குறுநாவலுக்காக ஓர் பரிசு- புகைப்படங்கள்

கடந்த வாரம் (14.03.2023) மதுரையில் நடந்த திருமதி. செண்பகம் ராமசுவாமி அவர்களது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவு நாளில், கணையாழி குறுநாவல் போட்டியில் – மூன்றாம் பரிசு பெற்ற “கடைசி நாள்’ என்கிற குறுநாவலுக்காக எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

நன்றி மு.ராமசுவாமி மற்றும் கணையாழி

புத்தகப் பரிந்துரை எனும் மாயை

புத்தகக் காட்சியின் போது புத்தக பட்டியல்களும் பரிந்துரைகளும் தவறாமல் வெளியாவது தவிர்க்க முடியாத சம்ரதாயமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு வருடாவருடம் பட்டியல்களின் எண்ணிக்கையும் ‘நான் வாங்க விரும்பும் புத்தகங்கள்’ அல்லது ‘கவனிக்க வேண்டிய புத்தகங்கள்’ போன்ற பட்டியல்களை வெளியிடும் எழுத்தாளர்கள்-விமர்சகர்கள்-அதிதீவிர வாசகர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. அவர்கள் அந்த புத்தகங்களை வாங்குகிறீர்களா அல்லது வாசித்துவிட்டுதான் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

பலதரப்பட்ட புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் பட்டியல்களின் நோக்கம் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுமட்டும் தான் நோக்கமா என்றால் ‘இல்லை’ என்று உறுதியாக சொல்ல முடியும்.

இங்கே வெளியிடப்படும் எல்லாப் பட்டியல்களிலும் சிலபல பொதுத்தன்மைகள் இருப்பதை கவனிக்க முடியும். பலர் வெளியிடும் பட்டியல்களையும் ஒப்பிட்டு பார்த்தால் அதில் பெரும்பாலான புத்தகங்கள் ஒன்றாகவே இருக்கும். இது எப்படி சாத்தியமாகிறது! உதாரணமாக பத்து புத்தகங்கள் கொண்ட பரிந்துரையில் ஆறிலிருந்து ஏழு புத்தகங்கள் எல்லா பட்டியல்களிலும் இடம்பெறும். அப்படியெனில் அவை மட்டும் தான் நல்ல புத்தகங்களா? கடந்த ஆண்டு வெளியான சிறந்த புத்தகங்கள் என்றெல்லாம் பட்டியலிடுபவர்கள் உண்மையில் எத்தனை புத்தகத்தை வாசித்துவிட்டு அந்த பட்டியலை தயார் செய்கிறார்கள்? கவனிக்க வேண்டிய புத்தகங்கள் எனில் எப்படி குறிப்பிட்ட புத்தகங்கள் மட்டுமே அவர்களின் கவனத்திற்கு வருகிறது?

இதுபோன்ற பட்டியல்களை வெளியிடும் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள்/ விமர்சகர்கள் அனைவரும் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பள்ளியை (School of thought) பின்பற்றுபவர்களாக இருப்பார்கள். அல்லது என் நண்பன், நண்பனின் நண்பன் எனக்கு நண்பன் என்ற அளவில் ஒரு mutual favour ஆக மாறிமாறி பட்டியல்களை நிறைத்துக் கொள்கிறார்கள். இங்கே படைப்பை விட படைப்பாளி முக்கியமாகிவிடுகிறான். அவன் என்ன எழுதினாலும், எப்படி எழுதினாலும் பிரச்சனை இல்லை, எனக்கு தெரிந்தவன் என்ற முறையில் அவன் பெயரை என் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கட்டாயம் உருவாகிறது.

இன்றைய இணைய சூழலில் எழுத்து என்பது ‘கம்பல்சன்’ ஆகிக் கொண்டே வருகிறது. நான் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்கிற கம்பல்சனுக்கு எழுத்தாளன் அடிமையாகிவிடும் போது, அவனுக்கு இது போன்ற mutual favour-கள் தேவைப்படுகிறது.

அடுத்து, பொதுவாகவே நம் சமூகத்தில் இருக்கும் ‘Collective Unconscious’ மனநிலை. ஏதோ ஒரு விஷயம் காரணமே இன்றி கொண்டாடப்படுவதற்கு காரணம் இதுதான். பிள்ளையார் சிலை பால் குடித்தது நான் பார்த்தேன் என்பது போல நான் படித்தேன் அது நல்ல புத்தகம் என்று பல பட்டியல்கள் இங்கே உண்டு. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இது போல பெரும் சப்தத்தை ஏற்படுத்தி காணாமல் போன பல படைப்புகளை தனியாகவே பட்டியலிட முடியும் என்பதே முரண்.

இதை எல்லாம் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டுமா என்றால், ஒரு வாசகனாக ‘ஆம்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வேன். படைப்பு, வாசிப்பு இரண்டுமே சுதந்திரமான அனுபவம். ஒரு எழுத்தாளனை அல்லது ஒரு பள்ளியை பின்பற்றி அவர்கள் சொல்வதையே வாசித்து அவர்களைப் போலவே எழுதி தன்னையும் ஒரு தீவிர இலக்கியவாதியாக, பார்போற்றும் படைப்பாளியாக நிலை நிறுத்திக் கொள்ள போராடும் ‘கம்பல்சன்’ எழுத்தாளனுக்கு இருக்கலாம். வாசகனுக்கு ஏன் இருக்க வேண்டும்?

அப்படியெனில் பட்டியல்களே தவறா என்றால் ‘இல்லை’. பட்டியல்களை ஒரேடியாக ஒதுக்கிவிட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவற்றை முற்றிலுமாக மனப்பாடம் செய்து வாசிக்க அது பள்ளிக்கூட சிலபசும் அல்ல. ஒரு ஆரம்ப கால வாசகனுக்கு பட்டியல் என்பது நல்லதொரு தொடக்கப்புள்ளியாக இருக்கும். அங்கிருந்து நாம் எதை கண்டடைகிறோம் என்பதே முக்கியம்.

பட்டியல்களை கடந்து நல்ல புத்தகங்களை ஒரு வாசகன் எப்படி தேடி கண்டடைவது என்று கேட்டால் சக வாசகனாக நான் இரண்டு உத்திகளை சொல்கிறேன்.

ஒன்று ‘genre’ ரீடிங். ஒரு குறிப்பிட்ட வகை புத்தகத்தை படிக்க தொடங்கியபின் அதே வகைமையை தேடிச் செல்வது. காதல் என்றால், புத்தம் வீடும் காதல் தான், கடல் புறத்திலும் காதல் உண்டு, கன்னியிலும் உண்டு, கறிச்சோரிலும் உண்டு. மாய யதார்த்தம், War Novel என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட வகையை தேர்ந்தெடுத்து அவற்றை தேடி வாசிப்பது.

இன்னொன்று ஒரு புத்தக கடைக்கோ, அல்லது புத்தக காட்சியின் அரங்கிற்கோ, இணைய தளத்திற்கோ சென்று எந்த முன்முடிவுகளுமின்றி புத்தகங்களை வாங்கி படிப்பது. நல்ல புத்தகமெனில் அது நம் நினைவில் தங்கும். நல்ல படைப்பாளியை நமக்கு அறிமுகம் செய்யும். இல்லையேல் அது ஒரு கெட்ட கனவு, அவ்வளவே.

சுதந்திரமான வாசிப்பனுபவம் என்பது நாம் வாசிக்கும் புத்தகத்திற்கு நம்மை நாமே ஒப்புக் கொடுப்பது. அப்படி செய்யும் போது அந்த புத்தகமே நம்மை வேறொரு புத்தகத்தை நோக்கி இட்டுச் செல்லும். அத்தகைய வாசிப்பு நம்முள் நிகழ்த்தும் மாற்றங்கள் ஏராளம்.

ஒரு படைப்பாளி தன்னை எவ்வளவு ப்ரொமோட் செய்து கொண்டாலும், எவ்வளவு விருதுகளையும் அங்கீகாரங்களையும் தன் வசப்படுத்திக் கொண்டாலும், அவன் மனதிலிருந்து எழுதாதவரை  அவன் அடையப் போவது ஒன்றுமே இல்லை.  அதே போல் தான் வாசகனும். பரிந்துரைகளில் புத்தகங்களை தேடுவதை விடுத்து, திறந்த மனதோடு புத்தகங்களை தேடிச் செல்லுங்கள். பொக்கிஷங்கள் கைவந்து சேரும்.

