கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த இரண்டு த்ரில்லர் படங்களில் மலையாளப் படமான திரிஷ்யமும் ஒன்று. இன்னொன்று கன்னடப் படமான லூசியா. இரண்டு படங்களையுமே இப்போது தமிழில் எடுக்கிறார்கள். லூசியாவைப் பற்றி பின் விவாதிப்போம்..திரிஷ்யமின் கதை இதுதான்.
ஜார்ஜ் குட்டி (மோகன்லால்) ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் கேபில் டிவி ஆப்பரேட்டர். படிப்பறிவு மிகக் குறைவு. ஆனால் அனுபவ அறிவு மிகமிக அதிகம். பல மொழித் திரைப்படங்களைப் பார்த்தே தன் அறிவை வளர்த்துக் கொள்கிறான். உதாரணமாக, கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டு விட்டால், தாங்கள் கைது செய்த ஒருவனை போலீஸ், கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஆகவேண்டும் என்று நான்காம் வகுப்பு படித்த அவன் ஒரு படத்திலிருந்து தெரிந்து கொள்கிறான். அதை வைத்துக்கொண்டு ஒரு காட்சியில் சட்ட ஆலோசனை வழங்குகிறான். இது போல் அவனுக்குத் தெரிந்த அனைத்துமே, அவன் சினிமாவில் இருந்து கற்றுக்கொண்டவைதான். அமைதியாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. திடீரென்று அவன் வாழ்வினுள் ஒரு வில்லன் நுழைகிறான். ஆனால் அந்த வில்லன் மோதுவதோ ஜார்ஜ் குட்டியின் மகளிடம். எதிர்பாராத விதமாக அவன் மகளும், மனைவியும் வில்லனைக் கொன்று புதைத்து விடுகிறார்கள். இறந்தவன் ஒரு பெரிய போலீஸ் அதிகாரியின் மகன். உண்மை வெளியே தெரிந்தால் அவன் குடும்பத்தையே அழித்து விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனாக தன் குடும்பத்தை அவன் காப்பாற்றிட வேண்டும். இங்கு தான் படத்தின் கதையே ஆரம்பிக்கிறது. அவன் எப்படி திரைப்படங்களில் இருந்து பெற்ற அறிவின் மூலம் தன் குடும்பத்தையே காக்கிறான் என்பதே படத்தின் கதை.
இது மிகவும் சிறப்பானதொரு படம். சிறந்த நடிகர் , மிகமிகச் சிறப்பாக நடித்தவொரு படம் என பல சிறப்பம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.. இத்தகைய ஒரு படத்தை அதன் ஆன்மா சிதையாமல் தமிழில் எடுக்க முடியுமா என்பதே பிரதான கேள்வி. ஒரு படம் எடுப்பதற்கு முன்பே அது தமிழில் எடுபடாது என்று சொல்வது சரியில்லைதான். ஒரு மொழியில் வந்த படத்தை இன்னொரு மொழியில் உருவாக்கும் போது, அது ஒரிஜினல் வெர்ஷனை விடச் சிறப்பாக இருக்கும் போது யாரும் குறை சொல்லமாட்டார்கள். ஆனால் சரியில்லாமல் போவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தால்?
திரிஷ்யம் படத்தின் முதல் ஒரு மணி நேரம், வைக்கம் முகமது பஷீரின் நாவல் போல, ஒரு கதாபாத்திரத்தின் செயற்பாடுகளை மட்டுமே மையப்படுத்தி நகர்கிறது. அதாவது ஜார்ஜ் குட்டியின் அன்றாட அலுவல்களைப் பற்றியும், அவன் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியும், அவன் குடும்ப உறவுகளைப் பற்றியும் மட்டுமே படம் பேசுகிறது. அதில் எந்தத் திருப்பமும் இருக்காது. ஆனால் இதே போன்று ஒரு ஃபார்மட்டை நம் தமிழ் படங்களில் பார்க்க முடியாது. நமக்கு முதல் இருபது நிமிடத்தில் கதை ஆரம்பிக்க வேண்டும். கதாநாயகன் நாயகியைச் சந்திக்க வேண்டும், அல்லது வில்லனைச் சந்திக்க வேண்டும். கதை அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டும். பொதுவாக மலையாளப் படங்கள் மெதுவாக நகர்வதாக நாம் உணர்வது இந்தக் காரணத்தினால் தான் (வெளிநாட்டுப் படங்களின் தாக்கத்தில் உருவாகும் சமகால மலையாளப் படங்கள் பலவும் இதற்கு விதிவிலக்கு.)
