ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3

3

க்ளீச்சே (Cliche)

Creativity means creative choices of inclusion and exclusion- Robert Mckee

ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதையை எழுதிவிட வேண்டும் என்ற கொள்கையோடு யாரும் திரைக்கதையை எழுதத் தொடங்கமாட்டார்கள்.  மிகச் சாதரணமான, எளிமையானதொரு கதையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் விதத்தில் திரைக்கதையை அமைத்துவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைக்கதையாசிரியரின் எண்ணமாக இருக்கும். அப்படி இருந்தும் ஏன் பல படங்கள் சுவாரஸ்யமற்று தோன்றுகின்றன!

‘சுவாரஸ்யம்’ என்றதுமே பெரும் மாயங்களை காட்சிகளில் நிகழ்த்திவிட வேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். இரண்டரை மணி நேரம்  பார்வையாளர்களின் கவனத்தை  தன்னை நோக்கி இழுத்து கட்டி வைத்துக்கொள்ளும் எல்லா காட்சிகளும் சுவாரஸ்யமான  காட்சிகள்  தான். அது எப்போது சாத்தியம் இல்லாமல் போகிறது! 

ஒன்று, படத்தோடு நம்மால் ஒன்றவே முடியாமல் போகும் போது. அந்த படத்தின் ‘கதை உலகம்’ நமக்கு முற்றிலும் அந்நியமாக படலாம். ரஷியன் மாஃபியாக்களுக்கு இடையே நிகழும்  ஆயுத பேரத்தை நம் நாயகன் எப்படி தடுக்கிறான் என்பதே கதை என்று வைத்துக் கொண்டால், நம்மால் அந்த கதையோடு ஒட்ட முடியாது அல்லவா! பின் எப்படி காட்சிகள் நமக்கு சுவாரஸ்யமாக தோன்றும்! விவேகம் போன்ற படங்கள் பார்ப்பதற்கு வீடியோ கேம் போல் இருப்பதற்கு காரணம் இதுதான். கதையோடு நம்மை கட்டிப்போடும் எமோஷன் இதுபோன்ற படங்களில் இருப்பதில்லை. அடுத்து அந்த கதையின் உலகம் நமக்கு பரிச்சயமாக இருந்தாலும், பிரதான கதாப்பாத்திரத்தின் பிரச்சனை நம்மை பாதிக்காத போது நம்மால் கதையோடு ஒன்ற முடியாது. ஒரு சாதாரணன் பார்போற்றும் பாடிபில்டராகவும் மாடலாகவும் உருவாகிறான். நல்ல கதைதான். அவனுடைய வளர்ச்சியில் பொறாமை கொள்வோர் அல்லது அவனால் பாதிக்கப்படும் சிலர் அவனுக்கு வைரஸ் ஊசி போட்டு அவன் உடலழகை சிதைத்து விடுகிறார்கள். அதனால் நாயகன் அவர்களை பழி வாங்குகிறான். இங்கே ஒரு மாடலுக்கு என்ன ஆனால் எனக்கு என்ன என்ற எண்ணம் பார்வையாளர்களுக்கு வரும்போது காட்சிகள் அந்நியப்பட்டு போகிறது.  ஏனெனில் அந்த பிரச்சனை தன்னுடைய பிரச்சனை இல்லை என்றே ஒரு பார்வையாளனின் மனம் எண்ணும்.

இரண்டாவது, காட்சிகள் ‘க்ளீச்சேவாக (Cliche) இருக்கும் போது. இங்கே நம்மால் படத்தோடு ஓட்ட முடியும், அந்த உலகமும்  நமக்கு நன்கு பரிச்சயமான உலகமாக தான் இருக்கும். நாயகனின் பிரச்சனை கூட நமக்கு பரிச்சயமான பிரச்சனையாக அல்லது நாம் அங்கீகரிக்கும் பிரச்சனையாகவே இருக்கும். ஆனாலும் காட்சிகளில் சுவாரஸ்யம் இருக்காது. காரணம், அந்த காட்சிகள் நாம் இதற்கு முன்பு பார்த்த படங்களை நினைவுப்படுத்தும். பார்வையாளர்கள் பலமுறை பல படங்களில் பார்த்த ஒரு காட்சியையே மீண்டும் பார்ப்பதற்காக நம் படங்களுக்கு வரவில்லை என்பதை ஒரு திரைக்கதையாசிரியர் மறந்து விட கூடாது. . 

இந்த க்ளீச்சே ஏன் நிகழ்கிறது, இதை எப்படி தவிர்க்கலாம் என்பதைப் பற்றி மெக்கீ என்ன சொல்கிறார்?

ஒரு எழுத்தாளனுக்கு தன்னுடைய கதையின் உலகத்தைப் பற்றி போதிய அறிவு இல்லாமையே க்ளீச்சேவிற்கு காரணம் என்கிறார் மெக்கீ.  தெரியாத ஒரு உலகத்தை (கதை களம்) பற்றி கதை எழுதும் போது, ஒரு கட்டத்தில் என்ன எழுதுவது என்று தெரியாமல் திரைக்கதையாசிரியர் தவிக்கக் கூடும். அப்போது அவர் வேறு வழியின்றி,  அதற்கு முன்பு அதே களத்தை மையமாக கொண்டு வெளியான படங்களை பார்த்தும், புத்தகங்களை படித்தும் காட்சிகளை நேரடியாக அந்த படைப்புகளிலிருந்து நகல் எடுக்கத்  தொடங்குவார். அப்படி செய்யும் போது காட்சிகள் எந்த புதுமையும் இல்லாமல் வெறும் க்ளீச்சேவாக தோன்றுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லையே!.  

அப்படியெனில் ஒரு திரைக்கதையாசிரியன் தான் வாழ்ந்த அனுபவித்த கதைகளை மட்டும் தான் எழுத வேண்டுமா? தான் கண்டிராத ஒரு உலகத்தைப் பற்றி புனைய முயற்சிக்க கூடாதா?

மெக்கீ சொல்வதன் அர்த்தம் அதுவல்ல. நம்முடைய கதை உலகை பற்றி போதிய ஆராய்ச்சி செய்து அதை நன்றாக  தெரிந்துக்  கொண்ட பின்பே . நாம் திரைக்கதையை எழுத வேண்டும் என்பதே அவர் சொல்வதற்கு அர்த்தம். முதலில் தன்னுடைய கதையின் அமைப்பு (Setting) பற்றி ஒரு திரைக்கதையாசிரியர் ஆழமாக புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லும்  அவர், ஒரு கதையின் அமைப்பு நான்கு பரிமாணங்களைக் கொண்டது என்றும் விளக்குகிறார். அவை முறையே, காலம் (Period), கால அளவு (Duration), இடம் (Location) மற்றும் முரணின் நிலை (Level of Conflict).

கதை எந்த காலத்தில் நிகழ்கிறது என்ற தெளிவு முதலில் இருக்க வேண்டும். அது சமகாலமாக இருக்கலாம். கடந்த காலமாக இருக்கலாம். அல்லது கால நேரம் குறிப்பிட தேவையில்லாத ஏதோ ஒரு காலமாக இருக்கலாம்.(இந்த வகை கதைகள் அரிது). அடுத்து கதையின் கால அளவு என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரே கதையில் ஒரு கதாப்பத்திரத்தின் அறுபது ஆண்டு கால வாழ்க்கையையும் சொல்லலாம், வெறும் ஆறு மணி நேர வாழ்க்கையையும் சொல்லலாம். 

என்ன சொல்ல போகிறோம், என்ன சொல்ல வேண்டும் என்ற தெளிவு ஒரு திரைக்கதையாசிரியருக்கு இருத்தல் வேண்டும். அடுத்து எந்த இடத்தில் ஒரு கதை நிகழ்கிறது என்பதை முடிவு செய்வதும் முக்கியமாகிறது. அது பாலை நிலமாக இருக்கலாம், மலை பிரதேசமாக இருக்கலாம், கிராமமாக இருக்கலாம், இடுக்குகள் நிறைந்த நகரமாக இருக்கலாம். இடத்தின் தன்மைக்கேற்ப கதை மாந்தர்களின் குணம் மாறுபடும் அல்லவா! 

சில படங்களை கவனித்திருப்போம். அதில் கதை எந்த இடத்தில் நிகழ்கிறது என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்காது. அதனாலேயே அந்த கதையில் நம்மால் ஒன்ற முடியாது. சில கதைகளில் அந்த இடத்தின் இயல்பான தன்மையை விடுத்து செயற்கையான தன்மையை வெளிப்படுத்தி இருப்பார்கள். இதுவும்  அந்த கதையை நமக்கு அந்நியப்படுத்தி காட்டும்.(உதாரணம் இராவணன்). சில படங்களில், கதை நிகழும் இடம் தான், அந்த லேண்ட்ஸ்கேப் தான் கதைக்கு உயிர் கொடுக்கும். (உதாரணம் ஆரண்யகாண்டம்). 

அடுத்து முரணின்  நிலை. நம் கதையில் இருக்கும் முரண் எந்த நிலையில் உள்ளது என்று சிந்தித்து பார்க்க வேண்டும்! ஒருவனுக்கு தன்னோடே முரண் இருக்கலாம். (அகப்போராட்டம்). அல்லது இன்னொருவரோடு பிரச்சனை இருக்கலாம். இல்லை சமூகத்தோடு, நிறுவனத்தோடு பிரச்சனை இருக்கலாம். இங்கே முரணின் நிலை மாறமாற பிரச்சனையின் வீரியம் கூடுகிறது அல்லவா! 

இந்த நான்கு பரிமாணங்களையும் தெளிவாக சிந்த்தித்து வைத்துக் கொண்டு கதையை எழுதத் தொடங்குங்கள் என்பதே மெக்கீ நமக்கு சொல்லும் அறிவுரை. 

இதையெல்லாம் முடிவு செய்தபின்பும், ஒரு திரைக்கதையாசிரியர் தவறு செய்யும் இடமொன்று இருக்கிறது. அது தன்னுடைய கதை உலகை மிக பெரிதான ஒன்றாக வைத்துக் கொள்வது. அதாவது நம்முடைய கதை நிகழும் உலகம் அளவில் பெரியதாகவும், நிறைய கதை மாந்தர்களை கொண்டதாகவும் இருக்கும் போது கதையை எப்படி நகர்த்துவது என்ற குழப்பம் ஏற்படும். இதை தவிர்க்க, நம் கதை உலகை சிறியதாக வைத்துக் கொள்ளும்படி சொல்கிறார் ராபர்ட் மெக்கீ. 

அதற்காக அவர் ஒரே இடத்தில் (location) கதையை நகர்த்துங்கள் என்று சொல்லவில்லை. நம் உலகில் நடக்கும் எல்லாமே நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமெனில் அந்த உலகம் சிறியதாக இருக்கவேண்டும், ஒரு எழுத்தாளனுக்கு தெரியாமல் அவனுடைய புனைவு உலகில் எதுவுமே அசையக் கூடாது என்கிறார் அவர். நம் உலகம் எப்படிப்பட்டது, அதில் வரும் நம் கதாப்பாத்திரங்கள் எப்போது கோபப்படும், எப்போது சந்தோசப்படும்,  அதன் வாழ்வில் நடந்த மோசமான சம்பவம் என்ன அனைத்துமே ஒரு எழுத்தாளனின் மனதில் இருக்க வேண்டும். இதெல்லாம் திரைக்கதையில் வர வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் இவற்றைப் பற்றிய அறிவு ஒரு திரைக்கதையாசிரியனுக்கு இருக்க வேண்டும். மிக பெரிய புனைவு உலகை உருவாக்கிவிட்டால் இந்த அறிவு சாத்தியமில்லை. ஆனால் ஒரு திரைக்கதையாசிரியன் தன் புனைவு உலகை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது, அவனால் சம்பவங்களை தயக்கமின்றி தெளிவாக எழுத முடியும். அப்போது அவன் வேறு படங்களையோ புனைவையோ நகல் எடுக்க தேவை இல்லை. இங்கே ‘க்ளீச்சே’ உடைந்து போகிறது. ஆனால் இதை எப்படி சாத்தியப்படுத்துவது?