பத்தாண்டு பயணம்

இன்று இந்த  இணையதளம்  தன்னுடைய பத்தாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

இது என் வாழ்வின் மிக முக்கியமான பத்தாண்டுகள். தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தளம் தொடங்கப்பட்டது. ஆனாலும் மனம் விரும்பும் எல்லாவற்றையும் எழுதிடும் உந்துதலையும் வாய்ப்பையும் இந்த தளம் தான் கொடுத்து வருகிறது.

ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.

இன்னும் எழுதுவோம்.

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம்

தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி

தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என்னுடைய 3 பிஹெச்கே வீடு என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

இன்றைய (27.06.2021) தினமணி கதிரில் கதை வெளியாகி இருக்கிறது

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம்.

சென்னை புத்தகத் திருவிழா

அந்தாதி வெளியீடாக வந்துள்ள என்னுடைய தட்பம் தவிர், ஊச்சு, கொஞ்சம் திரைக்கதை மற்றும் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி ஆகிய புத்தகங்கள் சென்னை புத்தகத் திருவிழாவில் பனுவல் அரங்கில் கிடைக்கும்.
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்.

Book fair promo.jpg

ஒரு இலக்கிய விமர்சகர்

இன்று தமிழின் பிரபல இலக்கிய விமர்சகராக அறியப்படும் ரகு ஒருகாலத்தில் ரஹோத்தமன் என்ற பெயரில் புனைவுகள் எழுதினார் என்பது இன்றைய இணைய சமூகத்தில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் எழுதிய மூன்று புனைவுகளிலும் புனைவுத் தன்மை துளிக் கூட இல்லை என்று அப்போதைய பிரபல டெல்லி விமர்சகர் குற்றம் சாட்ட, “அது பின்நவீனத்துவ புனைவு உனக்கெல்லாம் புரியாது” என்று ரஹோத்தமன் மூன்று சந்தாதாரர்கள் கொண்ட இரும்பு யானை (தனி சுற்றிற்கு மட்டும்) இலக்கிய இதழில் காட்டமாக ஒரு எதிர்ப்பு கட்டுரை எழுதியும் டெல்லிக்காரர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

“பின்நவீனத்துவம் என்றாலே வெட்டி ஓட்டுவது போல் இருக்க வேண்டிய அவசியமில்லை ரஹோத்தமா” என்று டெல்லிக்காரர் பதிலுக்கு சொன்னது இன்றுவரை ரகுவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

Oru ilakiya vimarsagar.jpg

Pic courtesy: Anouar olh

புனைவு எழுதுவது தனக்கு வராது என்று புரிந்துகொண்ட ரஹோத்தமன், விமர்சனம் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தஸ்தாவ்ஸ்கி, பாப்லோ நெருதா, இத்தாலோ கால்வினோ, தரிசனம், நிகழ மறுத்த அற்புதம், மகா உன்னதம், அடுக்குகள், உள் மடிப்பு, ஆழ்ந்த ரசனை போன்ற டெம்ப்ளேட் வார்த்தைகளை போட்டு (கறார்) விமர்சனம் எழுதி விமர்சனத் துறையில் அவருக்கு முன்னரே சிலர் கோலோச்சி விட்டிருந்தபடியால் அதே பாணியில் ரஹோத்தமன் எழுதிய விமர்சனத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. வாழ்க்கை வெறுத்து, ஒரு பவுர்ணமி நாளில், மெரீனா கடலில் குதித்துவிடலாம் என்று அவர் போன போது தான் அந்த தடி புத்தகம் கரை ஒதுங்கியது.

STRAIGHT FROM THE HEART, SHORT STORIES BY COLONEL ABU

புத்தகத்தை எடுத்துப் புரட்டினார் ரஹோத்தமன். பல பக்கங்கள் நீரில் மூழ்கி நைந்து போயிருந்தது. தெளிவாக இருந்த சில பக்கங்களைப் படித்தார். புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ரஹோத்தமனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை என்று எண்ண வேண்டாம்.  அந்த புத்தகத்தை எழுதிய  அபுவிற்கு ஆங்கிலப் புரிதல் சரியாக இல்லாததால் புத்தகம் அப்படி சிக்கலான மொழியில் உருவாகி இருந்தது.

கொலம்பியன் எழுத்தாளரான அபு ஸ்பானிய மொழியில் ஏராளமான சிறுகதைகளை எழுதிக் குவித்திருந்தும் அந்த நாட்டு விமர்சகர்கள் அவரை தொடர்ந்து நிரகாரித்து வந்திருந்தனர். ஹருக்கி முரக்காமியின் மீதும் அகிரா குரோசாவா மீதும் வைக்கப் பட்ட அதே குற்றசாட்டு அபு மீதும் வைக்கப்பட்டது. அதாவது முரக்காமி, குரோசாவாவின் படைப்புகளை போல் அபுவினுடைய படைப்புகளும் மேலை நாட்டு மக்களை திருப்தி படுத்ததுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன, அவரது படைப்புகளில் பிராந்திய தன்மை (குறிப்பாக கரிசல் தன்மை) கொஞ்சம் கூட இல்லை என்று கூறி விமர்சகர்கள் ஒரு சேர கொடி பிடித்தனர். அப்போதுதான் அபுவிற்கு தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஐடியா பிறந்தது. எப்படியாவது இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்த அபு மொழிப்பெயர்ப்பாளர்களை தேடத் தொடங்கினார்.

இப்போது போலவே அப்போதும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கிடைப்பது குதிரைக் கொம்பாக தான் இருந்தது. இறுதியாக ரபாஸா என்ற அமெரிக்க பேராசிரியரை தொடர்பு கொண்டார் அபு. அது ஈமெயில் அறிமுகமாகி இருக்காத காலம் என்பதால் புத்தகத்தை தபாலில் தான் அனுப்ப வேண்டும் என்கிற சூழல்.

அவ்வளவு செலவு செய்ய வேண்டாம், நான் கொலம்பியா வரும் போது நேரிலேயே புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ரபாஸா. சில ஆண்டுகள் கழித்து, சாண்ட்டா மார்த்தா நகரத்திற்கு வந்திறங்கிய ரபாஸா புத்தகத்தோடு தன்னை சந்திக்க வரும்படி அபுவுக்கு கடிதம் எழுதினார். அபு வசித்த அரக்காடாக்கா கிராமத்திற்கும் சாண்ட்டா மார்த்தாவிற்கும் இடையே வெறும் என்பது கிலோமீட்டர் தூரம் தான். ஆனால் அபுவின் மனதிலிருந்த ஈகோ அவரை வெகு தூரம் தள்ளி வைத்திருந்தது. ஒரு எழுத்தாளன் எப்படி மொழிபெயர்ப்பாளனை போய் சந்திப்பது என்று கர்வம் கொண்டிருந்த அபு, ஒரு மாதக் காலம் ரபாஸாவை சந்திக்காமல் இழுத்தடித்தார்.   அப்படியாவது ரபாஸா தன்னை தேடி வருகிறாரா என்று பார்த்தார். ரபாஸா வரவில்லை. இறுதியாக, “காரியம் பெருசா வீரியம் பெருசானா காரியம் தான் பெருசு அபு” என்று அபுவின் மாமா செங்குண்டோ மரணப்படுக்கையில் சொல்லிவிட்டு சாக, அபு தன்னுடைய தொண்ணூற்றி ஆறு சிறுகதைகளையும் எடுத்துக் கொண்டு ரபாஸாவை சந்திக்கச் சென்றார்.

“மன்னிக்கவும் அபு, வேறொரு எழுத்தாளரும் என்னை அணுகினார். அவரின் நாவல் அருமையாக இருந்தது. நீங்கள் வரவில்லை என்பதால் நான் அவரின் நாவலை மொழிபெயர்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார் ரபாஸா

“யார் அவன்?” என்று கோபமாக கேட்டார் அபு.

“கேப்ரியல். உங்க ஊர்காரர்தான்”

“அந்தப் பத்திரிகைக்காரனா?

“ஆமா…”

“அவன் என்ன பெருசா எழுதிடுவான்! நேத்து வந்தவன்லாம் எனக்கு போட்டியா?” என்று அபு கோபமாக கத்த, ரபாஸா புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.

