ஒரு இலக்கிய விமர்சகர்


இன்று தமிழின் பிரபல இலக்கிய விமர்சகராக அறியப்படும் ரகு ஒருகாலத்தில் ரஹோத்தமன் என்ற பெயரில் புனைவுகள் எழுதினார் என்பது இன்றைய இணைய சமூகத்தில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் எழுதிய மூன்று புனைவுகளிலும் புனைவுத் தன்மை துளிக் கூட இல்லை என்று அப்போதைய பிரபல டெல்லி விமர்சகர் குற்றம் சாட்ட, “அது பின்நவீனத்துவ புனைவு உனக்கெல்லாம் புரியாது” என்று ரஹோத்தமன் மூன்று சந்தாதாரர்கள் கொண்ட இரும்பு யானை (தனி சுற்றிற்கு மட்டும்) இலக்கிய இதழில் காட்டமாக ஒரு எதிர்ப்பு கட்டுரை எழுதியும் டெல்லிக்காரர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

“பின்நவீனத்துவம் என்றாலே வெட்டி ஓட்டுவது போல் இருக்க வேண்டிய அவசியமில்லை ரஹோத்தமா” என்று டெல்லிக்காரர் பதிலுக்கு சொன்னது இன்றுவரை ரகுவின் காதுகளில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது.

Oru ilakiya vimarsagar.jpg

Pic courtesy: Anouar olh

புனைவு எழுதுவது தனக்கு வராது என்று புரிந்துகொண்ட ரஹோத்தமன், விமர்சனம் எழுதி பிழைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தார். ஆனால் தஸ்தாவ்ஸ்கி, பாப்லோ நெருதா, இத்தாலோ கால்வினோ, தரிசனம், நிகழ மறுத்த அற்புதம், மகா உன்னதம், அடுக்குகள், உள் மடிப்பு, ஆழ்ந்த ரசனை போன்ற டெம்ப்ளேட் வார்த்தைகளை போட்டு (கறார்) விமர்சனம் எழுதி விமர்சனத் துறையில் அவருக்கு முன்னரே சிலர் கோலோச்சி விட்டிருந்தபடியால் அதே பாணியில் ரஹோத்தமன் எழுதிய விமர்சனத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. வாழ்க்கை வெறுத்து, ஒரு பவுர்ணமி நாளில், மெரீனா கடலில் குதித்துவிடலாம் என்று அவர் போன போது தான் அந்த தடி புத்தகம் கரை ஒதுங்கியது.

STRAIGHT FROM THE HEART, SHORT STORIES BY COLONEL ABU

புத்தகத்தை எடுத்துப் புரட்டினார் ரஹோத்தமன். பல பக்கங்கள் நீரில் மூழ்கி நைந்து போயிருந்தது. தெளிவாக இருந்த சில பக்கங்களைப் படித்தார். புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ரஹோத்தமனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை என்று எண்ண வேண்டாம்.  அந்த புத்தகத்தை எழுதிய  அபுவிற்கு ஆங்கிலப் புரிதல் சரியாக இல்லாததால் புத்தகம் அப்படி சிக்கலான மொழியில் உருவாகி இருந்தது.

கொலம்பியன் எழுத்தாளரான அபு ஸ்பானிய மொழியில் ஏராளமான சிறுகதைகளை எழுதிக் குவித்திருந்தும் அந்த நாட்டு விமர்சகர்கள் அவரை தொடர்ந்து நிரகாரித்து வந்திருந்தனர். ஹருக்கி முரக்காமியின் மீதும் அகிரா குரோசாவா மீதும் வைக்கப் பட்ட அதே குற்றசாட்டு அபு மீதும் வைக்கப்பட்டது. அதாவது முரக்காமி, குரோசாவாவின் படைப்புகளை போல் அபுவினுடைய படைப்புகளும் மேலை நாட்டு மக்களை திருப்தி படுத்ததுவதையே நோக்கமாக கொண்டிருக்கின்றன, அவரது படைப்புகளில் பிராந்திய தன்மை (குறிப்பாக கரிசல் தன்மை) கொஞ்சம் கூட இல்லை என்று கூறி விமர்சகர்கள் ஒரு சேர கொடி பிடித்தனர். அப்போதுதான் அபுவிற்கு தன் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும் என்ற ஐடியா பிறந்தது. எப்படியாவது இலக்கியத்திற்கான நோபல் பரிசை வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்த அபு மொழிப்பெயர்ப்பாளர்களை தேடத் தொடங்கினார்.