ஆராய்ச்சி செய்து கொண்டே இருங்கள் என்பதே மெக்கீ சொல்லும் பதில். நம் நினைவுகளை அலசுவதன் மூலம் இந்த ஆராய்ச்சி சாத்தியமாகும். கற்பனை குதிரையை ஓட விடுவதன் மூலம் சாத்தியமாகும். அல்லது உண்மையான தரவுகளை சேகரிப்பதன் மூலம் சாத்தியமாகும். 

நம் கதாப்பாத்திரத்தின் வாழ்வில் ஏதோ ஒரு சம்பவத்தை எழுதுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது போல நம் வாழ்விலோ நம் நண்பர்களின் வாழ்விலோ ஏதாவது சம்பவம் நிகழ்ந்திருக்கிறாதா என்று யோசிக்கலாம். இங்கே நம் நினைவு அந்த காட்சியை உருவாக்குகிறது. அல்லது அந்த கதாப்பாத்திரத்தின் இடத்தில் நாம் இருந்தால் எப்படி நடந்துகொள்வோம் என்று கற்பனை செய்து காட்சியை எழுதலாம். சில நேரங்களில் நாம் உண்மை சம்பவங்களை ஆராய வேண்டியதிருக்கும். உதாரணமாக, பிர்சா முண்டா பற்றி ஒரு கதை எழுத வேண்டுமெனில், வெறும் கற்பனை மட்டும் போதாது. நிறைய உண்மைகளை சேகரிக்க வேண்டியிருக்கும். இப்படி எந்த வகை படமாக இருந்தாலும் ஏதோ ஒரு ஆராய்ச்சி நிச்சயம் தேவைப்படும்.  ‘வாசிப்பு’ அந்த ஆராய்ச்சியை சாத்தியப்படுத்தும். 

நமக்கு தெரிந்த விஷயங்கள் சரிதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், அல்லது நாம் பல விஷயங்களை இன்னும் அறிந்திருக்கவில்லை என்று தெளிந்துகொள்வதற்கும் வாசிப்பு பயன்படும் என்கிறார் மெக்கீ. பல நேரங்களில் ‘ரைட்டர்ஸ் பிளாக்கை போக்குவதற்கும் வாசிப்பு பயன்படும். எதையுமே எழுத முடியாமல் தவிக்கும் போது, நம் புனைவு உலகிற்கு சம்மந்தமான ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தால் நம் படைப்பாற்றல் பெருகும்   என்கிறார் அவர். இறுதியாக ‘க்ளீச்சேவை தவிர்ப்பதற்கு நல்லதொரு உத்தியை சொல்கிறார் மெக்கீ. ஒவ்வொரு காட்சியையும் குறைந்தது நான்கைந்து விதத்தில் எழுதி பார்ப்பதே அது.  

எல்லா காட்சிகளுக்கும் இது சாத்தியமில்லை. இணைப்பு காட்சிகளை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் முக்கியமான காட்சிகளுக்கு இந்த உத்தியை பயன்படுத்தலாம். ஹீரோவும் வில்லனும் எங்கே சந்திக்கிறார்கள்? நாயகன் நாயகியிடம் எங்கே காதலை சொல்கிறான்? ஹீரோவிற்கு எப்படி சூப்பர் பவர் கிடைக்கிறது?

முழு காட்சியையும் எழுத வேண்டிய அவசியமில்லை. வெறும் ஐடியாக்களை மட்டும் குறித்துக் கொள்ளலாம். ஹீரோவை வில்லனின் ஆட்கள் அடிக்க வருகிறார்கள். அந்த சண்டை பேருந்தில் நடந்ததால் எப்படி இருக்கும்? அல்லது சப்வேயில் நடந்தால் எப்படி இருக்கும்? 

நாயகனும் நாயகியும் முதன்முதலில் சந்தித்துக் கொள்வதே நாம்  எழுத விரும்பும் காட்சி. அவர்கள் லிப்ட்டில் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்? இல்லை, ஒரு கலவரத்தில் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள்? இப்படி பலவிதமாக காட்சிகளை எழுதி பார்த்து இறுதியாக ஒன்றை தேர்வு செய்யும் போது நிச்சயம் அந்த காட்சி புதுமையாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -2

***

2

ஆர்க் பிளாட், மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட்

The Writer Must Believe in What He Writes- Robert Mckee

***

ஆர்க் பிளாட் (Arch Plot), மினி பிளாட் (Mini Plot) மற்றும் ஆன்டி பிளாட் (Anti Plot) என்பதே மெக்கீ சொல்லும் மூன்று பிரதான பிளாட் வகைகள். ஒரு கதையை நகர்த்துவதற்கு எண்ணற்ற சாத்தியக்கூறுகள் இருந்தாலும், அவை இந்த மூன்று பிரதான வகைகளுக்குள்தான் வரும் என்கிறார் மெக்கீ. மேலும் ஒவ்வொரு வகைக்கும் இருக்கும் தன்மைகளைப் பற்றியும் மெக்கீ குறிப்பிடுகிறார். ஆனால் மெக்கீ சொல்லும் இந்த எல்லா வகைகளைப் பற்றியும் அதிகம் சிந்திப்பது ஒரு திரைக்கதையாசிரியருக்கு தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். 

அதனால் நாம் இதை இன்னும் எளிமையாக, வேறுமாதிரி புரிந்துகொள்வோம். வழக்கமான திரைக்கதை அமைப்பு மற்றும் மாறுபட்ட திரைக்கதை அமைப்பு என்று பிளாட்களை ஒரு புரிதலுக்காக இரண்டு வகைகளாக மட்டுமே பிரித்துக் கொள்வோம். இதுவே நமக்கு பரிச்சயமான வகைகளும் கூட. 

வழக்கமான அமைப்பு என்று நாம் சொல்வது, பல ஆண்டுகளாக நாம் பார்த்து வரும் பெரும்பாலான (தமிழ்) படங்களை குறிக்கும். ஒரு பாத்திரம், அதன் உலகம், பாத்திரத்திற்கு வேறொரு பாத்திரத்தால் ஏற்படும் சிக்கல், இறுதியில் அந்த சிக்கலுக்கான தீர்வு என்று நேர்கோட்டில் நகரும் கதைகளை வழக்கமான திரைக்கதை அமைப்பு எனலாம். மெக்கீ சொல்லும் ஆர்க் பிளாட் என்பது இது தான். இது தொன்றுதொட்டு பின்பற்றப்படும் வகை என்பதால் இதற்கு ‘க்ளாஸிக் பிளாட்’ என்று இன்னொரு பெயரும் உண்டு. 

அடுத்து மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட், மாறுபட்ட அல்லது வித்தியாசமான திரைக்கதை போக்கை குறிக்கிறது. நேர்கோட்டில் நகராத கதைகள், ஒன்றிற்கும் மேற்பட்ட கதாநாயகர்கள் கொண்ட கதைகள், ஸ்தூலமான முடிவென்று எதுவும் இல்லாமல் முடியும் கதைகள் போன்றவை இந்த இரண்டு வகைகளுக்குள் (அதாவது மினி பிளாட் மற்றும் ஆன்டி பிளாட்) அடங்கும். 

மேற்கூறிய பிளாட் வகைகளின் தன்மைகள் என்னென்ன! 

ஆர்க் பிளாட்டில் திட்டவட்டமான முடிவு இருக்கும். அதாவது க்ளைமாக்சில் கதைக்கு ஒரு தீர்வு இருக்கும். மற்ற இரண்டு வகைகளிலும் அது அவசியமில்லை என்கிறார் மெக்கீ. மேலும் ஆர்க் பிளாட்டில் நம் பிரதான பாத்திரத்திற்கு புற உலகில் பிரச்சனை நிகழும். மற்ற வகைகளில் பிரச்சனை அகம் சார்ந்ததாக இருக்கும் என்கிறார். ஆனால் இந்த காலகட்டத்தில் இந்த வித்தியாசங்கள் எல்லாம் மாறிவருவதை கவனிக்க முடியும். நம் முக்கிய கதாப்பாத்திரத்திற்கு புறம் மற்றும் அகம் ஆகிய இரண்டு நிலைகளிலும் பிரச்சனைகள் இருக்க வேண்டும். அப்படி திரைக்கதையை அமைத்தால் அந்த கதை பார்வையாளர்களோடு அதிகம் நெருங்கி வரும். (உதாரணம் பிரேக்கிங் பேட்.) 

ஒரு போலீஸ் நாயகன் இருக்கிறான். அவனுடைய நோக்கம் கொலைகாரனை கண்டுபிடிப்பது. இதை வைத்து ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை எழுத முடியும். ஆனால் அவனுக்கு வாழ்க்கையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அது அவனுள் அகச் சிக்கலை ஏற்படுத்தி அவனை  செயல்படவிடாமல் தடுக்கிறது. அல்லது நாயகன் மீது காதல் வயப்படுகிறாள் நாயகி. ஆனால்   நாயகனோ தன் பழைய காதலை நினைத்துக் கொண்டே இருக்கிறான். இது அவனுடைய அகப் பிரச்சனை. இப்படி கதைகளில் அகம் மற்றும் புறம் ஆகிய இரண்டு சிக்கல்களும் இருக்கும் போது அந்த திரைக்கதை இன்னும் ‘எமோஷனலாக’ உருவாகிவிடும். 

அடுத்து, ஆர்க் பிளாட்டில் கதை நேர்கோட்டில் (Linear) நகரும் என்றும், ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் இருக்கும் என்றும் கூறுகிறார் மெக்கீ. அதவாது திரைக்கதையில் நிகழும் சிறுசிறு திருப்பங்களுக்கும் நம்பத்தகுந்த காரணம் இருக்க வேண்டும். ஒரு வினை நிகழ்ந்தால் தான், ஒரு எதிர்வினை நிகழ வேண்டும்.ஆனால் மற்ற வகை கதைகளில் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. அதில் திடிரென்று எது வேண்டுமானாலும் நிகழலாம். சம்மேந்தமே இல்லாமல் ஒரு ஏலியன் கதைக்குள் வந்து கதையை முடித்து வைத்துவிட்டு போகலாம். (இதற்குதான் இதை வித்தியாசமான,  வழக்கத்திற்கு மாறான திரைக்கதை அமைப்பு என்கிறோம். ஆனால் இது எல்லா நேரங்களிலும் சாத்தியப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.)

ஆர்க் ப்ளாட்டில்  நாயகன் ஆக்டிவாக (active) இருப்பான். மற்றவகை கதைகளில் பாஸிவாக (Passive) இருப்பான் என்ற கூற்றும் உண்டு. அதாவது அடுத்து என்ன என்று இயங்கிகொண்டே இருப்பவன் முதல் வகை. என்ன நடந்தாலும் எனக்கென்ன என்று இருப்பவன் இரண்டாவது வகை. இரண்டு குணங்களும் கலந்த நாயகனை உருவாக்குவது திரைக்கதைக்கு அதிக சுவாரஸ்யத்தை கொடுக்கும். (குறிப்பாக ஆக்சன் கதைகளுக்கு.)  எப்போதுமே துடிதுடிப்பாக இருக்கும் நாயகனை வில்லன் சீண்டுகிறான் என்பதை விட, நமக்கேன் வம்பு என்று தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவனை வில்லன் சீண்ட அவன் வெகுண்டு எழுகிறான் என்று கதை அமைத்தால் திரைக்கதை அதிக சுவாரஸ்யமாக இருக்கும்.

