பொன்னியின் செல்வனை படிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தாலும், நான்கு வருடங்களுக்கு முன் பொறியாளராக வேலை பார்த்த காலத்தில் தான் படிக்க முடிந்தது. அழுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஈ-புத்தகங்கள் படிப்பது வழக்கம். ஆங்கில புத்தகங்கள் படித்தால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாக தெரியாது. தமிழில் எதையாவது படித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே, கம்ப்யூட்டரில் பொன்னியின் செல்வன் புத்தகத்தையும், ஒரு டூல்ஸ் இன்ஜினியரிங் புத்தகத்தையும் திறந்து வைத்துக்கொண்டு, கதையை படிப்பேன். யாராவது வந்தால் பொன்னியின் செல்வன் மினிமைஸ் ஆகிவிடும். இப்படி திருட்டுதனமாக ஒரு வாரத்தில் அந்த புத்தகத்தை படித்து முடித்தேன். கிட்டதட்ட இரண்டு வாரங்கள் அதன் ஹாங்ஓவர் இருந்தது. வந்தியத்தேவன், நந்தினி, ஆழ்வார்க்கடியான் என் ஒவ்வொரு கதாபாத்திரமும் சுற்றிசுற்றி வந்தார்கள். பொன்னியின் செல்வனின் சிறப்பசம் இது தான். ஒரு படமோ, புனைவோ நம்மீது தாக்கத்தை ஏற்படுத்துவது சகஜம் தான். ஆனால் பொன்னியின் செல்வனில் மட்டுமே அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆரம்பத்தில் பிடிக்காமல் போன சில கதாப்பாத்திரங்களும் கடைசியில் பிடித்துவிடும். கதாபாத்திர உருவாக்கமும், வர்ணணனையும் அதை சாத்தியப்படுத்தியிருக்கும். அத்தகைய நாவலுக்கு நியாயம் செய்யும் வகையில் பொன்னியின் செல்வன்-மேடை நாடகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
குமாரவேல் திரைக்கதை எழுதியிருக்கிறார். இதைவிட சிறப்பாக பொன்னியின் செல்வனை நாடகமாக்கியிருக்கமுடியாது என்றும் சொல்லும் அளவிற்கு அவர் திரைக்கதை இருக்கிறது. மணிமேகலை போன்ற சில கதாபாத்திரங்களை நீக்கி இருக்கிறார். Filler கதாபாத்திரங்களாக சில புது பாத்திரங்களை சேர்த்திருக்கிறார். பல இடங்களில் இரண்டு மூன்று காட்சிகளை இணைத்து ஒரே காட்சியாக உருவாக்கியிக்கி மொத்த கதையையும் மூன்றரை மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்.
மூன்றரை மணி நேரம் தொடர்ந்து மேடையில் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதை சர்வ சாதாரணமாக செய்து கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறார்கள் நடிகர்கள். குறிப்பாக வந்தியதேவனாக நடித்த ஸ்ரீகிருஷ்ண தயாள், குந்தவியாக நடித்த ப்ரீத்தி ஆத்ரேயா, பழுவேட்டரையராக நடித்த மு. ராமசாமி ஆகியோர் அதிக கவனத்தை ஈர்க்கிறார்கள். குற்ற உணர்ச்சியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி நடித்திருக்கிறார். நாவலில் வருவது போல் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகாமல், மிக தாமதமாகவே அவர் கதாபாத்திரம் அறிமுகமாகிறது.மிகவும் யதார்த்தமானதொரு நடிப்பு அவருடையது.
ப்ராப்பர்ட்டிஸ் டிபார்ட்மெண்ட்டும், ஆர்ட் டிபார்ட்மெண்ட்டும் மிக சிறப்பாக வேலை செய்திருக்கிறார்கள். மேடையில் கதாபாத்திரங்கள் நடித்துக் கொண்டிருக்கும் போதே, ப்ராப்பர்ட்டிகளை மாற்றி மேடையை அடுத்த காட்சிக்கு தயார் செய்துவிடுகிறார்கள். குடியானவர்கள் போல் மேடையில் நடந்து கொண்டே, பார்வையாளர்களுக்கு கவன சிதரலை ஏற்படுத்தாமல் அந்த வேலையை அவர்கள் செய்து முடிப்பது கூடுதல் சிறப்பு. நாடகத்தில் இன்னொரு சிறப்பான விஷயம் லைவ் பின்னணி இசை. அந்த லைவ் இசை கல்கி உருவாக்கிய உலகிற்க்குள் நம்மை அழைத்து சென்றுவிடுகிறது.
நாடகம் மிகுந்த மனநிறைவை தந்துவிட்டால், இப்போது யாராவது பொன்னியின் செல்வனை படமாக எடுக்கமாட்டார்களா என்ற ஏக்கம் தொற்றிக்கொண்டுவிட்டது. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் போல பொன்னியின் செல்வனை பாகங்களாக, பிரம்மாண்டமாக எடுத்தால் மிக சிறப்பாகவே இருக்கும். ஆனால் அவ்வளவு பட்ஜெட் சாத்தியமில்லை. மேலும், பொன்னியின் செல்வனை பாகம் பாகமாக எடுக்கும் போது அனைத்து பாகங்களையும் பார்த்தால் தான் படம் புரியும். அத்தகைய படங்கள் இங்கே எடுபடாது. நமக்கு ஒவ்வொரு பாகமும் முழுமை அடைய வேண்டும். தனித்தனி முழுமையான கதைகளை பாகங்களாக வெளியிட்டால் ஏற்றுக்கொள்வார்களே ஒழிய, ஒரே முழு கதையை தனித்தனி பாகங்களாக வெளியிட்டால் இங்கு ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஒரே பாகத்தில் முழு கதையையும் சுவாரஸ்யம் குன்றாமல் சொல்ல வேண்டுமெனில், கதையை ரீகிரியேட் தான் செய்ய வேண்டும். அதாவது கல்கியின் கதையை மூலக்கதையாக வைத்துக்கொண்டு, முற்றிலும் புதியதொரு திரைக்கதையை எழுதவேண்டும். சில கதாபாத்திரங்களை நீக்கி, சில புது கதாபாத்திரங்களை சேர்த்து, நீளமான வசனங்களை குறைத்து அதை சாத்தியபடுத்தலாம். அடுத்த பத்து வருடதிற்குள்ளாவது யாராவது பொன்னியின் செல்வனை ரீகிரியேட் செய்து, திரைப்படமாக உருவாக்குவார்கள் என்று நம்புவோம்.
நீங்க எடுங்க,நான் பார்க்குறேன்…:-)மணிமேகலையை நீக்குனதுக்கு பதிலா வானதிய நீக்கிருந்தால் நாங்க சந்தோசப்பட்டுருப்போம்! 😀
LikeLike