American Horror Story போன்ற சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கிய ரியான் மூர்பியின் மற்றுமொரு சுவாரஸ்யமான படைப்பு (Miniseries) ‘The Watcher’. மர்மமும் திகிலுமாக கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் திரைக்கதையின் மர்ம முடிச்சுக்கள் சரியாக அவிழ்க்கப்பட்டிருக்கிறதா!
பிரானாக் தம்பதியர் (நோரா பிரானாக் மற்றும் டீன் பிரானாக்) புதிதாக ஒரு பங்களா வீட்டை பெரும் விலைக்கொடுத்து வாங்குகிறார்கள். அது அவர்களின் கனவு இல்லம். அதை வாங்குவதற்கு தங்களிடம் இருக்கும் கடைசிசேமிப்பு வரை அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். தங்களின் மகள் மற்றும் மகனோடு அந்த வீட்டிற்கு குடிபுகுகிறார்கள். ஆனால் அக்கம்பக்கத்தினர் அவர்களை வரவேற்கத் தயாராக இல்லை. சற்றே விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள். பரவாயில்லை நாம் உண்டு நம் வீடுண்டு என்று இருப்போம் என்று எண்ணுகின்றனர் பிரானாக் தம்பதியர். ஆனால் அவர்கள் நிம்மதியை குலைக்கும் வண்ணம் ஒரு கடிதம் வந்து சேர்கிறது. “நான் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று மிரட்டும் தொனியில் அந்த கடிதத்தின் வரிகள் இருக்கின்றன. அதை எழுதியது ‘தி வாட்சர்’ என்பதை தவிர வேறு எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.
யார் அந்த வாட்சர்! ஆணா! பெண்ணா! ஒட்டாமல் உறவாடும் சுற்றத்தாரில் ஒருத்தனா? அல்லது நெருங்கிய வட்டத்திலேயே இருக்கும் யாரோ ஒருவரா? இந்த கேள்விக்கான பதிலை கண்டுகொள்ள முடியாமல் பிரானாக் தம்பதியர் திணறுகின்றனர். ஆரம்பம் முதலே அதை பார்க்கும் நமக்கும் அந்த கேள்வி தொற்றிக் கொள்கிறது. வாட்சர் யாராக இருக்கும் என்று பார்வையாளர்களை தொடர்ந்து யோசிக்க வைப்பதே இந்த திரைக்கதையின் பலம். ஆரம்பித்த சில நொடிகளிலேயே கதை உலகம் நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. ஒரு படம் பார்வையாளனை தன்னோடு ஒன்ற வைக்குமாயின் அதுவே அதன் முதல் வெற்றி. ஒரு திரைக்கதையில் இது எப்படி சாத்தியமாகிறது?
பார்வையாளர்களின் மனதை தொடுகிற ‘எமோஷன்’ தான் இதை சாத்தியப்படுத்துகிறது. The Watcher’. தொடரை பொறுத்த வரை இதன் ‘Core emotion’ எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. கனவு இல்லம், அமைதியான சந்தோசமான குடும்பம், பாதுகாப்பான வாழ்க்கை- இதுதான் இந்த கதையின் பிரதான பாத்திரங்களின் ‘Core emotion’. ஒருவகையில் இது மனிதகுலத்தின் கனவும் கூட. அதனாலேயே இந்த கதையின் பிரதானபாத்திரங்கள் நம்மோடு நெருங்கி வருகின்றன. (ஹாரர் திரில்லர் என எந்த வகை படமாக இருந்தாலும், அதில் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் எமோஷன் இருக்கும் போதே அந்த திரைக்கதைக்கு உயிர் கிடைக்கிறது.) இப்போது பாதுகாப்பான வாழ்க்கை என்கிற நம் கதாப்பாத்திரங்களின் அந்த கனவை அவர்களுக்கு வரும் கடிதம் அசைத்துப் பார்க்கிறது. நம்மையும் தான்.
