திரைக்கதை எனும் நெடும்பயணம் – 1 

1

கதை

“We are, as a species, addicted to story. Even when the body goes to sleep, the mind stays up all night, telling itself stories.” Jonathan Gottschall

‘கதை’ என்ற சொல் சிறுவயதிலிருந்தே நமக்கு மிகமிக பரிட்சயமானதாக இருக்கிறது. கதை என்றால் என்ன என்கிற தத்துவங்கள் எல்லாம் புத்திக்கு எட்டுவதற்கு முன்பே, கதை கேட்பது நம் மனதிற்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம், ஒரு பாட்டி வடை சுட்டாங்களாம் என்றெல்லாம் குழந்தைகளாக கதை கேட்டிருப்போம். வளர்ந்ததும் குழந்தைகளுக்கு கதை சொல்லியிருப்போம். புராணமாக, காவியமாக, வாய்மொழியாக, இலக்கியமாக, சினிமாவாக ஏதோ ஒரு வகையில் கதைகள் நம்மை துரத்திக் கொண்டே இருக்கின்றன. நம்மோடு உறவாடுகின்றன. ஆனால் கதை என்றால் என்ன என்று கேட்டால் என்ன பதில் சொல்வோம்?

உண்மையில் அப்படி ஒரு கேள்வியை நாம் யாருமே கேட்டிருக்க  மாட்டோம். கேட்கத் தோணியிருக்காது. எனக்கு முதல் கதையை சொன்னது என்  அப்பாயீ. சிறுவயதில் கருடபுராணம் உட்பட ஏராளமான  கதைகளை அவர் எனக்கு  சொல்லியிருக்கிறார். இன்று என் மகளுக்கு நான் கதைகள் சொல்கிறேன். நான் எப்படி என் பாட்டியிடம் கதை என்றால் என்ன என்று கேட்டதில்லையோ அதுபோல் என் மகளும் அதை என்னிடம் கேட்டதில்லை. ஆனாலும் அவளுக்கு கதை சொல்ல  வேண்டும். ஏனெனில் இங்கே கதை  என்பது நாம் ஆழ்மனதோடு தொடர்பாடும் விஷயமாக  இருக்கிறது.

‘கதை’ என்றதுமே ஒரு கற்பனை நம்  மனதில்  விரியத்  தொடங்கிவிடுகிறது. ஒரு ஊரில் ஒரு அரண்மனை என்றால் ஊரும் அரண்மனையும் நம் கண்முன்னே தோன்றுகிறது. நமக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு கதையை காட்சியாக நாம் உருவகப்படுத்திக் கொள்கிறோம். ஒரு ஐந்து வயது குழந்தைக்கு அரண்மனை என்பது என்னவென்று புரிந்தால் அதன் மனதில் ஒரு தோற்றம் எழலாம். அதுவே ராஜஸ்தானின் அரண்மனைகளை பார்த்த ஒருவருக்கு அரண்மனை என்றதும் மனதில் வேறொரு  தோற்றம் வரும். நம்முடைய புறத்தில், நாம் அனைவருக்கும் சொல்லப்படும் கதை ஒன்றாக இருந்தாலும் நம் அகத்தில் நாம் ஒவ்வொருவரும் ஒருவிதமான கதையை நமக்கு நாமே சொல்லிக்கொள்கிறோம். கதை கேட்கும் ஒவ்வொருவரும் கதை சொல்லிகளாகவும் இருக்கிறோம். எனவே தான் கதையின் மீது நமக்கு இவ்வளவு காதல். ஆனால் கதை என்றால் புனைவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. 

காலையில் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று கோர்வையாக மாலை வேளைகளில் நாம் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் சொல்வோம் அல்லவா? வேண்டுமெனில் அதை நாம் உண்மைக் கதை என்று சொல்லிக்கொள்ளலாம். ஏதோ ஒரு சம்பவத்தை கோர்வையாக சொல்லும் போது அது கதை ஆகிறது.  அதாவது கதை என்பது சம்பவங்களின் தொகுப்பு. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில் கதை என்பது நிகழ்வு. ஏதோ ஒன்று நிகழும் போது தான் அதை கதையாக்க முடியும். எதுவுமே நிகழாத போது அங்கே கதை சாத்தியமில்லை. 

