ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை

ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை 

 எல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே
பேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்துவார்த்த ரீதியாக, சமுக ரீதியாக, மனோதத்துவ ரீதியாக சற்றே கொலைவெறியோடு ஆராயப் போகிறோம்.

சமகால தமிழ் சமுதாயத்தில் “கொலைவெறி” என்பது சராசரியாக பயன் படுத்தப்படும் ஒரு சாதாரண கொச்சை சொல்லே. ஆனால் இந்த கொச்சை சொல்லின் சிறப்பம்சம் என்னவென்றால்இதை நீங்கள் எந்த பதத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கோபம்,
ஆச்சர்யம், துக்கம், களிப்பு என எந்த சூழ்நிலையில் வேண்டுனாலும்
பொருத்திக்கொள்ளலாம்,ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படும் ஃபக் (fuck) என்ற வார்த்தையைபோல. (ஃபக் என்றதும் ஆபாசமாக பேசுவதாக எண்ணிவிடவேண்டாம். புக்கர் பரிசு பெற்ற பல இலக்கியங்களில் ஃபக் என்ற வார்த்தை சரமாரியாக உபயோகிக்கப் பட்டுள்ளது !)

ஃபக் போன்று பல பதங்களில் உபயோகிக்கப் படும் ‘கொலைவெறி’ என்ற சொல்லின் அர்த்தம் தமிழகத்தை சாரா பலருக்கு தெரியாது. இன்னும் அந்த வார்த்தையின் அர்த்தத்தை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறெனில் ‘கொலைவெறி’ என்ற ஒரு வார்த்தைக்காக மட்டும் இந்த பாடல் பிரபாலமாகியிருக்க முடியாது .
இந்த அளவுக்கு இப்பாடல்பிரபாலமானதற்க்கு  பிரபாலமாக்கப்பட்டதற்க்கு காரணம் யாது என்பதை நாம் ஆராய்வோம். இங்கு பிரபாலமாக்கப்பட்டது என்பதை அழுத்தி குறிப்பிடவேண்டும்.

இசைக்கு மொழியில்லை.அதனால் இசைக்காகவே இப்பாடல் பிரபலமானது என யாரவது கூறினால் அவர்களை நாம் கல்லால் அடிக்கலாம். 35 வருடங்களாக இளையராஜா இயற்றிடாத இசையையோ, பதினாறு வருடங்களாக ரஹ்மான் செய்திடாத இசையையோ இந்த இசையமைப்பாளர் செய்திடவில்லை. உலகிலேயே தலைசிறந்த பாடல்களில் ஒன்றாக கருதப்படும் ‘ராக்காம கைய்யதட்டு’ என்ற பாடலை நிச்சயம் வட இந்தியர்கள் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள்.  இசையமைப்பிற்காக போற்றப்பெறும் இந்தபாடலே இந்தியாவில் பிரபலமாகதபட்சத்தில், இசைக்காக ‘கொலைவெறி’ பிரபாலமாகியிருக்க முடியாது

தனுஷ் பாடுவது போன்று இந்த பாடல் காட்சியாமைக்கப்பெற்றிருக்கும். பத்திரிக்கைகளோ, தனுஷ் இந்த பாட்டை பாடும் போது படம் பிடிக்கப் பெற்ற காணொளியேயது என்று குறிப்பிடுகின்றன. சற்றே சிந்தித்து பார்ப்போமெனில் இது அந்த நடிகரை பாடுவது போல் நடிக்க வைத்து இயக்கப்பெற்ற ஓர்  சாதரணமான ப்ரோமோ பாடலே என்பது விளங்கும். ஹிந்தி திரைப்படங்கள் போன்று தமிழில் யாரும் ப்ரோமோ பாடல்கள் வெளியிடுவதில்லை. (சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற ‘தண்ணீரில் சிநேகிதம்’ பாடலே தமிழில் வெளிவந்த முதல் ப்ரோமோ பாடல்). இந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘டெல்லி பெல்லி” போன்ற திரைப்படங்களின் ப்ரோமோ பாடல்களோடு ஒப்பிடுகையில் கொலைவெறி ப்ரோமோ அந்த அளவுக்கு அதிசயிக்க வைக்கவில்லை. இந்தப் பாடலின் வரிகளோ  லாவோசி தத்துவத்தையோ ஜெயின் கவிதைகளையோ தழுவி  எழுதப்பெற்றவையன்று .எனவே பாடலின் வெற்றிக்கு காரணமாக காணொளியையும் வரிகளையும் கருத முடியாது. வழக்கமாக தமிழகத்தை சார்ந்த எந்த விடயமும் இந்திய அளவில் கண்டுக்கொள்ளப்படாது. ஏனெனில் அது தமிழகத்தை சேர்ந்த விடயம். தென் மூலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஓர் பாவப்பட்ட புண்ணிய பூமியை தமிழகம்.ஜப்பானில் சக்கை போடு போட்ட முத்து திரைப்படத்தை பற்றி இந்திய துணைக்கண்டதை சார்ந்த பலரும் கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறெனில் இப்பாடலின் வெற்றியின் பின்புலம் என்னவாக இருக்க முடியும் !

இந்த பாடலின் முழு அர்த்தம் பலருக்கு புரியாவிடினும், இதன் சாராம்சம் பலருக்கும் புரிந்துவிட்டது. புடித்து விட்டது. ‘காதல் தோல்வி’ என்பதே அது. காதல் தோல்வி பாடல்கள் அன்று தொட்டு இன்று வரை வந்துக் கொண்டிருந்தாலும் சமகாலத்தில் எழுதப் படும் வரிகள் சற்றே வித்யாசமானவை. பழைய பாடல்களில் கதாநாயகன் நாயகியை நினைத்து உருகி உருகி பாடிவிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய் நீலவேணி’ என்பது போல் பாடலை முடிப்பார். ஆனால் தற்போது நாயகையை எந்த அளவுக்கு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு நாயகன் திட்டுவது போன்று பாடல்கள் எழுதபடுகிறது. அது போன்ற பாடல்கள் பிரபலமாவது ஆரோக்கியமான  விடயமா என்பன போன்ற பெண்ணிய ஆராய்ச்சியில் நாம் இறங்கப்போவதில்லை. ஆனால் ‘கொலைவெறி’ பாடலின் பின் இருக்கும் ரசனை மாற்றத்தை பற்றி மட்டுமே நாம் கவனிப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை சமுக ரீதியான தத்துவார்த்த ஆராய்சிகளில் யாரும் குறிப்பிடும்படி ஈடுபட்டதில்லை. திடிரென எம். ஜி. ஆர் பிரபாலமாகிறார். திடிரென ரஜினி பிரபாலமாகிறார். இது வெறும் ரசனை மாற்றம் என்று நாம் விட்டுவிடமுடியாது. ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தில். ஓர் தலை முறையில் ஏற்படும் மாற்றமே அது. இதை நாம் ஆராய்ந்தால் ஒரு நடிகரின் பின் செல்லும் கூட்டத்திலுள்ள அத்தனை பேருக்கும் உளவியல் ரீதியாக ஏதோ ஓர் பொதுவான விடயம் உள்ளது என்பது விளங்கும். இது போன்ற கூட்டங்கள் வெறும் சினிமா சார்ந்தே இயங்குவதால், அணைத்து கூட்டங்களும் வெறும் ‘ரசிகன்’ என்ற பொதுவான சொல்லில் அடக்கப்பட்டுவிடுகின்றன. ரசிகர் கூட்டங்களை நாம் இயக்கமாக கருத முடியாததால் அதை சார்ந்த ஆராய்சிகளுக்கும் வழியின்றி போகிறது.

