ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு


ஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தில் 2018-யில் தொடர்ச்சியாக பலமாதங்கள் ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு பேசிக் போன் வைத்து கழித்த (சேகரித்த) அனுபவம்

1. நம்முடைய சுற்றத்தை அதிகம் கவனிக்க ஆரம்பிப்போம். மன அமைதி கிட்டும். ரயிலில், பஸ்ஸில், ஷேர் ஆட்டோவில் யாரெல்லாம் வழக்கமாக உடன் பயணிக்கிறார்கள், என்ன உரையாடுகிறார்கள் யார் எங்கே இறங்குகிறார்கள் எல்லாமே கவனத்தில் வரும். எப்போதும் தலையை ஃபோனில் வைத்துக் கொள்ள மாட்டோம். சக பயணிகளை பார்த்து அன்பாக புன்னகை செய்யும் பழக்கம் வளரும். (ஆனால், ஒரேடியாக எல்லாவற்றையும் நோட்டம் விட்டால் மற்றவர்கள் நம்மை ‘Sociopath’ என்றோ ‘Stalker’ என்றோ எண்ணிவிட வாய்ப்பிருக்கிறது.)

2. தெரியாத நம்பர் என்றால் யார் அழைக்கிறார்கள் என்று Truecaller- பார்த்து அறிந்து என்ன பேசுவது என்ற முன்முடிவோடு பேச வேண்டாம். யாராக இருந்தாலும் போனை எடுத்து yes or no என்று உடனுக்குடன் பேசலாம். கொஞ்சம் communication திறன் வளரும். (ஆனால் வெகு நாட்களுக்கு பின்பு, பழைய நண்பர் யாரவது கால் செய்யும் போது, அவரின் நம்பர் இல்லாத பட்சத்தில் தோராயமாக பேசி சமாளிக்கவும் கற்று கொள்ள வேண்டும்)

3. ஃபேஸ் புக் இருக்காது. நிமிடத்திற்கு ஒரு முறை notification பார்க்க வேண்டிய அவசியமில்லை. நியூஸ் பீடில் யார் வானத்தை வில்லாய் வளைக்கிறார்கள் என்றெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. Virtual சாதனைகளை விட வாழ்வின் யதார்த்த தருணங்கள் அதிக சந்தோசம் அளிக்கும். திரையரங்கில் அமர்ந்து கொண்டே படங்களுக்கு பேஸ்புக்கில் running commentary கொடுக்கும் எண்ணம் வராது. படத்தை ஆர்வமாக பார்த்து ரசிக்க முடியும்.

4. மூன்று மாதம் தொடர்ந்து வாட்ஸப்பில் இல்லாமல் போனால் பிரோஃபைல் தன்னாலேயே ‘deactivate’ ஆகி எல்லா குரூப்பில் இருந்தும் விடுதலை கிடைத்துவிடும். தேவையில்லாத குரூப், அளவுக்கதிகமான forwards  போன்ற தொந்தரவுகள் இருக்காது. நேரம் குடிக்கும் conversations இருக்காது. ப்ளூ டிக் பிரச்சனை இருக்காது. காதலர்கள், நண்பர்கள், கணவன் மனைவிக்குள் possessiveness சண்டைகள் வராது. (அதேசமயம் நியூஸ் பேப்பர் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது நல்லது. இல்லையேல் சில முக்கிய நியூஸ் கூட  தெரியாமல் தலை சொரிய வேண்டி இருக்கும்.)

5. இரவில் அரை தூக்கத்தில், போனை நோண்ட மாட்டோம். நாளடைவில் நல்ல தூக்கம் வரும். Fatigue குறையும்.

6. எங்கு போக வேண்டுமென்றாலும் கூகிள் மேப்பை ஆராய வேண்டாம். பெட்டிக் கடையில், ஆட்டோ ஸ்டாண்டில் வழி கேட்டு செல்லும் பழக்கம் வளரும். சந்துகள் எல்லாம் மேப் துணையின்றி நினைவில் இருக்கும்.

7. ஓலா, ஊபர்  பழக்கம் மறக்கடிக்கப்படும். சிவாஜி ரஜினி போல் நான் நடந்தே போய்க்கிறேன் என்ற மனநிலை வந்துவிடுவதால், வழக்கமாக பயணம் செய்பவர்களுக்கு சில ஆயிரங்கள் மிச்சம் ஆகும்.

8. சாப்பாடு விலையை பத்து இருபது ரூபாய் அதிகம் வைத்து விற்கும், food craving ஏற்படுத்தும் ‘app- களிலிருந்து விடுதலை கிடைக்கும். உடம்புக்கும் பர்சிற்கும் நல்லது.

9. ஆடி தள்ளுபடி போல் December year end sale போடும் ஆப்கள் இல்லாமல் போவதால் தேவையில்லாத பொருட்களை வாங்கி குவிக்க மாட்டோம். வீட்டில் அடைசல் குறையும்.

10. செல்ஃபி எடுக்கும் ஆர்வம் குறைந்து போகும். பயணிக்கும் இடங்களை எல்லாம் ஃபோட்டோ எடுக்க தோணாது. சீனரிகளை போட்டோ ஃப்ரேம் வைத்து பார்க்காமல் கண்களால் ரசிக்கத் தொடங்குவோம்.

11. ஒரு கட்டத்தில் மனதளவில் basic phone பிடித்து போய்விடும். ஸ்மார்ட் போன், அந்தஸ்தின் வெளிப்பாடு என்ற எண்ணம் மறைவதால் புதிய மாடல்  போன்களுக்காக பல ஆயிரங்கள் செலவு செய்யும் ஆடம்பரம் தவிர்க்கப்படும்.

12. உடனுக்குடன் எல்லாவற்றையும் கூகிளில் படித்து அளவுக்கு மீறி, தேவையில்லாத தகவல்களை தெரிந்து கொள்ளும் நிலை மாறும். Obsessive compulsion Disorder குறையும்.

Gandikotta_Trip-154-Edit1Image Courtesy: Premkumar Sachidanandam

ஆனால் ‘ஸ்மார்ட் போன்’ தவிர்ப்பது எல்லாருக்கும் எல்லா வேளைகளிலும் சாத்தியமில்லை. சிலருக்கு உடனுக்குடன் மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்கலாம். சில அத்தியாவசிய வேலைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படலாம். அதனால் ஸ்மார்ட் போனை விட்டொழிக்க வேண்டிய அவசியமில்லை. அதன் பயன்பாட்டை  குறைத்து கொள்ள முடியும். தேவை இல்லாத app- களை delete செய்துவிடலாம். சோஷியல் நெட்வர்க்கிங்கை கணினியோடு நிறுத்திக் கொள்ளலாம். மூளையை சோர்வடைய வைக்கும் கேம்களை, app-களை தவிர்க்கலாம். உறங்கும் நேரத்தில் கைக்கு எட்டாத தூரத்தில் போனை வைத்துவிடலாம். குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் தருவதை தவிர்த்தல் நலம். போனிற்கு வெளியே, குடும்பம் நண்பர்கள் என நிஜ மனிதர்களோடு அதிக நேரம் செலவிடுவோம். கொஞ்சம் அதிக ஸ்மார்ட்டாக, மனநிறைவோடு வாழ்வோம்…

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…

அன்புடன்

அரவிந்த் சச்சிதானந்தம்