அவன் திடிரென்று வெகுண்டு எழவில்லை, கடந்த காலத்தில் தான் செய்த சண்டித்தனங்களை அடக்கி சாதுவாக வாழ்ந்திருக்கிறான், இப்போது மீண்டும் பழைய முகத்தை காண்பிக்கிறான் என்று கதையை அமைத்தால் திரைக்கத்தில் இன்னும் கூடுதல் சுவாரஸ்யம் கிடைக்கிறது அல்லவா! இதுபோல் நம் தேவைக்கேற்றார் போல் நாயகனின் தன்மையை மாற்றி கொண்டே போகலாம், அவனை ஆக்டிவ், பாஸிவ் என ஒரே கோணத்தில் உருவாக்க வேண்டிய அவசியமில்லை. 

அடுத்து திரைக்கதை பிளாட் வகைக்களுக்குள் நாம் கவனிக்க வேண்டிய தன்மை ‘யதார்த்தம்’. நாம் உருவாக்கும் உலகின் யதார்த்தம் ஆரம்பத்திலிருந்து சீராக இருத்தல் வேண்டும். இதுவே ஆர்க் பிளாட்டின் தன்மை. மற்ற வகை கதைகளில் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. யதார்த்தம் என்றதும் நிஜவாழ்வில் இருக்கும் யதார்த்தத்தை சினிமா பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ண வேண்டாம். நாம் உருவாக்கும் கதை உலகிற்கென்று ஒரு யதார்த்தம் இருக்குமல்லவா! அதவாது Cinematic Reality. அது சீராக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நம் வில்லன் நினைத்தால், அவனை சுற்றி இருக்கும் எந்த பொருளும் உடனே பறந்து அவன் கைக்கு வந்து விடும், அதை அவன் ஆயுதமாக்கி யாரையும் தாக்குவான், அவன் முன் சண்டை செய்து யாராலும் ஜெயிக்க இயலாது, ஆனால் நம் நாயகனுக்கும் அத்தகைய சக்தி கிடையாது என்று வைத்துக்கொள்வோம். இப்படியாக நாம் கதையை உருவாக்கிவிட்டோம். அதாவது இதுவே நம் கதை உலகின் யதார்த்தம் என்று நிலைநாட்டிவிட்டோம். அப்படியானால் கதையின் காட்சிகளும் இந்த யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும். நாயகனும் வில்லனும் எதிர்கொள்ளும் போது, நாயகன் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக திடிரென்று நாயகனுக்கும் அந்த சக்தி வந்துவிட்டது என்று வைக்கக்கூடாது!. நம்பகத்தன்மையோடு கதையை நகர்த்த வேண்டும். நம் கதை உலகில் வில்லனுக்கு அந்த சக்தி எப்படி கிட்டியதோ, அதே முயற்சியை செய்ததன் மூலமே நாயகனுக்கும் சக்தி கிட்டியது என்று கதை அமைக்கலாம். அல்லது வில்லனை விட நாயகனுக்கு வேறொரு சிறப்பான சக்தி கிடைக்கிறது என்று கதை அமைக்கலாம். ஆனால் அது எப்படி கிட்டியது என்றும் சொல்ல வேண்டும். அது நம்பும் வகையிலும் இருக்க வேண்டும். பேண்டஸி அல்லது சூப்பர் ஹீரோ கதை என்பதற்காக நாம் நம்போக்கில் எதைவேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போக கூடாது. எளிமையாக சொல்ல வேண்டுமெனில், ஆர்க் பிளாட்டில் நம் கதை உலகிற்காக நாம் உருவாக்கிய சட்டதிட்டங்களை நாம் இறுதி வரை பின்பற்ற வேண்டும். 

ஆனால் மினி மற்றும் ஆன்டி பிளாட் கதைகளில், யதார்த்தம் சீராக இருக்க வேண்டிய அவசியமில்லை. எப்போதுவேண்டுமானாலும் நம் கதை உலகின் சட்டதிட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். இலக்கியத்தில் அபத்தப் புனைவுகள் இந்த வகையை சேர்ந்தவை தான். காஃப்காவின் கதையில் திடிரென்று நாயகன் பூச்சியாக மாறுவான், அல்லது அவன் நுழையும் வீடு  நீதிமன்ற அறையாக மாறும். பெர்னான்டோ ஸோரன்டினோவின் கதைகளையும் அபத்தப் புனைவுகளுக்கான உதாரணமாக சொல்லலாம்.   இவற்றை ஏன் அபத்த புனைவு என்கிறோம் எனில், யதார்த்த உல கில் திடீரென யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட விசயங்கள் நடக்க நேரிடும்.  லூயி புனுவலின் (லூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி) படங்களில் இந்த தன்மையை காணலாம்.  சூப்பர் டீலக்ஸ் படத்தில் பள்ளி நண்பர்களின் கதையில், கடைசியில் ஒரு ஏலியன் வருமே! அதுவும் இந்த வகைதான்.

இப்படி ஒவ்வொரு வகை பிளாட்டிற்கும் ஏராளமான தன்மைகள் இருந்தாலும் ஒரு திரைக்கதையாசிரியர் புரிந்து கொள்ள வேண்டியது ஆர்க் பிளாட்டை எழுதும் உத்திகளை தான் என்கிறார் மெக்கீ. உண்மைதான். நாம் வாய்வழியாக சொல்லிவந்த கதைகளிலிருந்து பிரபலமான புராணங்கள் வரை எல்லாமே ஆர்க் பிளாட்கள் தான். புராணங்களில் கிளைக்கதைகள் உண்டு என்றாலும், அதன் மூலக்கதை ஒரு நாயகனைப் பற்றியது தான். இந்திய புராணங்கள் தொடங்கி உலக புராணங்கள் அனைத்திலும் இந்த ஒற்றுமையை கண்டுகொள்ளமுடியும். இதை தான் ஜோசப் கேம்பல் ‘ஹீரோ வித் தவுசண்ட் பேசஸ் புத்தகத்தில் ‘ஒற்றைத்தன்மை’ (Monomyth) என்கிறார்.

நாம் ஆதிகாலம் தொட்டு சொல்லி வரும் கதைகளை நம்மை அறியாமலேயே ஒரு ஊர், ஒரு ராஜா (அல்லது ஒரு நாயகன்) என்று தான் சொல்லி வந்திருக்கிறோம். எனவே நம் வாழ்வோடு தொடர்புடைய ஆர்க் பிளாட்டில் கதைகளை எழுதி பழகும் போது மற்றவைகள் தன்னாலேயே கைகூடும். 

மேலும், பிளாட்களை நாம் எப்படி வகைப்படுத்தினாலும், ஒரு சம்ப்ரதாயமான, வழக்கமான  பிளாட்டை  சிறு மாற்றம் செய்வதன் மூலம் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பை உருவாக்க முடியும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். 

ஒரு நாயகன் இருக்கிறான். அவன் உலகை நாம் அறிகிறோம். அவன் நிதானமான வாழ்வை ரசிக்கிறோம். திடிரென்று அவனுக்கு ஒரு பிரச்சனையை வருகிறது. (அதாவது வில்லன் அவன் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான்). இந்த குறுக்கீடு படம் ஆரம்பித்து ஒரு அரைமணி நேரத்தில் நிகழ்கிறது என்று வைத்துக் கொள்வோம். இதுபோன்ற அமைப்பில் நாம் ஏராளாமான கதைகளை கண்டிருக்கிறோம். ஆனால் அதே வில்லனை இடைவேளையின் போது அறிமுகப்படுத்தினாலோ, அல்லது படத்தின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்துவிட்டு, அதன் பின் முழுக்கமுழுக்க நாயகனின் கதையை சொல்லிவிட்டு, இடைவேளையின் போது வில்லன் நாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான் என்றால் வேறொரு பிளாட் கிட்டும். 

முன்பு சொன்னதுபோல ‘பிளாட்’ என்பது திரைக்கதையின் பாதை தான். எல்லா பாதைகளையும் ஆராய்ந்து பார்த்து தனக்கான பாதையை கண்டுகொள்வதே ஒரு நல்ல திரைக்கதையாசிரியரின் வேலை. எழுதிஎழுதி பழகும் போது இது சாத்தியமாகும்.

தொடரும்… 

தொடரும் சினிமா (free e-book)

கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது.

தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம்
Cover Photography©  Premkumar SachidanandamThodarum_frontcover

கூகிள் ப்ளே ஸ்டோரில் free download  செய்ய இங்கே கிளிக் செய்யவும்

 

நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும் 

 

திரிஷ்யம்

கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு த்ரில்லர் படங்களில் மலையாளப் படமான திரிஷ்யமும் ஒன்று. இன்னொன்று கன்னடப் படமான லூசியா. இரண்டு படங்களையுமே இப்போது தமிழில் எடுக்கிறார்கள். லூசியாவைப் பற்றி பின் விவாதிப்போம்..திரிஷ்யமின் கதை இதுதான்.

ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் கேபில் டி‌வி ஆப்பரேட்டர். படிப்பறிவு மிகக் குறைவு. ஆனால் அனுபவ அறிவு மிகமிக அதிகம். பல மொழித் திரைப்படங்களைப் பார்த்தே தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான். உதாரணமாக, கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டு விட்டால், தாங்கள் கைது செய்த ஒருவனை போலீஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆகவேண்டும் என்று நான்காம் வகுப்பு படித்த அவன் ஒரு படத்திலிருந்து தெரிந்து கொள்கிறான். அதை வைத்துக்கொண்டு ஒரு காட்சியில் சட்ட ஆலோசனை வழங்குகிறான். இது போல் அவனுக்குத் தெரிந்த அனைத்துமே, அவன் சினிமாவில் இருந்து கற்றுக்கொண்டவைதான். அமைதியாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. திடீரென்று அவன் வாழ்வினுள் ஒரு வில்லன் நுழைகிறான். ஆனால் அந்த வில்லன் மோதுவதோ ஜார்ஜ் குட்டியின் மகளிடம். எதிர்பாராத விதமாக அவன் மகளும், மனைவியும் வில்லனைக் கொன்று புதைத்து விடுகிறார்கள். இறந்தவன் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியின் மகன். உண்மை வெளியே தெரிந்தால் அவன் குடும்பத்தையே அழித்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனாக தன் குடும்பத்தை அவன் காப்பாற்றிட வேண்டும்.  இங்கு தான் படத்தின் கதையே ஆரம்பிக்கிறது. அவன் எப்படி திரைப்படங்களில் இருந்து பெற்ற அறிவின் மூலம் தன் குடும்பத்தையே காக்கிறான் என்பதே படத்தின் கதை.

இது மிகவும் சிறப்பானதொரு படம். சிறந்த நடிகர் , மிகமிகச் சிறப்பாக நடித்தவொரு படம் என பல சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. இத்தகைய ஒரு படத்தை அதன் ஆன்மா சிதையாமல் தமிழில் எடுக்க முடியுமா என்பதே பிரதான கேள்வி. ஒரு படம் எடுப்பதற்கு முன்பே அது தமிழில் எடுபடாது என்று சொல்வது சரியில்லைதான். ஒரு மொழியில் வந்த படத்தை இன்னொரு மொழியில் உருவாக்கும் போது, அது ஒரிஜினல் வெர்ஷனை விடச் சிறப்பாக இருக்கும் போது யாரும் குறை சொல்லமாட்டார்கள். ஆனால் சரியில்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தால்?

