ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2

***

2

ஆர்க் பிளாட், மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட்

The Writer Must Believe in What He Writes- Robert Mckee

***

ஆர்க் பிளாட் (Arch Plot), மினி பிளாட் (Mini Plot) மற்றும் ஆன்டி பிளாட் (Anti Plot) என்பதே மெக்கீ சொல்லும் மூன்று பிரதான பிளாட் வகைகள். ஒரு கதையை நகர்த்துவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவை இந்த மூன்று பிரதான வகைகளுக்குள்தான் வரும் என்கிறார் மெக்கீ. மேலும் ஒவ்வொரு வகைக்கும் இருக்கும் தன்மைகளைப் பற்றியும் மெக்கீ குறிப்பிடுகிறார். ஆனால் மெக்கீ சொல்லும் இந்த எல்லா வகைகளைப் பற்றியும் அதிகம் சிந்திப்பது ஒரு திரைக்கதையாசிரியருக்கு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். 

அதனால் நாம் இதை இன்னும் எளிமையாக, வேறுமாதிரி புரிந்துகொள்வோம். வழக்கமான திரைக்கதை அமைப்பு மற்றும் மாறுபட்ட திரைக்கதை அமைப்பு என்று பிளாட்களை ஒரு புரிதலுக்காக இரண்டு வகைகளாக மட்டுமே பிரித்துக் கொள்வோம். இதுவே நமக்கு பரிச்சயமான வகைகளும் கூட. 

வழக்கமான அமைப்பு என்று நாம் சொல்வது, பல ஆண்டுகளாக நாம் பார்த்து வரும் பெரும்பாலான (தமிழ்) படங்களை குறிக்கும். ஒரு பாத்திரம், அதன் உலகம், பாத்திரத்திற்கு வேறொரு பாத்திரத்தால் ஏற்படும் சிக்கல், இறுதியில் அந்த சிக்கலுக்கான தீர்வு என்று நேர்கோட்டில் நகரும் கதைகளை வழக்கமான திரைக்கதை அமைப்பு எனலாம். மெக்கீ சொல்லும் ஆர்க் பிளாட் என்பது இது தான். இது தொன்றுதொட்டு பின்பற்றப்படும் வகை என்பதால் இதற்கு ‘க்ளாஸிக் பிளாட்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. 

அடுத்து மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட், மாறுபட்ட அல்லது வித்தியாசமான திரைக்கதை போக்கை குறிக்கிறது. நேர்கோட்டில் நகராத கதைகள், ஒன்றிற்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் கொண்ட கதைகள், ஸ்தூலமான முடிவென்று எதுவும் இல்லாமல் முடியும் கதைகள் போன்றவை இந்த இரண்டு வகைகளுக்குள் (அதாவது மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட்) அடங்கும். 

மேற்கூறிய பிளாட் வகைகளின் தன்மைகள் என்னென்ன! 

ஆர்க் பிளாட்டில் திட்டவட்டமான முடிவு இருக்கும். அதாவது க்ளைமாக்சில் கதைக்கு ஒரு தீர்வு இருக்கும். மற்ற இரண்டு வகைகளிலும் அது அவசியமில்லை என்கிறார் மெக்கீ. மேலும் ஆர்க் பிளாட்டில் நம் பிரதான பாத்திரத்திற்கு புற உலகில் பிரச்சனை நிகழும். மற்ற வகைகளில் பிரச்சனை அகம் சார்ந்ததாக இருக்கும் என்கிறார். ஆனால் இந்த காலகட்டத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் மாறிவருவதை கவனிக்க முடியும். நம் முக்கிய கதாப்பாத்திரத்திற்கு புறம் மற்றும் அகம் ஆகிய இரண்டு நிலைகளிலும் பிரச்சனைகள் இருக்க வேண்டும். அப்படி திரைக்கதையை அமைத்தால் அந்த கதை பார்வையாளர்களோடு அதிகம் நெருங்கி வரும். (உதாரணம் பிரேக்கிங் பேட்.) 

ஒரு போலீஸ் நாயகன் இருக்கிறான். அவனுடைய நோக்கம் கொலைகாரனை கண்டுபிடிப்பது. இதை வைத்து ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை எழுத முடியும். ஆனால் அவனுக்கு வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அது அவனுள் அகச் சிக்கலை ஏற்படுத்தி அவனை  செயல்படவிடாமல் தடுக்கிறது. அல்லது நாயகன் மீது காதல் வயப்படுகிறாள் நாயகி. ஆனால்   நாயகனோ தன் பழைய காதலை நினைத்துக் கொண்டே இருக்கிறான். இது அவனுடைய அகப் பிரச்சனை. இப்படி கதைகளில் அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டு சிக்கல்களும் இருக்கும் போது அந்த திரைக்கதை இன்னும் ‘எமோஷனலாக’ உருவாகிவிடும். 