ஆரம்பத்திலிருந்தே சுற்றி இருப்பவர்களிடம் தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் வயதான தம்பதி, பிரானாக் குடும்பத்தின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் தோட்டத்திற்குள் நுழைந்து செடிகொடிகளை பறிக்கிறார்கள். இதை டீன் பிரானாக் கேள்வி கேட்க, அது பிரச்சனையில் முடிகிறது. “நீங்கள் எங்களுடைய பகையை சம்மதித்துக் கொண்டீர்கள். உங்களை கவனித்துக் கொண்டே இருப்போம்” என்று கோபமாக சொல்லிவிட்டு நகர்கிறார்கள் அந்த வயதான தம்பதியர்.
இன்னொரு பக்கத்தில் வசிக்கும் ஜாஸ்பர் ஒருபடி மேலே சென்று பிரானாக்கின் வீட்டிற்குள்ளேயே அனுமதியில்லாமல் வசிக்கிறார். இது பிரானாக்கை கோபத்திற்கு உள்ளாக்க அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் பிரானாக். இயல்பான மனநிலையில் இல்லாத ஜாஸ்பருக்கு ஆதரவாக அவரது சகோதரி பியர்ல், பிரானாக்கிடம் சண்டையிடுகிறாள். தாங்கள் புராதானங்களை பாதுக்காக்கும் குழு என்றும் பிரானாக் அந்த புராதன வீடை வாங்கி அதில் மாற்றங்களை செய்வது தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறும் பியர்ல், “உங்களை கவனித்துக் கொண்டே இருப்போம்” என்று மிரட்டிவிட்டு நகர்கிறாள்.
தொடர்ந்து மிரட்டல் கடிதங்களும் வருகின்றன. போலீசிடம் சொல்லியும் எந்த பயனும் இல்லை. இந்த சிக்கல்கள் அவனை வேலையில் கவனம் செலுத்தவிடாமல் செய்ய, வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அவனுக்கு கிடைக்காமல் போகிறது. இத்தகைய பிரச்சனைகள் (Extra personal conflict) ஒரு புறம் இருக்க, டீன் பிரானாக்கின் குடும்பத்திற்குள்ளேயே அவருக்கும் அவர் மனைவி-மகளுக்குமிடையே பிரச்சனைகள் வருகின்றன (Personal Conflict). ஒருகட்டத்தில் குடும்பமே உடைந்து விடுமோ என்கிற அளவிற்கு பிரச்சனைகள் வளர்கின்றன. இதுவே திரைக்கதையில் ‘All is lost’ என்கிற தருணம். எத்தகைய திரைக்கதையிலும் இந்த தருணம் சாத்தியப்படும்.
ஆரம்பத்தில் நாயகனின் கனவாக இருந்த ஒருவிஷயம், அதை தக்கவைத்துக்கொள்ள அவன் போராடியும், ஒருகட்டத்தில் அது முற்றிலுமாக கைவிட்டு போகும் என்கிற நிலை உருவாகுகிறது. இப்போது ஏதாவது செய்து அவன் தன் கனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அவன் என்னெல்லாம் செய்கிறான் என்று கதையை நகர்த்துபோது அந்த திரைக்கதை சுவாரஸ்யமாகும்.
தி வாட்சர் சீரிஸ் சற்றே தடுமாறும் இடமும் இதான். அதற்கும் இது உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது கூட காரணமாக இருந்திருக்கலாம். நிஜவாழ்வில் இது போன்ற ஒரு குடும்பத்திற்கு ‘தி வாட்சரின் கடிதம் வந்து அவர்களின் நிம்மதி குலைந்திருக்கிறது. இறுதிவரை வாட்சர் யார் என்று யாராலும் கொண்டுகொள்ளமுடியவில்லை. எனவே தான் இந்த தொடரிலும் இறுதியில் மர்மமுடிச்சுகளை சரியாக அவிழ்க்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள் போல என்கிற எண்ணம் எழுகிறது.
