ராபர்ட் மெக்கீயின் ‘ஸ்டோரி’ புத்தகத்த்தின் வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகவோ, சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பாகவோ அல்லாமல் அவர் சொன்ன சில முக்கிய உத்திகளை விவாதப் புள்ளியாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் திரைக்கதை எழுத முயல்பவர்களுக்கு நிச்சயம் பயன்படும்
Screenwriting is like ironing. You move forward a little bit and go back and smooth things out- Paul Thomas Anderson
‘திரைக்கதை’ வடிவமைப்பு
கடந்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரம், கான்பிளிக்ட் மற்றும் பிளாட் பற்றியெல்லாம் பேசினோம். இந்த புரிதோலோடு ஒரு திரைக்கதையை எங்கிருந்து தொடங்குவது? ஒரு கதையோ கருவோ கதாப்பாத்திரமோ எந்த புள்ளியில், தருணத்தில் திரைக்கதையாக வளர்கிறது? Inciting Incident என்பதை இதற்கு பதிலாக சொல்லலாம். அதாவது கதை ஏதோ ஒரு புள்ளியில் தூண்டப்பட்டால் தானே அது அடுத்த கட்டத்திற்கு நகரும்? எனவே தான் இதை ‘இன்சைட்டிங் தருணம்’ என்கிறோம். காதல் படத்தில் நாயகன் முதன் முதலில் நாயகியை பார்க்கும் தருணம், ஆக்சன் படத்தில் வில்லனோடோ வில்லனின் ஆட்களோடோ முதன்முதலில் பிரச்சனை உருவாகும் தருணம், துப்பறியும் படத்தில் முதல் கொலை நிகழும் தருணம்- இதெல்லாம் இன்சைட்டிங் தருணத்திற்க்கு எளிய உதாரணங்கள். அதுவரை அமைதியாக இருந்த கதை உலகம் இந்த தருணத்திற்கு பின்பு மாறுகிறது. மாற்றமடையும் அந்த உலகம் பல பிரச்சனைகளை கடந்து இறுதியில் மறுபடியும் அமைதி நோக்கி திரும்பும் இடமே திரைக்கதையின் முடிவு. அதன்பின்பு எந்த மாற்றமும் சாத்தியமில்லை. இந்த ஆரம்ப புள்ளிக்கும் இறுதிக்குமிடையே நம் திரைக்கதையை நாம் எப்படி வடிவமைக்கப் போகிறோம். இதைப் பற்றி ராபர்ட் மெக்கீ என்ன சொல்கிறார்?
மெக்கீ, எந்த திரைக்கதையையும் வடிவமைக்க ஐந்து புள்ளிகள் (அல்லது நிகழுவிகள்) தேவை என்கிறார். அவை முறையே Inciting Incident, Progressive Complications, Crisis, Climax மற்றும் Resolution. இவற்றைப் பற்றி விலாவாரியாக பார்ப்போம்.
நாயகனின் உலகம் சாதாரணமாக இருக்கிறது. ஒரு தருணத்தில் அவன் வாழ்வின் சமநிலை குலைகிறது. அந்த தருணம் நல்ல மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். நல்லதல்லாத மாற்றத்தையும் உண்டு பண்ணலாம். சாதாரண நாயகனுக்கு லாட்டரியில் பத்து கோடி பரிசு விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் பின் அவன் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதே கதை. இது நல்லதொரு மாற்றம். லாட்டரியில் பரிசு விழும் தருணமே இன்சைட்டிங் தருணம்.
சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும் நாயகனின் வாழ்க்கையில் ஒரு தருணத்தில் அவனுடைய குழந்தை காணாமல் போகிறது. இது நல்லதல்லாத மாற்றம்.
மேற்சொன்ன இரண்டு உதாரணங்களிலும் இன்சைட்டிங் தருணம் தான் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா! இந்த இன்சைட்டிங் தருணம் எங்கு எப்போது வரவேண்டும்! படம் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்குள் வரவேண்டும் என்கிறார் மெககீ. அதாவது அரைமணி நேரத்தில் கதை உலகின் சமநிலை குலைய வேண்டும்.
ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். படத்தின் இடைவேளையின் போது கூட இன்சைட்டிங் தருணம் வரலாம். நாயகனின் கதையை ஒரு புறம் சொல்லலாம், வில்லனின் கதையை ஒரு புறம் சொல்லலாம். இடைவேளையின் போது இருவரின் உலகமும் ஒன்றோடு ஒன்று மோதுகிறது என்று கூட கதையை அமைத்துவிட முடியும் தானே! அதனால் இன்சைட்டிங் தருணம் எங்கு வர வேண்டும் என்பதை நாம் தேர்ந்தெடுக்கும் கதைக்களமே முடிவு செய்துக் கொள்ளட்டும்.
ஆனால் அந்த தருணம் வரும் வரையிலும், அல்லது அந்த தருணம் வந்த பின்பும் கதையை எப்படி சுவாரஸ்யமாக நகரத்துவது! இதற்கு தான் மெக்கீ கதையை ‘Central Plot’ (பிரதான கதை) மற்றும் Sub Plot (கிளைக்கதை) என்று பிரிக்கிறார். இதை எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.
நாம் பிரதானமாக சொல்ல நினைப்பதே சென்ட்ரல் பிளாட். அதாவது ஒரு சாதாரண நாயகனுக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் நடக்கப் போகும் பிரச்சனை தான் நம்முடைய திரைக்கதை என்று வைத்துக் கொள்வோம். அந்த நாயகன் அறிமுகம் ஆவது, வில்லன் அறிமுகம் ஆவது, இருவரும் சந்தித்துக் கொள்வது இதெல்லாம் பிரதான கதைகக்குள் அடங்கிவிடும். அதவாது பிரதான பிரச்சனையை நோக்கி நகரும் விஷயங்களை பிரதான கதைக்குள் கொண்டு வருகிறோம். இது அல்லாமல் கதையில் இன்னபிற விஷயங்கள் நடக்குமே! நாயகன் நாயகி காதலாக இருக்கலாம். அவன் வேலை, குடும்பத்தில் உள்ள விஷயங்களாக இருக்கலாம். இதையெல்லாம் நாம் கதைக்குள் கொண்டு வருவோம் அல்லவா? அதுவே கிளைக் கதை.
நல்ல கிளைகக்கதையே திரைக்கதையை சுவரஸ்யமாக்கும் என்கிறார் மெக்கீ. ஒரு கிளைக்கதை பிரதான கதைக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். போலீஸ் நாயகன் குற்றவாளியை தேடுவது பிரதானக் கதை எனில், அவன் தனிப்பட்ட வாழ்வின் பிரச்சனைகளை பேசுவது கிளைக்கதை. திரைக்கதையின் ஓட்டத்தில் அந்தக் கிளைக்கதை பிரதான கதையோடு வந்து இணையும்
அவதார் (பாகம் இரண்டு) படத்தில் நாயகனுக்கும் வில்லனுக்கும் இருக்கும் பிரச்சனை பிரதான கதை என்றால், நாயகனின் பிள்ளை அந்த பெரிய கடல் பிராணியோடு நட்பு பாராட்டுவது, நாயகனின் வளர்ப்பு மகள் தன் தாயை நோக்கி செல்வது போன்றவைகள் கிளைக்கதைகள். ஒரு கட்டத்தில் அந்த எல்லா கிளைக்கதைகளும் மூலக் கதையோடு இணையும் அல்லவா? அந்த கடல் பிராணி பிரச்சனையின் போது அவர்களுக்கு உதவ வருமே! இப்படி கிளைக்கதை மூலக்கதையோடு இணையும் போது அங்கே முழுமை கிடைக்கிறது.
ஒரு திரைக்கதையில் இன்சைட்டிங் தருணம் எவ்வளவு தாமதமாக வந்தாலும், கிளைக்கதைகள் திரைக்கதையை சுவரஸ்யமாக நகர்த்தும் பணியை செய்திடும் என்பதால் தான் மெக்கீ சொல்வது போல இன்சைட்டிங் தருணம் எல்லா நேரங்களிலும் முதல் அரைமணி நேரத்திலேயே வந்துவிட வேண்டும் என்கிற அவசியமில்லை என்றேன். சரி, இன்சைட்டிங் தருணத்தையும், கிளைக்கதைகளையும் கண்டுகொண்டோம். அடுத்து?