திரிஷ்யம் படத்தின் முதல் ஒரு மணி நேரம், வைக்கம் முகமது பஷீரின் நாவல் போல, ஒரு கதாபாத்திரத்தின் செயற்பாடுகளை மட்டுமே மையப்படுத்தி நகர்கிறது. அதாவது ஜார்ஜ் குட்டியின் அன்றாட அலுவல்களைப் பற்றியும், அவன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும், அவன் குடும்ப உறவுகளைப் பற்றியும் மட்டுமே படம் பேசுகிறது. அதில் எந்தத் திருப்பமும் இருக்காது. ஆனால் இதே போன்று ஒரு ஃபார்மட்டை நம் தமிழ் படங்களில் பார்க்க முடியாது. நமக்கு முதல் இருபது நிமிடத்தில் கதை ஆரம்பிக்க வேண்டும். கதாநாயகன் நாயகியைச் சந்திக்க வேண்டும், அல்லது வில்லனைச் சந்திக்க வேண்டும். கதை அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். பொதுவாக மலையாளப் படங்கள் மெதுவாக நகர்வதாக நாம் உணர்வது இந்தக் காரணத்தினால் தான் (வெளிநாட்டுப் படங்களின் தாக்கத்தில் உருவாகும் சமகால மலையாளப் படங்கள் பலவும் இதற்கு விதிவிலக்கு.)

அந்த முதல் ஒருமணி நேரக் காட்சியின் நீளத்தை ஒரேயடியாகக் குறைத்து விட முடியாது. ஏனெனில், அந்த முதல் ஒரு மணிநேரத்தில் கதாநாயகன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தின் பிற்பாதியில் பயன்படுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களைத் தக்க வைத்து, அதே சமயத்தில் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்வார்கள் என நம்பலாம். ஆனால் கமல் ரீமேக் செய்கிறார் என்றதும் ஒருவகையான பயம் கவ்விக்கொள்கிறது.

வெட்னஸ்டேவை உன்னைப்போல் ஒருவனாக்கும் போது, அவர் வெட்னஸ்டே படத்திற்கு நியாயம் செய்யவில்லை. (கமலின் பல படங்களை ரசித்துப் பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்றாலும் உன்னைப்போல் ஒருவன் பயமுறுத்துகிறது)

வெட்னஸ்டே படத்தின் முக்கிய கதாபாத்திரம் இறுதிவரை க்ரே ஏரியாவிலேயே பயணிக்கும். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி கடைசி வரை இருந்து கொண்டே இருக்கும். அதுவே அந்த படத்தின் மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். நஸ்ருதின் ஷா நடித்ததனால் தான் அது சாத்தியமாயிற்று. அது ஹீரோ மெட்டீரியலுக்கான கதை அன்று. இங்கே பிரகாஷ் ராஜ் போல் ஒரு நடிகர் நடித்திருக்க வேண்டும். ஆனால் கமல் நடித்ததனால் ‘நல்லவன்’ சாயல் அந்தக் கதாபாத்திரம் மேல் முதல் காட்சியிலேயே உருவாகிவிட்டது. மேலும்  அழுது வசனம் பேசி மெலோடிராமா படமாக்கியிருப்பார் கமல். (இதே போல் கஹானியில் நாயகி கர்ப்பமாக இருப்பதே மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது பற்றுதல் வருகிறது. ஆனால் கஹானியின் தமிழ் வெர்ஷனில் அந்த எலிமெண்ட் இல்லை.) இந்தநிலை திரிஷ்யம் படத்திற்கு வந்துவிடக் கூடாது என்று அவா இருந்தாலும், திரிஷ்யம் திரிஷ்யமாகவே இருந்தால் தமிழில் கமர்சியலாக எடுபடாது என்ற உண்மையும் உரைக்கத்தான் செய்கிறது. எனினும் மிகவும் ஆறுதலான ஒரு செய்தி, படத்தின் ஒரிஜினல் இயக்குனரே இந்தப் படத்தையும் இயக்குகிறார் என்பதே. ஆனாலும், அவரும் கமர்ஷியல் காரணங்களுக்காக, தமிழில் பெரியஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொண்டால் ஜார்ஜ் குட்டியிடம் இருந்த யதார்த்தம் மடிந்துவிடும்.

திரிஷ்யம் என்றில்லை. பொதுவாக, ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதைத் தமிழ் மொழியிலும் எப்படியும் வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று தமிழுக்கேற்ப ஏராளமான மாற்றங்களைச் செய்வதிலேயே இங்குள்ள படைப்பாளிகள் குறியாக இருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் சிதைவதைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. மூலத்தைச் சிதைத்து ஒரு படத்தைத் தமிழில் எடுப்பதற்கு பதில் நேரடியாக ஒரு கமர்சியல் படத்தை எடுத்து பணம் சம்பாதித்துவிட்டுப் போய்விடலாம்…

யாமிருக்க பயமே

ஒரு பேய் படமெனில் அது நம்மை பயமுறுத்த வேண்டும். சரி. அதுவே நம்மை வயிறுகுழுங்க சிரிக்கவும் வைத்தால்? அதுவே ஹாரர் காமெடி எனப்படும் genre. Scary movie series, ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான  Go Goa Gone போன்ற படங்களை  அதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்மூரில் ஹாரர் படங்களே குறைவு. இதில் எங்கிருந்து ஹாரர் காமெடி எடுப்பது !

ஆனால் அப்படி ஒரு படத்தை இப்போது எடுத்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே ஒரு ஹாரர் காமெடி படம்.

yaamirukka-bayamey-Movie-posters-01

ஆரம்ப காட்சிகளில் படம் எந்த லட்சியமும் இன்றி நகர்கிறது. மூல கதைக்குள் நுழைவதற்க்காக நிறைய காட்சிகளை வீணடித்திருக்கிறார்கள். ஆனால் கதைக்குள் நுழைந்ததும்,  படம் ஆரவாரமாக நகர்கிறது. முதல் பாதி எப்படி இருந்தாலும், இரண்டாவது பாதி எங்கேஜிங்காக இருந்தால் பார்வையாளர்களை கவரந்து விடலாம் என்பதற்கு இந்த படம் மற்றொரு உதாரணம்.

கதாநாயகன் கிரணின் தந்தை இறக்கும் போது ஒரு பெரிய வீட்டை அவனுக்கு  எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அவனும் நாயகியும் அதை புதுபித்து ஹோட்டலாக மாற்றுகின்றனர். அந்த ஹோட்டலில் மேனஜாராக வேலை சேர்கிறான் சரத். அவனுடைய தங்கையும் அந்த ஓட்டலில் சேர்ந்து கொள்கிறாள்.  ஹோட்டலில் தங்க வரும் ஒவ்வொருவரும் இறக்கின்றனர்.  பின் தான் தெரிய வருகிறது ஹோட்டலுக்குள் பேய் இருக்கிறதென்று.  பேயிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

மேனேஜராக நடித்திருக்கும் கருணாகரன் அதிக கவனத்தை ஈர்க்கிறார். நாயகன் கிருஷ்ணா சில படங்களில் தரமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சில படங்களில், ஆர்யா போல், மெத்தனமாக நடிக்கிறார். இந்த படத்திலும் அப்படி தான். சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார், சில காட்சிகளில், சேட்டை பட ஆர்யா போல் ஏதோ பேச வேண்டுமே என்று வசனம் பேசி நடிக்கிறார். எனினும் காட்சிகள் பார்வையாளர்களை கட்டி போதும் வகையிலேயே இருக்கின்றன.

திகில் காட்சிகளை பார்த்தால் பயப்பட வேண்டுமே! ஆனால் சிரிப்பு வருகிறது. அந்த காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கவே இயக்குனர் முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.  சிரித்து கொண்டே இருக்கும் போது, யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் பயமுறுத்துகிறார்கள். அதுவே படத்தின் வெற்றி. தமிழில் முதன்முதலில் ஹாரர் காமெடி படமொன்றை வெற்றிகரமாக எடுத்த இயக்குனரை பாராட்டிட வேண்டும். ஏராளமான இடங்களில் டைரக்டர் டச் இருக்கிறது.  அதற்கும் பாராட்டுக்கள்.

ஹாரர் படங்களில் மிக முக்கியமானதொரு விஷயம்  camera movement.  ஒரு காட்சியில், பேயை காண்பித்து பார்வையாளர்களை பயமடைய செய்ய வேண்டுமெனில், அந்த காட்சியில் கேமராவும், பார்வையாளர்களும், கதாபாத்திரங்களும் ஒரே நேரத்தில் பேயை பார்க்க வேண்டும். இந்த டைமிங் கொஞ்சம் பிசகினாலும் திகிலுணர்வு ஏற்படாது. ஆனால் இங்கே, சில இடங்களில் ஒளிப்பதிவு சறுக்குகிறது. ஆங்காங்கே படத்தொகுப்பும் சறுக்குகிறது. மேலும் இரட்டை அர்த்த வசனங்கள் பல இடங்களில் எடுபடவில்லை. S.J. சூர்யாவிற்கு பின்  இரட்டை அர்த்த வசனங்களை கட்சிதமாக பயன்படுத்தும் இயக்குனர்கள் நம் சினிமாவில் இல்லை. படம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில், பாடலை வைத்து படத்தை பிடித்து நிறுத்துகிறார்கள். பாடல்களின்றி படம் எடுக்கும் காலம் வந்துவிட்டது என்பதை இயக்குனர்கள் புரிந்து கொள்ளவேண்டும். படத்தில், இத்தகைய குறைகள் இருந்தாலும், நிறைகளே மேலோங்கி நிற்கின்றன.

படத்திற்கு கொஞ்சம் ஆங்கில, தாய்லாந்து, கொரிய படங்களின் இன்ஸ்பிரேஷன் இருக்கிறது.  conjuring பட தீமும் படத்தில் இழையோடுகிறது. எனினும் தமிழ் சினிமாவிற்கு இது புதிய வகை படம். ரசித்து பார்க்கலாம். பார்க்க வேண்டிய படம்.

தி குட் ரோடும் ஆஸ்காரும்

1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு.

தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க தொடங்கிவிட்டது. கடந்த இருபத்தைந்து வருடங்களில் குஜராத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு படமும் எடுக்கப்படவில்லை. ஆனால் குட் ரோட் படம் சிறந்த பிராந்திய மொழி திரைப்படத்திற்கான தேசிய விருதை அண்மையில் பெற்றது. இப்போது ஆஸ்காருக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் இந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க பலரின் வரவேற்பை பெற்ற லஞ்ச்பாக்ஸ் என்ற இந்தி திரைப்படத்தை விடுத்து, இந்த படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்துவிட்டதால் பலரும் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் முடிவை விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இப்படி பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றிருக்கும் இந்த படத்தின் கதை தான் என்ன?