திரைக்கதையில் ஆரம்பத்திலிருந்தே ‘வாட்சர்’ யார் என்று கண்டுகொள்ளும் முனைப்போடு நாயகன் இயங்குகிறான். அதற்காக தியோதரா என்கிற துப்பறியும் பெண்மணியின் உதவியை அவன் நாடுகிறான். அவர்கள் பல விஷயங்களை கண்டுகொள்கிறார்கள். ஒரு விறுவிறுப்பான மர்ம நாவலை படிக்கும் உணர்வை அவர்களின் காட்சிகள் தருகின்றன. உண்மையிலேயே ஒரு படத்தின் திரைக்கதைக்கும் தொடரின் திரைக்கதைக்கும் இருக்கும் பிரதான வித்தியாசம் இதுதான். நாவலின் வடிவமே தொடர்களின் வடிவமாக இருக்கிறது. படம் எனும் போது இரண்டு மணிநேரத்தில் ஆர்கானிக்காக எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் web series அப்படி இல்லை. அதில் நாவலுக்கான சுதந்திரம் இருக்கிறது. அதனாலேயே எத்தகைய கிளைக்கதையையும் ஒரு வெப்சீரிஸில் எழுதிவிட முடிகிறது. ஆனால் இந்த கிளைக்கதைகள் பிரதான கதையோடு ஏதாவது ஒரு புள்ளியில் இணைய வேண்டும். இணையாமல் தனித்திருந்தால் உறுத்தலாக தோன்றும். இந்த தொடரில் அந்த பங்களா வீட்டில் முன்பொரு காலத்தில் வசித்த ஆண்ட்ரூ பற்றிய கதை வருகிறது. அவனை தியோதரா தான் நாயகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அவன் அந்த வீடு நரபலியோடு தொடர்புடையது என்றெல்லாம் சொல்கிறான். ஆனால் இந்த கதை பிரதான கதையோடு சரியாக இணையவில்லை. அடுத்து டீன் பிரானாக்கின் படுக்கை அறைக்குள் ஒரு பெண் அவருக்கு தெரியாமலேயே நுழைவதாக ஒரு காட்சி வருகிறது. அவள் யார் என்ன என்பது இறுதி வரை சொல்லப்படவில்லை. இந்த காட்சியை நீக்கியிருந்தால் கூட கதையில் பெரிய இழப்பு எதுவும் இருக்காது. தொடர் கதைகளின் (நாவல்) முடிவில் வழிந்து வைக்கப்படும் ட்விஸ்ட் போல வைக்கப்பட்ட காட்சி இது. எனவே தான், பிரதான கதையோடு ஒன்றாத கிளைக்கதைகளோ காட்சிகளோ ஒரு திரைக்கதைக்கு தேவை இல்லை என்கிறோம்.
மேலும் இந்த கதையில் பிரானாக் தம்பதியர் தங்கள் வீட்டில் ஒரு சுரங்கப் பாதை இருப்பதை கண்டுபிடிப்பார்கள். அந்த சுரங்கப்பாதையில் வழியாகவே அந்த வீட்டிற்குள் முகம் தெரியாத யாரோ வந்து போகிறார்கள் என்று அந்த தம்பதியர் நினைக்கும் தருணத்தில், யாரோ ஒருவன் தப்பித்து ஓடுவான். அவனை துரத்திக் கொண்டு டீன் பிரானாக் ஓடுவார். இறுதியில் அவன் யார் என்பதை பார்வையாளர்களான நமக்கு காண்பித்து இருப்பார்கள் ஆனால் பிரானாக் தம்பதியருக்கு தெரியாமல் போய்விடும். இங்கே நம் கண் முன்னே அவிழ்ந்த மர்ம முடிச்சும் கூட பெரிய சுவாரஸ்யத்தை கொடுக்கும் ஒன்றாக இருக்காது.
