ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது- சிறுகதை


ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம். அது ஏன் அப்படி செய்கிறது என்று நான் கேட்டதே இல்லை. முதலில் அந்த நாய் எப்படி என் பின்னே வந்தது என்று சொல்லிவிடுகிறேன். வழக்கம் போல் நான் அன்றும் நடைபயிற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் நடக்காமல் போனால் உடல் உழைப்பே இல்லாத என் உடம்பு ஊதி நாளையே செத்துவிடுவேனோ என்ற எண்ணம் என்னுள் தலைத்தூக்கிடும். அதைத் தவிர்ப்பதற்காகவே நான் எந்த ஊரில் இருந்தாலும் வாக்கிங் செல்வது வழக்கம். அன்று திருச்சியில் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும் ஒத்தையடி பாதையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தேன். யாருமே இல்லை. பயம். திரும்பி வந்துவிட்டேன்.

நான் பயந்தாங்கொள்ளி கிடையாது. ஆனால் தைரியசாலியும் கிடையாது. ஆள் அரவமற்ற பாதையில் நடந்து செல்ல வேண்டுமென்று ஆசை மட்டும் அடிக்கடி வந்துப் போகும். சென்னையில் இருந்தால், என் வீட்டின் பின்னே இருக்கும் ஏரியை சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் உயரமான பாதையில் நடந்து செல்லும் போது எல்லோரும் நின்றுவிடும் இடத்தில் நிற்காமல் நான் மேற்கொண்டு நடப்பேன். ஏனெனில் ஏரியின் ஒரு பக்கத்தில் சுடுகாடு இருக்கிறது. அதை ஒட்டியிருக்கும் பாதையில் யாரும் நடக்க மாட்டார்கள். எனக்கு அங்கே நடந்தவாறே, இடதுபுறத்தில் இருக்கும் சுடுகாட்டை உற்றுப் பார்த்துக் கொண்டே செல்வது மிகவும் பிடித்தமான விஷயம். ஆனால் அந்த பாதையில் நான் நடந்து செல்வேன் என்று சொல்லமுடியாது. சுடுகாடைப் பார்த்தவாறே ஓடிவிடுவேன். பயம்.

அதே பயம் இப்போதும். குழுமாயி அம்மன் கோயில் பாதையில் யாரோ ஒருவரை அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிக்காக வெட்டிக் கொன்றுவிட்டதாக கேள்விப் பட்டேன். என் கழுத்திலும் ஒரு தங்கச் சங்கிலி இருக்கிறது. அதனால் பயம் வந்திருக்கலாம். மீண்டும் மறுநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றேன். ஒரு சாரைப்பாம்பு என் முன் ஊறிக் கொண்டு வேகமாக புதரினுள் சென்று மறைந்தது. நான் அதன் பின்னே ஓடி அந்த புதரைப் பார்த்தேன். அந்த புதரினுளிருந்து ஒரு நாய் வெளியே வந்தது. ராஜ பாளையம் வகை. பயங்கரமான அதன் கண்களை காணச் சக்தி இல்லாமல், வேகமாக கோவிலை நோக்கி நடந்தேன். அந்த நாய் என் பின்னே வரத் தொடகிற்று. அதுவும், சரியான இடைவெளி விட்டு வந்தது. நான் சில அடி தூரம் சென்றதும், பின்னால் வரும் நாயை நோக்கி கழுத்தை திருப்பி ‘ஏய்’ என்று அதட்டினேன். அந்த நாய் திரும்பி ஓடிவிட்டது. கோவில் வந்தது. இருட்டிக் கொண்டிருந்தது. மீண்டும் வேறு வழியில் திரும்பினேன். இருட்டியப் பின் ஒத்தையடி பாதையில் போவது நல்லதல்ல. இந்த பாதையில் நிறைய கூட்டம் இருந்தது. திரும்பிப் பார்த்தேன். அந்த நாய் வரவில்லை. கவலையாக இருந்தது. ஏன் என்று யோசித்தவாறே வரும்போது, மீண்டும் வெறிச்சோடிய ஒரு பாதை வந்தது. அந்த நாய் எங்கிருந்தோ பாய்ந்து வந்து என் முன்னே நின்றது. நான் உறைந்து நின்றேன். மெதுவாக என்னை நோக்கி வந்து என்னைக் கடந்துச் சென்று என் பின்னே போய் நின்றது. நான் எதிர்ப்பர்த்ததுதான். நான் தொடர்ந்து நடந்தேன். அது மீண்டும் என்னைப் பின் தொடர தொடங்கிற்று. நான் வேகமாக நடந்தால் அதுவும் வேகமாக நடந்தது. நான் நின்றால் அதுவும் நின்றது. எனக்கு அதற்குமிடையே இருக்கும் இடைவெளி ஒரே அளவில் இருக்கும்படி அது நடந்து வந்தது. நான் வேகமாக ஓடினேன். அது என்னை துரத்திக் கொண்டே வந்தது. பஸ் ஸ்டாண்டில் வந்து மூச்சிரைக்க நின்றேன். மினி பஸ்ஸில் ஏறினேன். அதுவும் என் பின்னே ஏறியது.

