46 ஆவது சென்னை புத்தகத் திருவிழா

46 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில் என்னுடைய புத்தகங்களை ‘பனுவல் புத்தக நிலையத்தில் வாங்கலாம். அரங்கு எண் 199 & 200.

நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்

ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்-நாவல்

வணக்கம். என்னுடைய அடுத்த நாவல் ‘ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்’ வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

நன்றி

கதைச்சுருக்கம்

விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள்.
***
தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைரத்தை திருடிவந்து பூஜை செய்தால் பார் போற்றும் பணக்காரனாகலாம் என்று சங்கு சாமியார் சுனில் ஜெயினிடம் சொல்ல, அவர் தன் ஆஸ்தான அடியாள் பழனியை வைரத்தை கவர்ந்து வர அனுப்புகிறார்
***
சிறுசிறு கொள்ளைகளை செய்து வாழ்க்கையை ஓட்டிவந்த ‘டான் நம்பர் ஒன்’, இறுதியாக தீபிகா வீட்டில் இருக்கும் வைரத்தை கொள்ளை அடித்துகொண்டு வெளிநாட்டிற்கு தப்பிவிட திட்டம் தீட்டுகிறான்.
***
மாடல் அழகிகளை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் அனிருத்தின் பார்வை தீபிகாவின் மீது பட, அவன் தீபிகாவை கடத்தி வரும்படி தன் அடிமை இடும்பனுக்கு கட்டளை இடுகிறான்.
***
இவர்கள் எல்லோரும் ஒரு சுபயோக சுப இரவில் தீபிகாவின் வீட்டிற்குள் நுழைகிறார்கள்…
***

Get Ready for an Humorous Adventure

Available in Kindle

Click here to buy

ரஸ்தா- சிறுகதை

சாலை நீண்டுகொண்டே போனது. இன்னும் கொஞ்ச தூரம் என்று சொல்லியே நந்தி அனைவரையும் ஐநூறு கிலோமீட்டர் அழைத்து வந்துவிட்டான். நான்கரை நாட்களாக நடந்தும் விஜயவாடாவை தான் அடைந்திருந்தார்கள். அதே வேகத்தில் நடந்தால் புவனேஸ்வர், ஒடிஷா வழியாக பீஹாரை அடைய இரண்டு வாரங்கள் கூட ஆகலாம். அது நீண்ட வழி தான். சம்பல்புர் வழியாக சென்றால் இன்னும் துரிதமாக ஊரை அடைந்து விடலாம். ஆனால் ஒடிஷா தான் பிரச்சனை இல்லாத வழி, போலீஸ் கெடுபிடி அதிகம் இல்லை, ஆங்காங்கே சிலர் வாகனங்களில் ஏற்றிக் கொள்கிறார்கள், என்று சுனில் காக்கா முன்பே போனில் சொல்லியிருந்தார

அவர்கள் ஒரு மாதமாகவே ஊரடங்கு தளர்த்தப்படும், பீஹாருக்கு ரயிலோ பஸ்ஸோ விடப்பட்டால் அதில் தொற்றிக் கொள்ளலாம் என்று காத்திருந்தனர். ஆனால் நிலைமை மாறிய பாடில்லை. சுனில் காக்கா நடந்தே போய்விடலாம் என்ற யோசனையை சொன்ன போது நந்தி அதை மறுத்தான். பெண்கள் குழந்தைகளை எல்லாம் நடக்க வைத்தே அழைத்துக்கொண்டு போவது சாத்தியமில்லை என்று உறுதியாக வாதாடினான். ஆனால் வருங்காலத்தைப் பற்றிய பயம் அவன் உறுதியை குலைத்திருந்தது.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு சுனில் காக்கா தான் லகான்பூர் கிராமத்திலிருந்து கட்டிட வேலை செய்ய முதன்முதலில் சென்னைக்கு கிளம்பி வந்தவர். பின்னாடியே அவர் ஊரிலிருந்து ஒவ்வொருவராக வந்து இப்போது பதினைந்து பேர் ஆகி விட்டனர். எல்லோருமே கயரம்பேடில் தங்கி மறைமலைநகரை சேர்ந்த  ஒரு சிறு கான்டராக்டரிடம் வேலை செய்து வந்தனர். மூன்று வருடத்திற்கு முன்பு, நந்தியும் அவன் அண்ணன் முன்னாவும் பெயிண்டிங் வேலைக்காக  வந்து இணைந்துக் கொண்டனர். மார்ச் மாதம் மட்டும் கான்டராக்டர் கொஞ்சம் பணம் கொடுத்தார்.                                                                                                                                                  

“வேலைலாம் நிக்குது. பிளாட் வாங்குறேனு சொன்ன மூணு நாலு கஸ்டமர்ஸ் வேணாம்னு சொல்லிட்டாங்க” என்றார். அதன்பின் ‘நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது‘ என்ற பதில் மட்டுமே வந்தது. கையிலிருந்த பணத்தை வைத்து ஓரிரு மாதங்களை கூட  ஓட்டலாம். ஆனால் எவ்வளவு நாள் இந்த ஊரடங்கு நீண்டு கொண்டே போகும் என்று தெரியவில்லை. கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு வெயிலில் நடையாய் நடந்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை. அதிக பட்சமாக கயரம்பேடுக்கு வேன் பிடித்து திருப்பி அனுப்பி வைத்தனர் போலீசார். அவர்கள் மீண்டும் மீண்டும் அங்கே போய் நின்றது உதவி ஆய்வாளரை கோபப்படுத்திருக்க வேண்டும்.

“நீங்க எதுக்குயா இங்க வரீங்க! நீங்கலாம் கூடுவாஞ்சேரிலதான் இருக்கீங்கங்குறதுக்கு என்ன ப்ரூப் இருக்கு! கேஸ் பில்லாவது இருக்கா!” என்று கத்தினார்.

“விறகு அடுப்புக்கு எதுக்குங்க கேஸ் பில்!” என்று கேட்பதற்கு தயாராக நின்றான் நந்தி. அவன்தான் கூட்டத்திலேயே இளையவன். இருபது வயதுதான். எதற்கெடுத்தாலும் துடுக்காக பேசிவிடக்கூடியவன். சுனில் காக்கா அவனை பேசவிடாமல் தடுத்து வெளியே இழுத்து வந்துவிட்டார். அவருக்கு வயது நிறைய பக்குவத்தை கொடுத்திருந்தது. அறுபது வயதை கடந்தும் உழைத்துக் கொண்டிருந்தார். நன்றாக தமிழ் பேசுவார். கான்ஸ்டபிளை தனியாக சந்தித்து வணக்கம் வைத்தார்.

“இங்கலாம் வராதயா. நியூசன்ஸ் கேஸ்ல உள்ள வச்சிருவான் அந்த ஆளு” என்று ஆறுதலாக சொன்னார் கான்ஸ்டபிள். அவர் உதவக்கூடும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது.

“ஹெல்ப் பண்ணுங்க சாப்” என்றார் காக்கா. இருநூறு ரூபாய் அன்பளிப்பாக தர
வேண்டியிருந்தது. ஆனால் அவர் உதவுவதற்கு பதில் யோசனை சொன்னார்.

“இங்க இப்டி நடையா நடக்குறதுக்கு ஊருக்கே நடந்துரலாமே!

“உன் ஆளுங்கலாம் நிறைய பேர் அப்டி நடந்து போறாங்களாமே! அப்டியே போக வேண்டியதுதான!”

திரும்பி வீட்டிற்கு நடந்து வரும்போது நந்தி கோபமாக சொன்னான்,

“வஹ பக்வாஸ் பாத் கர் ரஹா ஹே காக்கா. அவ்ளோதூரம் எல்லாரையும் வச்சிக்கிட்டு எப்படி போறது!”

“வேற வழி இருக்கா சோட்டு….!” காக்கா நிதானமாக கேட்டார். நந்தியிடம் பதில் இல்லை.