பல படங்களில் சுவாரஸ்யமான இன்சைட்டிங் தருணம் இருக்கும். ஆனால் திரைக்கதை அதற்கு பின்பு தொய்வாகி விடும். இதற்கு காரணம் அந்த திரைக்கதையில் சுவாரஸ்யமான முரண்கள் இல்லாமல் இருப்பதே என்கிறார் மெக்கீ. இன்சைட்டிங் தருணம் வந்த பின்பு ஒரு நாயகன் எதை அடைய நினைத்தாலும் அவனுக்கு நிறைய சிக்கல்களும் முரண்களும் ஏற்பட வேண்டும் என்கிறார் அவர். இதையே அவர் Progressive Complications என்கிறார்.
அதாவது நம் கதாபாத்திரத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே போகவேண்டும். ஒரு பிரச்சனையை தவிர்த்தால் அடுத்த பிரச்சனை வர வேண்டும். அது இறுதியில் உச்சத்தை எட்ட வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல பிரச்சனை அகம் புறம் என இரண்டு வகைகளிலும் வர வேண்டும். இறுதியாக கதை மிகப்பெரிய சிக்கலில் போய் நிற்கிறது அல்லவா? அதுவே crisis. ஹீரோவும் வில்லனும் பல முறை மோதிக் கொண்டாலும், இறுதியாக அவர்களுக்குள் ஒரு மிகப்பெரிய சண்டை நடக்கப்போகிறது. அதில் ஒருவர் தான் ஜெயிக்கமுடியும். ஒருவரின் வெற்றி இன்னொருவரின் முடிவு. பிரச்சனைகளிலேயே மிகப் பெரிய பிரச்சனை அது தான். எனவே தான் அதை crisis என்கிறோம். அதை கடந்தால் படத்தின் முடிவு. அதுவே கிளைமாக்ஸ். நமக்கு மிகவும் பரிச்சயமான சொல். ஹீரோ வில்லனை ஜெயித்து விட்டான். காதலன் காதலியோடு சேர்ந்துவிட்டான். போலீஸ் நாயகன் கொலைக்காரனை கண்டுபிடித்துவிட்டான். ஆனால் இது மட்டுமே கதைக்கு போதாது என்கிறார் ராபார்ட் மெக்கீ. இறுதியாக ஒரு புள்ளி உண்டு, resolution. அதாவது தீர்வு. கதையை அப்படியே முடிக்காமல், அதுவரை நாம் உருவாக்கிய கிளைக்கதைகள், கிளைப் பாத்திரங்கள் அனைத்திற்கும் ஒரு தெளிவான முடிவை வைத்தால் அது ஒரு நிறைவான திரைக்கதையாக இருக்கும் என்கிறார் அவர். வில்லன் அழிந்த பிறகு அந்த கதை உலகத்தில் ஒரு மாற்றம் நிகழந்திருக்குமே! அது தான் ‘தீர்வு’..
மேற்கூறிய விஷயங்களையெல்லாம் மனதில் கொண்டு காட்சிகளை உருவாக்கினாலும், அவை நல்ல காட்சிகளாக இல்லையா என்கிற ஐயம் நமக்கு எழுவது சகஜம் தான். அதற்கு மெக்கீ சில உத்திகளை நமக்கு சொல்லித் தருகிறார். அவை என்ன!
அறுபது காட்சிகள் எழுத வேண்டிய இடத்தில், நூறு காட்சிகளை எழுதுங்கள். பின்பு சிறந்த காட்சிகளை தேர்ந்தெடுங்கள் என்கிறார் அவர். ஒவ்வொரு காட்சியிலும் நம் பாத்திரத்திற்கு ஏதோ ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கம் நிறைவேறலாம் நிறைவேறாமல் போகலாம். ஆனால் எல்லாமே பிரதான கதையை முன்னோக்கி நகர்த்த வேண்டும். அதாவது காட்சியில் ஏற்படும் மாற்றம், காட்சித் தொகுப்பை (Sequence) பாதிக்க வேண்டும். காட்சி தொகுப்பில் ஏற்படும் மாற்றம் திரைக்கதையை பாதிக்க வேண்டும். ஒரு திரைக்கதைக்கு முதலும் முடிவும் இருப்பது போல ஒவ்வொரு காட்சிக்குமே (அல்லது காட்சித் தொகுப்பிற்கு) முதலும் முடிவும் சாத்தியம்.
காட்சியின் தொடக்கத்தில் (அல்லது காட்சித் தொகுப்பின் தொடக்கத்தில்) கதை உலகம் எப்படி இருக்கிறதோ, அதன் முடிவில் அப்படியே இருந்தால் அது தேவை இல்லாத காட்சி (அல்லது காட்சித் தொகுப்பு) என்கிறார் மெக்கீ.
வேலையே இல்லை என்று வருத்தத்தில் இருக்கும் ஹீரோ. வேலை தேடி செல்கிறான். அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. இங்கே கதையில் எதுவும் மாறவில்லை. ஆனால் வேலை தேடி சென்ற இடத்தில் நாயகியை காண்கிறான் எனில் கதை உலகத்தில் மாற்றம் ஏற்படுகிறது. சோகமாக ஆரம்பித்த காட்சி இறுதியில் சந்தோஷமாக, காதலாக முடிகிறது. இப்படி காட்சியிலும் காட்சித் தொகுப்பிலும் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவர் சொல்வது. நாயகன் சந்தோஷமாக நாயகியின் அப்பாவை காணச் செல்கிறான். அவர்களின் திருமணத்தை பற்றி முடிவு செய்துவிடலாம் என்று நினைக்கிறான். ஆனால் அதுவரை அன்பாக நடந்து வந்த நாயகியின் தந்தை, திருமணத்திற்கு ஏதோ ஒரு காரணம் சொல்லி தடை போடுகிறார்? இங்கே சந்தோஷமாக ஆரம்பிக்கும் காட்சி சோகத்தில் அதிர்ச்சியில் முடிகிறது. இப்படி பாசிட்டிவ் விஷயங்கள் நெகட்டிவ் விஷயங்களாகவும், நெகட்டிவ் விஷயங்கள் பாசிட்டிவ் விஷயங்களாகவும் மாறும் வகையில் நாம் காட்சிகளை (திரைக்கதையை) எழுத வேண்டும். அதே சமயத்தில் பார்வையாளர்கள் எதிர்ப்பார்த்ததே காட்சியின் முடிவாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தி சொல்கிறார் மெக்கீ. எதிர்ப்பாராத திருப்பமொன்று காட்சியில் இருக்க வேண்டும். இதை அவர் திருப்புமுனை (Turning Point).என்கிறார்.
நாயகியின் தந்தை திருமணத்திற்கு தடை தான் சொல்ல போகிறார், சரி சொல்லிவிட்டால் கதை நகராது என்று பார்வையாளரின் ஆழ் மனம் யூகிக்கும். ஆனால் தடை மட்டும் சொல்லாமல், நீ அரசாங்க வேலைக்கு போனால் தான் என் பெண்ணை திருமணம் செய்து தருவேன் என்று சொன்னால்? இதுவே திருப்பு முனை. இந்த திருப்பு முனை தான் நல்ல திரைக்கதையையும் சாதாரண திரைக்கதைக்கும் உள்ள வித்தியாசம் என்கிறார் ராபார்ட் மெக்கீ.
இறுதியாக திரைக்கதை எழுத விரும்பும் ஒவ்வொருவரும் ராபார்ட் மெக்கீ ஒரு அறிவுரையை சொல்கிறார். ஒரு திரைக்கதையாசிரியனுக்கு கற்பனைசக்தியையும் திறமையையும் விட அதிகம் இருக்க வேண்டியது துணிவு என்கிறார் அவர். அதாவது தோல்விகளையும் உதாசீனங்களையும் கடந்து தொடர்ந்து எழுத நம்மை ஊக்குவிக்கும் ‘துணிவே’ முக்கியம் என்கிறார்.
துணிவோடும் விடாமுயற்சியோடும் தொடர்ந்து எழுதுவோம்.
முற்றும்.
நன்றி. ராபார்ட் மெக்கீ
***
இந்த கட்டுரை தொடரின் முதல் அத்தியாயத்தில் சொன்னது போல ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. படைப்பு அகத் தூண்டலின் மூலம் நிகழ்வது. ஆனால் நம்முடைய படைப்பை செப்பனிட்டு கொள்ள முன்னோடிகளின் வழிக்காட்டுதல்களும் உத்திகளும் நமக்கு நிச்சயம் பயன்படும். திரைக்கதை என்று வரும் போது அதை பற்றி நாம் தொடர்ந்து நிகழ்த்தும் விவாதங்கள் நல்ல திரைக்கதைகளை உருவாக்க உதவும். அத்தகைய விவாதங்களை தொடங்கி வைக்கும், தொடர்ந்து நடத்தும் முயற்ச்சியாகவே என்னுடைய எல்லா திரைக்கதை கட்டுரைகளும் அமைந்திருக்கும்.
