முன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்


நண்பர் ஆரூர் பாஸ்கரின்  ‘அந்த ஆறு நாட்கள்’  குறுநாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து…

புயலுக்கு முன்…

கடல் கடவுள் போசிடானின் கோபமே புயலாக, சூறாவளியாக வெளிப்படுகிறது என்ற பண்டைகால கிரேக்கர்களின் நம்பிக்கைக்கும், கடலின் மேற்பரப்பில் ஏற்படும்  காற்றழுத்த தாழ்வு நிலையே புயலாக உருவெடுக்கிறது என்ற புரிதலுக்குமிடையே மனித இனம் பெரிதும் வளர்ந்துவிட்டது. மனிதன் கண்டுகொண்ட தொழிநுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆனால் இயற்கை இயற்கையாகவே சீரிய காலம் போய், கடந்த அறைநூற்றாண்டில் மனிதனின் பேராசைகள் இயற்கையை அதிகமாகவே சீண்டி (சுரண்டி)விட்டதால்தான், இயற்கை பூமி மீது இறக்கம் காட்டாமல் வழக்கத்தைவிட அதிகமாகவே பூமியைத் தாக்குகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. பூமி வெப்ப மயமாதல், மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றம் இதெல்லாம் மனிதனின் பேராசையின் பயன்கள். ஒவ்வொரு முறையும் இயற்கை, புயலாக, வெள்ளமாக, அடைமழையாக மனிதனை நோக்கி சீறும் போது மட்டுமே, மனிதனால் இயற்கையை என்றுமே வெல்ல முடியாது என்ற உண்மை நமக்கு உரைக்கிறது. இதற்கு வளர்ந்த நாடுகளும்  விதிவிலக்கல்ல.

அதுவும் குறிப்பாக சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு சூறாவளி தாக்குதல் என்பது வாழ்வின் ஒரு அங்கமாக போய்விட்டது. அதில் அமெரிக்க மாநிலங்களிலேயே அதிக சூறாவளியை சந்திக்கும் மாநிலமான ப்ளோரிடாவை, கடந்த ஆண்டு (2017) தாக்கிய  இர்மா சூறாவளியை மையமாக வைத்து நண்பர் ‘ஆரூர்’ பாஸ்கர் புனைந்திருக்கும் குறுநாவலே ‘அந்த ஆறு நாட்கள்’

Irma3

பெரும் ஆபத்தை விளைவிக்க கூடிய கேட்டகிரி ஐந்து வகை ‘இர்மா’ புயல், கதை நாயகன் பரணி வசிக்கும் ப்ளோரிடாவை நோக்கி வந்துகொண்டிருக்கும் நாளில் கதைத் தொடங்குகிறது. பின் அவனுள் நிகழும் போரட்டமே இந்நாவல். ஆனால் வெறும் அகப் போராட்டமாக மட்டும் நாவல் நின்றுவிடவில்லை. அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி, அங்கே இருக்கும் மனிதர்களைப் பற்றி, அவர்களின் பாசங்குகளைப் பற்றி, அந்த நிலத்தின் அரசியல், கொள்கை மாற்றங்களைப் பற்றி, அங்கே இந்தியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பற்றி,  மூலக் கதையிலிருந்து விலகாமல் கதையினூடே பதிவு செய்துகொண்டே போகிறார் பாஸ்கர். அதுவே இந்த நாவலின் சிறப்பம்சமாக கருதுகிறேன்.

ஏனெனில் இந்த கரு புதிது. களமும் புதிது. நாம் அதிகம் சந்தித்திராத ஒரு இயற்கைச் சீற்றத்தை மையமாக கொண்டது கதைக்கரு. கதை நடக்கும் தேசமோ, பலருக்கும் பரிச்சயம் இல்லாத ஒரு இடம்.  ஆனால் பாஸ்கரின் விவரணைகள் அந்த தேசத்தை நமக்கு பரிச்சயமாக்குகிறது. அதன் சாலைகள், அந்த ஊரின் கட்டுமானங்கள்,  சுற்றி இருக்கும் ஏரிகள், அதில் தலை தூக்கி பார்க்கும் முதலைகள் என கதைக்கு தேவையான விவரங்கள் சில இடங்களில் தகவல்களாகவும், சில இடங்களில்  துல்லியமான காட்சிகளாகவும் விவரிக்கப்பட்டிருப்பதால் நம்மால் எளிதாக நாவலின் உலகிற்குள் நுழைந்து விட முடிகிறது

மேலும், பரணி ஒரு சாதாரண மனிதனாகவே நமக்கு அறிமுகமாவதால்  அவனோடு நம்மை தொடர்புபடுத்தி கொள்ள நமக்கு அதிக அவகாசம் தேவைப்படவில்லை. அவன் எந்த சாகசங்களையும் செய்யக்கூடியவன் அல்ல. இந்த யதார்த்தமான சித்தரிப்பே கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மையை கூட்டுகிறது. மேலும், நிதானமாக நகரும் கதையில் புயலின் வரவால் பரணியின் வாழ்வில் பரவும் இறுக்கம், ஒரு கட்டத்தில் நம் மனதிலும் பரவுவதை உணரலாம். அதுவே கதைசொல்லலின் வெற்றி.

ஒவ்வொரு முறையும் இயற்கை கருணை காட்டாமல் போகும் நேரத்திலெல்லாம் நம்மிடம் மிச்சமிருக்கும் மனிதமே நம்மை மீட்டெடுக்கிறது. அண்மையில் வீசிய கஜா புயல் வரை இதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் நம்மால் தடுக்க முடிந்த பேராபத்துகளை முன்கூட்டியே தடுப்பதற்கு நமக்கு மனிதத்தோடு சேர்ந்து ஒரு பொறுப்புணர்ச்சியும் தேவைப்படுகிறது. அதை நாவலிலும் பதிவு செய்திருக்கிறார் பாஸ்கர். ‘இந்த பூமி நமக்கானது, மனித இனத்துக்கானது. இதை அடுத்த தலைமுறையிடம் சரியாக ஒப்படைப்பது நமது கடமையாகிறது’. பரணியின் மனதில் எழும் இந்த எண்ணங்கள் தான் நமக்கான முக்கிய செய்தியும் கூட. ஏனெனில், இயற்கையைப் பாதுகாக்க சரசாரி மனிதர்களான நாம் மிக பெரிய மாற்றத்தை எல்லாம் செய்யவேண்டியதில்லை. இயற்கை நேரடியாக நமக்கு தந்த வளங்களையும், நாம் அதிலிருந்து கண்டுகொண்ட வளங்களையும், நம்முடைய முந்தைய தலைமுறைகள் நமக்கு விட்டுவைத்ததைப் போல, அடுத்த தலைமுறைக்கு நாமும் மிச்சம் வைக்க வேண்டுமென்ற பொறுப்புணர்ச்சியோடு நாம் இயற்கையை பாதுகாத்தாலே  போதும். இந்த பூமியும் அதன் வளங்களும் தப்பிக்கும். இல்லையேல் நாவலில் சொல்வது போல், இயற்கை தன் அடியாட்களை பூமி நோக்கி அனுப்பிக் கொண்டே இருக்கும்.

அரவிந்த் சச்சிதானந்தம்
சென்னை. டிசம்பர் 23, 2018

நாவலை அமேசானில் வாங்க