நான் ஒரு கதைசொல்லி

நான் ஒரு கதை சொல்லி
ஆழ் கடல் பொங்கி
உயிர்களை விழுங்கி
உலகம்  எரிந்து
உறவுகள் பிரிந்து
நாகரிக உலகம்-
பின்நோக்கி சுழன்று
சமகால  மனிதன்
நிர்வாண மனிதனாய்-
மீண்டும் உருமாறி
நரமாமிசம்  தின்று
அக்றிணை உயர்திணை  அனைத்தும்
அழிந்து,வெந்து போனாலும்
எனக்கு மரணமில்லை
ஏனெனில்
நான் ஒரு கதை சொல்லி

காலங்கள்  மாறலாம்
காட்சிகள் மாறலாம்
கதைகள் மாறிடா !
கதை சொல்லியின் புகழ்
அழிந்திடா !

கதைகளே  உலகியலுக்கு
அடிப்படை.
கடவுளர் கதை
காதலர் கதை
யோக கதை
போக கதை
பேய்  கதை
புதையல்  கதை
புனர்ஜென்மக்  கதையென
ஏதோ ஒரு கதை
அன்று தொட்டு இன்று வரை
அழியாமல் தொடர்ந்துகொண்டிருக்க,
அக்கதையை சொல்லிய
கதை சொல்லிகள் அந்த கதைகளோடு
இணைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிரார்கள்…..

நான், என்ற இந்த பயனற்ற வெற்றுடல்
அழிந்து போனாலும்
நான் சொல்லிய கதைகள் அழிந்திடா.
ஆயிரம்  ஆண்டுகள் உருண்டோடினாலும்
எவனோ ஒருவன்  என் கதைகளை
சொல்லிக்கொண்டிருப்பான்
புது மெருகுடன்…

அந்த கதைகளில் ஏதோவொரு உருவில்
நான் வாழ்ந்துகொண்டிருப்பேன்,
பழைய கதை சொல்லிகள்
என் கதைகளில் வாழ்ந்துக்கொண்டிருப்பதைப்   போல…

கடவுளே  அழிந்தாலும்
கதை சொல்லி நான் அழிவதில்லை.
ஏனெனில்
கடவுளை வார்தெடுத்தான் ஒரு
கதை சொல்லி
கதைகளை  சொல்லி.

கடவுளை வளர்தெடுத்தான்   ஒரு
கதை சொல்லி
கதைகளை  சொல்லி.

கடவுளின்  கதைகளை
கட்டுக் கதைகளாக்கிட,
புதுக்கதைகள் தேவை.
அதற்கோர் கதை சொல்லி தேவை.

கட்டுக்கதைகளை வரலாற்றில்
புகுத்திட
தனிக்கதைகள் தேவை.
அதற்கோர் கதை சொல்லி தேவை.

நம்பிக்கையை விதைப்பதற்கும்
கதை சொல்லி தேவை
நம்பிக்கையை உடைப்பதற்கும்
கதை சொல்லி தேவை.

மனிதனை படைத்தவன்
கடவுளெனில்
கடவுளை படைத்தவன்
என்னைப் போல் ஒரு கதை சொல்லி

உலகமே
அழிந்து,வெந்து போனாலும்
எனக்கு மரணமில்லை
ஏனெனில்
நான் ஒரு கதை சொல்லி….

நான் ஒரு ஜடம்

என் தனிமை என்னை கொன்று விட பார்க்கிறது
நான் என் தனிமையை கொன்று விட பார்க்கிறேன்

ஆதி அந்தமற்ற ஒருவனாய்
நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்

சுட்டெரிக்கும் வெயில்
குளிரடிக்கும் காற்று
முத்துகளாய் பொழியும் மேகம்-எதுவும்
என்னை கவர்ந்துவிடவுமில்லை

பறந்து விரிந்த இந்த வானம்
காற்றயைபோல் பயணிக்கும் வாகனங்கள் என எதுவும்
என்னை அசைத்துவிடவில்லை