இதை எல்லாம் செய்தால் நல்ல திரைக்கதையை எழுதலாம் என்று சொல்வதை விட, இதையெல்லாம் செய்வதன் மூலம் நம் திரைக்கதை நல்ல திரைக்கதையாக சுவாரஸ்யமான திரைக்கதையாக மாறுமா என்று பார்ப்போமே என்ற தொனியில் தான் என் கட்டுரைகள் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
அந்த வகையில் ராபார்ட் மெக்கீயின் ‘ஸ்டோரி’ புத்தகத்த்தின் வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகவோ, சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பாகவோ அல்லாமல் அவர் சொன்ன சில முக்கிய உத்திகளை விவாதப் புள்ளியாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் எங்கோ யாருக்கோ திரைக்கதை எழுதும் உந்துதலை தருமாயின் பெரிதும் அகம் மகிழ்வேன்.
என்னளவில் நான் மிகமிக முக்கியமான இரண்டு திரைக்கதை புத்தகங்களாக கருதுவது, Christopher Vougler-யின் ‘The Writer’s Journey’ மற்றும் Robert Mckee-யின் ‘Story’ ஆகிய புத்தகங்களை தான். தி ரைட்டர்ஸ் ஜேர்னி பற்றி முன்னரே சுருக்கமாக எழுதி இருக்கிறேன்.
ஸ்டோரி புத்தகத்தை பற்றி எழுதவேண்டும் என்ற அவா பல ஆண்டுகளாக சாத்தியப்படாமலேயே இருந்தது. இந்த ஆண்டு எப்படியாவது ஒரு சிறிய தொடர் எழுதிட வேண்டும் என்ற உத்வேகத்தில் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த தொடர், சரியாக ஆண்டின் இறுதியில் முடிவது கூடுதல் நிறைவு.
இந்த கட்டுரைகள் ‘Story’ புத்தகத்திற்கு விலாவரியான அறிமுகமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
“ஐடியாக்கள் அதுவாகவே தான் உருவாகும். எப்படி என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாது. ஒரு ஐடியா உருவாகும் போது அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்றும் நமக்கு தெரியாது.இந்த படத்தை பொறுத்தவரை எனக்கு ஒரு கழுதையின் தலை தான் ஐடியாவாக பிறந்தது. கழுதையின் தலையில் இருக்கும் ஒருவகையான அசைவற்ற அழகு என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். கழுதையின் கண்களை விட ரசிக்கத்தக்க ஒரு விஷயம் உலகில் உண்டா!” – Au Hasard Balthazar படம் பற்றி ராபர்ட் ப்ரெஸ்ஸான்.
Notes on the cinematographer- தமிழில் ஆர்.சிவகுமார்.
இதில் ராபர்ட் ப்ரெஸ்ஸானின் படங்கள் குறித்த கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்…
கணையாழி -பேராசிரியர் செண்பகம் ராமசுவாமி நினைவு குறுநாவல் போட்டியில் என்னுடைய ‘கடைசி நாள்’ என்கிற கதை மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.
American Horror Story போன்ற சுவாரஸ்யமான கதைகளை உருவாக்கிய ரியான் மூர்பியின் மற்றுமொரு சுவாரஸ்யமான படைப்பு (Miniseries) ‘The Watcher’. மர்மமும் திகிலுமாக கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால் திரைக்கதையின் மர்ம முடிச்சுக்கள் சரியாக அவிழ்க்கப்பட்டிருக்கிறதா!
பிரானாக் தம்பதியர் (நோரா பிரானாக் மற்றும் டீன் பிரானாக்) புதிதாக ஒரு பங்களா வீட்டை பெரும் விலைக்கொடுத்து வாங்குகிறார்கள். அது அவர்களின் கனவு இல்லம். அதை வாங்குவதற்கு தங்களிடம் இருக்கும் கடைசிசேமிப்பு வரை அனைத்தையும் பயன்படுத்துகிறார்கள். தங்களின் மகள் மற்றும் மகனோடு அந்த வீட்டிற்கு குடிபுகுகிறார்கள். ஆனால் அக்கம்பக்கத்தினர் அவர்களை வரவேற்கத் தயாராக இல்லை. சற்றே விசித்திரமாக நடந்துகொள்கிறார்கள். பரவாயில்லை நாம் உண்டு நம் வீடுண்டு என்று இருப்போம் என்று எண்ணுகின்றனர் பிரானாக் தம்பதியர். ஆனால் அவர்கள் நிம்மதியை குலைக்கும் வண்ணம் ஒரு கடிதம் வந்து சேர்கிறது. “நான் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று மிரட்டும் தொனியில் அந்த கடிதத்தின் வரிகள் இருக்கின்றன. அதை எழுதியது ‘தி வாட்சர்’ என்பதை தவிர வேறு எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.
யார் அந்த வாட்சர்! ஆணா! பெண்ணா! ஒட்டாமல் உறவாடும் சுற்றத்தாரில் ஒருத்தனா? அல்லது நெருங்கிய வட்டத்திலேயே இருக்கும் யாரோ ஒருவரா? இந்த கேள்விக்கான பதிலை கண்டுகொள்ள முடியாமல் பிரானாக் தம்பதியர் திணறுகின்றனர். ஆரம்பம் முதலே அதை பார்க்கும் நமக்கும் அந்த கேள்வி தொற்றிக் கொள்கிறது. வாட்சர் யாராக இருக்கும் என்று பார்வையாளர்களை தொடர்ந்து யோசிக்க வைப்பதே இந்த திரைக்கதையின் பலம். ஆரம்பித்த சில நொடிகளிலேயே கதை உலகம் நம்மை உள்ளே இழுத்துவிடுகிறது. ஒரு படம் பார்வையாளனை தன்னோடு ஒன்ற வைக்குமாயின் அதுவே அதன் முதல் வெற்றி. ஒரு திரைக்கதையில் இது எப்படி சாத்தியமாகிறது?
பார்வையாளர்களின் மனதை தொடுகிற ‘எமோஷன்’ தான் இதை சாத்தியப்படுத்துகிறது. The Watcher’. தொடரை பொறுத்த வரை இதன் ‘Core emotion’ எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறது. கனவு இல்லம், அமைதியான சந்தோசமான குடும்பம், பாதுகாப்பான வாழ்க்கை- இதுதான் இந்த கதையின் பிரதான பாத்திரங்களின் ‘Core emotion’. ஒருவகையில் இது மனிதகுலத்தின் கனவும் கூட. அதனாலேயே இந்த கதையின் பிரதானபாத்திரங்கள் நம்மோடு நெருங்கி வருகின்றன. (ஹாரர் திரில்லர் என எந்த வகை படமாக இருந்தாலும், அதில் பார்வையாளர்களை உள்ளிழுக்கும் எமோஷன் இருக்கும் போதே அந்த திரைக்கதைக்கு உயிர் கிடைக்கிறது.) இப்போது பாதுகாப்பான வாழ்க்கை என்கிற நம் கதாப்பாத்திரங்களின் அந்த கனவை அவர்களுக்கு வரும் கடிதம் அசைத்துப் பார்க்கிறது. நம்மையும் தான்.
ஆரம்பத்திலிருந்தே சுற்றி இருப்பவர்களிடம் தான் ஏதோ சிக்கல் இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் வயதான தம்பதி, பிரானாக் குடும்பத்தின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் தோட்டத்திற்குள் நுழைந்து செடிகொடிகளை பறிக்கிறார்கள். இதை டீன் பிரானாக் கேள்வி கேட்க, அது பிரச்சனையில் முடிகிறது. “நீங்கள் எங்களுடைய பகையை சம்மதித்துக் கொண்டீர்கள். உங்களை கவனித்துக் கொண்டே இருப்போம்” என்று கோபமாக சொல்லிவிட்டு நகர்கிறார்கள் அந்த வயதான தம்பதியர்.
இன்னொரு பக்கத்தில் வசிக்கும் ஜாஸ்பர் ஒருபடி மேலே சென்று பிரானாக்கின் வீட்டிற்குள்ளேயே அனுமதியில்லாமல் வசிக்கிறார். இது பிரானாக்கை கோபத்திற்கு உள்ளாக்க அவரை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார் பிரானாக். இயல்பான மனநிலையில் இல்லாத ஜாஸ்பருக்கு ஆதரவாக அவரது சகோதரி பியர்ல், பிரானாக்கிடம் சண்டையிடுகிறாள். தாங்கள் புராதானங்களை பாதுக்காக்கும் குழு என்றும் பிரானாக் அந்த புராதன வீடை வாங்கி அதில் மாற்றங்களை செய்வது தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறும் பியர்ல், “உங்களை கவனித்துக் கொண்டே இருப்போம்” என்று மிரட்டிவிட்டு நகர்கிறாள்.