டேவிட்-கிரண் தம்பதியர் மும்பையிலிருந்து சுற்றுலாவிற்காக கட்ச் வருகின்றனர். நெடுஞ்சாலை பயணத்தின் போது தங்களின் ஏழு வயது சிறுவன் ஆதித்யாவை தொலைத்துவிடுகின்றனர். தம்பதியர் இருவரும் சிறுவனை தேட, தொலைந்த அந்த சிறுவன் டிரக் ஓட்டுனர் பப்புவிடம் கிடைக்கிறான். பப்புவும் அவனது சகாக்களும் சேர்ந்து காப்பீட்டு பணத்திற்காக டிரக்கை மலையிலிருந்து தள்ளிவிட்டுவிட்டு, போலியானதொரு விபத்தை சித்தரித்து, காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றி பணம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். இடற்கிடையில் தன் பாட்டி வீட்டிற்கு பயணிக்கும் பூனம் என்கிற சிறுமியும் அந்த நெடுஞ்சாலையில் வழிதெரியாமல் ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொள்கிறாள். இறுதியில் இந்த மூன்று கதைகளும் எப்படி இணைகின்றன என்பதே படத்தின் மீதிக் கதை.

சக மனிதர்கள் மீது அன்புசெலுத்துவதை பற்றி இந்த படம் பேசுகிறது. பப்பு சட்டவிரோதமாக சம்பாதிக்க முயன்றாலும், அவனிடம் இருக்கும் மனிததன்மை அவனை ஆதித்யாவிடம் அன்புகாட்ட வைக்கிறது. அதே போல் விபச்சார விடுதியில் இருப்பவர்கள் பூனத்தை அன்பாக பார்த்துகொள்கிறார்கள். இது போல், படமுழுக்க மனித நேயம் விரவி கிடக்கிறது. படத்தின் கதை முழுக்க கட்ச் பகுதியில், ஒரு நெடுஞ்சாலையில் நடக்கிறது.

மல்டிலேயர் நரேட்டிவ் எனப்படும் திரைக்கதை உத்தியை பயன்படுத்தி கதையை சொல்லியிருக்கிறார்கள். இந்த உத்தியில், வெவ்வேறு பின்னணி கொண்ட கதாப்பாத்திரங்கள் கதையின் ஒரு மையப்புள்ளியில் இணைவார்கள். இங்கே மூன்று கதைகளும் இணையும் அந்த புள்ளி ஆழமாக இல்லை என்பதே பெரிய குறை. மேலும் மூன்று கதைகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. சிறுமி பூனத்தின் கதை மிகவும் மேலோட்டமாக அமைந்திருப்பதால், அதில் வரும் கதைமாந்தார்கள் நம் மனதில் பதியாமால் போய்விடுகின்றனர்.

இந்த படத்தை எழுதி இயக்கியிருப்பவர் புதுமுக இயக்குனர் கியான் கொரீயா. முதல் படத்திலேயே சிறந்த இயக்குனர் என்ற அங்கீகாரத்தை பெற்றுவிட்டார். திரைக்கதையிலும் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருந்தால், திரைக்கதையில் இடையிடையே தொய்வு ஏற்படாமல் தவிர்த்து இருக்கலாம். படத்திற்கு மிக பெரிய பலம் ஒளிப்பதிவு. நெடுஞ்சாலையையும் கட்ச் பகுதியின் வறண்ட பூமியையும் எந்த செயற்கை தனமுமின்றி அப்படியே படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அமிதாப் சிங். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தின் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றி இருப்பது படத்திற்கு இன்னொரு பலம்.

மேலும் படத்தில் தொழில்முறை நடிகர்கள் அதிகம் இல்லை. சாமானிய மனிதர்களை நடிக்க வைத்து படத்தை மிகவும் யதார்த்தமாக உருவாக்கி இருக்கின்றனர். ஆடம்பரமான பின்னணி இசையை தவிர்த்து, கிராமிய பாடல்களை பின்னனியில் பயன்படுத்தியிருப்பது படத்திற்கு புதியதொரு வடிவத்தை தருகிறது. அழிந்துவிட்ட குஜராத் திரைத்துறைக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி இருக்கும் இயக்குனரை பாராட்டிட வேண்டும்.

படம் என்னதான் சிறப்பாக இருந்தாலும் இதைவிட பன்மடங்கு சிறப்பாக இருக்கும் லஞ்ச்பாக்ஸ் படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கலாம் என்று ஒருசாரார் ஆதங்கப்படுகின்றனர். லஞ்ச்பாக்ஸ் படத்தின் கதைகளம் குட் ரோடிலிருந்து மாறுபட்டிருந்தாலும், அந்த படமும் சக மனிதர்களை நேசிப்பதை பற்றிதான் பேசுகிறது. லஞ்ச்பாக்ஸ் படத்தில் இருந்த முழுமை குட்ரோடில் இல்லை என்பதே உண்மை. அதே சமயத்தில், இந்தி படங்கள் மட்டுமே இந்திய படங்களன்று, மற்ற மொழி படங்களையும் ஆதரிக்க வேண்டும். அதனால் குட் ரோட் படத்தை தேர்வு செய்திருப்பது சரியான முடிவே என்று இன்னொருசாரார் வாதிடுகின்றனர். எது எப்படியோ, ஒரு படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கபட்டுவிட்டதால் மட்டுமே அந்த படம் இறுதி சுற்றுக்கு தேர்வாகிவிடாது. படத்தை அமெரிக்க விநியோகஸ்தர்களுக்கு விற்கவேண்டும். அமெரிக்க விமர்சகர்களிடமும், பத்திரிக்கைகளிடமும் படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். படத்தை அமெரிக்காவில் பிரபல படுத்த வேண்டும். இதை ஆஸ்கர் லாபியிங்க் என்று அழைப்பார்கள். பின் அந்த படத்தை இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யலாமா வேண்டாமா என்ற முடிவை ஆஸ்கார் குழுவினர்தான் எடுப்பார்கள்.

1957-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஆஸ்கார் விருதிற்கு இந்தியாவிலிருந்து 46 படங்கள் அனுப்பப் பட்டிருக்கின்றன. ஆனால் வெறும் மூன்று படங்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. அதனால் தி குட் ரோட் திரைப்படம் ஆஸ்கார் பந்தயத்தில் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

யே ஜவானி ஹே தீவானி

இந்திய சினிமாவில் காதல் கதைகளுக்கு பஞ்சமில்லை. நாயகனும் நாயகி சந்தித்து, காதலிக்கலாமா வேண்டாமா என யோசித்து, பின் காதல் செய்வதுதான் இந்திய படங்களின் வழக்கமான திரைக்கதை. அந்தவகையில், யே ஜவானி ஹே தீவானி எந்த வகையில் மாறுபட்டிருகிறது என்று பார்க்கலாம்.

கபீர் (ரன்பீர் கபூர்), அவி (ஆதித்யா ராய் கபுர்), அதித்தி (கல்கி கோய்ச்லின்) ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்கள். விடுமுறையை கழிக்க மணாலி செல்லலாம் என முடிவெடுகின்றனர். இவர்கள் பயணத்தில் வந்து இணைகிறார் நைனா (தீபிகா படுகோனே). நைனா மருத்துவ கல்லூரி மாணவி. மிகுந்த கட்டுபாட்டுடன் வளர்க்கப் பட்டவள். எந்நேரமும் படிப்புதான். சுற்றுலா சென்ற இடத்தில் கூட படிக்கும் அளவுக்கு, அவள் ஒரு படிப்பாளி. ஆனால் வாழ்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்கிறவன் கபீர். எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாதவன். யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிகொள்ள விரும்பாதவன். உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்ற ஆசைகொண்டவன். காதல், திருமணம் போன்றவற்றில் அவனுக்கு துளியும் ஆர்வமில்லை. அவன் நைனாவிற்கு, வாழ்கையை ரசிக்க சொல்லிக் கொடுக்கிறான். வாழ்வின் ஆழகான தருணங்களை கொண்டாட கற்றுத் தருகிறான். அவனின், தூய்மையான குணத்தை கண்டு அவனிடம் தன் உள்ளத்தை பறிகொடுக்கிறாள் நைனா. காதலை சொல்லலாம் என அவள் முடிவு செய்யும்போது, கபீர் மேற்படிபிற்காக வெளிநாடு செல்கிறான். வருடங்கள் உருண்டோடுகின்றன. நைனா டாக்டர் ஆகிறாள். கபீர் வெளிநாட்டில், தொலைகாட்சியில் ஒளிபதிவாளராகிறான். எட்டு வருடங்களுக்கு பின், அதித்தியின் திருமணத்தில், அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். இப்போது, கபீருக்கு நைனாவின் மீது காதல் மலர்கிறது. ஆனால் சந்தர்ப்பங்கள் அவர்களை மீண்டும் பிரித்து வைக்கிறது. இறுதியில் அவர்கள் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.

ஒருவகையில், படத்தின் கதை என்னமோ சம்ப்ரதாயமான காதல் கதைதான். ஆனால் திரைக்கதை தொய்வின்றி நகர்வாதால் சலிப்பு தட்டவில்லை. மேலும் படத்தில் பல திறமையான நடிகர்கள் நடித்திருப்பதால் படம் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. படத்தின் கதாநாயகனான ரன்பீர் கபூர், தன் மீதிருக்கும் சாக்லேட் கதாநாயகன் முத்திரையை உடைக்க விரும்பவில்லை போலும். அதனால் தான் இந்த படத்திலும் ஜாலியான கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருக்கிறார். எப்போதும் தன்னை பற்றி மட்டுமே கவலைப்படும் சுயநலமிக்க கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் தீபிகா படுகோனே. எப்போதும் தயக்கத்துடனேயே வலம்வரும் கதாபாத்திரம் இவருடையது. தீபிகா தன் முந்தைய படங்களை விட மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். உண்மையில் இவர் சிறப்பாக நடித்த முதல் படம் இதுதான் என்று கூட சொல்லலாம். இவரைப் போல் சிறப்பாக நடித்திருக்கும் இன்னொரு நடிகை கல்கி கோய்ச்லின். இவர்களை தவிர படத்தில் பெரிய ஸ்டார் பட்டாளமே உண்டு. அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். கபீரின், பொறுப்பான-அமைதியான தந்தையாக வாழ்ந்திருக்கிறார் பரூக் ஷேக். அவரை போன்ற சிறந்த நடிகரை இன்னும் சரிவர பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.

படத்தை எழுதி இயக்கியிருப்பவர். அயன் முகர்ஜி. இவர் தன் முந்தைய படமான, ‘வேக் அப் சித்’யிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் மிகப் பெரிய பலம், வசனம். இந்த படத்தை ஒரு பீல் குட் படமாக உருவாக்கியதில், வசனத்திற்கு முக்கிய பங்குண்டு. படத்தை திறம்பட ஒளிப்பதிவு செய்திருப்பவர் மணிகண்டன். படத்தில் இடம்பெறும் பிரம்மாண்டமான திருமண கொண்டாட்டங்களையும், குழுமையான காஷ்மீரையும் இவரது கேமரா அழகாக படம்பிடித்திருக்கிறது.

படத்தை தயாரித்தவர் கரன் ஜோகர் என்பதாலோ என்னவோ படத்தில் கரன் ஜோஹரின் முத்திரைகள் நிறைய இருக்கின்றன. பிரம்மாண்டமான நடனக்காட்சிகள், துள்ளலான பாடல்கள் என் கரன் ஜோஹர் படங்களுக்கே உரித்தான மசாலா காட்சிகள் படத்தில் நிறைய உள்ளன. அதனால் அயன் முகர்ஜியின் ஸ்டைல் இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்பவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

இளைஞர்களைப் பற்றிய கதை எனினும், படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. மேலும், காதல் காட்சிகளை விட, கபீரும் அவனது நண்பர்களும் அடிக்கும் லூட்டிகள் அதிக சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கிறது. இறுதியில், படம் சொல்லும் கருத்து, உங்கள் வாழ்கையை உங்களுக்கு பிடித்தமாதிரி வாழுங்கள் என்பதே. மொத்தத்தில் இது ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம். படத்தின் நீளத்தையும் சற்று குறைத்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

 

கடல்

உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல….