இப்போது போலவே அப்போதும் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் கிடைப்பது குதிரைக் கொம்பாக தான் இருந்தது. இறுதியாக ரபாஸா என்ற அமெரிக்க பேராசிரியரை தொடர்பு கொண்டார் அபு. அது ஈமெயில் அறிமுகமாகி இருக்காத காலம் என்பதால் புத்தகத்தை தபாலில் தான் அனுப்ப வேண்டும் என்கிற சூழல்.

அவ்வளவு செலவு செய்ய வேண்டாம், நான் கொலம்பியா வரும் போது நேரிலேயே புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார் ரபாஸா. சில ஆண்டுகள் கழித்து, சாண்ட்டா மார்த்தா நகரத்திற்கு வந்திறங்கிய ரபாஸா புத்தகத்தோடு தன்னை சந்திக்க வரும்படி அபுவுக்கு கடிதம் எழுதினார். அபு வசித்த அரக்காடாக்கா கிராமத்திற்கும் சாண்ட்டா மார்த்தாவிற்கும் இடையே வெறும் என்பது கிலோமீட்டர் தூரம் தான். ஆனால் அபுவின் மனதிலிருந்த ஈகோ அவரை வெகு தூரம் தள்ளி வைத்திருந்தது. ஒரு எழுத்தாளன் எப்படி மொழிபெயர்ப்பாளனை போய் சந்திப்பது என்று கர்வம் கொண்டிருந்த அபு, ஒரு மாதக் காலம் ரபாஸாவை சந்திக்காமல் இழுத்தடித்தார்.   அப்படியாவது ரபாஸா தன்னை தேடி வருகிறாரா என்று பார்த்தார். ரபாஸா வரவில்லை. இறுதியாக, “காரியம் பெருசா வீரியம் பெருசானா காரியம் தான் பெருசு அபு” என்று அபுவின் மாமா செங்குண்டோ மரணப்படுக்கையில் சொல்லிவிட்டு சாக, அபு தன்னுடைய தொண்ணூற்றி ஆறு சிறுகதைகளையும் எடுத்துக் கொண்டு ரபாஸாவை சந்திக்கச் சென்றார்.

“மன்னிக்கவும் அபு, வேறொரு எழுத்தாளரும் என்னை அணுகினார். அவரின் நாவல் அருமையாக இருந்தது. நீங்கள் வரவில்லை என்பதால் நான் அவரின் நாவலை மொழிபெயர்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்” என்றார் ரபாஸா

“யார் அவன்?” என்று கோபமாக கேட்டார் அபு.

“கேப்ரியல். உங்க ஊர்காரர்தான்”

“அந்தப் பத்திரிகைக்காரனா?

“ஆமா…”

“அவன் என்ன பெருசா எழுதிடுவான்! நேத்து வந்தவன்லாம் எனக்கு போட்டியா?” என்று அபு கோபமாக கத்த, ரபாஸா புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார்.

“அவன் எழுதுறதுலாம் வெறும் குப்பை. நான் வேறொரு நல்ல மொழிபெயர்ப்பாளர பார்த்துக்குறேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினார் அபு. ஆனால் அபுவிற்கு வேறு மொழிப்பெயர்ப்பாளர் கிடைக்கவே இல்லை. சில வருடங்களில், காப்ரியலின் நாவல் ரபாஸாவின் மொழிபெயர்ப்பில் ‘One hundred years of solitude’ என்ற தலைப்பில் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்தது.

அபு சுவற்றில் முட்டிக் கொண்டார். அவருடைய ஆக்ரோசம் தணியவில்லை. நாளுக்கு நாள் அவருடைய வயதோடு சேர்ந்து, பொறாமையும் ஈகோவும் அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில், “நீங்கள் என்ன பெயர்ப்பது மொழி, நானே பெயர்கிறேன்டா மொழி” என்று கோபமாக தன் கதைகளை தானே மொழிபெயர்க்க முடிவு செய்தார்.