தொடர்ந்து மிரட்டல் கடிதங்களும் வருகின்றன. போலீசிடம் சொல்லியும் எந்த பயனும் இல்லை. இந்த சிக்கல்கள் அவனை வேலையில் கவனம் செலுத்தவிடாமல் செய்ய, வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு அவனுக்கு கிடைக்காமல் போகிறது. இத்தகைய பிரச்சனைகள் (Extra personal conflict) ஒரு புறம் இருக்க, டீன் பிரானாக்கின் குடும்பத்திற்குள்ளேயே அவருக்கும் அவர் மனைவி-மகளுக்குமிடையே பிரச்சனைகள் வருகின்றன (Personal Conflict). ஒருகட்டத்தில் குடும்பமே உடைந்து விடுமோ என்கிற அளவிற்கு பிரச்சனைகள் வளர்கின்றன. இதுவே திரைக்கதையில் ‘All is lost’ என்கிற தருணம். எத்தகைய திரைக்கதையிலும் இந்த தருணம் சாத்தியப்படும்.
ஆரம்பத்தில் நாயகனின் கனவாக இருந்த ஒருவிஷயம், அதை தக்கவைத்துக்கொள்ள அவன் போராடியும், ஒருகட்டத்தில் அது முற்றிலுமாக கைவிட்டு போகும் என்கிற நிலை உருவாகுகிறது. இப்போது ஏதாவது செய்து அவன் தன் கனவை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அவன் என்னெல்லாம் செய்கிறான் என்று கதையை நகர்த்துபோது அந்த திரைக்கதை சுவாரஸ்யமாகும்.
தி வாட்சர் சீரிஸ் சற்றே தடுமாறும் இடமும் இதான். அதற்கும் இது உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்பது கூட காரணமாக இருந்திருக்கலாம். நிஜவாழ்வில் இது போன்ற ஒரு குடும்பத்திற்கு ‘தி வாட்சரின் கடிதம் வந்து அவர்களின் நிம்மதி குலைந்திருக்கிறது. இறுதிவரை வாட்சர் யார் என்று யாராலும் கொண்டுகொள்ளமுடியவில்லை. எனவே தான் இந்த தொடரிலும் இறுதியில் மர்மமுடிச்சுகளை சரியாக அவிழ்க்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள் போல என்கிற எண்ணம் எழுகிறது.
திரைக்கதையில் ஆரம்பத்திலிருந்தே ‘வாட்சர்’ யார் என்று கண்டுகொள்ளும் முனைப்போடு நாயகன் இயங்குகிறான். அதற்காக தியோதரா என்கிற துப்பறியும் பெண்மணியின் உதவியை அவன் நாடுகிறான். அவர்கள் பல விஷயங்களை கண்டுகொள்கிறார்கள். ஒரு விறுவிறுப்பான மர்ம நாவலை படிக்கும் உணர்வை அவர்களின் காட்சிகள் தருகின்றன. உண்மையிலேயே ஒரு படத்தின் திரைக்கதைக்கும் தொடரின் திரைக்கதைக்கும் இருக்கும் பிரதான வித்தியாசம் இதுதான். நாவலின் வடிவமே தொடர்களின் வடிவமாக இருக்கிறது. படம் எனும் போது இரண்டு மணிநேரத்தில் ஆர்கானிக்காக எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் web series அப்படி இல்லை. அதில் நாவலுக்கான சுதந்திரம் இருக்கிறது. அதனாலேயே எத்தகைய கிளைக்கதையையும் ஒரு வெப்சீரிஸில் எழுதிவிட முடிகிறது. ஆனால் இந்த கிளைக்கதைகள் பிரதான கதையோடு ஏதாவது ஒரு புள்ளியில் இணைய வேண்டும். இணையாமல் தனித்திருந்தால் உறுத்தலாக தோன்றும். இந்த தொடரில் அந்த பங்களா வீட்டில் முன்பொரு காலத்தில் வசித்த ஆண்ட்ரூ பற்றிய கதை வருகிறது. அவனை தியோதரா தான் நாயகனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். அவன் அந்த வீடு நரபலியோடு தொடர்புடையது என்றெல்லாம் சொல்கிறான். ஆனால் இந்த கதை பிரதான கதையோடு சரியாக இணையவில்லை. அடுத்து டீன் பிரானாக்கின் படுக்கை அறைக்குள் ஒரு பெண் அவருக்கு தெரியாமலேயே நுழைவதாக ஒரு காட்சி வருகிறது. அவள் யார் என்ன என்பது இறுதி வரை சொல்லப்படவில்லை. இந்த காட்சியை நீக்கியிருந்தால் கூட கதையில் பெரிய இழப்பு எதுவும் இருக்காது. தொடர் கதைகளின் (நாவல்) முடிவில் வழிந்து வைக்கப்படும் ட்விஸ்ட் போல வைக்கப்பட்ட காட்சி இது. எனவே தான், பிரதான கதையோடு ஒன்றாத கிளைக்கதைகளோ காட்சிகளோ ஒரு திரைக்கதைக்கு தேவை இல்லை என்கிறோம்.
மேலும் இந்த கதையில் பிரானாக் தம்பதியர் தங்கள் வீட்டில் ஒரு சுரங்கப் பாதை இருப்பதை கண்டுபிடிப்பார்கள். அந்த சுரங்கப்பாதையில் வழியாகவே அந்த வீட்டிற்குள் முகம் தெரியாத யாரோ வந்து போகிறார்கள் என்று அந்த தம்பதியர் நினைக்கும் தருணத்தில், யாரோ ஒருவன் தப்பித்து ஓடுவான். அவனை துரத்திக் கொண்டு டீன் பிரானாக் ஓடுவார். இறுதியில் அவன் யார் என்பதை பார்வையாளர்களான நமக்கு காண்பித்து இருப்பார்கள் ஆனால் பிரானாக் தம்பதியருக்கு தெரியாமல் போய்விடும். இங்கே நம் கண் முன்னே அவிழ்ந்த மர்ம முடிச்சும் கூட பெரிய சுவாரஸ்யத்தை கொடுக்கும் ஒன்றாக இருக்காது.
மர்ம கதைகளில் பொதுவாக மூன்று சாத்தியங்கள் உண்டு. ஒன்று கதையின் பாத்திரங்களுக்கு உண்மைகள் தெரிந்திருக்கும் பார்வையாளர்களாகிய நமக்கு தெரியாமல் இருக்கும். இன்னொரு வகையில், உண்மைகள் நமக்கு தெரிந்திருக்கும் ஆனால் கதையின் பாத்திரங்களுக்கு தெரியாமல் இருக்கும். மூன்றாம் வகை ஒன்றுண்டு. யாருக்குமே உண்மைகள் தெரியாது. கதையின் பாத்திரம் உண்மையை கண்டுகொள்ளும் போது பார்வையாளர்களாகிய நாமும் கண்டுகொள்வோம். மற்ற இரண்டு வகைகளை விட இது சிறந்த உத்தி. துப்பறியும் கதைகளில் அதிகம் பயன்படும் உத்தியும் கூட. துப்பறியும் நாயகன் உண்மையை கண்டுகொள்ளும் போது தான் நாமும் கண்டுகொள்வோம். இந்த திரைக்கதையில் பிரதான பாத்திரங்களுக்கு உண்மை தெரியாமல் போகும் போது, ஏன் அவர்கள் சுரங்கப்பாதையை கண்டுபிடிப்பதாகவும் அதில் ஒருவனை துரத்திக் கொண்டு ஓடுவதாகவும் காட்சி அமைக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. இங்கே போடப்பட்ட மர்ம முடிச்சும் அது அவிழ்க்கப்பட்ட விதமும் வீண்தான்.
இது போன்ற சிக்கல்கள் இருந்தாலும் இந்த திரைக்கதையில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் கதாப்பாத்திர வடிவமைப்பு. பொதுவாக மர்ம கதைகளில் சந்தேகத்திற்கு இடமாக வலம்வரும் பாத்திரங்கள் எதுவும் இறுதியில் குற்றவாளியாக இருக்காது. பார்வையாளர்களை (அல்லது வாசகர்களை) குழப்பவே அந்த பாத்திரங்களின் மீது சந்தேக நிழல் விழும்படி சித்தரித்திருப்பார்கள். இந்த புரிதலோடு இந்த கதையை அணுகினாலும், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் மீதும் சந்தேகம் வலுக்கும் வண்ணம் சம்பவங்கள் நிகழும். அந்த பாத்திரங்கள் வாட்சராக இருக்காது நம்மை குழப்பவே அப்படி சித்தரிக்கிறார்கள் என்று எண்ணும் போது, இல்லை அது தான் வாட்சர் என்று நம்பும்படி அந்த பாத்திரங்கள் ஏதாவது வேலை செய்யும். உதாரணமாக நோராவின் தோழியாகவும் ரியல் எஸ்டேட் ஏஜென்ட்டாகவும் வரும் கரேன் கதாப்பாத்திரம்.
