில், தான் விசுவாசமாக இருந்த கம்பெனி தனக்கு துரோகம் செய்துவிட்டது என்பதை கண்டுகொண்டபின் அவர் ஈகோ மடிகிறது. ஸ்கோஃபீல்ட்டுடன் இணைகிறார். (அண்மையில்  வெளியான ட்ரூ டிடெக்டிவ் சீரியலின் கதாநாயகன் ரஸ்ட் கோல் கதாபாத்திரத்திடம் மஹோனின் தாக்கம் நிறைய இருப்பதை பார்க்கலாம். இருவரும் தங்களுக்குள் ஒரு தனி உலகை உருவாக்கிக்கொண்டு வாழ்பவர்கள். இந்த இரு தொடர்களையும் பார்ப்பதன் மூலம், ஒரு கதாபாத்திரத்தை தழுவி எப்படி இன்னொரு கதாபாத்திரத்தை உருவாக்குவது என்பதை புரிந்து கொள்ள முடியும். ட்ரூ டிடெக்டிவ், இன்னும் இரண்டு மூன்று சீஸன்கள் பாக்கி இருப்பதாக கேள்வி. அவை வெளியான பின் ட்ரூ டிடெக்டிவ் பற்றி பேசலாம்)

மிகமிக சுவாரஸ்யமான கதாபாத்திரம் டி-பேக் (எ) தியோடர் பேக்வெல் கதாபாத்திரம். கடைசி வரை கெட்டவனாகவே இருக்கும் ஒரு கதாபாத்திரம். கொலைகாரன், காமுகன், துரோகி, பச்சோந்தி என பல முகங்கள் கொண்ட பாத்திரம்தான் டி-பேக். ஆனால் இந்த கதாபாத்திரம் மீது இறக்கம் வருமே ஒழிய, கோபம் வராது. அந்த வகையிலேயே அதை உருவாக்கியிருப்பார்கள். தன்னுடைய கெட்ட முகத்தை தொலைத்துவிட்டு, நல்ல முகத்தை மாட்டிக்கொள்ள வேண்டும் என முயன்று முயன்று தோற்று, இறுதியில் கெட்டவனாகவே இருந்துவிடும் கதாபாத்திரம் இது.

ப்ரிசன் ப்ரேக்கின் மிகபெரிய பலம் அதன் பின்னணி இசை. கதையில் சஸ்பென்ஸை சஸ்டைன் செய்வதில் மியூசிக் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஜானர் இசைகள் மாறிக்கொண்டே இருப்பது கூடுதல் சிறப்பு.

ரொமான்ஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், டிராமா, சென்டிமெண்ட் ஆகியவற்றின் கலவையே ப்ரிசன் ப்ரேக். அதன் மேக்கிங்கும் குறைகளுக்கிடமின்றியே அமைந்திருக்கும். படங்களை பார்த்து ஃபிலிம்மேக்கிங்கை கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு ப்ரிசன் ப்ரேக், ஏராளமான விஷயங்களை கற்றுத்தரும்.

திரிஷ்யம்

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு த்ரில்லர் படங்களில் மலையாளப் படமான திரிஷ்யமும் ஒன்று. இன்னொன்று கன்னடப் படமான லூசியா. இரண்டு படங்களையுமே இப்போது தமிழில் எடுக்கிறார்கள். லூசியாவைப் பற்றி பின் விவாதிப்போம்..திரிஷ்யமின் கதை இதுதான்.

ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் கேபில் டி‌வி ஆப்பரேட்டர். படிப்பறிவு மிகக் குறைவு. ஆனால் அனுபவ அறிவு மிகமிக அதிகம். பல மொழித் திரைப்படங்களைப் பார்த்தே தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான். உதாரணமாக, கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டு விட்டால், தாங்கள் கைது செய்த ஒருவனை போலீஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆகவேண்டும் என்று நான்காம் வகுப்பு படித்த அவன் ஒரு படத்திலிருந்து தெரிந்து கொள்கிறான். அதை வைத்துக்கொண்டு ஒரு காட்சியில் சட்ட ஆலோசனை வழங்குகிறான். இது போல் அவனுக்குத் தெரிந்த அனைத்துமே, அவன் சினிமாவில் இருந்து கற்றுக்கொண்டவைதான். அமைதியாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. திடீரென்று அவன் வாழ்வினுள் ஒரு வில்லன் நுழைகிறான். ஆனால் அந்த வில்லன் மோதுவதோ ஜார்ஜ் குட்டியின் மகளிடம். எதிர்பாராத விதமாக அவன் மகளும், மனைவியும் வில்லனைக் கொன்று புதைத்து விடுகிறார்கள். இறந்தவன் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியின் மகன். உண்மை வெளியே தெரிந்தால் அவன் குடும்பத்தையே அழித்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனாக தன் குடும்பத்தை அவன் காப்பாற்றிட வேண்டும்.  இங்கு தான் படத்தின் கதையே ஆரம்பிக்கிறது. அவன் எப்படி திரைப்படங்களில் இருந்து பெற்ற அறிவின் மூலம் தன் குடும்பத்தையே காக்கிறான் என்பதே படத்தின் கதை.

இது மிகவும் சிறப்பானதொரு படம். சிறந்த நடிகர் , மிகமிகச் சிறப்பாக நடித்தவொரு படம் என பல சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. இத்தகைய ஒரு படத்தை அதன் ஆன்மா சிதையாமல் தமிழில் எடுக்க முடியுமா என்பதே பிரதான கேள்வி. ஒரு படம் எடுப்பதற்கு முன்பே அது தமிழில் எடுபடாது என்று சொல்வது சரியில்லைதான். ஒரு மொழியில் வந்த படத்தை இன்னொரு மொழியில் உருவாக்கும் போது, அது ஒரிஜினல் வெர்ஷனை விடச் சிறப்பாக இருக்கும் போது யாரும் குறை சொல்லமாட்டார்கள். ஆனால் சரியில்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தால்?

திரிஷ்யம் படத்தின் முதல் ஒரு மணி நேரம், வைக்கம் முகமது பஷீரின் நாவல் போல, ஒரு கதாபாத்திரத்தின் செயற்பாடுகளை மட்டுமே மையப்படுத்தி நகர்கிறது. அதாவது ஜார்ஜ் குட்டியின் அன்றாட அலுவல்களைப் பற்றியும், அவன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும், அவன் குடும்ப உறவுகளைப் பற்றியும் மட்டுமே படம் பேசுகிறது. அதில் எந்தத் திருப்பமும் இருக்காது. ஆனால் இதே போன்று ஒரு ஃபார்மட்டை நம் தமிழ் படங்களில் பார்க்க முடியாது. நமக்கு முதல் இருபது நிமிடத்தில் கதை ஆரம்பிக்க வேண்டும். கதாநாயகன் நாயகியைச் சந்திக்க வேண்டும், அல்லது வில்லனைச் சந்திக்க வேண்டும். கதை அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். பொதுவாக மலையாளப் படங்கள் மெதுவாக நகர்வதாக நாம் உணர்வது இந்தக் காரணத்தினால் தான் (வெளிநாட்டுப் படங்களின் தாக்கத்தில் உருவாகும் சமகால மலையாளப் படங்கள் பலவும் இதற்கு விதிவிலக்கு.)

அந்த முதல் ஒருமணி நேரக் காட்சியின் நீளத்தை ஒரேயடியாகக் குறைத்து விட முடியாது. ஏனெனில், அந்த முதல் ஒரு மணிநேரத்தில் கதாநாயகன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தின் பிற்பாதியில் பயன்படுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களைத் தக்க வைத்து, அதே சமயத்தில் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்வார்கள் என நம்பலாம். ஆனால் கமல் ரீமேக் செய்கிறார் என்றதும் ஒருவகையான பயம் கவ்விக்கொள்கிறது.

