உலகின் மிக பிரபலமான சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் ஸ்பைடர் மேனுக்கென்று தனி இடம் இருக்கிறது. அனைவரையும் கவரக் கூடிய வகையில் ஸ்பைடர் மேன் செய்யும் பல விஷேச சாகசங்கள் தான் அதற்கு காரணம். விரல் நுனியை பயன்படுத்தி சிலந்தி வலை பின்னும் ஸ்பைடர் மேனை யாருக்குதான் பிடிக்காது?
1962 ஆண்டு காமிக் உலகிற்கு அறிமுகமான ஸ்பைடர் மேன், 1977-ஆம் ஆண்டு தான் வெள்ளித்திரையில் முதன்முதலில் தோன்றினார். காமிக் புத்தக ஹீரோக்களின் மவுசு, திரையில் குறைந்து கொண்டிருந்த கால கட்டம் அது என்பதால், உலகளவில் ஸ்பைடர் மேன் அப்போது பிரபலமாகவில்லை. 2002-ஆம் ஆண்டு சாம் ரியாமி இயக்கத்தில், டோபே மகுரியின் நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர் மேன்’ படம் தான், ஸ்பைடர் மேனுக்கு உலகம் முழுக்க ரசிகர்களை உருவாக்கியது.
பீட்டர் பார்க்கர் என்ற பதினைந்து வயது சிறுவனை மரபணு மாற்றம் செய்யபட்ட சிலந்தி ஒன்று கடித்து விட, அவனுக்கு பல அசாதாரண சக்திகள் கிடைக்கின்றன. அவன் நாளடைவில் ஸ்பைடர் மேனாக உருவாகிறான். சிலந்தி ஆடை ஒன்றை வடிவமைத்துக் கொள்கிறான். பின் எப்படி பல ராட்சஸ வில்லன்களை அழித்து சமூகத்தில் நீதியை நிலைநாட்டுகிறான் என்பதே ஸ்பைடர் மேன் படங்களின் கதை.
அந்த வகையில், பல பிரபல நடிகர்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் அமேஜிங்க் ஸ்பைடர் மேன் பாகம் இரண்டின் கதையும் இதுதான். 2012-யில் வெளியான அமேஜிங்க் ஸ்பைடர் மேன் பாகம் ஒன்றிலேயே, பீட்டர் பார்க்கர் ஸ்பைடர் மேனாக உருவான கதையை சொல்லிவிட்டார்கள் ஆதலால், இந்த பாகத்தில் ஸ்பைடர் மேனின் சமூக வாழ்க்கையை பற்றி நிறைய காட்சிகளை வைத்திருக்கிறார்கள். அவர் மக்களுடன் சகஜமாக பழகுகிறார். தன் காதலியுடன் நிறைய ரொமான்ஸ் செய்கிறார். இதிலேயே படத்தின் பெரும் பகுதி கழிகிறது. இந்நிலையில், ஸ்பைடர் மேனிடம் அதிக பயபக்தி கொண்டிருக்கும் மாக்ஸ் டில்லோன் (ஜேமி ஃபாக்ஸ்) என்ற பொறியாளர் ஒரு மின் விபத்தில் சிக்கிக் கொள்கிறார். விபத்து அவரை மின்சார மனிதானாக மாற்றி விடுகிறது. அவர் மக்களுக்கு தீங்கு விளைவிக்க, ஸ்பைடர் மேன் அவரிடமிருந்து மக்களை காப்பற்றுகிறார். இது ஒரு புறமிருக்க, ஸ்பைடர் மேனுடைய ஆஸ்தான வில்லன் நார்மன் ஆஸ்போர்ன் இறந்துவிட, அவருடைய மகன் ஹாரி அடுத்த வில்லனாக உருவாகிறார். இப்படி ஏராளமான வில்லன்களை எப்படி வெற்றி கொண்டார் என்பதே இந்த படத்தின் கதை.
படத்தில் இடம்பெற்றுள்ள தேவையில்லாத கிளைகதைகள் படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்துவிடுகின்றன. மேலும் ஜேமி ஃபாக்ஸ் போன்ற சிறந்த நடிகர்கள் படத்தில் முற்றிலுமாக வீணடிக்க பட்டிருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குனர் மார்க் வெப் 500 டேய்ஸ் ஆஃப் சம்மர் என்ற காதல் படத்தை இயக்கியவர். அந்த படம் பெரும் வெற்றி பெற்றதனால்தான் அவருக்கு அமேஜிங்க் ஸ்பைடர் மேன் இயக்கும் வாய்ப்பு வந்தது. அதனால் தான் இந்த படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ஆனால் ஸ்பைடர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகளை பார்க்கவே மக்கள் விரும்புவார்கள். இங்கே சண்டை காட்சிகள் சிறப்பாக இல்லை. ரொமான்ஸ் காட்சியில் செலுத்திய கவனத்தை, ஸ்டண்ட் காட்சிகளிலும், திரைக்கதையிலும் செலுத்தியிருக்கலாம்.