“அவன் எழுதுறதுலாம் வெறும் குப்பை. நான் வேறொரு நல்ல மொழிபெயர்ப்பாளர பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினார் அபு. ஆனால் அபுவிற்கு வேறு மொழிப்பெயர்ப்பாளர் கிடைக்கவே இல்லை. சில வருடங்களில், காப்ரியலின் நாவல் ரபாஸாவின் மொழிபெயர்ப்பில் ‘One hundred years of solitude’ என்ற தலைப்பில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

அபு சுவற்றில் முட்டிக் கொண்டார். அவருடைய ஆக்ரோசம் தணியவில்லை. நாளுக்கு நாள் அவருடைய வயதோடு சேர்ந்து, பொறாமையும் ஈகோவும் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், “நீங்கள் என்ன பெயர்ப்பது மொழி, நானே பெயர்கிறேன்டா மொழி” என்று கோபமாக தன் கதைகளை தானே மொழிபெயர்க்க முடிவு செய்தார்.

உடனே ஒரு ஆக்ஸ்போர்ட் அகராதியை வாங்கி இரவுப் பகலாக போராடி தன்னுடைய கதைகளை மொழிப் பெயர்த்து முடித்தார். ஆனால் அவருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லாததால், கதைகளில் ஏகப்பட்ட இலக்கணப் பிழை இருந்தது. வாக்கியங்கள் கோர்வையற்று காட்சி தந்தன. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், பிரிண்ட் ஆண் டிமாண்டில் அந்த புத்தகத்தை ஐம்பத்தி இரண்டு பிரதிகள் பிரசுரித்து ஐம்பத்தி இரண்டு நாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைத்தார். இந்தியா வந்த கப்பல் நடுகடலில் கவிழ்ந்துவிட, அந்த புத்தகம் ஐநூற்றி சொச்சம் நாட்டிகல் மைலை சில ஆண்டுகளில் கடந்து ரஹோத்தமனின் கையில் கிடைத்த அந்த நன்னாளில்,

வானில்
மட்டும்
முழுநிலா
தோன்றி யிருக்கவில்லை,
ரஹோத் தமனின்
வாழ்விலும்
தான்…

அந்த புத்தகம் ரஹோத்தமனுக்கு நம்பிக்கையை தந்தது. அபுவின் எழுத்தில் இருக்கும் கோர்வையற்ற தன்மையே (Grammar Mistake) அபுவின் தனித்துவம் என்று மறு நாளே ஒரு பத்திரிகையில் எழுதினர் ரஹோத்தமன். ‘துரை யார்யாரையோ படிக்குது’ என்ற அளவில் அவருக்கு நிறைய வாசகர்கள் உருவானார்கள்.

ரஹோத்தமன் ரகுவானார். அபுவின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு அவர் எழுதும் விமர்சனத்தை ரசிக்கவே ஒரு பெரும் கூட்டம் உருவானது. ரகுவும் தனக்கென்று ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிக் கொண்டார்.

எந்த விமர்சனமும் நாலு பக்கம் இருக்கும் படி பார்த்துக் கொள்வார். முதல் பக்கத்தில் தன்னைப் பற்றி தானே பெருமையாக எழுதுவார். இரண்டாவது பக்கத்தில் அபுவைப் பற்றி எழுதுவார். மூன்றாவது பக்கத்தில் அபுவின் கதைகளைப் பற்றி சிலாகிப்பார். நான்காவது பக்கத்தில் விமர்சனத்திற்காக எடுத்துக் கொண்ட கதையை அபுவின் கதையோடு ஒப்பிட்டு எழுதுவார்.

கதை பிடிக்காவிட்டால், “அபுவோட ஒப்பிடும் போது இந்த கதை குப்பை என்பேன்…” என்று எழுதுவார்.

பிடித்துவிட்டால், “தமிழுக்கு கிடைத்த அபு..” என்பார்.

வெறும் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே அவருக்காக பக்கங்கள் ஒதுக்கிய பத்திரிக்கைகள், தினமும் அவருக்காக பல பக்கங்களை ஒதுக்கத் தொடங்கின.

ரகு வளர்ந்தார். ஆர்குட்டில் வாசகர் வட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ரகு நினைத்தால் எதுவும் சாத்தியம் என்று நிலை வந்தது. பேஸ்புக்கும் வந்தது. அவர் வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து வந்த பலரும் தன்னிச்சையாக விமர்சனம் எழுத ஆரம்பித்தனர். ஆனால் யாராலும் ரகுவை நெருங்க முடியவில்லை. எதிரிகள் அதிகமாக அதிகமாக ரகுவின் ஆளுமையும் வளர்ந்தது. அவர் நினைத்தால் கட்டுரைகளை கூட, சிறுகதைகள் என்று நம்ப வைப்பார். நல்ல சிறுகதைகளை உதவாத கதைகள் என்றும் நம்ப வைப்பார். ஐந்து சிறுகதைகளை சேர்த்து இது ஒரு நாவல் என்று நம்பவைப்பர். சுமாரான கதையை தமிழின் ஆகச் சிறந்த கதை என்று நம்ப வைப்பார்.

அவரின் கைகளில் கொட்டுவாங்கவே பல எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளோடு அவர் வீட்டு வாசலில் நிற்கத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் தமிழில் நவீன படைப்புகள் தீர்ந்துவிட, சங்க இலக்கியங்கள் பக்கம் தன் பார்வையை திருப்பினார் ரகு.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டு, “யாருடா அவன் தொல்காப்பியன், குப்பையா எழுதிருக்கான், எங்க அபு போல வருமா…” என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. புதுக்கவிஞர்கள் கம்மென்று இருக்க, மூன்று மரபுக் கவிஞர்கள் ரகுவை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ரகு எதற்கும் அசரவில்லை.

“சும்மா போறீங்களா! இல்ல உங்க கவிதைகள விமர்சிச்சு புக்கு எழுதவா?” என்று கேட்க மிரண்டு போன மரபுக் கவிஞர்கள் பின்வாங்கினார்.

அதன்பின் விமர்சகர் ரகுவை விமர்சிக்க யாரும் பிறக்கவில்லை.

இன்று ரகு, தமிழின் ஆகச் சிறந்த இலக்கிய விமர்சகர். தவிர்க்க முடியாத ஆளுமை. அவரது விமர்சனங்கள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவுஸ்தெர்லியாவை சேர்ந்த முனைவர் தியான் க்ரே ஜாயரோடு இணைந்து ரகு எழுதிய ‘உலக இலக்கிய விமர்சன கோட்பாடு’ என்ற புத்தகம் இதுவரை பத்து மில்லியன் பிரதிகள் விற்று இருக்கின்றன.

ஏரளமான விருதுகள் அவரை தேடி வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் தங்கள் நாட்டில் நடக்கும் இலக்கிய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைத்தது.  ஸ்பான்சர்ஷிப்பில் சென்று நாட்டை நன்றாக சுற்றிப் பார்த்தார்.

மாலையில் விடுதியில் ஒயின் அருந்திக் கொண்டிருந்த போது, தொண்ணூற்றி ஒன்பது வயதான கிழவர் ஒருவர் தன் கொள்ளுப் பேரன்களின் தோள் பற்றிக்கொண்டு தள்ளாடி தள்ளாடி ரகுவை நோக்கி நடந்துவந்தார்.

“வணக்கம் señor, நான், எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியா. உங்க விமர்சனம்லாம் படிச்சிருக்கேன். நான் உங்களுடைய பெரிய ரசிகன்” என்று கைக்கூப்பினார் கிழவர்.

அந்த நேரத்தில் அவரை அங்கே விரும்பாத ரகு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார்.

கிழவர் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு சிறு புத்தகத்தை எடுத்து நீட்டினார்.

“Aureliano’s Memoirs” என்று அத்த புத்தகத்தில் கொட்டையாக எழுதியிருந்தது.

“இது என்னுடைய லேட்டஸ்ட் புக். அனேகமா இதுதான் என்னுடைய கடைசி புக்கா இருக்கும்.. சின்ன புக்குதான் நீங்க ஒரு நைட்ல படிச்சிடுவீங்க. நீங்க இதப் படிச்சிட்டு நாளைக்கு நடக்கப் போற இலக்கிய விழால நாலு வார்த்த பேசனும். போற உசுரு நிம்மதியா போகும்…”

அந்த புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்ட ரகு, “இந்த வயசுல உனக்கு என்ன கிழவா புக்கு…” என்று தோரணையில் கிழவரைப் பார்த்தார்.

“நாளைக்கு பாப்போம் señor” கிழவர் நகர்ந்தார்.

மறு நாள் ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் ரகுவிற்காக காத்திருந்தனர். அவர் வரவில்லை. முந்தையநாள் இரவில் கே டிவியில் பாட்ஷா படத்தை பார்த்து விட்டு தாமதமாக தூங்கியதன் விளைவு. ஒருங்கிணைப்பாளர் ரகுவை அழைத்து வர இரண்டு பேரை அனுப்பினார்.