ஆம் நான் ஒரு ஜடம்
உலகம் என்னை அப்படி தான் அழைக்கும்

என் கண்முன்னே எது நிகழ்ந்தாலும்
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
பார்த்துகொண்டு மட்டும்தான் இருப்பேன்-ஏனெனில்
நான் ஜடம்
அவர்கள் காதல் கவிதை பாடிய போது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அவள் கற்பிழந்து கதறிய பொது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
பின் அந்த ஆலமரத்தில் பிணமாய் தொங்கியபோது
நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
அதோ அவன் இப்போது வேறோருத்தியிடம் கவி பாடுகிறான்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
என்னுள் எந்த சலனமும் ஏற்பட்டது இல்லை
ஏற்பட போவதும் இல்லை-ஏனெனில்
நான் ஜடம்

பல கோர மரணகளை கண்டிருக்கிறேன்
மழலை மொழியை கேட்டிருக்கிறேன்
பலமுறை நான் சிதைக்க பட்டிருக்கிறேன்
சிலமுறை செப்பனிட பட்டிருக்கிறேன்
இருந்தும் நான் ஆரவாரமற்றே  இருக்கிறேன்.

பிச்சைகாரர்கள், சன்யாசிகள், விபச்சாரிகள், பத்தினிகள்
அரசியல்வாதிகள், அறிவிலிகள், அறிவுஜீவிகள் என
பலர் என்னை கடந்து சென்று விட்டனர்
அவர்களை பொறுத்த வரையில் நான் ஜடம்
எப்போதும் மாறாமல் இருப்பதனால்…
என்னை பொறுத்த வரை அவர்கள் தான் ஜடம்.
நாகரிகம் வளர்ச்சி அடைந்தும் அவர்களின் மிருக மனம் மட்டும்
மாறாமல் இருப்பதால்..

அவர்களிடம் இதை சொல்லிட, நானும் வெகு நாட்களாக
காத்துக்கொண்டிருக்கிறேன்
ஆனால் ஏனோ தெரியவில்லை..
இப்போது யாரும் என் வழி வருவதில்லை.

என்னை வெறும் ஜடாக எண்ணி கடந்து சென்ற அவர்கள்
திரும்பி வருவார்களா !
எனக்கு தெரியாது

அனால் நான் மட்டும் காத்திருக்கிறேன்
அவர்களின் நினைவுகளை சுமந்துகொண்டு .

-மூடப்பட்ட  தேசிய  நெடுஞ்சாலை ….

உதிக்க மறுத்திடுமோ சூரியன்!

அதிகாலை பொழுது
கிழக்கில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை
என் வாழ்விலோ இதுவரை உதித்ததில்லை…

நான் மட்டும் தனியாக சாலையில்
எங்கோ பயணித்துக்கொண்டிருந்தேன்-இல்லை
சாலை எங்கேயோ பயணித்துக்கொண்டிருந்தது
தனிமைப்பட்ட என்னுடன்…

நான் பார்த்த காட்சிகள்-பார்த்திராத கோணத்தில்
பார்க்க மறுத்தக் காட்சிகள் பார்க்க வேண்டிய தருணத்தில்
அன்று கண்டேன்,
இயற்கையின் சரீரத்தையும்
சமுகத்தின் குரூரத்தையும்…

சாலையின் வலப்புறம்
புதருக்கடியில்…
புலன்களை அடகுவைத்த பெண்ணொருத்தி
புலன்களை அடக்கிவைத்த சாமியாருடன்…

சாலையின் இடப்புறம்
இரண்டு நாய்கள்

இருபுறங்களிலும் பெரிய வித்தியாசங்களை
காணவில்லை நான்

இளமையில் வறுமை
அதனால் தனிமை
வாழ்க்கையில் எதனையோ தேடிக்கொண்டு
எதனுள்ளோ வாழ்க்கையை தேடிக்கொண்டு
தூரத்தில் தெரிந்த ஒளியை நோக்கி
ஒளி காட்டிய வழியில் நகர்ந்தேன்