வெட்னஸ்டேவை உன்னைப்போல் ஒருவனாக்கும் போது, அவர் வெட்னஸ்டே படத்திற்கு நியாயம் செய்யவில்லை. (கமலின் பல படங்களை ரசித்துப் பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்றாலும் உன்னைப்போல் ஒருவன் பயமுறுத்துகிறது)

வெட்னஸ்டே படத்தின் முக்கிய கதாபாத்திரம் இறுதிவரை க்ரே ஏரியாவிலேயே பயணிக்கும். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி கடைசி வரை இருந்து கொண்டே இருக்கும். அதுவே அந்த படத்தின் மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். நஸ்ருதின் ஷா நடித்ததனால் தான் அது சாத்தியமாயிற்று. அது ஹீரோ மெட்டீரியலுக்கான கதை அன்று. இங்கே பிரகாஷ் ராஜ் போல் ஒரு நடிகர் நடித்திருக்க வேண்டும். ஆனால் கமல் நடித்ததனால் ‘நல்லவன்’ சாயல் அந்தக் கதாபாத்திரம் மேல் முதல் காட்சியிலேயே உருவாகிவிட்டது. மேலும்  அழுது வசனம் பேசி மெலோடிராமா படமாக்கியிருப்பார் கமல். (இதே போல் கஹானியில் நாயகி கர்ப்பமாக இருப்பதே மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது பற்றுதல் வருகிறது. ஆனால் கஹானியின் தமிழ் வெர்ஷனில் அந்த எலிமெண்ட் இல்லை.) இந்தநிலை திரிஷ்யம் படத்திற்கு வந்துவிடக் கூடாது என்று அவா இருந்தாலும், திரிஷ்யம் திரிஷ்யமாகவே இருந்தால் தமிழில் கமர்சியலாக எடுபடாது என்ற உண்மையும் உரைக்கத்தான் செய்கிறது. எனினும் மிகவும் ஆறுதலான ஒரு செய்தி, படத்தின் ஒரிஜினல் இயக்குனரே இந்தப் படத்தையும் இயக்குகிறார் என்பதே. ஆனாலும், அவரும் கமர்ஷியல் காரணங்களுக்காக, தமிழில் பெரியஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொண்டால் ஜார்ஜ் குட்டியிடம் இருந்த யதார்த்தம் மடிந்துவிடும்.

திரிஷ்யம் என்றில்லை. பொதுவாக, ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதைத் தமிழ் மொழியிலும் எப்படியும் வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று தமிழுக்கேற்ப ஏராளமான மாற்றங்களைச் செய்வதிலேயே இங்குள்ள படைப்பாளிகள் குறியாக இருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் சிதைவதைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. மூலத்தைச் சிதைத்து ஒரு படத்தைத் தமிழில் எடுப்பதற்கு பதில் நேரடியாக ஒரு கமர்சியல் படத்தை எடுத்து பணம் சம்பாதித்துவிட்டுப் போய்விடலாம்…

பொன்னியின் செல்வன்-மேடை நாடகம்

பொன்னியின் செல்வனை படிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தாலும், நான்கு வருடங்களுக்கு முன் பொறியாளராக வேலை பார்த்த காலத்தில் தான் படிக்க முடிந்தது. அழுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஈ-புத்தகங்கள் படிப்பது வழக்கம். ஆங்கில புத்தகங்கள் படித்தால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாக தெரியாது. தமிழில் எதையாவது படித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே, கம்ப்யூட்டரில் பொன்னியின் செல்வன் புத்தகத்தையும், ஒரு டூல்ஸ் இன்ஜினியரிங் புத்தகத்தையும் திறந்து வைத்துக்கொண்டு, கதையை படிப்பேன். யாராவது வந்தால் பொன்னியின் செல்வன் மினிமைஸ் ஆகிவிடும். இப்படி திருட்டுதனமாக ஒரு வாரத்தில் அந்த புத்தகத்தை படித்து முடித்தேன். கிட்டதட்ட இரண்டு வாரங்கள் அதன் ஹாங்ஓவர் இருந்தது. வந்தியத்தேவன், நந்தினி, ஆழ்வார்க்கடியான் என் ஒவ்வொரு கதாபாத்திரமும் சுற்றிசுற்றி வந்தார்கள். பொன்னியின் செல்வனின் சிறப்பசம் இது தான். ஒரு படமோ, புனைவோ நம்மீது தாக்கத்தை ஏற்படுத்துவது சகஜம் தான். ஆனால் பொன்னியின் செல்வனில் மட்டுமே அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆரம்பத்தில் பிடிக்காமல் போன சில கதாப்பாத்திரங்களும் கடைசியில் பிடித்துவிடும். கதாபாத்திர உருவாக்கமும், வர்ணணனையும் அதை சாத்தியப்படுத்தியிருக்கும். அத்தகைய நாவலுக்கு நியாயம் செய்யும் வகையில்  பொன்னியின் செல்வன்-மேடை நாடகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