“காசெல்லாம் தீந்து போனா என்ன பண்றது! நம்மல வச்சு இங்க யாராவது சோறு போடுவாங்களா! நாம இங்க எவ்ளோ உழச்சிருக்கொம். யாராவது ஒருத்தராவது நம்மகிட்ட அன்பா பேசிருக்காங்களா! ஏதாவது விசேஷத்துக்கு  கூப்புட்டு இருக்காங்களா! நம்ம வேலை பாத்த வீட்ல கூட கூப்பிட மாட்டாங்க! இங்க இருக்கவங்களுக்கு நாமெல்லாம் எப்பவுமே வெளி ஆளா தான் தெரிவோம். அவங்களப்  பொறுத்த வரைக்கும் நாம வேலை செய்ய வந்திருக்கோம். கம்மியான கூலிக்கு நிறைய வேலை செய்றோம்னு தான் நமக்கு கொஞ்சம் மரியாதை. வேலையே இல்லனா அந்த மரியாதையும் இருக்காது…”

காக்கா சொல்வது தான் எல்லோருக்கும் சரி என்று பட்டது. அவர்களிடம்  மூன்று செட் துணிமணிகள், கொஞ்சம் சமையல் பாத்திரங்கள் தவிர அதிக உடமைகள் எதுவும் இல்லை. கான்ட்ராக்டர் சில தற்காலிகமான தகர வீடுகளை  கட்டி கொடுத்து, நிரந்தரமாக அவர்களை அங்கேயே தங்க வைத்திருந்தார். அதிக வேலைகள் இருந்தால், வேலை செய்யும் இடங்களிலேயே தங்கிக் கொள்வார்கள். மற்ற நாட்களில் கயரம்பேடு தகர வீடுதான். அதனால் வீட்டை காலி செய்வது கடினமாக  இருக்கவில்லை.

காக்காவின் தலைமையில் மூன்று பெண்கள்,  ஐந்து ஆண்கள், நான்கு குழந்தைகள் கொண்ட முதல் குழு புறப்பட்டது.  நந்தியின் குடும்பமும் அவர்களோடு இணைந்து கொள்வது தான் திட்டம். ஆனால் கிளம்பும் நாளில் முன்னாவுக்கு காய்ச்சல் வந்து விட்டது. மூன்று நான்கு கிலோமீட்டர் தள்ளிதான் கிளினிக் இருந்தது. காக்காவை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டு நந்தி தன் அண்ணனை கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றான்.

காய்ச்சல் என்றதுமே டாக்டர் பதறினார்.

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் போ” என்றவர் அவர்களை உள்ளே விடவே மறுத்தார். உதவியாளரிடம், அவர்கள் நின்ற இடத்தில் கிருமி நாசினி தெளிக்கச் சொன்னார்.

நந்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஷேர் ஆட்டோ ட்ரைவர் சேவியர்க்கு போன் செய்தான். அந்த ஏரியாவில் நந்தியோடும் அவன் ஆட்களோடும் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே நட்போடு பழகி வந்தனர். அது ஒருவகையான ஆதாய நட்புதான்.

கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்திற்கும் கயரம்பேடுக்கும் போய் வர ஷேர் ஆட்டோ தான் பிரதான போக்குவரத்தாக இருந்தது.  நந்தியும்  அவன்  ஆட்களும் எப்போதுமே ஒரு குழுவாக வேலைக்கு சென்று வருபவர்கள் என்பதால் அவர்களை நிரந்தரமான வருமானமாக கருதினர் ஷேர் ஆட்டோ டிரைவர்கள். மேலும் அவர்கள் நம்மூர் ஆசாமிகள் போல் ஆட்டோ உள்ளிருக்கும் கூட்டத்தை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “வேணாம்” என்று சொல்லும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, ஒரு கால் வைக்கும் அளவிற்கு இடம் இருந்தால் கூட எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உள்ளே தொற்றிக்கொள்பவர்களாக  இருந்தனர். அதனாலேயே ஷேர் ஆட்டோ டிரைவர்கள், அவர்களுக்காக காத்திருந்து அழைத்துச் சென்றனர்.

“எப்பனாலும் எனக்கு போன் பண்ணு பையா. மத்த ஆட்டோல ஏறாத” என்று சொல்லி சேவியர் எப்போதோ தன் நம்பரை நந்தியிடம் கொடுத்திருந்தான்.

“இன்ஸ்பெக்டர் எங்க  ஊருக்காரர் தான் பையா. ஆனாலும் ஊரடங்குல ஏண்டா வெளிய வந்தீங்கன்னு கேட்டா நீ தான் கவனிக்கணும் சொல்லிட்டேன்”  பின்னிருக்கையில் அமர்ந்திருந்த நந்தியை ரியர்வ்யூ கண்ணாடியில் பார்த்தவாறே சேவியர்  சொன்னான்.

நந்தி, “ஓகே ஓகே”  என்றான். காக்கா, நந்தி முதன்முதலில் சென்னைக்கு வந்திருந்த போதே சொல்லியிருந்தார்.

“சோட்டு, போலீஸ் தேவையில்லாம கூப்ட்டு ஏதாவது கேட்பாங்க. நம்ப பாஷையும் அவங்களுக்கு தெரியாது. நம்ம சொல்றது புரியாம நம்மக்கிட்டயே கோபமா கத்துவங்க. அவங்ககிட்ட பேசத்தான் நான் தமிழே கத்துக்கிட்டேன். போலீஸ பாத்தா அடக்கமா பேசு. காசு கேட்டா, கைல இவ்ளோ தான் இருக்குனு நூறு ரூபாய கொடுத்துட்டு கிளம்பிரு…”

அதனால் நந்தி, வழியில் எந்த போலீஸ் தடுத்தாலும் அவர்களை எதிர்கொள்ள தயாராக  இருந்தான்.

டாக்டர் நந்தியையும் முன்னாவையும் பார்வையால் எடைப்போட்டார். முதலில் ஐயாயிரம் ரூபாய் கட்டச் சொன்னார். 

“அவ்ளோவா” என்று இழுத்தான் சேவியர்.

“யோவ் இந்த நேரத்துல ரிஸ்க் எடுத்து பார்க்குறோம் இல்ல! பிளட் டெஸ்ட்லாம் பண்ணனும். அவனுக்கு சாதா ஜுரமா வேற ஏதாவதானு யாருக்கு தெரியும்! வேணும்னா
ஜி. எச்சுக்கு போ” என்று கோபத்தை வெளிப்படுத்தினார் டாக்டர். கையிலிருக்கும் மொத்த பணமும் செலவானாலும் பரவாயில்லை, அண்ணனுக்கு கொரோனா ஜுரம் வந்திருக்கக் கூடாது என்று கபிலேஸ்வரரை வேண்டிக் கொண்டு பணத்தை கட்டினான் நந்தி.

டாக்டர் முன்னாவை ஆராய்ந்துவிட்டு, “நார்மல் பீவர் தான். ரெண்டு நாள் தொடர்ந்து ஜுரம் இருக்கா பாருங்க… இருந்தா, நீங்க மூணு பேருமே செங்கல்பட்டு ஜி.எச் போய் கொரோனா டெஸ்ட் பண்ணிக்கோங்க” என்று சொல்லி அனுப்பினார்.

வரும்வழியில் சேவியர் புலம்பிக் கொண்டே வந்தான்.

“பையா! டாக்டர் ஏமாத்திட்டான் பையா. நம்மலாம் உழைப்பாளிங்க. நமக்குலாம் கொரோனா வராது.  அது பணக்காரங்க நோயுனு முதலமைச்சரே சொல்றாரு. ஆனா இந்த டாக்டர் டெஸ்ட் பண்ணாமயே காச புடுங்கிட்டான் பையா…”

நந்தி எதுவும் பேசவில்லை. தன் அண்ணன் குணமாக வேண்டும் என்று கபிலேஸ்வரரை வேண்டிக் கொண்டே வந்தான்.

முன்னா குணமானதும் கிளம்பலாம் என்று சுனில் காக்கா சொன்னதும், கிளம்புவதற்கு  தயாராக இருந்த மற்றவர்களின் முகத்தில் ஏமாற்றம் வெளிப்பட்டதை நந்தி கவனிக்காமல் இல்லை. அதனாலேயே மற்றவர்களை அழைத்துக் கொண்டு செல்லும்படி காக்காவை வற்புறுத்தினான். அப்படிதான் சுனில் காக்கா தன்னோடு பன்னிரண்டு நபர்களை  அழைத்துக் கொண்டு முதலில் புறப்பட்டார்.

முன்னாவிற்கு மறுநாளே காய்ச்சல் குறைந்துவிட்டது. ஆனால் உடம்பு தான் சோர்வாக இருப்பதாக சொன்னான். அவன் தேறி வருவதற்கு பத்து நாட்களுக்கு மேலாக  ஆகிவிட்டது. அதற்குள் காக்கா ஒடிஷா முகாமை அடைந்திருந்தார். அங்கிருந்து தங்களை அழைத்துச் செல்ல பேருந்து வரும் என்று அங்கே இருந்தவர்கள் சொன்னதாக நந்தியிடம் தெரிவித்தார்.