அடுத்து, ஆர்க் பிளாட்டில் கதை நேர்கோட்டில் (Linear) நகரும் என்றும், ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றும் கூறுகிறார் மெக்கீ. அதவாது திரைக்கதையில் நிகழும் சிறுசிறு திருப்பங்களுக்கும் நம்பத்தகுந்த காரணம் இருக்க வேண்டும். ஒரு வினை நிகழ்ந்தால் தான், ஒரு எதிர்வினை நிகழ வேண்டும்.ஆனால் மற்ற வகை கதைகளில் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. அதில் திடிரென்று எது வேண்டுமானாலும் நிகழலாம். சம்மேந்தமே இல்லாமல் ஒரு ஏலியன் கதைக்குள் வந்து கதையை முடித்து வைத்துவிட்டு போகலாம். (இதற்குதான் இதை வித்தியாசமான,  வழக்கத்திற்கு மாறான திரைக்கதை அமைப்பு என்கிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆர்க் ப்ளாட்டில்  நாயகன் ஆக்டிவாக (active) இருப்பான். மற்றவகை கதைகளில் பாஸிவாக (Passive) இருப்பான் என்ற கூற்றும் உண்டு. அதாவது அடுத்து என்ன என்று இயங்கிகொண்டே இருப்பவன் முதல் வகை. என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று இருப்பவன் இரண்டாவது வகை. இரண்டு குணங்களும் கலந்த நாயகனை உருவாக்குவது திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தை கொடுக்கும். (குறிப்பாக ஆக்சன் கதைகளுக்கு.)  எப்போதுமே துடிதுடிப்பாக இருக்கும் நாயகனை வில்லன் சீண்டுகிறான் என்பதை விட, நமக்கேன் வம்பு என்று தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனை வில்லன் சீண்ட அவன் வெகுண்டு எழுகிறான் என்று கதை அமைத்தால் திரைக்கதை அதிக சுவாரஸ்யமாக இருக்கும்.

அவன் திடிரென்று வெகுண்டு எழவில்லை, கடந்த காலத்தில் தான் செய்த சண்டித்தனங்களை அடக்கி சாதுவாக வாழ்ந்திருக்கிறான், இப்போது மீண்டும் பழைய முகத்தை காண்பிக்கிறான் என்று கதையை அமைத்தால் திரைக்கத்தில் இன்னும் கூடுதல் சுவாரஸ்யம் கிடைக்கிறது அல்லவா! இதுபோல் நம் தேவைக்கேற்றார் போல் நாயகனின் தன்மையை மாற்றி கொண்டே போகலாம், அவனை ஆக்டிவ், பாஸிவ் என ஒரே கோணத்தில் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. 

அடுத்து திரைக்கதை பிளாட் வகைக்களுக்குள் நாம் கவனிக்க வேண்டிய தன்மை ‘யதார்த்தம்’. நாம் உருவாக்கும் உலகின் யதார்த்தம் ஆரம்பத்திலிருந்து சீராக இருத்தல் வேண்டும். இதுவே ஆர்க் பிளாட்டின் தன்மை. மற்ற வகை கதைகளில் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. யதார்த்தம் என்றதும் நிஜவாழ்வில் இருக்கும் யதார்த்தத்தை சினிமா பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். நாம் உருவாக்கும் கதை உலகிற்கென்று ஒரு யதார்த்தம் இருக்குமல்லவா! அதவாது Cinematic Reality. அது சீராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நம் வில்லன் நினைத்தால், அவனை சுற்றி இருக்கும் எந்த பொருளும் உடனே பறந்து அவன் கைக்கு வந்து விடும், அதை அவன் ஆயுதமாக்கி யாரையும் தாக்குவான், அவன் முன் சண்டை செய்து யாராலும் ஜெயிக்க இயலாது, ஆனால் நம் நாயகனுக்கும் அத்தகைய சக்தி கிடையாது என்று வைத்துக்கொள்வோம். இப்படியாக நாம் கதையை உருவாக்கிவிட்டோம். அதாவது இதுவே நம் கதை உலகின் யதார்த்தம் என்று நிலைநாட்டிவிட்டோம். அப்படியானால் கதையின் காட்சிகளும் இந்த யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும். நாயகனும் வில்லனும் எதிர்கொள்ளும் போது, நாயகன் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக திடிரென்று நாயகனுக்கும் அந்த சக்தி வந்துவிட்டது என்று வைக்கக்கூடாது!. நம்பகத்தன்மையோடு கதையை நகர்த்த வேண்டும். நம் கதை உலகில் வில்லனுக்கு அந்த சக்தி எப்படி கிட்டியதோ, அதே முயற்சியை செய்ததன் மூலமே நாயகனுக்கும் சக்தி கிட்டியது என்று கதை அமைக்கலாம். அல்லது வில்லனை விட நாயகனுக்கு வேறொரு சிறப்பான சக்தி கிடைக்கிறது என்று கதை அமைக்கலாம். ஆனால் அது எப்படி கிட்டியது என்றும் சொல்ல வேண்டும். அது நம்பும் வகையிலும் இருக்க வேண்டும். பேண்டஸி அல்லது சூப்பர் ஹீரோ கதை என்பதற்காக நாம் நம்போக்கில் எதைவேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போக கூடாது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஆர்க் பிளாட்டில் நம் கதை உலகிற்காக நாம் உருவாக்கிய சட்டதிட்டங்களை நாம் இறுதி வரை பின்பற்ற வேண்டும். 