உடனே ஒரு ஆக்ஸ்போர்ட் அகராதியை வாங்கி இரவுப் பகலாக போராடி தன்னுடைய கதைகளை மொழிப் பெயர்த்து முடித்தார். ஆனால் அவருக்கு போதிய ஆங்கில அறிவு இல்லாததால், கதைகளில் ஏகப்பட்ட இலக்கணப் பிழை இருந்தது. வாக்கியங்கள் கோர்வையற்று காட்சி தந்தன. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல், பிரிண்ட் ஆண் டிமாண்டில் அந்த புத்தகத்தை ஐம்பத்தி இரண்டு பிரதிகள் பிரசுரித்து ஐம்பத்தி இரண்டு நாடுகளுக்கு கப்பலில் அனுப்பி வைத்தார். இந்தியா வந்த கப்பல் நடுகடலில் கவிழ்ந்துவிட, அந்த புத்தகம் ஐநூற்றி சொச்சம் நாட்டிகல் மைலை சில ஆண்டுகளில் கடந்து ரஹோத்தமனின் கையில் கிடைத்த அந்த நன்னாளில்,

வானில்
மட்டும்
முழுநிலா
தோன்றி யிருக்கவில்லை,
ரஹோத் தமனின்
வாழ்விலும்
தான்…

அந்த புத்தகம் ரஹோத்தமனுக்கு நம்பிக்கையை தந்தது. அபுவின் எழுத்தில் இருக்கும் கோர்வையற்ற தன்மையே (Grammar Mistake) அபுவின் தனித்துவம் என்று மறு நாளே ஒரு பத்திரிகையில் எழுதினர் ரஹோத்தமன். ‘துரை யார்யாரையோ படிக்குது’ என்ற அளவில் அவருக்கு நிறைய வாசகர்கள் உருவானார்கள்.

ரஹோத்தமன் ரகுவானார். அபுவின் எழுத்துக்களோடு ஒப்பிட்டு அவர் எழுதும் விமர்சனத்தை ரசிக்கவே ஒரு பெரும் கூட்டம் உருவானது. ரகுவும் தனக்கென்று ஒரு டெம்ப்ளேட்டை உருவாக்கிக் கொண்டார்.

எந்த விமர்சனமும் நாலு பக்கம் இருக்கும் படி பார்த்துக் கொள்வார். முதல் பக்கத்தில் தன்னைப் பற்றி தானே பெருமையாக எழுதுவார். இரண்டாவது பக்கத்தில் அபுவைப் பற்றி எழுதுவார். மூன்றாவது பக்கத்தில் அபுவின் கதைகளைப் பற்றி சிலாகிப்பார். நான்காவது பக்கத்தில் விமர்சனத்திற்காக எடுத்துக் கொண்ட கதையை அபுவின் கதையோடு ஒப்பிட்டு எழுதுவார்.

கதை பிடிக்காவிட்டால், “அபுவோட ஒப்பிடும் போது இந்த கதை குப்பை என்பேன்…” என்று எழுதுவார்.

பிடித்துவிட்டால், “தமிழுக்கு கிடைத்த அபு..” என்பார்.

வெறும் ஞாயிற்றுக் கிழமை மட்டுமே அவருக்காக பக்கங்கள் ஒதுக்கிய பத்திரிக்கைகள், தினமும் அவருக்காக பல பக்கங்களை ஒதுக்கத் தொடங்கின.

ரகு வளர்ந்தார். ஆர்குட்டில் வாசகர் வட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ரகு நினைத்தால் எதுவும் சாத்தியம் என்று நிலை வந்தது. பேஸ்புக்கும் வந்தது. அவர் வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து வந்த பலரும் தன்னிச்சையாக விமர்சனம் எழுத ஆரம்பித்தனர். ஆனால் யாராலும் ரகுவை நெருங்க முடியவில்லை. எதிரிகள் அதிகமாக அதிகமாக ரகுவின் ஆளுமையும் வளர்ந்தது. அவர் நினைத்தால் கட்டுரைகளை கூட, சிறுகதைகள் என்று நம்ப வைப்பார். நல்ல சிறுகதைகளை உதவாத கதைகள் என்றும் நம்ப வைப்பார். ஐந்து சிறுகதைகளை சேர்த்து இது ஒரு நாவல் என்று நம்பவைப்பர். சுமாரான கதையை தமிழின் ஆகச் சிறந்த கதை என்று நம்ப வைப்பார்.

அவரின் கைகளில் கொட்டுவாங்கவே பல எழுத்தாளர்கள் தங்களின் படைப்புகளோடு அவர் வீட்டு வாசலில் நிற்கத் தொடங்கினர்.