ஆனால் மேற்கத்திய நாடுகளில் சினிமா தவிர்த்து, இசை, ஆன்மிகம், விளையாட்டு என பல பிரிவுகளில் பலர் பித்து பிடித்து திரிவதால் அவ்வாறான கூட்டங்கள் ஓர் இயக்கமாக, தலைமுறையாக கருதப்படுகிறது. அதை குறித்து பல ஆராய்சிகளும் செய்யப் படுகிறது.   உதாரணமாக ஹிப்பிகள் (Hippies) எனவும், பீட் தலைமுறை (beat generation) எனவும் பல இயக்கங்கள் அங்கு உண்டு. ஒத்த கருத்துடைய ,குறிப்பிட்ட எண்ண அலைகளை கொண்ட மனிதர்களை கொண்ட இயக்கங்களே அவை.

இந்தியாவில் ‘அகோரிகள்’  என்ற பிரிவு உள்ளது. அகோரிகள் அனைவரின் பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரி அமைந்திருக்கும். அதை தவிர்த்து வேற எந்த பிரிவும் இங்கு குறிப்பிட படவில்லை. ஆனால் சினிமாவால் ஏற்படும் ரசனை மாற்றத்தை ஆராய தொடங்கினால் இந்தியாவில் பல பிரிவுகள் (Sects)  இருப்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.

அணைத்து ஆராய்சிகளும் அனுமானங்களைக் கொண்டே தொடங்குவதால், இந்த பாடலை பொறுத்தவரை ‘காதல் தோல்வி பிரிவு’ (Love failure Sect ) என்ற பிரிவை நாம் அனுமானித்துக் கொள்வோம். மனோதத்துவரீதியாக காதல் என்பது வெறும் காமம் எனப்பட்டாலும், சமுக ரீதியாக காதல் என குறிப்பிடப்படும் ஒன்றை பற்றியே நாம் இங்கு கவனிக்க போகிறோம்.உலகில் அனைவரும் காதலில் தோல்வி கண்டவர்களே. அணைத்து ஆண்மகனும் நிச்சயம் சிறுவயதில் தன ஆசிரியையை காதலித்து இருப்பான் என்கிறது ஓர் ஆய்வு. அதுவே அவன் முதல் காதல். பெண்களும் தன் ஆசிரியையை காதலித்து இருப்பார்கள். (பெண்களின் முதல் காதல் பெண்கள் மீதுதான் என்பது விவாததிற்கு உட்படுத்த வேண்டிய கூற்று. அதற்க்கு நாம் அவர்களின் உடல் கூறுகளை கூறு போட்டு ஆராய்ச்சி செய்யவேண்டும். அதை பின் ஒரு நாள் விவாதிப்போம். அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர் Simone Ernestine Lucie Marie Bertrand de Beauvoir இயற்றிய ‘The Second Sex’ என்ற புத்தகத்தையும் திரு.சுஜாதா எழுதிய ‘எப்போதும் பெண்’ என்ற நாவலையும் படித்து பார்க்கவும்’). பலரும் காதலில் தோல்வி கொண்டவர்கள் என்பதால் இப்பாடலை பலரும் ஏற்றுக் கொண்டார்கள். இதில் குறிப்பிடும் வரிகள் உண்மையாக இருபதனால் என்னவோ பெண்களும் இப்பாடலை விரும்புகிறார்கள்.

சிக்மண்ட் பிராய்டு மனித பிரக்ஞைகளை (உணர்வு நிலைகளை) படிநிலை படுத்துகையில் ‘தன்னுணர்வற்ற நிலை’ என்று ஒன்றை குறிப்பிடுகிறார். நுண்ணுணர்வு சார்ந்த இந்த விடயத்தை மறுவரையரைப் படுத்திய சிலர் ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ என்ற ஒரு தத்துவத்தை முன்வைக்கின்றனர். இதை எளிதாக குறிப்பிடவேண்டுமெனில், ஒரு மனிதன் தான் அறியாமலேயே தன் எண்ணங்களை பிறர் மனதில் செலுத்துவது. இங்கு விடுநர், பெறுனர் இருவருமே எண்ண அலைகளை உணர மாட்டார்கள். ஒருவர் மனதிலிருந்து எண்ணங்கள் அடுத்தவருக்கு  பரவிக் கொண்டே இருக்கும். இதன் ஓர் வடிவமே டெலிபதி என்பது. (பிசிராந்தையார் என்னும் புலவரும்  கோப்பெருஞ்சோழன் என்ற மன்னரும் ஒருவரை ஒருவர் காணமலேயே நட்புக்கொண்டு,தீவிர நண்பர்களாகி   பின்னொருநாள் வடக்கிருந்து (வடக்கிருந்து- உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல்-சாகும் வரை உண்ணா விரதம்  ) உயிர் துறந்தனர் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.தமிழன் தீவிர மனோதத்துவ ஆராய்ச்சியில் அன்றே இறங்கியுள்ளான் என்பதற்கு இது ஓர் சான்று) .இப்பாடலின் வெற்றிக்கு  ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ என்பதை ஒரு காரணமாக குறிப்பிடமுடியும். பல பாடலின் வெற்றிக்கு அதுவே காரணமெனினும் இப்பாடலில் ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ சற்றே தீவரமாக உள்ளது.

இதை தவிர்த்து இப்பாடல் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பது தெரியாமலேயே சிலர் பிடித்த மாதிரி காட்டிக் கொள்கின்றனர். ‘சைதை தமிழரசி’ கதை போல.ஒரு படத்தில் கவுண்டமணியும் சத்யராஜும் கொக்கரிப்பார்கள், “என்ன சைதை தமிழரசி தாகப் பட்டாரா ! ” பின் வரும் காட்சியில், “யாருப்பா அது  தமிழரசி”  என்று பேசிக் கொள்வார்கள். அது போலவும் இப்பாடல் பிரபாலமாகியிருக்கலாம்.