ஆனால் மினி மற்றும் ஆன்டி பிளாட் கதைகளில், யதார்த்தம் சீராக இருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதுவேண்டுமானாலும் நம் கதை உலகின் சட்டதிட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். இலக்கியத்தில் அபத்தப் புனைவுகள் இந்த வகையை சேர்ந்தவை தான். காஃப்காவின் கதையில் திடிரென்று நாயகன் பூச்சியாக மாறுவான், அல்லது அவன் நுழையும் வீடு  நீதிமன்ற அறையாக மாறும். பெர்னான்டோ ஸோரன்டினோவின் கதைகளையும் அபத்தப் புனைவுகளுக்கான உதாரணமாக சொல்லலாம்.   இவற்றை ஏன் அபத்த புனைவு என்கிறோம் எனில், யதார்த்த உல கில் திடீரென யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விசயங்கள் நடக்க நேரிடும்.  லூயி புனுவலின் (லூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி) படங்களில் இந்த தன்மையை காணலாம்.  சூப்பர் டீலக்ஸ் படத்தில் பள்ளி நண்பர்களின் கதையில், கடைசியில் ஒரு ஏலியன் வருமே! அதுவும் இந்த வகைதான்.

இப்படி ஒவ்வொரு வகை பிளாட்டிற்கும் ஏராளமான தன்மைகள் இருந்தாலும் ஒரு திரைக்கதையாசிரியர் புரிந்து கொள்ள வேண்டியது ஆர்க் பிளாட்டை எழுதும் உத்திகளை தான் என்கிறார் மெக்கீ. உண்மைதான். நாம் வாய்வழியாக சொல்லிவந்த கதைகளிலிருந்து பிரபலமான புராணங்கள் வரை எல்லாமே ஆர்க் பிளாட்கள் தான். புராணங்களில் கிளைக்கதைகள் உண்டு என்றாலும், அதன் மூலக்கதை ஒரு நாயகனைப் பற்றியது தான். இந்திய புராணங்கள் தொடங்கி உலக புராணங்கள் அனைத்திலும் இந்த ஒற்றுமையை கண்டுகொள்ளமுடியும். இதை தான் ஜோசப் கேம்பல் ‘ஹீரோ வித் தவுசண்ட் பேசஸ் புத்தகத்தில் ‘ஒற்றைத்தன்மை’ (Monomyth) என்கிறார்.

நாம் ஆதிகாலம் தொட்டு சொல்லி வரும் கதைகளை நம்மை அறியாமலேயே ஒரு ஊர், ஒரு ராஜா (அல்லது ஒரு நாயகன்) என்று தான் சொல்லி வந்திருக்கிறோம். எனவே நம் வாழ்வோடு தொடர்புடைய ஆர்க் பிளாட்டில் கதைகளை எழுதி பழகும் போது மற்றவைகள் தன்னாலேயே கைகூடும். 

மேலும், பிளாட்களை நாம் எப்படி வகைப்படுத்தினாலும், ஒரு சம்ப்ரதாயமான, வழக்கமான  பிளாட்டை  சிறு மாற்றம் செய்வதன் மூலம் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பை உருவாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு நாயகன் இருக்கிறான். அவன் உலகை நாம் அறிகிறோம். அவன் நிதானமான வாழ்வை ரசிக்கிறோம். திடிரென்று அவனுக்கு ஒரு பிரச்சனையை வருகிறது. (அதாவது வில்லன் அவன் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான்). இந்த குறுக்கீடு படம் ஆரம்பித்து ஒரு அரைமணி நேரத்தில் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற அமைப்பில் நாம் ஏராளாமான கதைகளை கண்டிருக்கிறோம். ஆனால் அதே வில்லனை இடைவேளையின் போது அறிமுகப்படுத்தினாலோ, அல்லது படத்தின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்துவிட்டு, அதன் பின் முழுக்கமுழுக்க நாயகனின் கதையை சொல்லிவிட்டு, இடைவேளையின் போது வில்லன் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் என்றால் வேறொரு பிளாட் கிட்டும். 