ஒளி சென்ற இடமோ சுடுகாடு
ஆடிக்களைத்தவர்களையும் க(லி)ழித்தவர்களையும் சுடும்காடு.
அங்கு பிணங்களுக்கு மத்தியில்-உயிருள்ள பிணமாய்
உணர்வற்ற வெட்டியான் ஒருவன்
உடல்களை எரித்துக்கொண்டிருந்தான்.
ஐயகோ! நரகல் பணி
வேறென்ன சொல்ல ?

நான் படித்ததோ பொறியியல்
அதனால் தான் என்னவோ வேலை கிட்டவில்லை
வேலையற்றவன் என்றது நாகரிகம்
வேலைக்கு தகுதியற்றவன் என்றது யதார்த்தம் !

சற்று தொலைவில் அந்த ரயில் நிலையம்
ரயில் எங்கிருந்தோ வேகமாக வந்துக்கொண்டிருந்தது
எனக்குள் ஏதோ ஓர் உந்துதல்
நான் வாழ்ந்து எதையும் சாதித்துவிடபோவதில்லை
இத்துனை நாட்கள் வாழ்ந்ததே சாதனைதான்.
ரயில் உலகில் பயணிப்பதற்காக மட்டுமன்று
உலகை விட்டு பயனிப்பதற்க்காகவும் தான்…

அருகில் படிக்காத பாமரனொருவன் மூட்டை சுமந்துக்கொண்டிருந்தான்
படிக்க வழியில்லாத சிறுவனொருவன் நாளிதல் விற்றுக்கொண்டிருந்தான்
நான் என்னை மறந்து அவர்களை நோக்கினேன்
படித்தவனுக்கோ வேலையில்லை
பாமரனுக்கோ படிப்பேயில்லை
அறிவிலிகள் பாமரர்களன்று
இயலாமைக்கும் இயங்காதமைக்கும் “வேலையில்லா திண்டாட்டம்” என
புனைபெயர் சூட்டிய நாம்…

படித்த அனைவரும் கல்வி போதிக்க துவங்கியிருந்தால்
ஒளிந்திருக்கும் அறியாமை ஒழிந்திருக்கும்.
உண்மை உரைக்க தொடங்கிய போது-ரயில் மோதியது
உயிர் பிரிந்தது…

என் உயிரல்ல
நான் கொண்ட அவ நம்பிக்கையின் உயிர்
வந்த வழி திரும்பினேன்.
சுடுகாட்டில் அவ நம்பிக்கையையும் அறியாமையும் புதைத்துவிட்டு
சந்தோசமாக வீடு நோக்கி நடந்தேன் தனிமையோடு.
இல்லை இல்லை, தன்னம்பிக்கையின் துணையோடு
இப்போது சூரியனும் உதித்துவிட்டது
கிழக்கில் மட்டுமல்ல
என் வாழ்விலும் தான்…

கறுப்புப் பெண்

வண்ணத் தொலைக்காட்சியிலும்

கருப்பாகவே தெரிந்தாள்

அந்த கறுப்புப் பெண்

 

அவளை பார்த்தவாறே

கரமைதுனம் செய்கிறான்

இளைஞன், வெள்ளை தோளை நினைத்துக்கொண்டே…

 

தோளில் கூடவா

அந்நிய மோகம் !