அவர் வரும் வரை மக்களை சமாளிப்பதற்காக, அவுரிலியானோ புந்தியாவை பேச வைக்கலாம் என்று முடிவு செய்தார்.

“தொண்ணூற்றி ஒன்பது வயதிலும் அயராது இலக்கியம் வளர்க்கும் எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியாவை பேச அழைக்கிறேன்…”

நிதானமாக மேடை ஏறினார் அவுரிலியானோ புந்தியா. இவர் என்ன பேசப் போகிறார் என்று எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். ஓரிருவர் வேண்டா வெறுப்பாக கைத் தட்டினர்.

“Bonjour. நூறு வயசு ஆகப் போகுது. இப்ப திரும்பி பாத்தா நான் என் வாழ்க்கைய இன்னும் சிறப்பா வாழ்ந்திருக்கலாமோனு தோணுது.  எழுத்து எழுத்துன்னு ஓடினேன். நூறு பேரு என்ன வாசிச்ச போது ஆயிரம் பேர் படிக்கணும்னு பாராட்டணும்னு ஆசை. ஆயிரம் பேர் படிச்ச போது லட்சம் பேரு பாராட்டணும்னு ஆசை. ஒரு கட்டத்துல அந்த பாராட்டு தான் எனக்கு பெருசா தெரிஞ்சுச்சு. திமிரும் கர்வமும் ரொம்ப அதிகமாச்சு. பாராட்டுக்காக எழுதினேனே ஒழிய திருப்திக்காக எழுதலா. ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிச்சு. எழுத்தாளனும் சாதாரண மனுஷன் தான், இந்த புகழ் அங்கீகாரம் எல்லாம் வெறும் மாயைனு. எழுத்தாளர விடுங்க. மத்த மனிஷங்க எப்படி இருக்கீங்க! எப்ப பார்த்தாலும் எதை நோக்கியோ ஓடிகிட்டே இருக்கோம். அங்கீகாரம், பாராட்டு, புகழ், பணம் எதுவுமே பத்தல பத்தலனு நம்மள நாமே ஏமாத்திகிட்டு இருக்கோம்.

“நம்மளோட போலி முகத்த காமிச்சு காமிச்சு நம்ம நிஜ முகமே மறந்து போயிடுது. நான் அதிக நேரம் எடுத்துகுல. உங்க எல்லாருக்கும் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல.

ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

அவுரிலியானோ புந்தியா கையெடுத்து கும்பிட, அனைவரும் பலத்த கர ஒலி எழுப்பினர். அவர் அமைதியாக தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

தன்னை வரவேற்கத் தான் எல்லோரும் கைத்தட்டுகிறார்கள் என்ற பெருமிதத்தோடு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தார் ரகு.

“இப்போது The great critic ரகு அவுரிலியானோ புந்தியாவின் புத்தகம் பற்றி பேசுவார்”

“பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறுமை பாரு…”

பாட்ஷா படம் தான் அவர் மனதில் ஓடியது. புத்தகத்தை படிக்கவில்லை என்று சொல்ல முடியாது. திரும்பி போக ஸ்பான்சர் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை.

சரி சமாளிப்போம் என்று மேடை ஏறினார் ரகு.

தன்னுடைய வழக்கமான நான்கு பக்க டெம்ப்ளேட்டை கையில் எடுத்தார்.

முதலில் தன்னைப் பற்றி பேசினார். அரங்கம் முழுக்க அமைதியாக கேட்டது.

அடுத்து அபுவைப் பற்றி அபுவை சந்தித்ததைப் பற்றி அவரோடு சேர்ந்து உடும்பு கறி உண்டதைப் பற்றி சொன்னார். எல்லோரும் அமைதியாக கேட்டனர். அடுத்து அபுவின் சிறுகதை ஒன்றை ஆராய்ந்து பேசிவிட்டு, இறுதியாக அவுரிலியானோ புந்தியாவின் memoir ஏன் மிகச் சுமாரான புத்தகம் என்று அபுவின் எழுத்தோடு ஒப்பிட்டு பேசினார். கண்ணீல் நீர் வழிய அவுரிலியானோ புந்தியா கேட்டுக் கொண்டிருந்தார். அதை கவனித்த ரகு, அவுரிலியானோ புந்தியா தன்னை அங்கீகரிக்கிறார் என்று முடிவு செய்து தொடர்ந்து பேசினார்.

“அவுரிலியானோ புந்தியாவின் எழுத்தில் செழுமை இல்லை. அதுதான் மிகப் பெரிய சிக்கல். வெறும் செய்தியாக அவருடைய memoir நின்றுவிடுகிறதே ஒழிய உணர்வு ரீதியாக எந்த அதிர்வையும் அது ஏற்படுத்தவில்லை. அவர் இன்னும் நிறைய எழுதி பழக வேண்டும். குறிப்பாக அவர் கொலம்பிய எழுத்தாளர் அபுவை வாசிக்க வேண்டும்…”

அரங்கம் நிசப்தமானது. ஒவ்வொருவரும் அருகில் இருந்தவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.

அங்கே நிலவிய அமைதியை கலைக்கும் விதத்தில் ஒரு சிரிப்பு சப்தம் கேட்டது. அதிர்ந்து போய் பார்த்தார் ரகு. முன்வரிசையில் அமர்ந்திருந்த அவுரிலியானோ புந்தியா தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

ரகு  முறைத்தார்.  அபு சிரிப்பை நிறுத்துவதாக இல்லை.

“ஏன் சிரிக்குறீங்க…” ரகு கோபமாக கேட்டார்.

எழுந்து நின்ற அவுரிலியானோ புந்தியா, “உங்க பேர் என்ன?”

கிழவனுக்கு பைத்தியம் என்று எண்ணிய ரகு அமைதியாக இருந்தார்.

“சொல்லுங்க…”

“ரகு..”

“முழு பெயர்?”

“ரஹோத்தமன்…”

புன்னகை செய்த அவுரிலியானோ புந்தியா சொன்னார்,

“படிச்சசேன், விக்கி பீடியால படிச்சேன். ரகுவோட முழு பெயர் ரஹோத்தமன். அதே மாதிரி தான் உங்களுக்கு புடிச்ச அபுவோட முழு பெயர் அவுரிலியானோ புந்தியா”

மீண்டும் வெடித்து சிரித்தார் அபு (எ) அவுரிலியானோ புந்தியா. மொத்த அரங்கமும் கைகொட்டி சிரித்தது. சிலர் எழுந்து நின்று விழுந்து புரண்டு சிரித்தனர்.

அவமானம் தாங்காமல் அங்கிருந்து கிளம்பினார் ரகு. சென்னை வந்ததுமே அவர் தன் தளத்தில் எழுதினர்,

“பிரெஞ்சு அரங்கில், அறிஞர்கள் என் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினர்”

ஒரு ஆங்கில நாளிதழ், “Standing Ovation for Indian Literary Critic” என்று ரகுவின் படம் போட்டு கட்டுரை வெளியிட்டது.

***

ரகு போலி தான். அவரைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள  தேவையில்லை. உண்மையில் வாழ்க்கையில் நாம் நிறைய போலிகளை கடந்து வருகிறோம். அவர்கள் யாரைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. அபு அரங்கில் பேசியதை மட்டும் கருத்தில் கொள்வோம். அது தான் நமக்கான புத்தாண்டு செய்தியும் கூட.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல. ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

Happy New Year Folks.

With love

Aravindh Sachidanandam

Kindle: Pen to Publish ஏன் அவசியம்!

Amazon Kindle Pen to publish போட்டியின் மார்கெட்டிங் அல்லது லாபியிங் பிரச்சனைகளாக முன்வைக்கப்படும் விஷயங்கள் வெறும் கிண்டிலுக்கு மட்டுமே உரித்தானவை அல்ல என்பதை உறுதியாக சொல்ல முடியும். பொதுவாகவே தமிழ் எழுத்துலகில் கொஞ்சம் ‘காண்டக்ட்ஸ்’ உள்ள அல்லது தொடர்புகளை வளர்த்துக்கொள்ளக் கூடிய ஒரு எழுத்தாளரால் சுமாரான ஒரு படைப்பை தமிழின் ஆகச்சிறந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கிவிட முடியும். அதுவும் சமூக வலைத்தளங்களின் வருகைக்குப்பின் இது இன்னும் எளிதாகி விட்டது.