உதிரிப்பூக்கள் ‘விஜயன்’,  Cape fear ‘Robert De Niro’ ,  கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை…

உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் தனித்து நிற்கிறார். அவருடன் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார் அரவிந்த்சாமி. வருங்கால தமிழ் சினிமாவிற்கு இரண்டு திறமையான நடிகர்கள் கிடைத்துவிட்டனர்…

kadal

நன்மையையும் தீமைக்கும் நடக்கும் போராட்டமே கடல். அதை ஒரு அழகான நாவல் வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள். கதை நகரும் பாணி நாவல் வடிவத்தில் இருப்பதன் விளைவு, பலர் இதை Slow-Screenplay என்கிறார்கள்.

ஒரு கதை வேகமாக நகர்வது கதை மாந்தர்களை பொறுத்தே இருக்கிறது. இதில் வரும் கதை மாந்தர்கள் சாதரணமானவர்கள். அவர்களின் வாழ்க்கை சாதரனமானனவை. அவர்கள் வாழ்கையின் சாதரணமான நிகழ்வுகளே இப்படத்தின் திரைக்கதை. ஆனால் கதைக்கு தேவையுடைய காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு, ஒவ்வொன்றும் Distinct-ஆன காட்சிகள். அதனால் இதை சோடை போன திரைக்கதை என்பது உசிதமன்று. திரைக்கதை கதைக்கானது, அதை இப்படத்தில் சரியாகவே செய்திருக்கின்றனர்.

ஒரே நெருடல், வழக்கமான தமிழ் படங்களை போல் கதாநாயகியை பாடலுக்காக மட்டும் பயன் படுத்திவிட்டனர். முக்கியமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கவேண்டிய கதாநாயகி கதாப்பாத்திரம், சற்று அழுத்தமற்று போய்விட்டது…

இது ஒரு வித்தியாசமான கதை இல்லைதான். ஆனால் இப்படத்தில் இழையோடும் உட்கருத்துக்களும், இதில் நடித்தவர்களின் திறமையான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து செவ்வன நடித்திருக்கின்றனர்..

ஒருவன் நல்லவனாகே இருக்க முயன்று தோற்கிறான். ஒருவன் தீயவானாக் இருந்துக் கொண்டு தான் ஜெயித்து விட்டதாக எண்ணிக்கொள்கிறான். நல்லவனாக இருப்பதா, கெட்டவனாக இருப்பதா என குழம்பும் ஒருவன் காலம் ஏற்ப்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை நம்பிக்கையுடன் இறுகப் பற்றிக்கொண்டு பக்குவமடைகிறான். இங்கு நம்பிக்கையே உண்மையான கதாநாயகன். இதுவே கடல் படத்தின் சாராம்சம்..

Director touch ஒரு புறம் இருக்க Writer’s touch இந்த படத்தில் நிறைய உண்டு. கதாப்பாத்திரங்களை சிறப்பாக வார்த்தெடுத்த பெருமை, கதாசிரியரையே சேரும். காட்சியை கவித்துவமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒவ்வொரு கோணமும் ஒரு கலைப்படைப்பாக அமைந்துள்ளது. அதற்க்கு பலம் சேர்த்துள்ளது ஆரவாரமற்ற பின்னணி இசை. மணிரத்னத்தின் டச் இந்த படத்தில் இல்லை என்கிறார்கள். நாயகன், அக்னி நட்சத்திரம், பாம்பே போன்ற படங்களை எடுத்த மணிரத்னத்தை இதில் தேடினால் அவர் கிடைக்கமாட்டார். இந்த கதைக்கு அவர் தேவைப்படவில்லை. புதிய முயற்சிகளை செய்ய வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை, அதை அவர் செய்திருக்கிறார். இதில் இலக்கியத்தை திரையில் இலக்கியமாகவே கொணர மணி முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மற்றப்படி மணிரத்னம் படங்களுக்கே உரித்தான வண்ணங்கள், துண்டு வசனங்கள் இந்த படத்திலும் உண்டு. தன் மற்றப் படங்களை போல் இதிலும் தான் சொல்ல வந்ததை சுருங்க-விளங்க சொல்லியிருக்கிறார்.

கடல் ஒரு தரமான பொழுதுபோக்கு படம். மணிரத்தினம் என்ற கலைஞனின் மீது மிரட்சியும்  எதிர்ப்பார்ப்பும் வைத்துக் கொண்டு ‘கடல்’ படத்திற்கு போனால் நிச்சயம் கடல் ஆழமற்று தோன்றலாம்.  எந்த எதிர்பார்ப்புமின்றி பார்ப்போர்க்கு, கடல் ஒரு அழகான நாவலாக தோன்றும்.வெறும் ‘Racy Entertainer’  எதிர்பார்போர்க்கு பிடிப்பதற்கு வாய்ப்பில்லை..

பர்ஃபி

எதிர்பார்ப்புகள் ஏமாற்றமளிக்கும் என்பதற்கிணங்க, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் சில படங்கள் மட்டுமே எதிர்பார்த்ததைவிட பல மடங்கு சிறந்ததாக அமைந்து கால புத்தகத்தில் தனக்கென்று ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொள்ளும்.அவ்வாறான ஒரு படமே ‘பர்ஃபி’.
இந்த படத்தின் ட்ரைலரே பல வகையான எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்க, கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த பிரியங்கா சோப்ரா மனநலம் குன்றிய பெண்ணாக நடித்திருக்கிறார், டார்க் (Dark) கதைகளை மட்டுமே படமாக்கிக் கொண்டிருந்த அனுராக் பாசு முதல் முதலாக ஒரு ‘ஃபீல் குட்’ (feel good ) படத்தை எடுத்திருக்கிறார் என்பன போன்ற பல விடயங்கள் ட்ரைலரில் தெளிவாக தெரிந்தது.
அதே சமயத்தில் பிரெஞ்சு திரைப்படமான அமிலியின்(Amelie) பின்னணி இசையை அப்பட்டமாக ‘பர்ஃபி’’ ட்ரைலரில் உபயோகித்திருப்பதையும், அமிலியை போல் ‘கலர் கிரேடிங்’’ (Color Grading) செய்யப்பட்டிருப்பதையும் கண்டதும் ஒருவேலை அந்த பிரெஞ்சு படத்தைதான் ரீமேக் செய்துவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. எல்லாக் சந்தேகங்களுக்கும் தனக்கே உரித்தான பாணியில் விடை சொல்லி இதயத்தை வருடுகிறான் ‘பர்ஃபி’’.
டார்ஜிலிங்கில் வசிக்கும் ஏழை மாற்றுத்திறனாளி பர்ஃபி. வாய் பேச காது கேட்க இயலாதவர். அவ்வூரிற்க்கு குடி பெயரும் வசதி படைத்த குடும்பத்தைச் சார்ந்த பெண்ணான ஸ்ருதிக்கும் பர்ஃபிக்கும் காதல் மலர்கிறது. ஸ்ருதி ஏற்கனவே திருமணம் நிச்சயமானவரெனினும் பர்ஃபியின் குணாதிசயங்களை கண்டு தன் மனதை பர்ஃபியிடம் பறிக்கொடுக்கிறார். வழக்கமாக எல்லாக் காதலுக்கும் தடையாக நிற்கும் அந்தஸ்த்து இவர்கள் காதலுக்கும் பெரும் தடையாக வந்து நிற்க, ஸ்ருதி தனக்கு நிச்சயிக்கப் பட்டவரையே திருமணம் செய்துக் கொண்டு கொல்கத்தா சென்று விடுகிறார்.
கிட்டத்தட்ட ஐந்தரை வருடங்கள் உருண்டோடுகிறது.தன் தந்தையின் சிகிச்சைக்காக பர்ஃபிக்கு அவசரமாக பணம் தேவைப்பட, ஊரின் பெருந்தனக்காரரின் பேத்தியான ஜில்மில்லை கடத்தி பணம் பறிக்க முடிவுசெய்கிறார். மன நலம் குன்றிய ஜில்மில்லை முயன்று கடத்தி பணம் பறித்தும் விடுகிறார் பர்ஃபி. சிறு வயதிலிருந்து ஆஷ்ரமத்தில் வளர்ந்த ஜில்மில்லிற்கு பர்ஃபியை பிடித்துவிடவே, மீண்டும் வீட்டிற்கு செல்ல மறுக்கிறார். இதற்கிடையில் வங்கி ஒன்றை கொள்ளை அடிக்க முயன்ற வழக்கிலும், ஜில்மில்லை கடத்திய வழக்கிலும் பர்ஃபியை போலீஸ் துரத்துகிறது. போலீசிடம் இருந்து தப்பி ஜில்மில்லையும் அழைத்து கொண்டு பல இடங்களுக்கு பயணிக்கிறார் பர்ஃபி. எல்லார் மனதையும் கொள்ளைக் கொள்ளும் தூய்மையான உள்ளம் கொண்ட பர்ஃபி ஜில்மில்லின் உள்ளத்தையும் கொள்ளை கொள்வதில் ஆச்சர்யமொன்றுமில்லை .இறுதியில் கொல்கத்தாவில் குடியேறும் பர்ஃபி தன் முன்னால் காதலி ஸ்ருதியை சந்திக்கிறார். பர்ஃபியிடம் கொண்ட ஊடலின் காரணமாக ஜில்மில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கொல்கத்தாவை விட்டு வெளியேறுகிறார். பின் பர்ஃபியும் ஸ்ருதியும் ஜில்மில்லை தேடுகிறார்கள். தேடல் பயணத்தின் போது, தான் இன்னும் பர்ஃபியை காதலித்துக் கொண்டிருப்பதை உணர்கிறார் ஸ்ருதி. இறுதியில் யார் யாரோடு இணைகிறார்கள் என்பதோடு முடிகிறது கதை.
இது எந்த அந்நிய மூலத்தையும் தழுவாத ஒரு சிம்பிளான கதை.’குறைவான வசனங்கள், நிறைவான காட்சிகள்’’ என்ற அடிப்படை திரைக்கதை விதியை பின்பற்றி எழுதப்பெற்ற திரைக்கதை. படத்தில் வசங்கள் மிகக் குறைவு. காட்சிகளாலே படத்தை நகர்த்தி தான் ஒரு தேர்ந்த கதைச்சொல்லி என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார் அனுராக் பாசு. ஆனால் தேவையில்லாமல் ‘நான்-லினியர்’(NonNon-Linear) உத்தியை பயன்படுத்தி பார்வையாளர்களை குழப்பியிருக்கின்றனர். ஸ்ருதி பர்ஃபியை விட்டு பிரிந்ததும் கிட்டதட்ட ஆறுவருடம் கழித்து மீண்டும் சந்திப்பதாக அமைந்துள்ளது திரைக்கதை. ஆறு வருடம் எப்படிக் கடந்த்தோடியது என்பதை விவரிக்கவில்லை. கதைக்கு எந்த ஒரு அடிப்படை தேவையுமின்றி ‘ஆறு வருட இடைவெளி’’ என்பதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதும் விளங்கவில்லை. மேலும் திரையில் எந்தக் கதாப்பாத்திரங்களுக்கும் வயதாகவில்லை. இறுதிக் காட்சியில், கதாப்பாத்திரங்களுக்கு வயதானதைக் காட்டுவதற்கு செய்யப்பட்டிருக்கும் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது. சமிபத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆப் வசைப்பூர்’’ படத்திலும் ஒப்பனை மூன்றாம் தரமாகவே அமைந்திருக்கும். பலக்கோடி செலவழித்து எடுக்கப்படும் பாலிவுட் படங்களில் ஒப்பனை மூன்றாம் தரமாக அமைந்துள்ளது ஆச்சர்யமளிக்கிறது.முகம் சுழிக்கவும் வைக்கிறது.
படத்தின் இன்னொரு கதைசொல்லி இசையமைப்பாளர். தன் இசையின் மூலம் புதியதொரு கதை சொல்கிறார் அவர். பல இடங்களில் காட்சிகளை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது இசை. அதே சமயத்தில் படத்தின் தீம் ம்யுசிக் ‘அமிலி’’ படத்திற்காக யான் டீர்சென் (Yann Tiersen) இயற்றிய இசையை நினைவுப் படுத்துகிறது.
பர்ஃபியாக ரன்பீர் கபூர், எந்த ஒரு பெரிய நடிகரின் பாணியையும் பின்பற்றாமல் அசலான நடிப்பால் முத்திரைப் பதிக்கிறார். ஸ்ருதியிடம் தன் காதலை சொல்வதிலும், அவர் திருமணம் நிச்சயமானவர் என்பதையறிந்து சொன்ன காதலை வாபஸ் வாங்குவதிலும் ரன்பீர் வெளிப்படுத்தியிருக்கும் பாவனைகள் தனித்துவம். படம் முழுக்க அவர் வெளிப்படுத்தியிருக்கும் காமிக்கல் (comical) உடல்மொழி படம் முடிந்தபின்னும் நினைவிலிருந்து நீங்க மறுக்கிறது. ஜில்மிலாக பிரியங்கா சோப்ராவும் , ஸ்ருதியாக இலியானாவும் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். பிரியங்கா அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். முன்னால் உலக அழகியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் துளிக் கூட எழாத அளவிற்கு பிரியங்காவின் நடிப்பு ஒரு மனவளர்ச்சி குன்றிய பெண்ணை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அதற்க்கு அவரின் உடையமைப்பும் பெரிதும் உதவியுள்ளது.
என்னதான் கதாபாத்திரங்கள் ஒழுங்காக நடித்தாலும் அவர்களின் பாவனைகளை ஒழுங்காக படம்பிடிப்பது மிகமுக்கியமான பணி. அவ்வகையில் பர்ஃபி படத்திற்கு தன் ஒளிப்பதிவின்மூலம் உயிரூட்டியிருப்பவர், ஒரு தமிழர், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். படமுழுக்க நிரம்பிக் கிடக்கின்றன வண்ணங்கள். அந்த வண்ணங்களை வண்ணமயமாக படம் பிடித்திருக்கிறது அவரது கேமரா. அதை திரைப்பட தொகுத்த படத்தொகுப்பாளரையும் பாராட்டிட வேண்டும்.
இந்த படத்தில் செய்யப் பட்டிருக்கும் தனித்துவமான ‘கலர்கிரேடிங்’ இதுவரை எந்த இந்தியப் படத்திலும் செய்யப்பட்டதில்லை. அதுவே காட்சிகளுக்கு மேலும் மெருகேற்றியிருக்கிறது.ஒட்டுமொத்த படக் குழுவும் கடினமாக உழைத்திருப்பது திரையில் தெரியும்.
படத்தில் நிறைகள் நிறைய இருந்தாலும். திருஷ்டி வைத்தாற்போல் படத்தின் குறையாக நம் மனதை நெருடுவது அசல்தன்மையற்ற சிலக் காட்சிகள்.கருப்பு வெள்ளையில் கண்ட சார்லி சாப்லின் படங்களை கலரில் காண்கிறோமா என்று எண்ணும் அளவிற்கு பல சாப்ளின் படக்காட்சிகள் இப்படத்தில் உபயோகியப் பட்டிருக்கின்றன.. மேலும் நோட் புக் (Note Book) , கிக்குஜிரோ (Kikujiro) ,சிங்கிங் இன் தி ரெயின் (Singing in the Rain ) போன்ற பல உலக படங்களில் இருந்து காட்சிகள் தழுவப்பட்டிருக்கின்றன.
இதையெல்லாம் மீறி பர்ஃபி தனித்து நிற்கிறான்.காரணம், மாற்றுத் திறனாளிகளைப் பற்றி எடுக்கப் பட்ட அனைத்து படங்களும் அவர்கள் மீது பரிதாபம் விளைவிப்பதையே அடிப்படை நோக்காக கொண்டு எடுக்கப் பட்டிருக்கும்.ஆனால் பர்ஃபி பரிதாபத்தை ஏற்ப்படுத்தவில்லை. பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றான்.
இந்திய சினிமாவை பொறுத்தவரையில் ‘ஃபீல் குட்’’ படங்கள் மிக மிக குறைவு. அதுவும் மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையில் பொதிந்திருக்கும்
சிறுசிறு சந்தோசங்களை மையப்படுத்தி இதுவரை யாரும் படம் எடுக்க முயற்சித்ததில்லை. அவ்வகையில் பர்ஃபி ஒரு புது முயற்சி. அதற்காகவே பர்ஃபி பாராட்டுதலுக்குரிய திரைப்படமாகிறது. வாழ்வில் ஒளிந்திருக்கும் குறைகளை மறந்து, வாழ்வை அழகாக வாழ்வதைப் பற்றி பேசும் ‘பர்ஃபி’’சுவையானவன்…