ஒரு கல்லூரியில் நடக்கும்  தொடர் கொலைகள் தான் கதை என்று ஒற்றை வரி சொல்கிறோம். இங்கே கொலைகள் என்பது நிகழ்வு. எனவே அங்கே கதை பிறக்கிறது. ஒரு நிகழ்வை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகள் என்று கதை வளர்கிறது. இத்தகைய நிகழ்வுகள் ஒரு ஜடப்பொருளை சுற்றி நிகழ்ந்தாலும் அங்கே கதை பிறக்கும்.ஒரு வைரம் இருக்கிறது. மிக ராசியான வைரம். இது வெறும் செய்தி. அதை ஒருவன் கொள்ளையடிக்க முயல்கிறான் எனில் இங்கே கதை பிறக்கிறது. அவன் எப்படி கொள்ளை அடிக்கிறான் என்று யோசிக்கும் போது கதை வளர்கிறது. அந்த வைரத்தை இன்னும் சிலரும் கொள்ளை அடிக்க முயற்சிக்கிறார்கள் எனும் போது கதை இன்னும் சுவாரஸ்யமாக வளர்கிறது.  இப்படி கதையை எதிலிருந்து உருவாக்கிட முடியும். அங்கே என்ன நிகழ்கிறது என்று முடிவு செய்வது தான் கதாசிரியரின் வேலை. 

‘கதை’ என்பது பொதுவான சொல். அது ஒரு அடிப்படை. சிறுகதை, நாவல் மற்றும் திரைக்கதை என்பதெல்லாம் அதன் பல்வேறு வடிவங்கள். ஒவ்வொரு வடிவங்களுக்கும் ஏற்ப கதை சொல்லல் முறையும், சம்பவங்களின் தேர்வும்  தொகுப்பும் மாறுபடும் என்பதை நாம் அறிவோம். (இதை பின்வரும் அத்தியாயங்களில் விலாவாரியாக பார்ப்போம்). ஒவ்வொரு வடிவத்திற்கும் ஏற்ப நாம் சம்பவங்களை நீட்டியோ சுருக்கியோ சொல்வோம். ஆனால் ஆதார கதை மாறப்போவதில்லை. அந்த ஆதார கதை, ஆதார சம்பவம் என்பது எப்போதும் சொல்வதற்கு எளிமையானதாகவே இருக்கப் போகிறது. 

‘என் கிட்ட ஒரு கதை இருக்கு?’ என்று நாம் நம் நண்பர்களிடம் சொல்லியிருப்போம். என்ன கதை என்று கேட்டால் 

நாம் பல பக்கங்களையா உடனே சொல்வோம்! இல்லையே! சில வரிகளில் எளிமையாக  தானே முதலில் சொல்வோம். 

“ஒருவன் நாட்டுப்புற  பாடல்களை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஒரு கிராமத்திற்கு வருகிறான். வந்தவன் ஒரு பழைய ஜமீன் அரண்மனையில் தங்குகிறான். அங்கே நிகழும் அமானுஷ்யம் தான் கதை” இதை நாம் சிறுகதையாக, குறுநாவலாக, நாவலாக அல்லது திரைக்கதையாக எழுதலாம். ஆனால் கதை என்றதும் நாம் இந்த இரண்டு வரிகளை தான் சொல்கிறோம். இதையே நாம் ‘ஐடியா ‘ என்கிறோம். ‘கான்செப்ட்’ என்கிறோம். ‘கதைக்கரு’ என்கிறோம்.  சில நேரங்களில் ‘பிளாட்’ (Plot) என்கிறோம். (பிளாட் என்பதற்கு இன்னும் ஆழமான அர்த்தங்கள் உண்டு. அவற்றை பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம். ஆனால் பிளாட் என்றால் (திரைக்)கதையின் சாராம்சம் என்பது பொதுவான புரிதல் என்பதால் நாம் கதைக்கருவை பிளாட் எனலாம்)

நாவல் எனும் போது நாம் மேல் சொன்ன இரண்டு வரி ஐடியாவை கதைச் சுருக்கம் என்கிறோம். திரைக்கதை எனும் போது அதை logline என்கிறோம். எவ்வளவு சிக்கலான கதையாக திரைக்கதையாக இருந்தாலும் அதை மூன்று வரிகளில் எளிமையாக சொல்ல முடியுமானால் அது நல்ல கதை என்பது திரைக்கதையாசிரியர்களின் கூற்று. 