கதையின் தொடக்கத்திலிருந்தே அவள் மீது நமக்கு சந்தேகம் இருக்கும். அந்த வீடை விற்றுவிடும்படி அவள் நோராவை தூண்டிக் கொண்டே இருப்பாள். குறைந்த விலையில் அந்த வீட்டை வாங்க அவள் தான் வாட்சர் கதையை தொடங்கி வைத்தாளோ என்று கூட தோன்றும். ஆனால் அவ்வளவு எளிதாக உண்மை இருக்காது என்று எண்ணும் போது, அவள் தான் வாட்சர் என்று நம்பும் அளவிற்கு அவள் பல வேலைகளை செய்வாள். இது போல அக்கம்பக்கத்தினர் துப்பறியும் பெண்மணி தியோதரா என பலரின் மீதும் சந்தேக நிழல் தொடர்ந்து படியும் வண்ணம் அந்த கதாப்பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருப்பதும், இறுதியில் நோரா பிரானாக் மற்றும் டீன் பிரானாக் கதாப்பாத்திரங்கள் நாம் எதிர்பாராத மாற்றங்களை அடைவதும் (Character Transformation) இந்த திரைக்கதையின் பெரிய பலம்.
“The spirit of Creation is the spirit of Contradiction- the breakthrough of appearances toward an unknown reality”- John Cocteau
கான்ப்ளிக்ட் (Conflict)
கடந்த அத்தியாயத்தில் கதாநாயகன் பற்றி பேசும் போது எந்த திரைக்கதையாக இருந்தாலும் கதாநாயகனோடு பார்வையாளர்களுக்கு தொடர்பு ஏற்பட வேண்டும் என்றோம். ஒரு திரைக்கதையாசிரியன் எப்படி இதை எல்லாம் திட்டமிட்டு எழுதுவது? இதற்கு ராபர்ட் மெக்கீ என்ன சொல்கிறார்?
ஒரு கதாப்பாத்திரத்தை அதன் சூழலில் வைத்து சிந்திக்க வேண்டும் என்கிறார் மெக்கீ. அதவாது நாம் அந்த காதாப்பாத்திரமாக இருந்தால், அந்த சூழலை எதிர்கொண்டால், என்ன செய்வோம் என்று யோசிக்க வேண்டுமாம். அந்த பாத்திரத்தை புரிந்து கொண்டு காட்சியை எழுதும் போது காட்சியோடு நமக்கு எமோஷனல் தொடர்பு ஏற்படும். அப்போது பார்வையாளர்களோடும் அத்தகைய தொடர்பு உருவாகும் என்கிறார் மெக்கீ. இதை அவர் ‘Writing from the Inside out’ என்கிறார். அதாவது நாம் அந்த காதாப்பாத்திரத்தின் உள்ளிருந்து எழுதுகிறோம்.
இப்படி ஒரு கதாபாத்திரத்தை எழுதும் போது, ஒரு கதாப்பாத்திரத்திற்கு (அல்லது கதாநாயகனுக்கு) என்னென்ன பிரச்சனைகள் (conflict) வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கதாபாத்த்திரத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளை (முரண்களை), பொதுவாக அகம் (internal/Inner Conflict), புறம் (external conflict) என்று இரண்டாக பிரிக்கலாம். மெக்கீ புறக் காரணங்களால் நிகழும் பிரச்சனைகளை Personal conflict மற்றும் extra personal conflict என மேலும் இரண்டு வகைகளாக பிரிக்கிறார். இவற்றை இன்னும் விலாவரியாக கவனிப்போம்.
முதலில் அகமுரண். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு முதல் சிக்கல் அவனால் தான் உருவாகிறது. அவனுடைய உணர்வு போராட்டங்கள், மனக்குமுறல்கள், உளவியல் சிக்கல்கள் போன்றவற்றை இந்த வகையில் சேர்க்கலாம். பொதுவாக படங்களில் பிரதான பாத்திரத்திற்கு புற காரணங்களால் மட்டுமே பிரச்சனைகள் வருவதாக கதைகளை அமைத்திருப்பார்கள். புறக்கூறுகள் கதையை நகர்த்தும் என்றாலும், நம் நாயகனுக்கு அகத்திலும் பிரச்சனைகள் நிகழ்கிறது என்று கதையை அமைக்கும் போது அந்த படைப்பில் எமோஷன் சேருகிறது. அர்த்தம் சேருகிறது. எனவே தான் அகப் போராட்டம் முக்கியமாகிறது.
வெறும் அகக்காரணங்கள் மட்டுமே ஒருவனுக்கு பிரச்சனையாக இருக்கிறது என்று நாவல் எழுதி விட முடியும். ஆனால் திரைக்கதை சாத்தியமா? ஏனெனில் திரைக்கதையில் காட்சிகளை சுவாரஸ்யமாக்க நமக்கு புறக் காரணிகள் தேவைப்படுகிறது. எனினும் அங்கே அகக் காரணிகளையும் அடிநாதமாக சேர்த்துக் கொள்ளும் போது கூடுதல் சுவாரஸ்யம் கிட்டிடும். அகப் பிரச்சனைகளை புறத்தே நிகழும் பிரச்சனைகளாக உருவகப்படுத்துவதன் மூலம் இதை சாத்தியப்படுத்த முடியும். (இந்த உத்தியை மையப்படுத்தியதே என்னுடைய ‘நனவிலி சித்திரங்கள்’ குறுநாவல். அந்த கதையில் மனநல காப்பகத்தில் இருக்கும் நாயகன், பலரை தன்னுடைய வில்லன்களாக கருதுவான். ஆனால் அவர்கள் எல்லாமே அவனுடைய அகச் சிக்கலின் பிரதிபலிப்பாக இருப்பார்கள்.)
இங்கே Inner conflict பற்றி மட்டுமே வலியுறுத்தி பேசுவதற்கு காரணம் இருக்கிறது. பொதுவாக திரைக்கதை எழுதும் போது நாம் ஹீரோவிற்கு என்ன பிரச்சனை வரப்போகிறது அல்லது யாரால் பிரச்சனை வரப்போகிறது என்பதையும் அறிந்திருப்போம். அதாவது External Conflict என்ன என்பது நமக்கு எளிதாக தெரிந்துவிடுகிறது. அதனால் வில்லன் ஒரு அரசியல்வாதி, டான், Psycho என்றெல்லாம் யோசித்துவிடுவோம். ஆனால் பல நேரங்களில் எமோஷனல் பிரச்சனைக்கு தான் முக்கியத்துவம் தராமல் போய்விடுகிறோம். அப்படி செய்யாமல் ஆரம்பத்திலிருந்தே நம் பாத்திரத்தின் அகப் போராட்டத்தைப் பற்றிய தெளிவு நமக்கு வேண்டும்.
அகப்போராட்டம் திரையில் கொணரும்படி காட்சிகளை உருவாக்க வேண்டும். இது கடினமாக இருந்தாலும், இதுதான் நல்லத் திரைக்கதைக்கும் சுமாரான திரைக்கதைக்கும் இருக்கும் வித்தியாசம் என்று திரைக்கதையாசிரியர்கள் டேவிட் ஹோவர்ட் மற்றும் எட்வர்ட் மாப்லீ ஆகியோர் சொல்கிறார்கள் (Ref Book: Tools of Screenwriting).
உதரணாமாக, நாயகன் கல்லூரி படிக்கும்போது ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். ஒரு கட்டத்தில் அந்த காதல் முறிந்துவிடுகிறது. அந்த வலி அவன் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. பல வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு காதல் மலர்கிறது. இப்போது அவன் தன் வலியை வசனமாக சொல்லலாம். ஆனால் திரைக்கதையில் காட்சிகளை உருவாக்குவதே பலம் அல்லவா!
இப்போது நாயகனை அவனுடைய காதலி ஒரு ஸ்பெஷல் பார்ட்டிக்கு அழைத்துச் செல்கிறாள் என்பது போல் ஒரு காட்சியை எழுதுகிறோம். அதே போன்ற ஒரு நிகழ்விற்குதான் பலவருடங்களுக்கு முன்பு அவன் முன்னாள் காதலி அழைத்துச் சென்றிருப்பாள். அங்கு தான் அவன் காதல் முறிந்தது என்றால் காட்சியில் கூடுதல் எமோஷன் சேர்ந்து விடுகிறது. இப்போது அவன் அந்த நிகழ்வை தவிர்க்க போராடுவான். அங்கிருந்து கிளம்ப முறச்சிசெய்வான். அவன் ரெஸ்ட்லஸ்சாக மாறுவதாக நாம் காட்சியை அமைப்போம். இங்கே அவனுக்குள் இருக்கும் அகப்போராட்டம் காட்சிகளிலேயே வெளிப்பட்டுவிடும். அதே சமயத்தில் பொருத்தமே இல்லாமல் எமோஷனை திணிப்பதையும் தவிர்க்க வேண்டும். இயல்பாக எமோஷன் வெளிப்படுவதை போல் கதை அமைப்பதே முக்கியமாகிறது.