இப்பாடலின் வெற்றிக்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும், இன்னும் சில வருடங்களில் இப்பாடல் காற்றில் கரைந்துவிடும். வெறும் பாடல் என இதை ஒதுக்கி விடாமல், இது போன்ற திடீர் தீவிர ரசனைகள் ஆரையபடவேண்டும். ஒரு மனிதனின் வாழ்வியல் அவன் வளர்ந்த சமுக சூழலை பொறுத்தே அமைகிறது.சமிபத்தில் நான் சந்தித்த ஓர் அமெரிக்க பெண்மணி ஒரு இசைக் குழுவை பற்றி வினவினார்.  “உங்களுக்கு BVB தெரியுமா.” நான் “ தெரியும்..
Black veil Brides” என்று சொன்னதும், அவர் பின் வருமாறு பேச தொடங்கினார் “அவர்கள் கடவுள். அவர்கள் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தனர்…அவர்களுக்காக நான் மரணிக்கவும் தயார் ” கோர்வை அற்ற ஓர் ஆங்கிலத்தில் ஒரு பிச்சியை போல தன்னிலை மறந்து அந்த பெண்மணி பேசிக் கொண்டுபோனார். அந்த இசைக் குழு அவர் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தையே இது காட்டுகிறது. அவரை போல் அவர் ஊரில் பலர் உள்ளதாக குறிப்பிட்டார். இது போன்று விடயங்கள் அங்கு நிறைய நிகழ்வதுண்டு. அனால் அனைத்தும் ஆராயப்படுகின்றன. அதுபோல் ஒட்டு மொத்தமாக நம் சமுகத்தில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், அது விளையாட்டு துறையெனினும் , சினிமா  துறையெனினும், இன்ன பிற  துறையெனினும் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் சம கால தலைமுறையின் மனோ நிலையை உணர முடியும். இந்தியாவில் நிச்சயம் மனோதத்துவ புரட்சி நிகழ்த்தப்படவேண்டும். அதை செய்யும் பட்சத்தில் நிறைய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.

 இப்போது இப்பாடல் நல்ல பாடலா இல்லையா என்பதை பற்றி விவாதிக்க வேண்டும். எளிமையான இசை, எளிமையான வரிகள் என அமைந்த பாடல் கேட்பதற்கும் பாடுவதற்கும் நன்றாக இருப்பதால் இது நல்ல பாடலே. ஆனால் ஒரு பிரபல ஹிந்தி பாடாலாசிரியர், இதனை கீழ்த்தரமான பாடல் என குறிபிடுகிறார். பல வருடகளுக்கு முன் ஹிந்தியில் வெளிவந்த ‘சோலி கே பீச்சே க்யா ஹேய் ! சோலி கே பீச்சே…சுனரி கே நீச்சே க்யா ஹேய் ! சுனரி கே நீச்சே… ” என்ற பாடல் நினைவிருக்கலாம். இதை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்தால் “ரவிக்கைக்கு பின்னால் என்ன !” என்ற ஓர் கவித்துவமான அர்த்தம்  கிட்டும். சமிபத்தில் ஹிந்தியில் வெளியான “Bhaagh Bhaagh Dk Bose Dk “என்ற அச்சில் ஏற்ற முடியாத பாடல் பிரபலமானது. விரசமான அந்த பாடல்களை  ஏற்றுக் கொண்டவர்கள், விரசமற்ற இந்த பாடலை எதிர்கிறார்கள். இந்திய சமுகம் குறிப்பாக வட இந்திய இந்து சமுகம் பெண்களை அன்று தொட்டு இன்று வரை விரசமாகவே, போகப் பொருளாகவே  சித்தரித்து வருவாதாக சாரு குப்தா என்ற பெண்மணி ‘Sexuality Obscenity, Community-Womens, Muslims and the Hindu Public In Colonial India ‘ என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். அது போல் சமுகத்தில் நிலவும் பல கீழ்தரமான விடயங்களை எதிர்ப்பதை விடுத்து ஒரு சாதரன சினிமா படலை எதிர்பதற்கு காரணம் இப்பாடல் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதை தவிர வேறென்ன இருக்கமுடியும்.

பாடல் பிரபலமானது ஒரு புறம் இருக்க பாடல் பிரபலமாகப்பட்டதை பற்றி தீவிரமாக கவனிக்க வேண்டும். முதன் முதலில் இந்த காணொளியை நான் யுட்யுபில் பார்க்கும் போது பார்வையாளர்களின் (no of views) எண்ணிக்கையைவிட, விரும்பியவர்களின் (no of likes) எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அது எவ்வாறு சாத்தியம் என்று இன்னும் புரியவில்லை.

இந்த பாடல் தங்க்லீஷ் என குறிப்பிடப் பட்டாலும், தொண்ணுறு சதவிதம் ஆங்கிலத்தில் தான் எழுதப் பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த பாடலை வெளியிட்ட கார்ப்ரெட் நிறுவணும் சரி, இன்ன பிற கார்ப்ரெட்களும் சரி விழுந்து விழுந்து இந்த பாடலை பிரபலபடுத்திக் கொண்டிருக்கின்றன. இதுவே தமிழில் எழுதப் பெற்றிருந்தால் நிச்சயம் பிரபாலபடுதியிருக்க மாட்டார்கள். அது பிற மாநிலத்தவருக்கு தமிழ் புரியாது என்பதனால் அன்று.தமிழ், ஹிந்தி எதிர்க்கும் கூட்டம் என முத்திரை குத்தப் பெற்ற ஓர் இனத்தின் மொழி என்பதால். Bebot Bebot என்ற ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பாடல், மொழி புரியாமலே இந்தியாவில் வரவேற்க்கப் பட்டது. ஆனால் கொலைவெறி பாடல் தமிழில் இருந்திருந்தால் நிச்சயம் வரவேற்க்கப் பட்டிருக்காது.

அதனால் இந்த பாடலை பிரபலப்படுத்துபவர்களின்  நோக்கம் வட இந்தியா-தென் இந்தியாவை இணைப்பது என எண்ணி விட வேண்டாம்.. கல்லா கட்டுவதே அவர்களின் நோக்கம. காரணம் இன்று சினிமா இயங்கும் முறை பெரிதும் மாறிவிட்டது. அந்த காலத்தில் சினிமாவை நன்கு புரிந்தவர்கள் மட்டுமே சினிமா தயாரிக்க முடியும். ஒரு தயாரிப்பாளர் நடிககருக்கு அட்வான்ஸ் கொடுத்து படத்தை தொடங்கி, சில காட்சிகளை இயக்கியப்பின் , விநியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று மிச்ச படத்தை முடிப்பார். அதாவது படத்தில் போடப்பெற்ற முழுப் பணமும் ஒருவருடையதாக  இருக்காது. ஆனால் இன்று கார்ப்ரெட் நிறுவனங்கள் நேரடியாக கோதாவில் இறங்கி விட்டன. முழு பணத்தையும் ஒரே நிறுவனமே செலவழிக்கிறது.. .சராசரியான பட செலவு ஐம்பது கோடி என ஆகிவிட்ட நிலையில் ஒரே மாநிலத்தை மட்டுமே நம்பி கள்ள கட்ட முடியாது. (இந்தியாவை பொறுத்த மட்டில் இரண்டே மாநிலங்களே உள்ளன..
இந்தி பேசும் மாநிலம். இந்தி பேசாத மதராஸ். இந்தியாவில் பலரும் தென் இந்தியா என்பது வெறும்
மதராஸ்தான் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிண்டர்.) அதனால் இந்தியில் இயக்கப்படும்
பெரிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு  கார்ப்ரெட் நிறுவனங்கள்
தள்ளப் பட்டிருக்கின்றன. அதே போல தமிழ் படங்களையும் ஹிந்தியில் வெளியிடும்
முயற்சியில் இறங்கி விட்டனர். அப்போது தான் படத்திற்காக செலவு செய்த
பல கோடிகளை மீட்க முடியும்.