“இன்னும் எழுநூறு கிலோமீட்டர் நடக்குறது மிச்சம்” என்றார். நந்திக்கும் அதைக் கேட்க சந்தோஷமாக இருந்தது. முதலில் இரண்டாயிரம் கிலோமீட்டருக்கு மேல் நடக்க வேண்டும் என்பது மலைப்பாக இருந்தது. இப்போது அதில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது என்பது தான் அந்த சந்தோசத்திற்கு காரணம். சீரான வேகத்தில் நடந்தால் அதிகபட்சம் பன்னிரண்டு நாட்களில் ஒடிஷாவை அடைந்து விடலாம் என்று திட்டம் போட்டான். மறுநாள் காலையில், தன் அண்ணன், அண்ணி மற்றும் அவர்களின் இரு பிள்ளைகளோடு நந்தி நடக்க ஆரம்பித்தான். திருவள்ளூர் சாலை வழியாக விறுவிறுவென நடந்து அடுத்தநாள் மாலையிலேயே அவர்கள் நெல்லூரை அடைந்தனர். நடப்பது கடினமாக இருந்தாலும், வருங்காலம் தெளிவற்று இருந்தாலும், தன் கூட்டிற்கு திரும்பிப் போகிறோம் என்ற ஆழ்மன சந்தோசமே அவர்களை முன்னோக்கி நகர்த்தியது. அதுவும் நந்திக்கு ஒருவருடத்திற்கு பிறகு தன் அம்மாவைப்  பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் கூடுதல் சந்தோசத்தை தந்தது. ஆனால் சுனில் காக்காவிடமிருந்து வந்த போன் நந்தியின் உத்வேகத்தை குலைத்தது. இரண்டு நாட்களாகியும் ஊரிலிருந்து எந்த வண்டியும் வரவில்லை என்றார் அவர். மற்ற ஊர்களிலிருந்து பேருந்துகள் வந்ததாகவும், பீஹார் அரசு எந்த உதவியும்  செய்யவில்லை என்று முகாம் அதிகாரிகள் சொன்னதாகவும்  சொல்லி வருத்தப்பட்டார். அங்கேயே காத்திருப்பதற்கு பதிலாக தொடர்ந்து  நடந்துவிட  முடிவு  செய்துவிட்டதாக சொன்னார்.

“அவ்ளோ தூரம்  நடக்கிறோம், இன்னும் கொஞ்ச தூரம் போக வேண்டிதான்!” என்றான் முன்னா. நடப்பது பிரச்சனை இல்லை. ஆனால் அம்மாவைப் பார்க்க இன்னும் ஒரு வாரம் தாமதமாகும் என்ற எண்ணமே நந்தியை பெரிதும் வருத்தப்பட வைத்தது. அம்மாவைப் பற்றிய நினைப்போடு அவன் ஒவ்வொரு  அடியாக எடுத்து வைத்தான்.

அம்மா எப்போதுமே அவனுடைய உந்து சக்தியாக இருந்துவந்தாள். நந்தி  அந்த வீட்டின் கடைக்குட்டி. குடும்பத்தின் மூன்றாவது பிள்ளை. அவனுக்கு மூன்று வயது இருக்கும் போதே, விவசாயக் கூலியான அவன் அப்பா வயலில் பாம்பு தீண்டி இறந்துபோனார். அதன்பின் அம்மா தான் அந்த குடும்பத்திற்கு எல்லாமுமாக விளங்கினாள். மூத்தப் பிள்ளையான முன்னா தலை எடுத்தப் பிறகும் அவள் உழைத்துக் கொண்டே இருந்தாள். நந்தியின் அக்காவிற்கு திருமணம் செய்து வைக்கும் வரை உழைப்பேன் என்றாள். ஏன், நந்திக்கு திருமணம் ஆகும் வரைக்கூட தன்னால் வயலில் வேலை செய்ய முடியும் என்று சொல்லிவந்தாள். ஆனால் பீஹார் கிராமங்களின் பெரும் எதிரியாக இருக்கும் பாம்பு அவளையும் தீண்டியது. பிழைத்துக் கொண்டாள். எனினும் பக்கவாதம் அவளை படுத்த படுக்கையாக்கி இருந்தது.

எப்போதும் அம்மாவை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அக்காவின் மீது விழுந்தது. அம்மாவின் மருத்துவதுவத்திற்கும் வீட்டு பெண் பிள்ளையின் திருமணத்திற்கும் பணம் சேர்க்க வேண்டிய பொறுப்பு இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் வந்தது. முன்னா நந்தியைவிட கிட்டத்தட்ட பன்னிரண்டு வயது பெரியவன் என்றாலும் அம்மா நடமாடிய வரை அவன் குடும்பத்தைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதில்லை. அம்மா படுத்த பின்பு அவளைப் பார்க்க வந்த சுனில் காக்கா, முன்னாவிற்கு புத்திமதி சொல்லி சென்னைக்கு வேலைக்கு வரச் சொன்னார். அண்ணன் தம்பியுமாக  சேர்ந்து உழைத்தால் இன்னும் நிறைய சம்பாதிக்கலாம் என்று நந்தியிடம் சொன்னார். அன்றிலிருந்து ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஞாயிற்றுக் கிழமை, பண்டிகை நாட்கள் என்றெல்லாம் இல்லை. பெரும்பாலும் எல்லா நாட்களும் வேலை நாட்கள்தான். 

“இந்த படா ஊர்ல எங்க போனாலும்  எல்லா நாளுமே நம்ம ஆளு  ஒருத்தன் ராப்பகலா உழைச்சிகிட்டே இருப்பான்” என்று சொல்லிவிட்டு சுனில் காக்கா சிரிப்பது நந்திக்கு நினைவு வந்தது. அவன் சாலையை கவனித்தான். பீஹார் ஆசாமிகள் மட்டும் அல்ல,  இன்னும் பலரும் கூட்டமாக மூட்டைமுடிச்சுகளோடு நடந்து போய் கொண்டே இருந்தனர். சிலர் ஹிந்தி பேசிக்கொண்டே போனார்கள். சிலர் குஜராத்தி பேசினார்கள். சிலர் பங்களா பேசினார்கள். அவர்களை பார்க்கும் போதெல்லாம் நந்திக்கு, எந்த மொழி பேசுபவர்களுக்கும் பசி ஒன்றாக தான் இருக்கிறது, எதிர்காலத்தைப் பற்றிய பயம் ஒன்றாக தான் இருக்கிறது என்று உரைத்தது.

எந்த ஊருக்கு போகவேண்டும் என்றாலும் பரந்த ஆந்திர பிரதேசத்தை கடந்து தான் போக வேண்டும். திருவிழாவிற்கு போகும் கூட்டம் போல் அவர்கள் நடந்து சென்றனர். ஆனால் ஒவ்வொருவரும் தங்களின் குழுவோடு மட்டுமே பேசிக் கொண்டனர். மற்றவர்களோடு எந்த பேச்சும் வைத்துக் கொள்ளாமல் நடந்தனர். சில இடங்களில் ரயில் தண்டவாளங்களில் இறங்கி நடக்க வேண்டியிருந்தது. சில இடங்கில் முட்டி அளவு நீரை கடக்க வேண்டியிருந்தது. மற்றபடி, பயந்த அளவிற்கு போலீஸ்கார்கள் எந்த குடைச்சலும் கொடுக்கவில்லை.  எங்காவது சில தன்னார்வலர்கள் சாப்பாடு பொட்டலங்களை கொடுத்தார்கள். வீட்டிலிருந்து எடுத்து வந்த ரொட்டியும் மிச்சம் இருந்தது. ஆனாலும் நந்தி  பெரும்பாலும் தன் பங்கை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தண்ணீரைக் குடித்தே வயிற்றை நிரப்பிக் கொண்டான்.

விஜயவாடாவில் வெயில் சுட்டெரித்தது. அங்கிருந்து  உத்தரபிரேதசம் செல்லும் கூட்டம் வடக்கே தெலுங்கானா நோக்கி பிரிந்து சென்றது. ஒடிஷா, மேற்கு வங்காளம் செல்பவர்கள் கோதாவரி  நோக்கி நூல் பிடித்தாற் போல் நேர்கோட்டில் நடக்க வேண்டும். அரை நாள் அங்கேயே ஓய்வெடுத்துக் கொண்டு,  மாலை  நடக்கலாம் என்று தோன்றியது. நந்தி மரத்தடியில் மற்றவர்களை படுக்கச் சொல்லிவிட்டு, உடமைகளை பாதுகாப்பதற்காக விழித்திருந்தான். எங்கு உறங்க நேர்ந்தாலும், ஒவ்வொரு குழுவிலும் யாரோ ஒருவர் தூங்காமல் உடமைகளை காவல்காத்து வந்தனர். முன்னா, தான் விழித்திருப்பதாக கூறி நந்தியை தூங்க சொன்னாலும், நந்தி கேட்கமாட்டான்.

“உனக்குதான் உடம்பு வீக்கா இருக்கும் தூங்கு” என்பான்.

இல்லையேல், “நான் தூங்கிட்டேன். இப்பதான் எழுந்தேன்” என்பான். ஆனால் முன்னா விழித்துப் பார்த்த போதெல்லாம்  நந்தி தூங்காமல் செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பான்.