குமாரவேல் திரைக்கதை எழுதியிருக்கிறார். இதைவிட சிறப்பாக பொன்னியின் செல்வனை நாடகமாக்கியிருக்கமுடியாது என்றும் சொல்லும் அளவிற்கு அவர் திரைக்கதை இருக்கிறது. மணிமேகலை போன்ற சில கதாபாத்திரங்களை நீக்கி இருக்கிறார். Filler கதாபாத்திரங்களாக சில புது பாத்திரங்களை சேர்த்திருக்கிறார். பல இடங்களில் இரண்டு மூன்று காட்சிகளை இணைத்து ஒரே காட்சியாக உருவாக்கியிக்கி மொத்த கதையையும் மூன்றரை மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்.

மூன்றரை மணி நேரம் தொடர்ந்து மேடையில் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதை சர்வ சாதாரணமாக செய்து கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறார்கள் நடிகர்கள். குறிப்பாக வந்தியதேவனாக நடித்த ஸ்ரீகிருஷ்ண தயாள், குந்தவியாக நடித்த ப்ரீத்தி ஆத்ரேயா, பழுவேட்டரையராக நடித்த மு. ராமசாமி ஆகியோர் அதிக கவனத்தை ஈர்க்கிறார்கள். குற்ற உணர்ச்சியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடித்திருக்கிறார். நாவலில் வருவது போல் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகாமல், மிக தாமதமாகவே அவர் கதாபாத்திரம் அறிமுகமாகிறது.மிகவும் யதார்த்தமானதொரு நடிப்பு அவருடையது.

ப்ராப்பர்ட்டிஸ் டிபார்ட்மெண்ட்டும், ஆர்ட் டிபார்ட்மெண்ட்டும் மிக சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். மேடையில் கதாபாத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே, ப்ராப்பர்ட்டிகளை மாற்றி மேடையை அடுத்த காட்சிக்கு தயார் செய்துவிடுகிறார்கள். குடியானவர்கள் போல் மேடையில் நடந்து கொண்டே, பார்வையாளர்களுக்கு கவன சிதரலை ஏற்படுத்தாமல் அந்த வேலையை அவர்கள் செய்து முடிப்பது கூடுதல் சிறப்பு. நாடகத்தில் இன்னொரு சிறப்பான விஷயம் லைவ் பின்னணி இசை. அந்த லைவ் இசை கல்கி உருவாக்கிய உலகிற்க்குள் நம்மை அழைத்து சென்றுவிடுகிறது.