ஜேம்ஸ் பாண்ட் போல் ஒரு உளவாளியை மையமாக வைத்து இண்டர்நேஷனல் ஆக்சன் கதை எழுதினாலும், இது போன்ற எமோஷனல் (காதல்) காட்சிகள் பலம் சேர்க்கும் அல்லவா! நம்மை அந்த பாத்திரத்தோடு நெருங்க வைக்கும் அல்லவா! அதனால் தான் எமோஷனல் (இன்டர்னல்) கான்பிளிக்ட் முக்கியம் என்கிறோம்.
அடுத்து external conflict. புற காரணிகளால் நம் கதாப்பாத்திரத்திற்கு உருவாகும் பிரச்சனைகள். நாம் முன்னர் குறிப்பிட்டது போல் மெக்கீ இதை இரண்டு வகையாக பிரிக்கிறார். நண்பர்கள், குடும்பம், காதலன் காதலி ஆகியறோடு ஏற்படும் முரணை Personal conflict என்கிறார். அதற்கு அடுத்த கட்டமாக சமூக அமைப்பினால், நாயகனின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு வெளியே இருக்கும் மனிதர்களால் ஏற்படும் பிரச்சனையை extra personal conflict என்கிறார் அவர். இந்த மூன்று போராட்டங்களும் நிறைந்ததே நம் கதாப்பாத்திரத்தின் உலகமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி சொல்கிறார் மெக்கீ.
சரி, இந்த முரண், பிரச்சனை போராட்டம் இதெல்லாம் எப்படி காட்சியில் வெளிப்பட போகிறது? ‘இடைவெளி’ உத்தியை பயன்படுத்துவதன் மூலம் இதை சாத்தியப்படுத்தலாம் என்கிறார் மெக்கீ. அது என்ன ‘இடைவெளி’ உத்தி!
நம் கதாநாயகன் ஏதோ ஒரு விசையத்தை அடைய நினைக்கிறான். அவன் உடனே அதை அடைந்துவிட்டால் அங்கே கதை என்று ஒன்றுமே இல்லை அல்லவா? வேலை வேண்டும், உடனே வேலை கிடைத்து விடுகிறது. காதலை சொன்னதுமே காதல் வெற்றிபெற்று விடுகிறது. இதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது?
நம் கதாப்பாத்திரம் ஆசைப்பட்டது ஒன்றாக இருக்க வேண்டும். நடப்பது ஒன்றாக இருக்க வேண்டும். ஆசைக்கும் சாத்தியப்படுதலுக்கும் இடையே இருக்கும் இடைவெளியே (Gap), திரைக்கதையை நகர்த்தப் போகிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இந்த இடைவெளி தான் திரைக்கதையின் கான்ப்ளிக்ட் (Conflict) அதாவது முரண், பிரச்சனை, போராட்டம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
நாயகன் காதலை சொல்கிறான். அந்த பெண்ணிற்கும் நாயகனை பிடித்துவிட்டது. அடுத்து கல்யாணம் தான் என்பது நாயகனின் எதிர்பார்ப்பு. ஆனால் அந்தப் பெண்ணின் அண்ணன் ஒரு பெரிய ரவுடி என்பது நிஜம். இங்கே நாயகனின் முன்னேற்றம் தடைப்படுகிறது. அவனுடைய ஆசைக்கும் அது சாத்தியப்படுதலுக்கும் இடையே இடைவெளி உருவாகிறது. அதுவே கதையை சுவாரஸ்யமாக வளர்க்கிறது.
அவன் பல முயற்சிகளை மேற்கொள்கிறான். நினைத்தது கிடைத்துவிடும் என்று நினைக்கையில், மீண்டும் ஒரு இடைவெளி உருவாகிறது. அது பெரிய இடைவெளி. அதாவது பெரிய பிரச்சனை. அண்ணனின் ஆட்களை அடிக்கிறான். அது சிறு இடைவெளி தான். எப்படியாவது நாயகியின் குடும்பத்தோடு இணக்கமாகிட வேண்டும் என்பதே நாயகனின் ஆசை. ஒருகட்டத்தில் நாயகியின் பெற்றோருக்கு நாயகனை பிடித்து விடுகிறது. ஆனால் தவிர்க்க முடியாத சூழலில், நாயகன் நாயகியின் அண்ணனையே அடித்துவிடுகிறான். இப்போது எதிர்பார்ப்பிற்கும் அது சாத்தியப்படுதலுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உருவாகிறது. இப்படியாக இந்த இடைவெளி இறுதிவரை அதிகரித்துக் கொண்டே போகும். நாயகனின் ஒவ்வொரு செயலும் எதிரியை தூண்டும். எதிரியின் எதிர்வினையால் நாயகனின் பயணம் தடைப்படும். ஒன்றை அடைய ஒன்றை இழக்க வேண்டும் என்கிற சூழலுக்கு நாயகன் தள்ளப்படுகிறான். இறுதியாக அவன் தன் புத்தி, பலம் என எல்லாவற்றையும் திரட்டி போராடுகிறான். இடைவெளி இல்லாமல் போகிறது. அவன் தன் கனவை அடைகிறான். அதுவே க்ளைமாக்ஸ். (கனவு சாத்தியப்படாமல் போகும் டிராஜெடி கதைகள் விதிவிலக்கு என்பதால் அவற்றை இங்கே குழப்பிக் கொள்ள வேண்டாம்).
மேற்சொன்ன கூற்று எத்தகைய கதைக்கும் பொருந்துவதை கவனிக்கமுடியும். போலீஸ் நாயகன் கொலைகாரனை நெருங்கிவிட்டோம் என்று நினைக்கும் போது மேலும் ஒரு கொலை நடக்கிறது. அல்லது ஒரு முக்கிய நபரோ, நாயகனுக்கு வேண்டப்பட்ட நபரோ கூட கொல்லப்படலாம். அடுத்து அவன் என்ன செய்ய போகிறான்? கதை விறுவிறுப்பாகிறது அல்லவா? எப்படியாவது அகில இந்திய போட்டியில் ஜெயித்து விட வேண்டும் என்று ஒரு விளையாட்டு வீரர் எண்ணும் போது, அவரது ஆஸ்தான பயிற்சியாளரை மாற்றி விடுகிறார்கள். எதிர்ப்பார்க்காத இடைவெளி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மேற்கூறிய உத்திகள் எல்லாம் வெறும் நாயகனுக்கு மட்டும் சொல்லப்பட்டது அல்ல என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் இது பொருந்தும். நாயகனின் கோணத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு பாத்திரத்தின் கோணத்திலும் கதையை யோசித்து எழுத வேண்டும் என்பதே மெக்கீ நமக்கு சொல்வது. ஒரு திரைக்கத்தியாசிரியன், ஒரு காட்சியில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரமாகவும் மாறி அதனை எழுத வேண்டும். பின் ஒரு பார்வையாளனாக மாறி, நாம் எத்தகைய காட்சியை எழுதியிருக்கிறோம் அதற்கு மற்ற கதாப்பாத்திரங்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். எதிர்வினைகள் எப்படி இருக்கிறது என்பதை வைத்தே ஒரு திரைக்கதையின் சுவாரஸ்யம் இருக்கிறது என்கிறார் மெக்கீ.
ஒரு கதாநாயகனின் (கதாப்பாத்திரத்தின்) பயணத்தில் உருவாகும் ‘இடைவெளிகளும், அவனின் செயலுக்கு மற்றவர்களாற்றும் எதிர்வினைகளும் தான் பார்வையாளர்களை பாதிக்க போகிறது என்கிறார் மெக்கீ. நாயகனுக்கு வேலை கிடைக்க வேண்டும், அவன் போட்டியில் ஜெயிக்க வேண்டும், கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டும் என்றெல்லாம் பார்வையாளர்கள் யோசிக்கத் தொடங்கி விடுவார்கள். பார்வையாளர்கள் கதையோடு கதாப்பாத்திரத்தோடு ஒன்றும்போது அந்த திரைக்கதை அர்த்தமுள்ளதாகிறது. அந்த படத்திற்கும் வெற்றி சாத்தியமாகிறது.