ஒரு கட்டத்தில் தமிழில் நவீன படைப்புகள் தீர்ந்துவிட, சங்க இலக்கியங்கள் பக்கம் தன் பார்வையை திருப்பினார் ரகு.

தொல்காப்பியத்தை எடுத்துக் கொண்டு, “யாருடா அவன் தொல்காப்பியன், குப்பையா எழுதிருக்கான், எங்க அபு போல வருமா…” என்று கேட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. புதுக்கவிஞர்கள் கம்மென்று இருக்க, மூன்று மரபுக் கவிஞர்கள் ரகுவை எதிர்த்து வள்ளுவர் கோட்டத்தில் பசிக்கும் வரை உண்ணாவிரதம் இருந்தனர். ரகு எதற்கும் அசரவில்லை.

“சும்மா போறீங்களா! இல்ல உங்க கவிதைகள விமர்சிச்சு புக்கு எழுதவா?” என்று கேட்க மிரண்டு போன மரபுக் கவிஞர்கள் பின்வாங்கினார்.

அதன்பின் விமர்சகர் ரகுவை விமர்சிக்க யாரும் பிறக்கவில்லை.

இன்று ரகு, தமிழின் ஆகச் சிறந்த இலக்கிய விமர்சகர். தவிர்க்க முடியாத ஆளுமை. அவரது விமர்சனங்கள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. அவுஸ்தெர்லியாவை சேர்ந்த முனைவர் தியான் க்ரே ஜாயரோடு இணைந்து ரகு எழுதிய ‘உலக இலக்கிய விமர்சன கோட்பாடு’ என்ற புத்தகம் இதுவரை பத்து மில்லியன் பிரதிகள் விற்று இருக்கின்றன.

ஏரளமான விருதுகள் அவரை தேடி வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் தங்கள் நாட்டில் நடக்கும் இலக்கிய விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைத்தது.  ஸ்பான்சர்ஷிப்பில் சென்று நாட்டை நன்றாக சுற்றிப் பார்த்தார்.

மாலையில் விடுதியில் ஒயின் அருந்திக் கொண்டிருந்த போது, தொண்ணூற்றி ஒன்பது வயதான கிழவர் ஒருவர் தன் கொள்ளுப் பேரன்களின் தோள் பற்றிக்கொண்டு தள்ளாடி தள்ளாடி ரகுவை நோக்கி நடந்துவந்தார்.

“வணக்கம் señor, நான், எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியா. உங்க விமர்சனம்லாம் படிச்சிருக்கேன். நான் உங்களுடைய பெரிய ரசிகன்” என்று கைக்கூப்பினார் கிழவர்.

அந்த நேரத்தில் அவரை அங்கே விரும்பாத ரகு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார்.

கிழவர் தன் ஜோல்னா பையிலிருந்து ஒரு சிறு புத்தகத்தை எடுத்து நீட்டினார்.

“Aureliano’s Memoirs” என்று அத்த புத்தகத்தில் கொட்டையாக எழுதியிருந்தது.

“இது என்னுடைய லேட்டஸ்ட் புக். அனேகமா இதுதான் என்னுடைய கடைசி புக்கா இருக்கும்.. சின்ன புக்குதான் நீங்க ஒரு நைட்ல படிச்சிடுவீங்க. நீங்க இதப் படிச்சிட்டு நாளைக்கு நடக்கப் போற இலக்கிய விழால நாலு வார்த்த பேசனும். போற உசுரு நிம்மதியா போகும்…”

அந்த புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்ட ரகு, “இந்த வயசுல உனக்கு என்ன கிழவா புக்கு…” என்று தோரணையில் கிழவரைப் பார்த்தார்.

“நாளைக்கு பாப்போம் señor” கிழவர் நகர்ந்தார்.

மறு நாள் ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோரும் ரகுவிற்காக காத்திருந்தனர். அவர் வரவில்லை. முந்தையநாள் இரவில் கே டிவியில் பாட்ஷா படத்தை பார்த்து விட்டு தாமதமாக தூங்கியதன் விளைவு. ஒருங்கிணைப்பாளர் ரகுவை அழைத்து வர இரண்டு பேரை அனுப்பினார்.

அவர் வரும் வரை மக்களை சமாளிப்பதற்காக, அவுரிலியானோ புந்தியாவை பேச வைக்கலாம் என்று முடிவு செய்தார்.