நாடகம் மிகுந்த மனநிறைவை தந்துவிட்டால், இப்போது யாராவது பொன்னியின் செல்வனை படமாக எடுக்கமாட்டார்களா என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டுவிட்டது. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் போல பொன்னியின் செல்வனை பாகங்களாக, பிரம்மாண்டமாக எடுத்தால் மிக சிறப்பாகவே இருக்கும். ஆனால் அவ்வளவு பட்ஜெட் சாத்தியமில்லை. மேலும், பொன்னியின் செல்வனை பாகம் பாகமாக எடுக்கும் போது அனைத்து பாகங்களையும் பார்த்தால் தான் படம் புரியும். அத்தகைய படங்கள் இங்கே எடுபடாது. நமக்கு ஒவ்வொரு பாகமும் முழுமை அடைய வேண்டும். தனித்தனி முழுமையான கதைகளை பாகங்களாக வெளியிட்டால் ஏற்றுக்கொள்வார்களே ஒழிய, ஒரே முழு கதையை தனித்தனி பாகங்களாக வெளியிட்டால் இங்கு ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஒரே பாகத்தில் முழு கதையையும் சுவாரஸ்யம் குன்றாமல் சொல்ல வேண்டுமெனில், கதையை ரீகிரியேட் தான் செய்ய வேண்டும். அதாவது கல்கியின் கதையை மூலக்கதையாக வைத்துக்கொண்டு, முற்றிலும் புதியதொரு திரைக்கதையை எழுதவேண்டும். சில கதாபாத்திரங்களை நீக்கி, சில புது கதாபாத்திரங்களை சேர்த்து, நீளமான வசனங்களை குறைத்து அதை சாத்தியபடுத்தலாம். அடுத்த பத்து வருடதிற்குள்ளாவது யாராவது பொன்னியின் செல்வனை ரீகிரியேட் செய்து, திரைப்படமாக உருவாக்குவார்கள் என்று நம்புவோம்.

ஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி

அமெரிக்க புதுஅலை சினிமாவின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்திருக்கும் படம் வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்.  ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்கிற பங்குசந்தை தரகருடைய வாழ்க்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. தொண்ணூறுகளில் அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர் பெல்ஃபோர்ட். பல புதுவித மோசடிகளை செய்து பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் இப்போது படமாக வந்திருக்கிறது.

படத்தில், ஜோர்டான் பெல்ஃபோர்ட்டாக நடித்திருக்கிறார் லியனார்டோ டிகாப்ரியோ. வேகமாக கோடீஸ்வரனாக வேண்டும் என்று எண்ணும் ஒரு நடுத்தரவர்க்க இளைஞன் எப்படி பல்வேறு மோசடிகள் செய்து பணம் ஈட்டுகிறான் என்பதே படத்தின் கதை. கேட்பதற்கு கதை சுவாரஸ்யமாக இல்லையே என்று எண்ண வேண்டாம். டிகாப்ரியோவின் ஏனெர்ஜெடிக் நடிப்பும், ஸ்கார்ஸேஸியின் ஸ்டைலான இயக்கமும் படத்தை சுவாரஸ்யமானாதாக்கி விட்டது. திரைக்கதையில் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லை என்ற குறை இருந்தாலும், டிகாப்ரியோவும், அவரது நண்பராக நடித்திருக்கும் ஜோனா ஹில்லும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை பார்க்கும் போது அந்த குறை மறைந்துவிடுகிறது. எனினும் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். பங்குசந்தையில் முதலீடு செய்யும் எவரும் லாபம் பார்க்க முடியாது, பங்குசந்தையில் இடைதரகர்களால் மட்டுமே சம்மதிக்க முடியும் என்ற உண்மையை பெல்ஃபோர்ட்டின் வாழ்கையின் மூலம் சொல்கிறது இந்த படம்..

வால் ஸ்ட்ரீட் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இருபத்தி மூன்றாவது படம். இவரது முதல் படம் 1967-யிலேயே வெளிவந்திருந்தாலும் இவரது மூன்றாவது படமான மீன் ஸ்ட்ரீட்ஸ் (1973) தான் இவரை ஒரு தேர்ந்த கதை சொல்லியாக உலகிற்கு எடுத்து காட்டியது. ஸ்கார்ஸேஸி இத்தாலிய வம்சாவளியை சேர்ந்தவர், அமெரிக்காவில் வளர்ந்தவர். அதனால் இவருடைய பெரும்பாலான படங்கள் இத்தாலிய அமெரிக்க கலாச்சாரத்தை பற்றி பேசும். இவர் நியூயார்க்கில் தன் சிறுவயதை களித்ததால், பல படங்களில் நியூயார்க்கை தத்ரூபமாக திரையில் காண்பித்திருப்பார். இவர் பல வகையான படங்களை இயக்கி இருந்தாலும், இவர் அதிகம் பிரபலமானது மாஃபியா படங்களின் மூலம் தான்.