உதாசீனப்படுத்திவிட்டு தொடர்கிறான்

 

பின்னொரு நாள்-கருப்பான தன்

மனையாளை பெண்டாள்கிறான்

வெள்ளை நடிகையை நினைத்துக்கொண்டே…

தமிழ் எழுத்தாளனின் மரணம்

அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை
சில நூறுப் பேர்களுக்காக  மட்டும்
எழுதியவன் மாண்டுவிட்டான்

தமிழ்நாட்டில் தமிழில் எழுதும்
கீழ்த்தரமான செயலை இறுதிவரை
செய்தவன் மாண்டுவிட்டான்

நீசன் எனக்கூறி பலர்
அவனை
ஒதுக்கிவிட்டனர்

சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி
அறிவிலிகள் பலர்
ஒதுங்கிநின்றனர்

ஒதுக்கியவர்களாலோ
ஒதுங்கியவர்களாலோ
ஒடுக்கமுடியவில்லை அவனை

இறுதிவரை வளையா
முதுகெலும்புடன்
எழுதியவன் மாண்டுவிட்டான்

பக்கத்துக்கு பக்கம்
சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக
அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை

அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ
தெரியவில்லை அழுகிறார்கள்
வாயினை மூடிக் கொண்டு

உண்மையை
உண்மையாய் எழுதியதை
தலைக்கணமென் றனர்சிலர்

அஞ்சுகின்றனர் இன்னும் சிலர்
அவனை பிடிக்கும் என சொல்வதற்கே -ஏனெனில்
அவன் ஓர் உன்னத தமிழ் எழுத்தாளன்

அந்த தமிழ் எழுத்தாளன்
மாண்டுவிட்டான்
அழுவதற்கு யாருமில்லை

ஆனால் அவன் அறையில்
இன்றும் அழுகுரல்
ஓயாது ஒலிக்கிறது

அவனுக்காக
அழுகின்றன- அவன் இயற்றிய
கதாபாத்திரங்கள்…

பிணம் தின்னி

பிணம் தின்னி

அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் 
அது பெரும் சிரிப்பு
பேருவகைச் சிரிப்பு

மனமெல்லாம் ஆனந்த களிப்பு
கண்களில் சாதித்த வெறி
கைகளை தட்டி தட்டி
அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள்

அவள் கை தட்டளுக்கிடயே
சிக்குண்டு செத்தது என் இனம்
அவள் பெரும் குரல் எழுப்பிச்  சிரிக்கிறாள்
அதில் ஒழிந்து போகிறது,
என் மீனவனின் கதறல் ஒலி
ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் வலி…

இழவு வீட்டில் வந்து சிரித்துவிட்டு ,
அவர்கள் சுகமாகத்தான் உள்ளார்கள் என
கூறி கூறி சிரித்துக் கொண்டிருக்கிறாள்
பிணக் குவியல்களுக்கு மேல் பூந்தோட்டம் அமைத்து,
இது அமைதி பூங்காவனமென
உலகை நம்பவைத்துக் கொண்டிருக்கிறாள்

பிணங்களை புணரும் பேடிகளுக்கு
பணமும் ஆயுதமும் கொடுத்து
ஊக்குவித்துக் கொண்டிருக்கிறாள்-ஆனால்
அந்த ஆயுதமே அவள் நெற்றிப் பொட்டையும்
ஒரு நாள் பதம் பார்க்கும் என்பதை
மறந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள்

அவள் பிணங்களினூடே புகுந்து,
பித்தம் தெளிய
இரத்தம் குடிக்கிறாள்.
அது தெளியவில்லை
அவள் தாகம் அடங்கவில்லை, எனவே
வெறிக்கொண்டு சிரிக்கிறாள்
புது பிணம் வேண்டி நிற்கிறாள்  …

பிணம் கேட்டு இவள்
பணம் தர,பெற்றுக் கொண்ட
பேடிகள் இவள் காலடி நிரப்புகிறார்கள்
பிணக் குவியல்களால்.
‘பற்றாது. இன்னும் பிணம் செய் !’
என்கிறாள்

இதோ வீதி எங்கும்  பிணங்கள்
தலை வெட்டப்பட்ட முண்டங்கள்
அடிபட்டு, மிதிபட்டு
கை அறுப்பட்டு,
கற்பழிக்கப்  பட்டு
முழி பிதுங்கி

அவமான படுத்தி
அமனமாக்கப்  பட்ட
உடல்கள்
நேற்றைய சௌந்தர்யங்கள்
இன்றைய பிணங்கள்.