“தொண்ணூற்றி ஒன்பது வயதிலும் அயராது இலக்கியம் வளர்க்கும் எழுத்தாளர் அவுரிலியானோ புந்தியாவை பேச அழைக்கிறேன்…”

நிதானமாக மேடை ஏறினார் அவுரிலியானோ புந்தியா. இவர் என்ன பேசப் போகிறார் என்று எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்தனர். ஓரிருவர் வேண்டா வெறுப்பாக கைத் தட்டினர்.

“Bonjour. நூறு வயசு ஆகப் போகுது. இப்ப திரும்பி பாத்தா நான் என் வாழ்க்கைய இன்னும் சிறப்பா வாழ்ந்திருக்கலாமோனு தோணுது.  எழுத்து எழுத்துன்னு ஓடினேன். நூறு பேரு என்ன வாசிச்ச போது ஆயிரம் பேர் படிக்கணும்னு பாராட்டணும்னு ஆசை. ஆயிரம் பேர் படிச்ச போது லட்சம் பேரு பாராட்டணும்னு ஆசை. ஒரு கட்டத்துல அந்த பாராட்டு தான் எனக்கு பெருசா தெரிஞ்சுச்சு. திமிரும் கர்வமும் ரொம்ப அதிகமாச்சு. பாராட்டுக்காக எழுதினேனே ஒழிய திருப்திக்காக எழுதலா. ரொம்ப லேட்டா தான் புரிஞ்சிச்சு. எழுத்தாளனும் சாதாரண மனுஷன் தான், இந்த புகழ் அங்கீகாரம் எல்லாம் வெறும் மாயைனு. எழுத்தாளர விடுங்க. மத்த மனிஷங்க எப்படி இருக்கீங்க! எப்ப பார்த்தாலும் எதை நோக்கியோ ஓடிகிட்டே இருக்கோம். அங்கீகாரம், பாராட்டு, புகழ், பணம் எதுவுமே பத்தல பத்தலனு நம்மள நாமே ஏமாத்திகிட்டு இருக்கோம்.

“நம்மளோட போலி முகத்த காமிச்சு காமிச்சு நம்ம நிஜ முகமே மறந்து போயிடுது. நான் அதிக நேரம் எடுத்துகுல. உங்க எல்லாருக்கும் ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல.

ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

அவுரிலியானோ புந்தியா கையெடுத்து கும்பிட, அனைவரும் பலத்த கர ஒலி எழுப்பினர். அவர் அமைதியாக தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

தன்னை வரவேற்கத் தான் எல்லோரும் கைத்தட்டுகிறார்கள் என்ற பெருமிதத்தோடு ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தார் ரகு.

“இப்போது The great critic ரகு அவுரிலியானோ புந்தியாவின் புத்தகம் பற்றி பேசுவார்”

“பீசு பீசா கிழிக்கும் போது இயேசு போல பொறுமை பாரு…”

பாட்ஷா படம் தான் அவர் மனதில் ஓடியது. புத்தகத்தை படிக்கவில்லை என்று சொல்ல முடியாது. திரும்பி போக ஸ்பான்சர் தரமாட்டோம் என்று சொல்லிவிட்டால் பிரச்சனை.

சரி சமாளிப்போம் என்று மேடை ஏறினார் ரகு.

தன்னுடைய வழக்கமான நான்கு பக்க டெம்ப்ளேட்டை கையில் எடுத்தார்.

முதலில் தன்னைப் பற்றி பேசினார். அரங்கம் முழுக்க அமைதியாக கேட்டது.

அடுத்து அபுவைப் பற்றி அபுவை சந்தித்ததைப் பற்றி அவரோடு சேர்ந்து உடும்பு கறி உண்டதைப் பற்றி சொன்னார். எல்லோரும் அமைதியாக கேட்டனர். அடுத்து அபுவின் சிறுகதை ஒன்றை ஆராய்ந்து பேசிவிட்டு, இறுதியாக அவுரிலியானோ புந்தியாவின் memoir ஏன் மிகச் சுமாரான புத்தகம் என்று அபுவின் எழுத்தோடு ஒப்பிட்டு பேசினார். கண்ணீல் நீர் வழிய அவுரிலியானோ புந்தியா கேட்டுக் கொண்டிருந்தார். அதை கவனித்த ரகு, அவுரிலியானோ புந்தியா தன்னை அங்கீகரிக்கிறார் என்று முடிவு செய்து தொடர்ந்து பேசினார்.