“As soon as you’re born they make you feel small
By giving you no time instead of it all”- John Lennon
தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து கட்டுப்படுத்த போனதால், தன்னால் வழக்கம் போல் எட்டு மணிக்கு வீட்டுக்குக் கிளம்ப முடியவில்லை என்ற கடுப்பில், எப்படியாவது இந்தவருடம் இந்த வேலையை விட்டுப் போய் விட வேண்டும் என்ற சிந்தனையில் தன் போலிஸ் உடையை கலட்டி வைத்துவிட்டு காலையில் போட்டுவந்த மடிப்பு கலையாத சிகப்பு சட்டை நீல நிற பேண்ட்டை போட்டுக் கொண்டு அவர் ஓய்வறையில் இருந்து வெளியே வந்த போது அநிருத்தன் தலையை தொங்கப் போட்ட வாக்கில் போலிஸ் நிலையத்தின் நடு அறையில் நின்றுக் கொண்டிருந்தான்.
“யார் சார் நீங்க?” அவனுடைய நாகரிகமான உடை கன்னியப்பனின் தொனியை நிர்ணயித்தது.
பதில் சொல்லாமல் நின்றுக்கொண்டிருந்த அநிருத்தனிடம் அவர் மீண்டும் சப்தமாக கேட்டார்.
“ஏய் தம்பி! யார் நீ?”
“Till the pain is so big you feel nothing at all” அவன் பாடினான். அவருக்கு புரியவில்லை.
“The scariest moment is always just before you start. After that, things can only get better” – Stephen King
கதாநாயகன்
ஒரு திரைக்கதையில் மூல கதாப்பாத்திரத்தை ப்ரோட்டாகனிஸ்ட் என்கிறோம். ஹீரோ என்கிறோம். கதாநாயகன் என்கிறோம். பொதுவான கதாப்பாத்திரங்களிலிருந்து ஒரு கதாநாயகன் எங்ஙனம் மாறுபடுகிறான்!
கதாநாயகனெனில், அவனுக்கென்று ஒரு தெளிவான நோக்கம் அல்லது இலக்கு இருக்க வேண்டும். அதை அடைய வேண்டும் என்கிற அகத் தூண்டல் இருக்க வேண்டும். அந்த இலக்கு சாத்தியப்படக் கூடியதாய் இருக்க வேண்டும் என்கிறார் மெக்கீ. இதை இன்னும் விலாவரியாக பார்ப்போம்!
மெக்கீ குறிப்பிடும் நோக்கம் அகத்தூண்டல் போன்றவை எல்லாம் மற்ற பாத்திரங்களிடம் இருக்காதா? இருக்கும். இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் நாயகன் எனில் அவனிடம் இதெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதே மெக்கீ சொல்வது.
பொதுவாக ஒரு கதையில் ஒரு நாயகன் தான் இருப்பான். ஒன்றிற்கு மேற்பட்ட நாயகர்கள் இருந்தால் அவர்கள் எல்லோரின் நோக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும். (அப்படி ஒன்றாக இல்லாத போது அது Multi-Protagonist கதையாகிறது.அதாவது பல நாயகர்கள், ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கம். உதாரணம் pulp fiction. இத்தகைய கதைகள் வழக்கத்தில் குறைவு என்பதால், நாம் இதை பற்றி அதிகம் குழப்பிக் கொள்ள வேண்டாம்).
ஒன்றிற்கு மேற்பட்ட நாயகர்கள் எனில், இரண்டு பேராக இருக்கலாம் மூன்று பேராக இருக்கலாம் பத்து பேராக கூட இருக்கலாம். (பத்து பேராக இருந்தால் அது வெப் சீரிஸ் ஆகிவிட வாய்ப்பிருக்கிறது). ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மெக்கீ சொல்வதின் அர்த்தம் என்ன!
செவன் சாமுராய் படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஏழு முக்கிய கதாப்பாத்திரங்கள் இருக்கிறார்கள். அதாவது ஏழு ஹீரோக்கள். (அந்த படத்தில் விவாசாயிகள் கூட ஒருவகையில் ஹீரோக்கள் தான்). ஏழு பேரின் நோக்கமும் கொள்ளையர்களை அழிப்பது தான். இங்கே ஒரு நாயகனின் நோக்கம் நிறைவேறாமல் போகும் போது, இன்னொருவனின் நோக்கமும் தடைப்படும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா! ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் நோக்கம் ஒன்று தான்.
ஆனால் நாம் இந்திய சினிமாவை உதாரணமாக கொண்டு இதை அணுகும் போது மெக்கீ சொல்வதை முழுவதுமாக ஏற்க வேண்டிய அவசியமில்லை. நம் கதையில் இரண்டு நாயகர்கள் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு பேருக்குமே ஆரம்பத்திலிருந்தே ஒரே நோக்கம் இருக்க வேண்டிய அவசியமில்லை. இருவருக்கும் வெவ்வேறு நோக்கங்கள் இருக்கிறது! அல்லது ஒருவனின் நோக்கத்தை நிறைவேறாமல் செய்வதே இன்னொருவனின் நோக்கமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து ஒரே நோக்கத்தை நோக்கி பயணிக்கிறார்கள். இங்கே ஒருவரின் நோக்கத்தை இன்னொரு நாயகன் ஏற்றுக் கொள்ளலாம். அல்லது இருவருமே ஒரு புது நோக்கத்தை நோக்கி பயணிக்கலாம். இணைந்த கைகள், RRR போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
நாயகன் தன் நினைவோடு ஒரு விஷயத்தை அடைய நினைக்கும் போது (Conscious Desire), அதிலிருந்து மாறுபட்ட ஏதோவொன்றை அவன் ஆழ்மனம் தேடுகிறது (Unconscious Desire) என்று கதையை அமைத்தால் படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்கிறார் மெக்கீ. உதாரணாமாக ஒரு நாயகன் இருக்கிறான். ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை செய்கிறான். வேலையில் உயர் பதவியை அடைவதே அவனுடைய நோக்கம். அதாவது Conscious Desire. அதை நோக்கியே அவன் செல்கிறான். எதிர்ப்புகளை சமாளிக்கிறான். இதை சுவாரசியமாக சொல்லிவிட முடியும். ஆனால் அவன் ஆழ் மனதிலும் அதே நோக்கம் தான் இருக்கிறது என்று கதை அமைப்பதில் என்ன புதுமை இருந்துவிட போகிறது? அதுவே அவன் ஆழ் மனம் அந்த வேலையை விட்டுவிட்டு தன் கனவை நோக்கி செல்ல சொல்கிறது என்றால் அங்கே கூடுதல் சுவாரஸ்யம் பிறக்கிறது அல்லவா? ஆழ்மன ஆசை சாத்தியபடுவது சாத்தியப்படாமல் போன்றவற்றை திரைக்கதை முடிவு செய்து கொள்ளட்டும். ஆனால் அவனுடைய ஆழ்மனதில் மாறுபட்ட அல்லது வேறொரு ஆசை இருக்கிறது எனும் போது கதைக்கு புதிய வண்ணம் கிடைக்கிறது. பாலகுமாரனின் இரும்பு குதிரைகளில் வரும் நாயகன் இப்படித்தான்.. வேலை குடும்பம் என்று நிறைவான வாழ்க்கை அவனுடையது. வேலையில் பல சவால்கள் வரும். எல்லாவற்றையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்வான். ஆனால் அவனுடைய ஆழ்மனமோ சினிமா எடுக்க வேண்டும், கவிதை எழுத வேண்டும் என்று ஆசைப்படும். இந்த முரண் தான் அந்த பாத்திரத்தை அழகாக்குகிறது.
அடுத்து சாத்தியப்படக் கூடிய நோக்கம் என்பது என்ன! ஒரு நாயகன் தன் இலக்கை அடைவதற்கு சாத்தியங்களே இல்லை என்றாலோ அல்லது அவன் சாத்தியமே இல்லாத ஒரு இலக்கை அடைந்து விட்டான் என்றாலோ பார்வையாளர்கள் அந்த கதையை விரும்ப மாட்டார்கள். நிஜ வாழ்வில் வேண்டுமானால் சில விஷயங்கள் சாத்தியபடாமல் போகலாம். ஆனால் நம் நாயகனுக்கு சாத்தியப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் அவனுக்கு இருப்பதாக கதையை அமைத்தல் வேண்டும். அதே சமயத்தில் அவன் இலக்கை அடையும் விதம் நம்பும்படி இருக்க வேண்டும்.