 மீன் ஸ்ட்ரீட்ஸ் தான் இவர் இயக்கிய முதல் மாஃபியா படம். இந்த படத்தில், கதாநாயகன் இத்தாலிய அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவன். அவன் ஆஸ்திக பாதையை தேர்ந்தெடுப்பதா அல்லது மாஃபியா கூட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வதா என்று தெரியாமல் குழம்புவான். அவனது குழப்பம்தான் முழு கதையையும் நகர்த்தி செல்லும். இந்த படத்தின் கதையும் நியூயார்க்கில் தான் நடக்கிறது. மீன் ஸ்ட்ரீட்ஸ் தனக்கு மிகவும் பர்சனலான படம் என்றும், ஒருவகையில் அது தன்னுடைய சொந்த வாழ்கையின் பிரதிபலிப்பு என்றும் ஸ்கார்ஸேஸியே குறிப்பிடுகிறார். உலகை திரும்பி பார்க்க வைத்த இந்த படத்தில், துணை கதாபாத்திரத்தில் ராபர்ட் டி நிரோ நடித்திருப்பார். இந்த படத்தில் தான் ஸ்கார்ஸேஸி-டி நிரோ கூட்டணி உருவானது. அதன் பின் அவர்கள் இருவரும் இணைந்து ஏழு படங்களில் பணியாற்றினார். அதில் ஆறு படங்கள் உலகின் சிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது படைப்புகளிலேயே தலைசிறந்த படைப்பாக கருதப்படுவது, டிநிரோவின் நடிப்பில் 1976-யில் வெளியான டாக்ஸி டிரைவர். வியட்நாமில் போர் பணியாற்றிவிட்டு திரும்பும் கதாநாயகன் நியூயார்க்கில் டாக்ஸி டிரைவராக வாழ்க்கையை தொடங்குகிறான். தன்னை துரத்தும் தனிமையிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். ஒரு கட்டத்தில் தனிமை அவனை முழுவதுமாக ஆட்கொண்டுவிட, அவனுக்கு மனப் பிறழ்ச்சி ஏற்படுகிறது. தான்தான் உலகை காக்க வந்த ஹீரோ என்று நினைத்துக்கொண்டு சட்டத்தை கையில் எடுக்கிறான். முழுக்க முழுக்க மனோதத்துவ தளத்தில் இயங்கும் இந்த படத்தில், அமெரிக்க போர் வீரர்கள் வியட்நாம் போரின் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் எப்படி தவிக்கிறார்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருக்கும். பெர்பெக்ட் திரைக்கதையாக கருதப்படும் இந்த திரைக்கதையை எழுதியவர் ஸ்கார்ஸேஸியின்  நண்பர் பால் ஸ்க்ரேடர். உலக சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை ஸ்கார்ஸேஸி பெற்றது இந்த படத்தின் மூலம் தான். பின் அவர் இயக்கிய நியூயார்க் நியூயார்க் படம் பெரும் தோல்வியை சந்தித்தது. அதனால் திரைப்பட துறையிலிருந்து ஒதுங்கி இருந்த அவர், போதை பழக்கத்திற்கு அடிமையாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருக்கு ஊக்கம் அளித்து, அவரை மீண்டும் திரைத்துறைக்கு டி நிரோ அழைத்து வர, புதிய உத்வேகத்துடன் ஸ்கார்ஸேஸி இயக்கிய படம் தான் ரேஜிங்க் புல் (1980). இந்த படத்திற்கும் பால் ஸ்க்ரேடர்தான் திரைக்கதை எழுதினார். இந்த படம் டி நிரோவிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை பெற்று தந்தது. ஜேக் லொமாடா என்ற குத்துசண்டை வீரரின் வாழ்க்கையை பற்றிய படம் இது. கருப்பு வெள்ளையில் எடுக்கபட்ட இந்த படம், நவீன கருப்பு வெள்ளை திரைப்படங்களின் வரிசையில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