முன்பு சொன்னதுபோல ‘பிளாட்’ என்பது திரைக்கதையின் பாதை தான். எல்லா பாதைகளையும் ஆராய்ந்து பார்த்து தனக்கான பாதையை கண்டுகொள்வதே ஒரு நல்ல திரைக்கதையாசிரியரின் வேலை. எழுதிஎழுதி பழகும் போது இது சாத்தியமாகும்.

தொடரும்… 

தொடரும் சினிமா (free e-book)

கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது.

தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம்
Cover Photography©  Premkumar SachidanandamThodarum_frontcover

கூகிள் ப்ளே ஸ்டோரில் free download  செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

 

தி குட் ரோடும் ஆஸ்காரும்

1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு.

தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க தொடங்கிவிட்டது. கடந்த இருபத்தைந்து வருடங்களில் குஜராத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படமும் எடுக்கப்படவில்லை. ஆனால் குட் ரோட் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை அண்மையில் பெற்றது. இப்போது ஆஸ்காருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க பலரின் வரவேற்பை பெற்ற லஞ்ச்பாக்ஸ் என்ற இந்தி திரைப்படத்தை விடுத்து, இந்த படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்துவிட்டதால் பலரும் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இப்படி பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றிருக்கும் இந்த படத்தின் கதை தான் என்ன?

டேவிட்-கிரண் தம்பதியர் மும்பையிலிருந்து சுற்றுலாவிற்காக கட்ச் வருகின்றனர். நெடுஞ்சாலை பயணத்தின் போது தங்களின் ஏழு வயது சிறுவன் ஆதித்யாவை தொலைத்துவிடுகின்றனர். தம்பதியர் இருவரும் சிறுவனை தேட, தொலைந்த அந்த சிறுவன் டிரக் ஓட்டுனர் பப்புவிடம் கிடைக்கிறான். பப்புவும் அவனது சகாக்களும் சேர்ந்து காப்பீட்டு பணத்திற்காக டிரக்கை மலையிலிருந்து தள்ளிவிட்டுவிட்டு, போலியானதொரு விபத்தை சித்தரித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். இடற்கிடையில் தன் பாட்டி வீட்டிற்கு பயணிக்கும் பூனம் என்கிற சிறுமியும் அந்த நெடுஞ்சாலையில் வழிதெரியாமல் ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொள்கிறாள். இறுதியில் இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகின்றன என்பதே படத்தின் மீதிக் கதை.

சக மனிதர்கள் மீது அன்புசெலுத்துவதை பற்றி இந்த படம் பேசுகிறது. பப்பு சட்டவிரோதமாக சம்பாதிக்க முயன்றாலும், அவனிடம் இருக்கும் மனிததன்மை அவனை ஆதித்யாவிடம் அன்புகாட்ட வைக்கிறது. அதே போல் விபச்சார விடுதியில் இருப்பவர்கள் பூனத்தை அன்பாக பார்த்துகொள்கிறார்கள். இது போல், படமுழுக்க மனித நேயம் விரவி கிடக்கிறது. படத்தின் கதை முழுக்க கட்ச் பகுதியில், ஒரு நெடுஞ்சாலையில் நடக்கிறது.

மல்டிலேயர் நரேட்டிவ் எனப்படும் திரைக்கதை உத்தியை பயன்படுத்தி கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த உத்தியில், வெவ்வேறு பின்னணி கொண்ட கதாப்பாத்திரங்கள் கதையின் ஒரு மையப்புள்ளியில் இணைவார்கள். இங்கே மூன்று கதைகளும் இணையும் அந்த புள்ளி ஆழமாக இல்லை என்பதே பெரிய குறை. மேலும் மூன்று கதைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. சிறுமி பூனத்தின் கதை மிகவும் மேலோட்டமாக அமைந்திருப்பதால், அதில் வரும் கதைமாந்தார்கள் நம் மனதில் பதியாமால் போய்விடுகின்றனர்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் புதுமுக இயக்குனர் கியான் கொரீயா. முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். திரைக்கதையிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், திரைக்கதையில் இடையிடையே தொய்வு ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். படத்திற்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவு. நெடுஞ்சாலையையும் கட்ச் பகுதியின் வறண்ட பூமியையும் எந்த செயற்கை தனமுமின்றி அப்படியே படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அமிதாப் சிங். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தின் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றி இருப்பது படத்திற்கு இன்னொரு பலம்.