இப்போது இந்த பாடலை பிரபலப் படுத்தினால், திடிரென நாளை தனுஷை ஹிந்தியில் ஒரு பாடல் பாடவைக்க முடியும் . அல்லது ஒரு ஹிந்தி படத்தின் கதாநாயகன் ஆக்க முடியும் . ‘கொலைவெறி ‘ பாடல் நாயகன் தனுஷ் என வட இந்திய முழுவது பிரபலபடுத்த முடியும்.அப்போது எவ்வளவு கல்லா கட்டப் படும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். இதுவே கார்ப்ரெட்  நிறுவங்களின் நோக்கம்.

இந்தியாவை பொறுத்த வரையில் எல்லா விடயங்களிலும் முதலாளித்துவம் ஒளிந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் முதலாளித்துவ முதலை மக்களின் காலை கடித்துக் கொண்டே இருக்கிறது. அதன் ஒரு வடிவமே கார்ப்ரெட் நிறுவனங்கள்.அம்பானி 5000 கோடியில் வீடு கட்டுகிறார் என்றால், அவர் உழைப்பு அவர் பணம் என விட்டு விடலாம். ஆனால் 50 கோடி பேர் வறுமையில் வாடும் ஓர் நாட்டில் 5000 கோடியில் ஒருவரால் வீடு கட்ட முடிகிறதென்றால் இந்தியாவின் உண்மை முகத்தை நினைத்து நாம் அருவருப்படைந்து தான் தீர வேண்டும்.

இந்தியா என்பது ஜனநாயக போர்வையில் ஒளிந்துள்ள ஓர் முதலாளித்துவ நாடு (A capitalist country in the disguise of democracy). இங்கு ஏற்படும் நல்ல மாற்றங்களை, அது சினிமா பாடலேனினும் நாம் வரவேற்ப்போம். ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் முதலாளித்துவ முதலைகளை விழிப்புணர்வோடு புறங்கையால் ஒதுக்கிவிட்டு பயணிப்போம், பகுத்தறிவை கலட்டி வைக்காமலேயே…

மயக்கம் என்ன

மயக்கம் என்ன

தமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி
எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின்
வாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம்
முயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட
இலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை.

இங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப்
பற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப்
பிடிக்கும் மனிதர்களைப் பற்றி  யாரும் படப் பிடிக்க
விரும்பியதில்லை.  ஒவ்வொருவரும் வாழ்கையில்  ஏதோ
ஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம்,
அவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ்
சினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது.

“ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர்
படமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை.
இங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை.

போலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக
பயணிக்கும்        கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய
வந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம்
இருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு.

அப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு
பயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’

வனவிலங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி
இளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம்.
பல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை
அடைகிறான். ஆங்கிலத்தில் வந்த Pursuit of happiness, Cinderalla man,
Beautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும்
ஏமாற்றாத ஓர் அருமையான படம்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’  படத்திலும் கதாநாயகன்
இலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன்
சித்தாந்தம்  பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால்
மயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன்.
உங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின்
மிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் ,
“எனக்கு வேற எதுவுமே தெரியாது யாமினி  “.
இங்குதான் கதாபத்திரம் தன் இயலாமையை ஒத்துக்கொள்கிறது.
இதுவே தனி மனித யதார்த்தம் …

சில படங்கள் மட்டுமே , கதையை பல முறை கேட்டாலும்.
திரைக்கதையையே படித்தாலும், பார்க்கும் போது சலிப்பு தட்டாது.
மேற்கூறிய அணைத்து ஆங்கில படங்களும் அந்த
வகையை சார்ந்தவையே.அதற்க்கு காரணம்
அந்த படங்களில் நடித்த நடிகர்களின் திறமை.
மயக்கம் என்ன படத்திலும் நடிகர்கள் பிளந்து கட்டுகிறார்கள்.
குறிப்பாக தனுஷ், ரிச்சா, சுந்தர்..

இது அருமையான படம் என சிலரும், மிகவும் மெதுவான
திரைக்கதைஎன சிலரும், இதற்குமுன் தன்
படத்தில் வைத்த காட்சிகளையே செல்வா
மீண்டும் வைத்துள்ளார் என சிலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால்
இவை அனைத்தையும் தவிர்த்து மயக்கம் என்ன திரைப்படம்
நிறைய ஆக்கப் பூர்வமான விமர்சனங்களுக்கு வழிவிட்டு
செல்கிறது .

தமிழ் திரைப்படங்களில் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு
முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களை விரல் விட்டு
எண்ணிவிடலாம். மொழி, தென்மேற்கு பருவகாற்று போன்ற
படங்கள் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே
எடுக்கப்பட்டன . ஆனால் ஓர் கதாநாயகனின் வெற்றிக்கு
நாயகிதான் காரணம்  என குறிப்பிடும் படங்கள் தப்பி தவறியும்
தமிழில் வந்ததில்லை. நம் சமுதாயம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது.
நாம் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் அதுவே உண்மை.
இதற்க்கு முன் பெண்களை முன்னிலைப் படுத்தி வந்த படங்கள்
சற்றே வேறு வகையை சார்ந்தவை . முதல் பாதியில் நிறைய
ஆட்டம் போடும் கதாநாயகன் இரண்டாம் பாதியில்
திடிரென நோயில் படுத்திடுவார்.
கதாநாயகி மஞ்சள் அல்லது சிகப்பு புடவை உடுத்தி ‘அம்மா அம்மா ‘
என கதறிடுவார்.  ஏதோ ஓர் பிரபல நடிகை அம்மனாக வந்து
கதாநாயகனை காத்திடுவார். இது போன்ற படங்களை பற்றி
இங்கு பேசவில்லை. அது பெண்களை மூடர்களாக காட்டி
பணம் சம்பாதித்த ஆணாதிக்க படங்கள்

மயக்கம் என்ன படத்தில் காட்டப்பட்டிருக்கும் மனைவி ,
படத்திலேயே குறிப்பிட்டது போன்று ஓர் “இரும்பு பெண்” .
Cinderalla Man படத்தில் வரும் மனைவியை போல. கணவனின்
எல்லா தோல்விகளிலும் உடனிருந்து அவனை முன்னிற்கு
கொண்டு வரும்  ஓர் அருமையான மனைவி….
”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”
-கண்ணதாசன்…

படத்தில் இன்னொரு முக்கிய விஷயம் இயக்குனர் தன்
நடிகர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை.காரணம் நிறைய
அழுவை காட்சியில் தைரியமா க்ளோஸ் அப் வச்சிருக்கார்.
“உதிரிப்பூக்கள்” படத்திற்கு
பிறகு அணைத்து கதாப்பாத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து
காட்சிகள் அமைக்கப்பெற்ற  படம் இதுவாதான் இருக்கமுடியும்

செல்வா இந்த படத்துல எங்கேயும் சறுக்கல.. ஆயிரத்தில் ஒருவன்
இரண்டாம் பாகத்துல இருந்த அந்த தலைகனம் இதுல இல்ல.
ரொம்ப எளிமையா, ஆனா அதே சமையம் அருமையாகவே
இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த படம் A beautiful mind படத்தின் தழுவல்னு சொல்றதெல்லாம்
பொய். A beautiful mind படத்தில் இறுதிகாட்சியில் விருது வாங்கிட்டு
ஹீரோ தன் மனைவிக்கு நன்றி சொல்லுவார். அதே மாதிரி ஒரு
காட்சி இப்படத்தில் இருப்பதனால் இந்த படத்த தழுவல்
படமென்றேல்லாம் சொல்ல முடியாது.