அசதியில் குழந்தைகள் அதிக நேரம் தூங்கினர். மாலை மீண்டும்  நடக்கத் தொடங்கிய போது மணி ஏழாகி விட்டது. இருபது கிலோமீட்டர் தான் நடந்திருப்பார்கள்.  கன்னவரத்தில் குழந்தைகளுடன் இவர்கள் நடப்பதை பார்த்த மினி வேன் டிரைவர் வண்டியை நிறுத்தினார்.

“ஆவோ பாய்!” என்றார். ஆள் தடியாக இருந்தார். மீசையும் முடியும் நரைத்திருந்தது. அவரது ஹிந்தியில் தெலுங்கு சாயல் வெளிப்பட்டது. நந்தி முன்னாவின் முகத்தைப் பார்த்தான்.

“ஹம் ராஜமுந்திரி மே சோடங்கே ஆவோ!” என்றான். அத்தகைய சூழலில், கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தூரம் வண்டியில் அழைத்துச் செல்வதாக சொல்லும் போது யாரால் மறுக்க முடியும்! நந்தி டிரைவர் இருக்கை அருகே அமர்ந்து கொண்டான். முன்னாவும், அவன் மனைவி மற்றும் பிள்ளைகளும் பின்னே அரிசி மூட்டைகளுக்கு நடுவே அமர்ந்து கொண்டனர்.

டிரைவர் பேசிக் கொண்டே வந்தார். அவர் உதவிக்கரம் நீட்டியதோடு அல்லாமல் அன்பாக பேசிக் கொண்டே இருந்தது முன்னாவுக்கு பிடித்திருந்தது. தன்னிடம் இருந்த ரொட்டியை அவருடன் பகிர்ந்து கொண்டான். ராஜமுந்திரியில் வண்டி நின்ற போது மணி இரவு பன்னிரண்டை நெருங்கி இருந்தது.

“நான் சொன்னது ஞாபகம் இருக்கட்டும் தோஸ்த்” என்று நந்தியைப் பார்த்து சொல்லிவிட்டு வண்டியை நகர்த்தினார் டிரைவர்.  தொடர்ந்து நடந்தார்கள். இடையிடையே சில வண்டிகளில் எறிக்கொண்டார்கள்.  ஒடிஷாவை அடைய ஒருவாரம் ஆனது. அதற்குள் சுனில் காக்கா லகான்பூரை அடைந்திருந்தார். அம்மா நன்றாக இருப்பதாகவும், பிள்ளைகளின் வருகையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் நந்தியிடம் போனில் சொன்னார்.

அதிக பட்சம் நான்கைந்து நாட்கள், அம்மாவை பார்த்துவிடலாம் என்று எண்ணும் போதே நந்திக்கு உள்ளம் பூரித்தது. ஒடிஷா முகாமில் இரவைக் கழித்துவிட்டு மறுநாள் நடக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் எதிர்பாராத ஆச்சர்யம் முகாமின் கதவைத் தட்டியது. காலையில் நிறைய பேருந்துகள் அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தன. யாரோ ஹிந்தி நடிகரின் செலவில் அந்தப் பேருந்துகள் வந்திருப்பதாக முகாம் அதிகாரிகள் சொல்லினர். நந்தி துள்ளி குதித்தான். மனதார அந்த நடிகரை வாழ்த்தினான்.

அவன் எதிர்பார்த்தது போலவே மறுநாள் அதிகாலையில் பேருந்து பாட்னாவை அடைந்தது. அங்கிருந்து வெறும் நூறு கிலோமீட்டர் பயணத்தில் நந்தியின் கிராமம் இருந்தது. இரண்டாயிரம் கிலோமீட்டரை கடந்தவனுக்கு அது மிக சிறிய தொலைவு தான். ஆனால் பாட்னாவில் நிறைய போலீஸ்காரர்களும் அதிகாரிகளும் பேருந்தை சூழ்ந்து கொண்டார்கள். யாரும் ஊருக்குள் செல்லக்கூடாது, எல்லோரும் கும்ரஹாரில் இருக்கும் பஞ்சசீல் வித்யாலயா பள்ளிக்கூடத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்கள்.

“போனவாரம் தான் எங்க காக்கா வந்தாரு, அவருக்கு அப்டிலாம் செக் பண்ணலயே!’  என்று கோபமாக கேட்டான் நந்தி. சொந்த மாநிலம் அவனை தைரியமாக பேச வைத்தது.

“நீங்க வரிசையா வந்துகிட்டே இருப்பீங்க. எல்லாரையும் விட முடியுமா! எங்க இருந்து வர!’ அந்த அதிகாரி கேட்டார்.

“மதராஸ்” என்றான்.

“அப்ப உனக்கு தான் முதல டெஸ்ட் பண்ணனும்” என்றவர் போலீஸ்காரர்களிடம் அவனை அழைத்துச் செல்லும் படி சொன்னார். அதற்குள் முன்னா தலையிட்டு தாங்களாகவே போவதாக சொன்னான். நந்தியை அமைதியாக இருக்கும் படி ஜாடை செய்தான்.

பள்ளிக்கூடத்திலேயே பெண்கள் குழந்தைகளை ஓரிடத்திலும், ஆண்களை ஓரிடத்திலும் தங்க வைத்திருந்தார்கள். சோதனை முடிவு வர மூன்று நாட்கள் ஆகும், அதுவரை எல்லோரும் அங்கு தான் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொல்லினர். நந்திக்கு ஆத்திரமும் வருத்தமும் ஒருங்கே வந்தன.

“இவ்வளவு தூரம் பிரச்சனை இல்லாம வந்துட்டோம். மூணு நாள் பொறுத்துக்க மாட்டியா!” என்று முன்னா அதட்டினான். நந்தி அமைதியானான். சாப்பிட்டுவிட்டு தூங்குவது மட்டுமே அவர்களின் வேலையாக இருந்தது. 

மூன்றாவது நாள் மாலை பரிசோதனை முடிவு வந்தது. நந்திக்கும் அவன் குடும்பத்தாருக்கும் கொரோனோ இல்லை, மறுநாள் காலை அவர்கள் ஊருக்கு கிளம்பலாம் என்றார்கள். நந்திக்கு சந்தோசத்தில் தூக்கம் வரவில்லை. இரவெல்லாம் பேசிக் கொண்டே இருந்தான். எதிர்காலம் பற்றிய கனவுகள் தான் அவனின் பேச்சாக இருந்தது.

“பாய், நீ மாயி கூடவே இரு. பேங்க்ல இருக்க காசா வச்சு டிரீட்மெண்ட் பாரு. நான் இந்த பிரச்சினைலாம் முடிஞ்சதும் மறுபடியும் வெளிய போறேன். மதராஸ் வரைக்கும் வேணாம். ஆந்திரால அந்த டிரைவர் பையா சொன்னாரு, அவருக்கு தெரிஞ்ச கான்ட்ராக்டர் கிட்ட சேத்து விடுறாராம். ஒரு வருசம் இருந்தா போதும், ரெண்டு மூணு லட்சம்  சேத்துரலாம், பெஹென் கல்யாணத்த மூடிச்சிடலாம். அப்பறம் நானும் திரும்பி வந்திருவேன்”

“சோட்டு, மூணு நாளா இததான் சொல்ற. ஒழுங்கா தூங்கு. நாளைக்கு சீக்கிரம் கிளம்பனும்”

“நீ தூங்கு பாய். நான் பாட்டு கேட்கப் போறேன்” என்றவாறே நந்தி இயர் போனை காதில் சொருகிக்கொண்டான். முன்னா அப்படியே உறங்கிப் போனான்.

காலையில் முன்னா விழித்துப் பார்த்த போது மணி ஏழாகி இருந்தது. அதிக நேரம் உறங்கி விட்டோமே என்ற எண்ணத்தோடு அருகில் உறங்கிக் கொண்டிருந்த நந்தியை கவனித்தான். அவன்  ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.  ஆச்சரியமடைந்த முன்னா, ஒரு பக்கமாக திரும்பிப் படுத்திருந்த நந்தியின் முதுகில் தட்டினான்.  ஆனால் நந்தி அசையவில்லை. முன்னா பதற்றத்துடன் நந்தியை பிடித்து உழுக்கினான். நந்தி வெறும் உடலாகி இருந்தான். அவன் வாயில் நுரை படிந்திருந்தது. முன்னா கதறினான். எல்லோரும் அவர்களை நோக்கி ஓடி வந்தார்கள். நந்தியின் காலில் பாம்பின் பற்கள் ஆழமாக பதிந்திருந்தன.

மெட்ராஸ் கதைகள்

மெட்ராஸ்’ தான், 2015-க்கு பிறகு
நான் எழுதிய பெரும்பாலான கதைகளில் பேசு பொருளாக இருந்திருக்கிறது. அது எனக்கு தெரிந்த, நான் வாழும் மெட்ராஸ். எதிலிருந்து எதுவரை மெட்ராஸ் நீள்கிறது என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கக் கூடும்.