பொதுவாக ஹாலிவுட் படங்களில் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சற்று சுவாரஸ்யம் குறைவாகவே இருக்கும் (காட்பாதர் 2, டார்க் நைட், ஸ்பைடர் மேன் 2 போன்ற சில படங்கள் அதற்கு விதிவிலக்கு). படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுவது அதற்கொரு காரணம். முதல் பாகத்தில் சொல்லாத பல புதிய விசயங்களை, அதிக சுவாரசியமாக இரண்டாவது பாகத்தில் சொல்ல வேண்டும். அப்படி செய்தால் தான் இரண்டாம் பாகம் வெற்றி பெரும்.
ஸ்பைடர் மேன் முதல் பாகத்தை (2002) விட இரண்டாம் பாகம் (2004) மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால் மூன்றாவது பாகம்(2007) மக்களிடையே இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், நான்காவது பாகம் எடுக்கும் முயற்சியை தயாரிப்பாளர்களும், சாம் ரியாமியும் கைவிட்டனர்.
ஐந்து வருட இடைவெளிக்கு பின் மார்க் வெப் இயக்கத்தில், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் நடிப்பில் அமேஜிங்க் ஸ்பைடர் மேன் (2012) வெளியானது. படம் பெரும் வெற்றிபெற்றது. எனினும் அதனால் ஸ்பைடர் மேன் இரண்டாம் பாகத்தின் வெற்றியை நெருங்க முடியவில்லை. இப்போது வெளியாகியிருக்கும் ஸ்பைடர் மேன் பாகம் இரண்டில், நிறைகளை விட குறைகளே அதிகம் இருக்கின்றன. அமேஜிங்க் ஸ்பைடர் மேன் சீரிஸில் இன்னும் இரண்டு பாகங்கள் மீதம் இருக்கின்றன. அந்த படங்களாவது சிறப்பாக இருக்கும் என நம்புவோம்.
சூப்பர் ஹீரோ படங்களை பொறுத்த வரை, படம் மக்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனாலும், பாக்ஸ் ஆபீஸில் தோல்வி அடையாது. ஏனெனில் உலகளவில் எல்லா தரப்பு மக்களும் சூப்பர் ஹிரோக்களை விரும்புகின்றனர். திரையரங்குகளுக்கு அதிகம் செல்லாத மக்களும், சூப்பர் ஹீரோ படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்கின்றனர். அதனால் தான், அண்மையில் வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் எதுவும் பெரிதாக பேசப்படாமல் போனாலும், சூப்பர் ஹீரோ படங்களை மீண்டும் மீண்டும் எடுக்கின்றனர்.
ஏன் மக்களுக்கு சூப்பர் ஹீரோக்களின் மீது இவ்வளவு பிரியம்?
உலகில் உள்ள எல்லா மதங்களும், நன்மை தீமையை வெற்றி கொள்வதே பற்றியே பேசுகின்றன. அதர்மம் தலை தூக்கும் போது, தர்மத்தை நிலைநாட்ட கடவுள் அவதாரம் எடுத்து வருவார். இல்லையேல் கடவுளின் தூதுவர் வருவார். இந்த நம்பிக்கை கிட்டதட்ட எல்லா மதங்களிலும் இருக்கிறது. அத்தகைய நம்பிக்கை கதைகளைதான் நாம் புராணங்களில் கேட்டு வந்திருக்கிறோம். அனைவருக்கும் அத்தகைய கதைகள் பிடித்திருக்கிறது. அதனால் தான் சமூகத்தில் நீதியை நிலை நாட்ட வரும் சூப்பர் ஹீரோக்களை நாம் எந்த கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்கிறோம்.
மேலும் எல்லா சூப்பர் ஹீரோ கதைகளும் ஒரே கோட்பாட்டை பின்பற்றி தான் உருவாக்கபட்டிருக்கும். சூப்பர் ஹீரோ, ஒரு சராசரி மனிதனாக மக்களோடு மக்களாக உலாவிக் கொண்டிருப்பார். திடீரென்று, ஏதாவது ஒரு சந்தர்பத்தில் தனக்கு அசாதாரணமான சக்திகள் இருப்பதை உணர்வார். எப்போதெல்லாம் தேவைபடுகிறதோ அப்போது மட்டும் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுப்பார். மற்ற நேரங்களில் எதுவும் தெரியாதது போல், சமூகத்தில் சகஜமாக வலம் வருவார். இந்த கோட்பாடு, சூப்பர்ஹீரோவை நம்முள் ஒருவராக எடுத்துக்காட்டுகிறது. சமுகத்திற்கு பிரச்சனை வரும்போதெல்லாம் சூப்பர் ஹீரோ போல யாராவது ஒருவர் நம்மை காக்க வருவார் என்ற நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறது. அதனாலேயே அவர்களை நமக்கு பிடித்துவிடுகிறது. நிஜ வாழ்வில் சூப்பர் ஹீரோக்கள் இல்லை என்று நமக்கு தெரிந்தாலும், சூப்பர் ஹீரோ இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வி நம் எல்லோருள்ளும் ஒருமுறையாவது எழுந்திருக்கும். அந்த கேள்வி நம்முள் இருக்கும் வரை சூப்பர் ஹீரோக்கள் திரையில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.
இக்கட்டுரையின் எடிடெட் வெர்ஷனை இங்கு படிக்கலாம்.
http://www.aazham.in/?p=4014
நன்றி ஆழம் ஜூன் 2014