தமிழ் சினிமாவ பொறுத்த வரையில் கெளதம் மேனனும்,
செல்வராகவனும் திரைக்கதை எழுதுற வேகம்
ரொம்ப பிரமிக்கவைக்கிறது.
திடீர் திடிர்னு படம் எடுத்து மிரட்றாங்க
(எங்க இருந்து கதைய  உருவுறாங்க
என்பது தற்போது தேவைற்ற விடயம் )
செல்வா படங்களில் வழக்கமா கதாநாயகிய
ஒரு போகப் பொருளாதான்
சித்தரித்திருப்பார்.
(அவ்வாறெனினும் அதில் விரசம் இருக்காது.)ஆனால்
இந்த படத்தில் வழக்கத்திற்கு மாறாக
கதாநாயகிய ரொம்ப அருமையா சித்தரித்திருக்கார்.

தனுஷ் தேர்ந்த நடிகர் என மீண்டும் நிருபித்துள்ளார். புதுப்பேட்டை
படத்திலேயே அப்பாவி இளைஞனாகவும், மிக பெரிய தாதாவாகவும் .
முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போன்று
இப்படத்திலும் ஓர் மெத்தன புகைப்பட கலைஞனாக
இருந்து பின் ஓர் தலை சிறந்த
கலைஞாக மாறும் அந்த மாறுதல்,நடிப்பின் உச்சம்.

கதாநாயகியும் தன் பங்கிற்கு அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
வெறும் முக பாவத்திலேயே பல இடங்களில் மனதை கொள்ளைகொள்கிறார்.

படம் புகைப்படக் கலைஞன் சம்பத்தப்பட்ட படம் என்பதால்,
ஒளிப்பதிவாளரும் வித்தை காட்டியுள்ளார். அனைவரும் தங்கள்
வேலையை செவ்வன செய்துள்ளனர்…

இசை நன்றாக இருந்தது என்பதோடு நிறுத்திக்கொள்வோம். பல இடங்களில்
ஜி.வி.பிரகாஷின் இசை அவரது பழைய படங்களை ஞாபகபடுத்துகிறது.
(அந்த பழைய படங்களின் இசையும் பிரெஞ்சு இசையை ஞாபகப்படுத்தும்.
அது வேறு விடயம். ) இயக்குனர் தன் பழைய இசையமைப்பாளரோடு
கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் பத்து தீம் மியூசிக்யாவது
கிடைத்திருக்கும்.ஆனால் இப்படத்தில் ஒரே தீம் மியூசிக் தான்
சுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது.
அதுவும் எரிக் சேரா வின்  (Eric Serra) இசையை நினைவு படுத்துகிறது

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் கொரிய ஜப்பானிய
திரைப்படங்களின் தாக்கம் அதிகாமாக தெரிகிறது.
சேரன்,மிஸ்கின் தொடங்கி இப்போது இந்த படத்திலும்
அந்த தாக்கம் தென்படுகிறது.

முன்பெல்லாம் கதை, திரைகதைகளே தழுவப்படும்.
இப்போது படத்தை எடுக்கும் முறை (Way of Making) தழுவப்படுகிறது.
ஒரு காட்சியை முடிக்கும் போது கதாபாத்திரங்களின் உணர்வுகளை,
முக பாவங்களை சில நொடிகள் பதிவு செய்து பின் அடுத்த காட்சிக்கு
நகரும் முறையை நீங்கள்  கொரிய ஜப்பானிய திரைப்படங்களில்
காணலாம். அது போன்ற காட்சிகள் இப்போது தமிழிலும்
தொற்றிக்கொண்டுவிட்டது. இந்த படத்திலும் அதை நீங்கள் உணரலாம்.

அருமையான வசனங்களை  இந்த படத்தில் செல்வா எழுதியுள்ளார்.
இதுவரை ஆங்கிலத்தில் லட்சியவதிகளைப் பற்றி எடுக்கப்பட்ட
அணைத்து படங்களிலும் வசனங்கள் முக்கிய பங்கு வகித்தன.
Rocky, Pursuit of happiness  போன்ற படங்களில் வருவது போல
இந்த படத்திலும் ஊக்கம் அளிக்ககூடிய வசனங்கள் சில உண்டு.

“மனசுக்கு புடுச்ச வேலைய செய்யனுங்க. இல்லனா செத்துரனும்”
என தனுஷ் பேசும் வசனம் பாலோ கோயேலோ (Paulo coelho)
நாவல் படிச்ச ஒரு உணர்வ ஏற்படுத்துது.

மொத்ததுல படம் நிச்சயம் பார்ப்பவர்களை மயக்கிடும் …
சில பேர் படம் ரொம்ப  ஸ்லோவா  நகர்றதா குறை சொல்றாங்க…

ஆனா நம்ம வாழ்க்கையே ஸ்லொவ் தாங்க..

கில்லி மாதிரி பாஸ்டா படம் வேனும்ன,
அடுத்த வாரம் ஒஸ்தி ரிலீஸ் ஆகுது..அத போய் பாருங்க…

7 ஆம் அறிவு

7 ஆம்அறிவு

முன்குறிப்பு 

இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை..ஆனால் ஓர் தவறான முன் உதாரணமாக இத்திரைப்படம் அமைந்து விடக்கூடிய வாய்புகள் அதிகமுள்ளதால் இதை எழுதுகிறேன்.. கல்லாவை நிரப்ப கோயபெல்ஸ் (Goebbels) வேலையை நன்றாகவே செய்துள்ளனர்.. மரியான  அசுயேல  (Mariana Azuela ) எழுதிய ஓர் நாவலில் (Underdogs), எதுக்கு போராடுகிறோம் என்று தெரியாமலேயே ஓர் கூட்டம்  போராடும்.(அண்ணா ஹசாரே கூட்டம்  போல்! )

 அதுபோல் இந்த படம் பார்த்த சிலர் திடிரென தமிழ் உணர்வு பெற்று ஆனந்த  கூத்தாடுகிறார்கள்…தமிழ் உணர்வு என்பது இலக்கியத்தில் இருக்கவேண்டும்…சக தமிழனின் மீது கொண்ட அக்கரையில் இருக்க வேண்டும்…சங்க தமிழை பேணி காப்பதில் இருக்கவேண்டும்..சமகாலத்தில் தமிழுக்கு செய்யும் தொண்டில் இருக்க வேண்டும்..அதை விடுத்து பழைய பெருமைகளை பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனுமில்லை… …

7 ஆம்அறிவு

மனிதனின் ஆறாம் அறிவே அதிகம் பயன்படுத்தப்படாத ஓர் உலகத்தில், தன் ஏழாம் அறிவை உபயோகப் படுத்தி ஓர் கலை காவியத்தை படைத்துள்ள இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இப்படி சொல்லலைனா என்ன தமிழனே இல்லன்னு சொல்லிருவாங்க. ஏனா இந்த படத்துல தமிழனுக்கு ஆதரவா நாலு வசனம் வருது. அதுக்காக ஊர்ல இருக்குற பச்சை தமிழனுங்க பல பேரு என்னவோ இந்த படத்துக்கு அப்புறம்தான் தான் தமிழன்னு உணர்ந்த மாதிரி  துடிக்கிரானுங்க. நாமும் துடிப்போம். உணர்வு இருக்கிற மாதிரியாவது நடிப்போம்.