மந்தவெளியில் இருப்பவர்களுக்கு தாம்பரம் வெளியூராக தெரியும். என்னை போன்ற தாம்பரம் வாசிகளுக்கு கிண்டியை தாண்டி போவதே நெடும் பயணமாக தோன்றும். வெவ்வேறு அனுபவங்களின் தொகுப்பே இந்த பெருநகரம். அந்த அனுபவங்களின் வெளிப்பாடே என்னுடைய ‘மெட்ராஸ் கதைகள்’.

கண்டதை உணர்ந்ததை மனதிற்கு நெருக்கமானதை எழுதும்போது மட்டுமே அது அசலான இலக்கியமாகும் என்பது என் நம்பிக்கை.

இன்று மெட்ராஸ் தினம்.

என்னுடைய சில ‘மெட்ராஸ்’ கதைகளை கீழே உள்ள சுட்டியில் வாசிக்கலாம்.

மெட்ராஸ் கதைகள்

Happy Madras Day

3 பி.ஹெச்.கே வீடு- சிறுகதை

தினமணி-சிவசங்கரி சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னுடைய ‘3 பி.ஹெச்.கே வீடு’ என்கிற சிறுகதை தினமணி கதிரில் வெளியாகி இருக்கிறது.

நன்றி (PC)- தினமணி

கதையை இணையத்தில் வாசிக்க இங்கே சொடுக்கவும்.

நனவிலி சித்திரங்கள்- கிண்டில் பதிப்பு

ஒரு மனநல காப்பகம், சில மனிதர்கள், பல வகையான மனபிறழ்வுகள்….

நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்

தற்போது கிண்டிலில்

கிண்டிலில் வாங்க இங்கே சொடுக்கவும்

44- வது சென்னை புத்தக கண்காட்சி- என் புத்தகங்கள்

அந்தாதி வெளியீடாக வந்திருக்கும் என்னுடைய பின்வரும் புத்தகங்கள் 44- வது சென்னை புத்தக கண்காட்சியில் பனுவல் அரங்கில் (அரங்கு எண் 166,167) கிடைக்கும்.

நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்

இரண்டு கலர் கோடுகள் – குறுநாவல் மற்றும் நெடுங்கதைகள்

கொஞ்சம் திரைக்கதை,  ஆக்சன் திரைக்கதை- கட்டுரை தொகுப்புகள்

ஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம்

நனவிலி சித்திரங்கள்- குறுநாவல்

“நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பைத்தியக்கார ஹாஸ்பத்திரினு. அதான் நான் இங்க வந்து சேர்ந்துக்கிட்டு அவங்கள வெளிலயே விட்டுட்டேன்”- குறுநாவலிலிருந்து

என்னுடைய அடுத்த குறுநாவல், அந்தாதி பதிப்பகத்தின் மூலம் சென்னை புத்தக கண்காட்சி சிறப்பு வெளியீடாக வந்திருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

44வது புத்தக கண்காட்சியில் பனுவல் அரங்கில் (எண் 166,167) கிடைக்கும்

நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்

தைப்பூசம்- சிறுகதை

ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு  காரை நிறுத்தினேன்.

“கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம்.

“திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து அலுவல் நிமித்தமாக வந்திருந்தான். எங்களின் அலுவலக அந்தஸ்துபடி விமானத்தில் பயணிக்க எங்களுக்கு எலிஜிபிலிட்டி போதாது. ஆனாலும் நாங்கள் விமானத்தில் சென்று வேலையை துரிதமாக முடித்து திரும்ப வேண்டும் என்று நிர்வாகம் எதிர்பார்க்கும். இதெல்லாம் வெளிப்படையாக சொல்லாமல் நிகழ்த்தப்படும் அநீதிகள்.  வேலை முக்கியம் என்பதால் வாயை மூடிக்கொள்வோம். பயணத்திற்கு இரண்டாம் வகுப்பு ஏ.சி ரயிலுக்கு ஆகும் செலவை தான் திருப்பி தருவார்கள்.  மீதம் உள்ள தொகையை சம்பளத்திலிருந்து தான் போட வேண்டும்.  நள்ளிரவு விமானங்களின் டிக்கெட்  விலை குறைவாக இருப்பதால், அலுவல் நிமித்தமாக எங்கு பயணிக்க நேர்ந்தாலும் நாங்கள் அதையே தேர்ந்தெடுப்போம். 

பத்தரை மணிக்கு விமான நிலையத்தை அடைந்தால் போதும். அதுவரை என் வீட்டிலேயே ஓய்வெடுப்பது தான் முதலில் போட்ட திட்டம். மதியத்திலிருந்தே நெட்ப்ளிக்ஸ்சில் சாக்ரெட் கேம்ஸ் ஓடிக்கொண்டிருந்தது. இடையிடையே ரே, கணேஷ் கைத்தொண்டே போல் பேசிக் காண்பித்தான். அம்மா அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பது போல் பார்த்தாள்.  அவள் கையிலிருந்த காபியை வாங்கிக் கொண்டு புன்னகை செய்து சமாளித்தான் ரே. 

“டெம்பிள் கோ. டுடே பேமஸ் பங்க்சன்…” என்றாள்.

“ஒ!” ஏதோ அதிசயத்தை தெரிந்து கொண்டவனைப் போல் அவன் ஆர்வமாக கேட்டான்.

“இன்னைக்கு குமரகுன்றம் விஷேசமா இருக்கும். கூட்டிட்டு போக வேண்டித்தான!” என்றாள் அம்மா.

“யுவர் பிரெண்ட் நோ லைக் டெம்பிள்…” என்று என்னை சுட்டிக் காண்பித்து ரேவிடம் சொன்னாள். ரே அம்மாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும். உடனே கோவிலுக்கு போகலாம் என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டான். எனக்கு கோவிலுக்கு போவதில் விருப்பம் இல்லை என்றாலும் மற்றவர்களின் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பேன். ஆனால் ரே அப்படி இல்லை. அவனுக்கு கோவில் என்பதன் மீது தனி மரியாதையோ அபிப்ராயமோ இருந்ததில்லை. அவன் காளிகட் காளி கோவில் வரை அடிக்கடி போய் வருவான். எதற்காக என்று அம்மாவுக்கு தெரிந்தால் அவனை வீட்டினுள்ளேயே சேர்க்க மாட்டாள். அம்மாவின் முன்பு நல்ல பிள்ளை போல் நடிக்கிறான். எனக்கும் வெளியே போனால் தேவலை என்று தோன்றியது.

கார் எங்கள் தெருவை தாண்டியதும் கேட்டேன், “வேற எங்காவது போலாமா? அம்மா கேட்டா கோவிலுக்குனு சொல்லிக்கலாம்…”.

“நோ…” என்றான் உறுதியாக. நான் காரை குரோம்பேட்டை நோக்கி நகர்த்தினேன்.

நாங்கள் நடந்து சென்ற வழியெங்கும் வாகனங்கள். ஏராளமான இருசக்கர வண்டிகள் கோணல் வாக்கில் நின்றுகொண்டிருந்தன. எங்கே தங்களின் வண்டியை நுழைக்கலாம் என்று எதிர்ப்பார்த்தவாரு சில இரு சக்கர வாகன ஓட்டிகள் காத்துக் கொண்டிருந்தனர். 

கோவிலில் கூட்டம் தான். ஆனால் இதை விட அதிக கூட்டத்தை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் சானடோரியத்திலிருந்து அம்மா நடக்க வைத்தே அழைத்து செல்வாள். ஆட்டோ எல்லாம் அப்போது வாழ்க்கையில் ஆடம்பரமான விசயமாக தான் இருந்தது.  எங்களோடு சேர்ந்து பலரும் நடந்து வருவார்கள். அதனால் தூரம் ஒரு பிரச்சனையாக தெரிந்ததில்லை. இப்போதுதான் சில நூறு மீட்டர்களுக்குக் கூட வண்டி தேவைப் படுகிறது. வெகு தூரம் நடந்த களைப்பு கோவில் வாசலில் அண்டாவில் இருக்கும் புளியோதரையைப் பார்த்ததுமே பறந்து போய்விடும்.

அம்மா, “சாமி கும்பிட்டா தான் தருவாங்க…” என்பாள்.