மாற்றான்

சில படங்கள் முதல் காட்சியிலிருந்தே மெதுவாக நகர்ந்து, இது நல்லப் படம்தானா என்பன போன்ற சந்தேங்களை ஏற்படுத்தி, இறுதியில் சிகரம் வைத்தாற்போல் அருமையாக நிறைவுபெற்று, படமென்றால் இதுதான் படமென்று நம்மை சொல்லச் செய்து, நம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கும்.

சில படங்கள் தொடக்கம் முதலே நல்லப் படம் போல காட்சியளித்து, தனக்கே உரித்தான ஜிகுணா வேலைகளையெல்லாம் செய்துக் கொண்டு, இறுதியில் ‘இதெல்லாம் ஒரு படமா’ என்று எண்ண வைக்கும். ‘மாற்றான்’ இதில் இரண்டாவது வகை.

ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றி படம் எடுக்க முயற்ச்சித்தமைக்கும், (ஆனால் அந்த முயற்சி மன்னைகவ்வியுள்ளது.) அதற்காக இந்த ஹீரோ மெனக்கெட்டமைக்கும் பாராட்டுக்கள்…

ஆனால் ஓட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற கதை கருவிற்கும், இந்தக் கதை களத்திற்கும் சம்பந்தமேயில்லை. படத்தின் கதை என்னவோ typical தமிழ் டபுள் ஆக்சன் மசாலா படத்தின் கதைதான். ஆனால் டபுள் ஆக்சன் படமாக எடுத்தால் ‘கெத்’ இருக்காது என்பதற்காக, வித்தியாசமான முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு கேலி சித்திரத்தை படைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் டபுள் ஆக்சன் கதைகள் பின்வரும் மாதிரிதான் இருக்கும். ஒரு ஹீரோ சாது, இன்னொருவர்  முரடன். வில்லனை எதிர்த்து முதலில் ஒருவர் போராடுவார், பின் தவிர்க்கமுடியாத ஒரு தருணத்தில் அந்த கடமை இரண்டாமானவரை வந்து சேரும். அந்த இரண்டு ஹீரோக்களையும் ஒன்றாக ஒரே உடம்பில் இணைத்து, ‘conjoined twins’ என்ற போர்வையில்  எடுக்கப்பட்ட படமே மாற்றான்.

அந்தக் காலத்தில் டபுள் ஆக்சன் படங்கள் எடுப்பதற்கென்றே ஒரு டெக்னிக் இருந்தது. கேமராவை நடுவில் வைத்து, வலது புறத்தில் ஹீரோவை நடிக்க வைத்து படம்பிடித்து , பின் அதே ஹீரோவை இடது புறத்தில் நடிக்க வைத்து படம்பிடித்து இறுதியில் இரண்டையும் இணைப்பார்கள். அதனால்தான் டபுள் ஆக்சன் கதாப்பாத்திரங்கள் தோன்றும் காட்சிகளில், இருவருக்கும் நடுவில் ஒரு தூணோ, இல்லை ஏதோ ஒரு symmetric பொருளோ இருக்கும். அந்த symmetric பொருளை axis-ஆக வைத்துக் கொண்டு, ஒரே ஹீரோ இரண்டு புறத்திலும் நடித்திருப்பார். என்ன ஆனாலும் கதாப்பாத்திரங்கள் அந்த axis-ஐ தாண்டக் கூடாது..

பின் இந்தக் கோட்பாடுகளையெல்லாம் தகர்த்து, பல டெக்னாலஜிகளை பயன்படுத்தி, மிகவும் திறமையாக எடுக்கப்பெற்ற டபுள் அக்சன் படமே ‘ஜீன்ஸ்’. இரட்டையர்களை படம் முழுக்க எந்த ஒரு பிசிரும் இல்லாமல் உலவ விட்டிருப்பார் ஷங்கர். அதன் பின் நிறைய டபுள் அக்சன், ட்ரிபிள் அக்சன் தொடங்கி பத்து அக்சன் வரை படங்கள் எடுத்தாகி விட்டது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் ‘conjoined twins’ படம் எடுக்கலாம் என்று சிந்தித்துள்ளனர். ஆனால் அதை ஒழுங்காக எடுக்கவில்லை…

பல பொய்களை திரும்ப சொல்லி உண்மையாக முயற்சிக்கும், தமிழ் சினிமாவில் ‘முதல் முயற்சி முதல் முயற்சி’ என்று அரைக் கூவல் விடுத்து படங்களை promote செய்வது ஒரு தந்திரம்.மும்பை எக்ஸ்பிரஸ் ‘முதல் high definition படம்’ என்று பிரகடனம் செய்தார்கள். ஆனால் அதற்க்கு முன்பே ‘வானம் வசப்படும்’ என்ற படம் high definition-யில் எடுக்கப்பட்டுவிட்டது.

அதுபோல் தான் இதுவும். இந்தியாவின் முதல் ‘conjoined twins’ படம் என்றார்கள். ஆனால் இரண்டு மாதத்திற்கு முன்பு ‘இருவன்’ என்ற ஒரு படம் வெளிவந்தது. அதுவும் ஓட்டிப் பிறந்த இரட்டையர்களைப் பற்றியக் கதை. பின், ‘performance capture’  டெக்னிக் பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் இந்தியப் படம் ‘மாற்றான்’ என்றார்கள். ஆனால் இதில் பரிதாபத்திற்குரிய விடயம் என்னவெனில், அந்த  ‘Performance capture’  போன்ற எந்த டெக்னிக்கும் படத்திற்கு  கைகொடுக்கவில்லை என்பதுதான். இரட்டையர்கள் வரும் காட்சிகளில் படத்தின் கிராபிக்ஸ் மிகவும் கேவலமாக உள்ளது. ஏதோ ஒரு ஹீரோ இன்னொரு பொம்மை ஹீரோவை தூக்கிக் கொண்டு நடப்பது போல் பல இடங்களில் தோன்றும் .இது ஒரு லோ பட்ஜெட் படமென்றால் அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் பல கோடிகளை இறைத்து குப்பைகளை எடுக்கும் போது தான் யோசிக்க வேண்டியிருக்கிறது, இன்னும் எத்தனை நாள் தான் ஆடியன்ஸை மாக்கான் ஆக்குவார்கள் என்று…

ஒரு ஆறுதல், இவர்கள் எங்கேயும் science fiction படம், medical fiction படம் என்று பிரகடனப் படுத்தவில்லை. அப்படி செய்திருந்தால் கேலிக் கூத்தாகி இருக்கும்.