போதாகுறைக்கு ஏரளாமான சிறுசிறு குழுக்கள் பல விருதுகளை தங்களுக்குள்ளே அறிவித்துக்கொண்டு, இறந்த எழுத்தாளர்களின் எழுத்துலக வாரிசு என்று தங்களுக்கு பிடித்தவர்களை மட்டும் அறிமுகப்படுத்தி சந்தோசப் பட்டுக் கொண்டும் இருக்கின்றன.

இத்தகைய பாரபட்சமானகாலகட்டத்தில் ‘Kindle Self-Publishing’ நமக்குகிடைத்த மிகப் பெரிய வரம். யாரும் யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திடமுடியும் என்ற ஒரே காரணம் போதும் அதை நாம் வரவேற்க.

ஆனால் யாரும் பதிப்பிக்கலாம் என்ற இந்த சுதந்திரமே பல சிக்கல்களையும் கொண்டு வந்திருக்கிறது என்பதும் உண்மைதான். ‘எழுத்தாளன்’ என்ற அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்காகவே துரிதகதியில் பதிப்பிக்கப்படும் மேலோட்டமான எழுத்துக்கள் கிண்டிலில் ஏராளம் உண்டு. எனினும் இதையெல்லாம் மீறி பல நல்லப் படைப்புகள், முன்பைவிட அதிக அளவில் கிண்டிலில் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. நல்லப் படைப்புகள் அதற்கான காலத்தில்தானாகவே தன் வாசகர்களைக் கண்டுகொண்டுவிடும், நல்லதல்லாதவை காலப் போக்கில் ஒதுங்கிக் கொள்ளும் என்பதால் இதைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

Pentopublish போட்டி என்று வரும் போது, அதிக வாசக வரவேற்பு பெரும் புத்தகங்களே அடுத்த சுற்றிற்குதேர்வாகும் என்பதை நம் எழுத்தாளர்கள் literal-ஆக புரிந்து கொண்டுவிட்டதன் விளைவு தான் தற்போது நடக்கும் ‘ரேட்டிங் அரசியல்’. இப்படி செய்வது தவறு என்றுசொன்னால் இரண்டு விதமான எதிர்வினைகள் வரும்.

ஒன்று, மார்கெட்டிங் செய்யத்தெரிந்தோர் செய்கிறார் அதில் என்ன தவறு என்பார்கள்.  சிறுவட்டத்தினுள்ளிருந்து தன் எழுத்து திறமையை மட்டுமே நம்பி போட்டியில் கலந்து கொள்பவருக்கோ அல்லது ஒரு முழுநேர எழுத்தாளருக்கோ இருக்கும் தொடர்புகளைவிட ஒரு MNC ஊழியருக்கு அல்லது கல்லூரி மாணவருக்கு அதிக நேரடி தொடர்புகள் இருக்கும். நண்பன், நண்பனின் நண்பன் என்று பெரும் வட்டத்தை உருவாக்கி வைத்திருப்போரால் மிக எளிதாகநிறைய ரேட்டிங்கை பெற்றுக் கொள்ளமுடியும், அந்த படைப்பிற்கு அத்தகைய தகுதி இல்லை என்றாலும். இது மார்கெட்டிங் அல்ல லாபியிங் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன்.

கடந்த வருடம் இதே போட்டியில், சில ஹிந்திப் பெயர்கள் கொண்ட ஆசாமிகள் ஒரு தமிழ் புத்தகத்திற்கு ரேட்டிங் செய்திருந்ததை கவனித்தேன். ஒருவேளை தமிழ் படிக்க தெரிந்த ஹிந்திக்காரர்களாக இருப்பர்களோ என்னமோ! யாரோ ரேட்டிங் வாங்கிக் கொண்டு போகட்டும் நமக்கு என்ன பிரச்சனை என்று இருந்துவிட முடியாது. அற்பணிப்போடு ஒரு படைப்பை எழுதுவதைவிட, அதை ப்ரமோட் செய்வது மட்டுமே முக்கியம் என்ற நம்பிக்கையை இத்தகைய செயல்கள்விதைத்துவிடும், அது நம் எழுத்துலகிற்கு தான் நஷ்டம்.

இன்னொரு எதிர்வினை, நன்றாக இருப்பதால் தான் நிறைய பேர் வாசிக்கிறார்கள் என்பார்கள். நிறைய பேர் வாசிக்கிறார்கள் அதனால் அவர் நல்ல எழுத்தாளர் என்பார்கள். இந்தப் புரிதலை இன்றைய இணைய சூழலில் மாற்றுவதுகடினம். பிள்ளையார் பால் குடிக்கிறார், ஆம் குடிக்கிறார் நானும் பார்த்தேன் என்ற வகையில் தான் இன்று நிறைய படைப்புகள் மற்றும் படங்கள் கொண்டாடப்படுகின்றன.இது இணையம் ஏற்படுத்தும் பாதிப்பு. Virtual Collective Consciousness.

இத்தகைய பிரச்சனைகளை எல்லாம் மீறி நாம் இது போன்ற போட்டிகளை வரவேற்க வேண்டிய காரணம் முன்பு சொன்னதுபோல், யாரும்யாருடைய ஆதரவுமின்றி புத்தகத்தை பதிப்பித்திட முடியும் என்பதே. தன் முதல் படைப்பை எழுதும் எழுத்தாளருக்கும், பல படைப்புகளை எழுதியவருக்கும் சரிசமமான மேடையை இத்தகைய போட்டிகள் உருவாக்கித் தருகின்றன. மற்றபடி இதில் இருக்கும் லாபியிங் சிக்கலை தனி மனித அறத்தால் மட்டுமே களைய முடியும்.

இதில் கலந்து கொண்ட, கலந்து கொள்ளப் போகும் அத்தனைப்பேருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிபெறுபவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டியது,பரிசு தன் எழுத்துத் திறமைக்கா அல்லது மார்க்கெட்டிங் திறமைக்கா என்பதையே. எழுத்துத் திறமையை விட மார்க்கெட்டிங் திறமை மேலோங்கிவிட்டதாக அவர் உணர்வாராயின்,இன்னும் அதிக பொறுப்புடன், அற்பணிப்புடன்அடுத்த படைப்பை எழுத வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. எழுதுவார் என்று நம்புவோம்.

திறம்பட எழுதியும், மார்கெட்டிங் சாத்தியப்படவில்லை என்றோ பரிசைப் பெறமுடியவில்லை என்றோ யாரும் வருத்தப்பட தேவையில்லை. எப்போதும்  சொல்வது போல், எழுத்தாளன் என்ற அடையாளத்தை தக்கவைத்துக் கொள்வதைவிட, பரிசுகள் விருதுகளை பெறுவதைவிட, தொடர்ந்து அற்பணிப்புடன் எழுதுவது மட்டுமே முக்கியமாகிறது.

எழுதுவோம்…

Stephen King.jpg
தொடர்புடைய பதிவுகள்

தமிழில் ஆன்லைன் செல்ஃப்-பப்ளிஷிங் ஏன் அவசியம்?

ஒன்பதாவது ஆண்டில்…

இந்தத் தளம் இன்று தன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்தத் தளம் தான் எனக்கான சிற்றிதழ், வெகுஜன இதழ், திரைக்கதை இதழ் என எல்லாமுமாக இருக்கிறது.

Versatile-ஆகா, Consistent-ஆகா கதைகள் எழுதவே இந்தத் தளத்தை தொடங்கினேன். அதை விடாமல் செய்யமுடிகிறது என்பதில் மகிழ்ச்சி உண்டு.

என்ன எழுத வேண்டும், என்னவெல்லாம் எழுதிவிடக் கூடாது, எந்தத் தொனியில் எழுதிவிடக் கூடாது என்று சொல்லித்தந்தது இந்தத் தளம் தான்.

மணிரத்னம் படைப்புகள் புத்தகத்தை படித்து, “Translation is pathetic” என்றார் ஒருவர்.

ஒரு நடிகரின் அலுவலத்தில் என்னை விட வயதில் இரண்டுமடங்கு மூத்த  Production Manager என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டு,

“யோவ் தம்பி, நான் எட்டாம் கிளாஸ் தான் படிச்சிருக்கேன். படிக்க ரொம்ப ஈசியா இருந்துச்சுயா இந்த புக். அருமையா தமிழ் பண்ணிருக்க…!” என்றார்.

கைக்குட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும் கதையை ஒரு பக்கத்திற்கு மேல் படிக்க முடியவில்லை என்று ஒருவர் மெயில் அனுப்பி இருந்தார்.