கதை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு என்று அறிகிறோம். அந்த நிகழ்வு உண்மை சம்பவத்தை அடிப்படையாக   கொண்டதாக இருக்கலாம். கற்பனையாக இருக்கலாம். உண்மையும் கற்பனையும் கலந்ததாக இருக்கலாம். 

கட்சிதமாக நமக்கான நிகழ்வுகளை தேர்வு செய்யும் போது திரைக்கதையில் சுவாரஸ்யம் கூடுகிறது.உதாரணமாக ஒரு கதையை பார்ப்போம். கடந்தகாலத்தில் பலம்கொண்டவனாக வலம் வருகிறான் நாயகன். தனக்கு நெருக்கமானவர்களின் நலனிற்காக பழைய வாழ்க்கையை துறந்து அடங்கி வாழ்கிறான். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தை காக்க அவன் மீண்டும் கடந்த கால வாழ்க்கைக்குள் நுழைய வேண்டி இருக்கிறது. 

இங்கே பலம் என்பது உடல் பலமாகவும் இருக்கலாம், அறிவு பலமாகவும் இருக்கலாம். நெருக்கமானவர்கள் எனில் காதலியாக இருக்கலாம், மனைவியாக, குடும்பமாக அல்லது நண்பர்களாக இருக்கலாம். அல்லது தேசமாக இருக்கலாம்.

மேற்சொன்ன அவுட்லைனை நாம் எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். கடந்த காலத்தில் டானாக இருந்த ஹீரோ இப்போது சாதாரண ஆட்டோ டிரைவராக இருக்கிறான் எனலாம். கடந்த காலத்தில் ராணுவ வீரனாக, போலீசாக இருந்த ஹீரோ இப்போது சாதாரண குடும்பஸ்த்தனாக இருக்கிறான் எனலாம். கடந்த காலத்தில் அடியாளாக, ரவுடியாக இருந்தான் எனலாம். விஞ்ஞானியாக ஹாக்கராக இருந்தான் எனலாம். போர்வீரனாக, சாமுராயாக, விளையாட்டு வீரனாக அல்லது வேட்டைக்காரனாக இருந்தான் எனலாம். 

ஒரு புத்திசாலித்தனமான போலீஸ் நாயகன் தன் மனைவியின் இழப்பால் குடிகாரனாக மாறிவிடுகிறான். வாழ்வில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கும் அவன், தன் மகளை காப்பாற்ற தன் பழைய புத்திசாலித்தனத்துடன் ஒரு கொலை வழக்கை துப்பறிகிறான். விளையாட்டை விட்டு ஒதுங்கி இருக்கும் ஒரு குத்துச்சண்டை வீரன் தன்னை நாடி வந்த பெண்ணிற்காக பயிற்சியாளனாக மாறுகிறான். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.  

கழுகு பார்வையில் பார்க்கும் போது மேற்சொன்ன எல்லாமே ஒரு கதை போல தோன்றலாம். அதாவது இது எல்லாமே ஒரே கான்சபட் தான்.  ஆனால் ஏதொன்று ஒவ்வொன்றையும் தனித்துவமாக மாற்றுகிறது.அந்த ‘ஏதோவொன்றை’ நிகழ்த்திக் காட்டுவது தான் ஒரு திரைக்கதையாசிரியனின் பணி. 

நிகழ்வு என்பது எல்லாருக்கும் பொதுவானது. ஆனால் ஒவ்வொரு கதை சொல்லியும் அந்த நிகழ்வை அணுகும் விதத்திலிருந்தே தனித்துவமான கதைகள், திரைக்கதைகள் பிறக்கின்றன. இதை சாத்தியப்படுத்துவதற்கான எளிய வழிமுறை ஒன்று தான். நாம் கையிலெடுக்கும் சம்பவத்தை பல்வேறு கோணத்தில் எழுதி பார்க்கும் போது சரியான பாதையை நாம் கண்டுகொள்வோம். 

ஆனால் ஒரு திரைக்கதை கதையிலிருந்து மட்டுமே பிறக்க வேண்டுமா என்றால் இல்லை. கதாப்பாத்திரத்தில் இருந்தும் பிறக்கலாம். 