தூள் படத்தில் வில்லன் ஒரு அறிக்கை விடுவார்,:” உடம்புல தமிழ் ரத்தம் ஓடுற ஒவ்வருத்தனும் இந்த உண்ணாவிரதத்துக்கு வரணும் “.

உடனே எல்லாம் உண்ணாவிரதத்துக்குஓடுவானுங்க. அது மாதிரி தான் இந்த படமும்.

தமிழ் மீது பற்றுள்ள, தமிழ் இலக்கியத்தின் மீது தீராத ஆர்வமுள்ள பலரும், பல வருடமா சொல்லிகிட்டிருக்குற ஒரு விடயத்தின் சிறு பகுதியைதான் திரு.முருகதாஸ் இந்தபடத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனா ரொம்ப உணர்ச்சிவச பட்டதனாலோ என்னவோஅத அவர் ஒழுங்கா சொல்லல.

தமிழனின் பெருமைய பத்தி நிறைய சொல்லலாம்.அதை பத்தி எந்த ஐயப்பாடுமில்லை.மிதக்கும் தன்மையை (buoyancy) ஆர்கிமேடிசுக்கு (Archimedes) முன்பே சொன்னது தமிழன். அணுவை கூராக்கும் (divisibility of atom) தன்மையை கண்டவன் தமிழன்.ஆனா ஏழாம் அறிவ பொறுத்த வரையில் கருத்துக்கள் எந்த வகையில் சொல்லப்பட்டதுன்னு இன்னும் தெரியுல.

 அறுபது வருடமா திராவிட கட்சிகள் தமிழ் என்ற ஆயுதத்த வைத்து தமிழன ஏமாத்துற மாதிரியே இந்த படத்துலயும் கல்லா கட்டுறதுக்காக தமிழன கேனையன் ஆக்கிடாங்களோ   !

 முதல் இருபது நிமிடம் 

 முதல் இருபது நிமிடம்  ஆவணப் படம் பாணியில் அமைந்துள்ளது.ஆவணப்படமென்றால் உண்மை இருக்கணும். ஆனா இதுல போதிதர்மன ரொம்ப நல்லவரா வல்லவரா  காட்டனும்  என்பதற்காக ரொம்ப சரடு திருசுட்டாங்க, ஏதோ ஏசுநாதர் ‘கருணாமூர்த்தி’ சீரியல் பார்த்தமாதிரி இருந்துச்சு. இவரு போவாராம், நோய குணப்படுதுவாரம், அப்பறம் சண்ட போடுவாராம், அப்பறம் விஷம் குடிச்சு செத்துருவாராம்,நான் தெரியாமதான் கேக்குறேன் அவரு என்ன அவ்வளவு பெரிய அப்பட்டக்கரா !

 சினிமால சினிமாத்தனம் இருக்கலாம். ஆனால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டிருக்கணும், இங்க இயக்குனர் பர்மா பஜார் டி.வீ.டி நிறைய பார்த்து இருப்பாரு போல. போதிதர்மனுக்கு மருதநாயகம் கமல் மாதிரி ஒரு கெட்டப். “மொங்கோல்” என்கிற ஓர் ரஷ்ய படத்துல இருந்து உருவுன சண்டைகாட்சினு கதை நகர்கிறது.

 ஆனா அந்த சினிமாத்தனமான புருடாக்கள் ஆவணப்படம் மாதிரி காட்டப்பட்டதனால் அதை ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம்.

 போதிதர்மன் தமிழரா !

 பல்லவர்கள் தமிழர்களா?, என்ற கேள்விக்கே இன்னும் தெளிவான விடை கண்டுபிடிக்கப்படல..பல்லவகுல தோற்றம் பற்றி நிறைய வாதங்கள் நிலவினாலும்  பெரிதாக நம்பப்படுகிற, பலராலும் முன் வைக்கப்படுகிற வாதங்கள் மூன்று

சோழ மன்னன் கிள்ளிவளவனுக்கும், தமிழ் பேசும் நாக வம்சத்தை (இலங்கை ) சேர்ந்த பில்லி வலைஎன்ற இளவரசிக்கும் பிறந்த தொண்டை இளந்திரையன் மூலமாக உருவானதே பல்லவ குலம் என்பதுமுதல் கூற்று. கொஞ்சம் பகுத்துணர்ந்து  பார்போமேயானால், பல்லவர்கள தமிழர்களஅடையாளப் படுத்தனும் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த கூற்று சித்தரிக்கப்பட்டிருப்பதைஉணரலாம்.

அடுத்த கூற்று, பல்லவ குலம் த்ரோனாசாரியரின் பேரன் மூலமா தோன்றியது என்பது. இது தமிழனுக்கு எதிரா இருந்த ஏதோ ஒர் கூட்டம் கிளப்பிவிட்ட கதையா இருக்கலாம்.

அடுத்தது, பல்லவர்கள் கடல் கடந்து வந்தவர்கள், இந்திய துணை கண்டத்தையே சாராதவர்கள்…

ஆனால் இதுநாள் வரை தெளிவான ஆதாரம் எதுவும்கிட்டவில்லை.. (தமிழில் சமணர்கள் பௌத்தர்களால் இயற்றப்பட்ட பல அருமையான இலக்கியங்கள் சைவர்களால் அழிக்கப்பட்டது. அந்த இலக்கியங்களோடுசேர்ந்து பண்டைய தமிழ் சமுதாயத்தப்பற்றிய பல குறிப்புகளும் அழிஞ்சுபோச்சு.தமிழ் அழிந்ததற்கு அழிவதற்கு தமிழனே காரணம்.)

 இந்நிலையில் போதிதர்மனை பற்றியும் நிறைய புருடாக்கள் படத்தில் விடப்பட்டிருக்கு.. இது வரை கண்டெடுக்கப்பட்ட வரலாற்றில், போதிதர்மன் என்ற பல்லவ குல இளவரசன் தன் தந்தையின் மரணத்திற்கு பிறகு தன் குருநாதார் பிரஜ்னாதார அவர்களின் கட்டளைக்கு இணங்கி   பௌத்தத்தை பரப்புவதற்காக தமிழகத்திலிருந்து வெளியேறினார் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது .

பல இடங்களுக்கு பயணம் செய்து, சில இடங்களில் நற் பெயர் கொண்டு, பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டு பின் ஒருநாள்தான் ஷாலின்  கோவிலை (shaolin temple ) அடைந்தார்.

 முற்காலத்தில் பௌத்தத்தில் உடலை வருத்தி கடும் தவம் புரியும்  ஓர் முறை பின்பற்றப்பட்டது. போதிசத்துவரே (Gouthama  Buddha) முதன்முதலில் அந்த முறையைதான் கடைப்பிடித்தார் .அப்படி ஒர் முறையை மாணவர்களுக்கு  பயிற்றுவிக்கும் போது அவர்களது உடல் அதற்கு ஒவ்வாததால் அவர்களின் உடலினை சரிவர கட்டமைக்கும்பொருட்டே அவர்களுக்கு தற்காப்பு கலையினை போதிதர்மன் பயிற்றுவிக்கக் தொடங்கினார்.

 போதிதர்மன் திறமைசாலி என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை . அதற்காக அவரை ஓர் தெய்வப்பிறவியாக, ஆக்ஷன் ஹீரோவாக  படத்தில் காட்டியிருப்பது, இயக்குனர் மிகவும் உணர்சிவசப்பட்டுள்ளார்  என்பதையே காட்டுகிறது. இதை வெறும் சினிமா என்று ஒதுக்கமுடியாததர்க்கு  காரணம், இறுதியில் “போதிதர்மன் ஓர் தமிழர். உங்களில் எத்தனைபேருக்கு அவரை தெரியம் ?” என்பன போன்ற சில கேள்விகளை உணர்ச்சி மிகுதியில் பார்வையாளர்களை   நோக்கி இயக்குனர் முன்வைப்பதனால்.

(அட போங்க பாஸ். நீங்க ஓர் காமெடி பீஸ். பல தமிழனுக்கு ஜெயகாந்தன்யாரு நகுலன்யாருனே தெரியாது. யாப்பெருங்காலகாரிகை என்றால் என்னான்னு தெரியாது….)

முதல் இருபது நிமிடம் உணர்ச்சிய கொஞ்சம் கட்டுபடுத்தி இருந்திருக்கலாம்…

இரண்டாம் பகுதி 

படத்தை இரண்டு பகுதிகளா பிரிக்கலாம். முதல் பகுதி-போதி தர்மன் காட்சிகள். போதிதர்மன் இல்லாத பகுதி இரண்டாம் பகுதி.

 இரண்டாம் பகுதின்னு குறிப்பிட காரணம், இருபத்தைந்தாவது நிமிடம் தொடங்கி படம் எங்க பயனிக்கிரதுன்னு தெரியாமலயே போவதனால்..

இந்த படமுழுக்க அப்படிதான் காட்சியமைக்கப்பட்டிருகிறது. சம்பந்தமற்ற தொடர்பற்ற காட்சிகள். அதற்காக இத ஓர் நான் சீக்யுன்சியல் (non-sequencial/ non linear narrative ) படம்   என்று நினைத்துவிட வேண்டாம். திரைக்கதை ஆசிரியர் ரொம்ப திணறி இருக்கிறார்.

 93 நாட்களுக்கு முன்பு என்று இரண்டாம் பகுதி ஆரமிக்கிறது. அது எதுக்குன்னு இன்னும் புரியல…

எந்த படமாக இருந்தாலும் காட்சிகள் சரமாரியாக நகரக் கூடாது. ஆனா இந்த படத்துல சம்பந்தமே இல்லாம  காதல் காட்சிகள் ரொம்ப வேகமா நகர்கிறது. எந்த காட்சியும் மனசுல பதிய  மாட்டேங்குது. ஏதோ  படத்த  இரண்டரை மணி நேரம் ஓட்டனும் என்பதற்காகவே காட்சி வைக்கப்பட்டதா தோணுது…

 திரைக்கதை

உலகத்துல எல்லாத் திரைக்கதைக்கும்  ஒர் பொதுவான வடிவம் இருக்கு. அதிகம் பயன்படுத்தப்படுவது மூன்று அங்க சட்டமைப்பு (Three act strcucture) என்பது.

அதாவது முதல், நடு, முடிவு

1.அறிமுகம் (Intro)

2.முரண்பாடு (Confrontation)

3.தீர்வு (Resolution)

 இந்த எந்த வடிவமே கதைமாந்தர்களுக்கு பொருந்திவரல. இதில் ஆச்சர்யம் ,இதற்குமுன் மூன்று அருமையான திரைகதைகள எழுதிய இயக்குனர் இதுல எப்படி சறுக்கினார் என்பதுதான் (யானைக்கும் அடி சறுக்கும் !)

 மேற்கூறிய வடிவம் பொருந்துற ஒரே கதாபாத்திரம் அந்த விஞ்ஞானி கதாபாத்திரம்தான். ஷோபா என்ற ஓர் விஞ்ஞானி ஓர் ஆராய்ச்சியில் ஈடுபடும் போது அந்நிய சக்திகளால் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து எப்படி மீண்டு வராங்க என்பதே கதை ஓட்டம் (இதிலிருந்து தெளிவாகிற விஷயம், நிச்சயம் விஞ்ஞானி கதாபாத்திரம்தான் போதிதர்மனுக்குபின் முக்கிய கதாபாத்திரமா இருந்திருக்கணும்.அதாவது சூரியா நடிசிருக்கணும்.  ஏதோ கவர்ச்சி வேணும் என்பதர்க்ககவே அந்த கதாபத்திரத்த ஓர் பெண்ணை நடிக்கக் வச்சுடாங்க. (பெண் என்கிற காரணத்தால் அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை குறைத்திருக்கலாம். தமிழ் சினிமா ஆண் ஆதிக்கம் நிறைந்தது !)

 பாத்திரப்படைப்பு   

மேற்கூறிய மாதிரி பாத்திரபடைப்பில் நிறைய சமரசம் செய்யப்படிருகிறது. அந்த சர்கஸ்காரன் கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப அலங்கோலமா வந்திருக்கு. அவன் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுறத கூட மன்னித்துவிடலாம். ஆனால் ஆடி மாசம் சாமி வந்து ஆடுறது மாதிரி, இறுதிக் காட்சியில் போதிதர்மன் உடம்புல வந்தவுடன் கொடுக்குற ஓர் ரீயாக்சன் தான் கொஞ்சமில்ல ரொம்பவே ஓவர்…

முக்கிய கதாபத்திரம் அனைத்தும் அந்நியமாவே படுது. மனதில் நிற்க மறுக்கிறது. வில்லன் வாங்குன காசுக்கு சண்ட போட்டிருக்கிறார் (இவங்க கூட்டுற அலப்பறை அளவுக்கெல்லாம் அவர் ஒன்னும் பெருசா நடிக்கல)

கதாநாயகிதான் ரொம்ப பாவம். என்ன நடிக்கிரோம்னு தெரியாமலேயே நடிச்சிருக்காங்க.