அது உண்மையில்லை என்பது வளரவளர தான் தெரிய ஆரம்பித்தது. சில கைலி கட்டிய ஆசாமிகள் நேரடியாக புளியோதரை அண்டாவை நோக்கி செல்வார்கள்.  பக்கத்திலேயே தயிர் சாதத்தையும் வாங்கிக் கொண்டு விறுவிறுவென திரும்பி விடுவார்கள். ஒருநாளும் அவர்கள் கோவிலுக்குள் போய் பார்த்ததில்லை. எனக்கும் அவர்களை பின்பற்ற வேண்டும் என்றே தோன்றும். நாம் வந்தோமா இல்லையா என்று சாமிக்கு தெரியவா போகிறது என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் அம்மாவிடம் சொல்ல முடியாது. அம்மா ஆர்வமாக, ஒவ்வொரு சாமியையும் கும்பிடுவாள். கோவில் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் அருணகிரிநாதர் பாடலை எழுத்துக் கூட்டி படிப்பாள்.  இப்போது அந்த ஆர்வமெல்லாம் எங்கு போனது என்று தெரியவில்லை. மூட்டு வலி வந்ததிலிருந்து வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்புகிறாள். நான் இப்போது போல அப்போதும் ஒப்புக்குசப்பாணியாக தான் கோவிலுக்கு போய் வந்திருக்கிறேன். 

மலை உச்சிக்கு வேகமாக ஓடி முருகரை கும்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றும். ஆனால் அம்மா முதலில் மலை நடுவே இருக்கும் சுந்தரேஸ்வரரை தான் கும்பிட வேண்டும் என்பாள். அங்கே கால் மணி நேரமாவது ஆகும். பின் மீண்டும் மலை ஏற வேண்டும். எப்போது கீழே போவோம் என்று நான் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பேன். புளியோதரை தீர்ந்துவிட்டால் என்ன ஆவது என்ற எண்ணமே பிரதானமாக இருக்கும். ஒரு வழியாக அம்மா கீழே இறங்குவாள். ஆனால் வழியில் இடும்பனை கும்பிட வேண்டும் என்று நின்றுக் கொள்வாள். இடும்பன் சன்னதியிலிருந்து புளியோதரை அண்டா தெளிவாக தெரியும்.  புளியோதரை தீர்ந்துவிடக் கூடாது இடும்பா என்று கூட வேண்டியிருக்கிறேன். அந்த புளியோதரை கைக்கு வரும் தருணம் கண்களில் நீரெல்லாம் வந்திருக்கிறது.

இப்போது அதே இடத்தைப் பார்த்தேன். தட்டை தேன்குழல் விலை ஐம்பது என்று போட்டிருந்தது. புளியோதரையை இருபது ரூபாய் கொடுத்து சிறு தொன்னையில் பலரும்  வாங்கிக் கொண்டிருந்தனர்.

“புளியோதரை சாப்பிடலாமா!” என்றேன்.

“முதல சாமிய கும்புடனும்… அப்பறம் தான் பிரசாத்” என்றான் ரே. அம்மாவின் காற்று அவனுக்கும் அடித்திருக்கக் கூடும். அம்மாக்களுடன் உரையாடுபவர்கள் அம்மாக்களாகவே மாறிவிடுகிறார்கள்.

நாங்கள் விநாயகர் சன்னதியை நோக்கி நடந்தோம். ‘கண்ட கோயில் தெய்வம் என்று கையெடுப்பது இல்லையே’ வகை தான் நானும். எனக்கு கடவுளிடம் வேண்டுவதற்கு எதுவுமே இருந்ததில்லை.  சம்பிரதாயமாக விநாயகருக்கு வணக்கம் சொல்லிவிட்டு நின்றேன். அர்ச்சகர் தன் கையை உயரத்தில் வைத்துக் கொண்டு விபூதியை வேண்டா வெறுப்பாக போடுவது போல் போட்டார்.  ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்வதனால் வரும் சலிப்பு அது. என் வங்கி க்ளார்க்குகள் இப்படி தான் வாடிக்கையாளர்களிடம் சலித்துக் கொள்வார்கள்.  சில நேரம் என்னிடமும். அந்த அனுபவம் இருந்தததால், நான் அர்ச்சகரின் செய்கையை பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ரே அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாயை போட்டான். அவர் தன் வேட்டி மடிப்பிலிருந்து ஒரு விபூதி பொட்டணத்தை எடுத்துக் கொடுத்தார். எதையோ சாதித்துவிட்டவனாக ரே என்னை பார்த்து புன்னகை செய்தான்.

நான் நவகிரகத்தை நோக்கி நடந்தேன். அவன் வேகவேகமாக என் அருகே வந்து நின்றான். முகத்தில் பெருமிதம் இன்னும் குறையாமல் இருந்தது.

“ஒன்பது முறை சுத்தலாம்” என்றான். இருவரும் நவகிரகத்தை சுற்றத் தொடங்கினோம். சுக்கிரனிடம் வந்த போது படிக்கட்டின் பக்கவாட்டு சுவர் அருகே இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்ததை கவனித்தேன். அதில் இளையவளாக இருந்தவள் தன் மஞ்சள் துப்பட்டாவை கையில் விரித்துப் பிடித்திருந்தாள். அதில் கொஞ்சம் காசு இருந்தது. அருகே நின்றுகொண்டிருந்த பெண்மணி என்னிடம் சொன்னாள், 

“சார் தங்கச்சிக்கு கல்யாணம். மடிப்பிச்சை கேட்கிறோம்” 

அவள் கழுத்திலும் தாலி இல்லை என்பதை என்னால் கவனிக்க முடிந்தது. நான் எதுவும் பேசாமல் நவக்கிரகத்தை சுற்றினேன்.

ரே “என்ன!” என்றான். மடிபிச்சை என்பதை உடனடியாக ஹிந்தியில் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. கல்யாணத்திற்கு பணம் கேட்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் சொன்னேன்.  அதற்குள் நாங்கள் மேலும் இரண்டு  முறை சுற்றி முடித்து விட்டோம். அந்த பெண்கள் அங்கேயே நின்றுக் கொண்டிருந்தனர். ஓரிருவர் காசு போட்டுவிட்டு சென்றார்கள். 

கடைசி முறை சுற்றும் போது, இளையவள் ரேவை பார்த்து கேட்டாள், “சார் என் கல்யாணத்துக்கு மடி பிச்சை கேட்கிறோம்” தனக்கு தமிழ் தெரியாது என்பதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

நான் அவளைப் பார்த்தேன்.  முகம் களைத்திருந்தது. அவளுக்கு முப்பது வயதிற்கு குறையாமல் இருக்கும். நவகிரக பாதையை விட்டு வெளியேறி அவர்கள் அருகே சென்ற ரே, தன் பர்ஸிலிருந்து புது ஐநூறு ரூபாய் தாளை எடுத்து அவள் விரித்திருந்த துப்பட்டாவில் போட்டான்.  எனக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

“பத்து ரூபாய் போட வேண்டிதான! ஐநூறு ரொம்ப அதிகம்” கோவில் படிகளில் ஏறும்போது சொன்னேன்.

“எவ்வளவோ மோசமான விஷயத்துக்குலாம் செலவு பண்ணிருக்கேன். கல்யாணத்துக்கு தான!” என்றான்.

“சொல்றாங்க. உண்மைன்னு எப்படி தெரியும்! அவங்க அக்கா தங்கச்சியானே எனக்கு டவுட்டு” என்றேன் நான்.  அவன் என்னையே கூர்ந்து கவனித்தான். பின் திரும்பி அந்த பெண்களைப் பார்த்தான்.

“ஜானே தோ.  உண்மைன்னு நினச்சு ஹெல்ப் பண்ணினேன். உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்!” என்றான்.

நான் கோவில் உச்சியை நோக்கினேன். மிக நீண்டதொரு வரிசை வளர்ந்து கொண்டே போனது. சன்னதியை அடைய முக்கால் மணி நேரமாவது ஆகிவிடும்.  

“எங்க நின்னு கும்பிட்டாலும் சாமி தான்!” என்றேன் நான். 

“என்ன!” ஏதோ பெரிய தத்துவத்தை புரிந்துக்கொள்ள முயல்பவன் போல் கேட்டான். 

“சாமிய இங்க நின்னு கூட கும்பிட்டுக்கலாம். இவ்ளோ பெரிய க்யூல எதுக்கு நின்னுகிட்டு!

“உண்மையானு டெஸ்ட் பண்ணியா பாக்க முடியும்னு கேட்டியே! டெஸ்ட் பண்ணிடுவோம்”

“ஹே! அதெல்லாம் வேணாம். வீட்டுக்கு போலாம். நான் உண்மைன்னு நினச்சு தான் ஹெல்ப் பண்ணேன். அது போதும்” 

“ஜஸ்ட் தெரிஞ்சிக்கலாம். அவங்க உண்மை சொல்லிருந்தா சந்தோசம்.  பொய் சொல்லிருந்தா இது ஒரு பாடம்” என்றேன். அவர்கள் பொய் சொல்லிருக்கக் கூடும் என்றே நான் நம்பினேன். அதை உறுதி செய்து கொள்வதற்காக தான் அவர்களை பின்தொடர விரும்பினேன்.