“சின்ன வயசுல எங்க ஆயா புடவையை போத்திகிட்டு தான் தூங்குவேன். எல்லாரும் தப்பா பேசுவாங்க. இந்த கதை படிக்கும் போது அவங்க நினைப்பு வந்திருச்சு… ரொம்ப புடிச்சிருக்குபா” என்று வேலூரில் இருந்து அறுபது வயதுக்காரர் ஒருவர் போன் செய்து கண் கலங்கினார்.

தட்பம் தவிர் டைம் பாஸ் கதை என்றார் ஒருவர். இது அறிவார்ந்த படைப்பு, எங்களது மாதிரி நீதிமன்றத்தில் வழக்குகளை கையாள மிகவும் துணையாக இருந்தது என்றார் ஒரு சட்டக் கல்லூரி மாணவி.

இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு எழுதுகிறோம் என்று சொல்வதற்கில்லை. அப்படியெல்லாம் எழுதவும் முடியாது. நம் எழுத்து யாரை எங்கே எப்படி பாதிக்கிறது என்று நமக்குத் தெரியாது என்பதே சொல்ல விளைவது.  மேலும் இங்கே எல்லோரையும் திருப்தி படுத்த முடியாது. அப்படி திருப்தி படுத்த முயற்சிப்பது எழுத்தாளனின் வேலை அல்ல.

எழுத்தாளனின் வேலை, எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், எழுதுவது மட்டுமே. நம் எழுத்து எங்கே யாரை சென்று அடைய வேண்டும் என்பதை காலம் பார்த்துக் கொள்ளும்…

மற்றபடி எழுதுவது பிடித்திருக்கிறது என்பதுதான் தொடர்ந்து எழுதுவதற்கான ஒரே காரணமாக இருக்க முடியும். குடும்பமும் நட்பாய் துணையாய் நிற்பது கூடுதல் பலமாக இருக்கிறது.

இப்போது முறையாக மனோதத்துவம் பயின்று வருகிறேன். வரும் ஆண்டுகளில் எளிய தமிழில் மனோதத்துவம் பேச வேண்டுமென்று ஆசையும் திட்டமும் இருக்கிறது.

நன்றிகள், அன்பையும் ஊக்கத்தையும் கலந்து தரும் அத்தனைப் பேருக்கும்…

எப்போதும் நம்புவது ஒன்றைத்தான். எழுத்தாளன் என்ற அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதை விட, தொடர்ந்து எழுதுவது முக்கியமாகிறது…

Once again thank you all for your love and support…

aravindhskumar.com is growing like never before…

aravindhskumar anniversary.jpg

 

முன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்

நண்பர் ஆரூர் பாஸ்கரின்  ‘அந்த ஆறு நாட்கள்’  குறுநாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து…

புயலுக்கு முன்…

கடல் கடவுள் போசிடானின் கோபமே புயலாக, சூறாவளியாக வெளிப்படுகிறது என்ற பண்டைகால கிரேக்கர்களின் நம்பிக்கைக்கும், கடலின் மேற்பரப்பில் ஏற்படும்  காற்றழுத்த தாழ்வு நிலையே புயலாக உருவெடுக்கிறது என்ற புரிதலுக்குமிடையே மனித இனம் பெரிதும் வளர்ந்துவிட்டது. மனிதன் கண்டுகொண்ட தொழிநுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆனால் இயற்கை இயற்கையாகவே சீரிய காலம் போய், கடந்த அறைநூற்றாண்டில் மனிதனின் பேராசைகள் இயற்கையை அதிகமாகவே சீண்டி (சுரண்டி)விட்டதால்தான், இயற்கை பூமி மீது இறக்கம் காட்டாமல் வழக்கத்தைவிட அதிகமாகவே பூமியைத் தாக்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பூமி வெப்ப மயமாதல், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம் இதெல்லாம் மனிதனின் பேராசையின் பயன்கள். ஒவ்வொரு முறையும் இயற்கை, புயலாக, வெள்ளமாக, அடைமழையாக மனிதனை நோக்கி சீறும் போது மட்டுமே, மனிதனால் இயற்கையை என்றுமே வெல்ல முடியாது என்ற உண்மை நமக்கு உரைக்கிறது. இதற்கு வளர்ந்த நாடுகளும்  விதிவிலக்கல்ல.

அதுவும் குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சூறாவளி தாக்குதல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக போய்விட்டது. அதில் அமெரிக்க மாநிலங்களிலேயே அதிக சூறாவளியை சந்திக்கும் மாநிலமான ப்ளோரிடாவை, கடந்த ஆண்டு (2017) தாக்கிய  இர்மா சூறாவளியை மையமாக வைத்து நண்பர் ‘ஆரூர்’ பாஸ்கர் புனைந்திருக்கும் குறுநாவலே ‘அந்த ஆறு நாட்கள்’

Irma3

பெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய கேட்டகிரி ஐந்து வகை ‘இர்மா’ புயல், கதை நாயகன் பரணி வசிக்கும் ப்ளோரிடாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் நாளில் கதைத் தொடங்குகிறது. பின் அவனுள் நிகழும் போரட்டமே இந்நாவல். ஆனால் வெறும் அகப் போராட்டமாக மட்டும் நாவல் நின்றுவிடவில்லை. அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி, அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றி, அவர்களின் பாசங்குகளைப் பற்றி, அந்த நிலத்தின் அரசியல், கொள்கை மாற்றங்களைப் பற்றி, அங்கே இந்தியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பற்றி,  மூலக் கதையிலிருந்து விலகாமல் கதையினூடே பதிவு செய்துகொண்டே போகிறார் பாஸ்கர். அதுவே இந்த நாவலின் சிறப்பம்சமாக கருதுகிறேன்.

ஏனெனில் இந்த கரு புதிது. களமும் புதிது. நாம் அதிகம் சந்தித்திராத ஒரு இயற்கைச் சீற்றத்தை மையமாக கொண்டது கதைக்கரு. கதை நடக்கும் தேசமோ, பலருக்கும் பரிச்சயம் இல்லாத ஒரு இடம்.  ஆனால் பாஸ்கரின் விவரணைகள் அந்த தேசத்தை நமக்கு பரிச்சயமாக்குகிறது. அதன் சாலைகள், அந்த ஊரின் கட்டுமானங்கள்,  சுற்றி இருக்கும் ஏரிகள், அதில் தலை தூக்கி பார்க்கும் முதலைகள் என கதைக்கு தேவையான விவரங்கள் சில இடங்களில் தகவல்களாகவும், சில இடங்களில்  துல்லியமான காட்சிகளாகவும் விவரிக்கப்பட்டிருப்பதால் நம்மால் எளிதாக நாவலின் உலகிற்குள் நுழைந்து விட முடிகிறது

மேலும், பரணி ஒரு சாதாரண மனிதனாகவே நமக்கு அறிமுகமாவதால்  அவனோடு நம்மை தொடர்புபடுத்தி கொள்ள நமக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை. அவன் எந்த சாகசங்களையும் செய்யக்கூடியவன் அல்ல. இந்த யதார்த்தமான சித்தரிப்பே கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. மேலும், நிதானமாக நகரும் கதையில் புயலின் வரவால் பரணியின் வாழ்வில் பரவும் இறுக்கம், ஒரு கட்டத்தில் நம் மனதிலும் பரவுவதை உணரலாம். அதுவே கதைசொல்லலின் வெற்றி.

ஒவ்வொரு முறையும் இயற்கை கருணை காட்டாமல் போகும் நேரத்திலெல்லாம் நம்மிடம் மிச்சமிருக்கும் மனிதமே நம்மை மீட்டெடுக்கிறது. அண்மையில் வீசிய கஜா புயல் வரை இதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் தடுக்க முடிந்த பேராபத்துகளை முன்கூட்டியே தடுப்பதற்கு நமக்கு மனிதத்தோடு சேர்ந்து ஒரு பொறுப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. அதை நாவலிலும் பதிவு செய்திருக்கிறார் பாஸ்கர். ‘இந்த பூமி நமக்கானது, மனித இனத்துக்கானது. இதை அடுத்த தலைமுறையிடம் சரியாக ஒப்படைப்பது நமது கடமையாகிறது’. பரணியின் மனதில் எழும் இந்த எண்ணங்கள் தான் நமக்கான முக்கிய செய்தியும் கூட. ஏனெனில், இயற்கையைப் பாதுகாக்க சரசாரி மனிதர்களான நாம் மிக பெரிய மாற்றத்தை எல்லாம் செய்யவேண்டியதில்லை. இயற்கை நேரடியாக நமக்கு தந்த வளங்களையும், நாம் அதிலிருந்து கண்டுகொண்ட வளங்களையும், நம்முடைய முந்தைய தலைமுறைகள் நமக்கு விட்டுவைத்ததைப் போல, அடுத்த தலைமுறைக்கு நாமும் மிச்சம் வைக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியோடு நாம் இயற்கையை பாதுகாத்தாலே  போதும். இந்த பூமியும் அதன் வளங்களும் தப்பிக்கும். இல்லையேல் நாவலில் சொல்வது போல், இயற்கை தன் அடியாட்களை பூமி நோக்கி அனுப்பிக் கொண்டே இருக்கும்.