மேலும் படத்தில் தொழில்முறை நடிகர்கள் அதிகம் இல்லை. சாமானிய மனிதர்களை நடிக்க வைத்து படத்தை மிகவும் யதார்த்தமாக உருவாக்கி இருக்கின்றனர். ஆடம்பரமான பின்னணி இசையை தவிர்த்து, கிராமிய பாடல்களை பின்னனியில் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு புதியதொரு வடிவத்தை தருகிறது. அழிந்துவிட்ட குஜராத் திரைத்துறைக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனரை பாராட்டிட வேண்டும்.

படம் என்னதான் சிறப்பாக இருந்தாலும் இதைவிட பன்மடங்கு சிறப்பாக இருக்கும் லஞ்ச்பாக்ஸ் படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கலாம் என்று ஒருசாரார் ஆதங்கப்படுகின்றனர். லஞ்ச்பாக்ஸ் படத்தின் கதைகளம் குட் ரோடிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அந்த படமும் சக மனிதர்களை நேசிப்பதை பற்றிதான் பேசுகிறது. லஞ்ச்பாக்ஸ் படத்தில் இருந்த முழுமை குட்ரோடில் இல்லை என்பதே உண்மை. அதே சமயத்தில், இந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்களன்று, மற்ற மொழி படங்களையும் ஆதரிக்க வேண்டும். அதனால் குட் ரோட் படத்தை தேர்வு செய்திருப்பது சரியான முடிவே என்று இன்னொருசாரார் வாதிடுகின்றனர். எது எப்படியோ, ஒரு படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டுவிட்டதால் மட்டுமே அந்த படம் இறுதி சுற்றுக்கு தேர்வாகிவிடாது. படத்தை அமெரிக்க விநியோகஸ்தர்களுக்கு விற்கவேண்டும். அமெரிக்க விமர்சகர்களிடமும், பத்திரிக்கைகளிடமும் படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். படத்தை அமெரிக்காவில் பிரபல படுத்த வேண்டும். இதை ஆஸ்கர் லாபியிங்க் என்று அழைப்பார்கள். பின் அந்த படத்தை இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை ஆஸ்கார் குழுவினர்தான் எடுப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஆஸ்கார் விருதிற்கு இந்தியாவிலிருந்து 46 படங்கள் அனுப்பப் பட்டிருக்கின்றன. ஆனால் வெறும் மூன்று படங்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. அதனால் தி குட் ரோட் திரைப்படம் ஆஸ்கார் பந்தயத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யே ஜவானி ஹே தீவானி

இந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம்.

கபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா படுகோனே). நைனா மருத்துவ கல்லூரி மாணவி. மிகுந்த கட்டுபாட்டுடன் வளர்க்கப் பட்டவள். எந்நேரமும் படிப்புதான். சுற்றுலா சென்ற இடத்தில் கூட படிக்கும் அளவுக்கு, அவள் ஒரு படிப்பாளி. ஆனால் வாழ்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறவன் கபீர். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவன். யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிகொள்ள விரும்பாதவன். உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்ற ஆசைகொண்டவன். காதல், திருமணம் போன்றவற்றில் அவனுக்கு துளியும் ஆர்வமில்லை. அவன் நைனாவிற்கு, வாழ்கையை ரசிக்க சொல்லிக் கொடுக்கிறான். வாழ்வின் ஆழகான தருணங்களை கொண்டாட கற்றுத் தருகிறான். அவனின், தூய்மையான குணத்தை கண்டு அவனிடம் தன் உள்ளத்தை பறிகொடுக்கிறாள் நைனா. காதலை சொல்லலாம் என அவள் முடிவு செய்யும்போது, கபீர் மேற்படிபிற்காக வெளிநாடு செல்கிறான். வருடங்கள் உருண்டோடுகின்றன. நைனா டாக்டர் ஆகிறாள். கபீர் வெளிநாட்டில், தொலைகாட்சியில் ஒளிபதிவாளராகிறான். எட்டு வருடங்களுக்கு பின், அதித்தியின் திருமணத்தில், அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். இப்போது, கபீருக்கு நைனாவின் மீது காதல் மலர்கிறது. ஆனால் சந்தர்ப்பங்கள் அவர்களை மீண்டும் பிரித்து வைக்கிறது. இறுதியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.