ரேவும் சரி என்றான். நாங்கள் மேலே ஏறாமல் அப்படியே திரும்பி இடும்பன் சன்னதி அருகே இருந்த படிகட்டில் அமர்ந்தோம். சிறு வயதில் புளியோதரையை பார்த்துக் கொண்டிருப்பது போல இப்போது அந்த பெண்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கிளம்பும் வரை அங்கேயே அமர்ந்திருக்க முடிவு செய்தோம்.

ரே அவ்வப்போது திரும்பி மலைமேல் நின்றுகொண்டிருந்த கூட்டத்தை பார்த்தான். கூட்டம் குறையாமல் தான் இருந்தது. நாங்கள் செய்வது சரியா என்று உறுதி செய்து கொள்வதற்காக தான் அவன் அப்படி பார்கிறானோ என்று தோன்றியது. கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இளையவள் தன் துப்பட்டாவில் இருந்த பணத்தை மற்றவளின்  கையிலிருந்த  துணிப்பைக்குள் கொட்டினாள். நாங்கள் அந்த தருணத்திற்காக காத்திருந்தவர்களாக எழுந்து நின்றோம். அந்த பெண்கள் கோவிலை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள்.

நான் செல்போனைப்  பார்த்தேன்.  மணி 7.43 P.M.

“நான் போய் கார எடுத்துட்டு வரேன். நீ அவங்க எப்படி போறாங்கனு பாரு” 

“ஏன் சார் நோ பார்க்கிங் போர்டு இருக்கு தெரில…” கேட்டின் அருகே நின்றுகொண்டு சொன்னார் அந்த வீட்டுக்காரர். 

“சாரி சார்”

“பண்டிகை நாளுனாலே இதே ரோதனையா போச்சு!” என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொள்வது போல் என் காதில் கேட்கும்படி சொன்னார். அவர் அருகே நின்றுகொண்டிருந்த நாய் என்னை பார்த்து இரண்டு முறை குறைத்துவிட்டு அமைதியானது. அவர் சங்கிலியை விட்டிருந்தால் அந்த நாய் என் மீது பாய்ந்திருக்கக் கூடும்.  

நான் அவசர அவசரமாக காரை எடுத்தேன். 

“அந்த ஆட்டோல தான் போறாங்க…” என்றான் ரே. 

ஒரு பெரிய நடிகரின் புகைப்படத்தையும், அவரின் வசனத்தையும்  தன் மேல் தாங்கிய ஆட்டோ, ஹஸ்தினாபுரம் சாலையில் திரும்பியது. அது  திரும்பிய பல குறுகிய தெருக்களில் காரை திருப்ப கொஞ்சம் சிரமப் பட வேண்டி இருந்தது. ரே அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான். திடீரென்று எருமை மாடொன்று மிரண்டு சாலையில் குறுக்கே வந்துவிட்டது. நானும் மிரண்டு தான் போனேன். எங்களின் நல்ல நேரமா, மாடின் நல்ல நேரமா என்று தெரியவில்லை, கார் மாடை முட்டாமல் அதன் பக்கத்தில் போய் நின்றது. அதற்குள் முன் சென்ற ஆட்டோ எங்களின் பார்வையில் இருந்து மறைந்துவிட்டது. 

எங்களை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு மாடு தன் போக்கில் நடந்தது.  நான் ரேவைப் பார்த்தேன். எதுவும் ஆகியிருக்கவில்லை என்ற ஆசுவாசம் அவன் முகத்தில் தெரிந்தது. எங்களின் தோல்வியை, இல்லை என்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள முடிவு செய்தேன்.

“திரும்பிடலாம்” என்று சொல்ல வாயெடுக்கும் போதே, அந்த ஆட்டோ திரும்பி எங்களை நோக்கி வந்து கொண்டிருந்ததை கவனித்தேன். அதே மாடு இப்போது ஆட்டோவின் முன்னே ஓடியது. ஆட்டோ மாடின் உடலை உரசிக்கொண்டு வளைந்து சாலையை விட்டு இறங்கி, மீண்டும் அதே நேக்குடன் சாலையில் ஏறியது. சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் வழக்கமாக பிரயோகிக்கும் வார்த்தையிலேயே அந்த மாட்டை திட்டினான் ஆட்டோ வாலிபன். 

“ஹே எருமை” 

நான் புன்னகை செய்தேன். 

ரே, “கியா ஹுவா பாய்!” என்றான்..  

“எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுனா, புரியாது விடு” என்றேன். அந்த ஆட்டோ காலியாக இருந்ததை ரே தான் முதலில் கவனித்தான்.  

“அவங்க போன ஆட்டோ தான! அப்போ இங்க தான் எங்கயாவது இறங்கி இருப்பாங்க!.  

“ஆகே சலோ. அவங்க வீடு எங்க இருக்குனு பாத்திருவோம்” என்றான். எனக்கு இருந்த ஆர்வத்தைவிட இப்போது ஏனோ அவனுக்கு அதிக ஆர்வம் தொற்றிக்கொண்டது. 

தோல்வியை தவிர்த்துவிட்ட கர்வத்தோடு நான் ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன். சாலை வளைந்த திசையில் காரை வளைத்தேன். அந்த தெரு நீண்டு கொண்டே போனது. ஆனாலும் ஆட்டோ திரும்பி வந்ததை வைத்துப் பார்த்தால் சில நூறு மீட்டருக்குள் தான் அந்த பெண்களின் வீடு இருக்க வேண்டும் என்று தோன்றியது. காரை ஓரமாக நிறுத்தினேன். 

ரே இறங்கி தெருவை நான்கு புறமும் நோட்டம்விட்டுவிட்டு, முன்னே நடந்தான். தெரு ஆங்காகே, குறுக்கு தெருக்களாக பிரிந்தது.  நான் அவனை பின் தொடர்ந்தேன். 

“சரி இவ்ளோ தூரம் வந்துட்டு, பெட் கட்டாம போனா எப்டி!” என்றேன்

“கியா?” 

“அவங்க உண்மைய சொல்றாங்கணு நீ சொன்ன. ஏமாத்துறாங்கணு நான் சொன்னேன்.  உண்மையா இருந்தா ரெண்டாயிரம் நான் தரேன். அவங்க ஏமாத்துக்காரங்களா இருந்தா ரெண்டாயிரம் நீ தரணும்” 

ரே ஒப்புக் கொண்டான். சிறிய வீடுகள் மிக நெருக்கமாக அமைந்திருந்த அந்த தெருவில் ஒரு வீட்டின் முன்பு வாழை மரங்கள் கட்டப்பட்டு, நல்வரவு என்று ஒளி விளக்கால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.  

“கல்யாண வீடு மாதிரி தான் இருக்கு” என்றேன் ரேவிடம். 

அந்த வீட்டில் வாசலில் நின்றதுமே, “வாங்க வாங்க” என்று வரவேற்றார் ஒரு பெரியவர். 

“மாப்பிள்ளையோட ஃபிரண்ட்ஸ் போல” என்று பின்னே நின்று கொண்டிருந்த ஒரு அம்மாவிடம் சொன்னார்.  நான் வீட்டின் வாசலில் மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்தேன்.  வேறொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. இரண்டாயிரம் மிச்சம். 

ரேவிடம் பேனரை பார்க்கும் படி ஜாடை காண்பித்தேன்.

“தோ அசார், தயார் கரோ” என்று ரேவின் காதுகளில் கிசுகிசுத்தேன். 

“வெயிட் பண்ணு. அந்த பொண்ணுக்கு கல்யாணம்னு தான் சொன்னா! இன்னைக்கே கல்யாணாம்னு சொன்னாளா! இங்க தான் எங்கயாவது இருப்பா!” என்றான் ரே. 

நாங்கள் ஹிந்தியில் உரையாடிக் கொண்டிருப்பதை அந்த பெரியவர் பார்த்துக் கொண்டே நின்றார். 

“இதோ வந்துர்றோம்” என்று பெரியவரிடம் சொல்லிவிட்டு நான் திரும்பி நடந்தேன். அந்த வீட்டை கடந்து போனால், திரும்பி வரும் போது அவரை  எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால் தான் அப்படி செய்தேன். ரேவும் இணைந்து கொண்டான்.

எந்த வீட்டில் அந்த பெண் இருக்கக் கூடும் என்று யூகிக்க முடியவில்லை. ஒரமாக நின்று தெருவை கவனித்தோம். கல்யாண வீட்டு பெரியவர் எங்களையே நோக்குகிறார் என்பதை தெரு விளக்கின் ஒளியிலும் கண்டுகொள்ள முடிந்தது. 

“விடமாட்டார் போல” என்றான் ரே. 