 வசனம்

படத்தின் முக்கிய பலம் சில வசனங்கள். தமிழனோட பெருமைய குறிக்கிற வசனங்களில் கவனம் செலுத்திய வசனகர்த்தா  , மற்ற   இடங்களில் கோட்டைவிட்டுட்டார்  .. நிறைய இடத்துல ரொம்ப மொக்க வசனம்,

யானை மேலே உட்கார்ந்துக்கொண்டு கதாநாயகி சொல்லுவாங்க “அய்யோ  குத்துது. ” நாயகன் சொல்லுவார் “அதுக்காக டைல்சா போடமுடியும் “

இப்படி மொக்க வசனங்கள   பேசி அவங்க ரெண்டு பேரும் சிரிப்பாங்க. சத்தியமா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் சிரிப்பாங்க. படம் பார்க்குறவங்க அழுவாங்க. ஏனா  உடனே தேவைற்ற ஓர் பாட்டு வரும். தமிழ்  படங்களில் தேவையில்லாம பாட்டு வைக்கிறதா கொஞ்ச நாள் தவிர்த்திருந்தாங்க. இப்போ மீண்டு ஆரமிச்சிடாங்கபா

திரு.சூரியாவை தவிர்த்து மற்ற எல்லாரும் பல இடங்களில் வசங்கள  பேசும் போது ஏதோ உணர்ச்சியே இல்லாத மாதிரிதான் பேசுறாங்க . உதாரணம் ,

“முடியும் இதெல்லாம் ஒருத்தராலதான் முடியும்…போதிதர்மன் ” (ஏதோ போக்கிரி படத்துல விஜய் intro பார்த்த மாதிரி இருந்துச்சு . .அதவிட கேவலமா இருந்துச்சு)

“லேப் கீய எடுத்துகிட்டு  புது சிம் கார்ட் வாங்கிட்டு நாளைக்கு காலைல வந்திருவான் “இப்படி எல்லாரும் வசனத்தை மனபாட செய்யுள் மாதிரி ஒப்பிகிறாங்க..

இசை

படத்தோட முக்கிய பலம் இசை. ஏனென்றால் இந்த படத்தின் இசை

உங்களுக்கு மலரும் நினைவுகள கொடுக்கும்,பழைய காலத்தை

ஞாபகப்  படுத்தும்.

அதாவது மொத்த இசையும் எங்கேயோ கேட்டமாதிரி

இருக்கும்! குறிப்பா போதிதர்மனின் அறிமுகப் பாடல் (Rise of damo) ..

அதை கேட்டா  நீங்க குழந்தைப் பருவத்திற்கே போயிருவீங்க

“Jhonny Jhonny yes papa….

Twinkle twinkle little star… “

(அத்தனையும் ஒரிஜினல் ட்யூன். ரூம் போட்டு யோசிப்பாங்களோ !)

படத்தின்பலம்

உண்மையாக படத்துல ஒழுங்கா நடிச்சிருக்குறது போதிதர்மன் சூரியா.. தன் கதாபாத்திரத்திற்கு  நியாயம் செய்திருக்கிறார். போதிதர்மானாக  அவர் கண்ணுல ஒரு தேஜஸ் தெரியுது. அவர் கண் அசைவுகள் அருமை..

நிச்சயம் சில நல்ல வசனங்கள் வைத்ததற்கு இயக்குனர பாராட்டியே ஆகணும்..இந்த படத்தோட மூலக்கதை என்னமோ நல்லாத்தான் இருக்கு . போதிதர்மன் திரும்பி வந்த எப்படி இருக்கும் என்பதே அது..ஆனா  எடுத்த விதம்தான் சகிக்கல..

என்னதான் ஆனியன் தோசையாகவே இருந்தாலும் ஆனியன மட்டும் சாப்பிட முடியாது. இங்க ஆனியன் மட்டும் வெந்திருக்கு..தோசை சுத்தமா வேகல…அரைவேக்காடு முட்டைய சாப்பிடலாம் ..அரை வேக்காடு தோசைய சாப்பிட முடியுமா !

இயக்குனர் ரொம்ப பீல் பண்ணியிருக்கார்.. ஆனா 83 கோடி போட்டு பீல் பண்ணினது ரொம்ப ஓவர் …

“அதுக்காக நீ ஏன் பீல் பண்ணுற ?” என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுது..

அவர் ஓர் கமர்சியல் படம் பண்ணிருந்தார் என்றால் நானும் கை தட்டிட்டு வந்திருப்பேன்…ஆனா ஏதோ இவருக்குதான் இன உணர்வு இருக்கிறது மாதிரி பீல் பண்ணி இன உணர்வ தூண்டுறதா நினைத்து கொண்டு இன உணர்வ சீண்டிவிட்டுட்டார் ..

KFC சிக்கன் சாப்பிட்டு , வெளிய வந்து கம்யுனிசம் பேசுற மாதிரி, இவரும் ஒரு மொக்க மசாலா படத்துல ஓவரா தமிழ் உணர்வ திணித்திருக்கிறார்..கல்லா கட்டுறதுக்கு செய்யப்படும் சந்தர்பவாத அரசியலே இது…

நாற்பது லட்சத்துல மாற்று சினிமா எடுக்கமுடியும்..Children of heaven, tri colors,மாதிரி படங்கள்  எடுக்க அதிக பட்சம் ஒரு கோடி தேவைப்படும்..மூணு கோடி இருந்தா கலை காவியமே படைக்க முடியும்..அத விடுத்து, காசு இருக்குனு ஒரே காரணுத்துக்காக சரடு திரிக்கிறத தான் தாங்கிக்க முடியல…

இயக்குனரோட இன உணர்வ கேள்வி கேக்குற உரிமை யாருக்குமில்லை…நிச்சயம் அவர் தமிழ் இனத்துமேல  பற்று  கொண்டதால்தான்  இந்த  கதைய ஆரமிச்சிருக்கார்..ஆனா இறுதியில் சீரளிச்சிட்டார்…

போதிதர்மான பத்தி இன்னும் நிறைய ஆராய்ச்சி பண்ணி இருக்கலாம்…ஒரு கமர்சியல் படத்தில் இத்தனை கோடிய வீணடித்ததற்கு பதிலாக போதிதர்மனை பற்றியோ அல்லது தமிழ் சமுதாயத்தை பற்றியோ ஓர் நல்ல ஆவணப் படம் எடுத்திருக்கலாம் (ஆவணப் படம் எடுப்பது கேவலம் என்பது போன்ற ஓர் சூழல் இங்கு நிலவுவது நம் சாபக்கேடு )

அதை சப்டைட்டில்ஸ் (Subtitles) போட்டு இணையத்திலும் பிரபல தொலைகாட்சிகளிலும் வெளியிட்டிருந்தால், தமிழனின் பெருமை உலகெங்கும் பரவி இருக்கும்.

திரு.முருகதாஸ் மாதிரி இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் அதை செய்யும் போது அந்த ஆவணப்படம் எளிதில் உலகெங்கும் பரவியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

வருங்காலத்திலாவது இதுபோல் அரை வேக்காடு படங்களுக்கு காசை வீணடிக்காமல் , நல்ல முயற்சிகளுக்கு செலவழிப்பார்கள் என நம்புவோம்..நல்ல முயற்சிகளுக்கு தமிழனின் ஆதரவு என்றுமே இருக்கும்…