ஒருவகையில், படத்தின் கதை என்னமோ சம்ப்ரதாயமான காதல் கதைதான். ஆனால் திரைக்கதை தொய்வின்றி நகர்வாதால் சலிப்பு தட்டவில்லை. மேலும் படத்தில் பல திறமையான நடிகர்கள் நடித்திருப்பதால் படம் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர், தன் மீதிருக்கும் சாக்லேட் கதாநாயகன் முத்திரையை உடைக்க விரும்பவில்லை போலும். அதனால் தான் இந்த படத்திலும் ஜாலியான கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் தன்னை பற்றி மட்டுமே கவலைப்படும் சுயநலமிக்க கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் தீபிகா படுகோனே. எப்போதும் தயக்கத்துடனேயே வலம்வரும் கதாபாத்திரம் இவருடையது. தீபிகா தன் முந்தைய படங்களை விட மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். உண்மையில் இவர் சிறப்பாக நடித்த முதல் படம் இதுதான் என்று கூட சொல்லலாம். இவரைப் போல் சிறப்பாக நடித்திருக்கும் இன்னொரு நடிகை கல்கி கோய்ச்லின். இவர்களை தவிர படத்தில் பெரிய ஸ்டார் பட்டாளமே உண்டு. அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கபீரின், பொறுப்பான-அமைதியான தந்தையாக வாழ்ந்திருக்கிறார் பரூக் ஷேக். அவரை போன்ற சிறந்த நடிகரை இன்னும் சரிவர பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

படத்தை எழுதி இயக்கியிருப்பவர். அயன் முகர்ஜி. இவர் தன் முந்தைய படமான, ‘வேக் அப் சித்’யிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம், வசனம். இந்த படத்தை ஒரு பீல் குட் படமாக உருவாக்கியதில், வசனத்திற்கு முக்கிய பங்குண்டு. படத்தை திறம்பட ஒளிப்பதிவு செய்திருப்பவர் மணிகண்டன். படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான திருமண கொண்டாட்டங்களையும், குழுமையான காஷ்மீரையும் இவரது கேமரா அழகாக படம்பிடித்திருக்கிறது.

படத்தை தயாரித்தவர் கரன் ஜோகர் என்பதாலோ என்னவோ படத்தில் கரன் ஜோஹரின் முத்திரைகள் நிறைய இருக்கின்றன. பிரம்மாண்டமான நடனக்காட்சிகள், துள்ளலான பாடல்கள் என் கரன் ஜோஹர் படங்களுக்கே உரித்தான மசாலா காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன. அதனால் அயன் முகர்ஜியின் ஸ்டைல் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

இளைஞர்களைப் பற்றிய கதை எனினும், படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. மேலும், காதல் காட்சிகளை விட, கபீரும் அவனது நண்பர்களும் அடிக்கும் லூட்டிகள் அதிக சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது. இறுதியில், படம் சொல்லும் கருத்து, உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தமாதிரி வாழுங்கள் என்பதே. மொத்தத்தில் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

 