திடீரென்று ஏதோ சப்தம் கேட்க, திரும்பினோம். ஒருவர் கீழே கிடந்தார். அவரது சைக்கில் அவரின் மேல் கிடந்தது. எருமை மாடு கீழே கிடந்தவரை பொருட்படுத்தாமல் கடந்து சென்றது. நாங்கள் இருவரும் ஒடிச்சென்று அவரை தூக்கினோம். மிகவும் மெலிந்திருந்த அந்த ஆளுக்கு  வயது அறுபதுக்கு மேல் இருக்கும். 

“நன்றிங்க” என்று சங்கோஜத்துடன் எழுந்து கொண்டார். ரே அவருடைய சைக்கிலை நிமிர்த்தி அவரிடம் கொடுத்தான். 

“சார், அடிலாம் ஒன்னும் படலல்ல?”

“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க” 

“வாங்க வீட்ல விட்டுற்றோம்…”

“வேணாம்ங்க. வீடு, இங்க தான் பக்கத்துல.. நானே போய்க்குறேன்” என்று எங்களை நிமிர்ந்து பார்க்க விருப்பம் இல்லாதவர் போல் சைக்கிலை தள்ளிக் கொண்டு வலது புறமாக திரும்பிய குறுக்குத் தெருவிற்குள் நுழைந்தார். 

ரே மீண்டும் மணியைப் பார்த்தான். 

“இப்ப கிளம்புனா வீட்டுக்கு போயிட்டு ஏர்போர்ட் போக கரெக்டா இருக்கும். போலாம்” என்றான். 

“அவங்க ஏமாத்திருக்காங்க. நீ ரெண்டாயிரம் எடு!” என்றேன்.

“அதுக்கு அவங்க ஏமாத்துனது ப்ரூவ் ஆகணும். நீ இன்னொரு நாள் வந்து அவங்கள தேடு. அவங்க சொன்னது உண்மையா பொய்யானு தெரிஞ்சிக்கிட்டு அப்பறம் பெட்ல நீ ஜெயிச்சியா நான் ஜெயிச்சனானு பாப்போம்” என்றவன் குனிந்து கீழே இருந்து எதையோ எடுத்தான். 

“அந்த சைக்கில் ஆத்மிதுன்னு நினைக்கிறேன்” என்றவாரே என்னிடம் நீட்டினான். 

ஆதார் அட்டை. நான் குறுக்குத் தெருவைப் பார்த்தேன். அவர் சைக்கிளை ஒரு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்ததை கவனித்தேன். 

“சார் சார்” அவர் பின்னே ஒடினேன். 

அது ஒரு ஸ்டோர் வீடு. கேட்டின் உள்ளே இருப்புறமும் வரிசையாக வீடுகள் அமைந்திருந்தன. முதல் வீட்டு வாசலில் அமர்ந்து ஒரு அம்மா அருவாமனையில் மீனை ஆய்ந்து கொண்டிருந்தாள். எங்களை நிமிர்ந்து பார்ப்பது நேர விரயம் என்று சொல்லும் பொருட்டு அவள் தன் வேலையில் மூழ்கியிருந்தாள். மூன்றாவது வீட்டு வாசலில் அந்த ஆள் நின்று கொண்டிருந்தார். 

எதிரே நின்ற உயரமான ஆசாமி, “நான் என்னய்யா பண்றது! இத வச்சு தான் நான் சாப்டனும்” என்றவாறே கையில் இருந்த காசை எண்ணினான்.  

பின்பு உள்ளே எட்டிப்பார்த்தவாறே, “சரி,  உன் புள்ளைங்ககிட்ட சொல்லிடு. என் பொண்டாட்டி பேசுனதெல்லாம் மனசுல வச்சிக்க வேணாம்னு. காலிலாம் பண்ண வேணாம். நான் பேசிக்குறேன். மாசமாச்சுனா வாடகைய கொடுத்துட்டா அவ ஏன் இங்க வந்து நிக்கப்போறா!”  என்றான். 

காசை சட்டைப் பையில் வைத்தவன், திரும்பி எங்களை நோக்கி நடக்க, நாங்கள் மூன்றாவது வீட்டை நோக்கி நடந்தோம்.

“சார்…” என்றதும் அவர் வெளியே எட்டிப்பார்த்தார். அந்த பார்வையில் ஆச்சர்யமும் தயக்கமும் ஒருங்கே வெளிப்பட்டது. 

“இத விட்டுட்டீங்க” என்று ஆதார் அட்டையை நீட்டினேன். 

“நன்றிங்க” என்று நிலையை தாண்டி வந்து வாங்கிக்கொண்டார். 

“காலைல இருந்து நிதானம் இல்ல…” என்றார்.

வீட்டின் உள்ளே கவனித்தேன். முன் எறிந்த ஒரு எல்‌.ஈ.டி பல்ப் அந்த வீட்டிற்கு போதிய வெளிச்சத்தை தந்திருந்தது. நுழைந்ததுமே ஒரு அடுப்படி, அதன் பின்னே இருந்த ஒரே ஒரு அறை என்ற அளவில் அந்த வீடு இருந்தது. ஒரு திரை துணியால் உள்ளறை மறைக்கப் பட்டிருக்க, உள்ளிருந்து யாரோ ஒரு பெண்மணி, ‘ம்மா, ம்மா’ என்று முனகுவது கேட்டது. அந்த குரல் தாங்கமுடியாத வலியை குறிக்கும் ஓலமாக ஒலித்தது. நான் உள்ளே கவனித்ததை அவரும் கவனித்தார்.

“என் மனைவிங்க…” அவர் அதை சொல்லியிருக்க வேண்டாம். சொல்லிவிட்டாரே என்பதற்காக நான் சம்ப்ரதாயமாக கேட்டேன், 

“ஏதாவது உடம்புக்கு…” 

“வயித்துல கேன்சர். டாக்டர் முடியாது கூட்டிட்டு போனுட்டார். மூணு நாளா உசுரு பிரிய மாட்டேங்குது…வலில துடிக்குறா”

மனதிலிருப்பதை யாரிடமாவது கொட்டி தீர்த்துவிட வேண்டும் என்று காத்திருந்தவரை போல் என்னிடம் சொல்லிவிட்டு அழத் தொடங்கிவிட்டார். அதுபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டு எங்களுக்கு பழக்கமில்லை. ரேவும் என்ன செய்வது என்று தெரியாமல் என்னையே பார்த்தான். 

“உஷ்கா பீவி…” என்று மட்டும் சொன்னேன். அவன் புரிந்து கொண்டான். மேற்கொண்டு அங்கே நிற்கவேண்டாம் என்று தோன்றியது.  

“ஒண்ணும் கவலப்படாதீங்க சார்…” என்றேன். உண்மையிலேயே வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எவ்வளவோ படித்தும் துயரில் நிற்பவருக்கு ஆறுதல் எப்படி சொல்வது என்பதை கற்றுக் கொண்டிருக்கவில்லை. அவர் அப்படியே நிலையில் அமர்ந்து வாயைப் பொத்திக் கொண்டார். அவரின்  அழுகுரல் உள்ளேயும் கேட்டிருக்கக் கூடும்.  

திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்த பெண்ணொருத்தி, “அப்பா அப்பா! அம்மா போது பா போது பா” என்று அந்த ஆளினுடைய முதுகை பிடித்து உலுக்கினாள். அந்த ஆள், “ஐயோ மீனாட்சி” என்று கதறியவாறே எழ, அந்த பெண் அவரை தாங்கி உள்ளே அழைத்துச் சென்றாள். அவள் இருந்த பதட்டத்தில் வாசலில் நின்று கொண்டிருந்த எங்களை பொருட்படுத்தவில்லை. ஆனால் நாங்கள் இருவருமே அவளை  கவனித்தோம். நாங்கள் தேடி வந்த இருவரில், இளையவள் அவள். இன்னொரு பெண்ணும் உள்ளே இருக்கக் கூடும். 

“நான் பெட்ல தோத்துட்டேன் பாய்” என் கண்களை பார்க்காமல் ரே, உறுதி இழந்த குரலில் சொன்னான். 

“நானும் தான்” என்றேன் நான். வீடு வரும்வரை நாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

கொரோனா நாட்கள்- நெடுங்கதை

அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.
“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார்.
“மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்”
அவர் சமாதானம் ஆகவில்லை.
“வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார்.
“எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன்.
கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…!”
“இல்ல. நாலு மாசத்துக்கு முன்னாடியே அந்த காரு வந்திருச்சு ப்ரோ” என்றேன் நான்.
“கொரோனாவும் நாலு மாசத்துக்கு முன்னாடியே வெளிநாட்ல வந்திருச்சு ப்ரோ” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.
***
ஊரடங்கில் ஒரு சாமானியன் படும்பாட்டை நகைச்சுவையாக சொல்லும் நெடுங்கதை

கிண்டிலில் வாங்க – Click here to buy