பயணம்  தொடரும்… 

திரைக்கதை எனும் நெடும்பயணம் – புதியதொடர் 

FADE IN: 

நாம் ஒரு படம் பார்க்கிறோம். முதல் பகுதி சரியாக இல்லை, இரண்டாவது பகுதி சுவாரஸ்யமாக இருந்தது என்கிறோம். இந்த காட்சி தேவை இல்லாத ஒன்று என்கிறோம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்கிறோம். அந்த கதாபாத்திரம் செய்யும் சாகசம் நம்பும் படியாக இல்லை என்கிறோம். இன்னொரு கதாப்பாத்திரம் ஆயுதம் தாங்கிய நூறு பேரை ஒற்றை ஆளாக எதிர்த்து அடித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். இவன் தான் கொலைகாரன் நான் முன்னரே யூகித்தேன் என்று சொல்கிறோம். இதென்ன க்ளீச்சேவான காட்சி என்று குறைபட்டுக் கொள்கிறோம். அட, என்னமாதிரான காட்சி என்று சிலாகிக்கிறோம்… 

இதெல்லாம்  ஏன் நிகழ்கிறது? 

ஒரு கதாப்பாத்திரத்தின் (நாயகனின்) சாத்தியங்கள் என்ன என்பதை நாம் சினிமா பார்க்க தொடங்கிய காலகட்டத்திலிருந்தே அல்லது கதை கேட்க தொடங்கிய சிறு வயதிலிருந்தே அறிந்திருக்கிறோம். நாயகன் ஜெயிப்பான். அல்லது விதிவிலக்காக தோற்பான். அவன் கிராமத்திலிருந்து கிளம்பி வந்து பட்டினத்தின் பெரிய அரசியல்வாதியை எதிர்க்கும்  நாயகனாக இருக்கலாம், வெளிநாட்டிலேயே வசதியாக வளர்ந்து ஒரு கிராமத்து விவசாயியின் தங்கையை காதலிக்கும் இளைஞனாக இருக்கலாம், குடும்பத்திற்காக தன் கனவுகளை தியாகம் செய்யும் சாமானியனாக இருக்கலாம், அவன் முடிவு என்ன என்பதை நம்முடைய ஆழ்மனம் கண்டுகொண்டுவிட்ட பின்பும், கண்கொட்டாமல் அந்த படத்தை பார்க்கிறோம். 

இது எப்படி சாத்தியமாகிறது?

இது போல கேட்டுக் கொண்டே போகலாம்.  ‘திரைக்கதை’ என்பதே இந்த எல்லா கேள்விகளுக்குமான எளிய பதிலாக இருக்க முடியும். ஆனால் திரைக்கதை எழுதும் கலை அவ்வளவு எளிதானது அல்ல. அதே சமயத்தில் அது அவ்வளவு கடினமானதும் அல்ல. தொடர்ந்து  முயன்றால் கைக்கூடிவிடக் கலை தான் அது. ஆனால் அதன் எல்லை என்பது பரந்து விரிந்தது. எண்ணற்ற சாத்தியங்களை கொண்டது. அந்த சாத்தியங்களை கண்டுகொள்பவன் நல்ல திரைக்கதையாசிரியன் ஆகிறான்.  திரையில் நாம் காண்பதையும் கேட்பதையும் எழுதுவதே ‘திரைக்கதை’ என்கிறது அகராதி. ஆனால் எதையெல்லாம் காணப்போகிறோம், கேட்கப்போகிறோம் என்று ஒரு திரைக்கதையாசிரியன் எடுக்கும் முடிவு தான் சராசரியான காட்சியை சுவாரஸ்யமான காட்சியாக மாற்றப்போகிறது.

ஒரு எளிய கதையை பார்போற்றும் படமாக மாற்றுவது என்பது ‘திரைக்கதை’  தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்று யோசிப்பதும், அதற்காக புனைவின் எல்லா திசைகளிலும் பயணிப்பதும் தான் ஒரு திரைக்கதை ஆசிரியனின் வேலை.

இந்த பயணத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும்? எப்படி தொடர வேண்டும்? 

Let the Journey Begin…

Image Courtesy: Canva

திரைக்கதை கலையை பற்றி எளிய மொழியில் இனி வரும் வாரங்களில் தொடர்ந்து உரையாடுவோம். இணைந்திருங்கள்… 

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நன்றி

அரவிந்த் சச்சிதானந்தம் 

aravindhskumar@gmail.com