பர்ஃபி

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’.
இந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கிறார், டார்க் (Dark) கதைகளை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்த அனுராக் பாசு முதல் முதலாக ஒரு ‘ஃபீல் குட்’ (feel good ) படத்தை எடுத்திருக்கிறார் என்பன போன்ற பல விடயங்கள் ட்ரைலரில் தெளிவாக தெரிந்தது.
அதே சமயத்தில் பிரெஞ்சு திரைப்படமான அமிலியின்(Amelie) பின்னணி இசையை அப்பட்டமாக ‘பர்ஃபி’’ ட்ரைலரில் உபயோகித்திருப்பதையும், அமிலியை போல் ‘கலர் கிரேடிங்’’ (Color Grading) செய்யப்பட்டிருப்பதையும் கண்டதும் ஒருவேலை அந்த பிரெஞ்சு படத்தைதான் ரீமேக் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. எல்லாக் சந்தேகங்களுக்கும் தனக்கே உரித்தான பாணியில் விடை சொல்லி இதயத்தை வருடுகிறான் ‘பர்ஃபி’’.
டார்ஜிலிங்கில் வசிக்கும் ஏழை மாற்றுத்திறனாளி பர்ஃபி. வாய் பேச காது கேட்க இயலாதவர். அவ்வூரிற்க்கு குடி பெயரும் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணான ஸ்ருதிக்கும் பர்ஃபிக்கும் காதல் மலர்கிறது. ஸ்ருதி ஏற்கனவே திருமணம் நிச்சயமானவரெனினும் பர்ஃபியின் குணாதிசயங்களை கண்டு தன் மனதை பர்ஃபியிடம் பறிக்கொடுக்கிறார். வழக்கமாக எல்லாக் காதலுக்கும் தடையாக நிற்கும் அந்தஸ்த்து இவர்கள் காதலுக்கும் பெரும் தடையாக வந்து நிற்க, ஸ்ருதி தனக்கு நிச்சயிக்கப் பட்டவரையே திருமணம் செய்துக் கொண்டு கொல்கத்தா சென்று விடுகிறார்.
கிட்டத்தட்ட ஐந்தரை வருடங்கள் உருண்டோடுகிறது.தன் தந்தையின் சிகிச்சைக்காக பர்ஃபிக்கு அவசரமாக பணம் தேவைப்பட, ஊரின் பெருந்தனக்காரரின் பேத்தியான ஜில்மில்லை கடத்தி பணம் பறிக்க முடிவுசெய்கிறார். மன நலம் குன்றிய ஜில்மில்லை முயன்று கடத்தி பணம் பறித்தும் விடுகிறார் பர்ஃபி. சிறு வயதிலிருந்து ஆஷ்ரமத்தில் வளர்ந்த ஜில்மில்லிற்கு பர்ஃபியை பிடித்துவிடவே, மீண்டும் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். இதற்கிடையில் வங்கி ஒன்றை கொள்ளை அடிக்க முயன்ற வழக்கிலும், ஜில்மில்லை கடத்திய வழக்கிலும் பர்ஃபியை போலீஸ் துரத்துகிறது. போலீசிடம் இருந்து தப்பி ஜில்மில்லையும் அழைத்து கொண்டு பல இடங்களுக்கு பயணிக்கிறார் பர்ஃபி. எல்லார் மனதையும் கொள்ளைக் கொள்ளும் தூய்மையான உள்ளம் கொண்ட பர்ஃபி ஜில்மில்லின் உள்ளத்தையும் கொள்ளை கொள்வதில் ஆச்சர்யமொன்றுமில்லை .இறுதியில் கொல்கத்தாவில் குடியேறும் பர்ஃபி தன் முன்னால் காதலி ஸ்ருதியை சந்திக்கிறார். பர்ஃபியிடம் கொண்ட ஊடலின் காரணமாக ஜில்மில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கொல்கத்தாவை விட்டு வெளியேறுகிறார். பின் பர்ஃபியும் ஸ்ருதியும் ஜில்மில்லை தேடுகிறார்கள். தேடல் பயணத்தின் போது, தான் இன்னும் பர்ஃபியை காதலித்துக் கொண்டிருப்பதை உணர்கிறார் ஸ்ருதி. இறுதியில் யார் யாரோடு இணைகிறார்கள் என்பதோடு முடிகிறது கதை.
இது எந்த அந்நிய மூலத்தையும் தழுவாத ஒரு சிம்பிளான கதை.’குறைவான வசனங்கள், நிறைவான காட்சிகள்’’ என்ற அடிப்படை திரைக்கதை விதியை பின்பற்றி எழுதப்பெற்ற திரைக்கதை. படத்தில் வசங்கள் மிகக் குறைவு. காட்சிகளாலே படத்தை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த கதைச்சொல்லி என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் அனுராக் பாசு. ஆனால் தேவையில்லாமல் ‘நான்-லினியர்’(NonNon-Linear) உத்தியை பயன்படுத்தி பார்வையாளர்களை குழப்பியிருக்கின்றனர். ஸ்ருதி பர்ஃபியை விட்டு பிரிந்ததும் கிட்டதட்ட ஆறுவருடம் கழித்து மீண்டும் சந்திப்பதாக அமைந்துள்ளது திரைக்கதை. ஆறு வருடம் எப்படிக் கடந்த்தோடியது என்பதை விவரிக்கவில்லை. கதைக்கு எந்த ஒரு அடிப்படை தேவையுமின்றி ‘ஆறு வருட இடைவெளி’’ என்பதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதும் விளங்கவில்லை. மேலும் திரையில் எந்தக் கதாப்பாத்திரங்களுக்கும் வயதாகவில்லை. இறுதிக் காட்சியில், கதாப்பாத்திரங்களுக்கு வயதானதைக் காட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. சமிபத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆப் வசைப்பூர்’’ படத்திலும் ஒப்பனை மூன்றாம் தரமாகவே அமைந்திருக்கும். பலக்கோடி செலவழித்து எடுக்கப்படும் பாலிவுட் படங்களில் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது ஆச்சர்யமளிக்கிறது.முகம் சுழிக்கவும் வைக்கிறது.
