“இது தமிழின் ஆகச்சிறந்த நாவல்..” பிரபல்ஆஆஆஆ எழுத்தாளர் சொல்லிக்கொண்டிடுருக்கும்போதே அவர் காதை கடித்தார் அந்த புத்தகத்தை எழுதிய பிரபல்அ எழுத்தாளர், “ஐயா அது சிறுகதைத் தொகுப்பு நாவல் இல்ல” சுதாரித்துக் கொண்ட ஆஆஆஆ “நாவல் அளவிற்கு ஆழமான சிறுகதைகளை கொண்ட தொகுப்பு” என்று சொல்லி முடித்தார். ‘ஆஆஆஆ’வின் தீவிர பக்தர்கள் முன்னூறு பேரும் முந்நூற்றியொரு புத்தகங்களை வாங்கி தங்கள் வீட்டில் அடுக்கிக் கொண்டனர். சில மாதம் கழித்து அதில் ஒரு பக்தர்,
“ஒரே நாள்ல 300 பிரதி வித்துச்சு இப்ப மூணாவது பதிப்பு போயிட்டு இருக்கு இப்ப அவர் ‘அ’ கிடையாது ஆ”என்றார். நான் ‘ஓ’ என்றேன்.
“உங்க புக்?” என்றார்.
“நாலு..” என்றேன்
“நாலாம் பதிப்பா” என்று அதிர்ச்சியாக கேட்டார்.
“இல்லைங்க நாலு பிரதி வித்திருக்கு” என்றேன். மிகவும் சந்தோசப்பட்டவர்,
“நீங்க ஒரு நாள் ‘ஆஆஆஆ’ வ சந்திங்க. இப்டி தனியாவே இருந்தீங்கனா பிரபலமாக முடியாது. முதல அவரோட எழுத்துக்கள வாசிங்க.”
அந்த ஆஆஆஆ வின் மிகப்பெரிய நாவல் ஒன்றை நான் வாசித்து வெறுத்துப் போய் தற்கொலை செய்து கொள்ள முயன்றதை அவரிடம் சொல்லவில்லை.
“அந்த (முன்னாள் ‘அ’ இந்நாள் ‘ஆ’ வின-ஒரே நாளில் 300 பிரதி விற்ற) சிறுகதைத் தொகுப்பு உங்களுக்கு புடிச்சிருந்துதா“ என்று பக்தரிடம் கேட்டேன்.
“சிறுகதைத் தொகுப்பா, நாவல் தான அது!” என்றார்