“அவுரிலியானோ புந்தியாவின் எழுத்தில் செழுமை இல்லை. அதுதான் மிகப் பெரிய சிக்கல். வெறும் செய்தியாக அவருடைய memoir நின்றுவிடுகிறதே ஒழிய உணர்வு ரீதியாக எந்த அதிர்வையும் அது ஏற்படுத்தவில்லை. அவர் இன்னும் நிறைய எழுதி பழக வேண்டும். குறிப்பாக அவர் கொலம்பிய எழுத்தாளர் அபுவை வாசிக்க வேண்டும்…”

அரங்கம் நிசப்தமானது. ஒவ்வொருவரும் அருகில் இருந்தவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர்.

அங்கே நிலவிய அமைதியை கலைக்கும் விதத்தில் ஒரு சிரிப்பு சப்தம் கேட்டது. அதிர்ந்து போய் பார்த்தார் ரகு. முன்வரிசையில் அமர்ந்திருந்த அவுரிலியானோ புந்தியா தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.

ரகு  முறைத்தார்.  அபு சிரிப்பை நிறுத்துவதாக இல்லை.

“ஏன் சிரிக்குறீங்க…” ரகு கோபமாக கேட்டார்.

எழுந்து நின்ற அவுரிலியானோ புந்தியா, “உங்க பேர் என்ன?”

கிழவனுக்கு பைத்தியம் என்று எண்ணிய ரகு அமைதியாக இருந்தார்.

“சொல்லுங்க…”

“ரகு..”

“முழு பெயர்?”

“ரஹோத்தமன்…”

புன்னகை செய்த அவுரிலியானோ புந்தியா சொன்னார்,

“படிச்சசேன், விக்கி பீடியால படிச்சேன். ரகுவோட முழு பெயர் ரஹோத்தமன். அதே மாதிரி தான் உங்களுக்கு புடிச்ச அபுவோட முழு பெயர் அவுரிலியானோ புந்தியா”

மீண்டும் வெடித்து சிரித்தார் அபு (எ) அவுரிலியானோ புந்தியா. மொத்த அரங்கமும் கைகொட்டி சிரித்தது. சிலர் எழுந்து நின்று விழுந்து புரண்டு சிரித்தனர்.

அவமானம் தாங்காமல் அங்கிருந்து கிளம்பினார் ரகு. சென்னை வந்ததுமே அவர் தன் தளத்தில் எழுதினர்,

“பிரெஞ்சு அரங்கில், அறிஞர்கள் என் பேச்சுக்கு எழுந்து நின்று கை தட்டினர்”

ஒரு ஆங்கில நாளிதழ், “Standing Ovation for Indian Literary Critic” என்று ரகுவின் படம் போட்டு கட்டுரை வெளியிட்டது.

***

ரகு போலி தான். அவரைப் பற்றி நாம் அலட்டிக் கொள்ள  தேவையில்லை. உண்மையில் வாழ்க்கையில் நாம் நிறைய போலிகளை கடந்து வருகிறோம். அவர்கள் யாரைப் பற்றியும் நாம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. அபு அரங்கில் பேசியதை மட்டும் கருத்தில் கொள்வோம். அது தான் நமக்கான புத்தாண்டு செய்தியும் கூட.

“வாழ்க்கைல பொறாமை வேணாம், கர்வம் வேணாம், அன்பா இருங்க. அன்பா இருக்க முடிலனாலும் யாரையும் வெறுக்காம அமைதியா இருங்க. யாரோடும் ஒப்பிட்டு மனச குழப்பிக்காதீங்க. உங்க வேலைய நீங்க செய்ங்க. உங்களுக்கு வர வேண்டிய அங்கீகாரம் தேடி வரும். வரலானும் பரவால. மன திருப்திக்கு இணையான அங்கீகாரம் எதுவுமே இல்ல. ஆசைப்பட்டது நடந்தா சந்தோசப் படுங்க. நடக்கலானா நல்ல அனுபவம் கிடச்சிதுன்னு இன்னும் அதிகமா சந்தோசப் படுங்க. நம்ம சுற்றமும் நட்பும் நமக்கு எப்பவும் முக்கியம். அவங்களுக்காக விட்டுக் கொடுத்து வாழுங்க. அன்பு நேசத்த விட எதுவும் பெருசு இல்ல. அதை என்னைக்குமே உதாசீனப் படுத்தாதீங்க. Live and let live”

Happy New Year Folks.

With love

Aravindh Sachidanandam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.