அரவிந்த் சச்சிதானந்தம்
சென்னை. டிசம்பர் 23, 2018

நாவலை அமேசானில் வாங்க 

கதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் அறிவுசார் சொத்துரிமை தரவரிசை பட்டியலில் இந்தியா வெகுநாட்களாகவே கடைசி பத்து  இடங்களுக்குள் தான் இருக்கிறது. அறிவுசார் சொத்துரிமை என்பது காப்புரிமை, பதிப்புரிமை, வர்த்தக குறியீடு என இன்னும் பல படைப்புகளின் (கண்டுபிடிப்புகளின்) உரிமையை உள்ளடக்கியது. அதாவது படைப்புகளின் உரிமை படைத்தவர்க்கே சொந்தம் என்பதே அறிவுசார் சொத்துரிமை கொள்கை.

பல ஆண்டுகளாக நாம் இதில் பின்தங்கி இருந்ததற்கான காரணம் வெறும் விழிப்புணர்வு சார்ந்தது மட்டும் அல்ல. இங்கே படைப்புரிமை கோருவதற்கான வழிமுறைகள் அவ்வளவு எளிதாக இல்லாமல் இருந்ததே. இருந்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலைமை பெரிதும் மாறி இருக்கிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடங்கி கல்லூரி ப்ராஜக்ட் வரை எல்லாவற்றையும் முன்பைவிட எளிதாக காப்புரிமை செய்து வைக்க முடியும். அப்படி இருந்தும் பல நேரங்களில் பல கம்பெனிகளுக்குள் பேட்டன்ட் சண்டைகள் நடப்பது உண்டு. தாங்கள் உருவாக்க நினைத்த ஸ்பார்க் பிளக்கை வேறொரு கம்பெனி அப்படியே உருவாக்கி விட்டதாக பிரபல இருசக்கர வாகன நிறுவனம் ஒன்று வெகு நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தது நினைவிருக்கலாம். அதுவும் கதை திரைக்கதை என்று வரும் போது இந்த ‘அடுத்தவர் கதைக்கு தன் பெயர் போட்டுக்கொள்ளும் பிரச்சனை நாம் மிக சகஜமாக சந்திக்கும் ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

கதை திரைக்கதை (இசை, கவிதை, கட்டுரை இன்னும் பல) உள்ளிட்ட கலைப் படைப்புகளை எப்படி காப்பிரைட் செய்வது என்று விவாதிக்கும் போதெல்லாம், காப்பிரைட் செய்வதன் அவசியம் என்ன என்று கேள்வி தான் முதலில் எழுகிறது. ஏனெனில், இந்திய (உலக) காப்பிரைட் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பாளி ஒரு படைப்பை உருவாக்கியதுமே அதன் உரிமை அவருக்கு சேர்ந்துவிடுகிறது (அதாவது ஆக்கியவனுக்கே உரிமை). அவர் அந்த படைப்பை பதிப்பித்திருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. பல புத்தகங்களின் டைட்டில் பக்கத்தில் ‘காப்பிரைட்’ குறியீடைப் போட்டு பக்கத்தில் எழுத்தாளர் பெயரையோ அல்லது பதிப்பாளர் பெயரையோ போட்டிருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் யாரும் தனியாக காப்பிரைட் செய்வதில்லை. படைப்பவர்க்கே, சிலநேரங்களில் பதிப்பிப்பவர்க்கே படைப்பின் உரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் புத்தகத்தில் அப்படி போட்டுக் கொள்கிறோம். (ஒரு படைப்பாளி ஒரு படைப்பை தன் முயற்சியில் நேரடியாக எழுதாமல், ஒரு பதிப்பாளுருக்கான பணியாக அதை செய்து தரும் போது அதன் உரிமை பதிப்பாளரைச்  சேரலாம்)

அப்படியிருக்க மெனக்கெட்டு ஒரு படைப்பை ஏன் காப்பிரைட் செய்ய வேண்டும்?

ஒருவர் நம் படைப்பை நம் உரிமையின்றி எடுத்துக் கொண்டார் என்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருக்க வேண்டும். அது படைப்பை காப்பிரைட் செய்தால் ஒழிய சாத்தியம் இல்லை. அதனால் காப்பிரைட் என்பதை சட்டப்பூர்வமான ஆவணம் என்றும் கொள்ளலாம்.

ஆனால் ‘Ideas cannot be copyrighted’ என்கிறது காப்பிரைட் சட்டம். அதாவது ஒரு சிந்தனைக்கு நாம் உரிமை கோர முடியாது. உதரணமாக, ஒரு நாடோடி இளைஞன் ஊர் ஊராக சுற்றித் திரிகிறான் என்று ஒரு கதை கருவை நாம் சிந்தித்து வைத்திருக்கிறோம். இந்த கருவை  நாம் பலரிடம் சொல்லியும் இருக்கலாம். இதே கதை கருவில் ஒரு நாவலோ படமோ வந்தபின் இது என்னுடையது என்று நாம் உரிமை கோர இயலாது. அதை காப்பிரைட் செய்தும் வைக்க முடியாது. ஏனெனில் நம்மிடம் இருந்தது வெறும் ‘Idea’. அதையே அந்த சிந்தனைக்கு நாம் ஒரு வடிவம் கொடுத்து (Expressions) அதை நாவலாகவோ ஒரு திரைக்கதையாகவோ எழுதிவிட்டால், அதை காப்பிரைட் செய்திட முடியும்.

திரைக்கதையை எப்படி காப்பிரைட் செய்வது?

தமிழ் சினிமா எழுத்தாளர்  சங்கம் இருக்கிறது. ஆனால் அங்கே சங்க உறுப்பினர்களால் மட்டுமே தங்கள் திரைக்கதைகளை பதிவு செய்துகொள்ள முடியும். உறுப்பினர் ஆவதற்கு தமிழ் சினிமாவில் ஒரு படமாக பணியாற்றி இருக்க வேண்டும், உதவி இயக்குனர் என்றோ அல்லது வேறு கிரெடிட்டோ வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் உண்டு. அதனால் எல்லோருக்கும் சாத்தியப்படக் கூடிய வழி இல்லை இது.

சினிமாவில் நேரடியாக இயங்காத ஒருவர், தன் திரைக்கதைகளை (கதைகளை) காப்பிரைட் செய்துகொள்ளும் வழிமுறைகளை தெரிந்துகொள்வது மிக முக்கியம். காரணம், வருங்காலத்தில் திரைக்கதை ஆசிரியர்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கும். இப்போதே கதைகளுக்கான தேடல் நம் சினிமாவில் நிறைய உண்டு. அதுவும் அண்மைக்காலத்தில் கதை வறட்சி என்பதை நாம் பெரும்பாலான படங்களில் காணலாம். பிரத்யேகமான திரைக்கதையாசிரியர்கள் நிறைய உருவாவதே இதற்கான தீர்வாக இருக்க முடியும். அதனால் மீண்டும் கதை இலாக்கா போன்ற பழைய ஸ்டுடியோ முறை வழக்கத்தில் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மேலும், வெப் சீரிஸ் போன்ற மாற்று வடிவம் பிரபலம் ஆகும்போது பல வகையான கதைகளுக்கு வரவேற்பு இருக்கும். அப்போது சினிமாவில் நேரடியாக இயங்காத திரைக்கதையாசிரியர்களுக்கு நிறைய வாய்ப்புகள் உருவாகும். அதனால் Spec திரைக்கதை (Speculative Screenplays) எழுத நினைப்போர், வெறும் ஒன் லைன்களை பகிராமல் அவற்றை முழு நீள திரைக்கதையாகவோ, அல்லது நாவலாகவோ எழுதி காப்பிரைட் செய்து கொண்டு பகிர்வது அவசியமாகிறது.

சினிமாவில் நேரடியாக இயங்காதவர் கதைகளை எப்படி காப்பிரைட் செய்வது?