“ரெண்டு உய்யக்கொண்டான் மலை” நான் சொன்னதும், கண்டக்டர்,

“நீ மட்டும்தான தம்பி இருக்க, எதுக்கு இன்னொரு சீட்டு!”  என்று கேட்டுவிட்டு சிரித்தார். அருகில் இருந்த பாட்டியும் சிரித்தாள். நானும் யோசித்தேன் எதற்கு நாம் இரண்டு டிக்கெட் கேட்டோம் என்று. திரும்பி கோபமாக அந்த நாயைப் பார்த்தேன். அது என்னை சாந்தமாக பார்த்தது. நான் பாத்துக் கொண்டே இருக்கும்போது வீட்டிலிருந்து போன் வந்தது.

“ஜெயந்தி ஸ்டோர் வாசல்ல வட போடுவான். வாங்கிட்டு வா”

பஸ் நின்றதும் எறங்கி அந்த கடைக்கு சென்று பத்து வடைகள் வாங்கினேன். அவன் ஒரு மைக்கா கவரில் வடைகளை போட்டுக் கொடுத்தான். திரும்பி அந்த நாயை பார்த்தேன். பரிதாபமாக நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு என்னை பார்த்தது. நான் கவரிலிருந்து ஒரு வடையை எடுத்து அந்த நாயிடம் எறிந்தேன். கடையில் இருந்தவர்கள் தங்களுக்குள் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டனர். நான் அங்கிருந்து நகர்ந்தேன்.

“வடைய வாங்கித் தூக்கிப் போட்டுட்டு போறான் பாரு… இவன் தான அந்த பெரிய வீட்டுக்கு வந்திருக்கப் பையன்!” யாரோ ஒருவரின் கேலியான குரல்.

“ஆமா ஆமா. சினிமா கதை எழுதுறானாம். பையன் கொஞ்சம்…” அதற்கு மேல் அவர்கள் பேசியது என் காதில் விழவில்லை.

நான் வீட்டுக் கேட்டை அடைந்தேன். என்னிடம் இருந்த கவரை அம்மாவிடம் கொடுத்தேன்.

“பத்து சொன்னனே?” அம்மா கேட்டாள்.

“ஒன்னு அந்த நாய்க்கு போட்டேன்”

“எந்த நாய்?”

“பின்னாடியே தொறத்திகிட்டு வருதே வங்கோல சனியன்”

“என்னடா உளர்ற? யாரும் இல்லையேடா” என்றவாறே அம்மா ரோட்டை எட்டிப் பார்த்தாள்.

“எனக்கு தூக்கம் வருது”

“சாப்ட்டு படுடா…”

நான் காதில் வாங்கிக் கொள்ளமால் பட்டாசலைக்குள் காலடி எடுத்து வைத்தேன். அந்த நாயும் வந்தது.

“போ” என்று கத்தினேன்.

அந்த நாய் அப்படியே நின்று என்னையே பார்த்தாது. நான் படுக்கை அறை வாசலுக்கு சென்று அந்த நாயை நோக்கி திரும்பினேன். அப்படியே அதைப் பார்த்துக் கொண்டே நின்றேன். அதுவும் அப்படியே நின்றது. திடிரென்று திரும்பி உள்ளே ஓடி கதவை சாத்திக் கொண்டேன். அந்த நாயால் இப்போது உள்ளே வரமுடியாது. எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. வருத்தமாகவும் இருந்தது. கதவின் துவரத்தின் வழியே பட்டாசலையை பார்த்தேன். அந்த நாய் அப்படியே நின்றுக் கொண்டிருந்தது.

“ச்சி போ”  மீண்டும் கத்தினேன்.

“யாருகிட்டடா பேசுற?” அடுப்படிக்குள் சென்றுக் கொண்டிருந்த அம்மா கேட்டாள். நான் எதுவும் பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டேன். கண் சொருகியது. தூங்கினேன். சென்னையில் ஏரியை சுற்றியிருந்த பாதையில் நான் நடந்துக் கொண்டிருந்தேன். அந்த நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வந்தது.