மர்ம கதைகளில் பொதுவாக மூன்று சாத்தியங்கள் உண்டு. ஒன்று கதையின் பாத்திரங்களுக்கு உண்மைகள் தெரிந்திருக்கும் பார்வையாளர்களாகிய நமக்கு தெரியாமல் இருக்கும். இன்னொரு வகையில், உண்மைகள் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் கதையின் பாத்திரங்களுக்கு தெரியாமல் இருக்கும். மூன்றாம் வகை ஒன்றுண்டு. யாருக்குமே உண்மைகள் தெரியாது. கதையின் பாத்திரம் உண்மையை கண்டுகொள்ளும் போது பார்வையாளர்களாகிய நாமும் கண்டுகொள்வோம். மற்ற இரண்டு வகைகளை விட இது சிறந்த உத்தி. துப்பறியும் கதைகளில் அதிகம் பயன்படும் உத்தியும் கூட. துப்பறியும் நாயகன் உண்மையை கண்டுகொள்ளும் போது தான் நாமும் கண்டுகொள்வோம். இந்த திரைக்கதையில் பிரதான பாத்திரங்களுக்கு உண்மை தெரியாமல் போகும் போது, ஏன் அவர்கள் சுரங்கப்பாதையை கண்டுபிடிப்பதாகவும் அதில் ஒருவனை துரத்திக் கொண்டு ஓடுவதாகவும் காட்சி அமைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இங்கே போடப்பட்ட மர்ம முடிச்சும் அது அவிழ்க்கப்பட்ட விதமும் வீண்தான்.
இது போன்ற சிக்கல்கள் இருந்தாலும் இந்த திரைக்கதையில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் கதாப்பாத்திர வடிவமைப்பு. பொதுவாக மர்ம கதைகளில் சந்தேகத்திற்கு இடமாக வலம்வரும் பாத்திரங்கள் எதுவும் இறுதியில் குற்றவாளியாக இருக்காது. பார்வையாளர்களை (அல்லது வாசகர்களை) குழப்பவே அந்த பாத்திரங்களின் மீது சந்தேக நிழல் விழும்படி சித்தரித்திருப்பார்கள். இந்த புரிதலோடு இந்த கதையை அணுகினாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் மீதும் சந்தேகம் வலுக்கும் வண்ணம் சம்பவங்கள் நிகழும். அந்த பாத்திரங்கள் வாட்சராக இருக்காது நம்மை குழப்பவே அப்படி சித்தரிக்கிறார்கள் என்று எண்ணும் போது, இல்லை அது தான் வாட்சர் என்று நம்பும்படி அந்த பாத்திரங்கள் ஏதாவது வேலை செய்யும். உதாரணமாக நோராவின் தோழியாகவும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாகவும் வரும் கரேன் கதாப்பாத்திரம்.
கதையின் தொடக்கத்திலிருந்தே அவள் மீது நமக்கு சந்தேகம் இருக்கும். அந்த வீடை விற்றுவிடும்படி அவள் நோராவை தூண்டிக் கொண்டே இருப்பாள். குறைந்த விலையில் அந்த வீட்டை வாங்க அவள் தான் வாட்சர் கதையை தொடங்கி வைத்தாளோ என்று கூட தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக உண்மை இருக்காது என்று எண்ணும் போது, அவள் தான் வாட்சர் என்று நம்பும் அளவிற்கு அவள் பல வேலைகளை செய்வாள். இது போல அக்கம்பக்கத்தினர் துப்பறியும் பெண்மணி தியோதரா என பலரின் மீதும் சந்தேக நிழல் தொடர்ந்து படியும் வண்ணம் அந்த கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும், இறுதியில் நோரா பிரானாக் மற்றும் டீன் பிரானாக் கதாப்பாத்திரங்கள் நாம் எதிர்பாராத மாற்றங்களை அடைவதும் (Character Transformation) இந்த திரைக்கதையின் பெரிய பலம்.
The Watcher is Worth watching…