ஓகே கண்மணி


மணிரத்னம் படங்களுக்கே உரித்தான டிரைன், மழை, கண்ணாடி, குடை, ஃபிரேம் இன் ஃபிரேம் உத்தி இத்தியாதி இத்தியாதிகளுக்கு குறைவில்லாமல் வந்திருக்கும் அழகான படமிது. மணிரத்னத்தின் மேக்கிங்கை விட்டுவிடுங்கள். மேக்கிங் தாண்டிய விஷயம் இந்தப் படத்தில் ஏராளம்.

திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் லிவிங் ரிலேஷன்சிப்பி‌ல் வாழும் நாயகனும் நாயகியும், வயதான தம்பதியர் வீட்டில் பேயிங்க் கெஸ்ட்களாக வசிக்கின்றனர். திருமண பந்தத்தை உன்னதமானதாக கருதும் வயதான ஜோடிக்கும், திருமணத்தை வெறுக்கும் இளம் ஜோடிக்கும் இடையே இருக்கும் திரை கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதே திரைக்கதை. இங்கே இரண்டு வகையான பந்தத்திற்கு இடையே Parallel  வரைந்திருக்கிறார் மணிரத்னம்.

ok-kanmani-audio-release

இவரால் மட்டும் எபப்டி இவ்வளவு அழகாக திரைக்கதையை எழுத முடிகிறது! ஏனெனில் வழக்கமான காதல் கதை போல் இத்திரைக்கதையை நகர்த்த முடியாது. காதல் என்ற வார்த்தையே ஓரிரு இடங்களில்தான் வருகிறது. இது வெளிப்படையாக காதலைப் பற்றி பேசும் படம் கிடையாது. இது லிவிங் ரிலேஷன்சிப்பி‌ல் காதலைத் தேடும் ஜோடியைப் பற்றியப் படம். அதனால் அவர்கள் காதலர்கள் போல் சண்டை போடுகிறார்கள் என்று காண்பிக்க முடியாது. வெளியே இருந்து யாரோ வந்து காதலர்களைப் பிரிக்கிறார்கள் என்று சொல்லமுடியாது. ஆனாலும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தவேண்டும். இங்கே திரைக்கதையில் external conflict என்று எதுவுமே கிடையாது. எல்லாமே internal conflict தான்.  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான அழகான தருணங்கள் தான் இக்கதை.

கதாபாத்திரங்களுக்கிடையே பெரிதாக எந்த முரணும் இன்றி, அவர்களுக்கு இடையேயான உரையாடல்களையும், அவர்கள் கடந்து செல்லும் தருணங்களை மட்டுமே வைத்து  ஒரு அரைமணி நேரம் கதையை நகர்த்தலாம். ஆனால் மணிரத்னத்தால் அதை மிக அழகாக இரண்டு மணிநேரம் சொல்ல முடிகிறது.  இப்படி திரைக்கதையிலேயே அவர் தேர்ந்த கதைசொல்லியாகிவிடுகிறார். பின் அவருடைய தனித்துவமான மேக்கிங்கும் சேர்ந்துக் கொள்வதால், படம் அநாயசமாக வேறு தளத்திற்கு சென்றுவிடுகிறது. ஒரு காட்சியில் எங்கே Cut To எழுத வேண்டும் என்பதற்கு மணிரத்னம் திரைக்கதை சிறந்த உதாரணம். இங்கே வாழ்க்கைனா என்ன தெரியுமா, திருமணம்னா  என்ன தெரியுமா என்பது போன்ற வசனங்கள் எல்லாம் இல்லை. எல்லாமே subtle-ஆக சொல்லப் பட்டிருக்கிறது. ரிலேஷன்சிப் பற்றிய இந்த படத்தில் கதாபாத்திரங்களின் மனமாற்றமே கதையின் போக்கை மாற்றுகிறது. அவர்கள் எதிர்க்கொள்ளும் சூழ்நிலைகள், அவர்களின் மனப் போராட்டங்கள் அந்த மனமாற்றத்திற்கு காரணமாக இருக்கின்றன. மற்றபடி வேண்டுமென்று ஒரு கதாபாத்திரத்தை திணித்து ரிலேஷன்சிப்  பற்றி போதனை செய்து மூலக் கதாபாத்திரங்களின் மனதை மாற்றும் வேலையை மணிரத்னம் செய்யவில்லை. செய்வதில்லை. எல்லாவற்றையும் அவரால் ரத்னசுருக்கமாக சொல்ல முடிகிறது. பக்கம் ஒன்றிலேயே அவரது கதைகள் ஆரம்பித்துவிடுகின்றன.  அவருடைய கதை மாந்தர்களும் சில நிமிடங்களிலேயே அறிமுகம் ஆகிவிடுகிறார்கள். தங்கள் தேவையை உணர்ந்து கதையில் தங்கள் இருப்பை நிலை நிறுத்திவிட்டு போய்விடுகிறார்கள். இங்கேயும் அப்படிதான்.  இதில் குறிப்பிடப்பட வேண்டிய பாத்திரம் பிரகாஷ்ராஜ் கதாப்பத்திரம். Amour படத்தில் வரும், Jean Trintignant பாத்திரம் போல பிரகாஷ் ராஜ் பாத்திரம் அருமையாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. மற்றபடி இந்தபடமே celebration of moments தான்.

காகிதத்தில் இருப்பதை விசுவலாக மாற்றும் போது அற்புதம் நிகழ வேண்டும். அதை சாத்தியப் படுத்தக் கூடியவர்கள் இங்கே மிகக் குறைவே. நல்லத் திரைக்கதையாசிரியராகவும் நல்ல இயக்குனராகவும் இருக்கும் ஒருவராலேயே அந்த அற்புதத்தை நிகழ்த்த முடியும். மிஷ்கின், அனுராக் கஷ்யப் போன்றோர்க்ளை இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். மணிரத்னம் ஓகே கண்மணி மூலம் மீண்டும் அந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார்.