பலத்த பாதுக்கப்புகள் நிறைந்த பிரிட்டிஷ் பங்களாவிற்குள் யாருமே நுழைய முடியாது என்று சொல்லிவிட்டால் மேற்கொண்டு கதை இல்லை. நுழைய முடியாத அந்த பங்காளவிற்குள் நுழைவதற்கு நாயகன் முயற்சி செய்து கொண்டே இருக்கிறான். இறுதியில் தன் புத்திசாலித்தனத்தால் அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்கிறான் எனில் கதை வளர்கிறது. சுவாரஸ்யமாக வளர்கிறது. திடீரென்று அவன் மிருகங்களை அவிழ்த்துவிட்டு அங்கிருக்கும் பாதுகாவாலர்களை தாக்குகிறான் என்பது யதார்த்தத்திற்கு அப்பாற்ப்பட்ட கற்பனை தான். ஆனால் மிருகங்களை துரத்தி பிடித்துவைத்துக் கொள்ளும் அளவிற்கு அவனுக்கு உடல்பலமும் திறமையும் இருக்கிறது என்று ஆரம்பத்திலேயே காண்பித்துவிடுவதன் மூலம் அவனுடைய சாகசத்தின் மீது நம்பகத் தன்மை கூடுகிறது அல்லவா! ஆனால் திடிரென்று ஒருவன் விமானத்தை எடுத்து கொண்டு பாகிஸ்தான் சென்று தீவிரவாதியை பிடிக்கிறான் என்றால் நம்ப முடியமால் போகிறது. நம் நாயகனால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் அவனால் அதையெல்லாம் செய்யமுடியம் என்கிற நம்பிக்கை பார்வையாளர்களுக்கு ஏற்பட வேண்டும். அதை ஏற்படுத்துவதே ஒரு திரைக்கதையாசிரியனின் வேலை.
சரி, மேற்சொன்னது போல் ஒரு நாயகன் பாத்திரத்தை எழுத நோக்கம், அகத்தூண்டல், நம்பகத்தன்மை மட்டும் போதுமா என்றால் போதாது என்கிறார் மெக்கீ. வேறு என்ன வேண்டும்! பார்வையாளர்களுக்கும் நாயகனுக்கும் பிணைப்பு ஏற்பட வேண்டும் என்கிறார் அவர். அத்தகைய பிணைப்பு சாத்திய படாமல் போகும் போது கதை பார்வையாளர்களுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. நாயகன் நல்லவனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவன் ஏதோ ஒரு வகையில் பார்வையாளர்களின் மனதை தொட வேண்டும். இவன் என்னைப் போன்றவன் என்கிற எண்ணம் பார்வையாளர்களுக்கு ஒரு நாயகனை பார்க்கும் போது ஏற்பட வேண்டும்.
நாம் சாதாரணாமான ஒரு ஆசாமி. ஆனால் நம் நாயகன் ஒரு ராணுவ வீரன். அல்லது ஒரு விஞ்ஞானி. அல்லது ஒரு விளையாட்டு வீரன். அல்லது ஒரு அரசன். அல்லது ஒரு சாமுராய். அல்லது ஒரு கேங்ஸ்டர். இங்கே நம்மால் எப்படி அவனோடு தொடர்பு படுத்திக் கொள்ள முடியும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? ஏன் நமக்கு ஸ்பைடர் மேன் பிடித்து போகிறது? அவெஞ்சர்ஸ் போன்ற பாத்திரங்கள் பிடித்து போகிறது? இவை அனைத்திற்கும் ஒரே பதில் தான். நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்று அல்லது நாம் அடைய நினைக்கும் ஏதோ ஒன்று அந்த நாயகர்களிடம் இருக்கிறது. அது நம்மோடு தொடர்பாடுகிறது.
நமக்குள் இருக்கும் காதல், பாசம், அன்பு, ஆசை அந்த பாத்திரங்களிடம் இருக்கலாம். நமக்குள் இருக்கும் தேடல் அந்த பாத்திரங்களிடம் இருக்கலாம். நமக்குள் இருக்கும் குறைகள், அல்லது நாம் மறைக்க நினைக்கும் பிழைகள், இச்சைகள் அந்த பாத்திரங்களிடம் இருக்கலாம். அப்போது நாம் அந்த நாயகானாகிறோம். அந்த கதையோடு ஒன்றுகிறோம். அந்த கதாநாயகனின் பார்வையிலிருந்து (ஒரு பார்வையாளராக) கதை உலகை அணுகத் தொடங்கி விடுகிறோம். ஒரு பார்வையாளனாக, கதாநாயகனோடு நாம் ஒன்றாமல் போனால் படத்தோடும் நம்மால் ஒன்ற முடியாது. அவன் என்ன செய்தால் என்ன அல்லது அவனுக்கு என்ன ஆனால் என்ன என்கிற எண்ணம் நமக்கு வந்துவிடும். விவேகம், பீஸ்ட் போன்ற படங்களில் இந்த சிக்கல் இருப்பதை கவனிக்க முடியும். அந்த கதாநாயகர்கள் நமக்கனவார்கள் இல்லை. அல்லது நம்மில் இருக்கும் ஏதோவொன்று கூட அவர்களிடம் இல்லை. எனவே தான் அவர்களோடு நமக்கு எந்த பிணைப்புமே ஏற்படமாட்டேன் என்கிறது. அதனாலேயே படம் பிடிக்காமல் போகிறது.
பொன்னியின் செல்வன் நாவலில் நம்மை கவர்ந்த அளவிற்கு வந்தியத்தேவன் படத்தில் நம்மை கவராமல் போனதற்கு இந்த பிணைப்பு இல்லாததே காரணம். நாவலில் பிணைப்பு ஏற்படும் அளவிற்கு அவனைப் பற்றிய வர்ணனைகள் உண்டு. அவனுடைய லட்சியத்தை பற்றி விவரணைகள் உண்டு. ஆனால் படத்தில் அடுத்தடுத்து வேகமாக நகரும் காட்சிகள் அந்த கதாப்பாத்திரத்தை நம்மிலிருந்து தள்ளியே வைத்திருக்கிறது. அவன் யார்! நாடில்லாத இளவரசன். நம் நாயகன் அவன். அப்படியெனில் அவனுக்கு நாடு கிடைக்க வேண்டும் என்கிற ஆசை நமக்கு வரவேண்டும். எப்படியாவது அவன் இழந்த நாட்டை பெற்று ஒரு அரசனாக ஆகிவிடமாட்டானா என்று எதிர்ப்பார்ப்பு ஏற்பட வேண்டும். ஆனால் அப்படி எதுவும் தோன்றவில்லை ஏனெனில் அவனோடு நாம் ஒன்றவில்லை. ஒன்ற முடியவில்லை. அவனுடைய பிரச்சைனைகள் கனவுகள் எதுவுமே அடிக்கோடிட்டு காட்டப்படவில்லை. இன்னொருவன் சொல்லும் செய்தியை சுமந்து வருபவன் என்ற அளவிலேயே அவன் நமக்கு அறிமுகமாகிறான். அதனால் அவன் செய்வது எல்லாம் நமக்கு அந்நியமாக இருக்கிறது. எனவே தான் எந்த திரைக்கதையாக இருந்தாலும் கதை நாயகனோடு பார்வையாளர்களுக்கு தொடர்பு ஏற்பட வேண்டும்.
ஒரு திரைக்கதையாசிரியன் எப்படி இதை எல்லாம் திட்டமிட்டு எழுதுவது? இதற்கு ராபர்ட் மெக்கீ என்ன சொல்கிறார்?
வணக்கம். என்னுடைய அடுத்த நாவல் ‘ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்’ வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.
நன்றி
கதைச்சுருக்கம்
விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள். *** தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைரத்தை திருடிவந்து பூஜை செய்தால் பார் போற்றும் பணக்காரனாகலாம் என்று சங்கு சாமியார் சுனில் ஜெயினிடம் சொல்ல, அவர் தன் ஆஸ்தான அடியாள் பழனியை வைரத்தை கவர்ந்து வர அனுப்புகிறார் *** சிறுசிறு கொள்ளைகளை செய்து வாழ்க்கையை ஓட்டிவந்த ‘டான் நம்பர் ஒன்’, இறுதியாக தீபிகா வீட்டில் இருக்கும் வைரத்தை கொள்ளை அடித்துகொண்டு வெளிநாட்டிற்கு தப்பிவிட திட்டம் தீட்டுகிறான். *** மாடல் அழகிகளை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் அனிருத்தின் பார்வை தீபிகாவின் மீது பட, அவன் தீபிகாவை கடத்தி வரும்படி தன் அடிமை இடும்பனுக்கு கட்டளை இடுகிறான். *** இவர்கள் எல்லோரும் ஒரு சுபயோக சுப இரவில் தீபிகாவின் வீட்டிற்குள் நுழைகிறார்கள்… ***