‘Conjoined twins’  எப்பவும் பலவீனமாகத்தான் இருப்பார்கள், அவர்கள் எப்படி பறந்து பறந்து சண்டைப் போடுகிறார்கள் என்பன போன்ற ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு இந்த படம் ஒன்றும் சிறந்த படமில்லை. ஆனால் இந்தப் படத்தின் பின்னணியை மட்டும் பார்ப்போம்…

தமிழ் படைப்புலகில் மட்டுமே இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இருக்கும் இடைவெளி குறைய மறுக்கிறது. இலக்கியவாதிகள் சினிமாவிற்கு வந்தால் இலக்கியத்தை மறந்துவிடுகிறார்கள். இதற்கிடையில் பாக்கெட் நாவலாசிரியர்கள் பாக்கெட் நாவல்களைப்போல் மூன்றாம் தரத்தில் சினிமாவிற்கு கதை எழுதுகிறார்கள்.
‘சுபா’ என்ற இந்த இரட்டை எழுத்தாளர்கள் திறமைசாலிகளே. இந்தப் படத்திலும் அவர்களின் வசனம் தான் முதல் பகுதிக்கு சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. ஆனால் எந்தப் படைப்பாளியாக இருந்தாலும் தன் அறிவை update செய்துக் கொள்ள வேண்டும். “Learn, Unlearn, Update “  என்பது மிக முக்கியம்.

பாக்கெட் நாவல்கள் எழுதுபவர்களிலேயே தன் அறிவை அப்டேட் செய்து வைத்திருப்பவர் இந்திரா சௌந்தரராஜன் மட்டுமே. (அவர் வெறும் பாக்கெட் நாவலாசிரியர் அன்று. திறமையான எழுத்தாளர். அதற்கு அவரின்  படைப்புகள் சான்று. எனினும் பாக்கெட் நாவல் உலகத்திலேயே நின்றுவிட்டார்) அந்நியனில் சொல்லப்பட schizophrenia-வை அவர் தொன்னூறுகளிலேயே ‘விடாது கருப்பு’ என்னும் கதையில் சொல்லிவிட்டார். அதில் கருப்பு சாமி தண்டனை கொடுக்கும், அந்நியனில் அந்நியன் தண்டனைக் கொடுப்பான் .அவ்வளவுதான் தான் வித்தியாசம்.

ஆனால் மற்ற பாக்கெட் நாவலாசிரியர்கள அனைவரும் புருடா விட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ‘மூடாத கல்லறை’, ‘சேராத நிலவு’ ‘மூன்றாவது குறுக்கு தெரு’ என்பன போன்ற பேர்களில் ஏதேதோ எழுதிக் குவிக்கிறார்கள். எனக்கு பிடித்த ராஜேஷ் குமார், எழுதிய ஒரு கதையில் , ஒரு கதாநாயகன் பாலைவனத்தில் தரை இறங்கிய ஒரு விமானத்தினுள் தனியாக சென்று டைம் பாம்பை deactivate செய்வார். அதுபோன்ற மூன்றாம் தரமான புருடாக்கள் ‘மாற்றான்’ படத்தில் விடப்பட்டுள்ளது. Genetic Research, Ionization agent இது,அது என்று கதைக்கு சம்பதமில்லாமல் ஏதேதோ வார்த்தைகளை நுழைத்து (எல்லாம் எட்டாம் கிளாஸ் பாட புத்தகத்திலிருந்து எடுத்த வார்த்தைகள்) படம் காட்டியுள்ளனர். பாக்கெட் நாவல்களில் வரும் மொக்கை ட்விஸ்ட்களை படத்தில் வைத்து மொக்கை வாங்கியுள்ளனர்.

சுவாரசியமாக பாக்கெட் நாவல் எழுதிடலாம். ஆனால் சினிமாவில் எழுதும்போது சினிமாவிற்க்கான தரத்தை மெயின்டையின் செய்ய வேண்டும்.திருப்பாச்சியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. கில்லியும் சுவாரஸ்யமான ஆக்சன் படமே. ஆனால் இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு புரிந்திருக்கும். அந்த வித்தியாசம்தான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.

பதினைந்து ரூபாய் பாக்கெட் நாவல் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு சில ஆயிரம் ரூபாயே ராயல்ட்டியாக கிடைக்கும். அவர் குறைந்த தர படைப்புகளை படைப்பதை தாங்கிக் கொள்ளலாம். ஆனால் பல கோடி ருபாய் சம்பளம் வாங்கும் சினிமா இயக்குனர்கள் பாக்கெட் நாவலாசிரியர்கள் போல் மூன்றாம் தர படைப்பை படைப்பதுதான் ஆதங்கம் அளிக்கிறது…

இந்தப் பின்னணியில் தான் இந்தக் கதையை கவினிக்க வேண்டியிருக்கிறது. ஒட்டி பிறந்த கதாநாயகர்களின் தந்தை ஒரு விஞ்ஞானி. அவர் ‘எனெர்ஜியான்’ என்றொரு எனெர்ஜி டிரிங் பவுடரை கண்டுபிடிக்கிறார். அதை உண்ணும் குழந்தைகள் பெரும் திறமைசாலிகளாக வருவார்கள் என்று அவர் பிரகடனப் படுத்தி விற்று பெரும் தொழிலதிபராகிறார். அந்நிலையில் அப்பவுடர் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்துக் கொள்கின்றனர் கதாநாயகர்கள். பின் நடப்பதே படத்தின் கதை. முதல்வனின் வருவது போல் ஒரு சேற்று சண்டை, ஜீன்ஸில் இரட்டையர்கள் ஐஸ்வர்யாராயிடம் செய்யும் காமெடிகளை போல் சில காமெடிகள், அந்நியனில் வரும் கிருமி போஜனம் போல் ஒரு காட்சியில் எலி போஜனம், இந்தியனில் சொந்த மகனையே எதிர்க்கும் தந்தைப்போல் இதில் உல்டாக் காட்சி என பல ஷங்கர் படங்களை மிக்ஸ் செய்து ‘மாற்றான்’ என்ற பெயரில் கொணர்ந்துள்ளனர். இந்த மொக்கை மசாலா படத்திற்கு துணையாக பல மொக்கை scientific term-களை உபயோகப் படுத்தி மொக்கை வாங்கியுள்ளனர்.

கதாநாயகர்களின் தந்தை  உக்ரைனில் Genetically modified மாடுகளை உருவாக்கி, ஆராய்ச்சி செய்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் குடித்தால் ‘extraordinary power’ வருவதாக கண்டுக்கொள்கிறார். நிற்க.

அவரே தமிழகத்தில் தன் பண்ணையில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உக்ரைனிலிருந்து வரவழைக்கப்பட்ட தீவனத்தைக் கொடுத்து, அம்மாடுகளிடமிருந்து கறக்கப் படும் பாலைக் கொண்டு ‘எனெர்ஜியான்’ பவுடரை உருவாகுகிறார்.

ஒரு காட்சியில் ‘Genetic Engineering’  பற்றி பேசுகிறார்கள், இன்னொரு காட்சியில் சம்மந்தமில்லாமல் ஏதோ மாட்டுத்தீவனம் பற்றி பேசுகிறார்கள். அடுத்தக் காட்சியில்
‘Advanced Genetic Engineering’  பேசுவதாக நினைத்துக் கொண்டு பத்து பேரின் மரபணுவை கொண்டு ஒரு உயிரை உருவாக்குவதைப் பற்றி விவரிக்கிறார்கள். படம் முழுக்க இப்படி பல அறிவியல் பெயர்களை அரை குறையாக உதிர்த்து தங்களைத் தாங்களே கேலி செய்துக் கொண்டதோடில்லாமல், இறுதியில் திரு.நரேந்திர மோடியை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு சுரேந்திர லோடி என்ற ஏதோ ஒரு பெயரில் குஜராத் முதல் அமைச்சர் என்ற கதாப்பாத்திரத்தை தேவையில்லாமல் காட்டுகிறார்கள். இதுபோன்று தேவை இல்லாக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.

மேலும் இதில் ஒரு காட்சியில் குஜராத் கிராமவாசிகள் ஹிந்தி பேசுகிறார்கள்.குஜராத் கிராமங்களில் வெறும் குஜராத்தி தான் பேசுவார்கள். ஹிந்தி அன்று. ஹிந்தியோ, குஜராத்தியோ Subtitles போட போவதில்லை என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டதால்தான் என்னவோ இதில் குஜராத்தியர்கள் ஹிந்தி பேசுவது போல் எடுத்துவிட்டார்கள் போலும்.இதையெல்லாம் தாங்கிக் கொள்ளலாம். குஜராத்தியர்களை சித்தரித்திருக்கும் விதம்தான் மிகவும் செயற்கையாக உள்ளது..

சிறு வயதில் கிராப்ட் நோட்டில் எல்லாரும் ஐம்பது பைசா கொடுத்து போஸ்டர் வாங்கி ஒட்டி இருப்போம். பழங்கள், விலங்குகள் என்று வகை வகையான போஸ்டர்கள். அதில் இந்திய மாநில மக்கள் என்று, இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அவர்களின் traditional உடையில் இருப்பது போன்ற ஒரு போஸ்டரையும் ஒட்டியிருப்போம். அதில் ராஜஸ்தானியர்கள் என்றால் தலையில் தலைபாகை அணிந்திருப்பார்கள். அதை அப்படியே காப்பி அடித்து இதில் பயன் படுத்தி விட்டார்களா என்று எண்ணும் அளவிற்கு அந்த ராஜஸ்தானிய உடை அலங்காரத்தை இதில் குஜராத்தியர்களுக்கு செய்திருப்பார்கள். குஜராத்தில் எந்த கிராமத்திலும் அவ்வாறு உடை அணிந்திருக்க மாட்டார்கள்.

மொத்தத்தில் மசாலா படத்தை மசாலாவாக எடுப்பதை விடுத்து, பல புருடாக்களை விட்டு ஒரு கேலி சித்திரத்த்தை உருவாக்கிவிட்டார்கள்.

திறமைசாலிகள் பலர் வாய்ப்பிற்காக போரடிக் கொண்டிருக்க, பல கோடிகள் செலவு செய்து பில்லா 2 , மாற்றான் போன்று மொக்கை படங்களை மீண்டும் மீண்டும் எடுப்பதுதான் வருத்தமளிக்கிறது. இதற்கிடையில் அடுத்து வரப்போகும் அந்த படத்தின் ட்ரைலரே வயிற்றில் புலியை கரைக்கிறது….

சூரியா திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் இந்த மாதிரி படங்கள் நடிப்பதுதான் முகம் சுழிக்க வைக்கிறது. திறமையான ஹீரோக்கள் இயக்குனர்களால் வீணடிக்கப் படுகின்றனரா, இல்லை அவர்களே தங்களை வீணடித்துக் கொண்டு இயக்குனரையும் வீணடித்து விடுகின்றனரா என்பது  தமிழ் சினிமாவை பொறுத்த வரையில், ‘சிதம்பர ரகசியம்’. இவரின் அடுத்தப் படமாவது முழுவேக்காடக வரும் என்று நம்புவோம்..