SWA எனப்படும் திரைக்கதையாசிரியர்கள் சங்கத்தின் (Screenwriters Association) மூலம் திரைக்கதை, கதை, வசனம், பாடல்கள் படைப்புகளை காப்பிரைட் செய்துகொள்ள முடியும். மும்பையிலிருந்து இயங்கும் இந்த சங்கத்தில் பாலிவுட்டில் பணிபுரிபவர்கள் மட்டுமே சேர வேண்டும் என்றெல்லாம் இல்லை.  தமிழ் சினிமா சங்கத்தில் இருப்பது போலவே இவர்களுக்கும் சில விதிகள் உண்டு. ஆனால் SWA-வின் கூடுதல் சிறப்பு, திரைக்கதை எழுத ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானலும் எந்த மொழியில் எழுதினாலும் இதில் உறுப்பினர் ஆகலாம். அவர்களுக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அதற்காகவே fellow member என்றொரு பிரிவை வைத்திருக்கிறார்கள். மேலும், இணையத்தின் வழியே திரைக்கதைகளை register-செய்து கொள்ளும் வசதியும் உண்டு. உறுப்பினர் ஆவதற்கு ஒரு தொகையும், பின் திரைக்கதைக்கு ஒரு தொகையும் (ஒரு பக்கத்திற்கு இரண்டு ரூபாய்) செலுத்திவிட்டால் ஸ்கிரிப்ட் பதிவாகி விடும். பின் பதிவு எண்ணோடு  அந்த ஸ்கிரிப்ட்டை உடனே டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். SWA-வின் கொள்கை படி உறுப்பினர் பதிவேற்றும் திரைக்கதை டாக்குமென்ட்டை அவர்கள் தங்கள் சர்வரில் சேமித்து வைப்பது இல்லை என்கிறார்கள். நாம் டவுன்லோட் செய்துகொள்ளும் ஸ்க்ரிப்டின் ஒவ்வொரு பக்கத்திலும், திரைக்கதையின் விவரங்களும்- காப்பிரைட் குறியீடும், கடைசி பக்கத்தில் பதிவு சான்றிதழும் இருக்கும். அதுவே நாம் திரைக்கதையை பதிந்ததற்கான ஆதாரம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு வெளிநாட்டு இணையத்தளத்தில் ஒரு திரைக்கதையை பதிந்து பார்த்தேன். அதுவும்  இதே முறை தான். ஆனால் கட்டணம் எதுவும் இல்லை. வெளிநாட்டின் காப்பிரைட் சட்டதிட்டங்கள் நம்மூரில் செல்லாது என்பது பின்புதான் தெரிந்தது. SWA-வில் அந்த பயம் வேண்டாம். இது இந்திய காப்பிரைட் சட்டத்திற்கு உட்பட்ட சங்கம்.

copyright

SWA இணையதளம்

திரைக்கதை மட்டுமில்லாமல் நாவல், இசை போன்ற படைப்புகளையும் காப்பிரைட் செய்வதற்கு இன்னொரு எளிய வழியும் உண்டு. இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக துறையின் கீழ் இயங்கும் ‘காப்பிரைட் அலுவலகம்’ மூலமும் இணைய வழியிலேயே படைப்புகளை பதிந்து கொள்ள முடியும். இதற்கு உறுப்பினர் கட்டணம் என்றெல்லாம் எதுவும் இல்லை. படைப்புகளுக்கு ஏற்ப பதிவு கட்டணம் மாறுபடுகிறது. உதரணமாக ஒரு நாவலை பதிவு செய்வதற்கு ஐநூறு ரூபாய் கட்டணம். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பணம் செலுத்திவிட்டால், விண்ணப்பம் முப்பது நாள் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படும். அந்த முப்பது நாளுக்குள் நாவலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும். (வெளியாகத நாவாலாக இருந்தால் வெறும் Manuscript மட்டும்).

முப்பது நாளில், யாரும் அந்த நாவல் விண்ணப்பதாரரின் பெயரில் பதியப்படுவதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், பதிவாளர் விண்ணப்பத்தை ஆராய்ந்து பதிப்புரிமையை கோரியவர்க்கே வழங்கிவிடுகிறார். பின் நாம் அனுப்பிய இரண்டு பிரதிகளில் ஒரு பிரதியில் பதிவாளர் கையொப்பமும் முத்திரையும் போட்டு அனுப்பி வைக்கிறார். கூடவே Copyright extract எனும் சான்றிதழையும் அனுப்பிவைக்கின்றனர். அதில் படைப்பின் முழு விவரமும், பதிவு எண்ணும் இடம்பெற்றிருக்கும். இதே முறையில், மேலும் பல கலைப்படைப்புகளை பதிவு செய்திட முடியும்.

காப்பிரைட் அலுவலக இணையதளம்

நாவலை காப்பிரைட் செய்து வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில் ஒரு நாவலை கவர்ந்து இன்னொரு நாவல் உருவாக்கும் பிரச்சனைகள் நம்மூரில் இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அதிகம் கவனிக்கப்படாமல் போகும் நல்ல நாவல்களிலிருந்து யாரவது சினிமா உருவாக்கி விட வாய்ப்பிருக்கிறது.

மேலும் திரைக்கதைகளை நாவலாக அடாப்ட் செய்யும் வழக்கம் ஹாலிவுடில் அதிகம். படமாகும் வரை அது வேறுபல ஆடியன்ஸை (வாசகர்களை) சென்றடையும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். அது அந்த கதைக்கு அதிக கவனத்தைப் பெற்று தரும். இந்த வழியில், ஒரு படைப்பாளி தன் திரைக்கதைக்கு நாவல் வடிவம் கொடுத்தால் அதை பதிவு செய்து வைத்துவிடலாம்.

ஆனால் வெறும் காப்பிரைட் மட்டுமே இந்த கதைத் திருட்டு பிரச்சனைகளுக்கு தீர்வாகி விடாது. காப்பிரைட் செய்யப்பட்ட ஒரு திரைக்கதையின் கருவை வைத்துக்கொண்டு யாரவது வேறோரு வடிவம் கொடுத்துவிட்டால் அது நம் கதை என்று நிரூபிப்பது சில நேரங்களில் கடினம் தான்.  கதைத் திருட்டு என்பது ‘ethics’ சார்ந்த விஷயம். சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் கொஞ்சம் அடிப்படை ethics இருக்குமாயின் இந்த பிரச்சனைகள் வராது.

மேலும், சினிமா என்று வரும்போது நம் படைப்புகளை பாதுகாத்து கொள்ள எளிமையான வழி, நமக்கான ethical circle-ஐ உருவாக்கி வைத்து கொள்வதே. யார் என்ன என்று தெரியாமல் படைப்புகளை பகிராமல் இருப்பது புத்திசாலித்தனம். ஒரு நட்பு வட்டத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்குள் அல்லது அவர்கள் மூலமாக இயங்கலாம். கதைகளை, திரைக்கதைகளை பகிரும் போது ‘Copyright registration எண்ணோடும் அல்லது சான்றிதழோடும் அதைப்  பகிர்வதன் மூலம் கதைத் திருட்டு பிரச்சனையை பெரிதும் தவிர்க்க முடியும்.

ஆனால் காப்பிரைட்டின் பிரதான நோக்கம் வெறும் கதைத் திருட்டை தவிர்ப்பது மட்டுமன்று. ஆரோக்கியமான படைப்பு சூழலை உருவாக்குவதே என்கிறது காப்பிரைட் சட்டம் (1957). காப்பிரைட் செய்யப்பட்ட படைப்புகள் வணிக ரீதியாக பகிரப்படும் போது, அல்லது வேறு வடிவம் பெறும் போது அதிலிருந்து ஈட்டப்படும் வருவாய் அந்த படைப்பாளிக்கும் போய் சேர வேண்டும். ஒரு பெரிய multilayered நாவலிலிருந்து பல படங்கள் உருவாக்கிட முடியும். தமிழில் அத்தகைய நல்ல நாவல்கள் நிறைய எழுதப் படுகின்றன. அப்படி ஒரு நாவலிலிருந்து மூன்று வெவ்வேறு படங்களை மூன்று இயக்குனர்கள் உருவாக்குகிறார்கள் என்றால், மூன்று படங்களுக்குமான  ராயல்ட்டியும் நியாயமாக அந்த படைப்பாளியை போய் சேரவேண்டும். காப்பிரைட் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும் போது இதெல்லாம் சாத்தியமாகும் என்று நம்புவோம்.