உங்கள் குழந்தையை முதன்முதலில்
நீங்கள் கையில் வாங்கும் அதே நேரத்தில் தான் குழந்தை வேண்டி நிற்கும்
யாரோ ஒரு பெண்ணுக்கு கரு கலைந்து போகிறது
உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு
நீங்கள் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைக்கும் நேரத்தில் தான்
யாரோ ஒருவர் வரணை எதிர்ப்பார்த்து வறுமையில் காத்துகொண்டிருக்கிறார்
உங்கள் காதல் உங்களுக்கு சலித்து போய்
நீங்களாகவே பிரியும் நேரத்தில் தான்
யாரோ ஒரு காதல் ஜோடி அதே காதலுக்காக வெட்டிக் கொல்லப்படுகிறார்கள்
நீங்கள் முதலீட்டிற்காக மூன்றாவது வீடு வாங்கும்போது தான்
யாரோ ஒருவரின் வீட்டு சாமான்கள் வாடகை தராததால் வெளியே வீசப்படுகிறது
உங்களின் வாகன கடன் விண்ணப்பம் வங்கியில் அங்கிகரிப்படும் போது தான்
யாரோ ஒருவரின் கல்விக் கடன் நிராகரிக்கப்படுகிறது
வாழ்க்கை அழகானது என்று
பேஸ்புக்கில் நீங்கள் செல்ஃபி போடும் அதே நேரத்தில்தான்
வாழ்க்கையை வெறுத்து ஒருவன் தற்கொலை செய்து கொள்கிறான்
உங்கள் மேற்படிப்பிற்காக நீங்கள் வெளிநாடு பயணப்படும் அதே நாளில்தான்
படிப்பை பாதியில் நிறுத்திய உங்கள் பள்ளிக்கூட நண்பன் மேற்கொண்டு
உழைக்க வழுவின்றி சோர்ந்து போகிறான்
நீங்கள் உங்கள் ஓய்வூதியத்தை வாங்க
ஆட்டோவில் வங்கிக்கு செல்லும் போதுதான் ஓய்வு பெற முடியாத
யாரோ ஒரு முதியவர் நெரிசலான பேருந்தில் வேலைக்கு சென்று வருகிறார்
அந்த யாரோ ஒருவராக நீங்களோ உங்கள் பிள்ளைகளோ
இருந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறீர்கள்.
இருந்து விட்டு போங்கள்.
அந்த யாரோ ஒருவருக்காக நான் கொஞ்சம் அழுதுகொள்கிறேன்…