அந்த முதல் ஒருமணி நேரக் காட்சியின் நீளத்தை ஒரேயடியாகக் குறைத்து விட முடியாது. ஏனெனில், அந்த முதல் ஒரு மணிநேரத்தில் கதாநாயகன் சந்திக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் படத்தின் பிற்பாதியில் பயன்படுகின்றன. அந்தக் கதாபாத்திரங்களைத் தக்க வைத்து, அதே சமயத்தில் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்வார்கள் என நம்பலாம். ஆனால் கமல் ரீமேக் செய்கிறார் என்றதும் ஒருவகையான பயம் கவ்விக்கொள்கிறது.
வெட்னஸ்டேவை உன்னைப்போல் ஒருவனாக்கும் போது, அவர் வெட்னஸ்டே படத்திற்கு நியாயம் செய்யவில்லை. (கமலின் பல படங்களை ரசித்துப் பார்க்கும் கூட்டத்தில் நானும் ஒருவன் என்றாலும் உன்னைப்போல் ஒருவன் பயமுறுத்துகிறது)
வெட்னஸ்டே படத்தின் முக்கிய கதாபாத்திரம் இறுதிவரை க்ரே ஏரியாவிலேயே பயணிக்கும். அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வி கடைசி வரை இருந்து கொண்டே இருக்கும். அதுவே அந்த படத்தின் மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். நஸ்ருதின் ஷா நடித்ததனால் தான் அது சாத்தியமாயிற்று. அது ஹீரோ மெட்டீரியலுக்கான கதை அன்று. இங்கே பிரகாஷ் ராஜ் போல் ஒரு நடிகர் நடித்திருக்க வேண்டும். ஆனால் கமல் நடித்ததனால் ‘நல்லவன்’ சாயல் அந்தக் கதாபாத்திரம் மேல் முதல் காட்சியிலேயே உருவாகிவிட்டது. மேலும் அழுது வசனம் பேசி மெலோடிராமா படமாக்கியிருப்பார் கமல். (இதே போல் கஹானியில் நாயகி கர்ப்பமாக இருப்பதே மிக முக்கியமான என்கேஜிங்க் எலிமெண்ட். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது பற்றுதல் வருகிறது. ஆனால் கஹானியின் தமிழ் வெர்ஷனில் அந்த எலிமெண்ட் இல்லை.) இந்தநிலை திரிஷ்யம் படத்திற்கு வந்துவிடக் கூடாது என்று அவா இருந்தாலும், திரிஷ்யம் திரிஷ்யமாகவே இருந்தால் தமிழில் கமர்சியலாக எடுபடாது என்ற உண்மையும் உரைக்கத்தான் செய்கிறது. எனினும் மிகவும் ஆறுதலான ஒரு செய்தி, படத்தின் ஒரிஜினல் இயக்குனரே இந்தப் படத்தையும் இயக்குகிறார் என்பதே. ஆனாலும், அவரும் கமர்ஷியல் காரணங்களுக்காக, தமிழில் பெரியஹிட் கொடுக்க வேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொண்டால் ஜார்ஜ் குட்டியிடம் இருந்த யதார்த்தம் மடிந்துவிடும்.
திரிஷ்யம் என்றில்லை. பொதுவாக, ஒரு மொழியில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதைத் தமிழ் மொழியிலும் எப்படியும் வெற்றிப் படமாக்கிவிட வேண்டும் என்று தமிழுக்கேற்ப ஏராளமான மாற்றங்களைச் செய்வதிலேயே இங்குள்ள படைப்பாளிகள் குறியாக இருக்கிறார்கள். ஆனால் அதன் மூலம் சிதைவதைப் பற்றி யாரும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. மூலத்தைச் சிதைத்து ஒரு படத்தைத் தமிழில் எடுப்பதற்கு பதில் நேரடியாக ஒரு கமர்சியல் படத்தை எடுத்து பணம் சம்பாதித்துவிட்டுப் போய்விடலாம்…