‘ போதாது !’
இன்னும் கேட்கிறாள் அவள்
அழியாத மோகம் கொண்டு
தீராத தாகம் கொண்டு.

‘அன்னையே! தீர்ந்தது எல்லாம்.
எவ்வளவு பிணங்களை கொட்டி விட்டோம் !
இனிமேல் கொண்டு வர ஈழத்தில் ஏது பிணம் ?’
எடுத்துரைத்தான் ஒரு பேடி

‘தீர்ந்ததோ பிணம் ?
என்னிடம் தீராது பணம்! .
பல வகையான பணம்
உலக முதலாளிகளின் பணம்
கடல் கடந்து போ
தென்னாடு போ
அள்ளிவா புதுப் பிணங்களை…

‘ஐயகோ! அன்னையே
அவர்கள் கருப்பர்கள்
வாழ வக்கிழந்த
கட்டுமர மீனவர்கள்
தமிழர்கள்’

தமிழனை புசித்து
ருசி கண்ட அவளுக்கு
இன்னும் ரத்தம் வேண்டுமாம்.
‘கருப்பனாக இருந்தாலும்
அவன் ரத்தம் சிகப்பு தானே!
அவனை அடித்து
கடலிலே  மூழ்கடித்து
தீட்டு கழித்து
கொண்டுவா அந்த மீனவப் பிணங்களை
தமிழனின் ரத்தம் என்றும் ருசிக்கும்’

புசிக்க
ஆயிரம் ஆயிரமாக மீனவப் பிணங்கள்,
குடிக்க
ருசிமிக்க தமிழ் ரத்தம்
இன்னும் அவா அடங்கவில்லை அவளுக்கு.

‘அரக்கர்களின் ன் பசிகூட அடங்கி இருக்குமே
இன்னும் இவள் பசி அடங்க வில்லையே !’
பதறி பின்வாங்கியது பேடிப் படைகள்.
‘அன்னையே மீனவனும் ஒழிந்தான்.
பலர் தன்னை தானே அழித்துக் கொண்டனர்
பலர் ஓடி விட்டனர்
மிஞ்சி இருப்பது வல்லம் மட்டுமே
யாது செய்வோம் நாங்கள்’
கதறினார்கள் அந்த பேடிகள்

அவர்கள் மேல்
காரி உமிழ்ந்துவிட்டு சிரித்தாள்
இள முதல் கிழ ரத்தம் வரை
குடித்த அந்த வேசி .
‘ பேடிகளே! போங்கள்
ஒளிந்துக் கொண்டிருக்கும் மீனவர்களை
இழுத்து வாருங்கள்
எங்காவது பிணமாக எரிந்து கொண்டிருந்தாலும்
பிடுங்கி வாருங்கள் .
நான் போகிறேன் தென்னாட்டிற்கு
அங்கே ஓர் கிழவன்
கோடிகளை கொட்டிக் கொடுத்தால்- யாரையேனும்
கூட்டிக் கொடுப்பான்
முடிந்தால் அவனையும் புசித்து விட்டு வருகிறேன் ‘
என்று சிரித்தவாறே புறப்பட்டாள் தென்னகம் நோக்கி.

தமிழ்நாடு எங்கும் இருள் பரவியது
வானமே அதிரும்படி அவள் சிரித்தாள்
விடிந்தவுடன்
எங்கு நோக்கினும் பிணக் குவியல்கள்
ரத்தம் உறியப் பட்ட நிலையில்.
அதையும் புணர்ந்து கொண்டிருந்தார்கள்
அந்த பேடிகள்…

 வானமே அதிரும்படி மீண்டும் சிரிக்கிறாள்
இன்னும் பிணம் கேட்கிறாள் அவள்
அழியாத மோகம் கொண்டு
தீராத தாகம் கொண்டு….