படத்தின் இன்னொரு கதைசொல்லி இசையமைப்பாளர். தன் இசையின் மூலம் புதியதொரு கதை சொல்கிறார் அவர். பல இடங்களில் காட்சிகளை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது இசை. அதே சமயத்தில் படத்தின் தீம் ம்யுசிக் ‘அமிலி’’ படத்திற்காக யான் டீர்சென் (Yann Tiersen) இயற்றிய இசையை நினைவுப் படுத்துகிறது.
பர்ஃபியாக ரன்பீர் கபூர், எந்த ஒரு பெரிய நடிகரின் பாணியையும் பின்பற்றாமல் அசலான நடிப்பால் முத்திரைப் பதிக்கிறார். ஸ்ருதியிடம் தன் காதலை சொல்வதிலும், அவர் திருமணம் நிச்சயமானவர் என்பதையறிந்து சொன்ன காதலை வாபஸ் வாங்குவதிலும் ரன்பீர் வெளிப்படுத்தியிருக்கும் பாவனைகள் தனித்துவம். படம் முழுக்க அவர் வெளிப்படுத்தியிருக்கும் காமிக்கல் (comical) உடல்மொழி படம் முடிந்தபின்னும் நினைவிலிருந்து நீங்க மறுக்கிறது. ஜில்மிலாக பிரியங்கா சோப்ராவும் , ஸ்ருதியாக இலியானாவும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். பிரியங்கா அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். முன்னால் உலக அழகியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் துளிக் கூட எழாத அளவிற்கு பிரியங்காவின் நடிப்பு ஒரு மனவளர்ச்சி குன்றிய பெண்ணை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அதற்க்கு அவரின் உடையமைப்பும் பெரிதும் உதவியுள்ளது.
என்னதான் கதாபாத்திரங்கள் ஒழுங்காக நடித்தாலும் அவர்களின் பாவனைகளை ஒழுங்காக படம்பிடிப்பது மிகமுக்கியமான பணி. அவ்வகையில் பர்ஃபி படத்திற்கு தன் ஒளிப்பதிவின்மூலம் உயிரூட்டியிருப்பவர், ஒரு தமிழர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். படமுழுக்க நிரம்பிக் கிடக்கின்றன வண்ணங்கள். அந்த வண்ணங்களை வண்ணமயமாக படம் பிடித்திருக்கிறது அவரது கேமரா. அதை திரைப்பட தொகுத்த படத்தொகுப்பாளரையும் பாராட்டிட வேண்டும்.
இந்த படத்தில் செய்யப் பட்டிருக்கும் தனித்துவமான ‘கலர்கிரேடிங்’ இதுவரை எந்த இந்தியப் படத்திலும் செய்யப்பட்டதில்லை. அதுவே காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறது.ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்திருப்பது திரையில் தெரியும்.
படத்தில் நிறைகள் நிறைய இருந்தாலும். திருஷ்டி வைத்தாற்போல் படத்தின் குறையாக நம் மனதை நெருடுவது அசல்தன்மையற்ற சிலக் காட்சிகள்.கருப்பு வெள்ளையில் கண்ட சார்லி சாப்லின் படங்களை கலரில் காண்கிறோமா என்று எண்ணும் அளவிற்கு பல சாப்ளின் படக்காட்சிகள் இப்படத்தில் உபயோகியப் பட்டிருக்கின்றன.. மேலும் நோட் புக் (Note Book) , கிக்குஜிரோ (Kikujiro) ,சிங்கிங் இன் தி ரெயின் (Singing in the Rain ) போன்ற பல உலக படங்களில் இருந்து காட்சிகள் தழுவப்பட்டிருக்கின்றன.
இதையெல்லாம் மீறி பர்ஃபி தனித்து நிற்கிறான்.காரணம், மாற்றுத் திறனாளிகளைப் பற்றி எடுக்கப் பட்ட அனைத்து படங்களும் அவர்கள் மீது பரிதாபம் விளைவிப்பதையே அடிப்படை நோக்காக கொண்டு எடுக்கப் பட்டிருக்கும்.ஆனால் பர்ஃபி பரிதாபத்தை ஏற்ப்படுத்தவில்லை. பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றான்.
இந்திய சினிமாவை பொறுத்தவரையில் ‘ஃபீல் குட்’’ படங்கள் மிக மிக குறைவு. அதுவும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் பொதிந்திருக்கும்
சிறுசிறு சந்தோசங்களை மையப்படுத்தி இதுவரை யாரும் படம் எடுக்க முயற்சித்ததில்லை. அவ்வகையில் பர்ஃபி ஒரு புது முயற்சி. அதற்காகவே பர்ஃபி பாராட்டுதலுக்குரிய திரைப்படமாகிறது. வாழ்வில் ஒளிந்திருக்கும் குறைகளை மறந்து, வாழ்வை அழகாக வாழ்வதைப் பற்றி பேசும் ‘பர்ஃபி’’சுவையானவன்…