அதன் பின் அவர் சில சிறந்த படங்களை இயக்கினாலும், அவர் மீண்டும் முத்திரை பதித்தது குட்பெலாஸ் (1990) படத்தில் தான். இதுவும் ஒரு நிஜ மாஃபியாவை பற்றிய படம் தான்.  ஸ்கார்ஸேஸி  பெரும்பாலும் நிஜ மனிதர்களின் வாழ்க்கையை தழுவியே படங்களை உருவாக்குவார். எனினும் அவை ஆவணப் படங்கள் போல் காட்சியளிக்காதபடி பார்த்துக் கொள்வார். சினிமா என்பது பொழுதுபோக்கு ஊடகம் என்பதை அவர் நான்கு உணர்ந்து வைத்திருப்பதால், அவர் படங்களில் சுவாரஸ்யத்திற்கு குறை இருக்காது. மேலும், புது உத்திகளை மேற்கொள்ள அவர் என்றுமே தயங்கியதில்லை. இவர் படங்களில் படத்தொகுப்பிற்கும் ஆடியோகிராபிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சிறப்பான படத்தொகுப்பின் மூலம் கதையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதை உணர்தியவர் அவர். ரேஜிங் புல் தொடங்கி வால்ஸ்ட்ரீட் வரை அவர் படங்களுக்கு படத்தொகுப்பு செய்துவருகிறார் தெல்மா சூன்மேக்கர் எனும் பெண்மணி. தெல்மா சிறந்த படத்தொகுப்பிற்காக மூன்று முறை ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். மூன்றுமுறையும் ஸ்கார்ஸேஸியின்  படங்களுக்காக தான் அந்த விருதுகளை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கார்ஸேஸியின் திரை மொழி அலாதியானது. சிறப்பான விசுவல்களின் மூலம் கதை சொல்லும் திறம்படைத்தவர் அவர். இந்தியாவின் அனுராக் கஷ்யப், கௌதம் மேனன் ஆகியோரின் படங்களில் ஸ்கார்ஸேஸியின்  திரைமொழியின் தாக்கத்தை நிறைய பார்க்கலாம்.

ஸ்கார்ஸேஸியின் படங்களில் பணிபுரிந்த பலரும் ஆஸ்கர் விருதுகளை குவித்துக் கொண்டிருக்க, அவர் ஆஸ்கார் விருது வாங்கியது 2007-யில் தான். டிபார்டட் (2006) படத்திற்காக அவர் அந்த விருதை பெற்றார். இன்பெர்னல் அபைர்ஸ் என்ற சீன படத்தை தழுவி உருவாக்கபட்ட இந்த படத்தில், டிகாப்ரியோ, மாட் டேமன், ஜாக் நிகல்சன் என ஒரு ஸ்டார் பட்டாளமே நடித்திருக்கும். போலீஸ் உளவாளியான ஒரு கதாநாயகன் மாஃபியா கூட்டத்தை பிடிக்க அந்த கூட்டத்தில் மாறுவேடத்தில் நுழைவான். போலீஸ் அதிகாரியான இன்னொரு கதாநாயகன், அதே மாஃபியா கூட்டத்தோடு தொடர்பு வைத்திருப்பான். இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே கதை. இந்த படத்திற்கு பின் அவர் ஷட்டர் ஐலாண்ட் என்ற மனோதத்துவ த்ரில்லர் படத்தையும், ஹுகோ என்ற பீரியட் படத்தையும் இயக்கினார். இப்போது தன்னுடைய எழுபத்தி ஒன்றாவது வயதில் வால் ஸ்ட்ரீட் படத்தை இயக்கி, மீண்டும் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். அவர் விருதை வென்றாலும், வெல்லாவிட்டாலும் அவர் உலக சினிமாவில் தனக்கென்று ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக்கொண்டார் என்பதே உண்மை.